Monday, 10 December 2012

சுழலும் வேகமும்: இன்னும் மாறாத காலனிய மனநிலை


(டிசம்பர் மாத அமிர்தாவில் வெளிவந்தது)


தற்போது மீடியாவில் சூடுபறக்கும் விவாதம் நடந்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்தியா சுழலும் ஆடுதளங்களை தயாரிக்கலாமா அல்லது நடுநிலைமையான சூழ்நிலையை அளிக்க வேண்டுமா என்பது பற்றியே. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இங்கிலாந்து நிபுணர்களும் ரசிகர்களும் மட்டுமல்ல சில முன்னாள் இந்திய வீரர்களும் அநேகமாக அனைத்து ஊடகங்களும் இந்தியா சுழலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என கூறுவது தான். விநோதமாக இத்தகைய ஒரு விவாதம் வேறெந்த நாட்டில் கிரிக்கெட் தொடர்கள் ஒருங்கிணைக்கப்படும் போது எழாது. எல்லா நாடுகளும் தத்தமக்கு சாதகமான ஆடுதளங்களைத் தாம் அமைக்கின்றன.



தற்போது ஆஸ்திரேலியாவில் தென்னாப்பிரிக்கா பயணம் செய்து டெஸ்டுகள் ஆடி வருகிறது. முதல் ஆட்டம் பிரிஸ்பேனில். பொதுவாக அங்கு பந்து இடுப்புக்கு மேல் எழும்பும். நன்றாக ஸ்விங் ஆகும். 2003 இல் இந்தியா அங்கு சென்ற போது ஒரு கட்டத்தில் நம் அணி 62க்கு மூன்று விக்கெட்டுகள் இழந்து தவித்தது. அவ்வாட்டத்தில் சகீர்கான் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஆனால் இம்முறை தென்னாப்பிரிக்கா அங்கு ஆடுவதால் ஆடுதளத்தை மொட்டையாக மழித்து மெத்தனமாக்கி இருந்தார்கள். ஏனென்றால் தென்னாப்பிரிக்காவின் வேகவீச்சு ஆஸியினருடையதை விட ஆபத்தானது, தரமானது. மேலும் ஆஸி மட்டையாட்டமும் பலவீனமாக உள்ள நிலையில் அவர்கள் வேகவீச்சுக்கு தோதான ஒரு ஆடுதளத்தில் தம் மட்டையாளர்களை ஸ்டெயினுக்கும் மோர்க்கலுக்கும் எளிய இரைகளாக்க விரும்பவில்லை. தென்னாப்பிரிக்கா சமீபத்தில் இங்கிலாந்து சென்ற போதும் இவ்வாறே ஆடுதளங்கள் சற்று சத்தற்றவையாக இருந்தன. ஒரு கட்டத்தில் இங்கிலாந்தினர் சுழலை வைத்தாவது தெ.ஆக்காவை வீழ்த்தலாம் என சுழலும் ஆடுதளத்தை அமைத்தனர். இதே இங்கிலாந்துக்கு அதற்கு முன் இந்தியா சென்ற போது வேகவீச்சுக்கு சாதகமான தளங்களை மட்டும் அமைத்தனர். இலங்கையை எடுத்துக் கொள்வோம். முத்தையா முரளிதரன் தன் ஆளுகையின் உச்சத்தில் இருந்த வரை அவர்களின் ஆடுதளங்கள் தளர்ந்து தூசு கிளப்பி சுழலும் படி இருந்தன. முரளி ஓய்வுற்றதும் இலங்கையினர் தட்டையான அல்லது சற்றே வேகவீச்சுக்கு உகந்த தளங்களை அமைக்க துவங்கி விட்டனர். இவ்வாறு உலகம் முழுக்க அணிகள் தமக்கு சாதகமான வகையில் தான், சிலவேளை பாரம்பரியத்தையும் மீறி, ஆடுதளங்களை அமைக்கின்றன. இது நியாயமானதா என்பதை விட நடைமுறை வழக்கமா என்று தான் நாம் பார்க்க வேண்டும். ஏனென்றால் கிரிக்கெட்டில் நியாயத்தை விட வெற்றி முக்கியம். வெற்றி அதிகாரத்தை தரும். அதிகாரம் பெற்ற அணிகள் வசதியான மேற்தட்டில் அமர்ந்து நியாயம் ஒழுக்கம் பற்றி விசாரம் செய்யலாம். பாதகம் இல்லை.
இந்திய ஊடகங்களும் முன்னாள் இந்திய வீரர்களும் ஏன் சுழலும் ஆடுதளங்களை எதிர்க்கிறார்கள்? முதலில், இந்தியா சுழலும் ஆடுதளங்களில் பெறும் வெற்றிகள் அவ்வணியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவாது என்கிறார்கள். ஒட்டுமொத்த வளர்ச்சி? அதாவது வேகவீச்சை நன்றாக ஆட மட்டையாளர்கள் பழக மாட்டார்கள்; அவற்றில் நேர்மறையாக வீச வீச்சாளர்கள் தேர்ந்திட மாட்டார்கள். இது எந்தளவுக்கு சரி?
ஒருவேளை இந்தியா வேகவீச்சுக்கான ஆடுதளங்களை அமைத்தாலும் அவை தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் கிடைக்கும் தளங்களுக்கு எவ்விதத்தில் நிகராக இருக்கப் போவதில்லை. அந்தளவுக்கு ஸ்விங் மற்றும் துள்ளலை நாம் இந்தியாவில் உருவாக்க முடியாது. இரண்டாவதாக, இருபது வருடங்களுக்கு மேலாக இங்குள்ள தாழ்வான தளங்களில் ஆடி பயின்ற இந்திய மட்டையாளர்கள் சில ஆட்டங்களில் வேகவீச்சை எதிர்கொண்டதும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க தளங்களில் ஜொலிக்கும் விதம் திறன்களை அதிரடியாக பெறப் போவதும் இல்லை.
இன்னொரு வாதம் வைக்கப்படுகிறது. அது இப்படிப் போகிறது: இந்தியா தொண்ணூறுகளில் மெத்தனமான சுழலும் ஆடுதளங்களில் வெளிநாட்டு அணிகளை எளிதில் முறியடித்து உலக கிரிக்கெட்டில் உச்சாணியில் இருப்பதாக தோற்றம் அளித்து விட்டு வெளிநாடு சென்றதும் ஒரேயடியாக திணறி சரிந்து விடுவார்கள். பின்னர் ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் தான் நாம் மேற்கத்திய ஆடுதளங்களில் நன்றாக ஆட ஆரம்பித்தோம். ஆக நமக்கு சாதகமான சூழல்களில் எழுச்சி பெறுவது ஒரு போலியான எழுச்சி மட்டுமே என்பது இந்தியா ஆங்கில ஊடகங்களில் எழுதுவோர் மற்றும் சஞ்சய் மஞ்சிரேக்கர் போன்ற முன்னாள் வீரர்களின் கருத்து. இந்த தர்க்கம் எந்தளவுக்கு சரியானது?
இங்கிலாந்தின் ஸ்டுராஸ், பெல்,  மற்றும்  டுராட்  கடந்த சில வருடங்களில் ஏகப்பட்ட சதங்களை குவித்தார்கள். இவை இந்தியா, இலங்கை அல்லது தற்போது பாகிஸ்தானின் முகாமான துபாயிலோ அடிக்கப்பட இல்லை. பெரும்பாலும் இங்கிலாந்திலும், சில ஆஸ்திரேலியாவிலும் தான் எடுக்கப்பட்டன. இங்கிலாந்துக்கு ஆஸ்திரேலியா என்பது இந்தியாவுக்கு இலங்கை போல. அதே போன்று தான் ரிக்கி பாண்டிங்கும் தனது அநேகமான சதங்களை சொந்த ஊரிலும் இங்கிலாந்திலும் தான் அடித்தார். மேற்சொன்ன மட்டையாளர்களுக்கு சுழல் பந்து ஒரு பலவீனம். ஆனால் இவர்களின் புகழ்பாடும் எந்த விமர்சகரும் சுழலை ஆதிக்கம் செய்ய முடியாத ஒருவர் எப்படி சிறந்த வீரராக முடியும் என்ற கேள்வியை எழுப்புவதில்லை. மாறாக ஜெயசூரியா, ஜெயவர்த்தனே, சயித் அன்வர், சேவாக், காம்பிர், லக்‌ஷ்மண் போன்ற ஆசியர்கள் சொந்த மண்ணில் மிகச்சிறந்த மட்டையாளர்கள். அந்நிய சூழல்களில் சுமாரானவர்கள். வேகமான துள்ளும் பந்துகளை சமாளிக்க தெரியாது என்ற பலவீனத்தை மிகைப்படுத்தி மேற்கத்திய மீடியாவும் முன்னாள் வீரர்களும் இவர்களுக்கு முழுமையான அங்கீகாரத்தை இதுவரை அளித்ததில்லை. ஒரே பலவீனம் ஆசியர்களுக்கு மட்டும் ஏன் பாரபட்சமாக மிகைப்படுத்தப்படுகிறது? உலகில் எல்லோரும் சச்சின், லாரா போல் லட்சிய முழுமை பெற்றவர்கள் இல்லையே? இங்கு தான் நாம் கிரிக்கெட் அடிப்படையில் ஒரு காலனிய ஆட்டம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கிரிக்கெட் இங்கிலாந்தால் தன் காலனிகளில் உள்ள காட்டுமிராண்டிகளை ஒழுக்கப்படுத்துவதற்காக இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் காலனிகள் சுதந்திரம் பெற்றதும் கிரிக்கெட் ஆடும் பாணியை தம் போக்கில் வரித்து கொண்டன. ஒவ்வொரு காலனியும் தமக்கான வண்ணத்தை இவ்வாட்டத்துக்கு நல்கியது. உண்மையில் கிரிக்கெட்டின் மிக்கப்பெரிய வெற்றியே இந்த வேறுபட்ட பாணிகள், தொழில்நுட்பம், அணுகுமுறைகள் மற்றும் பண்பாடுகள் தாம்.
இங்கிலாந்தில் மிதவேக வீச்சு தான் பிரதானம். ஏனென்றால் அங்குள்ள சூழலில் பந்து அப்போது தான் ஸ்விங் ஆகும். ஆக அவர்களின் அடிப்படையான பந்துவீச்சு என்றால் அது மிதமான் வேகத்தில் ஒழுங்கான நீளத்தில் வீசப்படும் மிலிட்டிரி வேக வீச்சு தான். அங்கே ஒழுங்கும் சுயகட்டுப்பாடும் கிரிக்கெட்டின் பண்புகளாக இருந்தன. ஆனால் மேற்கிந்தியர்கள் ராபர்ட்ஸ், ஹோல்டிங், கிராப்ட், கார்னருடன் வேகப்பந்து வீச்சை இன்னொரு மேலான தளத்துக்கு எடுத்துச் சென்றனர். சுயக்கட்டுப்பாட்டை புறம்தள்ளி விட்டு மட்டை ஆட்டத்தை கொண்டாட, ஆர்ப்பாட்டமாக ரிச்சர்ட்ஸ், லாயிட், லாரா (தற்போது கெயில்) முதலானோர் வெளிப்படுத்த முயன்றனர். இது மேற்கு இந்திய கிரிக்கெட்டாக மலர்ந்தது. இதை இங்கிலாந்தினர் விளையாட்டுத்தனம் எனும் பொருளில் கலீப்ஸோ கிரிக்கெட் என ஒருகாலத்தில் கேலி செய்தனர். ஆஸ்திரேலியா என்பது இங்கிலாந்து தன் உள்ளூர் குற்றவாளிகளை நாடுகடத்த பயன்படுத்திய ஒரு பிரம்மாண்ட திறந்தவெளி சிறைக்கூடம். விளைவாக அங்கு முரட்டுத்தனமாக போராடினாலே உய்ய முடியும் எனும் கலாச்சாரம் தோன்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை வளர்த்தெடுத்தது. ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு என்பது எழுபதுகளில் மறைமுகமாக கொலை மிரட்டல் விடுக்கும் ஒன்றாக இருந்தது. அங்கு ஆடப்போகும் அணிகள் லில்லி, தாம்ஸன் முன்னிலையில் உயிரோடு திரும்புவதே முக்கியம் என நினைத்தன, வெளியேறாமல் மட்டை ஆடுவது ரெண்டாம் பட்சம் தான் என்கிறார் மே.இ முன்னாள் வீரர் கிராப்ட். தாம்ஸன் தன் பந்துவீச்சு பாணியை இப்படி விவரிக்கிறார்: “நான் எப்போதுமே விலா, இடுப்பு, தலை ஆகியவற்றை தான் குறி வைப்பேன். அப்போது தான் நான் இங்கு ஒருவன் இருக்கிறேன் என்கிற சேதி மட்டையாளர்களை சென்றடையும்”. இவ்வாறு ஆஸ்திரேலிய கிரிக்கெட் என்பது இங்கிலாந்து தன் காலனிய அடிமைகளுக்கு போதிக்க நினைத்த “கனவான் பண்பாட்டில்” இருந்து முழுக்க மாறுபட்டு இருந்தது. இந்த காரணங்களால் தான் தொடர்ந்து பரிணமிக்காமல் அம்மாஞ்சீயாகவே இருந்த இங்கிலாந்து அணியை கடந்த ஐம்பது வருடங்களில் இந்த இரு அணிகளும் எளிதில் முறியடித்து ஆதிக்கம் செலுத்தின. தென்னாப்பிரிக்காவில் உள்ள வெள்ளையர் ஆதிக்கம், பயிற்சியாளர்களின் காலனிய மனோபாவம் காரணமாய் அவர்கள் இங்கிலாந்தின் அதே பாரம்பரிய மனநிலையை நெடுங்காலமாய் தக்க வைத்து வந்தன. ஆனால் அவ்வணி ரெண்டாயிரத்துக்கு பிறகு கறுப்பு மற்றும் இந்திய, பாகிஸ்தான் வம்சாவெளியை சேர்ந்த வீரர்களை உட்படுத்தி தம் அணியின் பண்பாட்டை வெகுவாக மாற்றியது. விளைவாக உலகை ஆதிக்கம் செலுத்த துவங்கியது. நியூசிலாந்து இன்றுவரை இங்கிலாந்தின் நிழலில் இருந்து வெளிவரவில்லை என்பதால் வளர்ந்தபின்னும் தவழ்ந்துபடியே தான் இருக்கிறார்கள்.
இதுவரை மேற்கத்திய காலனிய அணிகளின் தனித்துவங்களை பார்த்தோம். பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சி நிலை காரணமாய் ஆசியா கிரிக்கெட்டை முழுமையாக வரித்துக் கொள்ள காலம் பிடித்தது. விளைவாக தொண்ணுறுகள் வரை கிரிக்கெட்டை மேற்சொன்ன அணிகள் தாம் ஆண்டன. அங்கு பயணம் போய் ஆசிய அணிகள் வேகவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி இழந்தன. ஆசிய அணிகளின் எழுச்சி மற்றும் ஷேன் வார்ன் எனும் மேதையின் வருகை நிகழும் வரை  உலகம் முழுக்க வேகப்பந்து தான் பந்துவீச்சு எனும் வலுவான நம்பிக்கை இருந்தது. ஆசிய அணிகளின் எழுச்சி ஒருநாள் கிரிக்கெட் வடிவின் வருகையுடன் பிணைந்தது. நாள்பூரா அமர்ந்து ஆட்டம் பார்க்கும் பொறுமை, பருவச்சூழல், வசதி இல்லாத ஆசியர்கள் ஒருநாள் ஆட்டத்தை தமதானதாக தயக்கமின்றி ஏற்றுக் கொண்டார்கள். டி.வி நேரடி ஒளிபரப்பும் கிரிக்கெட் அதிகாரத்தில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது. உலகம் முழுக்க ஆசிய பார்வையாளர்கள் கிரிக்கெட்டுக்கு குவிந்ததால் மைதானத்தில் கிரிக்கெட் பார்ப்பது அதன் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் காரணி அல்லாமல் ஆனது. தொண்ணூறுகளை முழுமையாக பாகிஸ்தானும் இலங்கையும் ஆக்கிரமித்தன. ரெண்டாயிரத்துக்கு பிறகு இந்தியாவின் ஆளுகை தொடங்கியது. இக்கட்டத்தில் ஒருநாள் வடிவில் தமது ஆதிக்கத்தை தக்க வைக்க முடிந்த ஒரே வெள்ளை அணி ஆஸ்திரேலியா மட்டும் தான்.
ஒருநாள் கிரிக்கெட் பிரபலமானதும் சுழலுக்கு தனி முக்கியத்துவம் உருவானது. பெரும்பாலான ஆட்டங்கள் ஆசியாவில் நடந்தன. இங்குள்ள ஆடுதளங்களுக்கு சுழலர்கள் தேவையானது. மேலும் ஒருநாள் வடிவின் அடித்தாடும் பாணி ஒருவிதத்தில் சுழலர்களின் இடத்தை வலுவாக்கியது. அடித்தாடும் போது வேகவீச்சாளர்களின் இயல்பான வேகத்தை எதிரணிகள் சுலபமாக பயன்படுத்தின. ஆனால் முப்பது ஓவர்களில் பந்து பழசானதும் சுழலர்களை அடிப்பது சிரமமானது. விளைவாக முஷ்டாக் அஹ்மது, சக்லைன் முஷ்டாக், அனில் கும்பிளே, முரளிதரன், ஹர்பஜன் போன்ற சாம்பியன் சுழலர்கள் தோன்றி தம்மிடையே ஆயிரக்கணக்கான விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதற்கு முன்னரும் மிகச்சிறந்த ஆசிய சுழலர்கள் இருந்தார்கள் என்றாலும் அவர்கள் பின்னவர்கள் அளவுக்கு விக்கெட்டுகளை குவிக்கவில்லை என்பதற்கு அப்போது ஒருநாள் கிரிக்கெட்டின் வருகை நிகழ்த்திய பெரும் வியாபிப்பு இல்லை என்பது ஒரு காரணம்.

இவ்வாறு தொண்ணூறுகளுக்குப் பிறகு சுழல் பந்தின் ஆதிக்கம் துவங்கியது. ஆனால் கிரிக்கெட் ஆசியாவுக்கு நகர்ந்தது ஏற்றுக் கொள்ள விரும்பாது வெள்ளை மனம் சுழல்பந்து வீச்சாளனை ஏதோ துடப்பத்தில் அமர்ந்து பறக்கும் விந்தையாக சூனியக்காரி போல பார்த்தது. ஆக்ரோசமும் வேகமும் முரட்டுத்தனமும் தான் பந்து வீச்சு என நம்பி வந்த வெள்ளையர்களுக்கு சூழ்ச்சியும் விவேகமும் கற்பனையும் சுழற்றும் விரல்களின் ரப்பர் நெளிவும் அசலான கிரிக்கெட் பண்புகளாக தென்படவில்லை. அவர்கள் தொடர்ந்து 140 கி.மி வேகத்தில் பந்தை ஸ்விங் செய்வது மட்டும் தான் சாதனை என்று நம்பி வந்தனர். கிரிக்கெட் பரப்பில் நிகழ்ந்த ஆதிக்க நகர்வை ஏற்றுக் கொள்ள முடியாத தயக்கத்தின் வெளிப்பாடு தான் இது. வெள்ளை முதலாளிகள் கறுப்பர்கள் ஏதோ சூழ்ச்சி செய்து தம் நியாயமான இடத்தை பறிக்க பார்க்கிறார்கள் என்றே நினைக்க விரும்பியது. இதன் விளைவாகத் தான் விரேந்திர சேவாக் உலகின் மிகச்சிறந்த வீச்சான தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மும்மடங்கு சதம் அடித்த பின்னரும் தற்போது வரை ஜெப்ரி பாய்க்காட் போன்ற முன்னாள் வீரர்கள் அவரை ”இது போல இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியாவுக்கு வந்து அங்குள்ள வேகவீச்சு சூழலில் ஆடச்சொல்லுங்கள் பார்ப்போம். இந்த பாச்சாவெல்லாம் அங்கு பலிக்காது” என்று மட்டமாக சித்தரிக்கிறார்கள். சேவாகை இதே பொருளில் flat wicket bully என மேற்கத்திய விமர்சகர்களும் ரசிகர்களும் வசை பாடி வருகிறார்கள். இதே போன்று குக் அல்லது கிளார்க் தம் சொந்த ஊரில் மும்மடங்கு சதம் அடித்த போது “கடுமையாக பந்து சுழலும் இந்தியாவில் இது போல் அடிக்க முடியுமா?” என வீம்புக்கு கேட்காமல் பாராட்டுவார்கள். ஏனென்றால் வேகவீச்சுக்கு ஆடுவது தான் அசலான கிரிக்கெட் சாதனை என வெள்ளையர்களின் ஆழ்மனதில் ஐம்பது வருடங்களுக்கு மேலாக ஊறி விட்டது.
நகைமுரணாக தொண்ணூறுகள் வரை மேற்கத்திய வேகவீச்சின் ஆதிக்கத்தை பார்த்து வியந்து ஆடி அங்கு செல்லும் போதெல்லாம் தோல்வி கண்ட முன்னாள் இந்திய வீரர்களும் கிட்டத்தட்ட இவ்வாறே நம்புகிறார்கள். காலனிய மனநிலை இவ்வாறு தான் இயங்குகிறது. இந்தியா சொந்த நாட்டில் எவ்வளவு தான் வென்றாலும் அர்த்தமில்லை, வெளிநாட்டில் அடைவது மட்டுமே அசலான வெற்றி என அவர்களை இம்மனநிலை சொல்ல வைக்கிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அல்லது தென்னாப்பிரிக்கா தம் சொந்த ஊரில் வெற்றிகளை குவிக்கும் போது இப்படி அவர்களின் சொந்த கிரிக்கெட் நிபுணர்கள் எதிர்மறையாக விமர்சிப்பது இல்லை.

வெள்ளை அணிகள் கடந்த ஐம்பது வருடங்களாக சுழல்பந்திற்கு முன் திணறியே வருகின்றன. ஆனால் இந்த பலவீனத்தை கடப்பதற்காக இவர்கள் தம் சொந்த ஊர் ஆட்டங்களில் சுழலும் ஆடுதளங்களை அமைக்கலாமே? ஏன் அவர்களது விமர்சகர்களும் ரசிகர்களும் அதைக் கோருவதில்லை. தற்போது மிக மெல்ல இங்கிலாந்தில் உள்ள ஆடுதளங்களை சற்றேனும் சுழலுக்கு சாதகமாக மாற்ற வேண்டும் எனும் சன்னமான வேண்டுகோள் அவர்களிடம் இருந்தே எழுந்து வருகிறது. ஆனால் இதனை இங்கிலாந்தின் கட்டுபெட்டியான நிர்வாகம் கடுமையாக நிராகரிக்கிறது. ஒருவிதமான காலனிய மனநிலை தான் இத்தகைய பாரபட்சமான அணுகுமுறைகளுக்கு வழிவகுக்கின்றன.
சச்சின் ஆஸ்திரேலியாவை தன் இரண்டாம் தாய்நிலமாகவே பாவிக்கிறார். அங்கு சென்றதும் அல்லது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடுகையிலும் அவரது ஆட்டம் ஒரு மேலான நிலையை அடைவதற்கு காரணம் ஆஸ்திரேலிய வேகவீச்சை வெற்றி காண்பது தான் நிஜமான சாதனை என அவரது காலனிய மனம் கருதியது தான். ஆஸ்திரேலியா ஒரு அற்புதமான பந்துவீச்சை தொண்ணூறுகளிலும் ரெண்டாயிரத்தின் ஆரம்பத்திலும் கொண்டிருந்ததை நாம் மறுக்க வேண்டியதில்லை. ஆனால் அதற்கு இணையான வீச்சுத் தரத்தை பாகிஸ்தானும் தான் கொண்டிருந்தது. மேலும் சச்சினும் சரி லாராவும் சரி ஆஸ்திரேலியாவில் சதங்கள் அடித்த பின்னரே அவர்களின் மதிப்பு உலகளவில் எழுந்தது. ஆனால் நிலைமை இன்று நிச்சயம் மாறி வருகிறது. ஆஸ்திரேலியாவை அல்லது இங்கிலாந்து தென்னாப்பிரிக்காவை முறியடிப்பதில் முன்பிருந்த பெருமை இன்று ஆடும் இளைய இந்திய வீரர்களுக்கு இல்லை. ஒரு காலத்தில் விவியன் ரிச்சர்ட்ஸ் ஒரு அற்புத மட்டையாளராக மே.தீவுகளில் திகழ்ந்த போது அவரது அப்பா அவரிடம் சீண்டலாக சொன்னார்: “நீ இந்தியாவுக்கு பயணம் சென்று அங்குள்ள சுழலர்களை எதிர்கொண்டு தாக்குப்பிடித்து சதம் அடித்து வா. உன்னை பெரிய ஆள் என ஏற்றுக் கொள்கிறேன்”. இந்தியா வந்த ரிச்சர்ட்ஸ் அவ்வாறே செய்தார். இன்று மேற்குலக கிரிக்கெட் அணிகள் அப்படியான மனநிலையை மெல்ல ஆசியா குறித்து பெற்று வருகின்றன. குறிப்பாக இங்கிலாந்து தற்போதைய இந்திய பயணத்தில் சுழலுக்கும் வெப்பத்துக்கும் இரைச்சலுக்கும் தம்மை பழக்குவதற்காக கடும் பயிற்சிகள் மேற்கொண்டனர். முன்னெப்போதையும் விட இந்தியாவில் நன்றாக ஆடுவதற்கான பெரும் அழுத்தம் அவர்கள் மீது தற்போது உள்ளது. தோனியின் தலைமையிலான அணிக்கும் காலனிய தாழ்வு மனப்பான்மை இல்லை. அவர்களுக்கு வெற்றி தான் முக்கியம். அது சுழல் எனும் ஆயுதத்தை கொண்டோ வேகவீச்சின் தரத்தை கொண்டோ என்பது முக்கியம் அல்ல. அவர்கள் கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் உச்சத்தை அடைந்து தம் வரலாற்றுக் களங்கத்தை கழுவி விட்டாயிற்று. ஆசிய கிரிக்கெட் தனது பண்புகளின் அடிப்படையிலேயே உயர்ந்தது தான் என நம்பத் தலைப்படுகிறார்கள். விளைவாக இந்தியாவுக்கு பயணம் வரும் வெள்ளை அணிகளை சுழலும் ஆடுதளங்கள் அமைத்து மிரட்ட மட்டுமல்ல, அவர்களின் பயிற்சி ஆட்டங்களில் இந்திய சுழலர்கள் பந்து வீசாமல் செய்து அவர்களை கடுப்பேற்றவும் தோனி தயங்குவதில்லை.
நாம் நம் வலிமைக்கு ஏற்றபடி ஆடுவது மட்டுமல்ல, நமது தனி அடையாளத்தை தன்னம்பிக்கையுடன் நிறுவதும் முக்கியமே. லில்லியும் தாம்ஸனும் தமது சீறி எழும் வேக ஆடுதளங்களில் வெளிநாட்டினரை வேட்டையாடியது போல நமது சுழலர்கள் கொண்டு மந்தமான தூசு மண்டிய ஆடுதளங்களில் வெள்ளையர்களை குழப்பி வீழ்த்துவதும் வரலாறு திரும்புகிறது என்பதன் அடையாளமே. சுழல் என்பதும் கிரிக்கெட் பண்பாட்டின் பல்வேறு முகங்களில் ஒன்று என உலகம் ஏற்கும் காலம் வந்து விட்டது. இனி நாம் குற்றவுணர்வுடம் முதுகுவளைக்கும் அவசியம் இல்லை. இதனால் எப்படி வெள்ளையர்களுக்கு சுழல்பந்து உள்ள்தோ அதே போல் ஆசியர்களுக்கும் மேலும் சற்றுகாலத்துக்கு வேகப்பந்து இருப்பதில் தவறில்லை. வெற்றியாளர்கள் எப்போதும் எதிராளியின் அங்கீகாரத்துக்காக காத்திருப்பதில்லை. 
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates