Sunday, 11 December 2011

ஒரு கவிதை உரையாடலும் நிறைய சிரிப்பும்




நேற்று திருச்சி எஸ்.ஆர்.வி பள்ளியில் அவர்களின் படைப்பாற்றல் ஸ்டுடியோ எனும் நிகழ்வுக்காக 11ஆம் வகுப்பு மாணவர்களிடம் நவீன கவிதை குறித்து இரு பகுதிகளாக ஐந்து மணிநேரம் உரையாடினேன். நான் எதிர்பார்த்ததை விட மாணவ மாணவிகள் கூர்மையாக ஆர்வமுடன் இருந்தார்கள். 
பொதுவாக என் வகுப்பில் கவிஞர்கள் யாராவது உள்ளார்களா என்று விசாரித்தால் ரொம்ப தயங்கிய பிறகு ஒருவர் இருவர் கை தூக்குவார்கள். ஆனால் இங்கே அநேகமாய் மொத்த வகுப்பும் தம்மை எழுத்தாளர்கள் என்று தன்னம்பிக்கையுடன் அறிவித்தது. பலரும் ஆர்வமுடன் வந்து தம் கவிதையை வாசித்தனர். அதற்கு பிறர் அசட்டுத்தனமாய் கமெண்ட் அடிக்காமல் ஒழுங்காய் கைத்தட்டி ஆதரித்தார்கள், அங்கங்கே பிசிறாய் சிரித்தார்கள். தொடர்ந்து எழுத்தாளர்களை சந்தித்து உரையாடுவது தான் இந்த எழுத்தாள ஆர்வத்துக்கு காரணம் என்று யூகித்தேன்.
யாரெல்லாம் வாழ்வில் தனிமையை உணர்கிறீர்கள் என்று கேட்டால் பத்து பேர் எழுந்து கொண்டார்கள். சற்று அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தாலும் தங்கள் தனிமையின் காரணத்தை தயக்கமின்றி அவர்கள் வெளிப்படுத்தியது ஆறுதல் ஏற்படுத்தியது.
கற்பனாவாத கவிதைக்கும் நவீன கவிதைக்குமான வித்தியாசங்களை விளக்கி நவீன கவிஞர்களை கவிதைகளை அறிமுகப்படுத்துவதில் முடித்தேன். பயர்பாயிண்ட் பயன்படுத்தியது எனக்கு ஒரு வித்தியாசமான உபயோகமான அனுபவமாக இருந்தது. உரையாடல் முடித்ததும் செஸ்லோவ் மற்றும் பசுவய்யாவின் இரு கவிதைகளை காட்டி அவை என்ன வகை மற்றும் அவற்றில் உள்ள கவிதைக்கருவிகளை அடையாளப்படுத்த கேட்டேன். பசங்க எந்தளவுக்கு கூர்மை என்றால் பலரும் பகடி, குறியீடு,படிமம் என்று சரளமாக பேச ஆரம்பித்து விட்டார்கள். அதுவும் செஸ்லோவின் கவிதையில் வரும் குறியீடு வீடு தான், அக்குறியீட்டின் பொருள் வாழ்க்கைக் கனவுகள் என்று இரு மாணவர்கள் சொன்னது போது ரொம்பவும் நெகிழ்ந்து போனேன்.
தமிழ் மற்றும் ஆங்கில நவீன எழுத்தாள ஆளுமைகளை விவரித்த போது ரொம்பவும் ரசித்தார்கள். குறிப்பாய் விக்கிரமாதித்யன். பிற்பாடு அவரது “வாழவும் பிடிக்கவில்லை, வாழாமல் இருக்கவும் பிடிக்கவில்லை கவிதையில் வரும் “குடிக்கவும் பிடிக்கவில்லை குடிக்காமல் இருக்கவும் பிடிக்கவில்லை என்று வரிக்கு சிரிப்பலை எழுந்தது. தேவதேவன் எப்படி பேசுவார் என்று பேசிக்காட்டிய போது விழுந்து விழுந்து சிரித்தார்கள். கலாப்பிரியாவின் பெயர்க்காரணம் சொன்ன போதும் அப்படியே.
இரண்டாவது அமர்வில் பிரமிள், நகுலன், பசுவய்யா, மனுஷ்யபுத்திரன், விக்கிரமாதித்யன், குட்டிரேவதி, யுவன், முகுந்த் நாகராஜன், என்.டி ராஜ்குமார், அப்பாஸ், ஆத்மாநாம் ஆகியோரின் கவிதைகளை அதிகமாய் விவாதித்தேன். மனுஷ்யபுத்திரனை ஏதோ சொந்த தம்பி போல் தெரிந்து வைத்திருக்கிறார்கள். என்.டியின் வட்டார மொழி அவர்களை வசீகரித்தது. அவரது இரு கவிதைகளின் எதார்த்தம் பாதித்தது கண்களில் தெரிந்தது. அவர் கவிதைகளை எப்படி ஒரு தாளலயத்துடன் வாசிக்க வேண்டும் என்று காண்பித்தேன். அப்பாஸின் ஒரு பெருவெளியை அவர்கள் உள்வாங்கியது ஆச்சரியம் அளித்தது. யுவனின் குள்ளச்சித்தன் சரித்திரத்தில் வரும் ஒரு சம்பவத்தோடு ஒப்பிட்டு நம் வாழ்வில் எப்படி இத்தகைய அனுபவங்கள் ஏற்படுகின்றன என்று சொன்னேன். எதிர்பார்த்தது போல் பெண்களுக்கு பிடித்தமானவராக முகுந்த் இருந்தார். கூட “எனக்கு இரங்கல் கூட்டங்கள் நடத்த வேண்டாம் என்னால் வர முடியாது என்ற வரி மூலம் நகுலன் சில பெண்களின் ஆதரவையும் புன்னகையையும் பெற்றது ஒரு சின்ன ஆச்சரியம்.
வழக்கம் போல் உரையாடலை முடிக்க மனமின்றி கிளம்பி வந்தேன்.
எஸ்.ஆர்.வி பள்ளியினரின் விருந்தோம்பல் சிறப்பாக இருந்தது. விடிகாலையில் சென்னை வந்தேன். மனைவியும் நாய்க்குட்டியும் இல்லாத பட்சத்தில் கதவை நெருங்கும் முன்னரே என் பூனை மோப்பம் பிடித்து என்னை அழைத்து, உள்ளே வந்ததும் வளைந்த முதுகும் நிமிர்ந்த வாலுமாய் கொஞ்சியபடி வாழ்வில் முதன்முறையாய் என்னை அப்படி வரவேற்றது. அப்படி ஒரு இனிய அனுபவம் முடிவுக்கு வந்தது.
Share This

2 comments :

  1. 1. பதினோராம் வகுப்பு மாணவர்கள் இலக்கியம் படிக்கின்றார்களா? அதுவும் கவிதைகளை படிக்கின்றார்கள் என்பதை நம்ப முடியவில்லை. கவிதை எழுதுவார்கள் தெரியும். அவர்கள் செல்போனிலேயே குவிந்து கிடக்குமே? அவற்றை யாரும் திருடி விடுவார்களோ என்ற பயமின்றி அந்த கவிதைகளை அம்மாணவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் கூட forward செய்வார்களே? அவ்வள‌வு தரம் இருக்கும்.

    2. உரையாடலை மனமின்றி முடித்து வந்தீர்கள். சரி. பேசவிட்டால் 5 மணி நேரம் என்ன 10 மணி நேரம் கூட கவிதைகளை பற்றி மட்டும் அல்ல டைனோசரைப் பற்றி கூட பேசுவீர்கள்...

    ReplyDelete
  2. மாணவர்களிடம் பேசி கலையும் போது
    எதையோ சொல்ல மறந்து விட்ட feeling எனக்கும் ஏற்பட்டிருக்கிறது

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates