Wednesday, 5 December 2012
அழகியசிங்கரின் அப்பாவும் புத்தகங்களும்
இந்த மாத அமிர்தாவில் அழகிய சிங்கர் புத்தகங்கள் வாங்கி சேர்க்கும் பழக்கம் பற்றியும் அது சம்மந்தமாக வரும் தொந்தரவுகள் பற்றியும் சுருக்கென்ற நகைச்சுவை மிக்க பத்தி ஒன்று எழுதியிருக்கிறார். அதில் என்னை கவர்ந்தவை:
அழகிய சிங்கரின் புத்தக அடுக்குகளை பார்க்கும் போதெல்லாம் அவரது அப்பா “நீ இவ்வளவு புத்தகங்களையும் படித்து முடிக்க எத்தகை சகாப்தங்கள் ஆகும்?” என்று கிண்டலடிக்கிறார். தொடர்ந்து புத்தகங்கள் வாங்கியே தன் மகன் போண்டியாகிப் போனதாகவும் வருத்தப்படுகிறார். இதில் அபத்தம் என்னவென்றால் அழகிய சிங்கருக்கு 60 வயது. அவர் அப்பாவுக்கு வயது 90. இந்த வயதிலும் போய் என்னை எல்.கெ.ஜி பையன் போல கண்டிப்பதா என அழுகிறார் சிங்கர்.
அழகிய சிங்கரின் நண்பர் ஒருவருக்கு ஒரு கெட்ட பழக்கம். எப்போதும் அவர் வீட்டுக்கு வந்தாலும் இரண்டு புத்தகங்களையாவது வாங்கிக் கொண்டு போய் விடுகிறார். இலக்கிய நட்பின் விதிப்படி அது திரும்ப வராது. இதைத் தவிர்க்க சிங்கர் அவர் ஒருமுறை வீட்டுக்கு வந்து சந்திப்பதாய் சொல்லும் போது புத்தக அறையை பூட்டி வைத்து விட்டு வேறு அறையில் போய் உட்கார்ந்து கொள்கிறார். நண்பர்: “ஏன் இங்கே இருக்கிறாய்? வழக்கமாய் அந்த புத்தக அறையில் தானே இருப்பாய்?” சிங்கர்: “அந்த அறையின் சாவி தொலைந்து போ விட்டது”. அப்போதிருக்கும் அறையில் ஜெ.கெயின் சில உரைகளைக் கொண்ட ஆடியோ கேசட்டுகள் இருக்கின்றன. நண்பர் புத்தகம் கிடைக்காவிட்டால் இருக்கட்டும் என அவற்றில் இரண்டை எடுத்துக் கொண்டு போய் விடுகிறாய். இறுதியில் அழகிய சிங்கர் இப்போதைய காலத்தில் இப்படி புத்தக அபேஸ் பண்ணுவதற்கு கூட யாரும் தன்னை வந்து பார்ப்பதில்லையே என விசனிக்கிறார்.
இத்துடன் புத்தகம் சேமிப்பவர்கள், எழுதுபவர்களுக்கு உள்ள சங்கடங்கள், அவமானங்கள், அவலம் என துயரம் இழையோடு அங்கதத்துடன் பேசிப் போகிறார். எஸ்.ரா முன்பு இதுபோல் புத்தகம் வாங்குவது பற்றி தன் இணையதளத்தில் எழுதியிருந்தது நினைவு வந்தது. புத்தகம் ஒன்று வாங்கி சேமிக்கும் போது நம்முடன் அந்நூல் இருக்கும் கிளர்ச்சியே ஒரு பெருமிதத்தை தரும் என்கிறார் எஸ்.ரா. புத்தகம் என்பது வாசிக்க மட்டுமே அல்ல. அது நம் வாழ்க்கைத்தரத்தை உளவியல் ரீதியாக ஒரு ஏத்து ஏத்துகிறது. அழகிய சிங்கரும் தான் வாங்கிக் குவித்த நூல்களில் பலவற்றை படித்ததே இல்லை, ஆனாலும் அவை தனக்கு முக்கியம் என்கிறார்.
அழகிய கட்டுரை!
Share This
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment