Tuesday, 12 April 2011

“ஊருநேச்சை”: கடவுள்களாலும் சாத்தான்களாலும் நெருக்கப்படும் மனம்



ஹாமீம் முஸ்தபாவின் ஊருநேச்சை தொகுப்பில் உள்ள கவிதைகளில் ஒரு விமர்சன குரலை தொடர்ந்து கேட்கிறோம். சமூக அவலங்கள், பண்பாட்டு கூறுகள் மற்றும் சிக்கல்கள், பெண்ணியம், வரலாற்று நினைவுகள், மதத்தின் நடைமுறை முரண்பாடுகள் ஆகியவற்றை நேரடியான மொழியில் விவாதிக்கும் இக்கவிதைகள் எந்த பாசாங்குமற்றவை. இக்கவிதைகளை தனது விமர்சனங்களை தெரிவிக்கவும் கலாச்சார ஆவணமாக்கவும் பிரதானமாய் ஒரு புறம் உத்தேசிக்கிறார். இக்கவிதைகளுக்கு ஒரு நுட்பமான தளமும் உண்டு. அது குழந்தைகளின் களங்கமற்ற கூர்மையான கேள்விகளாலும், எளிய பாமர மனதின் பேய் சார்ந்த விசித்திர கற்பனைகளாலும் ஆனது. அதாவது முஸ்தபாவற்ற ஒரு இடம் இக்கவிதைகளில் உள்ளது.

குழந்தைகளுக்கு நாம் நமது தர்க்கத்தை மெல்ல மெல்ல புரிய வைக்கிறோம். ஆனால் அவர்களுக்குள் ஏற்கனவே ஒரு தனிப்பட்ட தர்க்கம் உள்ளது. நாம் நம்புவது போல் அது பிழையானது அல்ல, சற்று வேறுபட்டது. ஏனென்றால் நமது நம்பிக்கைகள், அறிவியல், ஒழுக்க, நீதி சார் நம்பிக்கைகளும் சேர்த்து, பாதிக்கு மேல் கற்பிதங்களின் மேல் எழுப்பப்பட்டவை தாம். தத்துவவாதிகள் கூட தமக்கு சௌகர்யமாக உள்ளவற்றையே நம்ப தலைப்படுகிறார்கள் என்கிறார் நீட்சே (“நன்மை தீமைக்கு அப்பால்). குழந்தைகள் தமது சுடரும் கற்பனை கொண்டே ஒவ்வொரு பொருளையும் அர்த்தப்படுத்தி ஒளியேற்றிக் கொண்டே செல்கின்றனர். அவர்கள் வளர்ந்தவர்களை போல் அல்லாமல் எந்த அர்த்தத்தையும் நிரந்தரமாய் வலியுறுத்துவதில்லை. அதனாலேயே “குழந்தைகளிடம் பேசும் ஒவ்வொரு வாட்டியும் தோத்துப் போகிறேன் என்கிறார் முஸ்தபா. அல்லா மழையை பெய்விப்பதாய் வாப்பா சொல்லும் போது குழந்தை அல்லா “வானத்தில இருந்து மழையை தூக்கி போத்துண்ணு போடுவானா என்று கேட்கிறது. இது வெறும் மதம் மீதான கேலி அல்ல. மழை என்பது தண்ணீர் ஆவியாகி குளிர்ந்து பெய்வது என்று சொன்னால் கூட பாதிக்கு மேல் பழுதுபட்ட உண்மையாகவே முடியும். ஒவ்வொரு இயற்கை உண்மையும் மிக சிக்கலானதாக மனிதனால் எளிதில் தர்க்கத்தால் வசப்படுத்த முடியாததாக உள்ளது. உண்மையை நெருங்க குழந்தையின் தர்க்கம் வேண்டும் தொடர்ந்து மாறும் அதீத கற்பனையின் மீதெழுந்த விளையாட்டு தர்க்கம். கடவுளால் மழை பெய்கிறது என்பது கூட மிக கற்பனாபூர்வமான அவதானிப்பு தான். ஆனால் நாம் கச்சிதமான ஒரு தர்க்கத்தை நுழைத்து அதை பொய்யாக்குகிறோம். அல்லா மழையை பொத்தென்று தூக்கி போடுவது அல்லா வானத்தில் இருந்து மழையை அனுப்புகிறார் என்பதை விட நிஜமான உண்மை. ஏனென்றால் நாளை அக்குழந்தை வேறொன்றை தன் தீராக் கற்பனை மூலம் கண்டடைந்து சொல்லும். அது மேலும் நிஜமான அவதானிப்பாக இருக்கும்.
இதை விட சுவாரஸ்யமான மற்றொரு கவிதையில் குழந்தை அப்பாவிடம் அல்லாக்கு கண்ணுண்டா என்று கேட்க ஆரம்பிக்கிறது. கண் இருக்கிறதென்றால் அது அறிந்த எல்லா ஊரில் உள்ளவர்களையும் அல்லாவால் பார்க்க முடியும் அல்லவா! சரி இதை பேசிக் கொண்டிருக்கிற நம்மையும் அல்லா பார்ப்பானா? பார்ப்பான். அது எப்படி இரண்டு கண் கொண்டு இத்தனை பேரை இறைவனால் பார்க்க முடியும்? நியாயமான கேள்வி தான். நமது மொழியின், அதன் தர்க்கத்தின், போதாமையை சொல்லும் கவிதை இது. இக்கவிதையில் நம்மளையும் பார்ப்பானாஎன்று குழந்தை கேட்குமிடத்தில் கவிதையின் ஆழம் கூடி விடுகிறது. முதலில் குழந்தை உலகத்தை அறிந்து அவ்வறிவு கொண்டு சுயத்தை (நம்மளையும்) அறிய முயல்கிறது. நாம் இதை பொதுவாக திருப்பி செய்வோம். அடுத்து, சுயத்தை அல்லா பார்ப்பானா என்று இவ்வரியை நாம் விரித்து வாசிக்கும் போது பிரபஞ்சத்தின் பிரம்மாண்டம் குறித்த சிறு திகைப்பும் நமக்கு ஏற்படுகிறது. இத்தனைக்கும் எத்தனை எளிய வரிகளால் கட்டப்பட்டுள்ளது இக்கவிதை.
அடுத்து கிட்டத்தட்ட இதே அளவில் கற்பனை தீவிரமடைவது பைத்தியம் கொண்ட, தொன்மங்கள் வாழும் மனதில் தான். அதனாலே இத்தொகுப்பில் உள்ள பேய், மாந்திரிகம் குறித்த கவிதைகள் வசீகரமாய் உள்ளன. முதலில் ஒரு எளிய கேள்வியை கேட்டுக் கொள்வோம்? கடவுளும் பேய்களும் நமக்கு எதற்கு? ஏன் நோயும் தீனமும் எழுச்சியும் மீட்பும் இவர்களால் நடப்பதாய் நம்பப்படுகிறது? புல்லின் நுனியில் இருக்கும் பனித்துளி மெல்ல மெல்ல பிரபஞ்சத்தை தனக்குள் நிரப்பி தனதாக்க முயல்வது போல் மனித மனம் ஆதி காலம் தொட்டே முயன்று வருகிறது. நமது அறிவின் போதாமை குறித்த பிரக்ஞையும் நமக்கு நெடுங்காலமாகவே உண்டு. சாமியாடுவதும் பேயாடுவதும் கொஞ்சம் புனிதம் கூடிக் குறைந்தாலும் ஏறத்தாழ ஒரே நோக்கத்துக்காக தான். நாம் உடலை கொண்டு அந்த சிறு பனித்துளி போல் பிரபஞ்சத்தை, அதன் இயக்கத்தை நடிப்பதன் மூலம் கற்பனை பண்ணிக் கொள்கிறோம். தொன்மங்களில் இந்த உடல் நாடகத்தை பாதுகாத்து வைக்கிறோம். நாட்டார் நம்பிக்கைகளில் நன்மையும் தீமையும் வெவ்வேறாக உருப்பெறவில்லை. ஒன்றின் இருவேறு வடிவங்கள். அதனாலே இரவுக் காட்சி பார்த்து விட்டு தனியாய் வருபவனை பீடிக்கும் பேய் மறுமுறை பார்க்கும் போது இன்னும் திருந்தலையான்னு அவனிடமே கேட்கிறது. இக்கடைசி வரியில் ஏற்படும் நகைச்சுவையும் விசித்திரமும் கவிதைக்கு ஒளியேற்றுகிறது. இந்த பேய் அவனது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக, வட்டார மொழியினூடு கலந்ததாக, ஆளுமையின் இன்னொரு பிளவாக உள்ளது. இன்னும் சொல்வதானால், இவ்வுலகை இந்த துக்கையின்மூலமாகவே விளங்கிக் கொள்கிறான். அம்மா, அப்பா, புணர்ச்சி துணை ஆகியோர் எப்படி ஆதிபடிமங்களோ அது போன்றே இந்த பேயும். இந்த பேய் அவனது தனி மொழி. உலகின் நுணுக்கங்களை, அதன் பிரம்மாண்டத்தை அவன் அறிய அவன் பயன்படுத்தும் ஒரு நுண்ணோக்கி. ஏகப்பட்ட கற்பனை சாத்தியங்கள் கொண்ட கவிதை இது.
மற்றொரு கவிதையில் பள்ளிக் கிணற்றில் நீர் இறைக்கும் ஒரு பெண்ணை ஒரு பேய் பயம் காட்ட அவள் துர்கனவுகள் காண்கிறாள். நாம் எளிதில் கடந்து செல்ல வாய்ப்புள்ள இவ்வரியில் கிணறு ஒரு குறியீடு என்பதை கவனிக்க வேண்டும். நோயும் அதனாலான வாதைகளும் ஏன் வருகின்றன? நுண்ணியிரிகளால் என்பது நவீன சிகிச்சைக்கு வசதியான ஒரு பாமர நம்பிக்கையாகும். பெரும் நோய்களில் மாட்டிக் கொண்டு வெளிவர முடியாமல் தவிப்பவர்கள் நோய்மை மருத்துவம் கடந்தது என்பதை உணர்வார்கள். எண்ணிலங்கா நுண்ணியிரிகளும், ஆபத்துகளும் அதற்கு சமமான மருத்துகளும் முறைகளும் கொண்ட உலகில் எப்படி சிலர் பத்திரமாகவும் சிலர் அவஸ்தைப்பட்டுக் கொண்டும் வாழ்கிறார்கள்? நாம் வைக்கும் ஒவ்வொரு அடுத்த காலடியிலும் மரணத்தின் படுகுழி ஒன்று உள்ளது. இங்கு நாம் எப்படி உயிருடன் இருக்கிறோம்? காரணமற்ற காரணம் ஒன்று நம் உயிர் நிலைப்பை சாத்தியமாக்குகிறது. அது சம்பங்களின் தொடர்பற்ற இணைவோ இறைவனின் பகடையாட்டமோஆகட்டும். இதனால், மிகக் கராறான அறிவியல் முறைகளை பின்பற்றும் மருத்துவர் கூட பலி ஆட்டின் கழுத்தை குறி வைக்கும் ஒரு குருட்டு பூசாரியை போன்றவர் தான். பல சமயங்களில் மனக்கிணற்றுக்குள் நமது நிலையை பார்க்கும் ஒருவர் நோய்மையில் விழுந்து விடக் கூடும். அல்லது மற்றொரு கவிதையில் முட்டியை சுற்றி பொக்களம் வந்தவருக்கும் ஆலிம்சா சொல்லுவது போல் (எப்போதும் நம் வெகுஅருகிலே இருக்கிற) பேய் (தீமை) கடந்து போனதனாலும் இருக்கலாம். இன்னொரு கவிதையில் கொள்ளை நோய் வந்து ஊரில் உள்ள மக்கள் கொத்து கொத்தாக செத்து விழுகிறார்கள். இப்போது போல் “மருந்தும் டாக்டறும் அப்போது இல்லை என்கிறார் கவிதை சொல்லி. ஆக கவிதை இங்கிருந்து அறிவியலின் கரார்தன்மை இல்லாத ஒரு கடந்த காலத்துக்கு, விசித்திர நம்பிக்கைகளின் உலகுக்கு செல்கிறது. அங்கு மனிதர்கள் நோய்மையை கடக்க இறைபாடல்களை பாடுகிறார்கள். “பகுதாது தன்னில் வாழும் குதுபொலி நாயகமே என்று சத்தமாக பாடுகிறார்கள். அப்போது ஒரு யானை தெருமுக்கில் வந்து நின்று மூன்று முறை  பிளிறிக் கொண்டு போகிறது. அதோடு கொள்ளை நோய் விலகி மக்கள் தப்பிக்கிறார்கள். கவிதை சொல்லி யானை பிளிறலை விளித்தல் என்கிறார். யானை விளிப்பது வாங்கு விளிப்பது போல் என்று நாம் கற்பனை பண்ணிக் கொள்ளலாம். யானை பிரம்மாண்டத்தின் குறியீடு. இயற்கை என்றும் கொள்ளலாம். மனித மனங்கள் ஒன்று கூடி இயற்கையின் பகுதியாக மேலெழுவது என்று இந்த வரியை நாம் விரித்து கொள்ளலாம். நோய்மை ஒரு பேருண்மையின் பகுதி என்று மனம் புரிந்து கொள்கிறது. அத்தோடு நோய்மையும் விலகுகிறது.

இந்த உலகை ஒரு ராட்சத ராட்டினமாக கற்பனை பண்ணி கொள்ளுங்கள். நாம் படுவேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறோம். கோடிக்கணக்கான சம்பவங்கள் நம்மை சுற்றி பறக்கின்றன. இந்த காட்சிகளில் ஒன்றில் இறைவனும் மற்றொன்றில் சாத்தானும் இருக்கலாம். அல்லது சுற்றும் வேகத்தில் இறைவன் சாத்தானாகவும் சாத்தான் இறைவனாகவும் தெரியலாம். வாழ்வில் தினசரி இருவரும் நம்மை கடந்து போய்க் கொண்டே இருக்கிறார்கள். யாரை பார்க்கிறோம் என்பதை பொறுத்து நாம் ஒரு நாள் பக்தனாகவும் மறுநாள் நோயாளியாகவும் இருந்து கொண்டு இருக்கிறோம். நாம் எப்படி இருக்கிறோம் என்பதல்ல; கடவுளர்களின் சாத்தான்களின் மத்தியில் இருக்கிறோம் என்பதே முக்கியம். ஹாமீம் முஸ்தபாவின் கவிதைகளில் இந்த புரிதல் நமக்கு சாத்தியமாகிறது.

வெளியீடு: திணை வெளியீட்டகம்
விலை: ரூ 25
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates