Sunday, 19 September 2010

தும்பிகள்

வல்லினம் இதழில் வெளியான சிறுகதை




வாழ்வின் இறுதி நாட்களை விரல் விட்டு எண்ணிக் கொண்டிருந்த கபாலீஸ்வரன் தன் கல்லூரி நாட்களை ஒரு முறை விரல் விடாமல் எண்ணிப் பார்த்தான். எரிச்சலோடு சிகரெட் புகையை இழுத்து விட்டுக் கொண்டான். சிகரெட் நுனி கனன்று தகித்தது. எதிரே உட்கார்ந்திருந்த பூனைக் குட்டி கூர்ந்து பார்த்தது.


கல்லூரி உதவி நூலகர் கமலா கிருஷ்ணசாமி இதே போல் முறைத்துப் பார்த்து உப்பிப் போய் உட்கார்ந்திருப்பார். புத்தகங்களை பெற்றுச் செல்வதற்காக நீட்டும் போது அச்சு பிச்சென்று தும்முவார்.

"எனக்கு தூசு அலர்ஜிப்பா"

ஆரம்பத்தில் நூலகச் சீட்டுகள் கிடைத்து விட்ட உற்சாகத்திலும், பிறகு வெற்றுச்
சீட்டுகளாய் மல்லாந்து கிடந்து அவை தந்த மனநெருக்கடியிலும் தான் கபாலீஸ்வரன் கல்லூரி நூலகத்திற்கு அடிக்கடி விசிட் அடிக்க ஆரம்பித்தான். பின்னர், அவன் தங்கியிருந்த விடுதியிலுள்ள ரேகிங் தொல்லைகளிலிருந்து தப்ப மதிய நேரங்களில் நூலகத்திற்கு சென்று தூங்கத் தொடங்கினான். தினமும் ஏழெட்டு மணிநேரம் இவ்வாறு நூலகத்திலேயே கழித்தும் புத்தகங்களுடனான அந்நிய உணர்வு அவனை விட்டு விலகவே இல்லை. மதியம் இரண்டு மணியிலிருந்து நான்கு மணி வரைதான் நூலகம் அதன் உயிர்ப்பின் உச்சத்தில் தழைத்து நிற்பதாய் கபாலீஸ்வரனுக்குத் தோன்றும். சாப்பாட்டை முடித்து விட்டு கமலா கிருஷ்ணசாமியும், பீயுன்கள் அந்தோணி முத்துவும், ராகவனும் உட்கார்ந்து இரண்டரை மணி வரை கொட்டாவி விட்டவாறு பேசிக் கொண்டிருப்பர். இயற்பியல் பேராசிரியர் சுபாஷிணி ஏதேனும் அரட்டை இடையில் நுழைந்தால் தலைமை நூலகர் ஆல்பர்ட் வெற்றிலை மென்றவாறு எட்டிப் பார்ப்பார். நெற்றியெங்கும் வியர்வை வழிய கமலா கிருஷ்ணசாமி சுபாஷிணியை சம்மந்தமின்றி வையத் தொடங்குவார். ஆல்பர்ட் தலையை உள்ளிழுத்துக் கொள்வார். அதற்குப் பதிலாக அவரது கனமான குரல் வெளிவந்து அங்கும் பிரவாகிக்கும்.

"கமலா, நேந்து வந்த புது புத்தகங்களுக்கெல்லாம் எண்டிறி போட்டாச்சாம்மா?"

ஐந்து நிமிட மௌன இடைவேளைக்குப் பின், கமலா கிருஷ்ணசாமி இரண்டு முறை வலுவாகத் தும்முவார். ஓய்வூதியம் பற்றி விவாதம் திரும்பினால், ராகவன் தன் வெள்ளைத் தாடியை சொறிந்தவாறு, கண்களை முழுக்கத் திறந்து கவனிப்பார். கமலா, ஒருநாள் தன்
நீண்ட கூந்தலை நீவியவாறு, பரிவோடு கேட்டார்: "உனக்கு என்ன வயசாகுது ராகவன்"

"ஞாபகமில்லையம்மா. கண்ணை மூடி குழிக்குள்ள படுக்கிற காலம் வந்தாச்சுண்ணு மட்டும் தெரியும்" என்றவாறு கண்களை மூடி சுவரோடு சாய்ந்து கொண்டார். கமலா சற்றும் சிரமமில்லாமல் உரையாடலை முடித்து, கொட்டாவி விட்டவாறு வெயில் விழுந்து அப்பிக் கிடக்கும் வாசலைப் பார்த்தார்.

கபாலீஸ்வரன் வழக்கம் போல் முதல் மாடிக்கு சென்று, அங்கு காற்றாடிக்கு கீழ் ஒரு வசதியான இடம் பார்த்து உட்கார்ந்தான். ஒரு தடிமனான புத்தகம் பார்த்து தேர்ந்தெடுத்து தலைக்கு வைத்து தூங்க முயன்றான். அவனது பக்கத்து இருக்கையில் இளம் பச்சை சுடிதார் அணிந்த ஒரு பெண்ணும், குள்ளமாய் ஒல்லியாய் ஒரு இளைஞனும் வந்து அமர்ந்து புத்தகம் பரப்பி வாசிக்க தொடங்கினர். மென்மையான சதை வளையங்கள் கொண்ட அவள் கழுத்தில், வியர்வை ஈரம் மினுமினுக்க, கூந்தல் மயிர்கள் சில ஒட்டியிருந்தன. அவளது வியர்வை நெடி கபாலீஸ்வரனை எரிச்சலடைய வைத்தது. கபாலீஸ்வரன் அருவருப்பாய் அவர்களை ஒருமுறை முறைத்துப் பார்த்தான். முதல் முறை அவன் எதேச்சையாய் திரும்பிய போது கவனித்த மச்சம், இரண்டாம் முறை பார்த்த போது இல்லாதது எண்ணி வியந்தான். சில நிமிடங்களுக்குப் பிறகு, அவர்கள் புத்தகங்களை மூடி வைத்து விட்டு மூச்சு விடாமல் பேசத் தொடங்கினர். கபாலீஸ்வரன் எழுந்து அவர்களை உக்கிரமாய் முறைத்தான். கீழ்த்தளத்திலிருந்த தலைமை நூலகரின் அறைக்குள் உற்றுப் பார்த்தான். அவர் வெற்றிலைச் சாறு உதட்டோரம் வடிய உறங்கிக் கொண்டிருந்தார். அவர்கள் இரண்டு இருக்கைகள் தள்ளிப் போய் அமர்ந்தார்கள். அடுத்த அரை மணிநேரத்தில் அவன் தூங்கிப் போனான்.

கனமான புத்தகம் ஒன்று கீழே விழுந்த சத்தம் கேட்டு கண் விழித்த கபாலீஸ்வரன் திடுக்கிட்டு எழுந்து பார்த்தான். கீழே அலுவலக அறையில் சுறுசுறுப்பாய் எல்லோரும் தேனீர் அருந்திக் கொண்டிருந்தனர். இடப் பக்கமாகத்தான் அந்த சத்தம் கேட்டதாய் அவனுக்குத் தோன்றியது. திரும்பிப் பார்த்தான். கபாலீஸ்வரனின் இதயம் தொண்டைக்கு வந்து, குரலை அடைத்தது. கண்களின் ரத்த நாளங்கள் வெடித்தது போல், பிரித்தறியா வண்ணம் நிறங்கள் எங்கும் பரவிக் கலந்து வடிவ மாற்றம் அடைந்தவாறே சென்றன. அங்குள்ள அலமாரியோடு சாய்ந்து நின்று ஏழடி உயர பழுப்பு நிற எலும்புக் கூடு ஒன்று சன்னமாய் அதிர்ந்தது. அதனோடு சேர்ந்து அலமாரியும் கிடுகிடுவென ஆடியது. பிறகு எலும்புக் கூடு, அதன் ஓட்டை விழிகள் அவனையே வெறிக்க, தடாலென தரை பிளக்கும் சத்தத்துடன், விழுந்தது. உலோகப் பொருள் விழுந்தது போலும் ங்ங்ங்... என்ற அதிர்வு ஓசை காற்றின் நரம்புகளை வெகு நேரம் மீட்டியது.

கபாலீஸ்வரன் காரணம் இன்றியே அந்த எலும்புக்கூடு முன்னர் நின்றிருந்த இடத்தை தொடர்ந்து முறைத்தான். தலைமுடியை கைகளாலே நீவி சீர் செய்ய முயன்றான். நெற்றி வியர்வை சில்லிட்டிருந்தது. கோணலாக தரையில் கிடந்து முன்னும் பின்னுமாய் உருண்டு கொண்டிருந்த எலும்புக்கூட்டை நோக்கி இரண்டடிகள் எடுத்து வைத்து விட்டு, அவன் ஏனோ தன்னிச்சையாய் சட்டென்று திரும்பி ஓட்டமும் நடையுமாய் கீழ்த்தளத்தை அடைந்தான்.

வாசல் படிக்கட்டில் அமர்ந்து தேனீர் சுவைத்துக் கொண்டிருந்த ராகவனின் அருகில் சென்று, சுவரோடு ஒடுங்கி உட்கார்ந்து கொண்டான். "டீ சாப்டிறியாப்பா" என்று கேட்டார். கபாலீஸ்வரனின், கவனம் வேறு எங்கோ லயித்திருக்க, வேண்டாம் என்றான். சில நிமிடங்கள் எதற்கென்று புரியாமல் காத்திருந்து விட்டு, அவரைப் பார்க்காமலேயே "அண்ணா ஒரு எலும்புக் கூட்டைப் பார்த்தேன்...அப்படியே அந்த அலமாரி மேலே சாய்ஞ்சு நிண்ணுச்சு" என்றான். சொல்லி முடித்த பிறகும் தனது இடது கரம் மாடியை நோக்கியே நீண்டு கொண்டிருப்பது அபத்தமாய் படவே கையை தாழ்த்தினான். அப்போதும் இடது தோள் கட்டுப்படாமல் தொங்கிக் கொண்டிருப்பதாகவே தோன்றியது. விரல்களை மடித்து முஷ்டியை முறுக்கினான். டீ குடிப்பதை நிறுத்தி விட்டு அவனையே சில நொடிகள் சிவந்த கண்களால் வெறித்துப் பார்த்தவர் ஏதோ முடிவை எட்டியவராய் கடைசி ஒரு வாய்
தேனீரை உறிஞ்சி காலி செய்தார். கண்ணாடி டம்ளரின் அடியாழத்திலிருந்து இளமஞ்சள் கலந்த வெண்நுரை ஆத்திரத்துடன் மேலெழும்பி ஒரு மெல்லிய படலமாய் அமைதியுடன்
கீழ்ப்படிந்தது. சலிப்பாய் "அதெல்லாம் ஒண்ணுமில்லேப்பா. எதாவது கனா கினா கண்டிருப்பே" என்றார். "இல்லேண்ணா தோ அங்கே" என்று கபாலீஸ்வரன்
மீண்டும் மாடியை சுட்டிக் காட்டினான். "சரி எந்திரி" ராகவன் சைகை காட்டி, கண்ணாடி டம்ளரோடு "யம்மோவ்" என்று மெதுவாய் எழுந்தார். "வா வந்து காட்டு". டம்ளரை மெதுவாய் கவுன்டரில் இருந்த ஒரு தடிமனான நீல அட்டையிட்ட புத்தகத்தில்
மீது வைத்து விட்டு, செருப்பின் குதிகால் பகுதி தரையோடு உராய்ந்து சத்தமெழும்ப அவனிடம் வந்தார். இருவருமாய் மாடிப் படிக்கட்டின் உச்சியை அடையும் நேரத்தில் கனத்த உலோகப் பொருளொன்று தரையோடு இழுபடும் சத்தம் கேட்டு காது கூசியது. கபாலீஸ்வரன் தன் உள்ளங்காலில் அப்பொருள் இழுபடும் இடைவிடாத அதிர்வை உணர தலை கிறுகிறுத்தது. கருநீலப் பாவாடையும், பளீர் வெண்ணிறச் சட்டையுமாய் ஐந்து வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையொன்று படிக்கட்டில் தடதடவென இறங்கி அவர்கள் முன் நின்றது. அதன் சிவந்த மயிரடர்ந்த முழங்கால்கள் யாரையோ ஞாபகமூட்டி அவனை உறுத்தின. பிறகு அக்குழந்தை தடாலென விலகி, வேகமாய் தாவி இறங்கி, கீழே கவுன்டரை நோக்கிச் சென்றது. கமலா கிருஷ்ணசாமியிடம் சென்று தன் குட்டைப் பாவாடையை சுட்டிக் காட்டி "அம்மா..." என்று ஏதோ சொன்னது. கபாலீஸ்வரனும், ராகவனும் மௌனமாய் மாடிப் படிகளைக் கடந்து இடது புறமாய் திரும்பி நடந்தனர். அரை இருளில் எவ்வளவு தூரம் நடந்து தேடியும், கால் கடுத்ததே ஒழிய அவன் அமர்ந்திருந்த நாற்காலி மேஜையை கண்டு பிடிக்க முடியவில்லை. பதற்றத்துடன் மூச்சிரைத்தவாறே அங்கும் இங்குமாய் தேடி அலைந்தான். தன் உடல் அழுகுவது போலும் நெடி அவனிலிருந்து எழுந்து, நொடிக்கு நொடி அடர்த்தியாகியது. தொண்டையிலிருந்து கசப்பாய் சுரந்த திரவம் உள்நாக்கில் பரவியது. முழங்காலிட்டு அமர்ந்து தரையை நோக்கி பார்வையை படர விட்டான். அங்கிருந்து எதேச்சையாய் பார்க்க அந்த மேஜையும் நாற்காலியும் வலது கோடியில் தெரிந்தன.

"இங்கு தான் அமர்ந்திருந்தேன்" அன்று சொல்ல வந்தவன் பிறகு ஏதோ காரணத்தால், மௌனமானான். சில அடிகள் மெலும் அங்கும் இங்கும் அலைந்து விட்டு, "காணலே அண்ணா" என்று திரும்பி சட்டென சொன்னான். பின் அவரைப் பாராமலேயே அந்த நாற்காலியில் போய் விழுந்தான். அவனது பதில் ராகவனிடம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தியதாய் தெரியவில்லை. அவர் அதே சலிப்புடன், ஒட்டி மெலிந்த கன்னத்தில் சுழித்து மண்டிய தாடியை சொறிந்தவாறே "என்னப்பா நீ வேறே" என்று ஒப்புக்கு சொல்லிவிட்டு, மேஜையில் எதிர் முனையில் நின்ற கண்ணாடி டம்ளரை எடுத்து இடப்புற மாடிப்படி வழியே இறங்கி மறைந்தார். கபாலீஸ்வரன் அவரையே வெறுமையுடன் பார்த்திருந்து விட்டு, லேசாய் பின்னங்கழுத்தை சொறிந்து விட்டான். கவனமாய் வலது கையை மேஜை மேல் வைத்தான். நெஞ்சுக்குள் சில்லென்று ஒரு உணர்வு பரவியது. அவன் எதிர்பார்ப்பிற்கு மாறாய் கையில் தூசி படிய வில்லை. மேஜையின் பரப்பில் சுண்டு விரலால் கோடிழுத்தான். பின் உள்ளங்கையால் தேய்த்துப் பார்த்தான். அந்த மேஜை தூசற்று சுத்தமாகவும், ஆனால் அதே நேரம் அடர்த்தியாய் தூசுப் படலம் போர்த்தியாற் போன்றதொரு தோற்றமும் தந்தது. தன் இடது புறமிருந்த புத்தக அலமாரியை நோக்கித் திரும்பினான். இரண்டாம் அடுக்கில் சாய்ந்து நின்றிருந்த புத்தகங்களின் இடையில், வாய் பிளந்தவாறு, எலும்புகூட்டின் முகம் மங்கலாய் தோன்றியது. திக்கென்றது. தலை திருகப்பட்டுக் கிடக்கும் கோழி போல் உடலை வெட்டித் திருப்பினான். மீண்டும் சில நொடிகள் கழித்து திரும்பிப் பார்த்தான். புத்தகங்கள் வரிசையாய், நேர்த்தியாய் அடுக்கப்பட்டிருந்தன. கபாலீஸ்வரன் குனிந்து, யோசிக்க முயன்றான். மேஜைப் பரப்பில் விமலா, ஸ்ரீஜா, மெர்லின், சரோஜா என்று பெயர்கள் வரிசையாய் பொறிக்கப்பட்டிருந்தன. கொஞ்சம் தள்ளி விமலா "நான் என்னையே நேசிக்கிறேன்' என்று எழுதி கையெழுத்திட்டிருந்தாள். குண்டு குண்டான கையெழுத்துக்கள். அவன் சரோஜாவை நீள்கூந்தலை உடைய ஒரு பெண்ணாய் கற்பனை செய்தான். விமலாவை பற்றி ஏதும் தோன்றவில்லை.

பின்னாலிருந்து இரண்டு நூல்கள் அலமாரியிருந்து தடதடவென விழுந்து தரையோடு மோதின. அவ்வாறு விழுந்த போது அவற்றின் பழைய தாள்களிலிருந்து ஈர காகிதம் மக்கும் வாசனை வந்ததாய் அவனுக்கு தோன்றியது. கோணலாய் கிடந்த அவற்றிலிருந்து பார்வையை மீட்டு அடுக்கில் அவை உருவாக்கிய இடைவெளி வழி பார்த்தான். நடுவகிடெடுத்து இருபுறமும் பின்னப்பட்ட கூந்தல் தெரிந்தது. அவன் எழுந்து சென்று மூக்கை நுழைத்து உற்றுப் பார்த்தான். மூக்கு, கண், காது எங்கும் மல்லிகை வாசம் நுழைந்து நெருடியது. இளம்பச்சை சுடிதாரில் மதியம் பார்த்த பச்சை சுடிதார் பெண் அலமாரியின் மறுபக்கம் திரும்பி நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு எதிர்ப்புற அலமாரியிலிருந்து வழவழப்பான, மெல்லிய புத்தகம் ஓன்றை உருவினாள். "இந்திய இலக்கிய வரலாறு" என்று சிவப்பு கொட்டை எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது. ஆசிரியர் பேராசியர் சாக்ளே. அவள் தன் வலப்புறம் நின்ற யாரையோ நோக்கி புன்னகைத்தாள். கபாலீஸ்வரன் அலமாரியின் மறுமுனைக்கு நகர்ந்து லேசாய் எட்டிப் பார்த்தான். அவளெதிரே அந்த குட்டை வாலிபன் தன் ஜீன்ஸ் பேண்டின் மேலாக முன் தொடைப் பகுதியில் உள்ளங்கைகளைத் தேய்த்தவாறே ஒருவித புன்னகையுடன் கண்களால் ஏதோ சமிக்ஞை செய்து கொண்டிருந்தான்.

அவள் கையிலிருந்த புத்தகத்தை அரைகுறையாய் அதன் இடத்தில் நுழைத்து விட்டு, மற்றொரு மெல்லிய புத்தகத்தை தூசு பறக்க வெளியே லாவகமாய் இழுத்தாள். அதன் பெயர் என்னவென்று கபாலீஸ்வரன் படிக்கவில்லை. அவளும் கவனித்திருக்க மாட்டாள். திடீரென்று அந்த புத்தகத்தை அந்த வாலிபனை நோக்கி சிரித்துக் கொண்டே வீசி எறிந்தாள். சற்று சாய்ந்து அந்த புத்தகத்தை தவிர்த்தவன், மிடுக்காய் நடந்து அவளை நெருங்கி வந்து தோளில் கையிட்டான். மெதுவாக எதையோ கூறி சமாதானப் படுத்தினான்.

அவர்களிருவரும் இடித்தும் இடிக்காதவாறான இடைவெளியில் ஒருவரை ஒருவர் பார்த்தவாறே படிக்கட்டில் இறங்கினர்.

கபாலீஸ்வரன் திரும்பி உட்கார்ந்து, மேஜையில் முழங்கை மடித்து தலை வைத்துப் படுத்து அன்று மாலையில் என்னென்ன செய்யலாம் என்று திட்டமிட்டான். மேஜையின் வாசம் 18 வருடங்களுக்கு முன் அவர்களது வீடு கட்டப்பட்ட ஞாபகத்தைக் கிளர்த்தியது.

ஆசாரி ஒரு மூலையில் அமர்ந்து தன் மயிரற்ற வழவழப்பான மார்புகள் குலுங்க, அறுக்க வேண்டிய பலகையின் ஒரு ஒரமாய் இடது காலை வைத்து அழுத்தியவாறு, அரத்தால் முடிவற்று அறுத்துக் கொண்டிருந்தார்.

கபாலீஸ்வரன் எழுந்து அமர்ந்தான். அந்த பெண் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். சத்தமெழுப்பாமல் எப்படி இவளால் நடக்க முடிகிறது?

இதயம் மீண்டும் தடதடவென எகிறியது. இவனைக் கண்டதும் அவள் கன்னமிரண்டில் குழி விழ சிரித்தாள். முன்னே அவள் நின்றிருந்த அலமாரி அருகே சென்று, மார்பின் மேல் கை வைத்தவாறு குனிந்து, கீழெ கிடந்த வெள்ளை கைக்குட்டையை எடுத்து தோளில் தொங்கிய கறுப்புப் தோல்பைக்குள் வைத்தாள். திரும்பி வந்தவள், கபாலீஸ்வரனிடம் "ஹாய்" என்றாள். அவள் கண்களின் பளிங்கு வெண்மையில் ஆழம் காண முடியாத அமைதி மின்னியது.
ஜீவனற்ற பிண அமைதி. கண்களை சிமிட்டி விட்டு, அவனைத் தொடர்ந்து பார்த்தாள். அந்நேரம் அவள் கண்கள் தரை நெளிய அசையும் தெளிந்த நீர் நிலை போல் ஆழம் காட்டின. அவள் தன் மூடிய இடது கையை திறந்து, ஒரு பாலப்பூவை புன்னகையுடன் நீட்டினாள். அவன் மறுக்க வலியுறுத்தினாள். அவனுக்கு மறுப்பதற்கோ வாங்குவதற்கோ எந்த உறுதியான காரணமும் படவில்லை.

அவள் மாடிப்படியில் இறங்கி செல்ல வெள்ளை சால்வை மாடிக் கைப்பிடியை பற்றித் தவழ்ந்து அவளைத் தொடர்ந்து மறைந்தது.

பூவை நுகர நுகர கனவற்ற உறக்கத்துக்குள் ஆழ்ந்தான். விழித்ததும் படிகம் போல் அவ்வறைக்குள் பகல் வெட்டி மின்னியது. சிறுக சிறுக நூலக வெளிச்சம் திரும்பியது.

பிளாஸ்க் தோளில் தொங்க வந்த ராகவன் வந்து பார்த்து போனார். காற்றில் ஒற்றை வலை இழையில் தொங்கி ஆடிக் கொண்டிருந்த சாம்பல் வண்ண சிலந்தியை புதிதாக கவனித்தான். வாயோரத்தில் வழிந்திருந்த எச்சிலை புன்னகைத்தவாறே துடைத்து விட்டான். சில்லென்ற இரும்புக் கைப்பிடியைப் பற்றியவாறே மாடிப் படி இறங்கி, வாசலைக் கடந்தான்.

செருப்பின் அடிப்பாகத்தை ஒரு கம்பியால் நோண்டியவாறு வெளியே தரையில் அமர்ந்திருந்த ராகவன், கபாலீஸ்வரனைக் கண்டதும், "என்னாப்பா..எதனாச்சும் கனவு கண்டு ஆளை பயமுறுத்தீடிறியே..." என்று வெற்றிலைக் கறை படிந்த பற்கள் தெரிய சிரித்தார். அவர் கண்களில் சிவப்பு ரேகைகள் வெளிப்பட்டு ஆழ்ந்தன. “தூங்கினேன், ஆனால் கனவே காணவில்லை அண்ணா”. அவர் விசித்திரமாக பார்த்து வாய் பிளந்தார்.


மறுநாள் காலையில் கபாலீஸ்வரன் முதலிரண்டு வகுப்புகளை தவிர்த்துவிட்டு, காண்டீனில், ஈக்கள் மத்தியில், பொழுது போகாமல் சாலை ஓரம் நின்றிருந்த பாலப்பூ மரத்தை வெறித்து பார்த்து அமர்ந்திருந்தான். லேசாய் மழைத் தூறலிட்டது. சிலநேரம் அவ்வழியே மாணவமாணவிகள் குழுவாகவும், ஜோடியாகவும் பேசிக் கொண்டு சென்றனர். அவர்களைத் தொடர்ந்து ராகவன் தலையில் பெரிய கட்டுடன், தோளில் பிளாஸ்குடன் சைக்கிளில் சரேலென்று வந்து, பிரேக் பிடித்து நின்றார்.

அவர் முகம் கறுத்து, சுருங்கியிருந்தது. தலைக்கட்டின் இடது ஓரம் கடுஞ்சிவப்பாய் பூத்திருந்தது. கபாலீஸ்வரன் குரலில் அக்கறை தொனிக்க "என்னாச்சுண்ணா" என்றான். பிளாஸ்கை உள்ளே கொண்டு வைத்தார். "என்னாப்பா சொல்றது. நீ போன பெறவு கமலாம்மா 'பாப்பா தலையில மாட்டுற கிளிப்பை மேலே மாடியில வச்சிட்டு வந்திருச்சு போலிருக்கு, போய் பாத்துட்டு வாப்பான்னாங்க'. நானும் மேலே போய் தேடினா நீ உட்காந்திருந்தியே அங்கே மேஜை மேலதான் கிளிப்பு இருந்துச்சு. மேஜை மேலே லேசா கையை வச்சவுடனேயே பின்னாலிருந்து அல்மாரி தடால்ணு மேலே வுழுந்துருச்சுப்பா, யாரோ தள்ளி வுட்டாப்பில. நான் நொடியில் சுதாரிச்சு டமால்னு அந்தப் பக்கம் தாவினதாலே நாலு தையலோட தப்பிச்சேன். இல்லாட்டி உசிரே போயிருக்கும்".

சைக்கிள் கைப்பிடியில் தொங்கிய மஞ்சள் பிளாஸ்கிலிருந்த ஆவி பறக்க சூடாய் காப்பி ஊற்றித் தந்தார். "நமக்கு இந்த ஆஸ்பத்திரி படுக்கையில படுத்தாலே ஒத்துக்காதும்மா...அதான் மவன் மருமவ கிட்ட கூட சொல்லாம காத்தாலயே இங்க நேரா வந்துட்டேன்". அவர் வாய் லேசாய் திறந்திருக்க, இடக்கையால் தலையை லேசாய் பற்றியவாறு மந்தாரமான வானத்தை நோக்கி அசையாமல் இருந்தார்.

ஈரக்காற்று நெஞ்சை அறைந்தது. அது மெல்ல காது மடலைத் தீண்டி மீட்டியதில் மென்மயிர்கள் நெட்டுயிர்த்தன. சாரல் முடிந்து வெயில் மெல்ல திரும்பிக் கொண்டிருந்தது. சேலை விளம்பரப் பெண் போல் வெயில் சிற்சில இடங்களில் மட்டும் படர்ந்து துவண்டது. காகங்கள் ஒன்றிரண்டு திரும்பி சிறகுகளை வெடவெடத்து இயல்புக்கு திரும்பின. மண் மணத்துடன் மென்சூட்டையும் சுகமாக கிளப்பியது. இது நாள்வரை பார்வையில் படாத தும்பிகள் தோன்றின. அவை கூட்டமாக இறக்கைகள் அடித்து, ஒன்றோடொன்று மோதியவாறு, சிலசமயம் ஒன்றையொன்று சுமந்தவாறு பறந்தன. கடந்த போது அவை கூட்டமாய் அவனை சூழ்ந்து கொண்டன.
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates