இன்று முழுக்க
ஒரு சின்ன தலைவலியுடன்
வேலைகள் செய்வதற்கு பழகுகிறேன்
எரிச்சலானவை சுவாரஸ்யமாவதும்
வழக்கமான தருணங்களில்
கோபமே வராததையும்
சின்ன தலைவலியுடன் இருக்கும் போது
வழக்கத்துக்கு மேலாக
எதுவுமே நிகழ்வதில்லை
ஆனாலும் எனது
செயல்களுக்கு
சிறப்பாக ஒரு தகுதி கிடைத்தும் விடுகிறது
ஒவ்வொன்றையும்
கூர்மையாக கவனித்து
கச்சிதமாக துரிதமாக தயக்கமின்றி
செய்தவதற்காக
அப்போது நீங்கள் யாருமே
பாராட்டும் பாத்திரத்தில்
இருக்க வேண்டியதில்லை
எனக்காக சதா புன்னகைத்து கொள்கிறேன்
சின்ன தலைவலிக்கு
மருந்து உண்பது
ஒத்திசைவற்ற ஒரு பொய்யை
சொல்வது போன்றது
சின்ன தலைவலி
தரும் தன்னம்பிக்கையை
மருந்து ஒருபோதும் தராது
தொடர்ந்து வழங்கப்படும் தண்டனைகளை
எதிர்ப்பது
சின்ன தலைவலியின் போது
லாவகமாகிறது
தண்டனைகள் மயக்க ஊசியை போன்றவை என்றால்
சின்ன தலைவலி
நம்மை உறங்க விடுவதே இல்லை
தண்டிப்பவரின் மனதுக்கு
மிக அருகாமையில் இருப்பதால்
விழிப்பாக இருப்பது கூட
அவசியமற்றதாகிறது
போதையை விடவும்
கூர்மையை விடவும்
வாதசாமர்த்தியத்தை விடவும்
அன்பற்ற இறுக்கத்தை விடவும்
சின்ன தலைவலி
பாதுகாப்பானது
அதிகாரமிக்கவரின் குற்றங்களை போல்
பரிசுத்தமானது
சின்ன தலைவலியுடன்
தூங்க முயல்வதை விட
அல்லது விழித்து வேலை செய்வதை விட
பாசாங்கு
வேறேதும் இருக்க முடியாது
அப்போது நமக்கு
நண்பர்களோ
பகைவர்களோ இல்லை
அனைவரையும்
மௌனம் காக்க வைப்பது
மெல்ல பதற்றம் கொள்ள வைப்பது
முள்ளை விடுவிப்பது போல் அன்பை விடுவிப்பது
கத்தி முனைவில் நிறுத்தி வைப்பது
இயல்பான ஒன்றாகிறது
வலியும் இன்பமும் துய்ப்பதற்கான
காரியங்கள்
என்று நம்புகிறோம்
ஒன்றை மறப்பதும்
மற்றதை நீட்டிப்பதும்
இவ்வளவு மெத்தனமாய் நகரும் வாழ்வுக்கு
செய்யும் அநீதி
ஒரு சின்ன தலைவலி
மிகப் பெரிய வலியாகவோ
மிக சிறந்த இன்பமாகவோ
ஆகும் போது தான்
‘நாம் மிக கவனமாக வேண்டும்
அப்போது
அவர்களுக்கு
அது வந்து விட்டதென்று அர்த்தம்
பின்
பின்
சின்ன தலைவலியுடன்
இயங்கும் உலகை
அசூயையுடனும் அச்சத்துடனும் கவனிக்க ஆரம்பிக்கிறீர்கள்
வித்தியாசமான கருத்துக்களும் கவிதையும் அருமையாக வந்து இருக்கிறது. பாராட்டுக்கள்!
ReplyDeleteதலைவலி என்ற ஒற்றை உணர்வுக்குள் இத்தனை வார்த்தைக் குவியலா !???
ReplyDeleteசிறப்பு
நன்றி சித்ரா மற்றும் சங்கர்
ReplyDelete