Tuesday, 31 August 2010

எழுத்தாளன் என்றால்?




இது ஒரு கேள்வி மட்டும்தான். பதில் சொல்கிற உத்தேசத்தில் எழுதவில்லை. சுருக்கமாக:
எழுத்தாளன் என்பதை வேலை, பொறுப்பு, அடையாளம் என்று நினைக்கிறோம். இங்கே ஒரு சிக்கல் வருகிறது. எழுதுவது என்பது ஒரு தகவல் தொடர்பு முறை. பேசுவது, சங்கேதம், சைகை போல. ஆனால் எழுதும் போது கடத்தப்படும் சேதி கட்டாயம் எதிர்தரப்பை போய் சேர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மேஜையில் ஒரு மெழுகை கொளுத்தி வைத்து இருட்டிடம் பேசுவது போல் ஒரு எழுத்தாளன் எழுதிக் கொண்டு போகிறான்.
ஐயாயிரம் பேரை உத்தேசித்து தமிழ் எழுத்தாளன் ஒரு புத்தகம் எழுதினால் அதை பத்தாயிரமும் படிக்கலாம், வெறும் ஐந்து பேர் மட்டும் சீந்தலாம். என் அக்கறை இந்த எண் சம்மந்தப்பட்டது அல்ல. எத்தனை பேர் படித்தாலும் அவனது சேதி போய் சேர்ந்ததற்கு எந்த நிச்சயமும் இல்லை. உதாரணமாக வாழ்ந்த காலத்திலே நீட்சேவை இலக்கிய தத்துவ வாசகர் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. கழுதையை கட்டி அழுது பைத்திய விளிம்பில் நிரந்தரமாய் கால் தடுக்கிய பின்னர் அவர் ஒரு யூத எதிரியாக, இனவாத ஆதரவாளராக அவரது சகோதரி எலிசபெத்தால் தவறாக திரித்து காண்பிக்கப்பட்டார். அவரது புத்தகங்கள் ஹிட்லரின் இலக்கிய கண்காட்சியில் இருந்தன. பின்னர் இருபதாம் நூற்றாண்டில் அவர் ஒரு கலகவாத பின்நவீனத்துவ சிந்தனையாளராக பூக்கோவால் கொண்டாடப்பட்டார். அதற்குப் பின்னரும் தத்துவ வாத்தியார்கள் தோன்றி இல்லை அவர் ஒரு மரபான சிந்தனையாளர் தான் என்கிறார்கள். நீட்சே என்ன உத்தேசித்தார்? தன்னுடைய அதிமனிதனாக அவர் ஹிட்லரையோ மோடியையோ ஏற்றுக் கொண்டிருப்பாரா? பின்நவீனத்துவத்தை ஏற்றிருப்பாரா? இஸ்லாமிய கலாச்சாரத்தை, குறிப்பாய் அஸாஸின்கள் எனப்படும் அதன் தொழில்முறை கொலைஞர்களை போற்றிய நீட்சே இன்று லஷ்கர் போன்று அமைப்புவாதிகளை எப்படி நேர்கொண்டிருப்பார்? நீட்சே என்ன உத்தேசித்தார் என்பது இன்னமும் குழப்பமாக இருக்கிறது. எனக்குத் தெரிந்த ஆய்வாள நண்பர் ஒருவர் தமிழின் திணைக் கோட்பாட்டின் படி நீட்சே ஒரு பாலை நிலக் கவிஞர் என்று தனி கோட்பாடு வைத்திருக்கிறார். நீட்சேவின் குரல் வாசகனின் செவிப்பறையை அடைய இன்னும் எத்தனை ஒளிஆண்டுகள் கடந்து வர வேண்டும்?
