மற்றொரு வருடம் முடிகிறது. இப்பிறந்த நாள் காலம் எனக்களித்த ஒரு பரிசு. போன பிறந்த நாளின் போது மிக மனச்சோர்வுடன் இருந்தேன். அப்போதில் இருந்து வாழ்க்கை ஒன்றும் ரொம்ப மாறி விடவில்லை. ஆனால் சின்ன சின்ன சன்மானங்களின் மதிப்பு தெரிகிறது. எழுதியதற்கு முதன்முறை மூவாயிரம் பணம் கிடைத்தது. பணம் கிடைப்பது பெரிதில்லை. ஆனாலும் எழுதி சம்பாதித்தது ஒரு விநோதமான உணர்வை அளித்தது.
வகுப்பில் சாமர்த்தியமாக பாடம் எடுப்பதே முன்பு வேலை நோக்கமாக இருந்தது. இப்போது என்னைப் பற்றி கவலைப்படுவதில்லை. மாணவர்களுடன் தெளிவாகவும் சுதந்திரமாகவும் உரையாடுவதே முக்கியமாக கொள்கிறேன். நேற்று எப்படியோ பிறந்தநாளை தெரிந்து கொண்டு சில மாணவர்கள் வாழ்த்திய போது அடைந்த நெகிழ்ச்சி எப்போதும் அடைந்ததில்லை. எழுத்தளவுக்கு என் ஆசிரிய வேலையையும் ஆவேசமாய் நேசிக்கிறேன். நேற்று ராஜாஜியின் ஒரு கட்டுரையை அறிமுகம் செய்யும் போது அவர் குலக்கல்வி முறையை நிலுவையில் கொண்டு வர முயன்று தோல்வியுற்று அதனால் ராஜினாமா செய்ததை விளக்கினேன். இந்திய வரலாற்றின் சாதி துவேசத்தை விவரித்த போது பலரது முகங்கள் உக்கிரமாக இருந்தன. என்னை மிகவும் திருப்தியுற வைத்த வகுப்பாக அது இருந்தது. வகுப்புகள் எழுத்தை விட மிக இயல்பான ஒரு பகிர்வு ஆக உள்ளன
இவ்வருடம் என் முதல் நாவலை எழுதி முடித்தேன். அத்திறன் எனக்கு உள்ளது என்று உணர்ந்துள்ளதே மிகுந்த திருப்தி அளிக்கிறது. ஓருமுறை மனுஷ்யபுத்திரனிடம் பேசிக் கொண்டிருக்கும் போது “ஒரு நாவல் எழுதலாமே” என்றார். “நான் அவ்வளவு பெரிய ஆளெல்லாம் கிடையாது சார்” என்றேன். அதற்கு “ஏன் உங்களால் முடியாது?” என்று கேட்டார். அந்த கேள்வியை இத்தருணத்தில் நினைத்துப் பார்த்துக் கொள்கிறேன்.
இந்த பிறந்த நாளிலும் சற்று சலிப்பாக சோர்வாகத் தான் உள்ளது. ஆனாலும் ஒரு உள்ளார்ந்த திருப்தி இத்தருணத்தை மகத்துவமானதாக ஆக்குகிறது
வாழ்த்துக்கள். நாவலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteநன்றி செல்வேந்திரன்
ReplyDeleteWhat type of novel?
ReplyDeleteஎதார்த்த நாவல்.
ReplyDelete