Saturday, 22 December 2012

தோனி எனும் துர்கனவு



சமீப காலத்தில் இந்திய கிரிக்கெட்டுக்கு நிகழ்ந்து விட்ட ஆகப்பெரிய அதிர்ஷ்டமும் துரதிர்ஷ்டமும் தோனி தான்.


அவருடைய தலைமை மற்றும் ஆளுமையின் சாதகமான தாக்கங்கள பற்றி பக்கம் பக்கமாக படித்தும் பேசியும் விட்டோம். பாதகமான அம்சம் அவரது பிடிவாதம், ஈடுபாடின்மை மற்றும் செயல்பாட்டு இறுக்கம்.
கடந்த ஒரு வருடத்தில் மே.இ தீவுகள் மற்றும் வங்கதேசம் கூட இந்தியா அளவுக்கு அவமானகரமான தோல்விகளை சந்திக்கவில்லை. உண்மையைத் தான் சொல்கிறேன். கடந்த முறை மே.இ தீவுகள் இங்கிலாந்து சென்று தோற்றுத் திரும்பிய போதும் அவர்களுக்கு சில முன்னேற்றங்கள் தென்பட்டன; அவர்கள் தோல்வியை பொருட்படுத்தாமல் போராடியது மனதை நெகிழ வைப்பதாக இருந்தது. சந்தர்பால் இங்கிலாந்து வீரர்களுக்கு தொடர்சவால்களை தந்தார்; சாமுவல்ஸும் ராம்தினும் சதமடித்து தம் மீள்வருகையை உறுதிப்படுத்தினார்கள். டினோ பெஸ்டின் மட்டையாட்டமும் பந்து வீச்சும் உற்சாகமளிப்பதாக் இருந்தது. மே.இ தீவுகளின் பயணம் நெடுக இந்தியாவினுடையதை போல சாவுக்களை மட்டுமே புலப்படவில்லை. இயலாமையை, இழப்பை, பிரச்சனைகளை எதிர்த்துப் போராடும் மனப்பான்மை அங்கங்கே மிளிர்ந்தது. அதே போன்றே வங்க தேசம் கடந்த முறை இங்கிலாந்து சென்ற போதும் அவர்கள் ஓரளவுக்கு இந்தியாவை விட மேலாக மட்டையாடினார்கள்.
ஆனால் இந்தியா மட்டுமே பயணம் துவங்கிய சில மணிநேரங்களில் எந்த அக்கறையோ நம்பிக்கையோ அற்று ஆடினார்கள். இந்தியாவின் இங்கிலாந்து மற்றும் ஆஸி பயணங்களை ஒரு நீண்ட சுயவதை என அழைக்கலாம். இப்போது அவற்றுடன் இந்தியாவிலே நடக்கும் இங்கிலாந்து தொடரையும் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு அணி தொடர்ந்து தோற்பதில் தவறில்லை. ஆனால் தோல்வியை பற்றின எந்த கூச்சமோ கவலையோ இன்றி மேலும் மேலும் கண்முன்னே சீரழிவது ஒரு தேசிய அவமானமாகவே உள்ளது. ஏனெனில் ஒரு அணி என்பது வெறும் விளையாட்டு வீரர்களின் குழு அல்ல; அவர்கள் நாட்டின் பண்பாட்டுப் பிரதிநிதிகள். அவர்களின் அணுகுமுறை, உடல்மொழி, ஆட்டமுறை, கடப்பாடு என ஒவ்வொன்றும் இந்த நாட்டைப் பற்றின ஒரு சேதியை அயல்நாட்டினருக்கு தெரிவிக்கிறது. “நாங்கள் நன்றாக ஆடின போது பெருமைப்பட்டது போல மோசமாக ஆடும் போது பொறுத்துக் கொள்ள வேண்டும்” என கோரிட தோனிக்கு உரிமை இல்லை. ஏனெனில் பிரச்சனை மோசமாக ஆடுவது அல்ல, இந்த அணி வெளிப்படுத்தும் அருவருக்கத்தக்க மனப்பாங்கும் அது கொண்டுள்ள மோசமான உடல்தகுதியும் தான்.
கடந்த இங்கிலாந்து தொடரில் சஹீர்கானும் சேவாகும் மோசமான உடற்தகுதி மற்றும் ஆட்டத்திறனுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். வேறு எல்லா நாடுகளிலும் காயத்தில் இருந்து திரும்பும் வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் சோபித்தும் தன் உடற்தகுதி மற்றும் ஆட்டத்திறனை நிரூபித்தாக வேண்டும். ஆனால் ஸ்ரீகாந்த தேர்வுக்குழு தலைவராக இருந்த போது எளிய உடற்தகுதி தேர்வுகளை நடத்தி பல வேகவீச்சாளர்களை நேரடியாக அணிக்கு அனுப்பும் அவலம் தொடர்ந்து நடந்தது. உச்சபட்சமாக மாதத்திற்கு ரெண்டு முறை காயம்பட்டு ஓய்வெடுக்கும் சஹீர்கான இங்கிலாந்து தொடரின் முதல் டெஸ்டில் எந்த தயாரிப்பும் இன்றி கலந்து கொள்ள அவர் முதல் சில ஓவர்களிலேயே காயம்பட்டு முழுமையாக ஆட்டத்தில் இருந்து வெளியேற நேர்ந்தது. அதை விட கொடுமை என்னவென்றால் அணித்தலைமை சஹீரின் காயம் பல மாத ஓய்வுக்கும் சிகிச்சைக்கும் அவசியம் ஏற்படுத்துவது என்பதை ஏற்க மறுத்து ஒரு மாதம் போல் அவரை அணியிலேயே தொடர்ந்து வைத்திருந்தார்கள். இந்த இடைவெளியில் புது வீரரை பதிலுக்கு அனுப்பவும் இல்லை.
இங்கு இன்னொரு பிரச்சனை தோன்றுகிறது. அது தோனியின் தேர்வு சார்ந்த இறுக்கமனநிலை. கங்குலி, திராவிட் ஆகியோரின் தலைமை காலங்களோடு ஒப்பிடுகையில் தோனியின் பருவத்தில் மிக மிக குறைவாகவே புதிய வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். தொடர்ந்து மோசமான ஆட்டநிலையில் இருந்தாலும் ஒரே வீரர்களை மீண்டும் மீண்டும் களமிறக்குவது தோனிக்கு ஒரு மனநோயாகவே மாறியுள்ளது. இங்கிலாந்தில் நடந்த 20-20 உலகக் கோப்பையில் இஷாந்த் ஷர்மா, அடுத்து மே.இ தீவுகளில் நடந்த 20-20 உலகக் கோப்பையில் ஜடேஜா, ஆஸ்திரேலிய பயணத்தில் வி.வி.எஸ் லக்‌ஷ்மண், சமீபமாக இலங்கையில் நடந்த ஒருநாள் தொடரில் ரோஹித் ஷர்மா என அவர் ஆகமட்டமான ஆட்டநிலையில் இருந்த வீரர்கள் சிலரை தொடர்ந்து கடுமையான மீடியா கண்டனங்கள் மத்தியிலும் ஒரு ஆட்டத்தொடரையே அதனால் இழக்க நேரிடும் ஆபத்திருக்கும் பட்சத்திலும் பிடிவாதமாய் ஆதரித்து அநியாயமாய் அணியில் வாய்ப்பளித்து வந்திருக்கிறார். இன்னொரு பக்கம் நியாயமாக இடத்தைக் கோரும் ஒரு இளைய வீரருக்கு ஒரு எளிய அணிக்கு எதிரான முக்கியமற்ற ஆட்டத்தில் கூட ஒரு சின்ன வாய்ப்பு தராமல் மாதக்கணக்காய் வருடக்கணக்காய் காத்திருக்க வைப்பார். ரஹானேவுக்கு நிகழ்வது போல.
தோனியிடம் உள்ள இன்னொரு விநோதப் பண்பு குறையை ஏற்றுக் கொள்ள மறுப்பது. முன்னூறு அல்லது நானூறு ஓட்டங்கள் வித்தியாசத்தில் தன் அணி தோற்றிருக்கும் – அவர் இதெல்லாம் சாதாரண விசயம் என்று பேட்டியளிப்பார். சரி நேர்மறை சிந்தனை என்று சமாதானப்படலாம் என்றால் அதற்கும் வாய்ப்பளிக்க மாட்டார். அவரது மட்டையாளர்கள் ஒரு டெஸ்டில் இரு இன்னிஸிலும் நூறு ரன்களுக்குள் ஆட்டமிழந்திருப்பார்கள். அப்போதும் தோனி விடாப்பிடியாக “நாங்கள் நன்றாகவே மட்டையாடினோம்” என சாதிப்பார். பல சமயங்களில் இவர் எந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என எல்லாருக்கும் வியப்பேற்படும். கொஞ்சம் கொஞ்சமாய் இந்த வியாதி அணியை முழுக்க பற்றிக் கொண்டுள்ளது. இப்போது அணியின் எல்லா வீரர்களும் கடந்த ஒன்பது டெஸ்டுகளை தோற்ற நிலையிலும் தாம் மிக நன்றாகவே ஆடி வருவதாக நம்பிக்கையோடு பேச ஆரம்பித்துள்ளனர். ஆனால் ஆடும் போது மட்டும் வாழ்க்கையில் வெற்றி என்பதே அறியாத பலவீனர்கள் போல் தலைகுனிந்து தோள் சாய்ந்து தோல்வியை ஏற்றுக் கொண்டே முதல் பந்தில் இருந்து தத்தளிக்கிறார்கள்.

ஒருவேளை தன் அணியை ஊக்கப்படுத்த இவ்வாறு “நாங்கள் மிக நன்றாக ஆடித் தான் ஆக மட்டமாக தோற்றோம்” என ஒவ்வொரு பேட்டியிலும் கூறுகிறாரோ என நமக்கு ஐயம் தோன்றலாம். ஆனால் நடைமுறையிலும் தோனி தனது அணி எந்த பிரச்சனையையும் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்பது நமக்கு ஆஸ்திரேலிய பயணத்தில் அவர் கிட்டத்தட்ட அதே அணியுடன் சென்று அனைத்து டெஸ்டுகளையும் தோற்று அந்த நிலையிலும் தான் ஆடும் 11ஐ மாற்ற மறுத்த போது தெளிவாகவே விளங்கியது. சமீபத்தில் இத்தோல்விப் பயணங்களைக் குறிப்பிட்ட தோனி “அப்பயணங்களில் எங்களுக்கு வெற்றி பெறும் நம்பிக்கை துளியும் இருக்கவில்லை” என சொல்லியிருக்கிறார். எந்த நம்பிக்கையும் இல்லாத ஒரு அணி வெறுமனே தோல்வி பெறும் பொருட்டு ஒரு நாட்டு மக்களின் பணத்தை செலவழித்து சில தனிநபர்களின் ஆட்டவாழ்வை தக்க வைப்பதற்காக எதற்கு ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட வேண்டும்? அதற்குப் பதில் இப்படியான அவநம்பிக்கைகள் இல்லாத குறைந்தபட்சம் தம்மால் இயன்றவரை போராடக் கூடிய இளைய வீரர்களின் ஒரு அணியையாவது அனுப்பி இருக்கலாமே? தோனியின் மிகப்பெரிய துரதிர்ஷ்டம் தன் கண் முன் நிகழும் ஒரு பெரும் வீழ்ச்சியை சீரழிவை தோல்வியை விதியின் விளையாட்டு என ஏற்றுக் கொண்டு விலகல் மனப்பான்மையுடன் தன் வேலையை பார்த்துக் கொண்டிருப்பார் என்பது.
ஒரு விசயம் நம் கைமீறிப் போகிறதென்றால் அதை அப்படியே விட்டு விடலாம் என்கிற இந்த இந்திய மனப்பான்மை தான் தோனியின் மிகப்பெரிய குறைபாடு. அதுவும் அரசியல் பண்ணுவதற்கு தன் நிலையை அறிவிப்பதற்கு அவர் எந்த எல்லைக்கும் செல்ல துணியக்கூடியவர். இதே விலகல் மனப்பான்மையுடன். உதாரணமாக, ஆஸ்திரேலியாவில் இந்திய அணியின் சீனியர்கள் சேவாகின் தலைமையில் கலகம் பண்ணினார்கள். மூன்றாவது டெஸ்டும் தோல்வியில் முடியும் தறுபாயில் அணி முழுதும் சீரழிந்து போயிருந்ததால் சேவாக் தன்னை விட மேலான தலைவராக இருக்க முடியாது என ஸ்தாபிக்க இது ஒரு நல்ல வாய்ப்பு என உணர்ந்த தோனி வேண்டுமென்றே அணி குறைந்த பட்ச ஓவர்கள் வீசாதபடி ஏற்பாடு செய்து அடுத்த ஆட்டத்துக்கு தடை வாங்கிக் கொண்டார். அவர் எதிர்பார்த்தது படி அடுத்த டெஸ்டில் சேவாகின் தலைமையின் கீழும் இந்திய அணி மட்டமாக தோற்றது. சேவாகின் தலைமை எதிர்காலம் அத்தோடு பூஜியமானது. உலகில் வேறெந்த அணியிலாவது எதிரியை பழி தீர்ப்பதற்காக ஒரு சர்வதேச டெஸ்டு ஆட்டத்தை பலியாக்குவார்களா? அதுவும் ஒரு அணித்தலைவர், தன் அணியை உலகின் ஆட்டவரிசையில் முதலில் கொண்டு வந்த அணித்தலைவர், உலகக்கோப்பையை வென்றுத் தந்த ஒரு அணித்தலைவர்?

தோனி செய்வார். வெற்றி தோல்வி மட்டுமல்ல. தான் இருக்கிற சூழல், தன்னுடன் இருப்பவர்கள், தனக்கு எதிரே இருப்பவர்கள் இவர்கள் அனைவரிடம் இருந்தும் தன்னை பிரித்து தனியாக காணும் ஒரு அரிய மனப்பண்பு கொண்டவர் அவர். ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் அவருடன் ஆடிய ஆகாஷ் சோப்ரா ஒரு சம்பவத்தை உதாரணம் சொல்லுகிறார். அப்போது தோனி ஒரு இரண்டாம் நிலை கீப்பர். தினேஷ் கார்த்திக் தான் அப்போது அணியின் நிரந்த கீப்பர். ஆனாலும் பயிற்சியின் போது தோனி கார்த்திக்கிற்கு பந்து வீசிக் கொண்டே இருப்பார். இதை கவனித்த சோப்ரா தோனியிடம் “ உனக்கு பந்து வீசும் திறமை அதிகம் இல்லை. உன்னுடைய கீப்பிங் மற்றும் மட்டையாட்டத்தை மெருகேற்றுவதை விட்டு விட்டு ஏன் உனக்கு போட்டியாளனான கார்த்திக்கிற்கு போய் உதவி செய்கிறாயே?” என கேட்டு அறிவுரை சொல்ல முயன்றிருக்கிறார். ஆனால் தோனி ஒரு புன்னகையுடன் மறுத்து விட்டு அதே உற்சாகத்துடன் தொடர்ந்து கார்த்திக்கிற்கு பந்து வீசிக் கொண்டே இருந்தார். தன்னால் ஒரு பந்து வீச்சாளனாக முடியாது என் தோனிக்கு தெரியும். ஆனால் அதை விட முக்கியமாக, தனக்கு யாருமே இந்த உலகில் போட்டி இல்லை எனவும் அவருக்கு தெரியும். அதனால் தான் கார்த்திக்குக்கு பயிற்சியின் போது உதவி செய்வதில் அவருக்கு எந்த பதற்றமோ அச்சமோ இல்லை.
தான் தொடர்ந்து முயன்று கொண்டிருந்தால் தன்னால் விரும்புகிற உச்சங்களுக்கு போக முடியும் என அவர் வலுவாக நம்பினார். அணி, தலைவர், தேர்வாளர், சூழல்,காலம் எல்லாம் அவரது முயற்சிக்கு புறம்பான வஸ்துக்கள். இன்னும் முக்கியமாக இந்த புறக்காரணிகளை தன்னால் கட்டுப்படுத்த முடியாது என அறிந்திருந்தார். அதனால் வானின் மீது ஒரு ஏணியை வைத்து தனியாக ஏறிப் போய்க் கொண்டிருந்தார். இன்று எந்த இந்தியக் கிரிக்கெட் வீரனும் கற்பனை செய்ய முடியாத இலக்குகளை எட்டி விட்டார்.
ஆனால் ஒரு அணித்தலைவராக இந்த பண்பு தான் அவருக்கு எதிராக இருக்கிறது. எதிர்காலம் குறித்த திட்டமிடல்கள், கடுமையான கராறான முடிவுகள் எடுக்கும் உறுதி, பொறுப்புணர்வு ஆகியவை ஒரு தலைவனுக்கு அவசியம். தோனியிடம் தற்போது இல்லாததும் இவை தான். கடந்த உலகக்கோப்பையின் போது எல்லா அணிகளும் தமக்கான அணியை குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்பாவது தீர்மானித்து விட்டன, இந்தியாவைத் தவிர. இந்திய அணியின் சீனியர்கள் அனைவரும் காயமுற்று தடுமாறிய நிலையில் இருந்தார்கள். அப்போது அவர் திடீரென அணிக்குள் பியுஷ் சாவ்லாவை கொண்டு வந்தார். சாவ்லா தேவை எனப் பட்டிருந்தால் குறைந்தது நான்கு அல்லது ஐந்து தொடர்களிலாவது அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து அவருக்கு நம்பிக்கை ஏற்படுத்து ஆட்டநிலையை மேம்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் தோனி ஒரு கட்டத்தில் ஹர்பஜன் மீது நம்பிக்கை இல்லாமலோ அல்லது ஜடேஜாவின் பந்துவீச்சு மட்டமாக மாறினதினாலோ எந்த ஒரு மாற்று ஏற்பாடும் இல்லாத நிலையில் வருடக்கணக்காய் இந்தியாவுக்காக ஆடாத பியூஷ் சாவ்லாவை திடீரென பயன்படுத்த முடிவு செய்தார். உலகக்கோப்பையில் சாவ்லா மிகப்பதற்றமாக அவநம்பிக்கையுடன் இயங்கினார். அது அவர் தவறல்ல். அவர் அவ்வளவு நெருக்கடியான பிரம்மாண்டமான தொடர் ஒன்றுக்கு தயாராகவே இருக்கவில்லை. பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டமொன்றில் அவர் காரணமாகவே இந்தியா வெற்றி வாய்ப்பை இழந்தது.
அதே போன்று கடந்த இங்கிலாந்து பயணத்தில் சஹீர் கானை இழந்த நிலையில் இந்தியாவுக்கு மாற்றுவீரர் யாரும் இருக்கவில்லை. ஏனெனில் கடந்த சில வருடங்களில் அவர்கள் புது வீச்சாளர்கள் யாருக்கும் வாய்ப்பளிக்கவில்லை. அதனால் வேறு வழியின்றி புனித யாத்திரை ஒன்றுக்கு சென்றிருந்த ஆர்.பி சிங்கை அவசரமாக இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார். அங்கு தொப்பையோடு ஆர்.பி சிங் மூச்சிரைக்க பந்து வீசியது ஒரு காட்சிபூர்வ வதையனுபவமாக பார்வையாளர்களுக்கு இருந்தது.
தற்போது இங்கிலாந்து டெஸ்டு தொடரிலும் இவ்வாறு இறுதி டெஸ்டுக்கு திடீரென்று அவர் திரும்பவும் சாவ்லாவை அணிக்கு கொண்டு வந்தார். ஆனால் ஏற்கனவே அணிக்குள் தேர்ந்தெடுக்கப்பட்டு காத்திருப்பு பட்டியலில் உள்ள ரஹானேவுக்கு ஒரு வாய்ப்பு கூட அவர் தொடர் முழுக்க வழங்கவில்லை. இத்தனைக்கும் தற்போதைய பிரச்சனை பந்து வீச்சல்ல. மட்டையாட்டம் தான். அவர் நியாயப்படி சச்சின், காம்பிர், சேவாக் ஆகியோரில் ஒருவரையாவது நீக்கி விட்டு ரஹானேவுக்கு வாய்ப்பளித்திருக்க வேண்டும். ஆனால் ஒற்றை இலக்கங்களில் தொடர்ந்து ஆட்டமிழக்கும் தன் மட்டையாளர்கள் நன்றாக அடுவதாக அவர் வழக்கம் போல் சாதித்து வருகிறார்.
இந்திய அணிக்கு தற்போது தேவை திறந்த மனம் படைத்த ஒரு அணித்தலைவர். நிறைய பரீட்சார்த்த முயற்சிகள் செய்யும், தோல்வியை தோல்வி என ஒப்புக்கொண்டு மாற்றங்களை கொண்டு வரத் தயங்காத, இளம் வீரர்களை தொலைநோக்கோடு அணிக்குள் கொண்டு வந்து சுதந்திரமாக இயங்க அனுமதிக்கும், வீரர்களின் கடந்த கால சாதனை வரலாற்றுக்காக அவர்களை முப்பது நாற்பது ஆட்டங்களாக சொற்ப ஓட்டங்களே எடுத்தாலும் அணியின் நலனுக்கு எதிராக பொறுத்துக் கொள்ளாத கராறான ஒரு அணித்தலைவர்.
தோனி மிகச் சிறந்த தலைவர் தான். ஆனால் அவரது எதிர்மறையான ஆளுமைப்பண்புகள் அணியின் எதிர்கால வளர்ச்சிக்கு தடையாக இருப்பதால் அவரை நீக்க வேண்டிய அவசியம் நேர்ந்துள்ளது. ஆனாலும் இது விரைவில் நிகழுமா என்பது சந்தேகம் தான்.
கடந்த ஆஸ்திரேலிய பயணத்தின் போது இந்தியா தொடர்ந்து எட்டு டெஸ்டுகளை இழந்த போது தேர்வாளர்கள் தோனியை விலக்கி கோலியை தலைவராக்க முயன்றதாகவும் ஆனால் இந்திய வாரியத்தின் தலைவர் ஸ்ரீனிவாசன் தனது சென்னை சூப்பர் கிங்ஸின் தலைவரை ஆவேசமாக பாதுகாத்ததாகவும் அப்போதைய தேர்வுக்குழு தலைவர் அமர்நாத் சமீபத்தில் குற்றம் சாட்டினார். ஆக ஸ்ரீநிவாசன் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக இருக்கும் வரையில் நாம் அணித் தலைமையில் சிறுமாற்றத்தைக் கூட எதிர்பார்க்க முடியாது.
ஒருவேளை அடுத்து வரும் ஆஸ்திரேலிய தென்னாப்பிரிக்க டெஸ்டு தொடர்களையும் இந்தியா இழந்தாலும் கூட ஒன்றுமே நடக்காதது போல் இதே அணி மீண்டும் தேர்ந்தெடுக்கப்படலாம். 2015இல் அடுத்த உலகக்கோப்பை நடந்து முடியும் வரை இந்த மந்தநிலை தொடரக் கூடும். ஏனெனில் ஒரு உலகக்கோப்பையை வென்றளித்த நன்றி மற்றும் நம்பிக்கைல்காக நாம் இன்னொரு உலகக்கோப்பையை இழக்கும் மகத்தான வாய்ப்பை தோனிக்கு அளிக்க கடமைப்பட்டிருக்கிறோம். அதற்குப் பின் தான் இந்திய அணியின் நிஜமான கவுண்டவுன் துவங்கும்!
Share This

1 comment :

  1. தோனியை பற்றிய உங்கள் அலசல் பெரும்பாலும் எனக்கு உடன்பாடானது தான். ஆனால் என்னை பொறுத்த வரையில் அவர் எப்போதுமே சிறந்த தந்திரமிக்க (tactician) தலைவராக இருந்தது இல்லை. இந்திய அணியில் கிர்ஸ்டன் மற்றும் சென்னை அணியில் பிளெமிங் இந்த பற்றாக்குறையை மறைத்து வந்தனர். மேலும் அவர் எப்போதுமே சுயநலம் மிக்க தலைவராகவும் இருந்து வந்துள்ளார். இதற்க்கு ஒரு உதாரணம், அடித்து ஆட இந்தியா யூசுப் பதான் போன்ற லாயக்கு அற்ற வீரர்களை நோக்கி ஓடும் போது இவர் தன் ஆட்ட ஸ்டைலை மாற்றி கொண்டார். இந்தியாவின் 2011 வரையிலான வெற்றிக்கு கிர்ஸ்டன் மற்றும் திறம் மிக்க once in a generation வீரர்கள் தான் காரணம். இந்த வீரர்களும், கிர்ஸ்டனும் இல்லாமல் போன போது அவர் கீழ் வெற்றி பெற்றால்தான் தான் ஆச்சர்யமே ஒழிய தோல்வி அடைந்ததில் இல்லை.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates