Friday, 24 September 2010

கிளாடிஸ் உணர்கிறாள் -ஜிம் ஹென்ரி




தாமரை இதழில் வெளியான எனது மொழியாக்கம்

புல்வெட்டும் எந்திரத்தை புல்லுக்கு குறுக்காய் தள்ளிய போது கிளாடிஸ் அம்மாவை மூச்சுக்குக் கீழ் சபித்துக் கொண்டாள். அவளது சகோதரன் எடி நேர்கோடுகளை எப்போதும் உருவாக்குவான், ஆனால் அதை செய்வது அவளுக்கு சாத்தியமற்றதாகவே படுகிறது.

வெக்கை தாங்கவொண்ணா விதம் உள்ளது; கிளாடிஸுக்கு போதை களைப்பு வேறு.

அவளுக்கு ஒரு சிகரெட் வேண்டும் கண்டிப்பாக. ஒவ்வொரு கோட்டின் முடிவிலும் அவள், வேர்த்துக் கொட்டியபடி, நிற்கிறாள்; சற்றுமுன் கத்தரித்த பகுதியை அணுக்கமாய் கவனிக்கிறாள், வழக்கம் போல் கோணி விட்டதை கண்டறிகிறாள். எப்போதுமே. தான் இதுவரை முடித்த அரை கெஜத்தை அவள் திரும்பிப் பார்க்கையில் அது ஒரு குடிகாரியால், ஒரு பைத்தியக்காரியால், ஒரு மனவளர்ச்சி குன்றியவளால் வெட்டப்பட்டது போல் தெரிகிறது.

கிளாடிஸ் தனக்குள் சிரித்துக் கொள்கிறாள். அடுத்த கோட்டை முடிக்கும் முன் புல்லை விரைவில் அகற்ற வேண்டும். அவளது பிரா பட்டை சிவப்பான தடிப்பை ஏற்படுத்துகிறது.

புழக்கடையில் கேப் ரெட்டையர்கள் நாற்றுப்பண்ணையில் இருந்து போன வார இறுதியில் விட்டுப் போயிருந்து மேல்மண் குவியலை தோண்டுகிறார்கள். இதை தள்ளுவண்டியில் கொண்டு வந்து இறக்கி, அவளது அப்பாவுக்கு சொந்தமாக இருந்த ரா டீல் எனும் பாரிலிருந்து வந்த ஆட்களில் ஒருவரைக் கொண்டு அம்மா கடந்த வார இறுதியில் முற்றத்தில் தோண்டிய பல்வேறு பாத்திகளில் பரத்த வேண்டும் என்று நினைத்தபடி கிளாடிஸ் பெருமூச்சு விட்டாள். அவரது பெயர் ஜெய்ம்; அவர் சுருட்டு பிடித்தார், சட்டையின்றி வேலை செய்தார். சமீபமாக வந்து கொண்டிருந்த பல ஆண்களில் அவரும் ஒருவராக இருந்தார்.

அவர் அவர்களில் பலரையும் போல, சமீபமாக, ஈமச்சடங்கின் போது வந்த ஆண்களில் ஒருவர் அல்ல. அம்மாவை நாடி வந்த ஆண்களை சுட்டுவதற்கான ஒரு முக்கிய சட்டகமாக இது உள்ளது: ஈமச்சடங்குக்கு வந்தவர்களில் அவள் நினைவில் நிற்பவர்கள், நினைவில் இல்லாதவர்கள்.

கிளாடிஸ் புல் கத்தரிப்புகளை தூக்கிப் போட்டு விட்டு கேப் ரெட்டையர்கள் சேற்றில் என்ன செய்கிறார்கள் என்பதை பார்க்க செல்கிறாள். அவர்கள் ரெண்டு வீடு தாண்டி வாழும் ஊமைக்குசும்பர்களான பத்துவயது குட்டிப் பையன்கள். அவர்கள் ஒரே போன்று எப்போது ஆடை உடுத்துவதில்லை; தங்கள் ரெட்டைத்தனத்தினால் சிறப்பாக அடையாளம் காணப்படுவதை வெறுத்தார்கள்.
அவள் குனிந்து தனது பெரிய சிரிப்பை சிரித்தபடி அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேட்கிறாள். சிறுவர்கள் தலையை மேல் நோக்கி வளைத்து வெயிலில் கண்கள் கூச ஓரக்கண்ணால் பார்க்கிறார்கள்.

“வேலையை பார்த்திட்டு போடி மயிரே! அவர்களில் ஒருவன் சொல்கிறான்; அவர்கள் மெல்ல சிரித்துக் கொள்கிறார்கள்; தோண்டுவதை தொடர்கிறார்கள்.
முன் முற்றத்தில் திரும்பிய கிளாடிஸ் தன்னால் ஒரு நேர்கோட்டை கூட வெட்ட முடியாததை நினைத்து வெறுப்பாகிறாள். இடுப்பில் கைகளை வைத்தபடி தனது வெட்டுகுத்தை உன்னிப்பாய் நோக்கி அவள் நிற்கையில் தபால்காரர் வண்டியில் வந்து அவளை நோக்கி ஹாரன் அடிக்கிறார். மேல்தெருவில் இருந்து பில்லி வாக்கர் ஒரு குச்சி ஐஸ்கிரீம் சப்பியபடி வருகிறான் எண்ணைப்பசை முடி, கிழிசல் ஜீன்ஸ் மற்றும் மூக்கு வளையங்களின் ஒரு குழப்படி உருவம் அவள் புல்லை வெறிப்பதை கண்டு அவளை வெறித்தபடி நிற்கிறான்.
நீ எங்கே பார்க்கிறாய் என்பதை பொறுத்தது அது”, அவன் புல்வெளியின் குறுக்கே வந்து சொல்கிறான். “போகும் போது உனக்கு நேராக பார்த்தாய் என்றால், நீ நேர்கோடாய் என்றுமே வெட்டிச் செல்ல முடியாது. முற்றத்தின் எல்லையை பார்த்த படி இங்கிருந்து செலுத்திச் செல்ல வேண்டும் நீ”.
கிளாடிஸ் பில்லியை அவன் வேலையை பார்த்துக் கொண்டு போகச் சொல்கிறாள்; அவன், குச்சி ஐஸ் தன் சத்தத்தை அமுக்கிட, ஏதோ சிரிக்க உத்தேசிப்பது போல் தலையை அசைக்கிறான். கிளாடிஸ் பில்லி வாக்கரை கடுமையாக வெறுக்கிறாள், ஒரு புட்டி கின் அடித்து விட்டு ஒரு முறை காட்டுக்குள் இருவரும் கிட்டத்தட்ட புணர்ந்திருந்தும் கூட.
“புறநகர முனிவர்களின் ஞானத்தை உனக்கு கைமாற முயல்கிறேன் அவ்வளவுதான். புல்வெட்டுவது ஒரு கலை என் அருமை கிளாடிஸ்.அவன் பல்லிளிக்கிறான், தெரிந்தது போல். அவன் மீண்டும் ஆரம்பிக்கிறான், “வாய்வழி புணர்ச்சி போல, அது பார்க்க மட்டும் தான் எளிது. சரியாக செய்வதற்கு திறமை வேண்டும்.
கிளாடிஸ் எதுவும் சொல்லவில்லை.
வாய்வழி புணர்ச்சி கருத்து அவளது இதயத்துடிப்பை எகிற வைக்கிறது. மெடோக்ஸும் பில்லியின் நல்ல நண்பர்களில் ஒருவன் மற்றும் கிளாடிஸின் காதலன் அவளும் கடந்த இரவில் அவன் அவளது வாயில் வெளியிட விரும்பியதை முன்னிட்டு சண்டையிட்டிருந்தனர் என்பது பில்லிக்கு தெரிந்திருக்க வேண்டும். அவள் அவனை அனுமதிக்க இல்லை, ஏனெனில் அவன் எம்மாவை ஒரு வாரத்துக்கு முன்பு போகி நெருப்பின் போது ஓத்திருந்தது அவளுக்கு தெரியும். அது ஒரு பெரிய தகராறாக முடிந்தது, எப்படியும் அதன் அவசியத்தை விட பெரியதாகவே; மெடோக்ஸ் கிட்டத்தட்ட அவளை அடித்து விட்டான். பில்லியிடம் அவன் எல்லாவற்றையும் சொல்லி இருக்க வேண்டும்.
அந்த உரையாடல் எப்படி இருந்திருக்க வேண்டும் என்பதை கிளாடிஸ் அருவருப்புடன் கற்பனை செய்கிறாள்.
ஐஸ்குச்சியை வாயிலிருந்து வெளியெடுத்து, உள்ளே திணித்து ... வெளியெடுத்து .. உள்ளே திணித்து ... வெளியே ... உள்ளே ... செய்யும் பில்லியை அவள் முறைக்கிறாள். ஒரு அருவருப்பான ஆபாசச் சிரிப்பு அவனது பருக்கள் அடர்ந்த முகத்துக்கு குறுக்காய் வெட்டி மறைகிறது; பிறகு அவன், தலையை பின் சாய்த்து கொக்கரித்த படி, கிளம்புவதற்கு திரும்புகிறான்.
கிளாடிஸ் பையை புல்வெட்டும் எந்திரத்தின் பக்கமாய் மீண்டும் இணைத்து விட்டு, இயக்கியை இழுக்கிறாள். சில முழுமூச்சான இழுப்புகளுக்கு பிறகு இறுதியாக அது கிளம்புகிறது; அவள் முற்றத்தை நோக்கியபடி திரும்பிக் கொள்கிறாள். ஒரு ஆழ்ந்த மூச்சை இழுக்கிறாள்; வெட்டிய துண்டுகளை கொட்டிய பின் தான் ஒரு சிகரெட் இழுக்க உத்தேசித்தது அவளுக்கு அப்போது நினைவு வருகிறது, ஆனால் கேப் இரட்டையரின் அந்த மயிர் விமர்சனம் அவளை மறக்க வைத்து விட்டது.

இரண்டு

கிளாடிஸின் சகோதரன் இரவுணவின் போது அம்மாவிடம் தன் காதலியை வி.சி.ஆரில் படம் பார்க்க அழைத்து வரலாமா என்று கேட்க, கிளாடிஸ் அமைதியாக அமர்ந்திருக்கிறாள்.
திருமதி.லெகர் தன் பட்டாணிகளை முகர்ந்து விட்டு, பதப்படுத்தப்பட் பட்டாணிகளுக்கு அது ஒரு வினோதமான பருவம் என்கிறாள். எடி திரும்பவும் தன் காதலியைப் பற்றி கேட்கிறான், அவள் வந்து அவனுடன் சேர்ந்து ஒரு படம் பார்த்தால் ஒன்றும் பிரச்சனையில்லையே. “சரி தான், தன் இமைகளை நாடகீயமாக நெரித்து, பெரிய சாயம் பூசிய உதடுகளை குவித்து, அவள் சொல்கிறாள். “சரிதானா? என்ன, அப்போது உன்னால் அவளை ஓய்வு இருக்கையிலேயே ஓக்க முடியுமில்லையா. உன்னைப் போன்ற பசங்க என்ன செய்வீர்கள் என்பது எனக்கு தெரியும். பன்றி குட்டியே
இந்த வாதத்தில் இருந்து எடியின் முகம் பின்வாங்குவதை அவள் கவனிக்கிறாள். அவன் என்ன எதிர்பார்க்கிறான் என்பதெண்ணி வியக்கிறாள். அம்மாவிடம் காதலர்கள் அல்லது காதலிகள் பற்றி வாய் திறக்காமல் இருப்பது தான் சிறந்தது. எதிர்பாராமல் அவர்களை அழைத்து வந்து, அவளை சத்தம் போட அனுமதித்து, அப்படியே சமாச்சாரத்தை முடித்து விடுவது தான் சரிப்படும். அதை முடித்த உடன் அவள் தனது அறைக்குள் நீண்ட அழுகை ஒன்றுக்காக மறைந்து விடுவாள் என்பது உறுதி.
ஆனாலும், சமீபமாக, அவள் ரா டீலை அழைக்கிறாள்; “துணைக்காக”, அவள் சொல்கிறாள், “ஒரு விதவைக்கு அது அவ்வப்போது தேவைப்படும்”. இதுதான் அவளது புதிய செய்கை. பகலிலோ இரவிலோ எந்நேரமும் இந்த அந்நியர்கள் வீட்டுக்குள் முட்டியபடி வருகிறாள், பெரும்பாலும் மப்பில்; அவர்கள் அப்படியே நேரே அவள் அறைக்கு போய் விடுவார்கள். சிலநேரம் அவர்கள் போகும் போது கிளாடிஸை நோக்கி புன்னகைக்க வழியில் நிற்பார்கள். சிலரை அவளுக்கு தெரியும், பெரும்பாலானோரை தெரியாது.
“அப்படியானால் ஓகே தானேஎடி சொல்கிறான்.
அவன் ஏன் இப்படி வலுக்கட்டாயமாக தொடர்கிறான் என்று கிளாடிஸ் வியக்கிறாள்.

