மிக அதிகமாக அன்பு செய்யப்படும் போதும்
மிக அதிகமாக வெறுக்கப்படும் போதும்
நாம் இருக்கிறோம்
மிகச் சிறந்த அன்பு
குருதி சொரியும் வாளைப் போலவும்
மிகக் கொடூரமான வெறுப்பு
ஆக சௌந்தர்யமான பூக்களின் ஒரு மழையை போலவும்
இருப்பதும்
ஒரு இயல்பு என்பதை
இயல்பாகவே அப்போது நாம்
உணர்வதில்லை
குளிர்கால குளிரை போல்
அழுத்தமான தெளிவான
அடையாளங்களுடன் வரும்
அன்பையும் வெறுப்பையும்
நாம் செயற்கை என்று
உதாசீனிக்கிறோம்
இரண்டுக்கும் நியாய அநியாயங்களும்
விதிகளும்
அளிக்கிறோம்
இருட்டில் வெளிச்சத்தை காண்கிற ஒரு பூனையை போல்
இரண்டும்
இயல்பாய் இருப்பது குறித்து அச்சம் கொள்கின்றன
கசப்பை அல்லது இனிப்பை
மட்டுமே
அருந்தி வாழ்பவர்கள்
ஏதாவதொன்றின் இன்மையை அல்ல
பேரொளியின் திகைப்பை தான்
அஞ்சுகிறார்கள்
கடவுளும் சாத்தானும் எங்கிருந்தோ
ஒரு புள்ளியில் இருந்து வெடித்து தோன்றாதவரை
கடவுளும் சாத்தானும்
அவர்களுக்கு ஏற்பே
கசப்பை அல்லது இனிப்பை
மட்டுமே
அருந்தி வாழ்பவர்களுக்கு
கசப்பதோ இனிப்பதோ
இல்லை
அவர்களை யாரும்
நேசிக்கவோ வெறுக்கவோ
முடிவதில்லை
வாலை வாய் முழுங்கிய பின்
வால் எங்கிருந்து தொடங்குகிறது
என்று அவர்களுக்கு புரிவதில்லை
அவர்களால் யாரையும்
நேசிக்கவோ வெறுக்கவோ
முடிவதில்லை
மிகுந்தோ மிகாமலோ
அபிலாஷ்,என்னை கவர்ந்த ஆகச்சிறந்த கவிதை இது.மனிதன் வதைப்பதிலும் ,வதைபடுவதிலும் வுள்ளார்ந்த விருப்பம் கொண்டவன்.அன்பின் ஆழம் வலி மிகுந்த தருணங்களாக வுணரப்படுவதுவும்,வெறுப்பு,அன்பு இரண்டுமே அதன் எல்லைகளின் விளிம்பில் வித்தியாசமற்றது எனவும் அழகாக சொல்கிறது வுங்கள் கவிதை.
ReplyDeleteநன்றி பனி
ReplyDelete