நண்பனுக்கு – இது ஒரு திறந்த கடிதம்.
நீ சட்டென்று பேங்களூர் சென்று விட்டது அறிந்தது வருத்தம். மிக சுய நலமான வருத்தம். இங்கே இருந்த போதும் நாம் அடிக்கடி சந்தித்துக் கொண்டதில்லை தான். ஆனால் உன் அண்மை இருப்பு ஒரு ஆசுவாசம் தருகிறது. இதோ இப்போதே நான் குறும்பேசியில் பேச முடியலாம். வெளி அத்தனை சுருங்கியதாக இருக்கட்டும். ஆனால் தொலைதொடர்பின் வெளி அத்தனை காத்திரமாக இல்லை.
இது இரண்டாம் அல்லது மூன்றாம் முறை. நாம் சந்தித்து நீண்ட உரையாடல்கள் நிகழ்த்தின பின் உடனே வேறு ஊருக்கு சென்று விடுகிறாய்.
கல்லூரியில், நாம் ஒன்றரை வருடங்கள் சந்தித்து பழகியும் இறுதி கட்டத்தில் தான் நண்பர்கள் ஆனோம். ஒரே விடுதியில் இருந்தும் நாம் ஒரு உரையாடலுக்கு சந்திக்க திட்டமிட்டு அது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. உனக்கு முடிந்தும் என் தேர்வுகள் தொடர்ந்தன. எனக்காக சில வாரங்கள் ஊருக்கு போவதை தள்ளிப் போட்டு விடுதியில் காத்திருந்தாய். இறுதியில் நாம் மைதானப் புல்வெளியில் சந்தித்து என்ன உரையாடினோம் என்று நினைவில்லை. பேச்சின் சுவை பொருளில் இல்லைதானே.
மற்றொரு முறை தண்ணி அடித்தபடி என்னுடன் பேச விரும்பியதால் பாருக்கு போனோம். இரவு பதினோரு மணி வரை பேசியிருப்பேன். அது போதாதென்று தன்னை ஒரு முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர் என்று கூறிக் கொண்டவரை நட்பாக்கி அவர் தன் மகள் குறித்து கூறியதை இன்றும் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறேன். ஒரு அப்பா தன் மகள் குறித்து ஒரு குடிகாரனிடம் குறிப்பிடுவாரா, அதுவும் இரவில், அதுவும் திருமணம் குறித்து. அடுத்து நினைவில் உள்ளது கிளம்புகையில் வண்டி மக்கர் செய்ய மாறி மாறி நாம் சொதப்ப ஆபத்பாந்தவன் தோன்றி மூக்கை பொத்திக் கொண்டு வண்டியை உதைத்து கிளப்பி விட்டார். மறு நாள் என்னிடம் சொன்னாய்: “நேத்து ரொம்ப எரிச்சலாய்ட்டேன், என்னை நீ பேசவே வுடல”. இப்படி ஆகும் என்று முன்கூட்டியே தெரிந்திருந்தது என்று தாமதமாக சொல்கிறேன்.
அப்பாவின் வற்புறுத்தலால் நீ சென்னையிலிருந்து கிளம்பி, பாளையங்கோட்டையில் பி.எட் ஒரு வருடம் தங்கிப் படித்த காலத்தை விரும்பியிருக்க மாட்டாய். அப்போது எனக்கெழுதிய கடிதத்தில் “சென்னையில் உன் கையை பிடித்த படி சுற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தாய். இப்போதுதான் நினைவு வருகிறது. நான் உன் கையை ஸ்பரிசித்ததே இல்லை. கல்லூரியில் ஒரு பெண்ணின் முத்தம் உதட்டுக்கு வந்ததை கூச்சத்தில் நான் கன்னத்தில் வாங்கியதை தான் இதுவரை நினைத்து வந்திருக்கிறேன். அந்த பெண் ரொம்ப தாமதமாக பிறகொரு நாள் தன்னுடன் மருத்துவமனைக்கு வருமாறு அழைத்தாள். அப்போது தற்போதைய மனைவியை கருத்தாக காதலித்துக் கொண்டிருந்தேன். நிறைய யோசித்து முடிவுக்கு வராமல் மறுத்து விட்டேன். சற்று கழித்து மற்றொரு தோழி இங்கிலாந்திலிருந்து திரும்பினாள். வரும் நாள் விபரம் சொல்லி விமான நிலையம் வரச் சொன்னாள். செல்ல வில்லை. பார் இதையெல்லாம் நினைத்து வந்திருக்கிறேன். நீ சொன்னதை …
இரண்டாம் மூன்றாம் முறைகள் நீ சென்னைக்கு முழுக்கு போட்டதும் இதே போன்ற நீண்ட சந்திப்பு அல்லது சந்திப்பு திட்டத்தின் பிறகு என்பதால் எனக்கு குற்ற-உணர்ச்சி ஏற்படுகிறது. அதனாலே இக்கடிதம். சகுனம் செரியில்லை. அல்லது வேறெதாவது சரியில்லை. இன்று படித்த சார்லஸ் சிமிக்கின் கவிதை ஒன்றில் கைக்கடிகார வட்டத்தை பறக்கத் துடித்தபடி அமரும் பட்டாம்பூச்சியுடன் ஒப்பிடுகிறார். எதற்கு வீணாக அலட்டிக் கொள்கிறேன். இது பட்டாம்பூச்சியின் தவறு. காலச்சக்கரம் சுற்றி வரும் போது நீ சென்னையில் இருக்க வேண்டும். அப்போது நாம் பிசிறின்றி ஆரம்பத்தில் இருந்து துவக்கலாம். புல்வெளியில் இருந்து டாஸ்மாக்கிற்கு. இம்முறை நீ ஏமாற மாட்டாய். நான் தண்ணி அடிப்பதை நிறுத்தி ரொம்ப காலமாகிறது.
என் காதலியாக மாறின பின் அவளை முதலில் மவுண்ட் ரோடில் சந்திக்க ஏற்பாடாகியது. ஒரு மணி நேரம் காத்த பிறகு அவள் நண்பி அழைத்து காதலியின் மாமா சுனாமி வந்ததாய் அச்சுறுத்தியதால் அவளால் வீட்டிலிருந்து கிளம்ப முடியாதாகையால் ரத்து என்று அறிவித்தாள். பிறகு சந்திப்புகளுக்கு எந்த தடையும் இல்லாமல் திருமணம் வரை சென்றது. இம்முறை சுனாமி நினைவு தினத்தன்று வெளியே செல்ல திட்டமிட்டு பிறகு கைவிட்டோம். மூட நம்பிக்கை காரணமல்ல. ஒரு சந்திப்பு முறிவின் நினைவாக.
No comments :
Post a Comment