Monday, 19 July 2010
விஜய மகேந்திரனின் நூல் விமர்சனக் கூட்டம்
விஜய மகேந்திரனின் நூல் விமர்சனக் கூட்டம் நேற்று மேற்கு கே.கே நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸ் எனும் புத்தகக் கடையில் நடந்தது. தேர்ந்தவர்களுக்கே உரிய விமர்சன வட்டம் மற்றும் நூற்றுக்கணக்கானோர் கூடி இலக்கியப் பேச்சாளர்களை பாப்பையாவாகத் தூண்டும் பெருங் கூட்டத்துக்கும் மத்தியில் ஒரு புள்ளியில் இருந்தது இந்நிகழ்ச்சி. அதாவது பாப்பையாவுக்கும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கும் நடுவில். சுமார் இருபத்தைந்தில் இருந்து முப்பதுக்குள் இருப்பார்கள் பார்வையாளர்கள். இதை சரியாக கணிப்பது மிகவும் சிரமம். குறுக்கும் நெறுக்குமான எறும்பு சாரிகள் போல் கூட்டம் தொடர்ச்சியாக கலைந்து கூடிக் கொண்டிருந்தது. முதலில் கூத்துப்பட்டறையை சேர்ந்த தம்பிச்சோழன் சி.மோகன் மற்றும் ரமேஷ் பிரேதனின் கவிதைகளை நிகழ்த்திக் காட்டினார். பிறகு யவனிகா ஸ்ரீராம், ஐயப்ப மாதவன், தாரா கணேசன், பாக்கியம் சங்கர் ஆகியோருடன் நானும் பேசினேன்.
நான் முதன்முதலாக பேசிய இலக்கியக் கூட்டம். மிகவும் பதற்றமாக கையைப் பிசைந்தபடி குறிப்புகளை மனதில் மேல் கீழாக அடுக்கி குழப்பிக் கொண்டிருந்தேன். முதலில் பேசின யவனிகாவின் பேச்சு அவ்வளவு பிரமாதம். “நவீன உலகின் ஒவ்வொரு பொருளும் பாலியல் வடிவம் கொண்டிருக்கின்றன” என்றார். எழுத்தாளன் பேசும் போது இப்படியான கூர்மையான அவதானிப்புகள் தாம் முக்கியம். யவனிகாவின் சிறப்பான பேச்சுக்கு பிறகு என் பதற்றம் அதிகரித்தது. அவருடன் ஒப்பிட்டால் நான் சொல்லி விடப் போகிறேன் என்ற பயம். நல்ல வேளை என்னை கடைசியாக பேச அழைத்தார்கள். தாரா கணேசன் பேசும் போதே மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டேன். சுருக்கமாக எளிமையாக பேசுவது என்று தீர்மானித்தேன். என்னை அழைத்ததும் மைக்கை தவிர்த்தேன். அந்த கூட்டத்தை ஒரு வகுப்பறையாக நினைத்து பேச ஆரம்பித்தேன். பேச்சு சிலருக்கு பிடித்திருந்ததாக சொன்னார்கள். யவனிகா கைகொடுத்து பாராட்டினார். அங்கீகரிக்க தயக்கமற்ற மனிதர். அவரிடம் ஒரு சொல் கூட அதுவரை நான் பேசி இருந்ததில்லை. களைத்துப் போன நிலையிலும் அவர் மட்டும் கடைசி வரை மேடையில் இருந்தார்.
மூன்று வருடங்களுக்கு பிறகு நண்பர் செல்வப்புவியரசை சந்தித்தேன். அதைப் போன்றே இணைய நண்பரான மாமல்லன் கார்த்தி, லக்கி லுக், அதிஷா, கேபிள் சங்கர் ஆகியோரின் சந்திப்பும். அதிஷாவின் எழுத்து போலே பார்த்ததும் அவரை எனக்கு பிடித்து போனது. மென்மையான குரல், மென்மையான சிரிப்பு, மென்மையான நக்கல் ... இப்படியே.
கூட்டம் முடிந்து தொடர்ந்து மழை பெய்தது. வெளியே கடை ஷட்டரில் சாய்ந்து காத்திருந்து அரட்டை அலசல் புலம்பல் என கழித்து பிறகு நனைந்த படியே புறப்பட்டு செல்வா மற்றும் மகேந்திரனுடன் இரவுணவு அருந்தினேன். சிரமமாக இருந்தாலும் அன்று மழை பெய்தது பிடித்திருந்தது. மழை மனிதர்களுக்குள் ஒரு அன்னியோன்யத்தை கொண்டு வந்து விடுகிறது. நகரத்தின் அழைப்புகளில் இருந்து சற்று நேரம் காப்பாற்றுகிறது.
விஜய் மகேந்திரனை எனக்கு அதற்கு முன் நேரில் பரிச்சயம் இல்லை. போனில் சில வார்த்தைகள் பேசி இருப்போம். என்னுடைய இது போன்ற ஒரு கூட்டப்பதிவை படித்து விட்டு அழைத்து பேசினார். அதற்கு பின்னர் சந்திக்க முயன்று நடக்கவில்லை. அடுத்து அவர் பேசினது கூட்டத்துக்கு அழைக்கத்தான். ஒருநாள் பரிச்சயத்தில் விஜய்யை இப்படி புரிகிறேன். கூர்மையானவர். மனிதர்களை நன்றாக கவனிக்கிறார். நட்பை பேணத் தெரிந்தவர். முக்கியமாக அவரிடம் நட்பு பாராட்டுவது சிக்கலற்றதாக இருக்கும் என்று ஊகிக்கிறேன். இந்த ஊகம் சரியாகவோ தவறாகவோ போகட்டும். அதுதானே சுவாரஸ்யம்.
சில நண்பர்களிடம் பேசியதில் நான் உயிர்மையில் இன்னும் பணி புரிவதாக நினைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. இல்லை. கடுமையான முதுகுவலி காரணமாக உயிர்மையில் ஒரு மாதம் மட்டுமே என்னால் பணி செய்ய முடிந்தது. (இதை முன்னரே பிளாகில் அறிவித்திருக்க வேண்டும்). கல்லூரிப் பணி வேறு இருப்பதால் சமாளிக்க முடியவில்லை. மனுஷ்யபுத்திரன் நல்ல வேளை புரிந்து கொண்டார். ஜெயமோகன் எழுதியது போல் நான் காய்நகர்த்தி உயிர்மை ஆசிரியக் குழுவில் சேரவில்லை. அப்படி ஒரு உயர்வான அரசியல் நோக்கம் இருந்திருந்தால் ஒரு மாதத்தில் விட்டிருக்க மாட்டேன். வேறு சிலர் அப்போது நம்பியது போல் நான் ஊதியத்துக்காகவும் மனுஷ்யபுத்திரனை ஆதரித்து அக்கட்டுரைகளை எழுதவில்லை. இதுவரை நான் அவரிடம் எந்த பணத்தையும் எதிர்பார்க்கவோ பெற்றுக் கொண்டதோ இல்லை. அதை விட மேலான உதவிகளை எனக்கு செய்துள்ளார். அவரது ஊக்குவிப்பு இன்றி நான் உரை எழுதி இருக்க மாட்டேன். எழுத்துலகில் எனது சின்னஞ்சிறு இருப்புக்கு அவர் முக்கிய காரணம். இதை எல்லாம் சொல்வதற்கு இச்சந்தர்பத்தை பயன்படுத்துகிறேன். நான் என்றும் உயிர்மையில் தான் இருக்கிறேன். ஆனால் ஊழியனாக இல்லை.
இக்கூட்டத்தில் நான் பார்வையாளனாக கலந்து கொள்ளவில்லை என்பதால் மேலதிகமாக விமர்சிப்பது நியாயமாக இருக்காது. பார்வையாளர் யாராவது அதற்குரிய சுதந்திரத்துடன் கூட்டம் பற்றி எழுத வேண்டும். கண்ணாடி வீட்டுக்குள் இருந்தபடி நானதை செய்ய முடியாது.
Share This
Labels:
இலக்கியம்
,
தனிப்பட்ட பகிர்வுகள்
Subscribe to:
Post Comments
(
Atom
)
கூட்டத்திற்கு நானும் வந்திருந்தேன். உண்மை சொல்ல வேண்டுமானால் உங்களின் பேச்சிற்கு பிறகே உங்களை பற்றி அறிந்தேன்(உங்களின் வலைப் பூவும் அறிந்தேன்) மகிழ்ந்தேன். எளிமையான தெளிவான உங்கள் பேச்சு இருந்தது (தயக்கமும் கூச்சமும் போக போக அகன்று விடும்). யவனிகாவின் பேச்சு மிக அருமை தான் . இடையே ஏற்பட்ட தொந்தரவு இல்லையென்றால் இன்னும் நன்றாகவும் விரிவாகவும் பேசியிருப்பார் என்பது எனது கருத்து.
ReplyDeleteதொட்டக்கமாக நடந்த தம்பி சோழனின் நிகழ்வு மிகவும் நன்றாக இருந்தது சி. மோகனின் கவிதை எப்படி மறக்க முடியாமல் (அவரது படைப்புகளும் )
இருக்கிறதோ அதே போல் தம்பி சோழனின் நிகழ்வும். உங்களின் பக்கம் இப்பத்தான் வந்திருக்கிறேன் இன்னும் சில தினங்களில்(வாரத்தில்) படித்து
முடித்து விட்டு மீண்டும் வருகிறேன்.
நன்றி வேல்கண்ணன்!
ReplyDeleteகூட்டத்திற்கு வந்திருந்தேன்.. மழை காரணமாக சினிமா வண்டி ஒன்று மாட்டிக்கொண்டது, ஜாக்கி, உண்மைத்தமிழன், நான் மூவரும் அங்கு உதவி செய்ய போய்விட்டதால் உங்களுடன் உரையாட இயலாது போய்விட்டது..
ReplyDeleteவிஜய் மகேந்திரனின் புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கிறேன்...
அபிலாஷ் உங்கள் பேச்சு எனக்கு பிடித்திருந்தது.. sincere அதே சமயம் லேகுத்தன்மையுடன் இருந்தது.. வகுப்பறையை போன்று நீங்கள் எண்ணி இருந்தாலும் .. நண்பர்களோடு உரையாடும் இயல்பிருந்தது...
ReplyDelete'விஜய்மகேந்திரனின் படைப்புலகத்தை எந்தவொரு வகை மாதிரிகலோடும் பொருத்திப் பார்க்கத் தேவையில்லை ' என்றதும்... 'பெருவாரியான சிறந்த இலக்கியங்களில் அடிப்படையாக ஒரு சுவாரசியத்தன்மை இருக்கும்.. அது விஜய்மகேந்திரனின் கதைகளில் இருப்பது அவற்றின் சிறப்பம்சம்' என்று சொன்னதும்.. எனக்கு முக்கியமாகப்பட்டது..
இந்த பதிவில் யவனிகாவின் அவதானிப்பைப் பற்றி குறிப்பிட்டிருப்பது அவசியமான ஒன்று..
கலந்துரையாடலின் போது யாரேனும் ஒருவர் விஜய்யின் கதைகளில் இருந்து சில பகுதிகளை வாசித்து காண்பித்திருக்கலாம் என்று எனக்கு தோன்றியது..இன்னும் நிறைவாய் இருந்திருக்கும்..நன்றி
கூட்டத்தில் உங்கள் பேச்சைப்போலவே கூட்டம் குறித்த உங்கள் பதிவும் நிறைவாகவும், ஞாயமாகவும் உள்ளது.
ReplyDelete