Saturday, 21 August 2010

மனுஷ்யபுத்திரன்: மனதிற்குள் சொற்களின் ஜெபமாலை



நேற்று ஒரு நண்பருடன் மனுஷ்யபுத்திரனை பார்ப்பதற்காக உயிர்மை சென்றிருந்தேன். நாள் பூரா நாங்கள் நகரத்தில் அலைந்திருந்தோம். உத்தேசமின்றி என்பதால் களைப்பில்லை. தொடர்ச்சியான தூறல்களால் நாள் பூரா பகல் பொழுது சாய்ந்திருந்தது. அடிக்கடி வழியை வேறு தொலைத்ததால் எதிர்பார்த்ததை விட தாமதமாகிக் கொண்டிருந்தது. அத்தனை தாமதமாக ஆறு மணிக்கு மேல் சென்று அவரை சந்திப்பது தொந்தரவாக இருக்குமோ என்று சஞ்சலப்பட்டேன். போன் செய்து இருப்பை உறுதி செய்ய் வேண்டாம் என்று நண்பர் வற்புறுத்தினார். “நமது இன்றைய நாள் இதுவரை அற்புதமாக இருந்தது. மனுஷ்யபுத்திரனை பார்த்துவிட்டால் நிறைவாகி விடும்” என்றார்.
உயிர்மை அலுவலகம் சேர்ந்ததும் மனுஷ் தன் குழந்தையுடன் வீட்டு முன்னறையில் இருப்பது பார்த்ததும் மேலும் தயங்கினேன். அலுவலக அறையில் அவர் எங்களை சந்தித்தார். கார்டூன் கலைஞர் பாபுஜி நோன்புக் கஞ்சியுடன் வந்து சேர்ந்து கொண்டார். அவரை ஒரு கார்டூன் கலைஞர் என்று நம்பவே சிரமமாக இருந்தது. ஒல்லியான தேகத்தில் உருளைக்கண்களுக்கு மேல் தடித்த கண்ணாடி, ஜுப்பா, கலைந்து ஒட்டின சன்னமான தாடி என்றேல்லாம் அவர் இல்லை. “உங்களைப் பார்க்க ஒரு கார்ப்பரேட் கம்பனி மானேஜர் போலிருக்கிறது” என்ற போது “மிகச்சரியாக சொன்னீர்கள்” என்றார் மனுஷ். பாபுஜி தான் நிஜமாகவே கார்ப்பரேட் மேலாளர் தான் என்றார். பாபுஜி மிகப் பணிவானவராக இருந்தார். இடுப்புக்கு கீழ் வெகுநேரம் நெளிந்து விட்டு நான் எழுந்து ”இதோ வந்து விடுகிறேன்” என்று கிளம்பிய போது “என்னால் உங்கள் உரையாடல் தடைபட வேண்டாம். நான் இதோ போய் விடுகிறேன்” என்றார் பாபுஜி. “இல்லை இல்லை” என்று மேலும் நெளிந்து விட்டு “மூச்சா போக வேண்டும்” என்று விளக்கிய பிறகு தான் ஒத்துக் கொண்டார். எதிரில் பேசுபவரின் ஒவ்வொரு வாக்கிய முடிவையும் திரும்பச் சொல்லும் பழக்கம் பாபுஜிக்கு இருந்தது. அது சுவாரஸ்யமாக இருந்தது. உம் கொட்டுவது போல தலையாட்டுவது போல இதுவும் ஒரு சைகை. பாபுஜியிடம் பேசும் போது நாம் என்ன சொல்ல வந்தோம் என்பதை மறப்பது சாத்தியமே இல்லை.

மனுஷ்  ஒத்திசைவான மனநிலையில் இருக்கும் போது மிக நகைச்சுவையாக பேசக் கூடியவர். அதற்கு உடற் களைப்பு ஒரு தடையாகவே இருப்பதில்லை. ஒரு முறை கடுமையான ஜுரத்தில் படுத்திருந்த போது மூன்று மணிநேரங்களுக்கு மேல் என்னிடம் சிரிக்க சிரிக்க பேசினார். பேச்சினிடையே மிகக் கூர்மையான அவதானிப்புகளும் வருத்தம் தோய்ந்த அறிக்கை சொடுக்கல்களும் வரும். நேற்றைய உரையாடலும் அப்படி நீண்ட சிறப்பான ஒன்றாக இருந்தது. நேரத்தை கணிப்பது அவ்வளவு சிரமமாக இருந்தது. பத்து மணிக்கும் எங்களுக்கு அவரை விட்டு பிரிய தயக்கமாக இருந்தது. எங்கள் சம்பாஷணை மிக இயல்பான முறையில் ஒரு பறவை இறகை உதிர்ப்பது போல் பாதியில் முடிந்தது, பார்வையை துண்டித்து முனைமுறிந்த வார்த்தைகளுடன் கிளம்பினோம்.

மனுஷ் அந்த மூன்றரை மணிநேரங்களில் பேசியவற்றை ஒரு சின்ன தொகுப்பாக வெளியிடலாம்: எழுத்து வாசிப்பு கலாச்சாரம் என்ற மையத்தை ஒட்டி அத்தனை விரிவான பன்முக கருத்துக்கள். எஸ்.ரா ஏன் அபுனைவு எழுதுகிறார், சொம்மொழி மாநாட்டைக் கொண்டு கலைஞர் செய்த ”சாதனை” என்ன, பின்னட்டை குறிப்புகளில் இருந்து இலக்கிய, அரசியல் களங்கள் வரை பயன்படுத்தப்படும் உள்ளீடற்ற சொல்லாடல்கள், விமர்சனங்களும், பத்திரிகை செய்ல்பாடுகளும் கேலிக்கூத்தாக மாறி விட்ட சூழல், இந்திய சூழலில் எழுத்தாளன் என்பவனுக்கு உருவாகும் நீதிபூர்வ பொறுப்புக்கும் சாரு-ஜெமோ பூசல் பற்றி வாசகர் புகார் சொல்வதற்குமான தொடர்பு என்று பேசப்பட்ட விசயங்களின் பட்டியல் சற்று நீண்டது. கவிதை உருவாக்கம் அல்லது மனநிலை பற்றி அவர் சொன்னதை மட்டும் இங்கு பதிவு செய்வது என் உத்தேசம்.

  • ஒரு முக்கியமான கவிதையை எழுத அகத்தூண்டலுடன் அறிவும் தேவை என்று அவர் நினைக்கிறார். உதாரணமாக வன்முறை பற்றி கவிதை எழுத வன்முறையின் வரலாற்று, உளவியல, பண்பாட்டு, சமூகவியல், மித்துகள் சார்ந்த ஒரு சிந்தனை ஓட்டம் எழுத்தாளனுக்குள் தொடர்ந்து இருப்பது நல்லது. மனது இப்படி  தொடர்ந்து தீவிரமாக இயக்கப்படும் போது ஒரு எதிர்பாரா தருணத்தில் கவிதை கைவரும். இந்த “தருணம்” நிகழ என்ன செய்ய வேண்டும்?
  • இதற்கு தொடர்ந்து சொற்களுடன், சொற்றொடர்களுடன் “இருக்க” வேண்டும் என்கிறார் மனுஷ். ஏதாவது ஒரு சொல் சட்டென்று படிமமாகி மேலெழுந்து வரலாம். கவிதை  ஆகலாம். இதை ஒரு அபோத நிலை என்று நான் புரிந்து கொள்கிறேன்.ஆனால் இது தி.மு.க மேடை போல் வார்த்தை சிலம்பாட்டம் அல்ல. ஒவ்வொரு கவிஞனும் அவனுக்கான முறையில் மொழியுடன் இப்படி அணுக்கமாக இருக்க முடியும். அல்லது இது மிக இயல்பாக எதேச்சையாக நடக்கலாம். ஆனால் மனுஷ் ஒரு கவிதையை ஒரு “தொழிலாக” கருத வேண்டும் என்று நம்புகிறார் என்பதை இங்கு நினைவுபடுத்த வேண்டும். பகுதிநேர, ஓய்வுக்கால கவிஞர்கள் மீது மனுஷுக்கு நம்பிக்கை இல்லை. ஒரு உடற்பயிற்சியாளன் உண்பதற்காக ஒவ்வொரு முட்டையை உடைப்பது போல் கவிஞன் வார்த்தைகளின் ஜெபமாலையை உருட்டிக் கொண்டிருக்க வேண்டும்.
  • எழுதுவது சில சமயம் உரத்து சிந்திப்பதாக இருக்கலாம். ஒரு உரையாடலைப் போல நாம் படித்ததை சிந்தித்தை எழுதிப் பார்க்கும் போது மேலும் தெளிவாக புரிய, யோசிக்காததை கண்டுபிடிக்க முடியும். எண்ணங்களை தீட்டி துலக்கி அடுக்குவதற்கான ஒரு புத்தாற்றலை எழுத்து இயக்கம் தருகிறது. பனிமூட்டமான மனதுக்குள் நெருப்பாய் துலங்குகிறது.
  • “பார்த்து கேட்ட உறுதி செய்யப்பட்ட உண்மையைத்தான் காட்ட வேண்டும் என்று அவசியமில்லை. சொல்லப் போனால் கற்பனை கலக்கப்பட்ட உண்மைதான் மேலும் நிஜமானது” என்று ஒரு ஐரோப்பிய திரைக்கதையாளரின் கருத்தை நண்பர் அன்று காலை உரையாடலின் போது எடுத்தாண்டார். மனுஷ் இதை வேறொரு கோணத்தில் சொன்னார். அதாவது எஸ்.ரா ஒரு குரங்காட்டியை பற்றி எழுதுகிறார் என்றால் அதில் தகவல்களை விட எஸ்.ரா மொழி மூலம் காட்டும் உண்மை தான் முக்கியம். தகவல்களை உருமாற்றத் தெரிந்தவன் மட்டும் தான் எழுத்தாளன்.
  • தீய நண்பர்களைப் போல தான் தொலைக்க விரும்புகிற சில விரும்பாத புத்தகங்கள் என்ன பண்ணியும் தன்னிடம் திரும்பத் திரும்ப வருவதாக மனுஷ் குறிப்பிட்ட போது ஒரு உவமையை  பயன்படுத்தினார்: ”தூக்கிக் கொண்டு போய் விட்டலும் திரும்ப வருகிற நாய்க்குட்டிகள்”. உரையாடலின் போது மிக சாதாரணமாக உதிர்ந்த இந்த உவமை “நீராலானது” தொகுப்பில் ஒரு கவிதையில் பயன்படுத்தப்பட்டு, மிகச் சிறந்த ஒரு நவீன உவமை என்று சுஜாதாவால் முன்னுரையில் பாராட்டப்பட்டது. நமக்கு மிகுந்த மனவெழுச்சியை தந்த ஒரு உவமை அது. அது மிக இயல்பாக அவரது தினசரி சொல்லாடலின் பகுதியாக இருக்கிறது. மொழி ரசவாதத்தின் இந்த பரிமாணம் எனக்கு வியப்பூட்டியது. 

போகும் வழியில் நானும் நண்பரும் ஒரு சின்னக் கடையில் தோசை சாப்பிட்ட்டோம். பிளாஸ்டிக் முக்காலிகளில் சாலையில் அமர்ந்திருந்த போது காலியான என் தட்டில் வானத்து தூறலில் இருந்து சில துளிகள் விழுந்தன. அன்றைய நாள் அப்படியாக என் தட்டில் விழுந்த ஒன்று தான் எனப் பட்டது. நண்பர் என்னை விட ஆறுவயது இளையவர். விடிகாலை குருவியைப் போன்று ஓய்வற்ற ஆளுமை. அன்று முழுக்க அவரது இளமை எனக்குள் உரசி ஒட்டியபடியே இருந்திருக்க வேண்டும். உடல் மற்றும் மனதில் நான் ஒரு புதுமையை உணர்ந்தேன். அவரை விட்டு பிரிந்த பிறகே அன்றைய நாளின் முதல் களைப்பை அறிந்தேன். நேற்றைய நாளை பின்னோட்டும் போது இப்படி சொல்லத் தோன்றுகிறது:
ஒரு நண்பனுடன் உத்தேசமின்றி ஊர் சுற்றுவது தான் அசலான பயணம். அதன் முடிவில், தெய்வத்திடம் உள்ள நம் கடன் அட்டையில் ஒரு நாள் கூடுகிறது.
Share This

5 comments :

  1. மிக நல்ல ஒரு அனுபவ பகிர்வு நண்பரே..

    ஒரு சிறு குழந்தையின் சேட்டையை அங்குலம் அங்குலமாக ரசிப்பது போலவே சந்தித்த மனிதர்களையும் ரசித்திருக்கிறீர்கள். அது கனமாக உங்களின் வரிகளிலும் படிந்திருக்கிறது.

    மனுஷ்யபுத்ரனின் கவிதைகளின் வரிகளையும் அடிக்கோடிட்டது அழகு.

    பகிர்வுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  2. பேச்சினிடையே மிகக் கூர்மையான அவதானிப்புகளும் வருத்தம் தோய்ந்த அறிக்கை சொடுக்கல்களும் வரும்.

    அவதானிப்பு என்றால் என்ன பொருள்- அனுமானம் செய்தல் அல்லது சிந்தித்தல்


    மிகக் கூர்மையான அனுமானங்கள் ஆஅ

    ReplyDelete
  3. 'ஒரு நண்பனுடன் உத்தேசமின்றி ஊர் சுற்றுவது தான் அசலான பயணம். அதன் முடிவில், தெய்வத்திடம் உள்ள நம் கடன் அட்டையில் ஒரு நாள் கூடுகிறது' - அபிலாஷ், அருமையாகச் சொன்னீர்கள்! இதை நானும் உணர்ந்திருக்கிறேன்.

    ReplyDelete
  4. கருத்துக்கள் சொன்ன நண்பர்களுக்கு நன்றி!

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates