கல்கியின் “சுண்டுவின் சந்நியாசம்” என்ற சிறுகதை சற்று மிகையான ஒரு வேடிக்கை கதை. கல்கியின் நகைச்சுவை அ.மித்திரன் (அல்லது சுஜாதா) போல் அல்லாது சற்று அட்டகாசமான நகைச்சுவை. மேற்சொன்ன மிகை காரணமாகவே கலைத்தன்மை குறைவாக் இருந்தாலும் இது ஒருவிதத்தில் ஒரு முக்கியமான கதை. எப்படி என்பதை பார்க்கப் போகிறோம்.
சுப்பிரமணியன் என்பவன் தன் பெயரை ‘சுண்டு’ என்று சுருக்கிக் கொண்டிருக்கிறான். இது ஒரு கவனிப்புக்குரிய தகவல். அவன் வாழ்க்கையை இப்படி சின்ன சின்ன சாகச கனவுகளாக சுருக்கும் மனப்போக்கு கொண்டவன். அவனுக்கென்ற பல உயரிய லட்சியங்கள் உள்ளன. என்ன நடைமுறை படுத்துமுன்னே அவை முடிந்து போகின்றன!. அந்த காலத்தய சாத்தியங்களுக்கு ஏற்றபடியான லட்சியங்கள். அவை பணம் சம்பாதிப்பது மற்றும் உலகை உய்விப்பது என்று இருவகையானது. ஐ.சி.எஸ் பரிட்சையில் அவன் ஒரு மார்க் வித்தியாசத்தில் தோற்றுப் போனதால் உயர்வேலைக்கு போக முடியாதிருப்பதாக கதைசொல்லியான கிருஷ்ணசாமியிடம் அல்லது நாராயணசாமியிடம் சலித்துக் கொள்கிறான்.(இந்த இரட்டைப்பெயர் கதைக்கு பின்னால் வருவோம்) உலகம் பணக்காரர்களின் பேச்சையே நம்புகிறது என்று புகார் சொல்கிறான். அடுத்து கதைசொல்லி சுண்டுவை சந்திக்கும் போது அவன் மேலும் ஒரு புகார் கூறுகிறான். பணக்காரர்களால் உலகம் சீரழிந்து வருகிறது. அதனால் சமூகத்தை ”உத்தாரணம்” செய்ய எழுத்தாளனாகப் போவதாய் சூளுரைக்கிறான். ஏன் அதற்கு எழுத்தாளனாக வேண்டும்? அதற்கு சுண்டுவின் பதில் சுவாரஸ்யமானது: “ஒரு விஷயம் அச்சில் வந்து விட்டதானால் முட்டாள் ஜனங்கள் அது எவ்வளவு அபத்தமானாலும் அப்படியே முழுங்கி விடுகிறார்கள்! இந்த உலகத்தை முன்னுக்கு கொண்டு வருவதற்கு எழுத்தாளனாவது தான் ஒரே வழி”. சுண்டுவின் இந்த அசட்டையை கவனியுங்கள். அடுத்து சுண்டு திரும்பி வந்து எழுத்தாளனை பத்திரிகை ஆசிரியர்கள் அங்கீகரிக்கவில்லை என்ற ஒரு மடிப்பு கலையாத மரபான புகாரை சொல்கிறான்: “தெருக்கூட்டலாம்; ஹோட்டல் வைக்கலாம்; மந்திரி வேலை வேண்டுமானாலும் பார்க்கலாம்; ஆனால் எழுத்தாளனாகவே ஆகக் கூடாது” என்கிறான். அடுத்த படி என்ன? அதுவும் நம் மரபில் உள்ளது தான். பத்திரிகை ஆரம்பிப்பது. அதுவும் சுண்டுவுக்கு சீக்கிரமே சலிப்பாகி விடுகிறது. உலகத்தை ஷேமிப்பதில் இருந்து அவன் சற்று லௌகீக அக்கறைக்கு வருகிறான். கொஞ்ச நாள் பங்குசந்தை சந்தை ஜுரத்தில் இருக்கிறான். பத்தே நாளில் ஒரேயடியாய் லட்சக்கணக்காய் சம்பாதிப்பதை பற்றி விதந்தோம்புகிறான். மைசூர் நிலக்கரியில் ஆயிரம் ரூபாய்க்கோ, திருவாங்கூர் கடலை பிண்ணாக்கில் ரெண்டாயிரம் ரூபாய்க்கு பங்கு வாங்கிட சாமியை வற்புறுத்துகிறான். அடுத்து சுண்டு பள்ளிக்கூடம் கட்டி சட்டமன்றத்தினருக்கு கல்வி அளித்து சமூக சேவை செய்து அத்தோடு ”கல்விதந்தையாகி” கோடீவரனும் ஆகிடலாம் என்று திட்டமிட்டு அதைப் பற்றியும் சாமியிடம் ஆவேசமாய் பேசுகிறான். கடைசியில் தான் சுண்டுவுக்கு (நமது மூத்த தீவிர இலக்கியவாதிகளைப் போல்) தாமதமாக அது புரிய வருகிறது. தமிழர்களை மேம்படுத்த வேண்டுமானால் எழுத்தாளனாகவோ, பத்திரிகையாளனாகவோ, பங்குசந்தை நிபுணனனாகவோ, கல்வித்தந்தையாகவோ ஆனால் பயனில்லை. தமிழர்களுக்கு புரியும் ஒரே மொழி சினிமா. “சினிமாவைக் கொண்டு நமது யுனிவர்ஸிட்டி வைஸ் சான்ஸலர்களையும் பாட்புத்தக கமிட்டி அங்கத்தினர்களையும் கூட புதுப்பித்து விடலாம்”. ஆனால் சினிமா மோகம் கொண்ட புத்திஜீவிகளையும் வெளியாட்களையும் போல் அவனுக்கும் ஒரே கவலை: “சினிமா உலகம் கெட்டுக் கிடக்கிறது”. அதனால் சினிமாவையும் சீர்படுத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு சுண்டு கோலிவுட்டில் நுழைகிறான். சினிமாவின் அரிச்சுவடி தெரியாத போதிலும் பத்துலட்சம் பணம் முடக்கி, “அப்புறம் என்ன என்று கேட்காத” ஒரு தயாரிப்பாளர் கிடைத்தால் அவன் சினிமா உலகையே தலைகீழாய் திருப்பிட துடிக்கிறான். காலக் கொடுமையால் சுண்டு ஒரு இயக்குநரின் கீழ் உதவியாளனாகவே தன் திரைவாழ்வை ஆரம்பிக்கிறான். ஒரு திரைக்கதை எழுதி லீலா மனோகரி என்ற லுல்லுவை நாயகியை தேர்வு செய்து தயாரிப்பாளரையும் பிடித்து விடுகிறான். “காதலி, கரிய மேகங்களும் கண்டு வெட்கும்படியான கன்னங்களிலே குமிழ் விட்டுக் கொப்புளிக்கும் அழகு வெள்ளத்தின் ஆழத்திலே ஆழத்திலே” என்பதான வசனங்களும் அவன் படத்தில் உண்டு. ஆனால அங்கும் சுண்டுவின் கவனம் சிறிது சிதறுகிறது. கதையை விட லுல்லுவைப் பற்றி அதிகம் யோசிக்கிறான்; காதலிக்கிறான்; அவளை எப்படியும் “உலகம் மெட்சும் சினிமா நட்சத்திரமாக்கி விட வேண்டும்” என்று அவன் கங்கணம் கட்டிய நிலையில் லுல்லு படத்தின் தயாரிப்பாளரை காதலித்து மணந்தும் விடுகிறாள். தயாரிப்பாளர் புதுநாயகியைப் போட்டு படமெடுக்க தயார்தான். ஆனால் சுண்டு தான் வெறுத்தொதுக்கி சந்நியாசம் போவதாய் இறுதி முடிவெடுக்கிறான். இதிலும் அவன் உறுதியாய் இருக்கப் போவதில்லை; தற்காலிக மனமாற்றங்கள் இருக்கும் என்று சாமியும் நாமும் நினைக்கும் போது சுண்டு நிஜமாகவே சாமியாராகித் தோன்றுகிறான். என்ன படப்பிடிப்பு தளத்தில் சினிமா சாமியார் வேடத்தில். இந்த கதையில் சொல்லப்படும் மனநிலை 60 வருடங்களுக்கு மேலாகி விட்ட பின் இன்று நனவாகியிருக்கிறது என்பதுதான் நமக்கு முதலில் வியப்பேற்படுத்துவது.
சுண்டுவின் பிரச்சனை முடிவெடுப்பது அதில் நிலைத்து நிற்பது என்பது மட்டுமல்ல. அது வெறும் மேலோட்டமான நிலையே. முதலில் அவனுக்கு எந்த துறையிலும் ஆழ்ந்த ஈடுபாடோ நம்பிக்கையோ ஏற்படுவதில்லை. அனைத்திலும் அவன் ஒரு பரிகாச மனநிலையில் தான் ஈடுபடுகிறான். எதுவுமே பயன் தராது என்ற ஒரு உள்ளார்ந்த எண்ணம் அவனுக்கு உள்ளது. அடுத்து எதிலும் அவனுக்கு ஆர்வத்தை தக்க வைக்க முடிவதில்லை. ஆரம்ப நிலையில் தங்கின பின் உடனே வெளியேறுகிறான். இதற்கு காரணம் அவனுக்கு உண்மையை அறிந்து செயல்படுவதை விடவும் தற்காலிக உச்சபட்ச கிளர்ச்சி தான் தேவையாக இருக்கிறது.என்பதே ஒவ்வொன்றாக அவன் கிளை தாவுவது இதற்குத் தான். முதலில் இந்த அவநம்பிக்கையும் ஆர்வமிழப்பும் கல்கியின் கால மனிதர்களுக்கு இருந்ததா என்று நமக்கு வியப்பேற்படுகிறது. சுதந்திரத்துக்குப் பின் லட்சியவாதம் ஓங்கியிருந்த காலம் அல்லவா அது. இன்று நிலைமை வேறு என்பது நமக்குத் தெரியும். வேலை, கலைத்துறை, சமூகம், உறவுகள் என ஒவ்வொன்றிலும் நாம் இன்று சக்கர கால்களுடன் தான் விரைகிறோம். நாம் அனைத்திலும் இருக்கிறோம்; ஆனால் அனைத்திலும் இல்லை. நமக்கு தொடர்புவலைகளில் ஆயிரக்கணக்கான நண்பர்கள்; ஆனால் அந்தரங்கமாய் பேச ஒரு நண்பர் கூட இல்லை.
சுண்டுவைப் போல் நாம் அனைத்தையும் சுருக்கி கடந்து விடவே பிரயத்தனிக்கிறோம். The Depreciated Legacy of Cervantes என்ற கட்டுரையில் மிலன் குந்தெரா இன்றைய அறிவு மற்றும் கலாச்சாரத் துறைகள் விரிவும் ஆழமும் இழந்து விட்டன என்கிறார். தொழில்நுட்ப வளர்ச்சியால் பரந்து பட்டதான உலகை நம்மால் எளிதில் விரைவில் அணுக முடியும் என்பதான தோற்றம் இருந்தாலும் மனதளவில் நாம் சுருங்கியே வருகிறோம். மீடியாவும் அரசியலும் இன்னபிற அதிகார நிறுவனவாதிகளும் பலகுரல்களில் ஒரே கருத்தியலைத் தான் பேசுகின்றன என்கிறார் குந்தெரா. இரண்டு உலகப் போரிலும் அதற்கு பின் நடந்து வரும் பல்வேறு போர்களிலும் அதிகாரம் பொருளாதாரம் போன்றவை வெளிப்படையான நோக்கங்கள் மட்டுமே. நிஜத்தில் அவை காரணமே அல்ல. போர்களை ஒரு வெளி ஊக்கம் உள்ளார்ந்து செலுத்துகிறது. அதாவது இன்றைய அதிகாரப் போர்கள் அதிகாரம் கடந்த ஒரு நோக்கமற்ற நோக்கத்திற்காய் நடத்தப்படுகின்றன என்கிறார் அவர். தனிநபர் மட்டத்திலும் இன்று அத்தகைய நோக்கமற்ற நோக்கம் காணப்படுகிறது. நுகர்வோராகவும், அதிகாரவிரும்பிகளாகவும், வன்முறையாளர்களாகவும் நாம் புரியாத ஒரு சக்தியால் செலுத்தப்படுபதை பார்க்க முடியும். சுண்டுவின் அலைகழிப்பு இத்தகைய தனிமனித மட்டத்தில் தான் நடைபெறுகிறது.
இன்று, கிளர்ச்சி தராத எதுவும் நிஜமில்லை/பயனில்லை என்றோ அல்லது நிஜமாக இருக்க அருகதை இல்லை என்றோ நம்புகிறோம். ஆக துறவியாவது என்றாலும் சினிமாவில் காஷாயம் அணிவது தான் வசதி, அப்போது தான் சீக்கிரம் அப்பாத்திரத்தில் இருந்து வெளியேறி மற்றொன்றுக்குள் நுழைய முடியும். சுண்டு நம் ஒவ்வொருவரையும் போல் பாசி படியாதிருக்க சாமர்த்தியமாய் உருண்டு கொண்டே இருக்கும் ஒரு உருளைக்கல். சமகாலத்தின் பிரதிநிதி. அவனுக்கும் கதைசொல்லிக்குமான உறவு கூட கவனிக்கத்தக்கது; சுவாரஸ்யமானது.
பள்ளி ஆசிரியர்களின் சொற்பொழிவு ஒன்றின் போது கதைசொல்லியை சுண்டு தனக்கு பரிச்சயமானவன் என்று நினைத்து முதுகில் அறைந்து “என்ன தெரியவில்லையா” என்று புரியவைக்கிறான். கதைசொல்லி தான் வேறாள் என்று சொல்லும் போதும் அவன் பொருட்படுத்துவதில்லை. அவனுக்கு யாராக இருந்தாலும் சரிதான். அவன் கிருஷ்ணசாமி என்று அழைக்க கதைசொல்லி தன் பெயர் அதுவல்ல என்கிறான். மாட்டிக் கொள்ளாமல் இருக்க தன் பெயர் நாராயணசாமி என்று ஒரு பொய்ப் பெயரை சொல்கிறான். உடனே சுண்டு “ஏதோ உன் பெயர் கிருஷ்ணசாமி என்று சொல்லி டிமிக்கி கொடுக்க பார்க்கிறாயோ என்று சோதித்தேன்” என்கிறான். இப்படி சுண்டுவுக்கே தனிநபர் அடையாளமே முக்கியம் அல்ல. கடைசி வரை அவன் இப்படி தவறான பெயரிலேயே அழைத்து தொடர்பு கொள்கிறான். ஒவ்வொரு முறை வீம்பளந்து விட்டு கதைசொல்லியிடம் இருந்து ஐந்து பத்து கடன் பெற்றும் செல்கிறான். இருவரும் இப்படி எதிர்பாராது பலமுறை சந்தித்து நண்பர்களாகி விடுகிறார்கள். ஆனால் அவர்கள் தங்களைப் பற்றின தனிப்பட்ட விவரங்களை பேசிக் கொள்வதும் இல்லை. கல்கி கதைசொல்லியின் நிஜமான பெயரை தருவதில்லை என்பதும் சுப்பிரமணியத்தை சுண்டு என்றே கதைமுழுக்க அழைப்பதும் இந்த உறுதிப்பாடற்ற வேடிக்கையான உறவை சுட்டத் தான் எனலாம். ஒருவிதத்தில் இது இன்றைய வாசக-எழுத்தாள உறவையும் பிரதிபலிக்கிறது. இன்றைய வாசகன் தீவிரனா, ஜனரஞ்சகனா, கலை இலக்கிய பரிச்சயமுள்ளவனா என்பதும் எழுத்தாளனுக்கு புதிரே. அவன் நாராயணசாமியாய் இருந்தாலென்ன கிருஷ்ணசாமியாய் இருந்தால் என்ன!
நிற்கும் இடம் தவிர்த்து பிற இடங்கள் எங்கும் நீர் நிலைகள்.ஒடிச்சென்றால் கானல் நீர்.மறுபடி ஒட்டம்.நம் தலைமுறைக்கு எல்லாம் தெரியும்.ஆனால் ஒன்றும் தெரியாது.
ReplyDeleteஎனக்கு எப்போதும் ஒரு ஆச்சர்யம்.நம் முதலீட்டிய சமூகத்தால் மனிதர்களை இப்படி மாற்ற முடிந்திருக்கிறது.இதற்கு பின்னால் ஒரு லட்சியவாத தலைமுறை. இதை ஏன் நம் அறிவுஜீவிகள் முன் உணர வில்லை.
நல்ல கதை, ஆழமான பாத்திர அமைப்பு. அறிமுகத்திற்கு நன்றி.
ReplyDeleteகூகிள் ரீடர் வாசகி, ஆனா, கல்கியின் இந்த கதை என் சொந்தக் கேள்விகளை இன்னும் கிளப்பிடுச்சி, அதைச் சொல்ல, நன்றி சொல்ல வந்தேன்.