நியூசிலாந்தை அடுத்து மிகக்குறைந்த எண்ணிக்கையில் கிரிக்கெட் ஆடும் மக்கள் தொகை கொண்ட நாடு இலங்கை தான். ஒரே வித்தியாசம் இலங்கையில் கிரிக்கெட் பக்தி அதிகம். இருபது வருடங்களுக்கு மேற்பட்ட போர்ச் சூழலில் குறைந்த பட்ச ஆடுகள வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புடன் கிரிக்கெட் பயிலும் இலங்கையினர் கடந்த பத்தாண்டுகளில் சந்தித்து வந்துள்ள சவால்கள் மற்ற எந்த கிரிக்கெட் பாரம்பரியமுள்ள நாட்டினரும் நேரிடாதவை. இதன் காரணமாகவே இலங்கையின் கடந்த பத்து வருட வளர்ச்சி மிக பாராட்டத்தக்கது ஆகிறது.
போர் சூழல் காரணமாக இச்சிறு தீவுக்கு பயணப்பட ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து தயங்கி வந்துள்ளன. விடுதலைப்புலிகளின் ஆக்கிரமிப்பில் இருந்த பகுதிகளில் உள்ள ஒரு தலைமுறை தமிழர்களுக்கு தேசிய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. இலங்கை தனது கிரிக்கெட் வரலாற்றில் கண்டடைந்த சில மிகச்சிறந்த கிரிக்கெட்டர்களில் தமிழர்கள் குறிப்படத்தகுந்தவர்கள் என்பதையும் இங்கு கருத வேண்டும். தான் பார்த்ததிலேயே அற்புதமான மட்டையாளர் என்று பிராட்மேனால் பாராட்டப்பட்டவர் சதாசிவம். இலங்கை கொடியில் உள்ள அனைத்து சிங்கள சிங்கங்களுக்கும் சேர்த்து கர்ஜித்த தமிழரான முரளிதரன் மற்றொருவர். இந்த நிலையில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக கிட்டத்தட்ட ஒரு துண்டுபட்ட கிரிக்கெட் தேசமாகவே இலங்கை ஆடி வந்துள்ளது. இப்படியான ஒரு ஊன நிலையில் தான் ஐ.சி.சி தனது FTP எனப்படும் எதிர்கால பயண நிரலில் இலங்கைக்கு மிகக் குறைவான வாய்ப்புகளை அளித்து பயங்கர அநியாயம் இழைக்கிறது.
இலங்கைக்கு ஐரோப்பிய நாடுகளில் ஆடும் சந்தர்பங்களை ஐ.சி.சி மிகக் குறைவாகவே வழங்கி வருகிறது. உதாரணமாக கடந்த மூன்று வருடங்களில் இலங்கை ஆசியாவுக்கு வெளியே எந்த நாடுகளுக்கு சென்று டெஸ்டு ஆட வாய்ப்பு அளிக்கப்பட இல்லை.என்று அணித்தலைவர் சங்கக்கரா புகார் செய்துள்ளார். 2010-இல் கூட அவர்களுக்கு இரு டெஸ்டு ஆட்டங்களையே ஐ.சி.சி ஒதுக்கியது. பின்னர் இந்திய வாரியத்துடன் ஒரு தனிப்பட்ட ஒப்பந்தம் மூலமே இந்தியாவின் சமீப டெஸ்டு தொடர் பயணம் சாத்தியப்பட்டது. இலங்கை அணி தென்னாப்பிரிக்காவுக்கு பயணித்து ஒன்பது வருடங்களாகின்றன. இங்கிலாந்துக்கு சென்று ஐந்து வருடங்களாகின்றன. இலங்கை அணித் தலைவர் சங்கக்கரா மற்றும் ஜெயவர்தனே ஆகியோர் உலகின் மிகத்திறமையான மட்டையாட்ட வீரர்களில் இருவர். ஆனால் ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஹஸ்ஸி மற்றும் தென்னாப்பிரிக்காவின் காலிஸ் ஆகியோரைப் போன்று உலக அளவிலான அங்கீகாரம் அவர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. காரணம் அவர்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் ஆடி ஓட்டமெடுக்கும் வாய்ப்பை ஐ.சி.சி தொடர்ந்து மறுத்து வருவதே. உதாரணமாக தனது பதிமூன்று வருட கால ஆட்டவாழ்வில் ஜெயவர்தனே மொத்தம் நான்கு முறைகளே ஆஸ்திரேலியாவில் டெஸ்டுகள் ஆடியுள்ளார். இதனால் முரளிதரனுக்கு நேர்ந்தது போலவே இந்த சிறந்த மட்டையாள இரட்டையர் ”ஆசிய ஆடுதளப் புலிகள்” மட்டுமே என்று ஓய்வுக்கு பின்னர் ஒரு பரிகாசச் சிரிப்போடு புறக்கணிக்கப்படுவார்கள். இந்தியாவில் சச்சினுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தால் அவரது பரிணாமம் எப்படி இருந்திருக்கும் என்பது ஒரு சுவையான கற்பனை. இப்படியான ஒரு அநீதி வேறெந்த முக்கிய கிரிக்கெட் ஆடும் நாடுகளுக்கும் இழைக்கப்பட்டது இல்லை.
சுவாரஸ்யமாக கடந்த பத்தாண்டுகளாக சொந்த நாட்டில் நடந்த டெஸ்டு தொடர்களில் எதையுமே இலங்கை இழக்கவில்லை. சமீபத்தில் இந்த வெற்றி வரலாற்றை ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, மே.இ தீவுகள் போன்ற நீண்ட கிரிக்கெட் பாரம்பரியம் கொண்ட அணிகளால் கூட சாதிக்க முடியவில்லை. சொல்லப் போனால் சொந்த நாட்டில் மேற்சொன்ன ஆதிசக்திகளின் தோல்வி விகிதம் கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்தே வந்துள்ளது. இவ்வணிகளின் முக்கிய வீரர்கள் அந்திமத்தில் மெல்ல தேய்ந்து போய் அல்லது ஓய்வை வரிசையாக அறிவித்து ஐ.சி.எல்லும் பின்னர் ஐ.பி.எல்லிலும் எச்சில் தொட்டு எல்லைகளை அழித்து எழுதினர். தெ.ஆப்பிரிக்கா தவிர வேறெந்த சமகால அணியும் அடுத்த தலைமுறைக்கான உயர்ரக வீரர்களை உருவாக்குவதில் வெற்றி பெறவில்லை. (இந்த காரணங்களினாலே நம்பர் 1 யாரென்ற குழப்பம் தொடர்ந்து நிலவுகிறது) இந்த காலகட்டத்தில் இலங்கைக் கிரிக்கெட் தன் குரல் திறந்து கூரையேறி ஒரு கிழிசலான கூவலுடன் தன்னை அறிவித்துக் கொண்டு மெல்ல மெல்ல முதிர்ச்சி பெற்றது. உலக கிரிக்கெட்டின் அந்தி இருட்டில் இலங்கை தன் விடியலை கண்டறிந்தது. ஆனால் ஐ.சி.சியின் ஒருபக்க சாய்வான அணுகுமுறை மற்றும் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைத்து வெற்றிகளுக்கும் மைய காரணமாக இருந்த முரளிதரனின் வீச்சுமுறை பற்றி ஆஸ்திரேலியர் திரித்து கட்டிய சர்ச்சைகளும் இலங்கை கிரிக்கெட்டின் இந்த விடியலை ஒரு கறுப்புக் கண்ணாடி வழி உலகை பார்க்க வைத்தது.
96இல் உலகக் கோப்பையை வென்றாலும் இலங்கை ஒற்றை பரிமாண அணியாகவே பல வருடங்கள் இருந்தது. ரெணதுங்கா, டிசில்வா, மகனாமா, திலகரெத்னே போன்ற முதிய எதிர்மறை மட்டையாளர்களின் ஒரு பெரும் படையினால் அணியை கோவில் தேரின் வேகத்திலேயே அழைத்து செல்ல முடிந்தது. அக்காலத்தில் ஜெயசூரியாவின் மட்டையாட்டத்தை பொறுத்தே வெற்றி குறித்து சிந்திக்கவே இலங்கை நிர்வாகம் தலைப்படும். ஆனால் ரெண்டாயிரத்துக்கு பிறகு ஜெயவ்ர்தனே, சங்கக்காரா போன்ற இளைஞர்களின் எழுச்சியும் தொடர்ந்த நிலைப்பும் ஒரு நேர்மறை அம்சத்தை அணிக்கு கொண்டு வந்தது; அத்தோடு டெஸ்டு மற்றும் ஒருநாள் ஆட்டங்களில் ஓட்டங்களுக்கான பொறுப்பும் ஜெயசூரியாவிடம் இருந்து மத்திய ஆட்டவரிசைக்கு நகர்ந்தது.
பந்து வீச்சு இலங்கைக்கு ஒரு நெடுங்காலப் பிரச்சனையாக இருந்து வந்துள்ளது. ஒரு வருடத்துக்கு முன்னர் மெண்டிஸ் அறிமுகமாகும் வரை, மிக சமீபமாக ரந்திவ் தோன்றும் வரை முரளிதரனுக்கு ஜோடி சுழலரை கண்டடைவதில் இலங்கை தேர்வாளர்களுக்கு கடுமையான ஏமாற்றமே கிடைத்து வந்தது. இதே தனிமை நிலையே இடக்கை வீச்சாளர் சமிந்தா வாசுக்கும் நெடுங்காலம் அணியில் இருந்தது. ஆனால் கடந்த ஐந்து வருடங்களில் எதிர்மறை மட்டையாட்ட அணி என்ற தளத்தில் இருந்து வெகுவாக நகர்ந்து, தனது ஆபத்தான பந்து வீச்சுக்காக அதிகமாக அறியப்பட்ட அணியாக இலங்கை மாறியது. இந்த காலகட்டத்தில் பாகிஸ்தான் பந்துவீச்சில் பலவீனமாகி மட்டையாட்டத்தை சார்ந்து இயங்கியது சுவாரஸ்யமான சேதி. அதே போல் பந்து வீச்சில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவை விட மாறுபட்ட தன்மைகள் கொண்ட அணியாக இலங்கை விளங்கியது. முரளிதரன் மற்றும் மலிங்கா தங்களுக்குள்ளாகவே எதிரணியினரை மொத்தமாக கைப்பற்றும் திறமை கொண்டவர்களாக இருந்தனர். பந்துவீச்சில் இப்படியான ஒரு ஆபத்தான இரட்டையர் ஜோடி தொண்ணூறுகளின் பிற்பகுதியில் இருந்து ரெண்டாயிரத்தின் பாதி வரை ஆஸ்திரேலியாவிடம் மட்டுமே இருந்தது: மெக்ராத் மற்றும் வார்ன். தொண்ணூறுகளின் முற்பகுதி வரையிலான பாகிஸ்தானின் அக்ரம் – வக்கார் ஜோடியுடனும் இலங்கை ரெட்டையர்களை ஒப்பிட முடியும். இவர்களின் சிறப்பு என்னவென்றால் எதிரணி மட்டையாளர்களுக்கு இருநூறு சொச்சம் இலக்கை கூட இவர்களை சார்ந்த அணிகளால் நிர்ணயித்து தன்னம்பிக்கையுடன் பாதுகாத்து ஆடி வெற்றி பெற முடிந்தது. 2007 உலகக் கோப்பையில் நியூசிலாந்துடனான அரை இறுதி ஆட்டத்தில் முதலில் ஆடிய இலங்கை 180 சொச்சத்தில் நான்கு விக்கெட்டுகள் இழந்து தத்தளித்து கொண்டிருந்தது. மிகுந்த தன்னம்பிக்கையுடன் துடிப்பாக நியூசிலாந்தினர் பந்து வீசி களத்தடுத்துக் கொண்டிருந்தனர். ஜெயவர்தனே மிக நிதானமாக ஓட்டமெடுத்து 220 ஓட்டங்களுக்கு அணியை அழைத்து சென்று கொண்டிருந்தார். ஆனால் அத்தொடரில் அபாரமான ஆட்டநிலையில் இருந்த முரளிதரனினை அடுத்த இன்னிங்சில் சந்திக்க நியூசிலாந்து அஞ்சியது. இக்காரணத்தால் இருநூறு சொச்சத்தை துரத்த கூட நியூசிலாந்தினருக்கு நெஞ்சுரம் இருக்கவில்லை. முரளியின் பிம்பம் காரணமாக இறுதி பத்து ஓவர்களின் அவர்கள் பந்து வீச்சு போது கடுமையான பதற்றத்தில் தடுமாறியது. இலங்கை நாற்பது ஓவர்கள் மட்டையாடிய நிலையிலேயே நியூசிலாந்தினர் மனதளவில் தோற்றுப் போயிருந்தனர். இதனால் நூறு ஓட்டங்களுக்கு மேலாக இந்த கட்டத்தில் இலங்கையை எளிதில் சேகரிக்க விட்டனர். 220க்கு சுருட்டப்பட வேண்டிய இலங்கை அணி 289 எடுத்தது. சுருக்கமாக இவ்வாட்டத்தை இலங்கை அணி முரளிதரனின் நிழலுருவைக் காட்டியே உளவியல் ரீதியாக வென்றெடுத்தனர்.
எதிர்காலத்திலும் மேலும் பல ஆட்டங்களில் இந்த பந்து வீச்சு அச்சுறுத்தல் பாணியை இலங்கை தொடர்ந்தது. மெல்ல மெல்ல இலங்கை ஒரு பல்பரிமாண அணியாக பரிணமித்தது. ஜெயசூரியாவுக்கு பிறகு தில்ஷான் அவரை விட ஆபத்தான துவக்க வீரராக ஆடி வருகிறார். பத்து ஓவர்களில் இவரால் அணிக்கான மொத்த ஓட்டங்களில் பாதியை திரட்ட முடியும். முரளிதரனின் ஓய்வுக்கு பிறகு அணியின் பந்துவீச்சு வீரியத்தை ஓரளவுக்கு மலிங்கா தக்க வைத்து வருகிறார். மெண்டிஸும், ரந்திவும் தங்களது திறன்களை தொடர்ந்து மெருகேற்றும் பட்சத்தில் வெற்றிடமாகி விட்ட முரளிதரனின் ராட்சத காலடிகளில் இடதை அவர்களால் சேர்ந்து நிரப்ப முடியும். தனது உடற்தகுதியை தொடர்ந்து தக்க வைக்கும் பட்சத்தில் மலிங்காவால் வலதை நிரப்ப முடியும். பத்தாண்டுகளுக்கு மேலாக தனிமனிதராக முரளி ஆரம்பித்த வெற்றிப் பாதையை இந்த மூவரணியால் எதிர்காலத்தில் தொடர முடியுமானால் இலங்கை அணியால் மேலும் பல உச்சங்களை அடைய முடியும். நடந்து முடிந்துள்ள இந்தியாவுடனான டெஸ்டு தொடர் இலங்கையின் எதிர்காலத்துக்கான ஒரு நல்ல அறிகுறி என்று சொல்லலாம்.
ஐ.பி.எல்லால் சர்வதேச (அல்லது “ஐரோப்பிய”) கிரிக்கெட் கவுன்சில் தனது காலாவதியான மதிப்பீடுகளின் இருப்பையும், இந்திய வாரியத்தின் பணபலத்தால் அது தன் ஆட்சி நாற்காலியையும் காலி செய்யும் காலம் தொடங்கியது. முரளிதரன் – சங்கக்காரா- ஜெயவர்தனே கூட்டணியால் துருவேறிய கம்பிகளுக்கு பின் கோழிகளை துரத்தி பிடித்து கர்ஜித்த காலம் இலங்கைக்கு முடிந்தது.
ரண்டிவ் ஒரு சிறப்பான கண்டு பிடிப்பு போல தோன்றுகிறது போருன்ந்து இருந்து பார்போம்
ReplyDeleteஇலங்கையின் கிரிக்கெட் சம்பந்தமாக தங்களின் பதிவுக்கு முதலில் நன்றிகள். இலங்கையின் கிரிக்கெட்டில் வரலாற்றில் சதாசிவம் என்பவரை தங்களின் பதிவூடாகவே அறிய முடிந்தது.அதற்கு மீண்டுமொரு முறை நன்றிகள்.அத்துடன் இப்பதிவினூடாக பல்வேறு தவல்களை எழுதி இருந்தீர்கள். மென்மேலும், இவ்வாறான தகவல்களை எழுதுங்கள்.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்பிற்கினிய நண்பரே..,
ReplyDeleteகிரிக்கெட் அலசல் நன்றாக உள்ளது - ரசித்தேன்
நன்றி..,
மரங்களோடு மனிதம் வளர்ப்போம்..
அன்புடன் ச.ரமேஷ்.
சதாசிவம்...
ReplyDeleteஆமாம்...
அப்படியே ரஸல் ஆர்னல்ட் உம் குறிப்பிடத்தக்க தமிழராச்சே?
FTP இல் சில நாடுகள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றன, இலங்கை ஆக மோசமாகப் பாதிக்கப்படுகிறது.
பதிவை இரசித்தேன், நல்ல தகவல்கள்.
இலங்கை கிரிக்கட் பற்றிய அருமையான பதிவு..
ReplyDelete