Wednesday, 18 May 2011

மேற்கிந்திய தீவு பயணம்: காயங்களில் இருந்து ஓய்வுக்கு



நேரடி ஒளிபரப்பு துவங்காத ஒரு காலத்தில் அனைத்து அணிகளுக்கும் ஒரு கொடுங்கனவாக திகழ்ந்த மேற்கிந்திய தீவுப்பயணங்கள் மெல்ல மெல்ல சிரமமான தொடர்களாக மாறி பின்னர் இப்போது ஒரு எளிய சுற்றுலாவாக முடிந்து விட்டது. சமீப தொடரில் பாகிஸ்தான் அங்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர் ஆட சர்வதேச பரிச்சயம் குறைந்த ஒரு அணியை அனுப்பியது. மே.இ தீவுகளும் தமது மூத்த வீரர்களை விலக்கியது. இரண்டு முதிரா அணிகள் மோதியதில் யாருக்கும் சுவாரஸ்யம் இல்லாமல் ஒரு அணி வென்றது. அடுத்து இதிலிருந்து கற்றுக் கொண்ட பாவனையில் இந்திய தேர்வாளர்களும் மே.இ தீவுகளுக்கு ஒருநாள் தொடர் ஆட இளைய வீரர்களின் அணி ஒன்றை அனுப்புகிறது. அவ்வணியில் உலகின் சிறந்த அணித்தலைவரும், உலகின் தலைசிறந்த மட்டையாளரும் இல்லை. பாக் செய்தது பரீட்சார்த்த தேர்வு என்ற நியாயம் இருந்தது; ஏனென்றால் அவர்களின் அணி உலகக் கோப்பையில் சொதப்பியது. ஆனால் உலக சாம்பியன்களின் தேர்வு ஒருவித உதாசீனம் மற்றும் அக்கறையின்மையில் இருந்து வருவது. மேலும் இந்த இந்திய அணியின் தேர்வுக்கு ஒரு சின்ன வரலாற்று முக்கியத்துவமும் உண்டு.
முதன்முதலாக ஐ.பி.எல்லில் ஆடிக் களைத்ததற்காக வீரர்களுக்கு சர்வதேச தொடரில் இருந்து ஓய்வு வழங்கப்படுகிறது. இலங்கையின் மூத்த வீரர்கள் ஒரு ஆஸி சுற்றுத் தொடருக்கு பின் உலகக்கோப்பைக்குப் பின் ஐ.பி.எல்லுக்கு பின் சளைக்காமல் இங்கிலாந்து பயணத்துக்கும் செல்கிறார்கள். ஆஸ்திரேலிய காப்டன் சர்வதேச கிரிக்கெட்டுக்காக ஐ.பி.எல்லை ஆரம்பத்தில் இருந்தே தவிர்த்து வருகிறார். இங்கிலாந்து வீரர்களும் ஐ.பி.எல் தவிர்த்து தங்களது கவுண்டி ஆட்டங்களில் தீவிரமாய் ஆடி இந்திய தொடருக்காக தயாராகி வருகிறார்கள். ஆனால் முரண்பாடாக இந்தியாவின் மூத்த வீரர்களும் தலைவரும் சர்வதேச தொடர் ஒன்றை தியாகம் செய்து மிகுந்த ஈடுபாட்டோடு உள்ளூர் ஆட்டத்தொடர் ஒன்றை ஆடி வருகிறார்கள். இங்கு சில காரணங்களை அணுகலாம்.
மே.இ தீவுகள் ஒருநாள் தொடருக்கு அவர்கள் செல்லாததன் காரணம் அவ்வணியின் சமகால தரக்குறைவை உத்தேசித்து இருக்கலாம். ஆனால் கடந்து பத்து வருடங்களில் இந்தியாவுக்கு எதிராக மே.இ தீவுகள் வலுவாகவே ஆடி சில முக்கிய ஐ.சி.சி தொடர்களில் இருந்து கூட நம்மை வெளியேற்றி உள்ளது. 2011 உலகக் கோப்பையில் கூட இதே கால் நடுங்கும் மே.இ தீ அணி நம்மை தோல்வியை நோக்கி தன் குச்சிக் கைகளால் நெருக்கியது. கடந்த மே.இ.தீ பயணத்தின் போது நாம் டெஸ்டு தொடரை வென்ற போது கூட அதற்கு கடுமையாக போராட வேண்டி இருந்தது. அதற்கு பின் ஒருநாள் தொடரை இழந்தோம்.
மேலும் இந்த அணித் தேர்வு சர்வதேச கிரிக்கெட்டின் சரிந்து வரும் சந்தை மதிப்பு மற்றும் அந்தஸ்தை சுட்டுகிறது. உதாரணமாய், மே.இ.தீவுகளில் ஒரு சதம் கூட அடித்திராத தோனிக்கு ஐ.பி.எல் கோப்பை வெல்வதை விடவும் அங்கு ஆடுவது அல்லவா சவாலாக இருந்திருக்க வேண்டும். அதே போல் சஹீர் கானுக்கும் அங்கு தன்னை நிரூபிக்கும் கனவு இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர் ஐ.பி.எல்லில் காயும் தகரக்கூரை மேல் பாயும் பூனை போல் ஆடிக் கொண்டிருக்கிறார்.
எழுபதுகளில் கவாஸ்கருக்கு முந்திய இந்திய அணி ஒன்று மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றிருந்த போது ஒரு ஆட்டத்தில் ஆடுவதற்கு 11 வீரர்கள் தேறவில்லை. காரணம் பெரும்பாலானோர் மே.இ.தீ வேகவீச்சாளர்களால் காயப்படுத்தப்பட்டு ஒதுங்கி இருந்தனர். பின்னர் அடுத்த பயணத்தில் கவாஸ்கர் அங்கு அறிமுகமாகி சுலபமாக ஆடி சதங்கள் அடித்து பெரும் அங்கீகாரம் பெற்றார். ஒரு இந்தியரால் அதிவேகப்பந்தை ஆட முடியும் என்று அவர் மே.இ தீவுகளில் அப்போது நிரூபித்தது பெரும் சாதனையாக கருதப்பட்டது. எண்பதுகளின் அச்சுறுத்தும் வேகவீச்சாளர் நால்வரும் ஓய்வு பெற்ற பின்னரும் தொண்ணூறுகளில் அவர்களுக்கு அடுத்தபடியாக ஆம்புறோஸ், வால்ஷ், பிஷப் போன்ற திறமையான சற்று குறைவாக அச்சுறுத்தக் கூடிய வேகவீச்சாளர்கள் இருந்தனர். கவாஸ்கருக்கு அடுத்து அங்கு நிலைத்து ஓட்டங்கள் எடுக்க முடிந்தது சச்சின் மற்றும் திராவிடால் தான். மிச்ச ஒன்பது பேருக்கும் மே.இ தீவுகள் தொண்ணூறுகளிலும் ஒரு புதிர் நிலமாகத் தான் தொடர்ந்து இருந்தது. வால்ஷ்-ஆம்புறோஸ் இரட்டையர் ஓய்வு பெற்ற பின் கங்குலி தலைமையின் கீழ் அங்கு சென்ற இந்திய அணி ஹூப்பரின் புத்துயிர்ப்பினால் வலுவுற்ற மேற்கிந்திய மட்டையாட்டத்தை சமாளிக்க முடியாது திணறியதால், அந்த தொடரையும் கைப்பற்ற முடியவில்லை. இதற்கு பின்னர் தான் மே.இ தீவுகள் இறுதியாக மாபெரும் வீழ்ச்சிக்காக விளிம்பை நோக்கி சென்றது. அரசியல், உள்கட்டமைப்பின் தோல்வி, வேறு ஆட்டவகைகளுடனான போட்டி என பல்வேறு காரணங்களால் மே.இ தீவுகள் ஈடுபாட்டையும் கவனத்தையும் இழந்து சிதறிக் கொண்டிருந்தது. இளம் வீரர்கள் ஊழல், ஆட்டநிலை சீர்குலைவு போன்ற காரணங்களால் மந்தையில் இருந்து பள்ளங்களுக்கு சென்றனர். சந்தர்பால் போன்ற அனுபவஸ்தர்கள் வாரியத்துக்கு எதிராக ஆட்டக்காரர்களின் சங்கம் அமைத்து பிளவுபட்டனர். இந்த கட்டத்தில் இந்தியாவின் ஆட்டத்தரமோ திராவிடின் கீழ் ஒரு உச்சத்தை அடைந்திருந்தது. மிகச்சிறந்த வேகவீச்சாளர்கள் கூர்மையாக தொடர்ந்து ஆடிய, அணியில் இடத்துக்காக போட்டியிட்ட பொற்காலம் அது. இதனுடன் மரபான வலுவான மட்டையாட்டமும் சேர்ந்து இந்தியாவுக்கு தனது முதல் மே.இ தீவுகள் டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்றுத் தந்தது. அப்போது இந்த வெற்றி ஒரு பெரும் வரலாற்று கணமாக கொண்டாடப்பட்டது. ஆடுவதற்கு 11 பேரை திரட்ட முடியாது அச்சுறுத்தலான காலத்தில் இருந்து முதல் தொடர் வெற்றி வரையிலான இந்தியாவின் இப்பயணம் மூன்று பத்தாண்டுகளை எடுத்துக் கொண்டது. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வேறெந்த தேசங்களுக்கான பயணங்களை விடவும் இந்தியாவின் கிரிக்கெட் ஆட்டவரலாற்றை மே.இ தீ பயணங்களே துல்லியமாக சித்தரிப்பன. அந்த மூன்று பத்தாண்டு காலத்தில் மே.இ தீ செங்குத்தாக வீழ்ந்தது என்றால் இந்தியா அது விழுந்த இடத்தில் இருந்து உதித்து மேலெழுந்தது. ஆனால் வரலாறு இங்கு முடிகிறது.
தோனி தலைமை ஏற்க வேண்டியிருந்த இந்த மே.இ.தீ பயணம் ஒரு இந்திய A அணி தொடர் போல் ஆடப்பட இருக்கிறது. இத்தொடரில் இரு அணிகளுக்கும் அடையவோ இழக்கவோ குறிப்பிடத்தக்கதாய் ஏதுமில்லை. ஒன்றாம் வகுப்பு பரீட்சை எழுதச் செல்லும் குழந்தையின் எதிர்பார்ப்புடன் இந்திய அணி அங்கு செல்கிறது. வரலாற்றை தவிர்த்து செய்தி மதிப்பு கூட குறைந்து விட்ட பயணமாக இம்முறை இது இருக்கிறது. பயிற்சியாளராக புதிதாக பதவியேற்று அதற்கு முன்னிருந்தே இந்திய ஆர்வலர்களின் வயிற்றில் புளியை கரைத்துக் கொண்டிருந்த டங்கன் பிள்ட்சர் கூட இங்கிலாந்து மற்றும்  ஆஸி பயணங்களை மட்டுமே சவால்களாக காண்கிறார். உண்மையிலேயே மே.இ அணி பூமியை பிளந்து கீழே போய் விட்டதா? எல்லா டெஸ்டுகளும் இரண்டு மூன்று நாட்களில் முடியப்போகின்றனவா? இல்லை. கெய்ல், சந்தர்போல், பிராவோ, சர்வான் உள்ளிட்ட மூத்த வீரர்கள் திரும்பினால் டிவெயின் பிராவோ போன்ற புதிய மட்டையாளர்களின் பங்களிப்புடன் அவர்களால் இந்திய பந்து வீச்சாளர்களை தங்கள் பங்குக்கு அவர்களாலும் ஓடவிட முடியும். ஆனால் நடந்து வரும் பாக் பயண முடிவுகள் இந்திய தேர்வாளர்களின் முடிவை பாதித்துள்ளது அப்பட்டம்.
மொத்த அணியுமே காயமுற்றதில் ஆரம்பித்து தோல்வியை தவிர்ப்பதில் தொடர்ந்து வெற்றியில் முடிந்த பின் தற்போது இந்தியாவின் 2011 மே.இ தீ பயணம் ஒரு ஓய்வுப்பயணமாக வேறு திசை எடுத்துள்ளது. இனிமேல் இந்தியாவில் டாஸை சுண்டிப் போட்டால் அதன் ஒரு பக்கம் எப்போதும் கோடிகளில் பணம் புரட்டுவதை காட்டுவதாக மட்டுமே இருக்கும் என்பதற்கு இப்பயணம் ஒரு அறிகுறியாக இருக்கலாம்.
Share This

6 comments :

  1. உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.

    Share

    ReplyDelete
  2. இனிமேல் இந்தியாவில் டாஸை சுண்டிப் போட்டால் அதன் ஒரு பக்கம் எப்போதும் கோடிகளில் பணம் புரட்டுவதை காட்டுவதாக மட்டுமே இருக்கும் என்பதற்கு இப்பயணம் ஒரு அறிகுறியாக இருக்கலாம்.>>>>>

    எப்பவுமே டாஸ் போட்டவுடனே கோடிகளும் கை மாறுமே...இது புதிதல்ல.

    எனது வலைப்பூவில்: மதுரையில் நேற்று நடந்த கொடூர விபத்து. அது சம்பந்தமாக என் கருத்து பகிர்வு!

    ReplyDelete
  3. இங்கிலாந்து வீரர்களும் ஐ.பி.எல் தவிர்த்து தங்களது கவுண்டி ஆட்டங்களில் தீவிரமாய் ஆடி இந்திய தொடருக்காக தயாராகி வருகிறார்கள்.
    ---
    இந்தியாவின் மூத்த வீரர்களும் தலைவரும் சர்வதேச தொடர் ஒன்றை தியாகம் செய்து மிகுந்த ஈடுபாட்டோடு உள்ளூர் ஆட்டத்தொடர் ஒன்றை ஆடி வருகிறார்கள்

    IPL is as important to Indian players as County is for British

    ReplyDelete
  4. இந்தியா-ஆஸ்திரேலியா இந்தியா-தென்னாப்பிரிக்கா போன்ற போட்டிகளுக்கான விளம்பர முகாந்திரம் மே.இ தொடருக்கு இல்லை என்பதை மறுக்க முடியாது. (விளம்பரம் இல்லாத இடத்தில் நமக்கு என்ன வேலை :-()

    ஏற்கனவே நலிந்துகொண்டிருக்கும் மே.இ கிரிக்கெட் வாரியத்திற்கு இது ஒரு அவமானமாகவே கருதப்படும்.

    ICC தலைமை பொறுப்பு இந்தியாவிடமிருந்து போன பிறகு ஐபிஎல் போக்குகளை கவனிக்க வேண்டும்.

    ReplyDelete
  5. திரு,
    அவர்கள் கவுண்டி ஆடினாலும் சர்வதேச ஆட்டங்களை புறக்கணிக்கவில்லை, நாம் அத்தவறை செய்கிறோம்

    ReplyDelete
  6. உடன்படுகிறேன் பாலா

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates