Tuesday, 20 December 2011

17 கர்ப்பங்களின் கலகம்



பதின்வயதின் கலக விழைவு பற்றி நேர்மையான அக்கறை கொண்ட படங்கள் மலையாளத்தில் சில வந்துள்ளன. பத்மராஜனின் “தேசாடனக் கிளி கரயாறில்லா (பிரயாணம் செல்லும் கிளிகள் அழுவதில்லை) குறிப்பிடத்தக்க ஒன்று. இரண்டு பள்ளிக்கூட பருவ பெண்கள் சுதந்திரமாய் வாழும் ஒரே இச்சையுடன் ஓடிப் போய் பெயர் அடையாளம் மாற்றிக் கொண்டு வாழ்கிறார்கள். வேலை பார்த்து சிரமப்பட்டு வளர்ந்தவர்களின் அன்றாட வாழ்வின் சில அனுகூலங்களை அனுபவிக்கிறார்கள். சுயபொறுப்பின், குடும்ப அந்தஸ்தின், சின்ன சின்ன சுதந்திரங்களின் மகிழ்ச்சியை அலாதியாக அனுபவிக்கிறார்கள். யாரிடமும் ஈடுபாடு கொண்டு உறவை வளர்க்க கூடாது, அது தம் அடையாளத்தை காட்டிக் கொடுத்து விடும் என்று உறுதி எடுக்கிறார்கள். ஒரு பெண் மென்மையாளவளாகவும் மற்றவள் வலிமையானவளாகவும் இருப்பது ஒரு பரஸ்பர சார்பை ஏற்படுத்தி அவர்களை ஒரு பாலியலற்ற ஒருபால் குடும்பமாகவே மாற்றுகிறது. பிறகு ஒரு பெண் ஒரு அந்நிய ஆணிடம் காதல் வயப்பட அவன் வழியாக அவர்களின் பெற்றோர்களுக்கு தெரிய வந்து அவர்கள் மீண்டும் வீட்டில் ஒப்படைக்கப்படும் நிலை ஏற்படுகிறது. ஒரு தோழி தற்கொலை செய்வதில் படம் முடிகிறது. வாழ்க்கை ஒரு சுதந்திரமான பிரயாணம் என்றால் அதில் ஏற்படும் தடை என்ன என்பது இப்படத்தில் மட்டும் அல்ல பத்மராஜனின் “ஓரிடத்து ஒரு பயில்வான், “தூவானத்தும்பிகள் போன்ற வேறு பல படங்களிலும் வரும் கேள்வி. இச்சை தான் அந்த பிரச்சனை என்ற கோணத்தில் அவர் அணுகியிருப்பார். தமிழில் இந்த வகையான படங்கள் சில வாழ்வை பற்றின பரந்துபட்ட பார்வையை வைக்காமல் எளிய உபதேச நோக்கங்களுடன் தொய்ந்து போயின. தற்போது நடந்து வரும் சென்னை உலகத்திரைப்பட விழாவின் போது திரையிடப்பட்ட “seventeen girlsபிரஞ்சு படம் வளர்இளம் பருவத்தினரின் இப்படியான ஒரு கலகத்தை முற்றிலும் புதிய கோணத்தில் அலசுகிறது.
இது தான் ஒற்றைவரி: ஒரு பள்ளியில் 17 பெண்கள் சுயவிருப்பத்துடன் கர்ப்பமாகிறார்கள். அவர்கள் சேர்ந்து குழந்தைப் பெற்றுக் கொண்டு ஒரு commune வாழ்வு வாழ உத்தேசிக்கிறார்கள்.
படத்தின் சுவாரஸ்யம் கர்ப்பம் இவர்கள் வாழ்வை என்னவாக்கிறது என்பதல்ல, பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் சமூகம், ஊடகங்கள் ஆகியவர்கள் எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதே. அதாவது இப்பெண்களுக்கும் சமூகத்துக்குமான உறவு.
பெற்றோரிடம் மனஸ்தாபம், காம வேட்கை போன்ற காரணங்களால் பள்ளி மாணவர்கள் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள், பின்னர் சீரழிந்து மனம் திருந்துகிறார்கள் என்றொரு அசட்டுவாதம் கஸ்தூரிராஜா, பாலசந்தர் போன்ற தமிழ் இயக்குநர்களிடம் உண்டு. ஆனால் பத்மராஜனின் படங்களைப் போன்றே மேற்சொன்ன படமும் இப்பிரச்சனையை எளிமைப்படுத்தாமல் வளரிளம் பருவ கலகத்தின் காரணங்கள் தனிமை, வாழ்க்கையின் சலிப்பு, அந்தஸ்தை உருவாக்கும் முனைப்பு, மற்றும் சமூகமாக்கல் விழைவு ஆகியனவாக இருக்கலாம் என ஆழமான சாத்தயங்களை நோக்குகிறது.
ஒவ்வொரு பெண்ணுக்கு ஒவ்வொரு பிரச்சனை. கெமைல் எனும் மத்திய வர்க்க பெண் அப்பா இல்லாதவள். சிறு வயதில் அம்மா அவளை பல மணிநேரம் வேலைக்காக தனியே வீட்டில் விட்டு விட்டு சென்று விடுவாள். அது ஒரு காயமாக அவளுக்குள் ஆழமாக உயிருடன் இருக்கிறது. அந்த நினைவில் உள்ள உளவியல் தனிமையை கடக்க அவளுக்கு ஒரு குழந்தை தேவையாகிறது. அவள் எதேச்சையான ஒரு உறவில் தான் கர்ப்பமாகிறாள். முதலில் பதற்றப்பட்டாலும் பிறகு கரு நல்லது என படுகிறது. அவளை பின் தொடர்ந்தே மேலும் பல தோழிகள் கர்ப்பமாகிறார்கள்.
கெமைலின் மிலிட்டிரி அண்ணன் ஓரிடத்தில் அவளிடம் சொல்கிறான் “நானும் பெருங்கனவுகளுடன் தான் ராணுவத்தில் சேர்ந்தேன். ஆனால் இப்போதோ எனக்கு எந்த தீங்கும் செய்யாதவர்களை சுட்டு கொல்லுகிறேன். தங்கையின் குழந்தை வளர்ப்பும் இப்படித்தான் முடியும் என்று அவநம்பிக்கை உறுகிறான். ஆனால் தனிமையின் கரிப்பின் முன் ஏமாற்றத்தின் கண்ணீர் அவளுக்கு மேலானதாக தோன்றுகிறது.
கெமைலின் அம்மா ஆரம்பத்தில் கர்ப்பத்தை கடுமையாக எதிர்க்கிறாள். பின்னர் சகஜமாக எடுத்துக் கொண்டு நட்புணர்வுடன் தன் மகளுக்கு சம அந்தஸ்து அளித்து நடத்துகிறாள். கெமைல் இதையும் தான் விரும்புகிறாள். குழந்தை எனும் பாத்திரத்தில் இருந்து விடுபட்டு பெண் என்ற அடுத்த நிலையை அடைய வேண்டும் அவளுக்கு. படத்தில் இது ஒரு கூர்மையான இடம். குழந்தைப் பேறை நாம் ஒவ்வொருவரும் அதனோடு தொடர்பற்ற ஏதோ ஒன்றோடு தான் சம்மந்தப்படுத்துகிறோம். அது அந்தஸ்தோ, வாழ்வுக்கான அர்த்தமோ, சலிப்பை கடப்பதோ ஆகலாம். உயிரியல் விழைவு காமத்தின் மொழி மட்டுமே. அதற்கு பிறகு குழந்தைப்பேறின் போது நம் சமூக மனம் தான் செயல்படுகிறது.
கிளமண்டெயின் என்கிற பெண் மெல்லிய குழந்தைத்தனமான தோற்றம் கொண்டவள். மனதளவிலும் அவள் பத்தாம்பசலிதான். அவளுக்கு தான் எளிதில் ஜோடி மாட்ட மாட்டேன் என்கிறது. இறுதியில் ஒரு இளைஞனுக்கு முப்பது டாலர்கள் தருவதாய் ஆசை காட்டி தன்னை புணர செய்கிறாள். கருவுற்ற பிறகு அவளுக்கு பெற்றோரையும், வாழ்வைவும் எப்படி நேரிட என்று தெரியவில்லை. தொடர்ந்து எல்லாவற்றில் இருந்து தப்பித்து ஓடி விட்ட இடத்தில் இருந்து திரும்பியும் ஒரு குழப்பமான கலகத்தை நிகழ்த்துகிறாள். கிளமெண்டெயின் கெமைலின் எதிர்முகம் என்ற அளவில் சுவாரஸ்யமான பாத்திரம்.
இந்த தொடர் கர்ப்பங்கள் பற்றி தலைமை ஆசிரியர் தமது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் நடத்தும் கூட்டங்கள் இன்னும் சுவாரஸ்யமானவை. தலைமை ஆசிரியர் தனக்கு காரணமே தெரியவில்லை என, ஒரு ஆசிரியை இது பெண்ணிய வெற்றி என்கிறார். உடற்பயிற்சி ஆசிரியர் கர்ப்பமான பெண்களை ஹைஜம்ப் செய்ய வைக்கலாமா கூடாதா என்று கவலைப்படுகிறார். மீடியாவில் சேதி பிரபலமாக ஒரு நிருபர் இது பிரஞ்சு சமூகத்தின் பல்வேறு சீரழிவுகளின் நோய்க்கூறு என்று அறிவுஜீவு அலசல் செய்ய அதை டி.வியில் பார்க்கும் கெமைல் அலுப்படைந்து அணைக்கிறாள். பெண்களை அச்சுறுத்த பள்ளி உள்ளரங்கில் குழந்தைப்பேறு வீடியோ ஒன்றை காட்டுகிறார்கள். “இதெல்லாம் பார்த்து நாம் மிரண்டு விடுவோமா என்று கலாய்க்கிறார்கள் பார்த்துக் கொண்டிருக்கும் கர்ப்பமான பெண்கள். ஆண்கள் பெண் வயிற்றில் இருந்து வெளியெடுக்கப்படும் சிசுவை பார்த்து அருவருப்படைகிறார்கள், சிலர் சிரிக்கிறார்கள்.
வேறு வழியின்றி தொடர் கர்ப்பங்களுக்கு முடிவு காண ஒரு அச்சுறுத்தலாக கெமைலை பள்ளியில் இருந்து நீக்குகிறார்கள். ஆனால் ஒரு கார் விபத்தில் அவளது கரு இறந்து போக, மிச்ச 16 பேரும் குழந்தை பெறுகிறார்கள். அதை விட முக்கியமாய், குழந்தை பெற்ற அவர்கள் ஒன்றுமே நடக்காதது போல் படிப்பை தொடர்ந்து வாழ்வையும் முன்பு போல் நடத்துகிறார்கள். குழந்தை பெற முடியாத கெமைலின் வாழ்வு தான் முற்றிலும் மாறிப் போகிறது. அவள் ஒரு மறைமுக வாழ்வு வாழ்கிறாள். இந்த நகைமுரண் வாழ்வின் மிகத்தீவிரமான செயல்கள் எப்படி அபத்தமான முடிவுகளை அடைகிறது என்று காட்டுகிறது. உண்மையில் கலக வாழ்வின் தீவிரமான சாகசங்கள் இது போல் சாதாரண வாழ்வு போல் முடிந்து விடுகிறது. அடிக்கடி யாரும் மூச்சு வாங்குவதோ நெட்டுயிர்ப்பதோ இல்லை..
கெமைல் ஒரு காட்சியில் பள்ளிக்கூட செவிலியிடம் வளர்ந்தவர்கள் தோல்வி மனப்பான்மையுடன் வாழ்கிறார்கள், தம்மைத் தாமே ஏமாற்றுகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறாள். படித்து ஒழுங்காய் மணம் புரிந்து குழந்தை பெற்று வளர்த்து யாரும் மகிழ்ச்சியாய் இல்லை. இவை யாவும் செய்யாதப் போது உள்ள ஆதார பிரச்சனைகளான தனிமை, அர்த்தமின்மை, சலிப்பு ஆகியவை அப்போதும் தொடரத்தான் செய்கின்றன. பிறகு விருப்பப்படி வாழ்ந்தால் தான் என்ன என்று அவள் வியக்கிறாள். ஆனால் பால்யகால கர்ப்பம் எனும் கலகத்துக்கு பின்னரும் கூட கெமைலின் வாழ்வும் பிறரும் வாழ்வின் எந்த விதத்திலும் மேம்படாமல் இருப்பது தான் உச்ச அபத்தம். மரபான வாழ்வும் சரி எதிர்கலாச்சாரமும் சரி நம்மை பிரச்சனைகளின் பொறியில் இருந்து தப்புவிப்பதில்லை என்கிறது 17 Girls.  
2008இல் அமெரிக்காவின் மெஸசூசட்சில் இது போல் 18 பள்ளிக்கூட பெண்கள் திட்டமிட்டு கர்ப்பமடைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. டெல்பின் மற்றும் முரியல் கூலின் ஆகிய சகோதரிகள் இணைந்து இந்த உண்மைக்கதையை சார்ந்து ஒரு கூர்மையான பகடியை முயன்றிருக்கிறார்கள். ஒரு டிராமாத்தனமான கதையை மிகக் குறைவான நாடகீயத்துடன் சொல்லியிருக்கிறார்கள்.
Share This

1 comment :

  1. நாம் அனைவரும் டைரி எழுதுவோம், அதில் அடுத்தவர்களைப் பற்றி---> ஆஸ்கர் ஒயில்டு?(that is oscar wilde says we wont write the truth about us boldy even in our own personal diary...)

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates