என்னைப் பார்த்து தான்
தலையணையில் தலை சாய்க்க
படுக்கை ஓரமாய் உருள
சதா காதுகளை பல கோணங்களிலாய் தூக்கி திருப்பி ஒட்டு கேட்க
உணவையும் உறவையும் நுகர்ந்தவுடன் முதுகெலும்பை வால் போல் தூக்கிக் கொண்டு நடக்க
பார்க்காதவற்றுக்குக் கூட பயந்து கொள்ள
கற்றிருந்தது
இருப்பதிலே வினோதம்
எனக்கு முன்னரே
புரியாததற்கு பதிலாக மீயாவும்
புரிந்ததற்கு கேள்வியாக மௌனமும்
தெரிந்திருந்தது தான்
நாங்கள் இருவரும் மௌனித்திருக்கும் போது
உலகம் தன் அனைத்து துளைகள் வழியும்
ரத்தம் கசிந்தது
எதிரெதிர் துருவங்களில் அக்குருதியால்
உறைந்தது
இறந்த கடல்களில் ஒவ்வொரு அணுவாய்
உயிர்த்தது
அனைத்து திசைகளிலும் புயல்களை
உள்ளிழுத்து ஆசுவாசித்தது
வானின் கண்ணாடி பாளங்களில் விண்கற்களை
வாங்கிக் கொண்டது
தன் கருப்பையை திறந்து திறந்து மூடியது
நாங்கள் காதுகளை காதுகளை திருப்பிய போது
அது ஒருமித்து அலறியது
No comments :
Post a Comment