ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் குறித்த கட்டுரை (“மூவருக்கு தூக்கு தள்ளிவைப்பு”) ஒன்றில் ஜெ.மோ சொல்கிறார் இந்திய நீதிமன்றங்கள் நேர்மையானவை, இதுவரை உச்சநீதிமன்றம் போதிய ஆதாரம் இல்லாமல் யாரையும் தண்டித்ததில்லை, அதனால் சாந்தன், முருகன், பேரறிவாளன் குற்றவாளிகளே என்று. அவ்வப்போது நீதிபதிகள் சி.பி.ஐயை கேள்வி கேட்டு நெளிய வைப்பதை வைத்து ஜெ.மோ இந்த முடிவுக்கு வருவது வருத்தத்துக்கு உரியது. முதலில் எல்லா நாட்டு நீதிமன்றங்களும் அரசுக்கு சார்பாகவே தீர்ப்பளிக்கின்றன. ஒருவர் தீவிரவாதி என்று நிறுவ போதிய சான்றுகள் இல்லாத பட்சத்திலும் அவர் அப்படியே என்று நீதிமன்றம் நம்புமானால் அந்த ஊகத்தின் அடிப்படையிலும், மக்களின் உணர்வுகள் குற்றவாளிக்கு எதிராக திரண்டால் அதற்கு ஏற்றபடியும் தீர்ப்புகள் எழுதப்படுகின்றன. அமெரிக்காவில் அறுபதுகளில் எதிர்கம்யூனிஸ் அலை வீசப்பட்ட போது மின்நாற்காலியில் எரித்து கொல்லப்பட்ட ரோஸன்பெர்குகளில் இருந்து சதாம் ஹுசேன் வரை இதுவே நடக்கிறது. முஷாரப், ஹுசேன் உள்ளிட்ட எந்த ஆட்சியாளரும் பதவி கவிழ்க்கப்பட்டவுடன் நீதிமன்றம் அவர்களை குற்றவாளிகள் என்று எளிதில் தீர்ப்பு வழங்குகிறது. இதன் மூலம் ஒன்று விளங்குகிறது அரசும், மக்களும், விசாரணை அமைப்புகளும் தான் ஒரு வழக்கின் போக்கையும் முடிவையும் தீர்மானிக்கிறார்கள். இவர்களை மீறி எந்த நீதியும் வெல்ல முடியும். இவர்களால் எந்த அநீதியும் வெல்ல முடியும். மக்களின் குவிக்கப்பட்ட உணர்வுகள் என்றும் நீதியின் பக்கம் இருந்ததில்லை. ஜெர்மானியர்களில் இருந்து சிங்களர்கள் வரை இன அழிப்பை ஆதரித்து வந்ததை நாம் காண்கிறோம். அந்த நாடுகளிலும் நீதியமைப்புகளும் கர்த்தரும் புத்தனும் இருந்தார்கள். அரசுகள் முதலாளித்துவம் மற்றும் மதநிறுவனங்களின் கருவியாகத் தான் இதுவரை வரலாற்றில் இருந்து வந்துள்ளன. விசாரணை அமைப்புகள் தனியாக செயல்பட முடியாதவை ஆக நீதிமன்றம் ஒரு கிளிப்பிள்ளை. (எந்த கிளியையும் போல அது சில வேளை உண்மையும் சொல்லலாம்.)
இந்தியாவில் ஊழலுக்கு படுகொலைகளுக்கும் காரணமான எந்த அரசியல்வாதியும் இதுவரை தண்டிக்கப்படாததற்கு காரணங்கள் இரண்டு. ஒன்று பெரும்பான்மை மக்கள் மறைமுகமாக அநீதியை ஆதரிப்பது. அது ஊழலோ மதவாதமோ விளிம்புநிலை மக்கள் மீதான வன்முறையோ ஆக இருக்கலாம். பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து சமீப காலம் வரையிலான இந்துத்துவா படுகொலைகள் பெரும்பான்மை இந்துக்களின் ஆதரவுடன் நடந்ததால் ஒரு எதிர்க்கட்சி அரசால் கூட அத்வானியையோ மோடியையோ வேடிக்கை பார்த்த காவலதிகாரிகளையோ தண்டிக்க முடியவில்லை. மாறாக கோத்ரா படுகொலையில் மோடியின் நேரடி பங்கை வெளியிட்ட ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் தற்காலிக பணிநீக்க செய்யப்பட்டு அவருக்கு எதிராக பழைய வழக்கொன்று துடைத்தெடுக்கப்பட்டு நடக்கிறது.
இரண்டு, வளர்ச்சி என்ற பெயரில் வியாபார நிறுவனங்களுக்கு ஆதரவான சலுகை மனப்பான்மை. அதிகார வர்க்கத்தினரை நீதியின் பெயரால் அதிகமாக தொந்தரவு செய்யக்கூடாது என்பது இங்கு மீடியாவும் அரசியல்வாதிகளும் முன்வைக்கும் நிலைப்பாடு. கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக எந்த நியாய நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அதனால் இந்தியாவின் வணிக வளர்ச்சி பாதிக்கப்படுவதாக இந்தியா டுடே போன்ற வலதுசாரி பத்திரிகைகள் எழுதும். வளர்ச்சிக்காக வணிக நிறுவனங்களின் விதிமுறை அத்துமீறல்களை பொருட்படுத்தக் கூடாது என்பதே இன்று நம்மிடையே நடைமுறையில் உள்ள ஒரு வாதம். மேலும் பன்னாட்டு முதலாளிகளால் எளிதில் சி.பி.ஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகளையும் அரசு எந்திரத்தையும் விலைக்கு வாங்கிட முடியும். ஆக மக்களின் மிகை உணர்வுகளை, அது மதவாதமாக இருந்தாலும், கார்ப்பரேட்டுகளின் அத்துமீறல்களை, அது குற்றமாக இருந்தாலும், கண்மூடி ஏற்க வேண்டும் என்பதே இதன் பொருள். இந்த காரணத்தினாலே 2011 மே மாதம் போபால் குற்றத்திற்காக யூனியன் கார்பைடுக்கு எதிராக தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றம் மறுத்தது. 2G வழக்கில் இன்றும் அம்பானியோ டாட்டாவோ சிறைக்கு செல்லாமல் இருக்கிறார்கள். மும்பையில் போலீசுக்கே தெரிந்தே இண்டர்போலால் தேடப்படும் சர்வதேச குற்றவாளிகள் பதினைந்து பேர் நட்சத்திர ஹோட்டல் நடத்துகிறார்கள், தாவூதின் சகோதரனை சோட்டா ஷக்கீலின் அடியாள் தாக்க முயன்றால் போலீஸ் பாதுகாப்பு தருவதுடன் உடனடியாக ஒரு பெரும் குற்றவாளிக்காக மற்றொரு சிறு குற்றவாளி கைது செய்யப்படுகிறார். தாவூத் மும்பையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்வது அனுமதிக்கப்படுகிறது. இந்தியாவில் வெள்ளைக்காரனில் இருந்து கொள்ளைக்காரன் வரை வியாபாரம் தொழில்வளர்ச்சி என்ற பெயரில் குற்றங்களை பட்டவர்த்தமாக இழைக்க முடிகிறது. இஸ்லாமியரை படுகொலை செய்ததற்காக அத்வானியில் இருந்து இன்று மோடி வரை தண்டிக்கப்படாமல் அப்பழுக்கற்ற சூட்டுகளில் தோன்றி மீடியா வலம் வருகிறார்கள்; ஜெயின் கமிஷன் சந்தேகம் எழுப்பிய சந்திராசாமி மற்றும் சுப்பிரமணிய சாமி வரை தப்பிக்க விடப்பட்டு ஆனால் சிவராசனால் அச்சுறுத்தப்பட்டு வீடு ஆக்கிரமிக்கப்பட்ட குற்றத்திற்காக புலி என்றே சொல்லே தெரியாத ஒரு கன்னடியர் பத்து வருடம் ஜெயில் தண்டனை அனுபவிக்கிறார். இந்தியாவில் மேற்சொன்ன இரு எழுதப்படாத விதிகளை மீறி நீதி செயல்பட முடியாது.
ராஜீவ் கொலை வழக்கில் தூக்கில் இடப்படவுள்ளவர்கள் நேரடியாக சம்மந்தப்படாதவர்கள் என்பது நாம் அறிந்தது. பேரறிவாளன் குண்டு தயாரித்தார் என்பதற்கு சி.பி.ஐ தரும் ஆதாரம் அவர் குண்டுக்கான பாட்டெரிகளை வாங்கித் தந்தார் என்பதே. ஆனால் குண்டுக்கான வெடிமருந்தை சப்ளை செய்த கெ.பியை தான் நாம் இங்கு கொண்டு வந்து தூக்கில் இட வேண்டும். அல்லது ராஜீவுக்கு ஆபத்து வரப்போகிறது என்று தெரிந்திருந்தும் தடுக்காத வாழப்பாடி ராமமூர்த்தி, சுப்பிரமணியம் சாமி போன்றோரை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி இருக்க வேண்டும். முயன்றிருந்தால் பேட்டரி வாங்கியதற்கான பில்லை ஆதாரமாக தந்ததை போல் ஒரு தேசலான ஆதாரத்தை இவர்களுக்கு எதிராக சி.பி.ஐயால் திரட்டியிருக்க முடியும். மேலும் சி.பி.ஐயின் கூற்று உண்மை என்றாலும் இவர்கள் செய்தது ஒரு குறைந்தபட்ச குற்றம் மட்டுமே அதற்கு தூக்குத்தண்டனை அதிகப்படியான தண்டனை. ஜெ.மோ சொல்வது போல் இவர்கள் ராஜீவ் கொலையாளிகளோ இவர்களுக்கு நாம் தயைகூர்ந்து மன்னிக்க வேண்டியதோ இல்லை. இவர்களுக்கு அதிகப்படியான தண்டனை வழங்கப்பட்டுள்ளது; அநீதி நிகழ்ந்துள்ளது. ஒருவரை குற்றவாளி என்று தீர்மானித்து மன்னிப்பது தண்டிப்பதற்கு சமானமானது. இந்த குற்றம் சுமத்தி மன்னிக்கும் தாராளமனப்பான்மை ஒருவித குரூரத்தின் விளைவு. தண்டிக்கும் போதும் குற்றம் சுமத்தி ‘தப்பித்து ஓடிப் போ’ என்று அனுமதிக்கும் போதும் நாம் அதே சாடிஸ திருப்தியை தான் உணர்கிறோம்.
அடுத்து உச்சநீதிமன்றத்தின் மீது அபார நம்பிக்கை உள்ள ஜெ.மோ ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதத்தை “ஒரு வரலாற்று தருணம்”, மக்களின் உணர்வுகளை ஊழலுக்கு எதிரான போராட்டம் நோக்கி திருப்பும் வல்லமை கொண்டது என்று கொண்டாடுகிறார். 2G, CWG, அம்மாவின் சொத்துக்குவிப்பு என்று ஏகப்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தின் விசாரணையில் நிலுவையில் தானே உள்ளன. சர்வ வல்லமை பொருந்திய அறம் பிழைக்காத (ஆனால் ஊழல் மற்றும் நில அபகரிப்பு குற்றங்களுக்காக பதவி விலக்கப்படும் சௌமித்ர சென்களும் தினகரன்களும் ஆளும்) நீதிமன்றங்கள் இருக்கும் போது அன்னா ஹசேரேவின் உண்ணாவிரத போராட்ட எதற்கு? இத்தனை டி.வி சேனல்கள், மற்றும் வலதுசாரிகள், தன்னார்வ குழுக்களின் ஆதரவுடன் தொடர்ந்து பத்துநாட்கள் இந்தியா மொத்தத்தையும் டிராபிக் ஜாம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? லோக் பாலின் தேவை என்ன? ரேஷன் கார்டில் இருந்து 2G, 3G வரை என்ன பிரச்சனை இருந்தாலும் ஒரு எளிய பாமரர் தன்னார்வ வழக்கு தொடுத்தால் போதுமே! ராஜீவ் கொலைவழக்கில் சுருக்கமாக முடித்து நீதியை நிலைநாட்டிய சி.பி.ஐ சான்றுகளை தந்து நீதிவான்கள் தீர்ப்பளித்து ஊழலை அழிக்க மாட்டார்களா? அப்பழுக்கற்ற நீதிபதிகளும், நேர்மையான விசாரணை அதிகாரிகளும் உள்ள போது அன்னா ஹசேரேயின் தேவை என்ன? உண்மை என்னவெனில் கோணலாக சிந்திக்கும் ஒரு இந்துத்துவ சமூகமும், ஊழல் மலிந்த காவல்துறை, சி.பி.ஐ அதிகாரிகள், அரசியல்வாதிகளையும் தாண்டி நீதிமன்றங்களில் உள்ளதாக நம்பப்படும் ரட்சகர்களாலோ, லோக்பால் குழுவில் நியமிக்கப்படும் அதே குட்டையை சேர்ந்த தனிமனிதர்களாலோ ஊழலை அழிக்க முடியாது. இதை ஜெயமோகனே முன்னர் தீராநதியில் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். ஊழல் நம் சமூகத்தில் என்றும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாக உள்ளது என்று திருவிதாங்கூர் சமஸ்தான வரலாற்றை சுட்டிக் காட்டி அன்று ஜெ.மோ எழுதினார். அரசின் நலத்திட்டங்களுக்கான பணம் மக்களை சென்று சேருமுன் பல வாய்கள் கொஞ்ச கொஞ்சமாக கடித்து கடைசியில் எலும்பு மட்டுமே மக்களுக்கு எஞ்சும் என்பது ஒரு நடைமுறை உண்மை. ஊழலை அழிக்க முடியாது மக்களுக்கு விழிப்புணர்வு இருந்தால் குறைக்கலாம் என்றார் ஜெ.மோ. அப்படியென்றால் லோக்பாலால் மட்டும் மக்கள் பணத்தை காப்பாற்ற முடியும்?
மற்றொரு கட்டுரையில் (“மேலிருந்து ஊழலை அழிக்க முடியுமா”) நேர்மையான தலைவர்கள் மேல் இருந்தால் ஊழல் குறையும் என்கிறார். முன்பை விட இன்று அரசியல் தலைவர்கள் ஊழல் குறைவாக செய்வதாக சொல்கிறார். மக்கள் சகித்துக் கொள்வதில்லையாம். உண்மை என்ன? முன்னெப்போதையும் விட இன்று தான் செல்வந்தர்களும், வணிகர்களும் அரசியலில் ஈடுபடுகிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் தங்கள் சொத்து விபரத்தை வெளியிட்ட போது நமது நாட்டில் கோடிக்கணக்கில் பணமில்லாமல் ஒருவர் தேர்தலில் நிற்க முடியாது என்ற உண்மை தெரிய வந்தது. ஊடகங்களில் இது பரவலாக பேசப்பட்டது. கவுன்சிலர்களில் இருந்து எம்.எல்.ஏக்கள் வரை இன்று தங்கள் தொகுதியில் தாம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. நான்கு வருடங்களில் எவ்வளவு சுருட்ட முடியுமோ அது போதும் என்று வெளிப்படையாகவே மக்களிடம் சொல்லி ஐம்பதில் இருந்து ஐம்பதாயிரம் வரை கிஸ்தி கேட்கிறார்கள். இன்று அரசியல் என்பது மீடியா மற்றும் பன்னாட்டு நிறுவன துணையுடன் செய்யும் ஒரு வியாபாரம். ஆ.ராசா, கனிமொழி, தயாநிதி மாறன் அளவுக்கு நம் வரலாற்றிலேயே யாரும் ஊழல் செய்ததில்லை. இன்றைய தலைமுறை அரசியல் தலைவர்கள் மேம்பட்டவர்கள் என்பதற்கு நித்தீஷ்குமாரை மட்டும் உதாரணம் காட்டும் ஜெ.மோ எந்த காலத்தில் வாழ்கிறார்? “எறும்புகள் வாழும் காட்டில்” சில யானைகளும் வாழலாம். அதற்காக யானைகள் தான் இன்று இருக்கின்றன என்பதா?
விழிப்புணர்வு என்றால் என்ன? அது அன்னா ஹசாரே போன்றவர்கள் தூண்டி விடும் பொதுப்புத்தி கிளர்ச்சியா? திரண்டெழும் மக்கள் சக்தியின் ஆவேசமா? இல்லை. CNNIBN பேட்டியில் அருந்ததி ராய் இதைத் தான் கேள்வி கேட்கிறார்: “இதைவிடப் பெரிய கூட்டத்தை நான் காஷ்மீர் போராட்டங்களில் பார்த்திருக்கிறேன், பாபர் மசூதி இடிப்பின் போதும் பார்த்திருக்கிறேன்”
1965இல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இதே போல் மக்கள் கிளர்ச்சி நடந்தது. அதைப் பற்றி ஆய்வு செய்த பேராசிரியர் ராபர்ட் ஹார்டுகிரேவ் என்பவர் அப்போராட்டம் மக்களின் அடிப்படையான அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக இருந்தது என்கிறார். அதாவது அப்போராட்டத்தை நடத்தியது தி.மு.கவோ இடதுசாரிகளோ அல்ல. அது மக்களின் அன்றாட பிரச்சனை சார்ந்த கோபத்தின் வெளிப்பாடு. மக்களுக்கு மூன்று மொழி படிக்கிறோமா என்பதல்ல, மூன்று வேளை சோறு கிடைக்குமா என்பது தான் ஆதார பிரச்சனை. விழிப்புணர்வு என்பது அரசியல் பிரக்ஞை, சமூகப் பொறுப்புணர்வு, கலாச்சார பங்களிப்பு, கோட்பாட்டு அறிவு போன்ற பல்வேறு காரணிகளால் உருவாவது. பத்து நாள் மீடியா ஸ்டண்டால் அன்னாவால் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியாது. தூண்டவும் முடியாது. மக்கள் பொதுவாக விலையுயர்வு உள்ளிட்ட நெருக்கடிகளால் அதிருப்தியுற்றிருக்கிறார்கள். ஆதற்கு இந்த போராட்டம் ஒரு வடிகால் அவ்வளவே. ஜெயலலிதா அரசு ஊழியர்களை கைது செய்த போது இதே மத்தியவர்க்கத்தினர் அந்த நடவடிக்கையை ஆதரித்தார்கள். அதன் பொருள் சமூகம் அரசு ஊழியர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளது, அவர்களை நீக்க விரும்புகிறது என்றல்ல. ஒரு எளிய வடிகால் அவ்வளவே. மற்றபடி அன்னா ஹசாரேவுக்காக களமிறங்கிய மத்திய உயர்மத்திய வர்க்கத்தினர் ஊழலை தொடர்ந்து ஆதரிக்க போகிறார்கள். ஒரு அரசாங்க வேலையை சுளுவாக முடிக்க அதிகாரிகளுக்கு அன்பளிப்பு வழங்குவது ஒரு கலாச்சார பிரச்சனை. நண்பர் என்ற ஒரே காரணத்துக்காக “இலக்கிய நுட்பமோ உபபிரதிகளோ இன்றி எழுதுபவர்” என்று தானே விமர்சித்த நாஞ்சில் நாடனுக்காக ஜெ.மோ பலமுறை விழா எடுத்துள்ளதும் இதே ஊழல் கலாச்சாரத்தின் மற்றொரு பகுதி தான். ஊழல் நம் நூற்றாண்டு கால கலாச்சார வரலாற்றோடு தொடர்புடையது. ஜெ.மோவின் முந்தைய தர்க்கப்படி கறை நல்லது என்பது போல ஊழலும் நல்லதே; நமக்கு இரண்டுக்குமான தேவை உள்ளது.
இந்தியா என்பது மத்திய வர்க்கம் மற்றும் உயர்வர்க்கத்தினால் மட்டும் ஆனதல்ல. அருந்ததி ராய் சொல்வது போல் நிலமற்ற, பணமற்ற, வாழ வழியற்ற, மீடியா ஆதரவற்ற கோடானு கோடி மக்களால் உருவானது இந்தியா (“யானை வாழும் காட்டில் தான் சின்ன எறும்புகள் வாழ்கின்றன்”). எளிய மக்களுக்கான கல்வி, அடிப்படை வசதிகளில் இருந்து அவர்களின் நிலங்களும் உரிமைகளும் பறிக்கப்படுவது, இந்திய அரசியல் அமைப்பை சர்வதேச சக்திகளும், பன்னாட்டு நிறுவனங்களும் மறைமுகமாக கட்டுப்படுத்துவது, இயற்கையையும் சூழலையும் சீரழிப்பது என நமக்கு விவாதிக்கவும் எதிர்த்து போராடவும் இன்று ஏகப்பட்ட உடனடி முக்கிய பிரச்சனைகள் உள்ளன. நமது கால்களை கரையான்கள் தின்னும்போது தலையில் நரைமயிர் பிடுங்குவதே அன்னாவும் ஆதரவாளர்களும் செய்வது.
லோக்பாலை ஜெ.மோ தேர்தல் கமிஷனுடன் ஒப்பிட்டு தேர்தலை அது ஒழுங்காக நடத்தியது போல் லோஜ்பாலும் களையெடுக்க உதவும் என்கிறார். ஆனால் தே.க போல் லோக்பால் ஒரு தனியதிகாரம் கொண்ட அமைப்பாக செயல்பட முடியாது. தேர்தலின் போது மட்டுமே அரசின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் உரிமை தே.கமிஷனுக்கு வழங்கப்படுகிறது. ஏனெனில் அப்போது கொள்கை அடிப்படையில் அரசு தற்காலிக நீக்கத்தில் உள்ளது. மற்றொரு அரசை மக்கள் தேர்ந்தெடுக்கும் வரை முந்தைய அரசு முழுஅதிகாரமற்றதாகிறது. தேர்தல் முடிந்ததும் அனுமார் மீண்டும் குரங்கானது போல் தே.க சிறுத்து விடும். லோக்பால் என்பது ஒரு காலவரையறை அற்ற தேர்தல் கமிஷன். அது அரசை காவல்காப்பதற்கு என்றால் அதனை யார் காவல் காக்க? கோழி முட்டை விவகாரம் போல் இது நீண்டு கொண்டே போகும். இதற்கு பதில் சொல்லும் ஜெ.மோ லோக்பால் குழுவினரின் நேர்மையை சந்தேகிக்கிறவர்கள் அடிப்படையில் நேர்மையற்றவர்கள். நேர்மையற்றவர்கள் தம்மைச் சுற்றிலும் நேர்மை இல்லை என்று நம்ப விரும்புகிறார்கள் என்கிறார். குற்றவுணர்வு கொண்டவர்களே பிறரை குற்றவாளிகள் என நம்புகிறார்கள் எனும் ஒரு ஒழுக்கவாத தர்க்கம் இது. ஒழுக்கவாதம் அடிப்படையில் மக்கள் மிக நல்லவர்கள், நல்லவர்களாகவே வாழ வேண்டும், இல்லையென்றால் தண்டிப்போம் என்று நன்மையை கொண்டு அச்சுறுத்துவது. “நான் நல்லவன் நான் நல்லவன்” என்று திரும்பத் திரும்ப சொல்வது. ஒழுக்கவாதம் தாழ்வுமனப்பான்மையின் திரிந்த வடிவம். மனிதன் அடிப்படையில் தன்னிடம் இல்லாததைத் தான் அடுத்தவரிடம் பார்க்க விரும்புகிறான். காந்தி தன் சபர்மதி ஆசிரமத்தில் காதலித்த ஒரு பெண்ணை மொட்டையடிக்க வைத்து தண்டித்தார். ஏனென்றார் காந்தியால் படுக்கையில் தனிப்பட்ட தன் காமத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. நம்மிடம் எது இல்லையோ அதைப் பற்றித் தான் சதா சிந்திக்கிறோம். காமம், பணம், நேர்மை என எல்லா விசயங்களிலும் இதுவே நடக்கிறது. அறம், ஒழுக்கம், கருணை பற்றி ஆயிரக்கணக்கில் எழுதிக் கொண்டே இரங்கல் கட்டுரைகளில் தனிநபர்களை அவதூறு செய்யும் ஜெ.மோவே இதற்கு சிறந்த உதாரணம். இந்நாட்டில் லோக்பாலை நிர்வகிக்கும் அளவுக்கு நேர்மையான தலைவர்கள் மலிந்து கிடக்கிறார்கள் என்றால் லோக்பால் எதற்கு? அவர்களே நாட்டை ஆளலாமே? எலிகள் இல்லாத சாமியாருக்கு பூனையும், பால்காரியும் எதற்கு?
வலதுசாரிகளால் நடத்தப்பட்ட ஒரு போராட்டத்தை ஒரு வலதுசாரி எழுத்தாளர் ஆதரித்து புத்தகமாக எழுதி அதை ஒரு வலதுசாரி பதிப்பகம் வெளியிடுவதில் உள்ள குறைந்தபட்ச தர்க்கம் கூட அவரது முன்னுக்குபின் முரணான ஊழல் எதிர்ப்பு விவாதத்தில் இல்லை என்பது பரிதாபத்துக்குரியது.
1. நீதிமன்றங்கள் நம்பகத் தன்மையில்லாதவை
ReplyDelete2. மக்கள்(நான் உட்பட) அனைவரும் அயோக்கியர்கள் (இதில் உங்களுடன் கிட்டத்தட்ட நான் உடன்படுகிறேன்)
3. இந்தியா இந்துத்துவ நாடு
4. நல்லதே நடக்காது
சார் actual-ஆ உங்க பிரச்சினை என்ன?
இந்த நான்குமே தான்
ReplyDeleteசில விஷயங்கள். அப்படி எளிதாக வலதுசாரிகள் இடதுசாரிகள் என்று எவரையும் பிரிக்கக்கூடிய நிலையில் நாம் இல்லை என்று தான் நினைக்கிறேன். தன் மகனோ மகளோ கார்ப்ரேட் நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்று தான் எந்த இடதுசாரியும் (கட்சி சார்ந்தவரும் சாராதவரும்) உள்ளூர ஆசைப்படுகிறார். மாடன் மோட்சம் போன்ற ஒரு சிறுகதையை எழுதியவர் வலதுசாரி என்பதன் தர்க்கம் எனக்கு புரியவில்லை. ஜெயமோகனின் அரசியல் சார்ந்த கட்டுரைகளை இவ்வாறு வகுக்கலாம். 'இருக்கும் அமைப்பை குறை சொல்லி அதை உடைத்து நீங்கள் உருவாக்கபோகும் அமைப்பு அப்படி மேலான அமைப்பாக இருந்து விடுமா.அப்படி இருந்து விடும் என்பதற்கு ஏதேனும் உத்தரவாதம் தர இயலுமா.அப்படி இல்லாத பட்சத்தில் இருக்கும் அமைப்பையே உயர்த்த உரையாடல்களும் மூலமும் ஜனநாயகம் வழங்கும் உரிமைகள் மூலமும் போராடலாமே' என்பது தான் ஜெயமோகனின் நிலைப்பாடாக எப்போதும் இருக்கிறது. ஒரு அரசியல் சம்பவத்தையோ , கருத்தையோ இந்த வாக்கியங்களின் வழியாக வெளியே எடுத்தால் ஜெயமோகன் என்ன சொல்வார் என சொல்லிவிடலாம்.பெருங்கனவுகள் தோற்கின்றன என்று பின்தொடரும் நிழலின் குரலிலும் , விஷ்ணுபுரத்திலும் எழுதியவர் இன்று மகா கனவுகள் தோற்பதில்லை என்று எழுதுகிறார். ஒரு வேலை அவருக்கு நம்பிக்கைகள் இப்போது தேவைபடும் ஒன்றாக இருக்கலாம். உங்கள் கட்டுரைகளை பார்க்கும் போது உங்களுக்கு எதிலும் நம்பிக்கை இல்லை என்று தெரிகிறது. நீங்கள் பொய்யாக எழுதுபவர் அல்ல. இளமையில் நம்பிக்கை வறட்சியோடு இருந்துவிடலாம். பின்னர் எப்படியும் நம்பிக்கை வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். புதுமைப்பித்தனே சற்று முதுமை காலத்தில் எழுதியிருந்தால் நம்பிக்கையின் மின்னல்கள் தெறிக்கும் கதைகளை எழுதியிருக்கலாம்.
ReplyDeleteஇன்னொரு விஷயம் நிலமற்ற , பணமற்ற, வாழ வழியற்ற, மீடியா ஆதரவற்ற கோடானு கோடி மக்களால் உருவானது இந்தியா என்பதை அருந்ததி ராய் தான் சொல்ல வேண்டும் என்றில்லை. எல்லா விஷயங்களிலும் கார்ப்ரேட்டின் கைகளை பார்க்கும் அருந்ததி ராய் தான் கார்ப்ரேட் சேனல்களில் ஜொலிக்கிறார்.
நன்றி
சர்வோத்தமன்
இப்பிடி எல்லாமே பிரச்சனையா இருக்கிற ஒரு உலகத்துல இந்த 3 பேரும் என்ன சுகத்தக் காணபோறாங்கன்னு இவங்க உயிரோட இருக்கணும்னு கொந்தளிக்கிறீங்க? நீங்க என்ன சாடிஸ்டா?
ReplyDeleteஅனானி நீங்கள் கட்டுரையாய் அரைகுறையாய் படித்து விக்கல் எடுக்கிறீர்கள். முதலில் சரியாய் வாசிக்க கற்றுக் கொள்ளுங்கள். அப்புறம் கேள்வி கேட்கலாம்.
ReplyDeleteசர்வோத்தமன் நீங்கள் இதை ஒரு ஜெமோ எதிர்ப்பு கட்டுரை அல்ல என்று புரிந்து கொண்ட அளவிலே எனக்கு மெத்த மகிழ்ச்சி. ஆனால் என் கட்டுரையின் சாரம் லட்சியவாதம் தவறென்பது அல்ல. ஜெ.மோவின் அரசியல் நிலைப்பாடுகளில் உள்ள சஞ்சலம். தர்க்க ஒழுங்கின்மை. அதைத் தான் சுட்டி இருக்கிறேன். தொடர்ந்து எதிர்வினை செய்யுங்கள்.
ReplyDeleteD,
ReplyDelete1. லட்சியவாதம் என்றால் idealism.
2. ஒழுக்கவாதம் moralism. ஒழுக்கவாதம் நிலையான பண்புகளை கொண்டதல்ல. ஊருக்கு ஊருக்கு ஆளுக்கு ஆள் மாறுகிறது. மனைவியை விருந்தினருக்கு தாரை வார்த்து கொடுப்பதை நல்லொழுக்கமாக கருதும் பழங்குடியினர் உண்டு. ஆனால் ஒழுக்கத்தை அடிப்படையாக பார்க்கும் கண்ணோட்டம் ஒரு நிலைப்பாட்டை அனைவருக்கும் வலியுறுத்துகிறது. இப்படி வலியுறுத்துவோர் அடுத்தவரை எளிதில் ஆதிக்கம் செய்கிறார்கள். இதனாலே ஒழுக்கவாதம் ஒரு எதிர்மறை சிந்தனையாகிறது.
3. காந்தியின் ஆஸிரமத்தில் உள்ள ஆணை அப்பெண் காதலித்தாள். காந்தி ஒரு வைதிக சிந்தனையாளர். காமம் மனிதனை கீழ்மையாக்கும் என்று நம்பினார். விந்தை வெளிப்படுத்தாமல் இருந்தால் ஆணின் ஆன்ம ஆற்றல் பெருகும் என்பதான பல பிற்போக்கு அசட்டு கருத்துக்கள் வைத்திருந்தார். காந்திக்கு இதனாலே காதல் பிடிக்காது.
thanks...Shall I ask one more doubt to you?
ReplyDeleteரொம்ப நாளாக ஒரு சந்தேகம். கம்யூனிசம் பற்றி. மனிதர்கள் இயல்பிலேயே கேவலமானவர்கள். கம்யூனிசம் மனிதனையும் அவன் பிச்சைகாரத்தனத்தையும் மாற்றி விடுமா?
எதிர் வீட்டுக்காரனையும் பக்கத்து வீட்டுக்காரனையும் கூடப்பழகும் நண்பர்களின் நிஜமுகத்தையும் காண வாய்ப்பே கிடைக்காத அப்பிராணிதான் உலகிற்கு சேவை புரிய நினைக்கும் சே குவேரா போன்றவர்களாக ஆவார்கள். மாறாக உண்மையை கொஞ்சமேனும் கண்டவனோ மனிதர்களை வெறுத்து குதிரையோடு வாழ ஒதுங்கிய கல்லிவர் டிராவல்ஸ்சில் வரும் கல்லிவராக தான் ஆவான் என்பது என் கருத்து. நான் சரியா?
டி,
ReplyDeleteசேவைக்கும் அரசியலுக்கும் வேறுபாடு உள்ளது. கம்யூனிசத்தை நான் அரசியலாக பார்க்கிறேன். மனிதர்கள் நல்லவர்களானாலும் கெட்டவர்களானாலும் ஒதுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலாக கம்யூனிசம் தொடரும். நீங்கள் குறிப்பிடும் பிரச்சனை மத்வாதிகளான போதகர்களும் துறவிகளும் சந்திக்கும் ஒன்று. உதாரணமாக காந்தி அனைத்து மனிதர்களும் நல்லவர்கள் என்று நம்பினார். ஒரு அரசியல்வாதிக்கு அது தேவை இல்லை.
don't mistake me as I'm asking one more time.
ReplyDelete1. லட்சியவாதம்(idealism) என்றால் என்ன? Really, I don't know what it is.
2. I would like to read about moralism more. Where can I read about moralism more? is there any book? or have u written about this in any other essay in your blog?
3. U r using the word ஆன்ம ஆற்றல். What is meant by Aatma? jeyamohan once wrote that aatma is 'saarram'.Rudhran in one of his books has written that aatma is 'unmai'
I couldn't understand what both these persons conveyed. what is aathma? what is aanma aatral?
moralism குறித்து நீங்கள் இணையத்தில் ஏராளமாய் படிக்கலாம். தமிழில் தனி நூல்களோ கட்டுரைகளோ உள்ளதாக தெரியவில்லை. ஆன்ம ஆற்றல் என்று நான் எழுதி உள்ளேனா? எப்படியும் எனக்கு ஆன்மாவில் நம்பிக்கை இல்லை. அப்படி எழுதியிருந்தாலும் உள்ளார்ந்த மன ஆற்றலை சொல்லி இருப்பேன்.
ReplyDeleteu didnt used the word 'aanma aatral' in essay. U used it in the reply comment to me. see this statement by you--->//விந்தை வெளிப்படுத்தாமல் இருந்தால் ஆணின் ஆன்ம ஆற்றல் பெருகும் என்பதான பல பிற்போக்கு அசட்டு கருத்துக்கள் வைத்திருந்தார். //
ReplyDelete