சரியா என்ன சரி? இங்கே என் சம்மதம் எப்போது தான் தேவைப்பட்டது? என்று தான் இந்த வீட்டில் நான் சொல்வதை எழவு யாராவது காதுகொடுத்து கேட்கவாவது தலைப்பட்டார்கள்? அவளைக் கொண்டு வா. சமையலறை மேஜையிலேயே அவளோடு உறவு கொள், எனக்கென்ன.
கிளாடிஸ் குளிர்பதனப்பெட்டியில் இருந்து டெஸர்ட் எடுக்கிறாள். அவள் அந்த முற்றத்து வேலையை முடித்த அந்த பிற்பகலில் அவளது அம்மா ஏதோ அகத்தூண்டலில் ஐஸ்கிரீமையும் பிஸ்கட்டுகளையும் சேர்த்து அடித்து செய்தது. தொளதொள ஜிம் குட்டை கால்சட்டைகளும், உள்ளே பிரா அணியாது V வடிவ கழுத்து கொண்ட வெள்ளை டீஷர்டும் அணிந்த படி அம்மா சமையலறையில் மேஜை முன்னால் ஏழரை லிட்டர் குடுவை நிறைய வெணிலா ஐஸ்கிரீம் மற்றும் ரெண்டு திறந்த ஓரியோஸ் பைகளும் வைத்தபடி அமர்ந்து இருப்பதை அவள் பார்த்திருந்தாள். ஒரு சின்ன ரப்பர்மெய்டு வாளியில் இரண்டையும் அவள் சேர்த்து அடித்துக் கொண்டிருந்தாள். “இதை விட என்ன வேண்டும்?, கண்களில் திகில் மிளிர, கைகள் ஒட்டிப் பிசுபிசுக்க அவள் சொன்னாள். ஓரியோசும் ஐஸ்கிரீமும் சேர்வதை விட வேறேதாவது சிறப்பாய் இருக்குமா சொல் பார்ப்போம்,அவள் சொன்னாள். “ஒன்று சொல் பார்ப்போம். பிறகு காட்டுத்தனமான ஆவேசத்துடன் அவள் அவற்றை சேர்த்து கலக்குவதில் திரும்பினாள்.
கிளாடிஸ் சில் ஓரியோ பொதியுறைகளை பொறுக்கிக் கொண்டிருந்த போது அமர்வுக் கூடத்தில் இருந்து ஒரு நபர் உள்ளாடையில் வெளிப்பட்டான். அவன் ஒரு கூடைப் பந்தை தன் மார்போடு இறுக்கமாக பற்றியிருந்தான். “நாசம்அவன் சொன்னான். அப்பந்தை அவன் ஒருமுறை துள்ள விட்டான். கிளாடிஸ் அவனை முறைத்தாள்; அம்மா ஒவ்வொரு விரலாக சப்பினாள். அந்நபர் கூடைப்பந்தை மேலும் ஒருமுறை துள்ள விட்டு விட்டு திரும்பி வெளியேறினான்.
எடி பாத்திரங்களை அலம்புகையில் விசிலடிக்கிறான்; கிளாடிஸ் காய வைக்கிறாள். புல்லை வெட்டும் போது அவன் எப்படி எப்போதும் நேர்கோட்டில் வெட்டுகிறான் என்பதை அவனிடன் அவளுக்கு கேட்க வேண்டும். அம்மா மாடியில் மேஜை நாற்காலிகளை மீள்வரிசைப்படுத்தும் போது உச்சஸ்தாயில் “High Hopesபாடுகிறாள். மதிய உணவுக்கு பிறகு தன் வாழ்வை கிளர்ச்சியுறச் செய்ய சற்று அலங்காரத்துக்கான வேளை என்று அவள் சொன்னாள்.
“ஒரு நாள் அவள் அப்படியே செத்துப் போய் விடுவாள் என்று நினைக்கிறாயா?ஐஸ்கிரீம் பாத்திரத்தில் இருந்து சொப்பை அலம்புகையில் எடி கேட்கிறான்.
கிளாடிஸுக்கு புரியவில்லை. எல்லோரும் தான் சாகப் போகிறார்கள்.
“அதாவது, ஒரு நாள் அவள் தன் ஆற்றலை எல்லாம் இழந்து பாட்டரிகள் காலியான ஒரு பொம்மையை அல்லது பிறவற்றை போன்று நின்று விடுவாள் என்று நினைக்கிறாயா?
அப்படித் தான் நினைப்பதாக கிளாடிஸ் சொல்கிறாள்.
“நான் இப்படி அதை சிலநேரம் கற்பனை செய்வேன். அவள் ஒரு வெறியுடன் எல்லாவற்றையும் உடைத்துக் கொண்டிருப்பாள், அல்லது, மேஜை நாற்காலியை நகர்த்திக் கொண்டிருப்பாள் அல்லது, எனக்குத் தெரியவில்லை, ஏதாவது, அவளது வழக்கமான நடவடிக்கைகள், அதோடு அப்படியே நின்று விடுவாள், நிமிர்ந்து நின்று கொண்டு, ஒரு முறை புன்னகைப்பாள் ... பிறகு அப்படியே செத்து விழுந்து விடுவாள். எல்லாம் முடிந்து போகும்.
கிளாடிஸ் அவளது சகோதரனிடம் அவன் கனவு காண்பதாகவும், நிஜவாழ்க்கையில் யாரும் அப்படி மறைந்து போவதில்லை, அவர்கள் வெகுகாலம் தாமதிப்பார்கள், அவர்கள் எரிச்சல்படுத்துவார்கள், அவர்கள் வெளியேறுவதற்கு முன் நீண்ட அவகாசம் எடுத்துக் கொள்வார்கள், அது பெரும்பாலும் முன்னறிவிப்போடு நிகழவதில்லை என்று சொல்லப் போனாள்.
ஆனால் அப்போது படிகளில் துள்ளி இறங்கியபடி அம்மா தோன்றுகிறாள். அவள், “everyone knows an ant … can’t … move a rubber tree plant … but he’s got high hopes, he’s got high hopes என்று பாடியபடி சமையலறைக்குள் தாவி ஓடி வருகிறாள்.
ஒரு கையை இடுப்பில் வைத்து, மற்றொன்றை தலைக்கு மேல் வளைத்தபடி, இசைத்தட்டு இயக்கி மீதான நடன மங்கை பொம்மை போல் சுழன்றபடி அவள் சமையலறை மேஜையை சுற்றி நடனமாடுகிறாள். “He’s got high apple pie in the sky hopes.முடிவாக அவள் மேஜை முன்னாக அமர்கிறாள் நிஜத்தில் நிலைகுலைகிறாள்; ஒரு பெருமூச்சு விட்டு மிகச் சோர்ந்து கசங்கிப் போகிறாள்.
முகத்திலிருந்து தலைமயிரை மேலாக தள்ளி விட்டு சிலமுறைகள் ஆழந்து மூச்சு வாங்குகிறாள். இறுதியாக அவள் பேசுகிறாள். “இந்த மயிரு உலகை நான் வெறுக்கிறேன், அவள் சொல்கிறாள், மேலும் அழ ஆரம்பிக்கிறாள். “உங்களால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு நான் அதை வெறுக்கிறேன்”. எடி மெல்ல தண்ணீரை மூடுகிறான் “உங்கள் வெறித்தனமான கனவுகளில் நீங்கள் கற்பனை பண்ண முடியாதளவு வீடு முழுமையான அமைதி கொள்ளும்படியாய்.
அவனும் கிளாடிஸும், நாற்காலியில் துவண்டு கிடந்த, அம்மாவை நோக்கி மெல்ல நடக்கிறார்கள். அழுக்கான தரைவிரிப்புக்கு குறுக்காய் அவர்கள் கொஞ்சங் கொஞ்சமாய் முன்னேற, அவளை அவர்கள் நெருங்குவதற்கு சற்றும் முன்பு, அவள் தன் கீழுதட்டை கடித்து, தலையைத் தூக்கி, சொல்கிறாள், “இன்னும் ஏதாவது ஐஸ்கிரீம் இருக்குதா?

மூன்று
மெடோக்ஸ் கிளாடிஸை தன் அப்பாவின் காடிலாக் காரில் ஏற்றிச் செல்கிறான். அவன் முழுக்க அலங்கரித்துக் கொண்டிருக்கிறான், தன் அங்கியின் நீண்ட கழுத்துப் பட்டியில் ஒரு பூவும், ஒரு பெட்டியில் மலர்க்கொத்தும் கொண்டுள்ளான்.
கிளாடிஸ் வியப்படைகிறாள், அதை வெளிப்படுத்துகிறாள்.
“நாம் ஒரு இணைக்குழு நடனத்துக்கு போகிறோம்,அவன் வீட்டுப் பாதையில் இருந்து வண்டியை வெளியே எடுத்தபடி சொல்கிறான்.
இணைக்குழு நடனமா?
“ஆம் சரிதான் என் சீமாட்டியே, இணைக்குழு நடனம் தான்.
கிளாடிஸுக்கு இணைக்குழு நடனமாடத் தெரியாது.
“அதில் ஒன்றும் விசேசமாக இல்லை. அது மட்டுமல்ல, ஆண் ஜோடி தான் முன்னே நடத்திப் போவது.
கிளாடிச் ஜீன்ஸ் அணிந்துள்ளாள்.
“பயப்படாதே
அவர்கள் நெடுஞ்சாலையை அடைகிறார்கள்; மெடோக்ஸ் ஒரு ஒலிப்பேழையை எடுத்து ஸ்டீரியோவில் ஓடவிடுகிறான். அவன் அப்பாவின் கேடிலாக்கில் எல்லா இடத்திலும் ஒலிபெருக்கிகள் உள்ள அற்புதமான ஸ்டீரியோ அமைப்பு உள்ளது, கிராபிக் இகுவலைசர் டாஷ்போர்டில் பொருத்தப்பட்டுள்ளது (அவன் அப்பா ஒரு வக்கீல் மற்றும் உள்ளூர் நீதிபதி). ஒலிப்பேழையில் ஓபரா ஒலிக்கிறது, அது கிளாடிஸை ஆரம்பத்தில் சிரிக்க வைக்கிறது, ஆனால் பிறகு அவள் பொறுமையாக அதைக் கேட்கிறாள், பியோனா துணையுடன் உச்ச இசைக்குரலில் பாடல்; அவள் நிதானமடைவதாய் உணர்கிறாள்.
மழை பெய்ய ஆரம்பிக்கிறது; அவள் முன் இருக்கையின் பெரும் அமெரிக்க பரப்பில் தன்னை நீட்டிக் கொள்ள அத்துளிகள் அவளை வசியப்படுத்துகின்றன. அடர்த்தியான மென் துணியால் போர்த்தப்பட்ட இருக்கை மீது அவள் தன்னைத் தான் கட்டிக் கொள்கிறாள்.; அக்கார் தரும் விமானத்தில் பறக்கின்ற உணர்வை எண்ணி வியக்கிறாள்.
மெடோக்ஸ் ஒரு கஞ்சா சிகரெட்டை பற்ற வைத்து அவளிடம் நீட்டுகிறான். அவள் ஆழ்ந்து உள்ளிழுக்கிறாள், தலைக்குள் அதன் வெதுவெதுப்பை உணர்கிறாள். அவன் இசை அளவை உயர்த்துகிறான்; காரும் அதனோடு வேகம் பிடிப்பதாக தெரிகிறது. அவள் ஜன்னல் வழி வெளியே நோக்குகிறாள்; அவர்கள் போக்குவரத்தின் ஊடே ஒரு மந்திரவித்தை போல, வீடியோ விளையாட்டு போல, சுழன்று செல்வதை பார்க்கிறாள். விளக்குகள் இடமும் வலமுமாக பறந்து கடக்கின்றன, கார்கள் அவர்களை எதிர்பார்த்து வழிவிட்டு பிரிகின்றன.ஏதோ பூங்காவில் நடப்பது போல் அது எளிதாக தோன்றுகிறது; ஆனாலும் அவர்கள் இரண்டு டன் எஃகு மற்றும் கண்ணாடி மீது இருக்கிறார்கள்.
கஞ்சா சிகரெட்டின் பெரும்பகுதி வரை மூன்று தனிப்பெரும் பாடல்களின் ஊடாக, அவற்றின் அழகு அவள் கண்களில் நீர் வரவழைக்கிறது, காம உச்சநிலையை நினைவுபடுத்தும் படியாக முதுகெலும்பில் கூர்மையான கூச்சவுணர்வை ஏற்படுத்துகிறது - அவளுக்கு இந்த நன்னிலை உணர்வு தங்குகிறது. ஒளியைப் போன்று பரிசுத்தமான, கனவைப் போன்று மென்மையான ஒரு மாயைக்குள் வழுக்கிச் செல்வதாக அவள் உணர்கிறாள். அவளது மூச்சின் ஏற்ற இறக்கம் கூட ஒரு ஒழுங்கமைவுடன் மாந்திரிகத்தன்மையுடன் உள்ளது.
காற்று சர்க்கரையை போல் இனிக்கிறது, குருதி ஆகத் தெளிவான படிக ஓடைகளைப் போல் அவள் சிரை வழி துடித்து ஓடுகிறது. அவளது கூந்தலை பட்டைப் போல் உணர்கிறாள். ஒரு ஒளிக்காட்சியை போல் உலகம் விரைந்தோடுகிறது. உலகம் ஒரு ஒளிக்காட்சியாக, ஒரு கோளகத்தில் லேசர் ஒளிக்காட்சியைப் போல ஆபத்தற்றதாகவும் தொலைவாகவும் “ஆகி விட்டது.
அவள் மெடோக்ஸை பார்க்கிறாள்; அவன் மீது உச்சபட்சமான ஒரு காதலை உணர்கிறாள். அவனை தன் வாயில் வெளியிட அனுமதிருக்கலாம் என்று விரும்புகிறாள் அவனுக்கு அதில் இருந்து அப்படியொரு திடீர் கிளர்ச்சி கிடைக்கிறது. அவன் எங்கே வெளியிட்டான், உள்ளேயோ வெளியேயோ மீதோ அல்லது பின்னாலோ, என்பதை தான் ஏன் பொருட்படுத்தி இருக்க வேண்டும் என்பது அவளுக்கு விளங்கவில்லை, யாருக்கு அக்கறை. நிஜமாகவே. நம்மை கவனம் சிதைக்க நாம் அனுமதிக்கும் விசயங்கள், அவள் சிந்திக்கிறாள், நம்மை தடுமாறச் செய்ய நாம் அனுமதிக்கும் விசயங்கள்! மெயின் ஸ்டிரீட்டில் பகல் வேளையில் வசியப்பட்டு அவனை வெறித்தபடி அவனை தன் வாயில் வர விடுவாள், அவள் யோசிக்கிறாள், அது அவனை மகிழ்ச்சிப் படுத்தும் எனில்.
ஹேலொஜன் தெருவிளக்குகள் ஒளிபெற்ற அவனது பக்கவாட்டு முகத்தை வெறித்துப் பார்க்கிறாள்; அவளது இதயம் வேகமாக அடிக்கிறது. உலகம் கச்சிதமாக முறுக்கேற்றப்பட்டு உள்ளது, எப்படி வேண்டுமோ அப்படி சுழல்கிறது. மிகத் துல்லியமாக. அவர்கள் ஏன் சண்டையிட்டார்கள்? அப்படியே போகிற போக்கில் செல், அவள் நினைத்தாள், அப்படியே அது இருக்கும்படி இருக்கட்டும்.

நாலு
ஆனால் பிறகு மெல்ல முதலில் அந்த வழக்கமான பதற்றம் அவளுக்குள் ஊர்ந்தேறுகிறது. (இது நடக்கும் என்பது அவளுக்கு தெரியும். மாதக்கணக்காய் கஞ்சா அவளுக்கு பீதியும் மனப்பிராந்தியும் ஏற்படுத்தி வந்தது). திடீரென்று அந்த பாடகரின் அலறும் கீச்சுக் குரல் அவளது ஒவ்வொரு நரம்பிலும் மீண்டும் மீண்டும் உராயத் தொடங்குகிறது, வேகக் காரின் அசைவினால் அவளுக்கு குமட்டல் உணர்வு ஏற்படுகிறது. இந்த புரிந்து கொள்ள முடியாது உதவாக்கரை தருணத்தை நோக்கின ஏதோ ஒரு வகையான இணைக்குழு நடனத்துக்காக பித்தர்களைப் போல் விரைகிற - ஒரு நீண்ட ஆபத்தான பயணமாக அவளது மொத்த வாழ்வையும் அவள் பார்த்தாள் - இணைக்குழு நடனம் மீது யாருக்கு அக்கறையாம்?

அவளுக்கு நிச்சயமாக அது வெளிப்படையாக தெரிந்தது: அவள் இப்படித்தான் சாகப் போகிறாள். அவளது நீண்ட சித்திரவதையான இருத்தலின் ஒவ்வொரு நிமிடமும் இந்த ஒரு தருணத்தை நோக்கி தான் செலுத்தப்பட்டுள்ளது. அவளது மொத்த வரலாறும் அவளுக்கு முன் திரைவிலகுகிறது; அது இரு பக்கமும் எவ்வித பிறழ்வுகளையும் தடுக்கும் உயர்ந்த செங்குத்தான தடுப்புச் சுவர்கள் கொண்ட குறுகின வளைந்து நெளியும் பாதையாக அவள் பின்னால் விரிகிறது. அவளது மரணம் முன் நிற்கிறது, எப்போதையும் போல, அவளது விதி தீர்மானிக்கப்பட்டு விட்டது. இது தெரியாமல் அவள் எத்தகைய முட்டாளாக இருந்திருக்கிறாள்.
அவளது உடல் ஒரு முடிச்சாக இறுகுகிறது. அவளால் ஏறத்தாழ மூச்சு விடவே முடியவில்லை. காற்றுக்காக தவித்தபடி அவள் தன் கைகால்களை இழுத்துக் கொள்கிறாள்.
அவளுக்குள் ஒரு அலறல் உருவெடுத்து வளர்கிறது. அது ஒரு சின்னஞ்சிறு, கீச்சென்று மன்றாடலாக காலில் அடிமட்டத்தில் இருந்து ஆரம்பமாவதை அவள் உணர்கிறாள். அது வளர்கிறது. அது வளர்கிறது. அவளது முட்டிகளை அடைகிற போது அது ஒரு கீச்சொலி கத்தலாகிறது, பிறகு அது இசைநாடக ஊளையாக, வழிமுட்டின கட்டைக்குரல் அழுகையாக, ஒரு பிரம்மாண்டமாக வசைமொழி கதறலாக, ஒரு அமானுட, இல்லை ஒரு அதிமானுட கற்பனைக்கெட்டாத அலறலாக ஆகிறது.
அவளது உறுதிப்பாட்டை மீறி அது அவளது வாயில் இருந்து வெளியேறுவதை அவள் உணர்கிறாள், அது வர, வெடித்து வெளிவர, காரின் உட்பகுதியை அது சிதறடிப்பதைப் போல் தோன்றுகிறது. ஒரு வாழ்நாள் மொத்தத்துக்குமான அடக்கப்பட்ட கதறல்கள், அனைத்தும் ஒரேயடியாக, வாழ்நாள் முழுக்க அவள் என்றுமே அலற துணிந்திராத ஒவ்வொரு கதறலும், மெடோக்ஸின் அப்பாவின் விரையும் காடிலாக் உட்புறம் மீது பாய்கின்றன.
அதற்கு உடனடி விளைவுகள் ஏற்படுகின்றன.
ஒரு தொற்றுவியாதி போல், மெடோக்ஸே அக்கதறலை தொடர்கிறான். தனது கதறலின் போது அவன் காரின் மீதான கட்டுப்பாட்டை இழக்கிறான். சட்டென்று அவர்கள் மழையில் சுழல்கிறார்கள், நான்கு-வழி சாலையில் கார் கட்டுப்பாடற்று சுழல்கிறது. அவர்கள் அலறுகிறார்கள், மேலும் அலறுகிறார்கள். மரணம் உடனடி நிச்சயம்; இப்போது இருவருக்கும் அது தெரியும், அதனால் அவர்கள் மேலும் அலறுகிறார்கள். இயல்புக்கு மாறாக அவர்களைச் சுற்றி நிகழ்வுகள் மெதுவாக ஆகின்றன.
“அது நம்மை நாமே டி.வியில் பார்ப்பது போன்று இருந்தது, அவர்கள் பின்னர் நினைவிலிருந்து சொல்வார்கள், “அது படம் பார்ப்பதை போல் இருந்தது”.
நெடுஞ்சாலையின் வடக்கு மற்றும் தெற்கு பக்கங்களுக்கு இடையே புல்லின் மீது அவர்கள் சுழன்று நிற்கிறார்கள். அவர்களுக்கு காயம் இல்லை. காருக்கு சேதமில்லை. அவர்களுக்கு மூச்சு வாங்கியது.
“அடப்பாவிமெடோக்ஸ் சொல்கிறான். “என்ன எழவுக்கு அப்படி அலறினாய்?
கிளாடிஸால் ஏறத்தாழ தன் வாயை கூட திறக்க முடியவில்லை.
“அட நாசமே. நான் என் கால்சட்டையிலே கழிந்து விட்டேன் போலிருக்கிறது. அவன் ஆவேசமாக மூச்சுவாங்கிக் கொண்டிருக்கிறான், அவனது கண்கள் ஏதோ தலையிலிருந்து குதித்து விடும் எனும் படியாக அவன் கண்கள் அத்தனை விரிந்து இருக்கின்றன. “இந்த சூட் வாடகைக்கு எடுத்தது!
அவள் முடை நாற்றத்தை கவனிக்கிறாள்.

ஐந்து

இணைக்குழு நடன அரங்கு, உண்மையில் ஒரு வாடகைக்கு எடுக்கப்பட்ட விருந்து அரங்கு, வண்ணக் காகிதங்கள் மற்றும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கூரையில் இருந்து சுழலுகின்ற ஒரு கன்ணாடிப் பந்து தொங்குகிறது. டபிட்டு நீளங்கி அணிந்த வயதான சீமாட்டிகள் பழச்சாறு-மதுக் கலவையை விளம்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்த இணைக்குழு நடன அரங்கு முழுமையிலும் அவளும் மெடோக்ஸும் மட்டும் தான் இருபது வயதுக்கு கீழுள்ளவர்கள். அவர்கள் மட்டுமே நாற்பது வயதுக்கு கீழுள்ளவர்கள், ஐம்பதுக்கு கீழுள்ளவர்கள். ஒரு விலங்குகள் காப்பிடத்துக்காக நிதி திரட்டுவதற்காக காவல்துறை நடத்துகிற நிகழ்ச்சி அது என்று தெரிய வருகிறது. உள்ளூர் நீதிபதியான மெடோக்ஸின் அப்பாவுக்கு நுழைவுச்சீட்டுகள் கிடைத்தன, ஆனால் அவரால் வயிற்றுப்போக்கு காரணமாக கடைசி நிமிடத்தில் போக முடியவில்லை. (மெடோக்ஸ் அவனது கால்சாட்டையில் கழியவில்லை, நிச்சயமாய்.)
அவ்விரவின் பெரும்பகுதி கிளாடிஸ் நடனமாட மறுக்கிறாள். அவள் ஒரு மூலையில் நின்று மெடோக்ஸ் ஓவ்வொருவரிடமும் சென்று கைகளை குலுக்கி, தோள்களை தட்டி, மூத்த சீமாட்டிகளுடன் வழிவதை பார்க்கிறாள். அவன் ஒரு நாள் ஒரு அரசியல்வாதி ஆவான், அவள் யோசிக்கிறாள். நல்ல குடும்பத் தொடர்புகள், நல்ல தோற்றம், அகன்ற தோள்கள்.
அவன் அரசியலும் அதற்கு பின் சட்டமும் படிக்கப் போவதாக சொல்லுகிறான். “நான் ஒரு கவர்ச்சிகரமான வரன், தனது காரின் பின்பகுதியில் வைத்து ஓரிரவு அவன் அவளிடம் சொன்னான். கிளாடிஸ் தனது பிரா பட்டியை நடுவிரலில் திருகியும் விடுவித்தும் வெளியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
தான் ஒரு தூண்டில் போட்டுள்ளதாக அவள் அறிந்திருக்கவில்லை.

ஆறு

சார்டுரூஸ் எனும் ஒரு பெண் ஒருவழியாக கிளாடிஸிடம் தானாகவே முயன்று பேச வருகிறார். நேரமாகி விட்டது; கூட்டமும் குறைந்து விட்டது. இசைக்குழு சலிப்பாகி தோன்றுகிறார்கள்.
சாக்சோபோன் கலைஞர் தன் கைக்கடிகாரத்தை பார்ப்பதை கிளாடிஸ் கவனிக்கிறாள். கிளாடிஸுக்கு எதிர் மூலையில் ஒரு பெண், அபாசமாக சிரித்தபடி சுற்றி நிற்கும் இளைஞர் குழுவுடன், குடிபோதையில் பத்து கட்டளைகளை ஒப்பிக்க முயன்று கொண்டிருக்கிறாள். “நீங்கள் பேராசைப் படாதிருப்பீராகஅவள் தொடர்ந்து சொல்லி கெக்கலிக்கிறாள்.
சார்டுரூஸ் வந்து தனது வெள்ளை கையுறையின் ஊடாக கிளாடிஸின் கைகளை குலுக்குகிறார். “எப்படி இருக்கிறீர்கள்?அவள் கேட்கிறார்கள்.
கிளாடிஸ் தயக்கமாக தலையை அசைக்கிறாள். அவர்கள் ஒரிவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்கிறார்கள்; பின்னர் சார்டுரூஸ் தனக்கு அவளது அப்பாவை பலவருடங்களுக்கு முன்னரே தெரியும் என்று சொல்கிறார். “அவர் என் மாகியின் பின் சுற்றிக் கொண்டிருந்தார், அவர் சொல்கிறார். “அது அவர் உன் அம்மாவை சந்திப்பதன் முன்னர் தான், நிச்சயமாக. அவர் கால்பந்து அணியில் இருந்தார். உனக்கு அது தெரியுமா?
கிளாடிஸுக்கு தெரியும்.
“கண்டிப்பாய் உனக்கு தெரிந்திருக்கும். அவர் ஒரு சிறந்த இளைஞராக இருந்தார். மிக பவ்யமாக, நன்றாக ஆடையுடுத்தி. அப்போதைய ஆண்களைப் போல். அவரும் என் மாகியும் டிரைவ் இன்னுக்கு, குதிரைப்பந்தய தடத்துக்கு, சிற்றுலக்களுக்கு செல்வார்கள். அப்படிப்பட்டதொரு ஒரு விசயம். ஒரு மிக களங்கமற்ற காலம். ஏறத்தாழ இப்போது வேடிக்கையாக உள்ளது.”. சார்டுரூஸ் சிந்தனாபூர்வமாக வானத்தை நோக்குகிறார், மேலும் தொடர்கிறார், “ நான் நேற்று ஒரு இளைஞன் சிவப்பு நிற மொஹொவுக்கு பாணி முடி அமைப்புடன், கன்னங்களில் வளையங்கள் துளைத்திருக்க தெருவில் நடந்து போவது பார்த்தேன்.
கிளாடிஸ் புன்னகைக்கிறாள். அது ஜிம்மி; ஒரு புறநகர் ஹெராயின் போதை பயனன்.
சார்டுரூஸ் கீச்சிட்டு கத்துகிறார். “கர்த்தரே, ஹெராயின்? நிஜமாகவா?
இந்த எரிச்சலூட்டும் பெண்ணுக்கு அதிர்ச்சியூட்டிய திருப்தியில் கிளாடிஸ் தலையாட்டுகிறாள்.
அவன் ஹெராயின் ஊசி போடுகிறானா? ஊசிகள் மூலமா?
கிளாடிஸ் நகைக்கிறாள்.
“இங்கே இந்த நாட்டுப்புறத்திலா?. பார், நான் என்ன சொல்லுகிறேன் என்று புரிகிறதா. ரொம்ப காலம் முன்னாடி இது ஒரு வித்தியாசமான உலகமாக இருந்தது. உன் அப்பா ஒரு நல்ல மனிதர்.
சார்டுரூஸின் மாகியை டிரைவ் இன்னுக்கும் சுற்றுலாக்களுக்கும் அழைத்து சென்று மனிதராகிய தன் அப்பாவைப் பற்றி கிளாடிஸ் எண்ணிப் பார்க்கிறாள். அவள் ஸ்லோ மோஷனில் மென் ஃபோகஸில், டூஷ் ஊசிக்குழல் விளம்பரத்தில் போன்று ஒளி அமைக்கப்பட்ட ஒரு உலகில் அவர்கள் வாழ்வதை அவள் பார்க்கிறாள்.
“எவ்வளவு காலம் ஆகி விட்டது? மக்கள் இறந்தவர்களைப் பற்றி பேசுகையில் கிளாடிஸ் கவனித்துள்ளதைப் போல சார்டுரூஸ் இதை கேட்கும் போது பதற்றத்தில் நெளிகிறாள்.
மூன்று வருடங்கள், ஒரு கரும் வெற்று வெளிக்குள் நாள்காட்டியின் சுழலும் பக்கங்கள் பறந்து மறைவதை கற்பனை பண்ணியபடி கிளாடிஸ் சொல்கிறாள்.
“ஒருவரை கொலையினால் இழப்பது ஒரு கொடுமையான விசயம். உன் குடும்பம் எவ்வளவு சிரமப்பட்டிருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள ஆரம்பிக்க முடியாது. அதுவும் எதற்காக அதை சேய்தார்கள், என்ன அவர்களுக்கு என்ன கிடைத்தது?
“நாற்பத்தாறு டாலர்கள், கிளாடிஸ் சத்தமாக ஒப்பிக்கிறாள். அவளது அப்பாவின் கொலைகாரர்கள் அவரை நடுமண்டையில் இருமுறை சுடுமுன் குறைந்தபட்சம் ஒரு பெரிய தொகையை கொள்ளை அடித்திருந்தால் அதற்கு ஏதாவது அர்த்தமிருக்கும் (குறைந்தது அவர்கள் உலக நோக்குடன் ஒத்துப் போயிருக்கும்) என்று பொருள்பட மக்கள் வழக்கமாக நடந்து கொள்வார்கள். உலகம் அர்த்தப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் தங்களைத் தாங்களே முட்டாளாக்கிக் கொண்டு அவர்கள் ஒரு சமாதானமான தூக்கத்தை அடைய இப்படியான ஒரு உயர்ந்த தொகை அவர்களுக்கு உதவும் என்பது போல்.
“நாற்பது டாலர்கள். ஹும்ம்ம்
போலீஸ்காரர்களின் குழுவில் இருந்து மெடோக்ஸ் தன்னை நோக்கி கையசைப்பதை கிளாடிஸ் அடையாளம் காண்கிறாள். அவளது கவனத்தை பெற்றதும் அவன் அவளை அருகில் செல்லும் படி சைகை செய்கிறான். ஆசுவாசமுற்று, கிளாடிஸ் தன் காதலன் தன்னை அழைப்பதாக சார்டுரூசிடம் சொல்லுகிறாள்.
அவர் மெடோக்ஸை பார்வையிட்டு விட்டு மிகவும் கவரப்பட்டு சொல்கிறாள், “மெடோக்ஸ் ஹெயின்ஸ், மிக நல்லது. இதை விட சிறப்பாக ஒரு பெண்ணால் தேர்வு செய்ய முடியாது.“
கிளாடிஸ் ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறாள்.
சார்டுரூஸ் எழுந்து நின்று தன் அங்கியை தூசு தட்டுகிறாள். “அனைத்தும் மாறி விடும் என்பதை நான் கண்டிப்பாக இளைஞர்களிடம் சொல்லி விடுவேன். அவர்கள் அது நடக்காது என்பதில் மிக உறுதியாக தெரிகிறார்கள். எல்லாமும் அவர்களுக்கு ஏற்கனவே தெரியும் என்பது போல். ஆனால் அனைத்தும் மாறும் கண்ணே. இப்போது நீ யோசிப்பதிலும் உணர்வதிலும் பெரும்பாலானவை விரைவில் வெறும் நினைவாக, மூட்டமான நினைவாக இருக்கும். இப்போது மிக ஆவேசமாக உணர்வது என்ன என்பதை நினைவில் கொண்டு வருவதே உனக்கு சிரமமாக இருக்கப் போகிறது. எல்லாத்தை பற்றியுமே.
கிளாடிஸுக்கு சொல்ல ஒன்றும் இல்லை.
சார்டுரூஸ் கிளாடிஸின் தோளைத் தட்டியபடி, பெரிதாக புன்னகைத்தபடி நகர்கிறார். “பலர் வாழ்க்கையால் சிதைக்கப்படுகிறார்கள், என்னுடைய வயதில் நான் பல பேர் அதனால் முழுக்கவே துவண்டூ விடுவதை பார்த்துள்ளேன்,அவர் சொல்கிறார். “எளிதாகப் பட்டாலும் கூட, நாம் அவர்களை மதிப்பீடு செய்யக் கூடாது. எனக்கு உன் அம்மாவையும் தான் தெரியும். அவர் மேகியுடன் ஒரு காலத்தில் நட்பாக இருந்தார். இது ஒரு சின்ன நகரம்.
கிளாடிஸ் அதன் சிறியதான தன்மையை கற்பனை செய்கிறாள், மேலிருந்து அதனை, சிறு பச்சை நிலப்பகுதிகளில் இருக்கும் அனைத்து அலுமினியம் வீடுகளை, கோணல் மாணலான கோடுகளுடன் அவளது முற்றத்தை பார்ப்பதாக பாவனை செய்கிறாள்.
“என்னைப் பொறுத்தமட்டில், சார்டுரூஸ் தொடர்கிறார், “நம்மால் இப்படி, சிலசமயங்களில், தொடர முடிகிறதே என்பது ஒரு அற்புதம்தான். நிஜமாகவே. தண்ணீரில் நடப்பது உள்ளிட்ட பிற அசட்டுத்தனங்களில் இது முதலாவதாக வரும். தொடர்ந்து வாழ நமக்கு எப்படி வலிமை கிடைக்கிறது

ஏழு
வீட்டுக்கு போகும் வழியில் மெடோக்ஸ் ஒரு அரசியல்வாதியின் மனைவி அனைவரிடமும் பழகக்கூடியவளாக இருக்க வேண்டும் என்று அவளை சீண்டும்விதம் புகார் செய்கிறான். “சேர்ந்து பழகு! அவன் அவளிடம் சொல்கிறான், “எல்லாரும் மடையர்கள் என்று நீ நினைத்தாலும் கூட, தனியாக அமர்ந்திருப்பதற்கு ஒரு மடையனிடம் பேசுவது மேல்.
தன்னை நியாயப்படுத்த கிளாடிஸ் தான் சார்டுரூஸுடன் ஒரு அருமையான உரையாடலில் ஈடுபட்டதாக சொல்கிறாள்.
“அவள் ஒரு லூசு
அவர்கள் மீண்டும் இசைநாடகம் கேட்கிறார்கள், ஆனால் கஞ்சா ஏதும் புகைக்கவில்லை. அவர்கள் சுழன்று தடுமாறிய இடத்தை கடக்கிற போது கிளாடிஸின் நெஞ்சுக்குள் சில்லிடுகிறது. அவள் மெடோக்ஸின் தொடையில் கை வைக்கிறாள், படுக்க வேண்டும் என்கிறாள், அவளுக்கு சற்று படுக்க வேண்டும்.
“என்ன வேண்டுமென்றாலும் செய், அவன் சொல்கிறான்.
அவள் முழங்கைப் பலகையை விலக்கி அவனது துடையில் தலை சாய்த்து இருக்கை மீது படுக்கிறாள். காற்றுத்தடுப்பு கண்ணாடி வழியாக வானம் மிதந்து கடப்பதை வேடிக்கை பார்க்கிறாள்; மீண்டும் விமானப் பறத்தலைப் பற்றி யோசிக்கிறாள். எல்லாம் சீராக செல்வதான, பிரபஞ்சமே ஒரு சீரமைவுடன் இருப்பதான முந்தைய கிளர்ச்சியுணர்வை மீண்டும் கொண்டு வர முயல்கிறாள். ஆனால், அவளது தலை சுழல்கிறது; அவளுக்கு கண்ணை மூட வேண்டியதாகிறது.
அவள் பக்கமாக திரும்பி மெடோக்ஸின் கால் கெண்டையை வருடுகிறாள். வீட்டில் அம்மா ஏதாவது ஒரு ஆணுடன் படுத்துக் கிடப்பாள். எடி தனது புது காதலியுடன் அவனது அதி-வன்முறைப் படங்களில் ஒன்றை பார்த்துக் கொண்டிருப்பான். ஒருவேளை இது தான் உலகம் சீரமைவுடன் இருப்பதற்காக இருக்கலாம், அவள் நினைக்கிறாள். ஒருவேளை சீரமைவுடன் இருப்பதன்றி பிரபஞ்சத்துக்கு வேறு தேர்வு இல்லாமல் இருக்கலாம். ஒருவேளை சீரமைவு என்றால் என்ன என்பது பற்றி நமக்கு ஒரு கோளாறான புரிதல் இருக்கலாம்; நாம் வேறு விதமாக பார்த்து வேறேதையாவது - மேலும் குறைவானதாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை எதிர்பார்த்தால், எல்லாம் சரியாகி விடும். விசயங்களை பார்க்கும் இந்த புதுவிதம் பற்றி கற்பனை செய்ய முயன்றபடி, அறிகிற ஆனால் அதனால் பாதிக்கப்படாத ஒரு கிளாடிஸை கற்பனை செய்தபடி, அவள் தன்னை சற்று இடம் மாற்றிக் கொள்கிறாள். மெடோக்ஸ் அவளது கூந்தலை வருட, இருக்கையில் மெல்ல நெளிய ஆரம்பிக்கிறான். அவளது முகவாய்க் கோட்டில் மிருதுவாக ஒரு விரலை இழுக்கிறான்; கிளாடிஸ் அவளது மற்ற கன்னத்தின் மீது மெடோக்ஸ் விரைப்படைவதை உணர்கிறாள்.
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates