Friday, 2 July 2010
கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 21
ஒரே உறுதிப்பாடு அவர்கள் எல்லாவற்றையும் தங்களோடு கொண்டு போயினர் என்பதே: பணம், டிசம்பர், ரொட்டிக் கத்தி, மதியம் மூன்று மணிக்கு முழங்கும் இடி, மல்லிகை வாசம், காதல். மிச்சம் இருந்தது எல்லாம் தூசு படிந்த வாதாம் மரங்கள், அலையதிர்வு கொள்ளும் தெருக்கள் மற்றும் நினைவுகளால் நிலைகுலைந்த, பேச்சில் அமர்த்தலான மக்கள் குடியுருக்கும், துருபிடிக்கும் தகரக்கூரை கொண்ட, மரவீடுகள். தகரக் கூரையில் தெறிக்கும் மழை போன்ற கூர்மையான தடதட ஒசை கேட்டு நான் வியப்புற்ற போது தான் அந்த மதிய வேளையில் டாக்டர் என்னிடம் முதன்முறையாக் கவனம் காட்டினார். “அவை வான்கோழிகள்”, அவர் என்னிடம் சொன்னார்; பிறகு மூடியிருந்த கதவை நோக்கி தன் அயர்வான சுட்டுவிரலால் சுட்டி முடிவாக சொன்னார், “ராத்திரியில் படு மோசம், ஏன் என்றால் தெருக்களில் மேலும் கீழுமாக ஆவிகள் நடமாடுவதை கேட்கலாம்”
அவர் எங்களை மதிய உணவருந்த வேண்டினார்; நாங்கள் அதை ஏற்றுக் கொள்ளாதிருக்க எந்த காரணமும் இல்லை; ஏன் என்றால் வீட்டு விற்பனையில் சம்பிரதாயங்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. குடியிருப்போர் தாம் வாங்குபவர்கள்; தந்திச்செய்தி வழி விபரங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டாகி விட்டன. எங்களுக்கு நேரம் இருக்குமா? “தேவைக்கு அதிகமாகவே”, அட்ரியானா சொன்னாள், “அதோடு ரயில் வண்டி எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாதே?”
ஆக, நாங்கள் அவர்களுடன் ஒரு உள்ளூர் உணவை பகிர்ந்தோம்; அதன் எளிமைக்கு அவர் உணவு மேஜையில் மட்டுமல்லாது வாழ்வின் எல்லா நடவடிக்கைகளுக்கும் கண்டிப்பாய் பயின்று வந்த மிதத்தன்மையின் திட்டமுறையை தவிர ஏழ்மையுடன் எந்த உறவும் இல்லை. சூப்பை சுவைத்த அந்த கணத்தில் இருந்தே ஒரு முழுமையான தூங்கும் உலகம் என் ஞாபகத்தில் விழித்தெழும் புலனுணர்வு ஏற்பட்டது. ஒவ்வொரு கரண்டி சூப்போடும் பால்யகாலத்தில் எனதாக இருந்து நகரை விட்டு போன பின்னர் நான் தொலைத்து விட்ட சுவைகள் முழுதாக திரும்ப வந்தன; அவை என் இதயத்தை கவ்வின.
மருத்துவருடனான உரையாடலின் ஆரம்பத்தில் இருந்தே அவரை ஜன்னல் வழி கேலி செய்த போதான அதே வயதில் நான் இருப்பதாக தோன்றியது; ஆகையால் அவர் என் அம்மாவிடம் காட்டின அதே தீவிரம் மற்றும் பிரியத்துடன் என்னிடம் பேசும் போது என்னை பயமுறுத்தினார். பாலகனாக இருக்கையில் என் குழப்பத்தை தொடர்ச்சியாக படபடவென கண்சிமிட்டி மறைப்பேன். மருத்துவர் அவ்வாறு பார்க்கும் போது அந்த கட்டுபடுத்த முடியாத தன்னியல்பு செயல்பாடு எதிர்பாராமல் என்னில் திரும்பியது. வெக்கை பொறுக்க முடியாமல் இருந்தது. இந்த நட்புக்கினிய, நினைவேக்கம் கொண்ட முதியவர் என் பால்யகால பீதியாக எப்படி விளங்கினார் என்று என்னையே கேட்டபடி நான் உரையாடலின் ஓரமாகவே சிறிது நேரம் இருந்தேன். பிறகு, ஒரு நீண்ட இடைவேளை மற்றும் முக்கியமற்ற குறிப்புணர்த்தல்களுக்கு பின் என்னை நோக்கினார், “ஆக நீதான் அந்த மாட்சிமை பொருந்திய கெபிட்டோ”, அவர் சொன்னார், “ நீ என்ன படிக்கிறாய்?” ஒரு பேயடித்த நிலையில் என் படிப்பை விவரிப்பதன் மூலம் என் குழப்பத்தை மறைத்தேன். அரசு விடுதிப்பள்ளியில் நல்ல படித்தரங்களுடன் முடித்த மேல்நிலை இளங்கலைப் பட்டம், இரண்டு வருடங்கள் மற்றும் மூன்று மாதங்கள் ஒழுங்கில்லாத சட்டப்படிப்பு மற்றும் செயல்-அறிவு பத்திரிகைப் பணி;
Share This
Labels:
கதை சொல்ல வாழ்கிறேன்
,
மார்க்வெஸ்
,
மொழியாக்கம்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment