திரைக்கதை மற்றும் இயக்கம்: ஆர்.பிரகதீஷ்
நடிப்பு: பிரவீன் மற்றும் ஜானி
குரல்கள்: ஆர்.பிரகதீஷ் மற்றும் புவனேஷ்வரி
ஒளிப்பதிவு: ஆர்.அரவிந்த்
படத்தொகுப்பு: டி.சிவமணி
ஆர்.பிரகதீசின் இக்குறும்படம், மேலோட்டமாக சொல்வதானால், ஒரு சிறுவனுக்கும் நாய்க்குமான நட்பைப் பற்றியது. இன்னும், அந்நாய் தான் வாழும் தெருவுடன் கொள்ளும் பந்தத்தை பற்றியது. ஒரு மிகச் சின்ன இழையை நுட்பமாகவும் உணர்வுபூர்வமாகவும் திரைக்கதையாக இயக்குநர் பின்னி வளர்த்துள்ளது படத்துக்குள் எளிதில் நுழைந்து அடையாளம் காண, மனம் ஒன்ற பார்வையாளனை தூண்டுகிறது.
பிரகதீஷ் சில இயக்குநர்களைப் போல் ஒரு இரண்டரை மணிநேர நாடகத்தை இரண்டு நிமிடங்களுக்குள் திணிக்க முயலாதது ஆறுதலான விசயம். வடிவரீதியாக ”உணர்வு” ஒரு அசலான குறும்படம். ஒன்று அல்லது இரண்டு பாத்திரங்களின் காட்சிப்படுத்துவது குறும்படத்தின் இயல்பாக அறியப்படுகிற குறியீட்டு, தத்துவார்த்த தளங்களை உருவாக்குவதற்கு முக்கியம். இப்படம் தன் போக்கிலேயே இப்படியான தளங்களை சென்றடைகிறது.
ஒரு சிறுவன் தெருநாயை வளர்க்க பிரியப்படுகிறான். வீட்டு சொந்தக்காரர் அனுமதிக்க மறுக்கிறார். அப்பா அவனுக்காக குடியிருப்பு சங்கத்தாரிடம் முறையிட செல்கிறார். அவர் திரும்பும் வரை அவன் உண்ண மறுத்து நாய் பற்றின நினைவுகளில் கழிக்கிறான். அம்மா அவனை கெஞ்சியும் கண்டித்தும் புலம்பியும் வைக்கும் பிலாக்கணம் வாயிஸ் ஓவராக வந்து பார்வையாளனுக்கு ”பின்கதை சுருக்கம்” தருகிறது. ஒரு விஸ்காம் மாணவராக இருந்த காலத்தில் ஆர்.பிரகதீஷ் இப்படியாக கதையை காட்சிக் கோர்வையில் ஆரம்பித்திருப்பது அவரது முதிர்ச்சியை, கதைகூறலின் நேர்த்தியில் காட்டும் சிரத்தையை சொல்லுகிறது. ஒரு தேர்ச்சியற்ற இயக்குநர் இத்தனை பின்கதையையும் சில நேரடிக் காட்சிகள் மூலமோ காட்சியற்ற உரையாடல் மூலமோ சொல்ல முயன்றிருக்கக் கூடும். பிரகதீசுக்கு ஆரம்பத்தில் இருந்தே திரைமொழியில் பிடிப்பு உள்ளது. மேலும் காட்சி பூர்வமாக கதையை சொல்வதிலும் அவருக்கு மிகுந்த சிரத்தை உள்ளது. நாயுடன் சிறுவன் பழகுகிற நினைவுமீட்டல் காட்சிகளை அவன் தனிமையில் சோர்ந்திருக்கும் காட்சிகளுடன் முரண் கோர்வையில் வைக்கிறார். இக்காட்சிகள் அழகியல்பூர்வமாகவும் புத்திசாலித்தனமாகவும் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த அருமையான ஆரம்பம் தரும் எதிர்பார்ப்பு காரணமாக சில அதிருப்திகள் தோன்றுகின்றன. நாய்க்கும் சிறுவனுக்குமான உறவாடல் காட்சிகளை மேலும் ஆர்வமூட்டும் படியாக அமைத்திருக்கலாம்; அதற்கான ஏராளமான சாத்தியங்கள் உள்ளன. அடுத்து வாயிஸ் ஓவரில் புலம்பும் அம்மா கிட்டத்தட்ட ஒப்பிக்கிறார். உணர்ச்சிபூர்வமாக குரல் வழங்கி நடித்திருந்தார் என்றால் இக்காட்சி தீவிர மனவெழுச்சியை உருவாக்கி இருக்கும்; எஸ்.ரா சொல்வது போல் உறவும் பிரிவும் தமிழனின் ஆதார உண்ர்ச்சிகள் அல்லவா!
நாயை அனுமதிக்க சம்மதம் கிடைக்கிறது; சிறுவன் உற்சாகமடைகிறான். ஆனால் திடுதிப்பென்று அடுத்த காட்சியில் அவர்கள் வீடு மாற்றிப் போவதாக வருகிறது. இத்திடும் மாற்றத்திற்கு பார்வையாளன் தயாரிக்கப்படுவதில்லை. படத்தின் திருப்புமுனை காட்சி இது. நாய் புதுவீட்டுக்கு வர மறுக்கிறது. அத்தெருவே அதன் வீடு. அங்கேயே தங்குகிறது. பூட்டப்பட்ட வீட்டின் முன் அது ஏக்கத்துடன் நின்று தவிப்பது அருமையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இயக்குநர் அச்சிறுவனை விட நாயை சிறப்பாக நடிக்க வைத்துள்ளார் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
இப்படம் பார்வையாளனுக்கு தரும் திறப்புகள் என்ன? பால்யத்தில் பெரும்பாலாரோருக்கு தனக்கென ஒரு குடும்பத்தை உருவாக்கி வளர்த்து பாதுகாக்கும் உந்துதல் ஏற்படுகிறது. இதை ஒரு பரிணாம உள்ளுணர்வு எனலாம். அதாவது குடும்பப் பொறுப்புக்கு பழகுதல் மிகச் சின்ன வயதில் இருந்தே ஆரம்பித்து விடுகிறது. பொம்மையோ, தோட்டமோ, நாய்க்குட்டியோ, பின்னர் நண்பர் குழாமோ எதையாவது வளர்ப்பது அப்பருவத்தில் மிகுந்த உணர்வெழுச்சி தரும் அனுபவமாக இருக்கும். தன் வரம்புக்குள் வரும் அத்தனையையும் ”சொந்தம் கொண்டாடுவதும்” ஒரு முக்கிய மனநிலை. மத்திய தர வாழ்வை சேர்ந்த இச்சிறுவன் ஒரு தெருப் பிராணியை தன் குடும்பமாக பழக்கப்பார்க்கிறான். அது இறுதியில் தனது பெரிய குடும்பமாகிய தெருவுக்கே திரும்ப பிரியப்படுகிறது. அதற்கு பழைய வீட்டுடன் உள்ள பந்தமும் குறைவதில்லை. சிறுவன் மனம் உடைகிறான்; ஆனாலும் மனவிரிவுடன் புரிந்து கொண்டு விசனமும் நிதானமும் ஒருசேர நாயிடம் விடை பெறுகிறான். நாயின் தேர்வை ஏற்றுக் கொள்ளும் சிறுவனின் மனப்பாங்கு கவனிக்க வேண்டியது. படத்தின் ஆரம்பத்தில் அவன் தன் பெற்றோரின் சிக்கலை புரிந்து ஏற்றுக் கொள்ள மறுத்து அவனளவில் கலகம் செய்கிறான். இறுதியில் முதிர்ச்சியடைந்து நாயின் பார்வையில் இருந்து உலகை புரியும்படி “வளர்ந்து” விடுகிறான். ஒருவிதத்தில் இது மையப்பாத்திரம் முதிர்ச்சியடைவதை சொல்லும் coming-of-age படம் தான். வீட்டை குடும்பமாகவும் தெருவை வெளிஉலகமாகவும் நாம் புரிந்து கொண்டால் படத்தின் இறுதியில் அவன் கற்கும் பாடம் மிக முக்கியமானதாகிறது. அனைத்தையும் ஒரு உள்வட்டத்துக்குள் சுருக்கி தட்டையாக்கும் ஒரு மத்தியதர மனநிலையை பற்றின நுட்பமான விமர்சனம் இப்படத்தில் உள்ளது. அப்படியான மனநிலையில் இருந்து தான் சிறுவன் வளர்ந்து படம் முடிகையில் வெளியே வருகிறான். இந்த வெளியேற்றம் மனவிகாசத்தின் விளைவு. உள்ளே சுருங்குவதை விட வெளியே விரிவதை வலியுறுத்தும் புரிதல். மற்றொரு உலகில் ஒரு உறவை விட்டு பயணிக்கும் தத்துவார்த்த, கவித்துவ இழையொன்றும் இப்படத்தில் துண்டுபட்டு நிற்கிறது. இந்த கைவிடலின் கசப்பை பத்மராஜன் தனது பல படங்களில் மிகுந்த கவித்துவத்துடன் சொல்லியிருக்கிறான். உதாரணமாக “தேசானக் கிளி கரயாறில்லா”. ஆர்.பிரகதீஷ் இந்த உபபிரதியை தன் எதிர்காலப் படங்களில் மேலெடுத்து செல்ல முடியும்.
No comments :
Post a Comment