Thursday, 18 February 2010

ஊடகங்களால் ஆடப்படும் கிரிக்கெட்

கேளிக்கையும் தற்செயலும் கிரிக்கெட்டின் இருமுகங்கள். கிரிக்கெட் யோசித்து, பேசி, எழுதப்படுவதற்கானது அல்ல. இந்த உபரி நடவடிக்கைகள் வேறொரு துறையை சேர்ந்தவை. வேறு நோக்கங்கள் கொண்டவை. நடந்து முடிந்த இந்திய-தெ.ஆ முதல் டெஸ்டு ஆட்டம் நிறைய சர்ச்சையை தோற்றுவித்தது. ஊடக மைக்குகளில் நம் கவனம் இருந்தது. ஆனால் ஆட்டம் நாலு நாட்களில் முடிய, ஐந்தாவது நாளில் தோற்ற அணியின் நாயகன் தோனி தனது பிரகாசம் குறைந்த நட்சத்திரங்களுடன் சாவகாசமாக பயிற்சியில் ஈடுபட்டார். கிரிக்கெட்டின் உள்நபர்களுக்கு ஊடக சலசலப்பை பொருட்படுத்தும் அவசியம் இருப்பதில்லை. ஜெடேஜா சொன்னது போல் கிரிக்கெட், ஆடுபவர்களுக்காக அல்ல, பார்வையாளர்களுக்காகவே விவாதிக்கப்படுகிறது.

பொதுவாக தொழில்முறை ஆட்டக்காரர்கள் குறைவாகவே ஆட்டத்தை டி.வியில் பார்க்கிறார்கள். அவர்கள் கிடைக்கிற நேரத்தை பயிற்சி, ஆட்டம், ஓய்வு என்று செலவிடவே விரும்புவர். கல்லூரி அணிக்காக ஆடிய சில கிரிக்கெட் வீரர்கள் விடுதியில் என்னுடன் இருந்தார்கள். 2003 உலகக் கோப்பை பருவத்தில் முன்னறையில் டீ.வியை சுற்றி மொய்த்தபடி ரிங்கரிப்போம். பலவிதமான அலசல்கள் ஊகங்கள் புகைத்து எழும். பிரவீன் என்றொரு நண்பன் அப்போது கல்லூரி அணியின் முன்னணி மட்டையாளனாக இருந்தான். அவன் இந்த கூட்டத்தில் சில நிமிடங்களே இருப்பான். ஆட்டத்தின் போக்கை சுத்தமாக உள்வாங்காதது போல் அமைதியாக இருப்பான். நாங்கள் கொந்தளித்து கத்தும் போது புன்னகைப்பான். ஆனால் அவனது ஊகங்களே பெரும்பாலும் சரியாக இருக்கும். நெஹ்ரா சற்றும் எதிர்பாராமல் வென்று தந்த அந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தை அவன் மிகச்சரியாக கணித்தான். ஆனாலும் ஆட்ட முடிவுகள் பொருட்படுத்தத் தக்கவை அல்ல என்று கூறுவான். தனது ஆட்டத்தை குறித்து கூட மிகக் குறைவாகவே பேசுவான். அணியில் இடம் கிடைக்காமல் ஒதுக்கப்பட்ட வாசிமலை என்ற மற்றொரு மதுரைக்கார வேகவீச்சாளர் அப்போது எங்கள் விடுதியில் இருந்தார். அவர் ஒரு சலம்பும் குடம். முந்தின கல்லூரியில் ஆடின போது தன் பெயர் மற்றும் ஆட்ட செய்தி பிரசுரமான செய்தித்தாள் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டி சதா சுயசரிதம் பேசுவார். இன்றும் ஓய்வு பெற்று தனிமையில் உள்ளவர்களே ஓசியில் டீ.வியில் தோன்றி கனைப்பவர்கள்.



சரியாக ஆடாதவர்களை நாம் கழற்றி விடச்சொல்லி விமர்சிக்கிறோம். சொதப்புவது ஒரு பெருங்குற்றமா? பார்ம் என்பது மனம், உடல் மற்றும் அதிர்ஷ்டம் மூன்றும் ஒரே புள்ளியில் சந்திக்கும் ஒரு அபூர்வம். பார்மில் உள்ளவர்கள் தொட்டாலே ஓட்டங்கள் / விக்கெட்டுகள் குவியும். இல்லாதவர்கள் செய்வதெல்லாம் தவறாக முடியும். பிரவீன் ஒரு கட்டத்தில் பார்மில் இல்லாமல் இருந்தான். பத்து ஆட்டங்களில் ஒரு அரை சதம் கூட தேறவில்லை. சற்று சோகமாக தென்பட்டான். ஆனாலும் விடாமல் தினமும் மைதானத்துக்கு சென்று பயிற்சி செய்வான். எங்கள் கல்லூரியில் மிக அரிதாகவே வலைப்பயிற்சி நடக்கும். பெரும்பாலும் அவன் பிறருடன் கால்பந்தாட்டம் ஆடுவான். அல்லது வெறுமனே அமர்ந்திருப்பான். எப்படியாயினும் தினமும் மாலை இரண்டு மணி நேரங்கள் ஒரு காதலியைப் போல் மைதானத்தை தேடி வருவான். பார்மில் இல்லாமல் இருப்பது கசப்பானது என்றாலும் அது ஒரு இனிய அனுபவம் தான் என்றான் பிரவீன். பார்மில் இருக்கும் இல்லாதிருக்கும் உற்சாக மற்றும் சோக நிலைகள் ஒன்று போலவே கிளர்ச்சி தருபவை. கிரிக்கெட் இல்லாத வெளியுலகை விட பல மடங்கு சுவாரஸ்யமானவை. அந்த மைதானம் அவனது உள்உலகின் படிமம். எழுத்தாளனின் மேஜை போல். அவன் அங்கு வந்ததும் மனஅமைதி அடைகிறான்.

பிரவீனுக்கு அப்போது 24 வயது தாண்டி இருந்தது. இதனால் மாநில அணியில் நுழைவது கூட சிரமம் என்று அவனுக்கு தெரிந்திருந்தது. ஆனாலும் முழுமூச்சாக சாப்பிடுவது, கிரிக்கெட் ஆடுவது மற்றும் தூங்குவது என்றே கழித்தான். அவனைப் போல் ஆயிரக்கணக்கில் திறமையான இளைஞர்கள் மாநில அல்லது தேசிய அணியில் இடம் குறித்த கனவுகள் இல்லாமலே இந்தியாவில் ஆடி வருகிறார்கள். ஐ.பி.எல்லால் கூட இவர்களுக்கு எல்லாம் தீனி போட முடியாது. கிரிக்கெட் தான் இவர்களுக்கு ஆதியும் அந்தமும். இவர்களைப் புரிந்து கொள்ள வெற்றி - தோல்வி எனும் சொல் அமைப்புகளை ஊடகங்கள் முன்வைக்கும் பொருளில் இருந்து வெளியேற்றி பார்க்க வேண்டும்.

ஊடகங்கள் கிரிக்கெட்டை வெற்றி தோல்விகளின் முரணியக்கமாகவே முன்னிறுத்தி வருகின்றன. ஊடக கண்கள் முன் அணிகள் வீழ்கின்றன அல்லது எழுகின்றன. ஒரு ஏழாம் வகுப்பு மாணவனின் வரலாற்று தேர்வுத்தாளின் கற்பனையை ஊடக பண்டிதர்களின் வர்ணனை மீறுவதில்லை. இதனால் ஏகப்பட்ட அபத்த முடிவுகள் அறைகூவப்படுகின்றன. பின்னர் மறக்கப்படுகின்றன. ஆஷஸ் மற்றும் இந்தியாவுடனான இழப்புகளுடன் ஆஸ்திரேலியா வீழ்ந்து விட்டதாக சொன்ன சில மாதங்களில் அது உதறி எழுகிறது. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி எழுந்த தெ.ஆ அணி சுவடுக்கு ஒரு முறை சறுக்குகிறது. தெ.ஆ மற்றும் மே.இ தீவுகளை வீழ்த்திய இலங்கை உச்சத்தை எட்டியதாக சொல்லப்பட்ட விரைவிலேயே பள்ளத்தில் துவள்கிறது. 20-20 கோப்பை வென்று கொண்டாடப்பட்ட பாக் அணிக்கும் இதே நிலைதான். இதனால் ஊடகங்களுக்கு மகா குழப்பம். யாரை வெற்றியாளன் என்று துதி பாட? அப்போது சர்வதேச அணி வரிசை வந்தது. இது அலசல்வாதிகளுக்கு துலக்கமான ஒரு அளவுகோலை இன்று வரை தந்து காப்பாற்றுகிறது. வெற்றி தோல்வி புள்ளிக் கணக்குகள் அடிப்படையில் அணிகள் நழுவி உயர, அவர்களால் கணிப்புகள் நிகழ்த்தி ஒரு சிறு பரபரப்பை உருவாக்க முடிகிறது. ஆனால் இத்தனையும் போலித் தோற்றம். ஒவ்வொரு படம் உருவாகும் போதும் தீபிகா படுகோன் தன் கூட நடிக்கும் நாயகனை காதலிப்பதாக வரும் கிசுகிசு செய்திகளை விட சில மில்லிமீட்டர் அதிக அளவு உண்மை இருக்கலாம்.



நடந்து முடிந்த முதல் தெ.ஆ டெஸ்டில் இந்தியா தோற்றதற்கு ஊடகங்கள் கற்பித்த காரணங்கள் தமாஷானவை. முதலில் தேர்வுக் குளறுபடி. சீக்காவும் கூட்டாளிகளும் ஒரு தெனாவட்டில் ஒரு மட்டையாளர் குறைவாக தேர்ந்தார்கள். இரண்டுக்கு மேல் வேக வீச்சாளர்கள் ஆட வாய்ப்பில்லாத போதும் ரஞ்சித்தொடரில் ஜொலித்த மிதுன் நான்காவது வீச்சாளராக சேர்க்கப்பட்டார். ஏற்கனவே பாதி உடல் நலத்துடன் இருந்த லக்‌ஷ்மண் ஆட்ட நாள் காலையில் தேறாமல் போக அவசர மாற்றாக வந்த ரோஹித் ஷர்மா கால் சுளுக்கிக் கொள்ள பெருங்குழப்பம். தோனிக்கு அடிக்கடி முதுகுவலி வருவதால் அவருக்கு மாற்றாக வந்த கீப்பர் சாஹா ஒப்புக்கு சப்பாக ஆட அழைக்கப்பட்டார். ஆனால் ஆட்டம் முழுவதும் இந்தியாவின் தோல்விக்கு சாஹா காரணமாக இருக்க போகிறார் என்று கவலை கிளம்பியது. ஊடகங்களில் மொத்த விவாதமும் இதனை நோக்கியே இருந்தது. எதிர்பார்த்தபடி இந்தியா தோற்க சாஹா மற்றும் அவரை தேர்ந்த சீக்காவின் வாலில் பந்தம் கொளுத்தப்பட்டது. ஆறு மட்டையாளர்கள் வீழ்ந்த பின் ஒரு இளைய மட்டையாளர் அவர் ரோஹித்தாக இருக்கும் பட்சத்திலும் இந்தியாவை தனித்து காப்பாற்றி இருக்க முடியாது. இதை விட முக்கியமாக, இந்த போட்டியில் இந்தியா சற்றே தான் மோசமாக ஆடியது. எதிரணி மேலும் சற்று சிறப்பாக ஆடியது. பெரும்பாலும் தற்செயல்கள் தாம் முடிவை தீர்மானித்தன. இதற்கு நமது மட்டையாட்டம் மற்றும் பந்து வீச்சில் ஏகப்பட்ட உதாரணங்கள் காட்டலாம். குறிப்பாக, மூன்றாவது நாள் டீ இடைவேளையின் பின் இந்தியா மட்டையாடிய போது மாற்றப்பட்ட பந்து சட்டென்று ரிவர்ஸ் ஸ்விங் ஆகத் தொடங்கியது. அந்த அரைமணி நேர சரிவில் இருந்து இந்தியாவால் எளிதில் மீள முடியவில்லை. 1976-இல் இந்தியா-இங்கிலாந்து டெஸ்டில் இது போல் பந்து மாற்றப்பட இங்கிலாந்தின் ஜான் லிவர் இதே பாணியில் ஏழு விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்தியா தோற்றது. பின்னர் 80-இல் போத்தம், 84-இல் மார்ஷல், 85-இல் போஸ்டர் மற்றும் 88-இல் ஹேட்லி என நம் கிரிக்கெட் வரலாற்றில் பலமுறை வெளிநாட்டு வேக வீச்சாளர்கள் உயிரற்ற ஆடுதளங்களில் இந்திய மட்டை வரிசையை பெயர்த்து எடுத்துள்ளார்கள். அப்போது ஆடிய மட்டையாளர்களில் பலர் இன்று சிலுவைக்கு ஆணி தேடும் வர்ணனையாளர்கள். ஒருவர் தேர்வுக்குழு தலைவர்.

இந்தியாவின் பந்து வீச்சை கண்டிக்கும் விமர்சகர்கள் சில வாரங்களுக்கு முன்னர் தான் தெ.ஆ பந்து வீச்சு மிக பலவீனமாக இருந்ததை மறந்து விடுகிறார்கள். தெ.ஆ இங்கிலாந்துக்கு எதிரான தனது தாயக தொடரை கைப்பற்ற முடியாமல் போராடி டிரா செய்தது. இத்தனைக்கும் இங்கிலாந்து பலவீனமான ஒரு அணி. அப்போது தெ.ஆ அணியின் பந்து வீச்சு தரம் குறித்து அவர்களின் பயிற்சியாளர் மிக்கி மற்றும் முன்னாள் பந்து வீச்சாளர் டொனால்டு ஆகியோர் கவலை தெரிவித்திருந்தனர். இந்தியாவுக்கு வந்த உடனே ஒரு அணியின் பந்து வீச்சுத் தரம் உயர்ந்து விடாது. ஆட்டத்திறன் பலவிதமாய் வெளிப்படலாம். ஆனால் ஸ்டெயின், மார்க்கல் மற்றும் ஹாரிஸ் போன்ற தெ.ஆ பந்து வீச்சாளர்கள் தங்கள் வெற்றிக்கு காரணமான திட்டமிடல், முயற்சி, எதிர்பார்ப்பு குறித்து பேட்டியில் விளம்ப, மைக் ஆசாமிகள் கூடவே சாம்பிராணி பாய் மாதிரி புகை காட்டுகிறார்கள்.

ஒரு ஆட்டத்தின் நுட்பங்களை அதன் சுவாரஸ்யத்துக்காக கவனிக்கலாம். ஆனால் இன்று நிகழ்வன முடிவான விளக்கங்களை, உருவ பொம்மைகளை தேடும் அசட்டு முயற்சிகள் மற்றும் சோர்வான அலசல்கள்.
இந்த மூட்டத்தில் ஊடகங்கள் குளிர்காய்வது தவறாமல் நடக்கிறது. முத்தாய்ப்பாக, தன் தேர்வுத் தவறுகள் குறித்து ஸ்ரீகாந்த்:

“ நான் தவறு செய்தேன் என்றால் என்னை நீக்கி விடுங்கள். ஆனால் இந்தியா தோற்றது என் தவறால் அல்ல. ஆனாலும் இந்த தோல்விக்கு பொறுப்பேற்க நான் தயார். என்னை நீங்கள் குறை கூறலாம். ஆனாலும் ஆட்ட நாள் காலை நாணயம் சுண்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் ரோஹித் ஷர்மா காயமடைவார் என்று யாருக்கு தெரியும். ஆனாலும் உங்கள் விமர்சனங்களை ஏற்கும் பாத்தியதை எனக்கு உண்டு. ஆனாலும் ...”
தான் ஊடகங்களின் சிறந்த பிரதிநிதி என்பதை ஸ்ரீகாந்த நிறுவுகிறார்.
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates