யுவனின் கவிதைகளில் மனிதன் காலத்தின் திசைகளை சந்திக்கும் ஒரு குறுக்குவெட்டுப் புள்ளியில் நிற்கிறான். அந்த புள்ளி அவன் வரலாற்றுக் கற்பனையாக, பிரக்ஞை தோற்றமாக அல்லது பிரபஞ்சத்தை நோக்கிய தேடலின் கடைசிப் படியில் வரும் இடறலாக இருக்கலாம் அவனது மனம் முக்காலங்கள் என்று உணந்து கொள்வது பௌதிகமானது மட்டும் தானோ என்பதே இங்கு பிரதான கேள்வி. இந்த கேள்விக்கு விடை தேடுவது அல்ல, இது வாழ்வில் கவிதாபூர்வமாய் உருவாக்கும் வியப்புகளை மேலும் முன்னெடுப்பதே யுவனின் சமீபத்திய தொகுப்பான ”தோற்றப்பிழையின்” ஒரு முக்கிய நோக்கம்.
மேலும் சொல்வதானால் இக்கவிதைகளில் உள்ள தத்துவ விசாரம் உங்கள் அறைச் சுவர்களுக்குள் பின்னலிட்டு ஓடும் மின்வயர்கள் போன்று செயல்படுகிறது. நாம் அந்த ஷாக் அடிக்காத ஆயிரம் வால்ட்ஸ் மின்பாய்ச்சலின் பிரக்ஞையோ இறுக்கமோ இன்றி இக்கவிதைகளை வாசித்துப் போக முடிகிறது..அதே நேரம் இந்த கேள்வியை பற்றிக் கொள்வது மற்றொரு தளத்தில் இக்கவிதைகளை தட்டித் திறக்க பயன்படலாம். அதனாலே அதை முதலில் குறிப்பிட்டேன். சுருக்கமாக, மேற்சொன்ன தத்துவார்த்த கேள்வி எழுப்பும் விவாதம் யுவனின் கவிதையில் நேரடி நிகழ்வது இல்லை.
மேலும் சொல்வதானால் இக்கவிதைகளில் உள்ள தத்துவ விசாரம் உங்கள் அறைச் சுவர்களுக்குள் பின்னலிட்டு ஓடும் மின்வயர்கள் போன்று செயல்படுகிறது. நாம் அந்த ஷாக் அடிக்காத ஆயிரம் வால்ட்ஸ் மின்பாய்ச்சலின் பிரக்ஞையோ இறுக்கமோ இன்றி இக்கவிதைகளை வாசித்துப் போக முடிகிறது..அதே நேரம் இந்த கேள்வியை பற்றிக் கொள்வது மற்றொரு தளத்தில் இக்கவிதைகளை தட்டித் திறக்க பயன்படலாம். அதனாலே அதை முதலில் குறிப்பிட்டேன். சுருக்கமாக, மேற்சொன்ன தத்துவார்த்த கேள்வி எழுப்பும் விவாதம் யுவனின் கவிதையில் நேரடி நிகழ்வது இல்லை.
சிறுகதை பாணியிலான் காட்சி சித்தரிப்புகள் மற்றும் குறுநிகழ்வுகள் கொண்டு யுவன் அனாயசமாக தனது தரிசனம் நோக்கி நம்மை எதிர்பாராமல் அழைத்துச் செல்கிறார். இந்த எதிர்பாராத் தன்மையும் எளிமையும் முக்கியம். இத்தொகுப்பில் உள்ள கவிதைகளை எளிய குறுங்கதைகளாக அல்லது வாழ்வியல் சித்தரிப்புகளாக் ஒருவர் படித்துக் கொண்டு செல்ல முடியும். அந்தளவிற்கு கபடமின்மையை தரித்துக் கொண்டுள்ளன. இத்தொகுப்பில் சித்தரிப்பு தொடர்ச்சி, கதைக்களன், பாத்திரங்கள், மையக்கரு ஆகிய கூறுகளையும் நுட்பமாக கண்டுணர முடியும். அதாவது இக்கவிதைகளை கவனமாக வாசிக்கும் போது ஒரு சுவாரஸ்யமான நாவலின் பிரதியும் நம் கைவசம் வந்து விடுகிறது. உங்களை தொடர்ந்து ஆயாசமின்றி படிக்க அது வசியப் படுத்துகிறது. யுவனின் முந்தைய ஐந்து தொகுப்புகளில் இருந்து “தோற்றப்பிழை” இப்படியும் வித்தியாசப்படுகிறது.
அப்புறம், யுவனின் முந்தைய தொகுப்புகளில் காணப்படும் நிலைக்கண்ணாடி, கல் சிறகுகள் போன்ற தொழில்முறை உருவக, படிமங்களுக்கு “தோற்றப்பிழையில்” பெரும்பாலும் இடமில்லை சமகால உலகக் கவிஞர்கள் பலவிதமான மொழிபுகளை முயன்றபடி இருக்கிறார்கள். மரபில் இருந்து விலகி மொழியின் பல்வேறு கலாச்சார திரிபுகளை தங்கள் கவிதைகளில் வரித்துக் கொள்கிறார்கள். அசட்டுத்தனத்தின், அசிரத்தையின், பிறழ்வின், பிரபல பண்பாட்டு வடிவங்களின், மித்துகளின், அங்கதத்தின் எத்தனையோ குரல்களில் கவிதையை பேச விடுகிறார்கள். தமிழ் நவீன கவிதையும் தனதேயான ஒரு மொழிபு மாற்றத்தை மெல்ல மெல்ல நிகழ்த்தி வருகிறது. யுவனின் சமீபத்திய தொகுப்பில் தனது அறிவார்ந்த கறுப்புக் கண்ணாடியை அவர் கழற்றா விட்டாலும் வடிவ ரீதியாக மிக முக்கியமான பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார். இலையுதிர்கால தோற்றம் போல் அது இயல்பாக தெரிவதையும் இங்கு குறிப்பிட வேண்டும். மெலிதான் குரலில் கதை சொல்லும் பாவனையில் யுவன் எப்போதும் போல் உருவகங்களையும் பயன்படுத்துகிறார். ஆனால் ஜாலவித்தைக்காரனை போல் கைகளை திறந்து திறந்து காட்டியபடி மிக எளிய சொற்களை அல்லது அன்றாட நிலவியல் காட்சிகள் மற்றும் உயிர்களை சூட்சுமமாக திருப்பிப் போட்டு அதை செய்கிறார். சில கவிதைகளில் ஒரு மாய-எதார்த்த தன்மையையும் கொண்டு வருகிறார். இத்தனையையும் எந்த பிரத்யேக, புதுமையான உருவக படிமங்கள் அல்லது மிகை எதார்த்த சித்தரிப்புகள் இல்லாமலேயே. இந்த தத்துவார்த்த வியப்பு மற்றும் மொழிபின் நுணுக்கத்தை ”தோற்றப்பிழை” உதாரணங்கள் கொண்டு சுருக்கமாக விவாதிப்பதே மேற்கொண்டு நமது நோக்கம்.
யுவனின் “தோற்றப்பிழை” கவிதைகளில் வரும் நிலவியல் தெருக்கள், வீடு, முற்றம், பூங்கா, மருத்துவமனை போன்ற நகரத்து அடையாளங்களால் ஆனது. யுவன் இந்த இடங்களை கவிதைக்கான பாத்திரங்களாகவோ அணிகளாகவோ மாற்றும் விதத்தை கவனிப்பது அலாதியான அனுபவம். “குட்டையில் அலையடிப்பதை” இப்படி சொல்கிறார்:
“மழைநீர் தவறாமல்
என் வீட்டு வாசலில் தேங்கும்
நீரின் பரப்பில் காற்று வளையமிடும்”
அதைப் போன்றே “தெருநாய்” இப்படி உருக்கொள்கிறது.
“இணையும் துணையுமின்றித்
தனியாய் திரியும் நாய்”
இலக்கண மொழியில் சொன்னால் பெயரடைகளுக்கு பதில் வினையடைகளை பயன்படுத்துகிறார். முக்கியமாக இச்சொற்களை விரித்தெழுதுவதன் மூலம் ஒரு தனிநிறம் அளிக்கிறார். உதாரணமாக மழைபெய்யும் போதெல்லாம் வருகை தரும் நீர் எனும் போது அது குறியீட்டு ஆழம் கொள்கிறது. யுவனின் கவிதைகளில் நீர் அதன் தொடர்ச்சியான நகர்வுத்தன்மை (நதியில் இருந்து கடலுக்கு, பூமியில் இருந்து வானுக்கு, திரும்ப மழையாக மண்ணுக்கு) காரணமாய் காலத்திற்கான குறியீடாக செயல்படுகிறது. குட்டையில் தேங்கின நீர் பிரபஞ்சத்தின் மொத்த காலத்தையும் பிரதிபலித்துப் பார்க்கக் கூடிய ஒரு கையடக்க படிமம். மேற்குறிப்பிட்ட கவிதையில் தொடர்ச்சியாக நீர் வெவ்வேறு காரணிகளால் சலனமுறுகிறது. காற்று வீசி அதில் அலைகளை உருவாக்குகிறது. பிறகு நாய் வந்து நக்குகிறது. இதை யுவன் நாய் நிலவைத் தின்று பசியாறுவதாக சொல்கிறார். ஏன்? இது வெறும் நாய் அல்ல.”துணையும் இணையுமற்று” போன நாய். அதன் தனிமை காலத்தின் விளிம்பில் நின்று அதன் பிரம்மாண்டத்தை எட்டி நோக்கும் மனதின் தனிமை. “நிலவைத் தின்னுதல்” வாழ்வை அறியும் பசி தான். ஆனால் வாழ்வு முழுமையில் அல்ல அதன் பிரதிபலிப்பாக மட்டுமே நமக்கு வாய்க்கிறது. ஒரு ஜென் mindfulness மனநிலை என்று நிலவைப் புசித்தலை கூறலாம். அடுத்து ”சுத்தம் விழையும் வைதிகக் காகம்” குட்டையில் குளியல் போடுகிறது இந்த குறியீடுகளை கவிதைசொல்லியோடு முடிச்சிட ஒரு இணைப்பு வரியாக இந்த பத்தி வருகிறது.
”பார்க்கும் போது தேங்கி
புலப்படாமல் வற்றும்
நீரின் சுழற்சியில்
சூட்சுமம் எதையே தேடித் தோற்பேன்”
ஏறத்தாழ, குழந்தையின் உதட்டுச் சுழிப்பில் வழியும் உணவை வழித்து உள்ளே தள்ளும் அம்மாவைப் போன்று சமயங்களில் யுவன் ஒரு மிகை-அக்கறையால் இப்படியான இணைப்புகளை கவிதைகளில் ஏற்படுத்துகிறாரே என்று துணுக்குற்றாலும் வாசகனுக்கு புகார் ஏதும் இருக்கப் போவதில்லை.
கவிதை சொல்லி வாசலில் நின்று இந்த காலசலனங்கள் குறித்து சிந்தித்தபடி சிகரெட் புகைத்து நிற்கையில் அவனது ”குட்டை” பெரிதாக கலங்கடிக்கப்படுகிறது. கடந்த காலத்தில் இருந்து ஒரு மனிதன் யவனக் கப்பலில் அங்கு வருகிறான். அவன் அச்சுஅசல் கவிதைசொல்லியைப் போன்றே இருக்கிறான். அவனும் நிலவை நோட்டம் விடுகிறான். காலம் மனிதப் பிரக்ஞையின் ஒரு வசதியான ஏற்பாடு தான் என்கிறது அறிவியல். காலம் ஆரம்ப முடிவற்ற ஒரு பிரவாகம் என்கிறது இக்கவிதை. ஆயிரம் கோடி வருடங்களாக மானுட மனதின் ஆழ்நதியில் தேடலின் யவனக் கப்பல் பயணித்தபடியே உள்ளது. இந்த யவனக் கப்பலை மரபணுவென்று கொண்டால் மற்றொரு சுவாரஸ்யமான வாசிப்பு திறக்கும். இத்தொகுப்பில் உள்ள பிற கவிதைகளுக்கு ஒரு சாவி போன்றது இக்கவிதை என்பேன். இக்கவிதையின் வேறுபல நிறத்தீற்றல்களை அவற்றில் காண்கிறோம். உதாரணமாக இதற்கு அடுத்த கவிதையில் “யவனக் கப்பலுக்கு” பதில் “வாசனைக் கப்பல்” வருகிறது. இது மேலும் அர்த்தச் செறிவு கொண்ட குறியீடு.
இக்கவிதை “நதி” என்பது நகர்தலின் வடிவம் மட்டுமே என்ற தத்துவார்த்தப் கண்டுபிடிப்புடன் (இணைப்பு வரி) ஆரம்பிக்கிறது.. எதிரிருக்கை பெண்ணின் கூந்தல் பூவின் வாசனையை சிலாகிக்கும் வரியைப் பாருங்கள். முந்தைய கவிதையில் “நிலவு” இங்கு பூவாகிறது.
“எதிரிருக்கை பெண்ணின் கூந்தலில்
ஞாபகத்தின் நுனியில்
கனவின் மறுகோடியில்
எங்கெங்கும் பூத்திருக்கிறது நான்
என்றுமே தொட இயலாத பூ.
வாசனையால் என்னை தீண்டியவாறிருக்கிறது”
நாய்க்கு புசிக்க நிலவின் பிம்பம் மட்டுமே கிடைப்பது போல் இங்கே கவிதை சொல்லிக்கு பூவின் வாசனையை மட்டுமே தீண்டக் கிடைக்கிறது. அகாலத்தில் எங்கோ மறைந்திருக்கும் பூரண புரிதல் தான் இந்த பூ. அடுத்த வரிகளில் யுவன் மழைபெய்த நாள் ஒன்றில் வானவில் பார்த்ததை கூறுகிறார். இங்கு மழை மீண்டும் ஒரு குறியீடு தான். பிரபஞ்சத்தின் காலத்தில் இருத்தில் மனிதனின் சிறு வீட்டுக்கு வரும் தூதுவன். வானவில் உண்மையில் ஒரு பூ என்று அவதானிக்கிறார் யுவன். அடுத்து இந்த பூ எனும் உருவகத்தை வளர்த்தெடுத்து வானவில் ஒரு வாசனைக் கப்பல் என்கிறார். இந்த தொகுப்பில் ஆகச் சிறந்த குறியீடாக இந்த வாசனைக் கப்பலை குறிப்பிடலாம். நம் கற்பனையில் சொல் சொல்லாக கிளை விட்டு வளரும் குறியீடு இது. வாசனைக் கப்பல் நகராமலே தன் வாசனையை பரப்புவதன் மூலம் நகரக் கூடியது. வானுக்கும் பூமிக்கும் நடுவில் தரைதட்டி நிற்கும் இந்த வாசனைக்கப்பல் மனிதனின் மனம் தான். அது தனது அனைத்து லௌகீக தடைகளையும் உதறி முக்காலங்களையும் கடந்து பறந்து கொண்டே இருக்கிறது. அதே நேரம் மனிதன் காலம் எனும் தங்குதடையற்ற பெரும் நகர்வின் கரையோரத்தில் சிறுபுள்ளியாக நின்று வியந்தபடியும் உள்ளான்.
இப்படி மிகச் சன்னமான வார்த்தைகளை அலகலகாக பிரித்து புரிந்து கொள்ளும் வாசிப்பின் அலாதித்தன்மையை தான் ஆரம்பத்தில் குறிப்பிட்டேன். அல்குலைத் தீண்டும் நாவை விட மென்மையாக நுணுக்கமாக யுவன் சொற்களை அடுக்கி, முறுக்கி, சுருதி பார்த்து, சுண்டிக் கேட்கிறார். யுவனின் இந்த நீர்க்குமிழி மொழி ஷிஞ்சிரோ குராஹரா, தட்சுஜி மியோஷி போன்ற நவீன ஜப்பானிய கவிஞர்களின் வரிகளை நினைவுபடுத்துகின்றன.
//“எதிரிருக்கை பெண்ணின் கூந்தலில்
ReplyDeleteஞாபகத்தின் நுனியில்
கனவின் மறுகோடியில்
எங்கெங்கும் பூத்திருக்கிறது நான்
என்றுமே தொட இயலாத பூ.
வாசனையால் என்னை தீண்டியவாறிருக்கிறது//
அழகான கவிதை
Good post..congrats
ReplyDelete