தால்ஸ்தாய் எப்படி தன் பண்ணைகளில் வேலை பார்த்த நூற்றுக்கணக்கான அடிமைகளை விடுவித்தார் என்பதைப் பற்றி வகுப்பில் சொல்லிக் கொண்டிருக்கும் போது ஜி.கெ.மூப்பனாரை, அவருக்கு சொந்தமாக கிராமங்களே இருந்ததை, குறிப்பிட்டேன்.
எந்த சலனமும் இல்லை. ஒருவேளை ஜி.கெ மூப்பனாரை தெரியவில்லையோ என பழைய காங்கிரஸ் தலைவர், தமிழ்மாநில காங்கிரஸை உருவாக்கினாரே என்றெல்லாம் நினைவை தட்டியெழுப்ப பார்த்தேன். ம்ஹும். தமக்கு அவரை தெரியவே தெரியாது என்று விட்டார்கள். அப்போது தான் எனக்கு உறைத்தது. ஜி.கெ மூப்பனார் இறக்கும் போது இந்த மாணவர்களுக்கு பத்து வயதிருக்கும். அதனால் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான். ஆனாலும் ஒரு மூத்த தலைவர் எவ்வளவு சீக்கிரம் ஒரு தலைமுறையின் நினைவிலிருந்தே இல்லாமல் போகிறார் என நினைத்துக் கொண்டேன். இருந்தாலும் இந்த மாணவர்கள் பரவாயில்லை. மூன்று வருடங்களுக்கு முன் ஒரு வகுப்பில் ஒருவருக்கு கூட தந்தைப் பெரியாரைத் தெரிந்திருக்கவில்லை. நமது ஊடகங்களும் எழுத்தாளர்களும் இவ்வளவு அரசியல் பேசி என்ன பிரயோஜனம் எனப் புரியவில்லை. இவர்கள் நாளை வாக்களிக்கும் போது எப்படி சிந்தித்து முடிவெடுப்பார்கள் என இப்போது நினைக்கவே பீதியாக இருக்கிறது.
வரலாற்று மறதி நமது மிகப்பெரிய அவலம்.
No comments :
Post a Comment