ஒரு இசைக்கலைஞன், நடிகன், பேச்சாளன், ஆசிரியன், போதகன், கூத்துப்பாடகன் என அனைவரும் ஒரு கேட்பாளர்/பார்வையாளர் துணை கொண்டு தான் இயங்குகிறார்கள். தான் பாடுவதை யாரும் கேட்காமல் போய் விடுவார் என்ற சஞ்சலமே ஒரு பாடகனுக்கு இருக்காது; கூடவே தவறாக கேட்பார்கள் என்ற குழப்பமும். ஆனால் மூட்டமான அடையாளம் கொண்டிருக்கும் எழுதுகிற ஒருவன் தன்னை “எழுத்தாளன் என்றால் நியாயமானதா? எழுத்தாளன் நிச்சயம் எழுதித் தெரிவிப்பவன் அல்ல.
ஆனால் எழுத்தாளன் நிச்சயம் தன்னை தூலப்படுத்துவதற்கு ஒரு வழி உள்ளது. அது ஆகக் கூடிய மட்டும் திசைதவறாமல் சொல்ல வந்ததை மட்டும் சுருக்கமாக சொல்லி விடுவது. ஆனால் சுருக்கிக் கூறுவது நிச்சயம் இலக்கியம் அல்ல என்கிறார் ரொலாண்ட் பார்த். அது பள்ளி கல்லூரி வாத்தியார்கள் செய்யும் அக்கிரமம் என்கிறார் அவர். வடிகட்டப்பட்டு கடும் மௌனத்துடன் வரும் ஒவ்வொரு சொற்றொடரும் எதிர்சாரி மீது கடும் அதிகாரத்தை பிரயோகிக்கிறது. உதாரணமாக மாணவர்கள் சுயமாக யோசிப்பதை, கிளைபிரிந்து விவாதிப்பதை ஒரு லட்சிய ஆசிரியன் அனுமதிக்க மாட்டான். அவனது சிந்தனைப் போக்கில் இருந்து இம்மியும் பிசகாமல் மாணவன் பின் தொடர வேண்டும். அதற்காக அவன் சொல்ல வந்ததை அதனது பிற அர்த்த சாத்தியங்கள், குறியீட்டு தூண்டுதல்களில் இருந்து சுத்திகரிக்கிறான். முன் பின் சிந்திக்க வாய்ப்பற்ற எண்ணங்களாக சுருக்குகிறான். தான் உத்தேசித்தது போய் சேர்ந்து விட்டதா என்று அடிக்கடி மாணவனின் உடல் மொழியை சோதித்து உறுதி செய்கிறான். ஒரு பழுத்த ஆசிரியனின் மூளை இவ்வாறு ஒரு துப்பாக்கி முனையாகவே செயல்படுகிறது. இதையே பார்த் இலக்கிய விரோதம் என்கிறார். நீட்சேவுக்கு தான் பேசுவதன் அர்த்த நிச்சயத்தன்மை குறித்த அவநம்பிக்கை எப்போதும் இருந்திருக்கிறது. அவர் ஒரு மொழி ஆய்வாளரும் கூட. நூற்றாண்டுகளின் உருவக, குறியீடுகள் படிந்து செறிவு கொண்டது மொழி. அதை வைத்து ஒன்றை புதுசாக கூறுவது கிட்டத்தட்ட வெற்றி கொள்ள முடியாத ஒரு சவால். அதனால் நீட்சே தனது அவதானிப்புகளை “இருக்கலாம், தோன்றுகிறது என்றே முன்வைக்கிறார் (அவரது வசைகளின் தீர்க்கத்தன்மை வேறு). ஒவ்வொரு முறை சுருக்கி தெளிவாக கருத்துக்களை சொல்ல முயலும் போதும், ஒரு பொருளில், எழுத்தாளன் உண்மைக்கு விரோதமாக நடக்கிறான், வாசகனுக்கு துரோகம் செய்கிறான். சுருக்கமாக அவன் பொய் சொல்கிறான்.

ஆனால் மாறாக மொழியின் அர்த்தச் சுமையில் இருந்து விடுபட அவன் மறைமுகமாய், பூடகமாய் தான் எழுத முயல வேண்டும். அப்போது வாசகன் மாயமாகி விடுகிறான். இன்று ஒரு தீவிர இலக்கியவாதி தன் எழுத்தை லகுவாக்கினால் வெகுஜன வாசகர்களுக்காக சமரசம் செய்வதாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இது ரோலாண்ட் பார்த் ஏற்கனவே விரல் சுட்டியது தான் என்றாலும் இதில் எத்தனை சதவிதம் நியாயம் உள்ளது? எழுத்தாளன் என்ன தான் செய்ய முடியும்? 


இது சற்று தத்துவார்த்தமான கேள்வி. புலன்களால் உணரப்படும் உலகம் நிஜம் அல்ல என்று நூற்றாண்டுகளாய் அனைத்து தத்துவஞானிகளும் யோசித்திருக்கிறார்கள். இப்படியான உலகை ஏற்பதா நிராகரிப்பதா என்பதே ஒவ்வொரு தலைமுறையிலும் தத்துவஞானிகள் இடையே வேறுபாடான நிலைப்பாடாக இருந்து வந்துள்ளது. அனைவரும் இருட்டில் தடவியபடிதான் பேசி இருக்கிறார்கள். ஆனால் இலக்கிய உலகம் வேறுமாதிரியாக இயங்குகிறது. இலக்கிய விமர்சன வரலாற்றில், எழுத்தாளன் உருவாக்கும் கற்பனை உலகம் ஒருவிதத்தில் நிஜமானது, முக்கியமானது என்று மீளமீள அழுத்துகிறார்கள். ஒரு கட்டத்தில் தத்துவத்தில் இருந்து இலக்கிய எழுத்துக்கு நகரும் நீட்சேவிடமும் இந்த தன்னம்பிக்கையின் ஆவேசம் கூடுகிறது. அவர் ஆரம்பத்தில் எழுதின The Birth of Tragedy என்ற நூல் ஆய்வாளக் கூட்டத்தினால் நிராகரிக்கப்பட்டது. நீட்சேவின் மொழி தான் அதற்கு காரணம். ஆய்வு அல்லது மேற்கூறிய “ஆசிரிய தட்டை மொழியை தவிர்த்து ஒரு வித ஆவேச, உருவக மொழியை பயன்படுத்தி இருந்தார். நீட்சேவின் மொழியில் இருந்த சத்தியத்தை தரிசித்து விட்டதான மிகைநம்பிக்கை மற்றும் தீப்பற்றிய சொற்கள் தத்துவ ஆய்வாளனுக்கு உரியது அல்ல. இதனால் அவரது வாழ்நாள் முழுக்க கல்வியாளர்களால் தனிமைப்படுத்தப்பட்டார். உலகம் பெரிய பொய் என்று நீட்சே நம்பினார். ஆனால் அந்த மரபான தத்துவார்த்த அவநம்பிக்கை அவரது எழுத்தை தொந்தரவு செய்யவில்லை. மிகுந்த சரளத்துடன் தனது நம்பிக்கைகளை தயக்கமின்றி எழுத்து மூலம் சொன்னார். ஆனால் சுருக்கி பத்தியாக்காமால் நிஜத்தின் அருகில் செல்ல பிரயத்தனப்பட்டார். இதற்கு உருவகம், மணிமொழி, பகடி என மொழியின் அனைத்து நுட்பங்களையும் உத்திகளையும் பயன்படுத்தினார். அதாவது, நீட்சே தத்துவஞானியாக மட்டுமே இருந்தால் இப்படி உண்மையை காட்ட முயன்றிருக்க மாட்டார். அவர் எழுத்தாளராக மாறினார். காரணம் எழுத்தாளனுக்கு இப்படி தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட தன்னம்பிக்கை என்றுமே இருந்துள்ளது. அவன் ஒரேபடியாக சமூகத்தால் நம்பப்பட்டும் அஞ்சப்பட்டும் புறக்கணிப்பட்டும் வருகிறான். எப்படி இருந்தும் அவன் தனது அடையாளம், சொல்ல வந்த சேதி, கைக்கொண்ட மொழி அனைத்தின் மீதும் உறுதியான நம்பிக்கை கொண்டு இயங்குகிறான். அவை உண்மையா? நாம் இன்னும் நெடுங்காலம் தொடர்ந்து தள்ளிப் போட வேண்டிய கேள்வி அது!
Share This

3 comments :

  1. சரியாக சொன்னிர்கள் அருமையான பகிர்வு ..

    ReplyDelete
  2. அன்பிற்கினிய நண்பரே..,

    / /... எழுதும் போது கடத்தப்படும் சேதி கட்டாயம் எதிர்தரப்பை போய் சேர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.../ /

    நீங்கள் சொல்வது யதார்த்தமாக இருந்தாலும்..., உங்களின் கருத்துக்கள் மற்றவர்களை பொய் சேர வேண்டும் என நினைக்கிறேன் - தமிழ்மணம்,இன்டலி போன்ற ஒட்டு பட்டையை இணையுங்கள்.

    நன்றி..,
    மரங்களோடு மனிதம் வளர்ப்போம்...
    அன்புடன்.ச.ரமேஷ்.

    ReplyDelete
  3. // இன்று ஒரு தீவிர இலக்கியவாதி தன் எழுத்தை லகுவாக்கினால் வெகுஜன வாசகர்களுக்காக சமரசம் செய்வதாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.//


    அருமையான பகிர்வு. நன்றீ. வாழ்த்துக்கள்

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates