Monday, 16 July 2012

வந்து பிரிவதும் சென்று பிரிவதும்


வந்து வந்து பிரிபவர்களின்
இருப்புகள்
நமக்கான தண்டனைகள்

ஒருவர்
கூட இருப்பதும்
சட்டென்று விலகுவதும்
ஒரு முட்டை ஓட்டைப் போல்
நம்மை
நொறுக்கி விடுகின்றன


ஒரு கூழாங்கல் போல்
அழைப்புகளையும் வெறுப்புகளையும்
எதிர்த்து கிடக்கவே
விரும்புகிறோம்

ஆக
நாம் சென்று சென்று பிரிபவர்களாக
இருக்க உத்தேசிக்கிறோம்

நாமாக
பிரியும் போது
நம் குற்றவுணர்வை
சுய பொறுப்பு வென்று விடும்
அப்போது
கணக்கு புத்தகங்கள்
நம் பக்கமிருந்து எழுதப்படுகின்றன
வெட்டல்கள் திருத்தல்கள் தாராளமாய் செய்து
இழப்புகளை மிகையாக்கி
காட்டுகிறோம்

நாம் பிரிபவர்களாக இருக்கவே
விரும்புகிறோம்

வந்தவர்கள் போன பின்
சொந்த வீட்டின் நிறைகளும்
பிரிந்து திரும்ப வந்த பின்
அதே வீட்டின் குறைகளும்
பூதாகரமாகி நம்மை
ஆசுவாசப்படுத்து கின்றன

ஒரு உடைந்த நாற்காலியில்
இருக்க கற்ற பின்
குறைந்த காற்றில்
சுவாசிக்க பழகிய பின்
போதாமைகளை அசை போட்டு புளித்த பின்
வீடுகளை தூய்மையாக்கி
ஒவ்வொன்றாய்
தூசுக்கும் இருளுக்கும் விட்டுச் சென்ற பின்

சிலகாலம்
யாருடனாவது இருக்க

யாராலாவது ஒரு காற்றுக் குமிழி போல் விழுங்கப்பட

இருக்க முடியாத தொடர் வெளிச்சத்தில் இருக்க

பூதக்கண்ணாடிக்கு கீழான காட்சிகளுடன் வாழ

பிரியப்படுகிறோம்


எளிதில் நொறுங்கக் கூடிய
லகுவான ஒன்றாய்
மாறுகிறோம்
அதன் அபாயங்களை
பொருட்படுத்தாமல்

அழும் குழந்தையை
பொறுப்பெடுத்துக் கொண்டவரிடம் போல்
கைமாறி கைமாறி போகிறோம்
கொஞ்சல்களும் மிரட்டல்களும்
நம்மை அழ வைக்கின்றன
மேலும் மேலும்

இத்தனை தேவைகள் விருப்பங்களுக்கு
மத்தியில்
தொடர்ந்து பிரிய பாத்தியப்பட்டு இருக்கிறோம் -
ஒரு சிறுகதையின் இறுதிப் பத்தியை போல்
மாயமாய் மறைந்த நபரின்
ஒரே ஒரு கவனமற்ற சொல்லை போல்
மறந்து போன சொல்லின்
முதல் எழுத்தைப் போல்
அது தான்
புரிந்து கொள்வதற்கான துவக்கமாக இருக்கிறது

அதனாலே
எப்போதும் இரு வாசல்களையும்
திறந்து வைத்திருக்கிறோம்
யார் முதலில் வெளியேறுவது
என்று போட்டி போடுகிறோம்

வெளியேறுபவரின் பக்கமே
நியாயம் அதிகம் கனக்கும்
அவர்களின் பக்கம்
என்றுமே தூய்மையானதாக இருக்கும்

அவர்கள் கோபிக்கலாம் கடிந்து கொள்ளலாம் தீர்ப்பெழுதலாம்
இணைந்து இருப்பதன் நியாயங்களை
சொன்னவாக்கில் மறந்து விடலாம்

அவர்களின் கோணலான தர்க்கங்கள்
நிமிர்ந்து கொள்கின்றன
வரலாறு ஒரு பக்கமாய் சாய்கிறது

நாம் எல்லோரும்
அவசரமாய் வியக்கிறோம்
கைகுலுக்கிய கரங்கள்
ஏன் கருணையற்று
கைவிடுகின்றன என

அவர்கள் கடந்து போகிறார்கள்
நிமிர்ந்து பெருமிதமாய் -
விழுந்து உடையும் கண்ணாடிப் பொருளின்
பலகீனத்தை
குற்றம் சாட்டும் ஓராயிரம் வார்த்தைகளுடன்
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates