தமிழ் இலக்கியம் ஏன் பன்னாட்டு தளத்தை அடைந்து விட்டதா? உலகின் மூத்த செவ்வியல் மொழிகளுள் ஒன்று தமிழ்; உலகின் தலைசிறந்த கவிஞர் தமிழர் (வள்ளுவர்); உலகின் தலைசிறந்த காவியங்கள் தமிழில் உள்ளன; எழுத்தாளர்களை நெடுங்காலம் அரியணையில் வைத்திருந்த சமூகம் தமிழ் சமூகம்; தமிழ் நாவல் ஒன்று அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் உண்மை என்றால் தமிழ் இலக்கியம் பன்னாட்டு அளவில் புகழ் பெற்று விட்டது என்று பொருள். ஆனால் இவை முழுக்க உண்மை அல்ல. சர்வதேச அளவில் புகழ் பெற்ற எழுத்தாளர்களான மார்க்வெஸ், பாஷெவிஸ் சிங்கர், பாமுக் என பலரும் ஆங்கிலத்தில் எழுதவில்லை. தமிழை விட குறைவான மக்கள் தொகையினரால் பேசப்படும் போலிஷ், ஸ்பானிஷ், துருக்கி போன்ற மொழிகளில் எழுதியவர்கள். அவர்களின் நூல்கள் கோடிக்கணக்கிற விற்கின்றன. இவர்களுடன் ஒப்பிடுகையில் நமது தமிழ் எழுத்தாளர்கள் சர்வதேசம் என்ன உள்நாட்டு அளவில் கூட அதிக அங்கீகாரம் பெறாதவர்கள். இந்த சாபக் கேட்டுக்கு காரணம் என்ன?
முதலில் உள்ளூர் காரணம். நமது பக்கத்து ஊரான கேரளா மற்றும் கர்நாடகாவுடன் ஒப்பிட்டு தமிழில் இலக்கியவாதிகளுக்கு அந்தஸ்து இல்லை என்று புலம்பப்படுகிறது. தமிழர்களுக்கு பண்பாட்டு நடவடிக்கைகள் சினிமா மற்றும் சமய சடங்குகளுடன் முடிந்து விடுகின்றன. பொதுமக்கள் எந்தளவுக்கு இலக்கிய வாசிப்பில் இருந்து விலகி நிற்கிறார்களோ அந்தளவுக்கு எழுத்தாளர்கள் சமூகத்தில் இருந்து தம்மை துண்டித்துக் கொண்டவர்களாகவே அரைநூற்றாண்டாக இங்கே இருந்தனர். குறிப்பாக தமிழ் நவீனத்துவதாகிகளுக்கு வெகுஜனம் என்பது ஒரு கெட்டவார்த்தை. அதே வேளையில் திராவிட கழகங்கள் போன்ற சமூக அரசியல் இயக்கங்கள் சமூக ஈடுபாடு தான் இலக்கிய கடப்பாடு என்ற நம்பிக்கையில் இயங்கினர். இந்த பரஸ்பர அக்கறையின்மை இலக்கியவாதிகளிடம் இருந்து மக்களை அந்நியப்படுத்தியது. மாறாக கேரளா மற்றும் கர்நாடகாவில் மாபெரும் மக்கள் இயக்கங்களில் பங்கெடுத்தவர்களாக எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள். அதனாலே அவர்களுக்கு சமூகத்தில் அங்கீகாரமும் உள்ளது. நம்மூர் தீவிர இலக்கியவாதிகள் ஒரு பஸ் மறியல் கூட செய்ய முடியாது. அதற்காக சாரு கேரளா போகிறார். மார்க்வெஸ், போர்ஹெஸ், பாமுக், லோசா என சமூக அரசியல் பங்களிப்பு செய்துள்ள ஏராளமான இலக்கியவாதிகளை, இந்த அக்கறையினால் நாடுகடத்தப்படும் அளவுக்கு அச்சுறுத்தல்களை சந்தித்த எழுத்தாளர்களை சர்வதேச தளத்திலும் நாம் காண முடியும். ஆனால் நேரடி அரசியல் பங்கேற்பு ஒரு இலக்கியவாதிக்கான அளவுகோல் அல்ல. இருந்தாலும், தமிழகத்தில் இலக்கியம் அந்நியப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம்.
அடுத்து சர்வதே அளவில் நாம் புகழடையாததற்கு காரணங்களாக ஆங்கிலம் கருதப்படுகிறது. நமக்கு போதுமான தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை என்று தொடர்ந்து புகார் சொல்லப்பட்டது. ஆனால் அக்குறை ஓரளவுக்கு நீங்கி வருகிறது. தமிழின் பல முக்கிய நாவல்கள் மொழியாக்கப்பட்டு பெங்குவின், கதா, பிளேப்ட் போன்ற பதிப்பகங்களில் வெளிவந்தன. ஆனால் அவை இந்தியர்களால் ஆங்கிலத்தில் நேரடியாக எழுதப்படுகிற ஆங்கிலோ இந்திய நாவல்கள் அளவுக்கு பிரபலமடையவோ விமர்சன கவனிப்புக்குள்ளாகவோ இல்லை. இதற்கு வியாபார ரீதியான காரணங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் அதை விட, இந்திய மற்றும் சர்வதேச ஆங்கில வாசகப் பரப்பை தமதாக்கி விட்ட ஆங்கிலோ இந்திய நாவல்கள் மற்றும் அபுனைவுகள் நமக்கு தொடர்ந்து ஒரு மாற்றுத்தரப்பாக இருப்பது ஒரு முக்கிய காரணம்.
தமிழ் மொழியாக்கத்தை ஆங்கிலோ இந்திய பிரதியுடன் ஒப்பிடும் போது நடை மற்றும் பேசுபொருள் இரண்டிலும் மாறுபட்டிருப்பதை காண்கிறோம். உதாரணம் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு ஒருவர் ஆங்கிலத்தில் நேரடியாக தமிழகம் குறித்து எழுதினால் அது தமிழர்களுக்காக அல்ல, மொழியும் கலாச்சாரமும் பழக்கமில்லாத புலம் பெயர்ந்த மற்றொரு பெரும் மக்கள் பரப்புக்காகவே. அவர்களுக்கு நமது கலாச்சாரமும் எளிதாக பொறுமையாக சொல்லிப் புரியவைக்க வேண்டி உள்ளது. உதாரணமாக ஜும்பா லஹரியின் கதைபாத்திரம் போஸ்டனில் பேல்பூரி சாப்பிடுகிறாள் என்றால் பேல்பூரியின் சமையல் குறிப்பையும் அவர் நாலுவரிகளில் விளக்கி விட்டே நகர்வார். இன்றைய வங்காளி இளைஞனின் சமூக பொருளாதார கலாச்சார பிரச்சனை அல்ல அவரது அக்கறை. புலம்பெயர்ந்த இந்தியனின் பொதுவான வேரற்ற நிலையை பேசுகிறார். இது அவரைப் போன்ற எழுத்தாளர்களுக்கு ஒரு சர்வதேச விரிவை ஆழத்தை கொடுக்கிறது. புலம்பெயர்தலும் அடையாளமிழப்பும் பரவலாகி விட்ட உலக சமூகங்களில் இப்படியான எழுத்துக்கு தான் செலாவணி அதிகம். கடந்த பத்துவருடங்களில் ஆங்கில பதிப்புலகில் காலனிய இந்தியா மற்றும் தற்போதைய ‘ஒளிரும்’ இந்தியா குறித்த வரலாறு புதினங்களுக்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளன. நாம் மாறாக உள்ளூர் பிள்ளைமார் அல்லது கள்ளர்களின் குடும்ப வரலாற்றை பேசினால் அது சர்வதேச வாசகர்களின் கிணற்றுச் சுவரை தாண்டாது. இதே பிரச்சனை ஜப்பானிய இலக்கியத்திலும் உள்ளது. மிஷிமோ கிணற்றுக்கு உள்ளே, ஹருகி முராகாமி வெளியே.
மேலும் நையாண்டி, அங்கதம் கலந்த நெகிழ்ச்சியற்ற மொழிநடை ஒன்றை ஆ.-இ நாவல்கள் வெற்றிகரமாய் நிறுவி உள்ளன. நமது படைப்புமொழி இம்மரபுக்கு வெளியே நிற்கிறது. ஆங்கிலோஇந்திய படைப்புகள் ஐந்துநட்சத்திர ஓட்டல் சாம்பார் என்று ஜெயமோகன் குற்றம் சாட்டினார். அது உண்மை அல்ல. ஆங்கிலத்தில் வெளியாகும் சர்வதேச இந்திய இலக்கியத்தை சொந்தம் கொண்டாடுவதற்கான வீச்சும் விரிவும் நம்மிடம் இல்லை. உலக வாசகர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. செருப்பு கடிக்கிறது என்றால் செருப்பின் மீதா குற்றம்?
அன்புள்ள அபிலாஷ்:
ReplyDeleteஉங்களது பதிவை ஆர்வத்துடன் படித்தேன். என் மனதிற்கு தமிழிலக்கியம் ஏன் பன்னாட்டுத் தளத்தை அடையவில்லை என்பதற்கு இரண்டு பெரும் காரணங்களைக் கூறலாம் எனப் படுகிறது.
முதலாவது, நீங்கள் குறிப்பிட்ட படி "உள்ளூர் ஆதரவு" இல்லாதது. இது தான் தலையாய காரணம் என்று எனக்குப் படுகிறது. குறைந்த பட்சம் கடந்த இரண்டு தலைமுறைகளாக கல்வி என்பது பிற்காலத்தில் ஓரளவிற்கு லௌகீக வெற்றிகளுக்கு வழி வகுக்கக் கூடிய ஒரு கருவியாக மட்டுமே கருதுகின்ற சூழல் தமிழ் நாட்டில் உள்ளது. தமிழ் கற்பதே அனாவசியம் என்ற மன நிலை இப்போதைய மாணவர்களிடம் உள்ளது. "ஏன் தமிழ் படிக்க வேண்டும்?" என்ற குழந்தைகளின் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாதச் சூழலில் தான் பெற்றோர்களும் இருக்கிறார்கள். மற்ற மொழிகளுடன் குறிப்பாக, ஆங்கிலத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொது, தமிழ் இலக்கியத்தின் அளவும், வீச்சும் மிகவும் குறைவே. மனித அனுபவங்களை, மானுடத் தேடலை, தன் தாய் மொழியில், அதே மொழியில் பேசும், அதே சூழலில் வாழும் ஒரு ஐந்து சதவீத மக்களுக்குக் கூட நெருக்கமாகச் சொல்லக் கூடிய நிலையில் ஒரு மொழியின் இலக்கியம் இல்லா விட்டால், அது தன் எல்லையை விட்டு பிற இடங்களில் வளர்வது மிகவும் சிரமம். இதுவே தமிழ் உரைநடை இலக்கியத்திற்கு இருக்கும் பெரிய சவால். தமிழில் அற்புதமாக எழுதக் கூடிய ஒரு சிலர் எப்போதும் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். அந்த எண்ணிக்கை முதலில் அதிகரிக்க வேண்டும். பள்ளிகளில் இலக்கியம் கற்க வழியில்லை; பள்ளிக்கு வெளியே அதை வலியுறுத்தும் சமூக வாழ்க்கை அமைப்பும் இல்லை. இந்தச் சூழலை எப்படி மாற்றுவது? துரதிர்ஷ்டவசமாக, இந்த வேலையும் இலக்கியவாதிகள் தான் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. இலக்கியம் என்றால் என்ன என்பதை சொல்லிக் கொடுக்கும் வழக்கம் நம் பள்ளிகளில் இல்லை. இந்த எழுத்தாளர்கள் தங்களது படைப்புச் சக்தியை மற்றும் நம்பியிராது, வெகு சனத்துடன் தொடர்ந்து உரையாட வேண்டும். நல்ல இலக்கியங்களை அடையாளம் காட்ட வேண்டும். நல்ல இலக்கியத்தைப் பற்றி விவாதம் செய்ய வேண்டும். விமரிசனம் செய்ய வேண்டும். மற்ற மொழிகளில் எழுதும் எழுத்தாளர்களை விட, தமிழில் எழுதும் எழுத்தாளர்கள் இந்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுவது அநீதி தான். அனால் அதுவே நடைமுறை உண்மை. சுருக்கமாகச் சொல்லப் போனால், நல்ல எழுத்துக்கள் உலகெங்கும் சென்றடைய ஒரு மொழியில் முதலில் ஒரு இலக்கியச் சூழல் சார்ந்த பரிணாம வளர்ச்சி தேவை. அந்தச் சூழல் தமிழில் இன்னும் வரவில்லை. இணையத்தில், உங்களைப் போன்ற இளைஞர்கள் இதைப் பற்றி விவாதிப்பது அந்த பரிணாம வளர்ச்சியின் ஒரு முக்கியப் பங்கு. தொடர்ந்து செய்யுங்கள்.
இரண்டாவது, புலம் பெயர்ந்த இந்தியர்களின் வேரற்ற நிலைக்கு உகந்த ஆங்கில எழுத்து வடிவம் இந்தியாவில் இருந்து பெருமளவில் வருகிறது. வெளி நாடுகளில், சில புத்தகங்கள் பெரும் வரவேற்பையும் பெற்றிருக்கின்றன. இருப்பினும், இந்த எழுத்துக்களுக்கு எவ்வளவு தூரம் உண்மையான இலக்கிய மதிப்பு இருக்கிறது என்பது இன்னும் காலப் போக்கில் தான் தெரிய வரும். நான் இதை ஏன் கூறுகிறேன் என்றால், இந்த எழுத்துகள் இந்தியாவைப் பற்றி அதிகம் தெரியாத வெளி தேசத்தினற்கு, ஒரு வித்தியாசமான உலகத்தின் ஒரு குறுகிய பரிணாமத்தை மட்டுமே அறிமுகப்படுத்துகின்றன. இந்த எழுத்துக்களில் இருக்கும் அந்நியத் தன்மை, பன்னாட்டு வாசகர்களுக்கு பரிச்சயம் ஆன பின் என்ன எஞ்சும் என்பதற்கான பதிலை காலமே தெரிவிக்கும். எப்படி இருந்தாலும், ஒவ்வொரு மொழியிலும், அந்த மொழியை பேசும் மக்களின் வாழ்க்கையின் தேடலை உண்மையாய் பிரதி பலிக்கும் இலக்கியம், எல்லா மனிதர்களுக்கும் பொதுவான தேடலைச் சென்றடையும். அந்த இலக்கியம் உலகெங்கிலும் கொண்டாடப்படும். மேலை நாட்டு உத்திகளை மட்டும் கைக்கொண்டு, தமிழில் எழுதப் படும் நகல் எழுத்துக்கள், சொந்தச் சூழலின் உண்மையைப் பிரதி பலிக்கா விட்டால், இங்கு மட்டும் அல்ல எங்கும் செலாவணி ஆகாது என்பதும் உண்மையே. நான் இவ்வளவு உஷாராக வெளி நாட்டுப் பாணியில் எழுதியும், இந்த கேடு கேட்ட தமிழ்ச் சமுதாயம் என்னை அங்கீகரிக்க மறுக்கிறதே என்று (சில எழுத்தாளர்கள் - உங்களை அல்ல) புலம்புவது சிறு பிள்ளைத் தனமாகப் படுகிறது. சு. வெங்கடேசனின், "காவல் கோட்டம்" நாவலாகட்டும் சரி, நாஞ்சில் நாடனின் வெள்ளாளர் பற்றிய வரலாற்றுக் குரிப்பானாலும் சரி, இரண்டுமே தமிழ் நாட்டின் வரலாற்றை தமிழர்களே தெரிந்து கொள்ள உதவும் ஆவணப் பதிப்புகள். அவை நம் வீட்டுக் கிணற்றை விட்டுத் தாண்டாமால் போகலாம். ஆனால் அவற்றில் உள்ள தகவல்கள், பின்னல் தமிழில் எழுதும் எழுத்தாளர்கள், நல்ல தரமான படைப்புகளை படைக்க உதவும். ஒரு, அறிவியல் நோக்கு இணைந்த, இலக்கியச் சூழலை உருவாக்க உதவுகின்றன என்பதில் சந்தேகமில்லை. இப்படி பல நல்ல படைப்புகள் தமிழில் வருவது தமிழிலக்கியம் உலக அங்கீகாரம் பெறுவதற்கு வழி வகுக்கும். சர்வ தேச இலக்கியத்தை அவசியம் கொண்டாடுவோம். நம் வீட்டுச் சாம்பாரையும் நன்றாகச் சமைப்போம்.
ReplyDeleteஉடன்படுகிறேன் கரிகாலன். நன்றி. ஆனால் இந்திய ஆங்கில இலக்கியத்திலும் நல்ல நாவல்கள் உள்ளன.
ReplyDelete