Saturday, 4 December 2010
பிறந்த நாளின் போது
நேற்று பிறந்தநாளின் போது எப்படி முப்ப்து வயது வரை வாழ்ந்தோம் என்று வியப்பு ஏற்பட்டது.
கிராமத்து குழந்தைகளுக்கு திருவிழா போல் தான் எனக்கும் பிறந்த நாள் இருந்து வந்துள்ளது. பருப்பு அப்பளம் கடலை பாயச மதிய உணவுக்காக ஏற்பட்ட நாள். அந்நாளில் வீட்டில் இருந்து பூதத்தான் கோவிலுக்கு அரிசிப் பாயசம் படையல் வைத்து பெரிய போணியில் பள்ளிக் கூட குழந்தைகளுக்கு விளம்புவார்கள். அப்பாயசம் வேறு ஒரு சுவை கொண்டிருக்கும். எத்தனையோ குழந்தைகள் குடித்த பாயச பாத்திரத்தின் ஒரு கரண்டி தரும் ஆழ்நிறைவு தனியானது. இளமையின் பிறந்தநாள் காரணமற்ற உற்சாகம், புத்துணர்ச்சி, தன்னம்பிக்கையின் கூட்டுசேர்க்கை. கல்லூரி வரை பிறந்த நாள் காலத்தின் நினைவூட்டலே அல்ல. அது காலத்தை நினைக்காத காலம். மாநகரத்தில் பிறந்த நாட்கள் வாழ்த்துக்களின், பரிசுகளின், உணவக மதுக்கூட பங்கேற்புகளின் நாள். கிராமத்தில் என்னை யாரும் வாழ்த்தியதாக, பரிசு தந்ததாக நினைவில்லை. என் மிகச் சிறந்த நண்பர்களின் பிறந்த நாளைக் கூட நான் நினைவு வைத்தது இல்லை. அவர்களுமே.
மேற்சொன்ன பண்பாட்டு மாறுபாடு காரணமாக மாமியார், நண்பர்கள், அறிமுகமானவர்கள், கூட பணி செய்பவர்கள் யாருக்கும் சொல்லவில்லை. அப்படி பிறந்த நாளை அறிவிக்கவே கூச்சமாக இருந்தது. அதற்கு வேறொரு காரணம் உள்ளது.
கடந்த சில மாதங்களாக ஒரு கசப்பான மாத்திரையைப் போல நாட்களை விழுங்கிக் கொண்டிருக்கிறேன். ஒரு இரவு கூட நன்றாக தூங்கவில்லை. தினமும் ஒரு எரிமலை வாயின் விளிம்பில் நின்று கொண்டிருப்பதான உணர்வு. இரவு தூங்க முற்படும் போது எப்படி இவ்வேளை வரை உயிரோடு இருந்தோம் என்ற எண்ணம் ஏற்படுகிறது. பூனையின் கால்நகங்கள் உள்ளடங்கியவை. திடீரென்று பூனையால் தன் நகங்களை வெளிப்படுத்த முடியாமல் போனால் என்னாகும்? இவ்வளவு சலிப்பான அசட்டுத்தனமான வாழ்வை எப்படி அர்த்தமானதாக இதுவரை ஆக்கினோம் என்று வியப்பேற்படுகிறது. வாழ்வில் ஒளி காண்பது நிஜமாகவே ஒரு திறன். அத்திறனை இழப்பது ஒரு புலன் சட்டென்று மூடிக் கொள்வது போல். அப்போது மொழியில் இருந்து கிடைக்கும் பிரதிபலிக்கப்பட்ட வெளிச்சத்தை நம்பி இருக்க வேண்டியதாகிறது. இந்த மாதங்களில் கசப்பு கலந்த வியப்பு மட்டுமே மேலோங்கிய உணர்வு. ஒரு நிறக்குருடனின் முன் நிறங்களால் பளபளக்கும் உலகம்.
ஆக ஒரு பெரும் கடனாளியான சூதாடியாக உணர்ந்தேன். என் கைகளை யார் பற்றி குலுக்கினாலும் சற்று நெகிழ்ச்சியாகவும் நிறைய கூச்சமாகவும் இருந்தது. கைகளை ஆழமாக சட்டைப்பைக்குள் புதைத்துக் கொண்டேன். நண்பர்கள் மற்றும் பிற உறவுகள் பாலான அவநம்பிக்கையால் அல்ல. இணையம் மூலம் அறிந்து வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி.
Share This
Labels:
தனிப்பட்ட பகிர்வுகள்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment