குழந்தைமையை, அதன் பரிசுத்த நிலையை அல்லது லயிப்பை பேசும் கவிதைகள் அல்ல முகுந்த் நாகராஜன் எழுதுவது. அவரது கவிதைகள் வாழ்வின் மற்றொரு முக்கியமான கலாச்சார சடங்கை காட்டுகின்றன. அன்றாட உறவாடல்களில் இருந்து சமூகம் கடவுள் பிரபஞ்சத்திடம் வரை நாம் மேற்கொள்ளும் விளையாட்டுத்தனம், ஏமாற்றுகள், தந்திரங்கள், இவற்றின் குழந்தைமை. நாம் ஒவ்வொரு நாளும் நம் உமிழ்நீரில் இருந்து ஓராயிரம் எளிய பொறிகளை உருவாக்குகிறோம். ஒவ்வொருவராய் அதில் விழ காத்திருக்கிறோம்; அந்த இருப்பின் போதும் நாமும் ஓராயிரம் பொறிகளில் மாட்டிக் கொள்கிறோம். உதாரணமாய் நாம் ‘அன்பு’ என்று பேச ஆரம்பிக்கும் போதே ஒரு பொறியை உருவாக்கி எதிர்தரப்பு அதில் மாட்டுவதை உள்-உவகையுடன் எதிர்பார்க்கிறோம். அல்லது ‘வெறுப்பு’ என்று மற்றொரு சொல்லை கொண்டு ஆரம்பிக்கிறோம்... இதில் தீமை இல்லை, நன்மையும் இல்லை. இந்த பொறி வைத்தல் சடங்குகளின் பொருள் வாழ்வை நாம் உள்ளார்ந்து கொண்டாடுகிறோம், நமது இயல்பான வேட்டைமிருக மனநிலையை உயிருடன் வைத்திருக்கிறோம் என்பது மட்டுமே. இதனாலே முகுந்தை நாம் குழந்தைமை பற்றின கற்பனாவாத கவிதை மரபுடன் (வெர்ட்ஸ்வொர்த்தில் இருந்து பாரதி வரை) தொடர்பு படுத்தாமல் இருப்பது நலம். சுருக்கமாக முகுந்தின் சிறந்த கவிதைகளில் குழந்தைகள் குழந்தைகள் அல்ல. அவர்கள் விளையாட்டை நாடும் மனித மனத்தின் குறியீடுகள்.
இந்த விளையாட்டுத்தன்மை பதற்றத்தை, பரஸ்பர சந்தேக நிலையை கடக்க பயன்படும். இங்கு ஒரு சின்ன அபத்தம் நிகழ்வதும் தவிர்க்க முடியாது.
”கோயில் யானை” கவிதையில் கோயில் வாயிலில் நின்று வெடிகுண்டு பரிசோதனை செய்கிறார் ஒரு காவலர். இந்த அச்சுறுத்தலான நிலைமையை ஒரு குழந்தை விளையாட்டாக மாற்றி கொண்டு அவனிடம் சென்று தலையை தாழ்த்தி காமிக்கிறது. அவனும் சிரித்துக் கொண்டே சோதனை கருவியாய் அவள் தலையை தொட்டு உள்ளே அனுப்புகிறான். அவனை ஒரு கோயில் யானையுடன் ஒப்பிடுகிறார் முகுந்த். மேற்சொன்ன நவீனத்துவ அபத்தம் இருந்தாலும் முகுந்த் ஸ்ரீஸ்ரீயோ ஜக்கியோ அல்லாவிட்டாலும், இது ஒரு ‘வாழக் கற்றுக் கொடுக்கும்’ கவிதைதான்.
மற்றொரு கவிதையில் “பொம்மைகளை வெறுக்கும்” (அதாவது விளையாட்டு பண்பு இல்லாத) ஒரு பெண் தன் தோழிக்கு பரிசளிக்க பாண்டிபஜார் இடுப்புயர கரடி பொம்மை ஒன்று வாங்கி தூக்க முடியாமல் இடுப்பில் வைத்து நடக்கிறாள். கரடி தன் விளையாட்டை ஆரம்பிக்கிறது. அவள் மீது சாய்கிறது. பின்னர் குளிர அவளை கட்டிப் பிடிக்கவும் செய்கிறது. அப்பெண் கரடியை செல்லமாய் அதட்டுகிறாள். இக்கவிதை அப்பெண்ணின் சன்னமான தனிமையை அதில் இருந்து ஒரு குழந்தைமையான தருணத்தில் அவள் மீள்வதை சொல்கிறது. தனிமையுடனான விளையாட்டு அதனளவிலான சோகமும் கொண்டது. மற்றொரு பெண் (“இணைப்புகள்”) எப்போதும் துணி மடித்துக் கொண்டே மெல்லிய குரலில் பேசுபவள். அவளை அழைக்கும் போது தொலைபேசி இணைப்பு உபயோகத்தில் உள்ளதென்று அறிவிக்கும் பதிவு குரலின் சொந்தக்காரியின் குரலும் அவளுடையது போன்றே உள்ளது. இருவரும் யாரிடமும் பேசாமல் யாருடனே பேசியபடி உள்ளார்கள்.
“பாபு இறந்து விட்டாரில்” ஒரு ரயில் பயணத்தில் குடும்பத் தலைவனுக்கு மரண சேதி அலைபேசியில் வருகிறது. அவர் தனது பயணத்திட்டத்தை மாற்றி ஆஸ்பத்திரிக்கு செல்ல முடிவாகிறது. அவசரமாக ஒவ்வொரு உறவினர், நண்பர், தெரிந்தவராக அழைத்து செய்தி சொல்லி மரண வீட்டுக்கு செல்வதற்கான தயாரிப்புகளை செய்கிறார். மறுமுனையில் உள்ளவர்களுக்கு தமதான நெருக்கடிகள் உள்ளன. ஒருவர் சாவியை தன் முதலாளியிடம் கொடுத்து வருவதாய் சொல்கிறார் மற்றொருவர் தன் நைட் டுயூட்டியில் இருந்து விடுப்பெடுத்து தான் வேறு சிலரை அழைத்து உடனடியாய் ஆஸ்பத்திரிக்கு போய் துக்கம் அனுசரிக்கும் வேலையை செய்ய வேண்டும். வேணியின் குடும்பம் மொட்டைமாடியில் தூங்குவதால் அவர்களுக்கு காலையில் தான் சேதி சொல்ல முடியும். இந்த அலைபேசி உரையாடல் நடுவே ரயில் நபர் தன் கூட வந்தவரிடம் சொல்கிறார் “எவ்வளவோ அட்வைஸ் பண்ணினேன் கேட்டாரா”. இந்த வசனம் அவர் இந்த உரையாடல்களுக்குள் இல்லை என்பதை சொல்லுகிறது. மேலும் யாருமே நேரடியாய் சந்திப்பதும் இல்லை. அதற்கு இந்த நடைமுறை அவசரங்களும் பரபரப்பும் சடங்குகளும் தோதான சொற்களும் பயன்படுகின்றன. “கெ அலைவரிசை” தொகுப்பில் முகுந்த் முகுந்த்துத்தனமல்லாத சொல்முறையை சில இடங்களில் பயன்படுத்துகிறார், நவீனத்துவ தமிழ்க் கவிதையை தூசு தட்டி தன் வரிகளில் ஆதுரமாய் பார்க்கிறார், பிரமிளை போன்று எழுதி வேறு பார்க்கிறார். இந்த எழுத்தாள குழந்தைத்தனத்தின் மத்தியில், மேற்சொன்ன கவிதையில் முகுந்த் துருத்தாத உருவக வரி ஒன்றையும் எழுதியுள்ளார் அது திறப்பு வரி. அதைப் பற்றி உள்ளே நுழையலாம்.
“பார்க் ஸ்டேசன் வந்ததும்
எப்போதும் போல்
கூட்டத்தை தவிர்க்க
ரயில் நிற்கும் முன் இறங்கி ஓடாமல்
கூட்டத்துக்கு நடுவில் மெதுவாகப் போனேன்”
கூட்டத்துக்கு நடுவே மெதுவாக போவது மரணம் தான். தொடர்ந்து இங்கிருந்து மேல்நோக்கி வாசித்தால், மிக அமைதியாக ரயிலில் பக்கத்துக்கு இருக்கையில் அமர்ந்து மனிதனின் பாசாங்கை, உள்ளார்ந்த அச்சத்தை, அபத்தத்தை கவனிப்பதும் முகுந்த அல்லதான். பொதுவாக கவிஞர்கள் கடைசி வரியில் தான் யோசிப்பார்கள். அதனால் நாம் கடைசி வரி வந்ததும் அந்த “அழுத்தத்துக்காக” தயாராகி விடுவோம். ஆனாலும் முகுந்த் இங்கு உருவகத்தை அழுத்தாமலே கொண்டு வருகிறார். அதனால், முதல் வாசிப்பில் ரயிலில் இருந்து இறங்கி நடப்பது நம் முகுந்த் தான் என்று அநேகமாய் நம்பி விடுவோம். ஆனாலும் நமக்கு கவிஞர்களின் சுபாவம் தெரியுமாகையால் கடைசி வரியில் எப்படியும் ஒருமுறை மீள்பார்வை ஓட்டாமல் போவதில்லையே.
சுயமாய் வாழ்வை சமாளிக்கும் வகை தந்திர விளையாட்டில் இருந்து வேறுபட்ட ஒன்றாய் உள்ளது திருமணம். இது கச்சிதமான விதிகளை நுணுக்கமாக அனைவரும் பங்கேற்று ஆடும் விளையாட்டு. “கிரஹப்பிரவேசம்” கவிதையில் அதன் அலங்காரங்களை களைந்து புதுவீட்டுக்குள் புகும் ஜோடி ஒரு தொலைந்து போன ஒரு பற்பசைக்காக சண்டையிடுகிறார்கள். பின்னர் அவன் “ஏதோ ஒன்று அறுந்து தொங்கும்” ஒரு புது வீட்டை, அதாவது தனது திருமண வாழ்வை, சிறுக சிறுக போலி சமாதானங்களால் கட்டி எழுப்புகிறான். அந்த வீட்டில் கிரப்பிரவேசித்து அவன் ஆடப் போவது தான் நிஜமான திருமணம். அந்த உறவு எப்போதும் ஒரு சிறுகுறையுடனே இருக்கும். அதனாலே வார்த்தைகளாலே ஒருவருக்கொருவர் பொறி வைக்க வேண்டி உள்ளது. “ஏப்ரல் ஒன்றில்” முட்டாள்கள் தினமன்று தம் காதலை தெரிவிக்கும் காதலனும் காதலியும் அநேகமாய் இந்த ஏமாற்று விதிகளை தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் காதலும் குழந்தைகளும் இந்த ஏமாற்றுக்கு கசப்புக்கு பதில் இங்கு ஒரு சுட்டித்தனத்தை கொண்டு வருவதை மறுப்பதற்கில்லை. முகுந்தை தொடர்ந்து பிறரிடம் இருந்து வேறுபடுத்துவது இது தான்.
“மத்திகரே வீட்டில்” பழைய வீட்டின் பிடியில் இருந்து மெல்ல மெல்ல விடுபட்டு புதுவீட்டுக்கு செல்வதன் தவிப்பை சொகிறார். இந்த வகையான மேலும் சில கவிதைகள் இத்தொகுப்பில் உண்டு. அந்த மத்திக்கரே வீடு தினமும் பழசாகிக் கொண்டிருக்கும் நம் வாழ்வுதான். அதன் நினைவுகளும், நம்பிக்கைகளும், விருப்பங்களும் தாம். ஒரு குழந்தை பொம்மையை கட்டிப் பிடித்து தூங்குவது போல் நாம் முடிந்து போன நினைவிழைகளை தொடர்ந்து மனதின் பின்னணியில் மீட்டிக் கொண்டே இருக்கிறோம். பழைய புத்தகங்களை விடாமல் வைத்திருப்பது, பள்ளிக்காலத்தில் எங்கோ கேட்ட இசையை மீண்டும் கேட்டு கேட்டு ஒரு புண்ணை போல் மனதை பிதுக்குவது, தொடர்பே அற்றுப் போன உறவுகளை திரும்ப சந்திக்க அஞ்சுவது, நினைவில் அடுக்குகளில் ஒரு பெண்ணின் முகத்துக்கு நாளும் அதிகமாய் அழகு சேர்த்து சிந்திப்பது, இப்படி எவ்வளவோ. நினைவுகள் மேல் நமக்குள்ள fetish சுவாரஸ்யமானது. மத்திக்கரே வீட்டின் சொந்தக்காரர் வீட்டில் இருந்து வெளியேறின பின் பாஸ்போர்ட், ஆயுள்காப்பீட்டு பத்திரங்களில் இருந்து ஒரு சிதிலி விளக்கை எடுப்பது, ஒழுகும் குழாயை மூடுவது வரையிலான அவசிய-முக்கியமற்ற காரணங்களுக்காக அடிக்கடி அப்பழைய வீட்டுக்கு மீண்டும் மீண்டும் சென்று வருகிறார். வீட்டை விட்டு வருவதை “வீட்டை ஏமாற்றுவது” என்று அழைக்கிறார். இவரைப் போலவே நாமும் கடந்த காலத்தின் அசட்டுத்தனமான தகவல்களை நம்பிக்கைகள் எண்ணங்களை பிம்பங்களை நம்மை அறியாமலே ஒரு டில்டோவை போல் வாயில் நுழைத்து சுவைத்தபடி இருக்கிறோம்; தூங்கும் போது, வாசிக்கும் போது, வேலை செய்யும் போது, புணரும் போது கூட அடிமனம் இதை செய்து கொண்டே இருக்கிறது. ஆனால் இக்கவிதையில் இந்த சடங்கு வெறும் fetishஆக இல்லாமல் இருப்பது அதை (முன்பு குறிப்பிட்டது போல்) சுட்டியான விளையாட்டாக முகுந்த் மாற்றுவதனால் தான். குறிப்பாக, முடிவுறாமல் தொடரும் வாழ்வின் தருணங்களை அவசரம் காரணமாய் ஜேப்பில் மடித்து வைத்து புதிதாய் தொடரும் மனித அவஸ்தையை சொல்லும் “அம்மா பை”, “எடைச்சீட்டு” போன்ற கவிதைகளை சொல்ல வேண்டும். “அம்மா பையில்” தன் பழைய பொருட்களை புதிய பையொன்றில் போட்டு தன் திருமணத்தின் போது அருகில் வைத்துக் கொள்கிறான் ஒருவன். “எடைச்சீட்டில்” ரயில் வந்து விட்ட அவசரத்தில் ஒரு சிறுமிக்கு எடை எந்திரத்தில் இருந்து சீட்டு வெளிவரும் முன் கிளம்ப நேர்கிறது. “தொண்டையில் சிக்கிக் கொண்ட காசுடன் வண்ணமயமாய் விழித்தபடி” அது அவளை வழியனுப்புகிறது. நினைவுகளை விட்டு வந்தாலும் தூக்கி சுமந்தாலும், தன்னிலையானது என்றாலும் வரலாற்றுபூர்வமானது என்றாலும் நாம் அவற்றுக்குள் தாம் இருக்கிறோம்; நினைவுகளுக்குள் ஒரு குடுவை தங்கமீன் போல் இருக்கிறோம். முகுந்தின் இக்கவிதைகள் மற்ற கவிதைகளில் இருந்து மேலும் உயரமாக குதிகால் உயர்த்தி தம்மை நிறுத்தி கொள்கின்றன.
தற்கொலை, சக்கரநாற்காலி ஆகிய சொற்கள் தோன்றும் தற்கொலை பற்றியல்லாத ஒரு மனுஷ்யபுத்திரன் கவிதை உண்டு. அதுபற்றி முகுந்தின் அபிப்பிராயம் என்ன? “கவிதை பிடித்திருக்கிறது”. அதனால் அப்பக்கத்தில் நட்சத்திர குறியிட்டு வைக்கிறார். முகுந்தின் நிஜமான அபிப்பிராயம் இனிமேல் தான் வெளிப்படுகிறது. அவர் அருகில் உள்ள மேலும் இரண்டு கவிதைகளுக்கு நட்சத்திர குறிகளை வரைகிறார். ஒரு ஓவிய மனநிலை ஏற்படுவதால் அவர் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் வரைந்து ஸ்டேப்ளர் மேல் (உயிர்மை பத்திரிகையின் ‘நடுப்பக்கத்தில்’ படிக்கிறார் என்பது தெளிவாகிறது) பிறைநிலா வரைந்து, கீழே மலைத்தொடர் வரைந்து, மரக் கூட்டங்கள் வரைந்து, நதியை ஓடவிட்டு ஒருவழியாய் வனம் உருவாகிறது. இரவில் வந்து திரும்ப அப்பக்கத்தை பார்த்தால் அங்கு வனத்தில் குட்டி யானைகளின் சித்திரமும் இருக்கிறது. யார் வரைந்தது? முகுந்தின் ஆழ்மனம். அல்லது கவித்துவம். ஏன் யானைக் குட்டிகள்?.அவை அம்மா சின்னவயதில் கற்றுக் கொடுத்தவை. மற்றொரு கவிதையில் ஒரு நடிகையின் புகைப்படத்தில் மூக்குக்கு மச்சம் வரையும் சிறுமியை அம்மா கண்டிக்கிறாள். இன்னுமொரு கவிதையில் (’எளிமையான நேரம்’) கடிகாரத்தில் நேரம் பார்க்கும் பயிற்சியில் சோர்ந்து தூங்கும் ஒரு சிறுமி வருகிறாள். இந்த இரண்டு கவிதைகளுடன் சேர்த்து படிக்கையில் ”நட்சத்திர குறியிட்ட” கவிதை வாசிப்பின் படைப்பாக்கத்தை பற்றினது என்பது விளங்கும். ஒரு கவிதை பக்கத்தின் மேல் ஓவியம் கிறுக்குவது குறுக்கீடு தானே? வாசிப்பும் பிரதியை சிதைத்து சிதைத்து புரியும் குறுக்கீடு தான். வாசகனிடம் பேசும் போது அல்லது விமர்சனம் வாசிக்கும் “என் மூக்கின் மேல் ஏன் மச்சம் வரைகிறாய்” என்று கேட்காத எழுத்தாளன் யார்? கடிகாரத்தை கடிகாரமாய் பார்க்காமல் முட்களின் இடத்தில் சற்றுமுன் தின்ற குட்டி இட்லிகளை வைத்து கற்பிக்கிறது ஒரு குழந்தை (’எளிமையான நேரம்’). குட்டி இட்லி கவிதைகள் செய்து விண்டு தின்னும் விளையாட்டு வாசிப்பு தான் முகுந்தின் பரிந்துரை.
பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பிய கற்பனாவாதிகளின் (இன்றும் சிலரின்) செல்ல நம்பிக்கை ஒன்று இழந்து விட்ட குழந்தைமையின் பரிசுத்தம் பற்றினது. வளர்ந்த பின் ஈடன் தோட்டத்தில் இருந்து நாம் வெளியேற்றப்படுகிறோம். திரும்ப எப்படி ஆதாம் ஏவாளாவது? அதற்கு கற்பனாவாதிகள் சொல்லும் பதில் வாழ்வில் எளிமையை பின்பற்றுங்கள், சிறுநுட்பங்களை ரசியுங்கள், கிராமியத்தை, இயற்கையை வழிபடுங்கள் போன்றவை. முகுந்த் இழந்த எதையும் மீட்பது பற்றி கவலைப்படுவதில்லை. நாம் வளர்ந்த பின்னரும் குழந்தையாக இருப்பதை சொல்லுகிறார். தொடர்ந்து எதிர்தரப்புடனோ சுயத்துடனோ விளையாடிக் கொண்டிருப்பதே முகுந்தின் குழந்தைமை. கோயில் கருவறை மேல் எழுதியிருக்கும் வெண்பாவை சின்ன டயரியில் காப்பியடிக்கும் பக்தையிடம் போலவோ அவளிடம் விளக்கேற்றி, கந்தசஷ்டி கவசம் சொல்லி, 108 முறை அந்த வெண்பாவை பாடினால் குறைகள் விலகும் என்று அறிவுறுத்தும் ஐயரிடம் போலவோ (“மகாமந்திரம்”) அசட்டுத்தனமாக கூட இந்த குழந்தைமை வெளிப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. அது தன் வீட்டையும், மனைவியையும் ஏமாற்ற பிரயத்தனப்படும் மனிதனிடம் போல் தீமையாகவும் தோன்றுகிறது. முகுந்த் நாகராஜனின் குழந்தைகள் அப்பழுக்கற்ற குறும்பும் குரூரமும் சுமந்து அப்படியே தான் எப்போதும் இருக்கின்றன. அவை வளரவும் இல்லை, எதையும் இழக்கவும் இல்லை.
முகுந்தின் கவிதைகளை பற்றி தெளிவாக அலசல் செய்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள்
ReplyDeleteஎன் அம்மா சொன்னார்.கோயிலில் ஒரு பெண்மணி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு வெண்னெய்யை எடுத்து வாயில் போட்டுக்கொண்டாராம்......நூலின் தலைப்பு, பதிப்பகம் பற்றிய குறிப்பு இல்லையே...
ReplyDeleteசர்வோத்தமன்.
நன்றி மதுரை சரவணன்
ReplyDeleteசர்வோத்தமன், நூலின் தலைப்பை நடுவில் குறிப்பிட்டிருக்கிறேன். பதிப்பகம் உயிர்மை. (சச்சின் என்றால் மும்பை இந்தியன்ஸ் போல இதையும் குறிப்பிட வேண்டாம் என்று நினைத்தேன்)
ReplyDeleteமுகுந்த்... :)
ReplyDelete