Wednesday, 29 September 2010

T20 கிரிக்கெட்டும் குஸ்தி பயில்வானின் சங்கடமும்





குறைநீள பந்து வீச்சை ஆடுவது பற்றி நினைவுகூரும் போது சஞ்சய் மஞ்சுரேக்கர் “அப்போதெல்லாம் ஆஸ்திரேலிய, தென்னாப்பிரிக்க மட்டையாளர்களைப் பார்த்தால் எங்களுக்கு அசூயையாக இருக்கும். நாங்கள் குறைநீள பந்திற்கு வெளியேறாமல் எப்படி சமாளிப்பது என்று கவலைப்படுகையில், அவர்களோ அதை ஒரு ஓட்டமெடுக்கும் வாய்ப்பாக கருதி நேர்மறையாக ஆடினர். என்கிறார். சஞ்சய் குறிப்பிடும் தொண்ணூறுகளுக்கு முன்பிருந்தே இந்திய கிரிக்கெட்டர்களுக்கு குறைநீளப் பந்து முதுகில் தொற்றிய முள்ளாகத் தான் இருந்து வந்துள்ளது.
மொஹிந்தர் அமர்நாத்தும் கவாஸ்கரும் அப்போதைய விதிவிலக்குகள். தொண்ணூறுகளில் உருவான மட்டையாளர்கள் ஆஸ்திரேலியர்களை முன்மாதிரிகளாக வழிபட்டு வளர்ந்தவர்கள் என்கிறார் சஞ்சய். விளைவாக திராவிட், சச்சின், லக்‌ஷ்மண் ஆகியோர் புள் மற்றும் ஹூக் ஷாட்டுகளை நன்றாக ஆடக் கூடியவர்களாக இருந்தனர். ஆனால் 60 வருடங்களுக்கு மேலான வரலாற்றில் இந்த மிகச் சிலரைத் தவிர அனைத்து தரப்பு மட்டையாளர்களுக்கும் குறைவேகப் பந்துவீச்சு ஒவ்வாமையாக இருந்தும் அது ஒரு பெரும் பலவீனமாக கண்டறியப்பட்டு தொடர்ர்சியாக பிற அணி வீச்சாளர்களால் சோதித்து பார்க்கப்படுவது மிக சமீபமாகத் தான் நடைபெறுகிறது. இதற்கு ஒரு முக்கிய காரணம் T20 கிரிக்கெட். ஆஸ்திரேலிய வேக வீச்சாளர் மிச்சல் ஜான்சன் நடக்கப் போகும் இந்திய சுற்றுப்பயணத்தில் இந்தியர்களை குறைவேக பந்துகளை இலக்காக்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான எதிரணி வீச்சாளர்களின் நீளத்தில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடியான சமீப மாற்றம் T20 கிரிக்கெட்டால் ஏற்பட்டது என்பது ஒரு சுவாரஸ்யமான பரிமாணம்.
டெஸ்டு கிரிக்கெட் தான் பொதுவாக ஒரு வீரரின் உடல் மற்றும் மனத்திறன்களை மொத்தமாய் சோதிப்பதாய் கூறப் பட்டாலும் இந்திய சட்டவியல் போல் கோளாறுகளை மறைக்க அதில் ஓட்டைகள் மறைவுகள் உண்டு. டெஸ்டு கிரிக்கெட் என்பது ஒருவரின் அனைத்து குறைகள் மற்றும் நிறைகளை பரிசீலிப்பது அல்ல. மாறாக பலவீனங்களை விட வலிமையை முன்னிறுத்துவது. உதாரணமாக டெஸ்டு ஆட்டத்தில் வெற்றி பெற ஒரு மட்டையாளனுக்கு கச்சிதமான தொழில்நுட்பமோ அனைத்து விட ஷாட்களோ தேவை இருப்பது இல்லை. மே.இ தீவுகளின் கோளாறான தொழில்நுட்பமும், குறைந்தபட்ச ஷாட்களும் கொண்ட ஷிவ்நரைன் சந்தர்பவுல் இதற்கு ஒரு நெடுங்கால வெற்றி உதாரணம். நேர்மாறாக பலவீனங்களை மறைக்கும் எந்தவொரு அவகாசத்தையும் அளிக்காத ஆட்டம் T20 அசலான சோதனைக்களமாக ஆக இருக்கிறது. T20-இல் ஒரு மட்டையாளன் தொடர்ந்து பரிணமிக்கக் கூடியவனாக இருக்க வேண்டும். குறைகளில், அதன் விளைவான வீழ்ச்சிகளில் இருந்து சீக்கிரம் மீண்டு எழத் தெரிய வேண்டும். T20இல் நட்சத்திர வீரர்கள் தொடர்ந்து மேடை பின்வாசல் வழியாக வெளியேறுவதற்கு இதுவே காரணம். உதாரணமாக யூசுப் பதானையும் கிரன் பொல்லார்டையும் எடுத்துக் கொள்ளலாம்.



பதானும் பொலார்டும் முன்கால் ஆட்டக்காரர்கள். ஒற்றை இரட்டை ஓட்டங்கள் எடுத்து சோர்ந்து போவதில் நம்பிக்கை இல்லாதவர்கள். எளிய அளவிலான தடுப்பாட்டம் கொண்டவர்கள். சுருக்கமாக ஒற்றை-பரிமாண மட்டையாளர்கள். மிக வெற்றிகரமான முதலாம் ஐ.பி.எல்லுக்கு பிறகு ஆட்டத்திறன் இழந்த காரணத்தால் விரைவில் இந்திய அணியில் இருந்து யூசுப் வெளியேற்றப்பட்டார். அடுத்து துலீப் கோப்பை இறுதி ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்து தனி ஆளாக யூசுப் தனது அணியை நானூறுக்கு மேற்பட்ட ஒரு பெரும் இலக்கை நோக்கி கொண்டு சென்றார். அடுத்து வந்த மூன்றாவது ஐ.பி.எல்லில் முப்பத்து ஏழு பந்துகளில் அவர் சதம் அடிக்க ஷேன் வார்ன் அது தான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த சதம் என்று புகழ யூசுப் பெருங் கவனம் பெற்றார். அடுத்து வந்த சில ஆட்டங்களில் யூசுப்பின் பலவீனம் குறைநீளப் பந்து என்று விரைவிலே கண்டறியப்பட நிலைமை தலைகீழாகியது. முப்பது சர்வதேச ஒருநாள் ஆட்டங்களில் யாரும் ஒளிபாய்ச்சாத இந்த பலவீனத்தை யூசுப்பால் T20யின் ஜுரவேக அவகாசத்தில் நிவர்த்தி செய்ய முடியவில்லை. பந்தின் நீளம் குறையும் போதெல்லாம் அவர் அச்சத்தில் உள்ளொடுங்கினார். யூசுப் தொடர்ந்து வேட்டையாடப்பட்டார். T20ஆல் பிரம்மாண்டப்படுத்தப் பட்ட இந்த தொழில்நுட்ப பலவீனத்தால் யூசுப் இந்திய ஒருநாள் அணியில் தன் இடத்தை இழந்தார், அவரது கனவான டெஸ்டு கிரிக்கெட் ஆடும் வாய்ப்பும் நெடுந்தூரம் நகர்ந்தது. எதேச்சையாக இப்படி T20யில் குறைநீளப் பந்தின் முன் நிர்வாணப்படாவிட்டால் யூசுப்பின் ஆட்டவரலாறு நிச்சயம் வேறுமாதிரியாக இருந்திருக்கும். ஒருவேளை டெஸ்ட்டில் ஆடக் கூட அவர் பரிந்துரைக்கப்பட்டிருக்கலாம்.
கிரன் பொல்லார்டு “ஒரு கிரிக்கெட்டரே அல்ல என்று முன்னாள் மே.இ வேகவீச்சாளர் ஹோல்டிங்கால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர். பதானைப் போன்று குறைநீளப் பந்து அவருக்கும் குறை என்று கண்டறியப்பட்டது. ஆனால் பொலார்டு தனது பல்வீனத்தில் இருந்து மீள கடுமையாக பயின்றார். நடந்து முடிந்த சாம்பியன்ஸ் லீகில் ஷான் டெயிட்டின் படுவேக குறைநீளப் பந்தை ஆறு ஓட்டங்களுக்கு மைதானத்துக்கு வெளியே ஹூக் செய்து தனது புது பரிமாணத்தை அறிவித்தார். இதைத் தொடர்ந்து அடுத்த நாளே ஆஸ்திரேலிய கிரிக்கெட் பத்தியாளர் பீட்டர் ரீபக் பொலார்டின் குறைநீளப் பந்துக்கு எதிரான எழுச்சியை கொண்டாடினார். பந்து வீச்சாளர்கள் குறைநீளப் பந்தால் பொலார்டை வேட்டையாடும் நம்பிக்கையை அதற்கு பின் கைவிட்டனர். ஒருசில வலுவான ஊடக பிம்பங்களால் வரலாறு வனையப்படும் இன்று ஒரு வீரரின் எழுச்சி ஒரு முழுமையான T20 ஆட்டத்தால் அல்ல, அதன் ஒரு பந்திலேயே தீர்மானிக்கப்படுகிறது. கால்நொடி தான் அங்கீகார ஆயுளின் அவகாசம். மீடியா எந்த வடுவையையும் ஆற விடுவதே இல்லை. பொலார்டு ஹூக் செய்த அந்த பந்து சற்றே மேலாக மட்டையின் விளிம்பில் பட்டிருந்தால் வரலாறு ஹோல்டிங்கின் பக்கம் மிக எளிதாக சாய்ந்திருக்கும்.
வேறெப்போதையும் விட ஒரு மட்டையாளரின் தொழில்நுட்ப கோளாறு அதிகமாய் பேசப்படுவது மைக்கேல் ஹோல்டிங் போன்றோர் அரைவேக்காடு ஆட்டம் என்று வர்ணிக்கிற T20யில் தான் என்பது ஒரு நகைமுரண். தன் ஆட்டவாழ்வில் பாதி வரை கங்குலிக்கு கால்பக்கம் அடிக்க வராது; பின்னர் குறைநீளப் பந்தை கௌரவமாய் எதிர்கொள்ளத் தெரியாது. ஆனால் இத்தனை குறைகள் இருந்தும் உலகின் மிக முக்கியமான ஒருநாள் மட்டையாளர்களில் கருதப்படும் அளவிற்கு சிறப்பான சாதனைகளை அவரால் செய்ய முடிந்தது..இன்றைய T20 யுகத்தில் இது சாத்தியமல்ல. சுரேஷ் ரெய்னாவும் இதே பலவீனம் கொண்டவர். அவரால் டெஸ்டு மற்றும் ஒருநாள் ஆட்டங்களில் தன்னை ஸ்தாபிக்க முடிந்துள்ளது. ஆனால் T20யில் ரெய்னாவின் குறைநீளப் பந்து பலவீனம் பளிச்சென்று தெரிகிறது. பி.பத்மராஜனின் ஓரிடத்து ஒரு பயில்வான் என்ற படத்தில் ஒரு குஸ்தி பயில்வான் யாரையும் ஆட்டக்களத்தில் சாய்ப்பவனாக இருப்பான். திருமணம் புரிந்த பின் ஆண்மையற்றவன் என்று தெரியவர மனைவி அவனை விட்டு சென்று விடுவாள். ரெய்னா, பதான் போன்றவர்களின் சங்கடம் இது போன்றது தான்.
Share This

2 comments :

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates