Thursday, 23 September 2010
சில கேள்விகள்: மகிழ்ச்சி விழைவும் பக்தியும்
டீக்கடையில் ஒட்டுக் கேட்டதில் ஒரு குடும்ப விசாரணை உரையாடல். கொஞ்சம் ஆரோக்யமான இடைவெளியுடன் இந்திய பாணியில் கராறாக குடும்பம் பற்றி மட்டுமேயான, அக்கறையும், கவலைகளும், புகார்களும், யோசனைகளும் கலந்த, ஒரு உரையாடல் – நாற்பதைத் தொடும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும்.
ஆண் எனக்கு தெரிந்தவர். மளிகைக் கடைக்கும் ரிலையன்ஸ் ஷாப்பிங் மாலுக்கும் இடைப்பட்ட ஒரு அரை இருட்டு ஸ்டோரில் இருக்கிறார். பேரிளம் பெண் தூக்கில் டீ வாங்க வந்தவர். ஆண் தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக நோய் வாய்ப்படுவது பற்றி நொந்தபடி “நான் மட்டும் கல்லு கணக்கா இருக்கேன்” என்றார் மேலெழுந்த விழிகளுடன். ஒவ்வொரு குழந்தைக்காய் சிகிச்சை, பள்ளிச் செலவு என்று ஆயிரம் ஆயிரமாய் கையை விட்டு போனது பற்றி வருந்திக் கொண்டு, ஒரு கட்டத்துக்கு மேல் செலவு சமாளிக்க முடியாத கையாலாகாத உணர்வை வியப்புடன் முகத்தில் காட்டினார். பணத்தில் இருந்து பேச்சு ஒழுக்கத்துக்கு திரும்பியது.
பெண்ணின் கணவன் தொழில்முறை குடிகாரர். அவரை மலைக்கு அனுப்ப முயற்சி நடக்கிறது. “நேத்து கூட அண்ணனைப் பார்த்தேன். செம போதையில் இருந்தாரு”. பெண் அலுத்துக் கொண்டார் “மலைக்கு போறதுக்கு ஒரு மாசமாவது சுத்தமா விரதம் இருக்க வேண்டாமா? அவரை எப்படி புரிய வைக்க போறேனோ”
“ஒரு மாசத்துக்கு மிதமா குடிச்சா பரவாயில்ல. யாருதான் உலகத்துல பெரிசா யோக்கியம் சொல்லுங்க. கொஞ்சம் கண்டுரோல் பண்ணட்டும். அது போதும் விரதம் முடிச்சு மலை ஏறீடலாம்”
பெண் ஆமோதித்தார். மலை சீசன் விவரங்கள் பேசிக் கொண்டனர்.
ஒட்டுக் கேட்ட தகவல்களை வைத்துப் பார்க்க சில வியப்புகள் ஏற்பட்டன. பொருளாதார நெருக்கடியும், தொடர்ச்சியான பற்றாக்குறையும் வாழ்க்கையை இருட்டாக்குகின்றன. அதுவும் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாத நிலையில் வாழ்க்கை மேலும் கசக்கும். எத்தனையோ மனிதர்கள் இப்படி வாலையும் தலையையும் இழுத்து ஒட்ட வைக்கும் இழுப்பறியில் வாழ்க்கையை நீட்டித்து செல்கிறோம். எதற்கு? ஏதோ கொஞ்சம் எதிர்பார்ப்பும், மகிழ்ச்சியும் மீதமிருப்பதாலா? நிறைய மகிழ்ச்சியை கொண்டு வாழ்வது தான் அன்றாட உய்வின் லட்சியம் என்ற எண்ணம் பொய். மகிழ்ச்சி மிகச் சன்னமாக அங்கங்கே விரவி உள்ளது. எண்ணற்ற குழப்பங்களுக்கும், கச்சப்புகளுக்கும் இடையே அதைத் தேடி அடைவது வாழ்வு. இன்பம் விழைதலே உயிரின் ஒவ்வொரு செயலையும் இயக்கும் தூண்டுதல் என்பது உண்மைதான். ஆனால், சுவாரஸ்யமாக, இன்பத்தை அள்ளி அள்ளி பெறுவது அவசியமோ சாத்தியமோ அல்ல.
அடுத்து, கடுமையான வாழ்வியல் ஏமாற்றங்களுக்கு மத்தியில் பக்திக்கு இருக்கும் மதிப்பு. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத எந்த ஒரு அமைப்பின் மீதும் ஒரு கட்டத்தில் வெறுப்பு வரும்; கேள்விகள் எழும். வாழ்வில் அடுக்கடுக்காக துயரங்கள் முகம் காட்ட மிகச் சிலரே வாழ்வின் மீது, விதியின் மீது, முடிவாக கடவுள் அல்லது சமூகத்தின் மீது கோபிக்கிறார்கள். பொதுமக்கள் இச்சந்தர்பத்தில் அதிக பக்தி கொண்டவர்களாக ஆகிறார்கள். துரதிஷ்டங்கள் மிக எளிதாக மூடநம்பிக்கைகளை வலுவாக்குகின்றன. மதமும், சடங்குகளும் கேள்விக்கு உள்ளாவதை விட ஆவேசமாக நாடப்படுகின்றன. ஒரு தொழில்முறை குடிகாரரை மலை ஏற்றி என்ன சாதிக்கப் போகிறார்கள்? அவர் தனதான முறையில் மகிழ்ச்சியை தேடி ஒரு சுற்றுப் பாதையை கண்டடைந்திருக்கிறார். டாஸ்மாக் போவது மலை ஏறுவது போல் ஒரு சடங்கு தான். ஆசுவாசம், தப்பித்தல் ஆகிய பதில்களைத் தாண்டி மக்கள் ஏன் சடங்குகளை, வழிவழியான நம்பிக்கைகளை வறுமையின் வெறுப்பில் கூட சந்தேகப்படுவதில்லை என்று வியப்பாக உள்ளது. ஒரே ஒரு காரணம் தான் படுகிறது: எதையெல்லாம் கேள்வி கேட்டு நொறுக்குகிறோமோ அதற்கு பதில் மற்றொன்றை உருவாக்க வேண்டி உள்ளது. அதற்கெல்லாம் எங்கே நேரம் சொல்லுங்கள்!
Share This
Labels:
தனிப்பட்ட பகிர்வுகள்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment