செல்வராகவனின் படங்கள் இறந்த கால துயரில் இருந்து மீள முடியாது தவிக்கும் தனிமனிதர்களின் தனிமை, வன்மம், சீரழிவு, இறுதியில் மீட்பு என்று முழுக்க முழுக்க உள்குவிந்தவை. கடந்த சில வருடங்களில் தமிழ்-உலக சினிமா என்ற பெயரில் சேப்பியார் டோனில் ஏகப்பட்ட தனிமனித சீரழிவு சினிமாக்கள் இங்கு எடுக்கப்பட்ட போதும் செல்வராகவனின் படங்கள் ஒரு முக்கிய காரணத்துக்காக காலாவதியாகவில்லை. அதற்கு ஒரு காரணம் அவரது மையபாத்திரங்கள் அனுபவிக்கும் தத்துவார்த்த தனிமை. காலத்தின் முன் தன்னை வெறும் பகடைக்காயாக உணரும் முத்துவும் கொக்கிகுமாரும் தமிழ் சினிமாவின் தளத்தை நிச்சயம் விரிவடைய வைத்தனர். “மயக்கம் என்ன” படத்தில் செல்வராகவன் இப்படியான தனிமனித அகப்போராட்டத்தை drama என சொல்லப்படும் வகை சினிமாவுக்கு நகர்த்தி பாத்திருக்கிறார்.
தமிழில் டிராமா மிக வெற்றிகரமான ஒரு வடிவம். ஆனால் குரசாவோவில் இருந்து சத்யஜித்ரே வரைக்குமான மாற்றுப்படங்கள் மற்றும் டாக்சி டிரைவர், காட்பாதர் போன்ற ஹாலிவுட் படங்கள் ஆகியவையில் நாம் காணும் டிராமாவுக்கும் தமிழில் பாலசந்தர், மணிரத்னம், கவுதம் மேனன் ஆகியோர் பிரபலப்படுத்திய டிராமாவுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உள்ளது. நம்மூரில் டிராமா முழுக்க அதன் உணர்ச்சிகரமான கதாபாத்திர மோதல்களில் மையம் கொண்டது. காட்சிபூர்வமான நுணுக்கங்கள் குறைவாக இருக்கும். காட்சிக்கு காட்சி திரை பாத்திரங்களால் நிரம்பி இருக்கும். முகங்களை விட நீட்டப்படும், சைகை காட்டும், கட்டிப்பிடிக்கும் கரங்களும், குரல் ஏற்ற இறக்கங்களுமே அதிகம் நடிக்கும். செல்வராகவனின் டிராமா முயற்சி ரசிகர்களை பல இடங்களில் அலுப்படைய வைக்கிறது. இருந்தும் இது நாம் பார்த்து விவாதிக்க வேண்டிய படமாகவே உள்ளது. அதற்கு இரு காரணங்கள்.
பொதுவாக டிராமா வகையறா படங்கள் தனிமனிதனின் அகப்போராட்டத்தை பற்றியவை. காட்சிகள் வழியாக அல்லாமல் கதாபாத்திர மோதல்கள், சந்திப்புகள், பரஸ்பர அறிதல்கள் வழியாக உள்போராட்டம் சித்திரிக்கப்படும். படம் முழுக்க ஏதாவது ஒரு தனிமனித சீரழிவு தொடர்ந்து வரும். பல நல்ல டிராமாக்களில் சீரழிவுக்கு வெளிப்படையான காரணமோ எளிய தீர்வுகளோ இருக்காது. “செவன் சாமுராயில்” வீரர்களின் சமாதிகள் வரும் காட்சியை உதாரணம் காட்டலாம். விவசாயிகளை கொள்ளைக்காரர்களிடம் இருந்து காக்க போராடி மூவர் தவிர மீதி வீரர்கள் மாண்டு விட்டனர். ஆனால் விவசாயிகளுக்கு தமக்காக உயிரை கொடுத்த சாமுராய்கள் மீது வெறுப்பும் அவநம்பிக்கையும் அப்போதும் அப்போதும் கொண்டுள்ளனர். இந்நிலைமையில் வயதான தளபதி கம்பெய் அமைதியாக, ஏதோ இது வழக்கம் தான் என்பது போல், சொல்கிறார்: “நாம் மீண்டும் தோற்கடிக்கட்டோம்”. உண்மையில் மனித சீரழிவுக்கு எந்த விளக்கங்களும் இதுவரையில் இல்லை.
“மயக்கம் என்ன” படத்தில் ஒரு கலைஞனின் ஒழுக்க சீரழிவும் தன்னழிப்பு முனைப்பும் காட்டப்படுகிறது. கார்த்திக் எனும் புகைப்பட கலைஞன் தனது படம் திருடப்பட்ட ஏமாற்றம் மற்றும் பல்வேறு தொழில்முறை அவமானங்கள் காரணமாகவும் வாழ்வில் அவநம்பிக்கை அடைகிறான். ஒரு கட்டத்தில் விபத்தில் மனம் பேதலிக்கிறான். வன்மம் மிக்கவனாக, மூர்க்கமானவனாக மாறும் அவனுக்கு தன் காதல் மனைவியை நேசிக்கவோ நண்பர்களை பழையபடி ஏற்றுக் கொள்ளவோ முடிவதில்லை. தான் பயின்ற புகைப்பட கலை மீது கடுமையான வெறுப்பு கொள்கிறான். இதுவரை நாம் பார்த்த குடிகார போக்கிரி நாயகர்களுக்கும் கார்த்திக்குமான வித்தியாசம் அவன் காதல் தோல்வியால் பைத்தியம் ஆகவில்லை என்பது.
யோசித்து பாருங்கள், எத்தனை எத்தனை சினிமாக்கள் இப்படி ஒரு அபத்த கற்பனையை நம்பி உருவாகி உள்ளன. அன்றாட வாழ்வில் எந்த ஆணும் காதல் தோல்வியால் மனம் சிதறவோ சீரழிவதோ இல்லை. ஆணின் ஆதார தேவை தன்னை ஒரு திறன் சார்ந்து முன்னிறுத்துவது. தொழில்முறையில் தோல்வியடையும் ஆண்கள் தாம் அதிகமாக உருக்குலைகிறார்கள். அரசியல், வணிகம், கலை என பல துறைகளில் இதற்கான உதாரணங்களை நடைமுறை வாழ்வில் காணலாம். இந்த உண்மையை அவதானித்ததற்காக இப்படத்தை முதலில் பாராட்டலாம்.
இந்த வேளையில் செல்வராகவன் செய்யும் ஒரு தவறு கார்த்திக்கின் சீரழிவுக்கு தீர்வாக அவனது மனைவியின் தளராத ஆதரவையின் காதலையும் முன்வைப்பது. காதலோ பேரன்போ அல்ல மனிதனை காப்பாற்றுவது. எதேச்சையாக ஒரு நொடியின் தெளிவில் நாம் நம்மை கண்டுணரும் போது தான் சீரழிவில் இருந்து மீள முடியும். வெளியில் இருந்து யாரும் உதவ முடியாது. கார்த்திக் கர்பிணியான தன் மனைவியை தாக்கி கருக்கலைய அவளது கர்ப்ப உதிரத்தை வெறித்து பார்த்து அமர்ந்திருக்கும் அற்புதமான காட்சி இப்படியான ஒரு தன்னை உணரும் தருணத்தை தான் காட்டுகிறது. தன்னைத் தானே ஒரு மனிதன் அழிக்கும் போது அவன் தன்னை சுற்றி உள்ளோரையும் சேர்த்து அழிக்கிறான். ஒரு குழந்தையின் உயிரை போன்ற வாழ்வின் அற்புதங்களை அழிக்கிறான். கார்த்திக் இதை உணர்ந்த பின் மெல்ல மெல்ல நடைமுறை வாழ்வின் வழமைக்கு மீள்கிறான். அதுவரை கீழானது என்று கருதின புகைப்பட வேலைகள் பலவற்றுக்கும் செல்கிறான். அலுவலக அவமதிப்புகளை மௌனமாக ஏற்கிறான். அவனது அகங்காரம் கரைய கரைய வாழ்வில் தெளிவு பிறக்கிறது. வெளிச்சம் தோன்றுகிறது. அதிர்ஷ்டமும் மெல்ல திரும்புகிறது.
ஆனால் செல்வராகவன் இங்கு ஒரு தவறு செய்கிறார். இந்த நுட்பமான தருணங்களை நாடகீயமான உணர்ச்சிமேலிடல்கள் மூலம் மூழ்கடிக்கிறார். தேவதைக் கதை முடிவும் தருகிறார்: கார்த்திக் உலகப் புகழ் புகைப்பட கலைஞனாகி சர்வதேச விருது வாங்கி அங்கு தன் மனைவியை கண்ணீர் மல்க நன்றி பாராட்டி அதை நேரலையாக டீ.வியில் கண்ட மனைவியும் கண்ணீர் மல்க திரையரங்கில் மெகாதொடர் விசிறிகளுக்கே நெஞ்சு வலிக்க ஆரம்பிக்கிறது. படம் இப்படி போலி கண்ணீரில் நனைந்து முடிந்ததும் மற்றொரு நுட்பமான காட்சி கடைசி இணைப்பாய் வருகிறது. கார்த்திக் விருது விழாவின் போது தன்னை ஆரம்பத்தில் அவமானப்படுத்தி புகைப்படத்தை வேறு திருடி புகழ் சம்பாதித்த மானசீக மாஜி குரு மாதேஷ் கிருஷ்ணசாமியை பார்க்கிறான். அவர் இவனை தவிர்க்க பார்க்கிறார். விடாமல் அருகில் போய் அவரிடம் பக்குவமாய் நன்றி சொல்கிறான். ஏனென்றால் புகைப்பட கலையை கற்பிக்க மறுத்தாலும் இந்த குருநாதர் ஒரு முக்கிய பாடத்தை எதேச்சையாக அவன் படிக்க உதவுகிறார். பெரும் வீழ்ச்சிகள், குற்றங்கள், சீரழிவுகளுக்கு பிறகும் ஒரு மனிதனுக்கு முன் மீட்பின் சிறு பாதை திறந்தே உள்ளது, அதை அறிய அவன் கலைஞனாக உயர வேண்டியதில்லை, அன்றாட வாழ்வின் எளிமையை கொண்டாட ஏற்க தெரிந்தால் போதும் என்பதே அது. மாதேஷ் கிருஷ்ண சாமி ஆரம்பத்தில் அவனை உதவியாளனாக ஏற்று கற்பித்திருந்தால் அவன் தனது கலையின் எல்லைகளுக்குள் மட்டும் வாழ பழகி இருந்திருப்பான். ஆனால் அவர் மூலம் பெற்ற அவமானமும் புறக்கணிப்பும் மேன்மையும் கீழ்மையும் சமமானது என்று அவனுக்கு கற்றுக் கொடுக்கிறது. வாழ்வின் ஆகப்பெரும் அற்புதம் ஒரு குழந்தையின் சிந்தப்படும் குருதி என்று அவனுக்கு விளங்க வைக்கிறது.
சற்று மிகைப்படுத்தப்பட்டிருந்தாலும் அண் நட்பு பற்றிய பதிவு கூர்மையாகவே படத்தில் கையாளப்பட்டுள்ளது. கார்த்திக் தனது ஆத்ம நண்பனின் காதலியான யாமினியை பார்த்ததுமே ஈர்க்கப்படுகிறான். ஆனால் அதை வெளிப்படுத்த தயங்கி கடுமையான வெறுப்பை அவள் மீது காட்டுகிறான். ஒரு கட்டத்தில் காதல் வெளிப்படுகிறது. சுந்தர் இதை அறிந்து நண்பன் மீது கடுமையாக ஆத்திரம் கொள்கிறான். சுவாரஸ்யமாக கார்த்திக் நண்பனுக்காக தான் யாமினியை கைவிட தயார் என்று தற்காலிகமாக சொன்னவுடன் சுந்தரின் கோபம் மறைந்து மீண்டும் நட்பு வலுவாகிறது. மற்றொரு காட்சியில் கார்த்திக் குடிகாரனும் பைத்தியக்காரனுமாக மாறிட அவனது அப்போதைய மனைவியான யாமினியை மற்றொரு நண்பனான ஷங்கர் தன்வசமாக்க முயல்கிறான். ஆண் மனம் பெண்கள் விசயத்தில் எப்போதுமே இப்படி ஒரு தூய மிருக நிலையில் தான் உள்ளது. எத்தனை மேலான நண்பனும் இப்படி சமயம் வாய்த்தால் அபகரிப்பதில் அபரித ஆர்வம் கொண்டவாக இருக்கிறான். நண்பனின் காதலி கூடுதல் கவனம் பெறுவதற்கு நண்பன் மீதான பொறாமை மட்டும் அல்ல அவனது தேர்வு மீதான நம்பிக்கையும் அதை ஒரு உணவை அல்லது பொருளை போல் பகிரும் தன்னியல்பான விருப்பமும் காரணமாகலாம். நண்பனின் இணையை மோகிப்பது மனப்பிறழ்வோ அறம்பிழைத்தலோ அல்ல ஆழ்மனதில் விழித்துள்ள ஆதிமனித இச்சை. நண்பர்கள் என்றாலே காரணமின்றி கூட்டமாக கொலைகளிலும் திருட்டுகளிலும் ஈடுபடுவது என்கிற வகையில் “சுப்ரமணியபுரம்” படத்திற்கு பிறகு ஒரு பாணி தமிழின் “மதுரைக்கார உலக சினிமா” இயக்குநர்களால் கடைபிடிக்கப்படுகிறது. இது எத்தனை மேலோட்டமானது என்பது “மயக்கம் என்ன” பார்த்தால் விளங்கும். ஒரு நல்ல நண்பனின் இலக்கணம் அவன் ஒரு நல்ல எதிரியும் கூடத் தான் என்பதே. அதனாலே நண்பர்கள் தேவையானவர்களாக இருக்கிறார்கள்.
இந்த படத்தில் செல்வராகவன் பாலசந்தர், மணிரதனம், கவுதம் மேனன் ஏரியாவுக்குள் நுழைந்தது தான் ஒரு முக்கிய தவறு. அதைத் தவிர தனது எதிர்கலாசார தளத்தில் காலூன்றும் போது தான் இப்படத்தில் சில அற்புதங்கள் நிகழ்கின்றன. அவை இப்படத்தை மறக்க முடியாததாக்கு கின்றன.
தொடர்ந்து சிறப்பான பதிவுகள் எழுதும் தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்...
ReplyDeleteஅருமையான விமர்சனம் பாஸ், எனக்கும் படம் ரொம்பவே பிடித்திருந்தது
ReplyDelete“மதுரைக்கார உலக சினிமா” இயக்குநர்கள்// :)
ReplyDeleteதனிமை தெரியும். தத்துவார்த்த தனிமை? (முதலில் தத்துவம் என்பதற்கு மிகச் சரியான definition என்ன?)
ReplyDeleteஅற்புதமான விமர்சனம்
ReplyDeleteநன்றி ராஜசூரியன்
ReplyDeleteசினிமா விமர்சனமும் , வம்புகளும் எழுத மட்டுமே முடிகிறது ? மு.கு.நா சொன்னதுபோல படைப்புன்னு ஒன்னும் எழுத முடியலை இல்லையா ?
ReplyDeleteபரிதாபம் :(
உண்மையான வருத்தம் , கிண்டல் அல்ல
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமதி இந்தியா
ReplyDeleteமு.கு.நா யார்?
என்னால் படைப்புகள் எழுதமுடியவில்லை என்கிற உங்கள் வருத்தத்தை தீர்க்கும் வண்ணம் ஒரு நாவல் எழுதி உள்ளேன். 600 பக்கங்கள். இதுவரை யாரும் சொல்லியிராத ஒரு புது வாழ்வை பேசியிருக்கிறேன். ஜனவரி 1 2012 வெளியீடு. அவசியம் வாருங்கள்.