Tuesday, 24 August 2010

எம்.பிக்கள் சம்பளமும் வாடகையும்: தேசம் நேரிடும் வேடிக்கை முரண்





எம்.பிக்களுக்கு ஒரு தனியார் நிறுவன இயக்குநரை விட அதிக சம்பளத்தை வழங்க அரசு முன்வந்துள்ளது. ஐம்பதினாயிரம் அறிவிக்கப்பட்டாலும் அரசுடனான ஒரு ஒப்பந்தத்தின் படி உயர்த்தப்படும் படிகளும் சலுகைகளையும் சேர்த்து கணக்கிடுகையில் அவர்களால் மாதம் 1.6 லட்சம் வரை பெற முடியும். அமெரிக்காவில் இத்தகைய ஒரு ஊதிய உயர்வு அடுத்த அரசின் காலத்தில் தான் நிலுவையில் வர முடியும்.
ஆனால் நமது எம்.பிக்கள் தங்கள் பதவிக் கால ஆரம்பத்தில் இருந்து கணக்கிட்டு நிலுவைத் தொகை உள்ளிட்டு இப்போதிலிருந்தே பெறப் போகிறார்கள். இதனால் அரசுக்கு 260 கோடிக்கு மேல் செலவாகப் போகிறது. கார்ப்பரேட் கலாச்சாரத்தில் ஊறியவர்களுக்கு நியாயமாகவும், கம்யூனிஸ்டுகளுக்கு இது பகல்திருட்டாகவும் படுகிறது. அரசுக்கு மக்களின் அதிருப்தியை மேலும் தூண்டுவதற்கு அச்சம். எம்.பிக்களுக்கு 16,000 சம்பளம் வழங்கினால் அவர்களால் தேர்தல் மற்றும் அலுவலக செலவுக்கு ஊழல் செய்யவும் தொழிலதிபர்களிடம் கறுப்புப் பணம் பெறுவதுமே ஒரே வழியாக இருக்கும் என்று இந்த ஊழிய உயர்வு ஆதரவாளர்கள் நம்மை மிரட்டுகிறார்கள். ஆனால் கடந்த தேர்தலில் நின்று வெற்றிபெற்ற பெரும்பாலான எம்.பிக்கள் பெரும் பணக்காரர்கள் என்கிறது ஒரு அறிக்கை. மேலும் பணக்கார அரசியல்வாதிகளுக்கு சாமர்த்தியமாகவும் வெற்றிகரமாகவும் ஊழல் செய்து தப்பிக்க தெரிகிறது. நேர்மை கண்ணியம் போன்ற விழுமியங்களில் மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டு விட்ட இந்த காலத்தில் ஊதிய உயர்வுக்கான எந்த காரணமும் புறக்கணிக்கப்படும். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மத்தியவர்க்கத்தினரில் பலரும் கூட தங்கள் மேலாளர் ஐம்பதினாயிரம் பெறுவது மிகை என்று நம்புகிறார்கள், எரிச்சல் கொள்கிறார்கள். இந்த நிலையில் உழைப்பு, அந்தஸ்து மற்றும் பொறுப்பின் விகிதாச்சார அடிப்படையில் இச்சம்பள உயர்வை கீழ்மத்திய மற்றும் கீழ்தட்டு ஜனங்கள் ஜீரணித்துக் கொள்வது எந்த அளவுக்கு சாத்தியம்? அடுத்து பெட்ரோல் விலையும் அதனுடன் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரப் போகிற நிலையில் இந்த சர்ச்சை எப்படியான விளைவுகளை ஏற்படுத்தும்?
ஒருவிதத்தில் இது ஒரு மேம்போக்கான பிரச்சனை. எம்.பிக்களில் பலரும் ஏற்கனவே ஒரு சுற்று பெருத்தவர்கள் என்பது போக அவர்களுக்கு அளிக்கப்படும் வீட்டு வாடகை சலுகைகளுடன் ஒப்பிடுகையில் 16,000 சம்பளம் ஒரு முரண் வேடிக்கையாகவே இதுவரையில் இருந்துள்ளது புரியும். தில்லியில் ஒரு எம்.பிக்கு இலவசமாக வழங்கப்படும் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டின் மாத வாடகை மதிப்பு மட்டுமே 2.5 லட்சம். பங்களாவென்றால் 75 லட்சம். வேறுபல உலக நாடுகளில் நிலைமை வேறு. உதாரணமாக இங்கிலாந்தில் எம்.பிக்களுக்கு இலவச வீட்டு வாடகை இல்லை. அவர்களின் ஊதியம் அரசு உயர் அதிகாரிகளுடையதை விட குறைவே. ஒருமுறை மக்களின் அதிருப்தியை தவிர்ப்பதற்காக எம்.பிக்கள் தங்களின் ஊதியத்தை நேரடியாக உயர்த்தாமல் சலுகைகளாக மறைமுகமாக உயர்த்தினர். சற்று காலத்தில் இந்த சேதி மீடியாவில் வெளியான போது பெரும் சர்ச்சை எழுந்தது; எம்.பிக்கள் ராஜினாமா செய்ய நேர்ந்தது. சமீபமாக அரசு செலவை குறைக்க மகாராணியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ரத்து செய்ய இங்கிலாந்து அரசு முன்வந்தது. பதினாறு நாடுகளின் ராணியாக (பெயரளவில்) கருதப்படுகிற இரண்டாம் எலிசபெத் இதை மனவிரிவுடன் ஏற்றுக் கொண்டார். இது அந்நாட்டின் ஜனநாயக கலாச்சாரத்தில் ஒரு முக்கிய மாற்றமாக கருதப்படுகிறது. நாமும் அதே படகில் தான் இருக்கிறோம். ஆனால் முரணாக ஜெயலலிதாவுக்கு உரிய பாதுகாப்பு போதவில்லை என்ற பிரச்சனை எழுந்த போது தங்கள் அம்மாவை கருணாநிதி கொலை செய்ய திட்டமிடுவதாக சட்டசபையில் அ.தி.மு.கவினர் அமளி செய்தார்கள்.
இந்தியாவுக்கு மொத்தமாக ஒரு ராணி இருந்ததில்லை; அதிகாரத்தை என்றும் இழக்காத குறுநில மன்னர்கள் மட்டுமே. ஒரு பல்லியைப் போல அவர்களின் வாலை மட்டுமே ஜனநாயகம் துண்டித்துள்ளது. எம்.பிக்கள் குறைந்த செலவில் விமானத்தில் பயணிக்க அறிவுறுத்தப்பட்டாலும், நாற்பதினாயிரம் தனிப்பட்ட கடனை தவறாது திரும்ப செலுத்தும் பிரதமரைக் கொண்டிருந்தாலும் குறுநில மன்னர்களை திருப்திப்படுத்த முடியாது. மக்களை விட மேலாக இருப்பதும், அவர்களை விட்டு விலகி இருப்பதுமே இவர்களின் அடையாளம். ஊதியம் என்பது இவர்களுக்கு பணம் மட்டுமே அல்ல என்பதால் ஒன்றரை லட்சமும் போதாது தான். இந்தியாவின் பொருளாதாரமும், வாழ்வுத்தரமும் மேலும் மேலும் வளர எம்.பிக்களின்/அரசியல் தலைவர்களின் எதிர்பார்ப்புகள் இன்னும் வலுக்கும். ஒரே ஆதாரக் கேள்விக்கு மட்டும் அவர்கள் பதிலளிப்பது அவசியம். அவர்கள் நின்று கேட்பது மேல் தட்டிலா அல்லது மக்கள் பக்கம் இருந்தா? அவர்களின் இந்தியா எந்த இந்தியா?
Share This

1 comment :

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates