Monday, 16 August 2010
சூரஜ் ரந்திவ்: போட்டி மனப்பான்மையும் தோல்வி மனப்பான்மையும்
பொழுதுபோக்குக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு ஆட்டம் தொழிலாக மாறும்போது எத்தகைய தனிமனித ஒழுக்க சீரழிவுகளை கொண்டு வரும் என்பதை சமகாலத்தில் பலமுறை பார்த்துள்ளோம். பொதுவாக தன்னம்பிக்கை இல்லாத ஆட்டவீரர்கள் கடுமையான நெருக்கடி நிலைமைகளில் வக்கிரமாக வன்மத்துடன் நடந்து கொள்வார்கள். சச்சின், ரிக்கி பாண்டிங், ஜெயசூரியா, அல்லது சேவாக் போன்ற உச்சப்ட்ச திறமையாளர்களுக்கு இப்படி லட்சக்கணக்கான கண்கள் முன் நெறியற்ற, அறந்தவறிய முறைகளில் நடந்து கொள்ள வேண்டிய அவசியங்கள் ஏற்பட்டதில்லை. எதிரணி வீரரை முழங்கையால் இடிப்பதோ (கம்பிர்), வேண்டுமென்றே ஓட்டத்துக்காக விரையும் மட்டையாளரை தடுத்து ரன் அவுட் செய்வதோ (அக்தர்) ஒரு சாமான்ய ஆளுமையின் நிலைப்பாடு மட்டுமே ஆகும். சமீபமாக நாம் பார்த்துள்ளதிலேயே படுஅநீதியான ஆட்டம் இன்று ஒரு இளம் வீரரிடம் இருந்து வெளிப்பட்டது. அவர் சூரஜ் ரந்திவ்.
இன்றைய ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா இலக்கை அடைய ஒரு ஓட்டம் தேவைப்பட்டது. களத்தில் மட்டையாடிய சேவாகுக்கு சதமடிக்கவும் ஒரே ஓட்டம் தான் வேண்டும். அந்நேரம் பார்த்து ரந்திவ் ஒரு பெரிய நோபாலை வேண்டுமென்றே வீசினார். சேவாக் அதை லாங் ஆபில் ஆறு அடித்தாலும், முதலில் அப்பந்து நோபால் என்பதால் சேவாகால் தன் சதத்தை நிறைவு செய்ய முடியவில்லை. ரந்திவ் சமீப காலமாக தனது திறமை, போட்டி மனப்பான்மை மற்றும் தன்னம்பிக்கையால் அனைவரையும் கவர்ந்து வருபவர். அவரது திறமைக்கு அவர் அந்த கடைசி பந்திலும் சேவாகை வெளியேற்றவே முயன்றிருக்க வேண்டும். அதுதான் நியாயமாகவும், நேர்மறையான நிலைப்பாடாகவும் இருந்திருக்கும். சாத்தியத்தின் விகிதத்தை மறந்தால் ஒரு ஓட்டத்தில் பிந்தங்கிய நிலையிலும் கூட ஒரே ஓவரில் ஒரு வீச்சாளரால் ஆட்டத்தின் போக்கை மாற்றவோ வென்று தரவோ நிச்சயம் முடியும். ஆனால் ரந்திவிடம் வெளிப்பட்டது காழ்ப்பும் தோல்வி மனப்பான்மையும் மட்டுமே. சேவாகை வெளியேற்றுவது என்பதை விட அவருக்கு சதத்தை மறுப்பதே அவரது நோக்கமாக இருந்தது. முத்தையா முரளிதரன் அல்லது வார்ன் போன்ற ஒரு மேதை இப்படி கிரிக்கெட் விழுமியங்களை புறந்தள்ளி தனக்கும் அணிக்கும் அவப்பெயர் பெற்றுத்தந்திருக்க மாட்டார். இன்றைய கிரிக்கெட்டர் ஒரு கனவானாக இருக்க வேண்டாம் என்றாலும் குறைந்த பட்சம் நாணயஸ்தனாக நடக்கவோ அல்லது நடிக்கவோ முயலலாம்.
அரங்கில் இருந்து வெளியேறும் போது சேவாகால் தன் ஏமாற்றத்தை மறைக்க முடிய இல்லை. இருந்தும் தன்னை பேட்டி கண்ட டோனி மோரிசனிடம் “இது எல்லாரும் செய்வது தான். எனக்கு சதம் தரக் கூடாது என்று நினைத்தார்கள். நியாயம் தான்” என்று முழுங்கினார். இதுகூட சர்ச்சைகளை தவிர்க்க விரும்புகின்ற ஒரு முதிர்ச்சியான பதில் தான்.
“இன்னா செய்தாரை ஒறுத்தல் ...” ரந்திவ் வெட்கி தலைகுனிய வேண்டும்.
இன்னும் ஒரு முக்கிய கேள்வி உள்ளது. வருகிற ஐ.பி.எல்லில் டெல்லி அணியால் ரந்திவ் ஏலம் எடுக்கப்பட்டால் எப்படி சேவாகை, இந்திய ரசிகர்களை எதிர்கொள்ளப் போகிறார்? இனிமேல் கிரிக்கெட் உலகில் அவருக்கு கிடைக்கப் போகிற மரியாதை தான் என்ன?
Share This
Subscribe to:
Post Comments
(
Atom
)
//சச்சின், ரிக்கி பாண்டிங், ஜெயசூரியா, அல்லது சேவாக் போன்ற உச்சப்ட்ச திறமையாளர்களுக்கு இப்படி லட்சக்கணக்கான கண்கள் முன் நெறியற்ற, அறந்தவறிய முறைகளில் நடந்து கொள்ள வேண்டிய அவசியங்கள் ஏற்பட்டதில்லை.//
ReplyDeleteஇதில் நீங்கள் பாண்டிங்கை சேர்த்திருப்பது நல்ல நகைச்சுவைக்காக மட்டுமே என எண்ணுகிறேன். கும்ப்ளே தலைமையிலான இந்திய அணியின்
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது பாண்டிங் ஆடிய போங்காட்டத்தை மறந்திருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.
உண்மையான விமர்சனம், ரந்தீவ் செய்தது கோழைத்தனம்
ReplyDeleteஇலங்கை அணி வீரர்கள் தவறு செய்யும் பொது தூக்கிப்பிடிக்கிறீர்கள். இந்திய நியூசிலாந்து போட்டியின் போது எங்கேயிருந்தீர்கள்.? உங்கள் பதிவுகளை படிக்கிறேன் . பக்க சார்பு எப்பவுமே இருக்கிறது. லோஷன் போன்றோரது பதிவுகளை படித்தாவது புத்தி பெறுங்கள்
ReplyDeleteபாண்டிங் தன் தனிப்பட்ட ஆட்டத்தில் என்றும் ஏமாற்றியது இல்லை நடேஷ். ஒரு தலைவராக அவர் தவறிழைத்து இருக்கலாம்.
ReplyDeleteஒரு பொது பார்வையாளனாகவே இதை எழுதியிருக்கிறேன் முகமது பெயிக். தில்ஷானுக்கு ஒரு இந்திய வீச்சாளரால் இது நேர்ந்திருந்தாலும் கண்டித்திருப்பேன்.
ReplyDeleteஅருமையான பதிவு, விளையாட்டு, அன்பு, பரந்த மனப்பான்மையும் வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
ReplyDeleteலாரா, சச்சின் போன்ற வீரர்கள் அவுட் என்று தங்களுக்கு தெரிந்த உடன், அம்பயரின் கை அசைப்பிர்க்கு காத்து இருக்க மாட்டார்கள். அதனால் தானே அவர்களை கடவுளாக கொண்டாடுகிறோம், அவர்கள் அடித்த ரன்களுக்காக மட்டும் அல்ல