Friday, 30 March 2012

ஆல்பர்ட் நாப்ஸ்: ஒரு பெண்ணியவாதி ஆணாக வேண்டுமா?




சமீபத்திய ஆஸ்கா விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட படங்களில் ஒன்றான அல்பர்ட் நாப்ஸ் (Albert Nobbs) பால்நிலை பற்றின ஒரு சிக்கலான பிரச்சனையை சற்று மிகையான கற்பனையுடன் பேசுகிறது. அது ஒரு பெண் எத்தனை சதம் ஆண் மற்றும் பெண்ணாக இருக்கிறாள் என்பது. பௌதீகமாக இப்பிரச்சனையை சட்டபூர்வமாகவும் கலாச்சார நடைமுறைரீதியாகவும் தீவிரமாக சந்திப்பவர்கள் ஓட்டப்பந்தய வீராங்கனைகள் மற்றும் திருநங்கைகள். தமது பண்பு மற்றும் ஆளுமையில் பால் சமநிலை இல்லாதவர்கள் அதை மறைக்க தொடர்ந்து முயன்றபடியே இருப்பார்கள். சிலர் அறிந்தும் அறியாமலும் bisexualஆக வாழ்கிறார்கள். மகாபாரதத்தில் கிருஷ்ணன் ஒருவர் தான் 100% முழுமையான ஆண் என சொல்லப்படுகிறது. அதனாலே அப்போரில் ஆகக்குரூரமான ஒரு அரசியல் ஞானியாக அவர் இயங்குகிறார். பெண்ணியவாதிகள் தொடர்ந்து பெண்ணின் சமூக பாத்திரம் அவர்களின் இயல்பு சார்ந்ததல்ல, சமூகத்தால் திணிக்கப்பட்டது என்று வாதிட்டு வந்திருக்கிறார்கள். சிமன் டி பூவர் தனது “இரண்டாம் பாலினம் (The Second Sex) நூலில் இந்த தரப்பை நிறுவ உயிரியல் தரவுகள் பல தருகிறார். இயற்கையில் பெண்ணின் பாத்திரத்தை எடுத்து செயல்படும் உயிரினங்கள் உள்ளன. பரிணாம கோட்பாடு படி கருத்தரித்து குழந்தையை வளர்ப்பது என்பது மனித இனத்திற்கு பெரும் காலம் மற்றும் பிரயாசையை வேண்டும் பணி. அதனாலேயே பெண்கள் கருத்தரிப்பவர்களாக துவங்கி வேட்டையாடும் சமூகத்தில் இருந்து விவசாய, உற்பத்தி சமூகமாக மாறிய கட்டத்தில் முழுமையாக குழந்தை வளர்ப்பு, வீட்டு வேலைகள் சார்ந்த ஒரு பாத்திரத்துக்குள் மாட்டிக் கொண்டிருக்கலாம். இந்த பாத்திர ஏற்பு மனித இன வளர்ச்சிக்கு தோதானதாக இருந்ததால் அது உலகம் முழுக்க ஏற்கப்பட்டு பின்பற்றப்பட்டிருக்கலாம். பரிணாமவியலை பொறுத்தமட்டில் இதில் ஆணாதிக்க சதி எல்லாம் இல்லை. பெண் அடக்குமுறை ஒரு பண்பாடாக, மித்தாக மாற்றப்படுவதை தான் நாம் எதிர்க்க முடியும். வரலாற்றுக்கு பிரக்ஞை இல்லை, அதை அலசலாம், ஆனால் கேள்வி கேட்க முடியாது.

ஆல்பர்ட் நாப்ஸில் ஒரு பெண் பாதுகாப்பு மற்றும் சம்பாத்தியத்துக்காக ஆணாக முப்பதாண்டு காலம் வாழ்கிறாள். ஒரு நட்சத்திர ஹோட்டலில் வெயிட்டர் அவள். ஐயர்லாந்தில் அக்காலத்தில் (19 நூற்றாண்டு) ஆண்கள் வெயிட்டர், வணிகம் போன்ற பல முக்கிய பணிகளில் நுழைய முடியாது. அவளது ஹோட்டலில் பல பெண்கள் சலவை, சுத்தம் செய்வது, சமையல் போன்ற குறைந்த ஊதிய பணிகளை செய்கிறார்கள். ஆல்பர்ட் நாப்ஸும் இதில் ஏதாவதொரு பணியை செய்து பெண்ணாகவே வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவளுக்கு இரு பிரச்சனைகள். ஒரு உயர்வகுப்பு பெண்ணின் கள்ளத்தொடர்பில் பிறந்த குழந்தையாகிய அவள் அநாதை இல்லத்தில் வாழ்கிறாள். பின்னர் ரகசியமாக பணம் அனுப்பி வந்த அம்மா இறந்து போக அவள் கடுமையான வறுமையில் வாழ நேர்கிறது. பெரும் செல்வந்த வகுப்பை சேர்ந்த தனது துர்விதியை எண்ணி வருந்தும் அவளுக்கு பணக்காரியாகும் ஆழ்ந்த விருப்பம் ஒன்று உருவாகிறது. 14 வயதில் அவள் கூட்டு கற்பழிப்பு செய்யப்படுகிறாள். இவ்வுலகில் பெண்ணாக வறுமையில் வாழ்வது ஆபத்தானது என்று முடிவு செய்து ஆண் வேடம் பூணுகிறாள். அதற்குப் பின் 30 வருடங்கள் அவள் கடுமையான தொடர் அச்சத்தில் வாழ்கிறாள். அவளது பழக்கவழக்கம், பேச்சு, செயல் அனைத்தும் மிக பதற்றமாக மாறுகிறது. உணர்ச்சியற்ற தட்டையான முகம். உலர்ந்த குரல். பதுங்கின தோற்றம். அவள் யாரிடமும் மனம் திறந்து பேசுவதில்லை. அதனால் அவளுக்கு நண்பர்களே இல்லை. அவளது ஒரே லட்சியம் சிக்கனமாக வாழ்ந்து பணம் சேர்த்து சொந்தமாக ஒரு புகையிலை கடை வைப்பது. இந்த லட்சியம் தனிமையில் இருந்து அவளை பாதுகாக்கிறது. பிறகு ஒருநாள் அவள் ஒரு புதுநபரை சந்திக்கிறாள். அவர் நாப்சுடன் அவளது படுக்கையில் ஒரு இரவு தூங்க வேண்டிய தவிர்க்க இயலாத நிலை வருகிறது. அவர் தான் முதன்முதலில் அவள் ஆண் அல்ல என கண்டுபிடிக்கிறார். பார்த்தமட்டிலே அவருக்கு தெரிகிறது. ஏனென்றால் அவரும் நாப்ஸை போல ஆண் வேடத்தில் இருக்கும் ஒரு பெண். பெயர் ஹியூபர்ட் பேஜ். அலட்சியமான அடாவடித்தனமான உடல்மொழியும் புகைப்பழக்கமும் தன்னம்பிக்கையும் அவருக்கு ஆண் வேடத்தில் இயங்க மிகவும் உதவுகின்றன. பின்னர் ஒரு காட்சியில் அவர் பெண் உடையில் தோன்றுகிறார். அப்போதும் ஒரு ஆண் பெண் வேடமணிந்ததை போன்றே தெரிகிறார். பேஜ் நாப்ஸின் ரகசியத்தை மறைக்க ஒப்புகிறார். இருவரும் எளிதில் நண்பர்களாகின்றனர். நாப்ஸுக்கு பேஜிடம் இருந்து ஒரு புது விஷயம் தெரிய வருகிறது. அது ஒரு ஆண்வேடமிட்ட பெண் திருமணம் புரிந்து குடும்பமாக வாழ முடியும் என்பது. இது முக்கியம். நாப்ஸுக்கு எளிதில் நம்பக்கூடிய துணை என்று யாரும் இல்லை. ஒரு மனைவி அமைந்தால் தனது தனிமை அகலும் என்பதுடன் எதிர்கால புகையிலை கடையை பார்த்துக் கொள்ளவும் ஆள் கிடைக்கும். மேலும் மனைவி என்பது ஒரு சமூக அங்கீகாரத்துக்கான ஒரு வழி. படம் இங்கிருந்து தான் ஒரு விநோத திருப்பம் எடுக்கிறது.

நாப்ஸின் ஹோட்டலில் ஹெலன் என்றொரு அழகான பெண். அவள் மீது நாப்ஸ் காதல் வயப்படுகிறாள். ஹெலனின் வாழ்க்கை லட்சியம் ஒரு பணக்கார ஆணை கட்டிக் கொண்டு வசதியாக வாழ்வது. நாப்ஸ் ஹெலனை அடிக்கடி வெளியே அழைத்துப் போய் பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுக்கிறார். அவளை மகிழ்ச்சிப்படுத்த முயல்கிறார். இங்கு ஒரு முக்கியமான தகவல் நாப்ஸ் சற்று பாலியல் விழைவுகள் அற்ற ஒரு விட்டேந்தி மனப்பான்மை கொண்டவராக தெரிகிறார் என்பது. எப்படி அவரது ஆடை மற்றும் தோற்றத்தில் அவரது சுயம் இல்லையோ அது போன்றே ஹெலனை காதலிக்கும் போதும் அவர் அந்த சூழல் மற்றும் அனுபவத்தில் இருந்து மனதளவில் வெகுவாக விலகி இருக்கிறார். வெயிட்டர் வேலை போல் மிக கச்சிதமாக நேர்த்தியாக கவனமாக காதலையும் செய்கிறார். ஹெலனுக்கு இது எரிச்சல் ஏற்படுத்துகிறது. அவள் “ஏன் இப்படி என் கையை பிடித்து இடுப்பை அரவணைக்காமல் முத்தமிடாமல் விநோதமாக நடந்து கொள்கிறாய்? என குற்றம் சாட்டுகிறாள். நாப்ஸ் முத்தமிடுகிறார். அவள் அது முத்தமேயில்லை என மறுத்து ஆவேசமாக முத்தமிட்டு காட்டி அவரை விட்டு வெறுப்பில் கண்ணீர் மல்க விலகி செல்கிறாள்.

ஹெலன் ஜோ மேக்கின்ஸ் என்கிற ஒரு நேர்மையற்ற பொறுப்பில்லாத இளைஞனை விரும்புகிறாள். அவன் மூலமாக கர்ப்பமாகிறாள். அவன் அமெரிக்கா சென்று பிழைப்பதற்காக ஹெலனை உதறுகிறான். இதையறிந்த ஆல்பர்ட் ஹெலனையும் அவளது குழந்தையையும் ஏற்றுக் கொள்வதாக வாக்குறுதி அளிக்கிறார். தனது அவல நிலை ஹெலனை உருக்குலைய வைக்கிறது. அவளது பிரச்சனை ஆண்மை மிகுந்த ஒருவனை அடையும் பெண்கள் சந்திப்பது. அசலான ஆண் ஒரு வேட்டையாளி. அவன் ஊர்சுற்றி. பல பெண்களை அடைந்து வம்சவிருத்தி செய்து தனது மரபணுக் குட்டையை விரிவாக்க விரும்புபவன். குடும்பத்தனமான ஆண்கள் சற்று பெண்மையானவர்கள். இது ஒரு அறிவியல் உண்மை. ஹெலன் ஆல்பர்ட்டை கணவனாக ஏற்க முடிவு செய்கிறாள். அவளது காமம் ஆணை தேர்ந்தால் நடைமுறை வாழ்வு அந்த முடிவு ஆபத்தானது என்பதை நிரூப்பிக்கிறது. சமரசமாக ஒரு பெண்ணையே தேர்கிறாள்.

நாப்ஸ் ஒரு ஆண் என ஆரம்பத்தில் நம்பினாலும் ஒரு விபத்தில் நாப்ஸ் காயமுற்று இறக்க அவரது பெண்நிலை வெளியாகிறது. ஊரே கேலி பேசுகிறது. நாப்ஸின் ஆண்வேட சர்ச்சை பிரபலமாகிறது. இந்நிலையில் ஹெலன் தனது ஆண் குழந்தைக்கு ஆல்பர்ட் எனும் பெயரையே வைக்கிறாள். அவள் மானசீகமாக ஆல்பர்ட்டை தனது கணவனாக வரிக்கிறாள்.

பேஜின் பாத்திரம் படத்தை மிக சுவாரசியமாக மாற்றுகிறது. ஆல்பர்ட்டை போல் பேஜ் பாலியலற்றவரல்ல. அவர் ஆண் பாத்திரத்தில் தயக்கமின்றி சாமர்த்தியத்துடன் பெண்களுடன் பழகுகிறார். ஆண் பாத்திரத்தில் இருப்பவரின் பிரச்சனை பெண்களை எதிர்கொள்வதே. ஆல்பர்ட் பலமுறை ஒரு ஐயத்தை தனக்குள் கேட்டுக் கொள்கிறார். அது பேஜின் மனைவி காத்லீனுக்கு தனது கணவன் ஒரு பெண் எனத் தெரியுமா, அவ்வெளிப்பாடு எப்போது நிகழ்ந்திருக்கும், முதலிரவுக்கு முன்னரா பின்னரா என்பது. சிலமுறை அவர் பேஜிடம் கேட்க உத்தேசித்து பின் வாங்குகிறார். ஆல்பர்ட் பேஜின் வீட்டுக்கு சென்று பேசும் காட்சி படத்தில் மிக சிறப்பானது. கேத்லீன் அங்கு முழுமையான குடும்ப பெண்ணாகவும் பேஜ் ஒரு சோம்பலான புகைபிடிக்கும் அலட்சிய கணவனாகவும் இருக்கிறார்கள். உரையாடலின் போது பேஜ் தனது மனைவியை சீண்டுவதற்காக ஹெலனை பற்றி ஆல்பர்ட்டிடம் விசாரிப்பார். “இத்தோடு பலமுறைகள் அப்பெயர் இந்த வீட்டில் குறிப்பிடப்பட்டுவதை கேட்டு விட்டேனே என்று பேஜின் நாற்காலி கைப்பிடியில் ஒருக்களிப்பாக அமர்ந்தபடி கேத்லீன் பொறாமை தொனிக்க கண்டிப்பார். அதை பேஜ் மிகவும் ரசிப்பது அவரது பாவனையில் தெரியும். இதைக் கண்டு ஆல்பர்ட்டுக்கு குழப்பமாக இருக்கும். பேஜுக்கும் கத்லீனுக்குமான உறவு தான் எப்படியானது? இது படத்தில் மிக பூடகமாகவே உள்ளது. கத்லீன் எதேச்சையாக தன் வீட்டுக்கு வந்து தங்க நேர்ந்ததாகவும் ஊர்வாயை மூட தான் அவளை மணம் புரிந்ததாகவும் பேஜ் சொல்லுகிறார். இருவரும் ஒருபால் உறவு கொள்பவர்களாக இருக்கலாம். பொதுவாக லெஸ்பியன்களில் ஒருவர் சற்று தூக்கலான ஆண்மையுடன் இருப்பார். இத்தகைய பெண்கள் சற்று பணிவான கூச்சப்படும் பெண்களிடம் ஈர்க்கப்படுவார்கள். பேஜ் இயல்பிலேயே இத்தகைய பெண்ணாக இருப்பது அவரது பால்நிலையை இயல்பானதாக மாற்றியிருக்கலாம். ஆண்பாத்திரத்தில் இருக்கும் ஒரு லெஸ்பியன் என பேஜை கருத வாய்ப்புண்டு.

கத்லீன் ஒரு கொள்ளைநோயில் இறக்கிறார். கைக்குழந்தையுடன் நிராதரவாக இருக்கும் ஹெலனை பேஜ் கம்பீரமான ஒரு ஆணை போல் அரவணைப்பதாக படம் முடிகிறது. இரண்டு விஷயங்களை இயக்குநர் ரோட்ரிகோ கார்சியா குறிப்புணர்த்துகிறார். ஆண்மை மிக்க ஆண்கள் பெண்களை எளிதில் காயப்படுத்தி கைவிடுபவர்களாக இருக்கிறார்கள். படத்தில் இரு பெண்கள் கணவனாக பெண்களையே தேர்வது இதனால் தான். அடுத்து, பால்நிலை என்பது பாத்திரம் மட்டுமே என்பது. ஒரு சட்டையை போல் பால்நிலையை அணிகிறோம் என்கிறார் கார்சியா. இன்று நம்மிடையே அலுவலகத்துக்கு போகும் பெண்களும் வீட்டுவேலைகள் செய்யும் ஆண்களும் இயல்பாக மாறி இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒரு ஆல்பர்ட் நாப்ஸ் தான். இதில் கீழ்மையோ இயல்புபிறழ்வோ இல்லை என்கிறது இப்படம். இது சிமன் டி பூவரின் வழிப்பட்ட பெண்ணியவாதிகளின் தரப்பே.

ஆனால் பால்நிலை காமத்தை அதிகம் பாதிப்பதில்லை. ஒருவரின் இயல்பை பொறுத்து பெண்மை மிகுந்தோ ஆண்மை மிகுந்தோ அது வெளிப்படுகிறது. வாழ்வில் நாம் இயல்பாக ஒரு பாத்திரத்தை ஏற்று நடிக்கலாம். அதே பாத்திரப் புனைவின் ஊடாக நம்மால் இயல்பான காமத்தை வெளிப்படுத்தவும் முடியும். பேஜால் செய்ய முடிந்ததும் நாப்ஸின் இயலாததும் அது தான். பேஜ் ஒரு “ஆணாகவே மாறியதற்கும் நாப்ஸ் உயிர்ப்பற்று ஒரு கோட்டோவியமாக வாழ்ந்ததற்கும் அது தான் காரணம்.
Share This

1 comment :

  1. உங்கள் பிளாகினாலும் or எந்த பிளாகினாலும் எவனும் மாறி விட மாட்டான்.

    உங்கள் பிளாகில் நல்ல கருத்துகள் உள்ளன. ஆனால் பொதுவாக‌, எனக்கு பிளாகில் கருத்து சொல்கின்றவர்களை நினைத்தால் ஒருமாதிரியாக தொண்டைக் குழிக்குள் அடைத்துக் கொண்டது போலவோ, நெற்றி பொட்டுகளின் ஓரத்தில் வலிப்பது போலவோ உள்ளது...'தரும் நிலையில்' தம்மை நிறுத்திக் கொண்டு அகங்கார நிறைவை அனுபவிக்கவே பிளாகில் பலர் கழிவுகளை எழுதித் தள்ளுகின்றார்கள்..தாம் அகங்கார நிறைவை அனுபவைக்கவே எழுதிகின்றோம் என்ற சிறு உண்மையைக் கூட இப்பிறவியில் அவர்களாகவே ச்யமாக உணர முடியாது...எழுதுவதற்கு காரணமாக ஒன்றை அவர்கள் தாங்களே தங்களுக்கு பிடித்த மாதிரி உருவாக்கி கொள்வார்கள்..

    தான் சொல்ல விரும்புவதை ஒரு புக்கில் சொல்லி அத்தோடு விட்டு விடலாம் தானே?

    charles darwinனின் கேப்டன் வாழ்வில் நடந்த சம்பவம் ஒரு நீதியை சொல்கின்றது.. உங்கள் மெய்லை பாருங்கள்...

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates