Sunday, 4 March 2012

காதலில் சொதப்புவது எப்படி: ஒரு மசாலா பரீட்சார்த்த படம்



தமிழில் இருவகையான பரீட்சார்த்த படங்கள் வருகின்றன. ஒன்று மசாலா படம் என்ற பாவனையில் வரும் பரீட்சார்த்த படம். இரண்டு உலக சினிமா என்கிற பாவனையில் வரும் மசாலா படம். தமிழில் மூன்றாவதான ஒரு தனி பரீட்சார்த்த சினிமா இல்லை என்பதை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். அவ்வகையில் “காதலில் சொதப்புவது எப்படி முதல் வகை. அதே காரணத்தால் ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் நாம் இந்த படத்தை பற்றி பேசலாம்.

500 Days of Summer என்கிற ஒரு மாற்றுமுயற்சி ஹாலிவுட் படம் இருவிதங்களில் தமிழில் தழுவப்பபட்டது. கவுதம் மேனன் மிக நாடகீயமாக ஆனால் சற்றே தனித்துவத்துடன் அதை தமிழுக்குவிண்ணைத்தாண்டி வருவாயாக ஆக கொண்டு வந்தார். அடுத்து “நாளைய இயக்குநர் புகழ் பாலாஜி மோகன் மேலும் சாமர்த்தியம் மற்றும் தனித்தன்மையுடன் அதைத் தழுவி தனது முதல் படத்தை செய்துள்ளார். அதாவது வடிவத்தையும் கதைக் கருவையும் எடுத்துள்ளார். காதல் தோல்வியுற்ற ஒருவன் தனது இழப்பை குறித்து மீள்யோசிப்பது, அலசுவது, விசனிப்பது இறுதியில் அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்வது. இது கரு. அவனது கசப்பான காதல் நினைவுகளின் வரிசை சற்று தாறுமாறாகத் தான் இருக்கும். அதனால் சந்தர்ப்பம் மனநிலைக்கு ஏற்றபடி அந்த காதல் தோன்றி வளர்ந்த நிகழ்ச்சிகளை முன்னுக்கு பின்னாக பிளாஷ்பேக் சொல்வது. இது வடிவம்.

ஒருவிதமான inner monologue. மனசுக்குள் ஓடும் எண்ணங்களின் நதியை நாடகீயம் இன்றி முழுக்க தன்னிலையில் ஆனால் ஒருவித விலகல் மனநிலையுடன் சொல்வது இப்படத்தின் பாணி. தன் கதையை பொதுவயமாக சொல்லி பார்வையாளனை ஈர்க்க இந்த விலகல் தொனி உதவும். 500 Days of Summer இன் டோமை போல் பாலாஜியின் படத்திலும் அருண் தன் காதல் தோல்வியால் கசப்புற்று அவநம்பிக்கையுடன் இருக்கிறான். அவனுக்கு தன் காதல் கதையை சொல்வதில் ரொம்ப ஈடுபாடெல்லாம் இல்லை. அது தன்னை காயப்படுத்தும் என்று நம்புகிறான். அந்த உவப்பற்ற நினைவுகளை கடந்து விட எத்தனிக்கிறான். ஆனால் கதையோட்டத்தில் தன் நண்பர்களின் வெவ்வேறு காதல் சாகசங்களை விவரிக்கும் போது உதாரணத்துக்காக வேறுவழியின்றி சொல்வது போல் “இப்படித் தாங்க என் லைப்பிலயும் நடந்திச்சு என்று தன் கதையை நடுநடுவே ஆரம்பிக்கிறான். அருணாக சித்தார்த்தின் பெருமூச்சு கலந்த குரல் இந்த தொனிக்கு பெரிதும் உதவுகிறது. ஒவ்வொரு வசனத்தின் இறுதியிலும் முற்றுப் புள்ளி போல் கட்டாயம் ஒரு பெருமூச்சு விடுகிறார். நெஞ்சை நெகிழ வைக்கும் “வி.தா.வ போலல்லாமல்  காதலில் சொதப்புவது எப்படி ஒரு அறிவார்ந்த தன்மையுடன் மிகுந்த நகைச்சுவை மற்றும் எதார்த்தத்துடன் இருப்பதற்கு இதுவும் காரணம். தமிழில் வாய்ஸ் ஓவரில் கதை சொல்லும் படங்களில் இப்படியான தொனி இதுவே புதுசு. ரொமாண்டிக் காமிடி என்பதால் இளகிய தமிழ் மனசை இது உறுத்தவில்லை.

ரொமாண்டிக் காமிடிகளில் பொதுவாக ஷேக்ஸ்பியர் காலத்தில் இருந்தே பெண்கள் ஆண்களை விட அதிக சுட்டியாக வாயாடியாக இருப்பார்கள். நகைச்சுவைக்கு உதவுகிற ஒரு தேய்வழக்கு தான் இது. இருந்தும் நல்ல படைப்பாளிகள் இதை வாழ்க்கைக்கு சற்று நெருக்கமாக காட்டி விடுவார்கள். ஷேக்ஸ்பியரின் நாடகங்களிலேயே ஆண்கள் ஆழமாக சித்தரிக்கப்பட்டாலும் பெண்கள் தாம் அதிக இயல்பாய் துடிப்பாய் சுவாரஸ்யமாய் உருவாக்கப்பட்டார்கள். 500 Days of Summer படத்தில் சம்மர் என்கிற பெண் தனித்துவம் மிகுந்த விடாப்பிடியான வலுவான ஆளுமை கொண்டவள். அவளைக் காதலிக்கும் டாம் தொட்டால் சுருங்குகிற வகையறா. பணிவும் இனிமையான சுபாவமும் மிகுந்து எளிதில் அப்பிராணி எனும் தோற்றம் ஏற்படுத்துபவன். அதனாலே சம்மர் அவனை காதலித்து ஒருநாள் “நான் உன்னை நிஜமாகவே காதலிக்கவில்லை என்று உதறித் தள்ளும் போது மனதளவில் நொறுங்கி விடுகிறான். பாத்திரங்களுக்கு இடையிலான இந்த எதிர்நிலை “காதலில் சொதப்புவது எப்படியில் வருகிறது. பணிவான பையன். முரட்டுத்தனமான பெண். ஒருமுறை அவளுக்கு எதிர்பாராமல் கோபம் வந்து ஒரு கண்ணாடி கோப்பையை தூக்கி எறிந்து அவன் மண்டையை உடைத்து விடுகிறாள். அந்த காட்சியுடன் தான் படம் ஆரம்பிக்கிறது. இந்த பெண் ஏன் இப்படி இருக்கிறாள்? ஆவேசமாக தன்னை நேசித்த அவள் அதே ஆவேசத்துடன் தன்னை தாக்கவும் செய்கிறாளே, ஏன்? இந்த கேள்வியுடன் தான் படம் ஆரம்பிக்கிறது. படம் முழுக்க அவன் சிந்தித்தபடியே இருக்கிறான். நேரடியாக பார்வையாளர்களிடம் தன் சந்தேகங்களை கேட்கிறான், இயலாமையை குழப்பத்தை பகிர்கிறான். இப்படி நேரடியாக படக்கருவியை நோக்குவது நமது சினிமாக்காரர்களுக்கு கறுப்புவெள்ளையில் இருந்தே கைவந்த கலை. ஆனால் அது அநேகமாக நாயகனின் உணர்ச்சியை, நெகிழ்வோ மனக்கொந்தளிப்போ, காட்டத்தான். மிக நாடகீயமாக பார்வையாளனின் இதயத்துடிப்பை எகிற வைக்கிற வகையில் குளோசப்பில் ஒரு கொடூர பார்வை பார்த்து ஒரு வசனம் பேசுவார்கள். இல்லையென்றால் பாக்கியராஜ், பாலசந்தர் பாணியில் பிற்போக்குத்தனமான முன்னெண்ணங்களை, அநேகமாக இயக்குநரின் அபிப்பிராயங்களை, சொல்லுவார்கள். நாயகன் தன் நேர்மையான சுய அலசலை பார்வையாளர்களிடம் முன்வைத்துக் கொண்டே இருப்பது இதுவே முதல் முறை. குறிப்பாக இந்த படத்தில் எங்குமே அவன் தன் வாழ்க்கை சித்தாந்தத்தையோ பிற பாத்திரங்கள் பற்றின கருத்துக்களையோ சொல்வதில்லை. அருணுக்கு பிரச்சனை காதலிப்பது ஏன் இவ்வளவு சிரமமாக இருக்கிறது, ஏன் பெண்கள் இப்படி புதிர்மயமாக இருக்கிறார்கள்? இந்த கேள்விகளை தவிர வேறெந்த நபர்களையோ, அவர்களின் வாழ்வு பற்றியோ அவன் யோசிப்பதில்லை. அதுதான் எதார்த்தமும். மனிதன் மிக அரிதாகவே அடுத்தவன் பற்றி அக்கறை கொள்கிறான். அப்படி கொண்டாலும் அது தன் நிலைப்பு அல்லது பாதுகாப்பு காரணமாகவே இருக்கும். நாயகனின் கதைசொல்லலில் உள்ள இந்த குறுக்கிடாத தன்மை பாராட்டத்தக்கது.
காதல் பிரச்சனைகளுக்கு பெண்களின் அடாவடித்தனம் அல்லது இரக்கமின்மை காரணம் என தொடர்ந்து விமர்சித்து கேலி செய்வது தமிழ் சினிமாவில் மற்றொரு தேய்வழக்கு. பாலாஜி மோகன் இரண்டு விசயங்களை புதுசாய் செய்கிறார். பெண்களின் விசித்திர குணங்களை புரிய முயலாமல் ஒழுக்க/நியாய விசாரணை செய்யாமல் அப்படியே ஏற்றுக் கொள்வது உசிதம் என்கிறார். மற்றொரு இடத்தில் நாயகியான பார்வதியின் கண்டனத்துக்குரிய செயல்களுக்கு அவளது அப்பாவை திடீரென்று இழந்ததன் அதிர்ச்சி, பாதுகாப்பின்மை காரணமான பதற்றம் ஆகியவை காரணமாகலாம் என்று யோசிக்கிறார். குடும்பம் நிலைப்பட்டதும் அவள் பழையபடி அமைதியாகி காதலனை ஏற்கிறாள். சுவாரஸ்யமாக அவள் அருணை ஆரம்பத்தில் காதலிப்பது வீட்டை விட்டு போன தன் அப்பாவின் ஸ்தானத்தில் அவனை வைத்து ஆறுதல் தேடுவதற்கு தான். பின்னர் அப்பா மீதுள்ள அவளது வெறுப்பும் ஏமாற்றமும் அருண் மீது மெல்ல மெல்ல தொற்றுகிறது. இந்த பாத்திர பண்பின் குடும்ப பின்னணி கூட 500 Days படத்தை நினைவுபடுத்தினாலும் தமிழ்சினிமாவுக்கு இது நிச்சயம் புதுசு.

இப்படி சதா எரிச்சல்படும் அடாவடியான ஆயிரம் பெண்களை நாம் நிஜவாழ்க்கையில் காண முடியும். குடும்பம் மற்றும் சூழலின் நெருக்கடிகள் அவர்கள் மனதை ஆயிரம் கண்ணாடி துண்டுகளாக சிதறடிக்கின்றன. ஆயிரம் சில்லுகளிலும் ஆயிரம் பண்புகளை எதிரொலிக்க பெண்களால் முடியும். ஆனால் எதிர்பாராத வேறுபட்ட இந்த மனநிலைகளுக்கு அவர்கள் மட்டுமே பொறுப்பல்ல என்கிறார் பாலாஜி. படத்தில் ஒரு அழகான காட்சி ஆணும் பெண்ணும் யோசிப்பதன் மாறுபாடுகளை சொல்வது. ஒரு ஆணால் அரைமணி கூட ஒன்றும் யோசிக்காமல் இருக்க முடியும்.. ஆனால் காதலி அதை நம்ப தயாராக இருப்பதில்லை; “நீ என்ன யோசிக்கிறாய்? என்று அவனை ஐயப்பட்டுக் கொண்டே இருக்கிறாள். பெண் மனதால் எண்ணங்களை மென்று கொண்டே இருப்பதை தவிர்க்க முடியாது. அவள் ஒரே வேளையில் தான் இருக்கும் உணவகத்தின் டிசைன், எதிர்மேஜை பெண்ணின் சிகையமைப்பு என வேவ்வேறு தகவல்களை மனக்கணினிக்குள் திணித்துக் கொண்டே இருக்கிறாள். இந்த சிதறிக் கொண்டிருக்கிற மனநிலையால் தான் பெண்களால் உடனடியாய் முடிவெடுக்க, துணிச்சலாய் நினைத்ததை மொழியில் வெளிப்படுத்த முடிகிறது. ஆண்கள் ஒன்றை யோசித்து வேறொன்றை சொல்வார்கள். அதுவும் அசட்டுத்தனமாகவே முடியும் என்கிறார் இயக்குநர் பெண்கள் பெண்கள் தாம் ஆண்கள் ஆண்கள் தாம். இப்படியான “Men are from Mars Women are from Venus வகை ஜனரஞ்சக தத்துவத்துக்குள் சென்று முடிந்தாலும் கதை முடிவில் அருண் ஒரு முக்கியமான அறிதலை வந்தடைகிறான். அது காதலின் வெற்றி/தோல்வி பற்றி அலசுவது வீண் என்பது. என்னதான் தர்க்கரீதியாக ஆராய்ந்தாலும் வாழ்வின் சிக்கலான போக்கின் முன் அவை அத்தனையும் தோற்றுப் போகும். சொதப்பலாகவோ இல்லாமலோ காதலை அதன் போக்கில் செய்வது தான் நல்லது. எதேச்சையான பல விசயங்கள் காதலில் திட்டமிட்டதாகவும் மாறாகவும் நிகழும். மார்ஸ் வீனஸ் கருத்தாக்கத்தில் இருந்து இந்த அவதானிப்பு படத்துக்கு ஒரு முதிர்ச்சியை அளிக்கிறது. இதில் ஒரு இந்தியத்தனமும் உள்ளது. 500 Days படத்தில் சம்மர் டோமிடம் அவனை நிராகரிப்பதற்கு ஒரு காரணம் சொல்வாள். அது தன்னால் யாரையும் காதலிக்க முடியாது என்பது. காதல் உணர்ச்சிகளே அவளுக்கு எழாது. ரொமாண்டிக் தன்மையே இல்லாதது தன் ஆளுமை என்பாள். ஆனால் அடுத்த முறை அவன் பார்க்கும் போது அவள் எதிர்பாராமல் வேறொருவனை காதலித்து கல்யாணமும் பண்ணி இருப்பாள். இது குறித்து டோம் கசப்புடன் விசாரிக்கும் போது சம்மர் சொல்வாள் “எனக்கே தெரியாது, இது எப்படி நிகழ்ந்தது என்று. பார்த்த உடனே அவரை காதலிக்க துவங்கி உடனே மணம் புரிந்தும் விட்டேன். ஆனாலும் எனக்கு காதலின் விழுமியங்களில் நம்பிக்கை இல்லை தான். காதலில் லட்சியவாதம் ஒன்றும் இல்லை. அது ஒரு உயிரியல் விழைவு. ஏற்ற துணையை ஆழ்மனம் சுட்டிக் காட்டுவதே காதல், அதை விளக்க முடியாது என்றது 500 Days படம். இந்தியர்கள் இப்படி பரிணாமவியல் எல்லாம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நமது நிஜம் என்பது நன்மையானாலும் தீமையானாலாலும் அதை அதை அப்படியே ஏற்றுக் கொள்வது.

அடுத்து இப்படத்தில் உள்ள பயணக்கதையின் பண்பு. பயணக்கதைகளில் நாயகனின் உலகம் அவன் சந்திக்கும் புதுநபர்களின் அனுபவம் மூலம் விரிந்து கொண்டே போகும். அவன் முதிர்ச்சியை அடைவதற்கு அவர்கள் உதவுவார்கள். ஆகையால் அவர்கள் படத்தின் பாதியில் கூட அறிமுகமாகி கதையை புதுதிசைகளை நோக்கி கொண்டு செல்லலாம். பயண சினிமாவின் சுவாரஸ்யமே வாழ்வில் உள்ள எதிர்பாராத் தன்மையை அதுவும் கொண்டிருப்பது தான். “காதலில் சொதப்புவது எப்படியில்“ அருணும் நண்பர்களும் பாண்டிச்சேரிக்கு ஒரு நிச்சயதார்த்தத்திற்கு செல்கிறார்கள். அங்கு அவர்கள் சந்திக்கும் கேத்தி, ஜான் மற்றும் கேத்தியின் முன்னாள் காதலன் அதுவரையிலான சித்தரிப்புக்கு புது பரிமாணம் அளிக்கிறார்கள். இங்கு ஆண்கள் பற்றின அங்கலாய்ப்பு சற்று வருகிறது.

ஆண்கள் சைக்கோத்தனமாக பெண்களை சந்தேகப்பட்டு கட்டுப்படுத்த முயல்கிறார்கள் என்பது இந்த கருத்து. ஒரு காட்சியில் அருண் பார்வதியிடம் மெச்சிக் கொள்கிறான் “நான் ஒருநாளும் உன்னை கண்டுரோல் பண்ண டிரை பண்ணினது இல்லையே. அதற்கு பார்வதி திரும்ப கேட்கிறாள் “Who are you to control me?. மிக அப்பிராணியாக தெரியும் அருணுக்குள்ளும் மிக நுட்பமாக பெண்களை கட்டுப்படுத்தும் அதிகார மோகம் செயல்படுகிறது. கேத்தி என்றொரு பெண் வருகிறாள். பார்வதிக்கு நேர்மாறாக அமைதியான முதிர்ச்சியான (அமலா பாலை விட அழகான) பெண். இப்பெண்ணின் பிரச்சனை அவளது முதல் காதலன் அவளை மட்டுமீறி சந்தேகப்படுகிறான் என்பது. பெண்களும் சந்தேகப்படுகிறார்கள். ஆனால் ஒரு அளவோடே. ஆண்கள் உயிரியல் ரீதியாகவே பலபெண் துணைகளை விழைபவர்கள் என்பதாலும் வேறு சில காரணங்களாலும் மேலும் வலுவாக சந்தேகிக்கிறார்கள். அரேபிய இரவுகளில் வரும் ஜின்னை போல் காதலியை ஆயிரம் பேழைகளுக்குள் இட்டு பூட்டி தலைமாட்டில் வைத்து தூங்க விழைகிறார்கள். ஆண்களின் காதலில் மட்டுமல்ல possessiveness இல் கூட வன்மம் அதிகம். ஆக கேத்தி முதல் காதலனிடம் முறித்துக் கொண்டு இரண்டாவதாக ஜானை காதலிக்கிறாள். அவர்களின் நிச்சயதார்த்தத்துக்குத் தான் அருணும் நண்பர்களும் பாண்டிச்சேரி வருகிறார்கள். முதல் காதலன் வஞ்சக எண்ணத்துடன் இந்த குழுவில் சேர்ந்து கொண்டு மெல்ல மெல்ல ஜானின் மனதில் விஷத்தை ஏற்றுகிறான். கேத்திக்கும் அருணுக்கும் கள்ளக்காதல் என்று சந்தேகத்தை விதைக்கிறான். ஜான் அதை உடனடியாக நம்பி திருமணத்தை முறிக்க எத்தனிக்கிறான். இப்படி ஆண்களின் விநோத மனமாற்றங்களும் சந்தேகங்களும் கதைக்கு ஒரு சமநிலையை அளிக்கின்றன. ஏன் பெண்கள் இப்படி எதிர்பாராத விதமாய் மாறுகிறார்கள் என்று யோசித்து வந்த அருண் இந்த அனுபவத்தின் ஊடே மனிதர்கள் ஏன் ஒட்டுமொத்தமாக இப்படி விநோதமாய் இருக்கிறார்கள் என்று வியக்க துவங்குகிறான். இந்த மாதிரியான ஆண்களுக்கு மற்றொரு பக்கம் குழப்பமான குதர்க்கமான இரு ஆண் பாத்திரங்களும் அருணுக்கு நண்பர்களாக வருகிறார்கள். பாதி கொமாளிகள். ஒருவன் காதலிக்கும் பெண் அவனை அண்ணா என்று உறவு பாராட்ட “அவள் என்னை பிடிக்கவில்லை என்று சொல்லவில்லையே என்று அசட்டு நேர்மறைவாதத்துடன் தொடர்ந்து அவளை காதலிக்கிறான். மற்றவன் வரம்பில்லாமல் பேசி பெண்களிடம் சதா அடி வாங்குகிறான். இப்படியான பலதரப்பட்ட பாத்திரங்கள் இப்படத்தின் வலு.
அருண் மற்றும் பார்வதியின் பெற்றோர்கள் காதலித்து மணம் புரிந்தவர்கள். அருணின் பெற்றோர்களின் காதல் நிலைக்கிறது. அதற்கு ஒரு காரணம் அவனது அப்பா நன்றாக சம்பாதித்து குடும்பத்தை பார்த்துக் கொள்கிறார் என்பது. பார்வதியின் அப்பாவுக்கு இந்த சாமர்த்தியம் போதாது என்பதால் அவரது காதல் கசக்கிறது. அவளது பெற்றோர்கள் விவாகரத்தை நோக்கி நகர்கிறார்கள். திருமணக் காதலில் புரிதலும் விட்டுக்கொடுத்தலுமே முக்கியம் என்றொரு அசட்டுவாதம் தமிழ் சினிமாவில் அடிக்கடி வைக்கப்படும். காதலின் நிலைப்புக்கு அஸ்திவாரம் பணமும் அந்தஸ்தும் நிறைய சாமர்த்தியமும். காதல் திருமணங்கள் தோற்பதற்கு இதில் ஏதாவதொன்று குறைவதே காரணம். இவ்விசயம் எதார்த்தமாக கையாளப்பட்டுள்ளது மீண்டும் பாராட்டுக்குரியது. பெண்கள் காதலில் திளைக்கும் ஆணை விட ஸ்திரமான வலுவான ஆணையே தேர்வர். ஆனால் பெற்றோர் பாத்திரங்கள் வரும் இடங்கள் மிக தொய்வாக உள்ளது இப்படத்தின் முக்கிய குறை.

அறுநூறு வருடங்களுக்கு முன்பான ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் இருந்தே ரொமாண்டி காமிடிகளின் இறுதி செயற்கையாக சலிப்பாக இருக்கும். குறைவான நேரத்தில் குழப்பங்கள் தெளிவாக்கப்பட்டு மனஸ்தாபங்கள் தீர்க்கப்பட்டு பிரிந்தோர் சேர்க்கப்படுவார்கள். இந்த துர்விதியில் இருந்து எந்த படமும் தப்பியதில்லை. இப்படமும் கூட.

புதிய வடிவத்துக்காகவும், நேர்மையான சற்றே அறிவார்ந்த அலசலுக்காகவும், இன்னும் சற்றே விலகல் தன்மை கொண்ட கதைகூறலுக்காகவும் “காதலில் சொதப்புவது எப்படி கவனிக்கத்தக்க படம். உலக சினிமா எடுக்க “முயலாததற்காகவும் பாலாஜி மோகனை மீண்டும் ஒருமுறை பாராட்டலாம்.
Share This

3 comments :

  1. அருமையான அலசல் அபிலாஷ்...இந்தப்படம் பார்த்துவிட்டு ஃபேஸ்புக்கில் நான் எழுதியது : ”காதலில் சொதப்புவது எப்படி படம் பார்த்தேன். எனக்குப் பிடித்திருந்தது. 24 வயது இளைஞர் பாலாஜி காதல் பற்றிய மிகுந்த மன முதிர்ச்சியுடன் எழுதி இயக்கியிருக்கிறார். பிரெக்டின் அந்நியமாதல் உத்தியில் பிரதானப் பாத்திரம் பார்வையாளரோடு பேசிக் கொண்டே தன் வாழ்க்கையை சொல்கிறது. பெண்களுக்கு எதிரான கொலைவெறி காட்சியோ வசனமோ இல்லாத மெல்லிய நகைச்சுவை, சீரான நடிப்பு படத்தின் முக்கிய அம்சங்கள். இதன் குறும்பட வெர்ஷனை பின்னர்தான் பார்த்தேன். அதைப் பார்த்துவிட்டு பாலாஜிக்கு முழுப் படத்தை உருவாக்க வாய்ப்பு அளித்த சித்தார்த், நீரவ் ஷா, சசிகாந்த் ஆகிய தயாரிப்பாளர்கள் பாராட்டுக்குரியவர்கள். குறும்படத்தில் நடித்த புதுமுகங்கள் பெரும்பாலோரை முழுப்படத்திலும் நடிக்க வைத்திருப்பது நல்ல விஷயம். படத்தின் ஒரே பலவீனம் பாடல்கள்தான், பின்னணி இசை சிறப்பாக உள்ள அளவுக்கு பாடல்கள் இல்லை. இது காவியப்படம் அல்ல. ஆனால் நல்ல படம். ”

    ReplyDelete
  2. உங்கள் கருத்து மிக செறிவானது ஞானி அவர்களே. நன்றி

    ReplyDelete
  3. 1. பெண்களை விட ஆண்கள் அதிக சந்தேகம் கொள்ளக் காரணத்தை 'பேட்மேன் விதி' விளக்குகிறது. படித்திருப்பீர்கள்.

    2.பிரெக்டின் அந்நியமாதல்----> இதைப் பற்றி முன்பே ஒரு புக்கில் 6 பக்கம் படித்தேன். இருந்தும் புரியவில்லை. அதைப் பற்றி ஒரு தனிக் கட்டுரை எழுதவும். இல்லை இங்கு கொஞ்சம் சொல்லவும்.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates