அம்மா கணினியில் தலைவிட்டு தேடிக் கொண்டிருந்தாள். கோகிலா தன் குட்டிப் பின்னலை வைத்து விளையாடியபடி டி.வி சேனல்களை மாற்றினாள். கொஞ்ச நாளாக அவள் கார்டூன் தமிழ் பேச ஆரம்பித்திருந்ததால் அம்மா அவளை வளர்ந்தோருக்கான சேனல்கள் பார்க்க சொல்லி இருந்தாள். கோகிலாவுக்கு சீரியல்கள் பிடித்தன.
அதில் அவள் அம்மாவை போல பல அம்மாக்கள் வந்தார்கள். அழகாக டிரஸ் பண்ணி ஓவர் மேக்கப், ஒட்டியாணம் உட்பட ஏகப்பட்ட நகை சகிதம் தோன்றினார். அம்மாவை போல் அவர்களும் பல சமயம் அழுதார்கள். ஆனால் பவிசாக அழகாக. தன் அம்மா மட்டும் இவர்களைப் போலல்லாது அழும் போது ஏன் வெளிறிப் போன நைட்டியும் எண்ணெய் வடியும் முகமுமாக தெரிகிறாள் என அவளுக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. கோகிலா அழகாக ஆடையணிந்தவர்களைப் பார்த்தால் சட்டென்று ஒட்டிக் கொள்வாள். அழுக்கானவர்களைப் பிடிக்காது. அவளைப் பார்க்கும் போதெல்லாம் அவளது நிஜ பெற்றோர்கள் மிக பகட்டாக இருந்திருப்பார்கள் என அவள் அம்மாவுக்கு தோன்றும், ஆனால் வெளியே சொல்ல மாட்டாள்.கோகிலா கொஞ்ச நாளுக்கு முன் அநியாயத்துக்கு பொய் சொல்ல துவங்கினாள். பள்ளிக்கு மட்டம் போட வயிற்று வலி என்று அழுவாள். சரி என்றால் கொஞ்ச நேரத்தில் லெய்ஸ் சிப்ஸ் கொறித்தபடி டீ.வியில் குத்து டான்ஸ் பார்த்துக் கொண்டிருப்பாள்.
அம்மாவின் கவனத்தை ஈர்க்க அவள் எப்போதும் சத்தமாக டீ.வியில் குத்து டான்ஸ் வைத்து போதாதற்கு இடுப்பை வெட்டி வெட்டி ஆட்டம் வேறு போடுவாள். அவளுக்கு பொய் சொல்வதில் கூச்சமே இல்லை என்பது மட்டுமல்ல தான் பொய் சொல்லுகிறோம் என்பதை அவளே வெளிப்படுத்தியும் விடுவாள். அப்போது அவள் அம்மாவுக்கு சிரிப்பாகவும் வருத்தமாகவும் ஒரே நேரத்தில் வரும். கோகிலா பின்னர் வகுப்பில் இருந்து வாசனை ரப்பர், மேஜிக் ஸ்கேல் போன்றவற்றை திருடிக் கொண்டு வரத் துவங்கினாள். ஒருநாள் வீட்டில் இருந்து பாதாம் மலாய் இனிப்புகளை எடுத்துக் கொண்டு போய் விட்டாள் எத்தனை கேட்டும் எடுத்ததாய் ஒத்துக் கொள்ளவில்லை. பின்னர் பக்கத்து வீட்டு குழந்தைகளோடு அவள் பங்கிட்டு தின்றதை அறிந்த போது அம்மாவுக்கு அது சுட்டியாகத் தான் தெரிந்தது. ஆனால் சற்று வருத்தமாகவும் இருந்தது. இந்த திருட்டு புத்தி அவளது ரத்தத்தில் இருக்குமோ என்ற பயம் அவளுக்கு தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருந்தது.
கோகிலாவின் அம்மா சந்தியா தத்தெடுப்பதற்காக விண்ணப்பித்த போது தோற்றம் நிறம் முக அமைப்பு ஆகியவற்றுக்கு ஏற்பவே குழந்தையை தேர்ந்தார்கள். நாற்பது வயதுக்கு மேல் திருமணக் கனவை ஒரேயடியாக துறந்து விட்டிருந்தாள். ஆனாலும் குடும்பத்துக்குள் சம்மதிக்க வைக்க அநாயச பிரயத்தனம் தேவைப்பட்டது. விதவையான அக்கா அவளது முழுஆதரவையும் தருவதாக உறுதி அளித்தாள். அம்மா “நம்ம குலம் கோத்திரத்துக்குள்ளே இருந்து ஒரு நல்ல குழந்தையா பாத்து எடுத்தா சரி”என்ற நிபந்தனையுடன் ஒப்புக் கொண்டாள். சந்தியாவுக்கு அதெல்லாம் சாத்தியமில்லை என்று தெரிந்தாலும் பேருக்கு சரி என்றாள். அம்மா தன் உறவினர் தெரிந்தவர் இடம் எல்லாம் கோகிலா தூரத்து சொந்தத்தில் இருந்து தத்தெடுத்த குழந்தை என சொல்லி வைத்தாள்.
இப்படியெல்லாம் திட்டமிடல் இருந்தாலும் குழந்தை ஒரு தெய்வீக பந்தம் காரணமாகவே தன்னிடம் வந்தது என சந்தியா நினைத்தாள். கோகிலாவை குழந்தைகள் இல்லத்தில் பார்த்த அந்த நிமிடங்கள் அவளுக்கு துல்லியமாக நினைவிருந்தன. பார்த்தவுடன் நெஞ்சில் ஒரு பரிதவிப்பு, ஒரு ஒட்டுதல், நீண்ட நாள் பிரித்தவரை பார்க்கையில் போல இதயம் வேகமாக என்று அடித்தது. கைகால்கள் பரபரத்தன. இவள் தான் தன் குழந்தை என உள்ளுணர்வு சொல்லியது.
கோகிலா இப்போது டி.வி சத்த்தத்தை அதிகப்படுத்தி தரை அதிர குதித்தாள். அம்மா போய் அறைக்கதவை சாத்தினாள். அவள் கதவைத் தட்டி “அம்மா பசிக்குது” என்றாள், தன் சின்ன வாயை கோணியபடி. “இப்போதானேடி சாப்பிட்டே” என்று சலித்தபடி சாதம் பிசைந்து உருளைக்கிழங்கு வறுவலுடன் ஊட்டினாள். கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் கதவைத் தட்டி “அம்மா தூக்கம் வருது” என்றாள், முழங்காலையும் தலையையும் சொறிந்தபடி. சந்தியாவுக்கு அவசரமான வேலை இருந்தது. ஆனாலும் கணினியை அணைத்து மெத்தையை தயார் பண்ணி கோகிலாவை படுக்க வைத்து கூட படுத்துக் கொண்டாள். கொஞ்ச நேரமாவது கூடப் படுத்தால் தான் அவள் தூங்குவாள். அப்படியும் தூங்காவிட்டால் கதை சொல்ல வேண்டும்
கோகிலாவுக்கு பிரியமான கதை அவளை தத்தெடுத்த கதை. அதை சொன்ன கொஞ்ச நேரத்தில் உம் கொட்டியபடியே தூங்கி விடுவாள். அது உண்மையில் கதையே அல்ல. தத்தெடுக்கும் போது ஆலோசகர்களும் அவளது நண்பர்களும் கோகிலா ஒரு தத்துக்குழந்தை என்ற உண்மையை விரைவிலே சொல்லி வளர்ப்பது உசிதம் என்று அறிவுறுத்தினார்கள். அப்படித் தான் உண்மையை அவள் ஒரு கதை போல் கோகிலாவுக்கு சொல்லி புரிய வைத்தாள். எதிர்பார்த்தது போல் கோகிலா அதிர்ச்சி அடையவோ அழவோ இல்லை. அவளுக்கு அந்த கதை மிகவும் பிடித்து போனது. போரடிக்கும் போதெல்லாம் அந்த கதையை சொல்லக் கேட்பாள். சந்தியாவுக்கும் உண்மையை அவள் சுலபத்தில் ஏற்றுக் கொண்டு விட்டதில் மகிழ்ச்சி. அன்றும் கதை சொன்னாள்:
“அப்போ கோடைக்காலம் துவங்கி இருந்தது. ஒரே வெக்கை, வறட்சி. ஆனால் அன்னிக்கு சட்டுன்னு மழை பெஞ்சுது. நான் குடை எடுத்துட்டு போகலையா நல்லா நனைஞ்சுட்டேன். புனித பீட்டர் குழந்தைகள் இல்லம். பொதுவா உள்ளே போய் குழந்தைங்களை பார்க்க விட மாட்டாங்க. ஆனால் நிர்வாகிகள் எனக்கு தெரிஞ்சவங்க என்கிறதுனால அலவ் பண்ணுனாங்க. நிறைய குழந்தைங்களை பார்த்தேன். கொஞ்சம் குழப்பமா பயமா இருந்துது. அப்போ என் கூட வந்த அம்மா உன்னை காட்டினாங்க. ஒரு ஓரமா உட்காந்திருந்தே. நீ அப்போ நல்ல குண்டா புஸ்புஸ்ஸுன்னு இருப்பே.”
“நிஜமாவா அம்மா. ஆனா இப்போ இவ்வளவு ஒல்லியா ஆயிட்டேன் இல்லியா”
“ஆமா”
“எனக்கு எவ்வளவு வயசு அம்மா அப்போ?”
இவையெல்லாம் அவள் வழக்கமாக கேட்கிற கேள்விகள் என்பதால் சந்தியா எந்திரத்தனமாக பதில் சொல்லி வந்தாள்.
“ஒண்ணேகால் வயசு”
“உம். சொல்லு”
“நீ என்னைப் பார்த்து சிரிச்சே. சின்னதா அழகா இதே மாதிரி ஒரு தெய்வீக சிரிப்பு. நான் உன் கன்னத்துல தொட்டு நெத்தியை தடவி விட்டேன். திரும்பி நடந்தப்போ நீ என் முந்தானையை பிடிச்சுக் கிட்டே. அம்மான்னு கூப்பிட்டே. எனக்கு கண்ணில தண்ணி தாரை தாரையா கொட்டுது. நம்பவே முடியல. முழங்காலிட்டு அமர்ந்து உன்னையே பார்த்தேன். நீ திரும்பவும் அம்மான்னே. உடனே உன்னை அள்ளியெடுத்து வீட்டுக்கு வந்திட்டேன்....”
கோகிலா “அப்புறம் சொல்லு” என்று கேட்டபடியே தூங்கிப் போனாள். சந்தியா கண்ணின் ஓரம் துடைத்துக் கொண்டே அவளை அணைத்தபடி தூங்க முயன்றாள்.
சில மாதங்கள் கழித்து ஒரு நாள் கோகிலா பள்ளி விட்டு அழுதபடி வந்தாள். “யாராவது திட்டினாங்களா?, ஸ்கூல்ல மிஸ் அடிச்சாங்களா?” என்ன கேட்டாலும் பதில் சொல்லவில்லை. அவள் பாட்டுக்கு உம்மென்ற முகத்துடன் நொறுக்குத்தீனி தின்று காப்பி குடித்தாள். முகம் அலம்பி தலைவாரி விட்ட போதும் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் சந்தியா தன் அறைக்கு சென்று கணினிக்குள் தலை விட ஆரம்பித்ததும் டி.வி சத்தத்தை குறைத்து வைத்து தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள். இது ஏதோ புது உத்தி என்று தான் சந்தியா முதலில் நினைத்தாள். ஆனால் கோகிலா வேறென்றும் இல்லாதது போல் அப்படி அழுதாள். அவளை தேற்றவோ தடுக்கவோ முடியவில்லை. முகம் வீங்கி கண்கள் சிவந்து போயின. ஒரு கட்டத்தில் சந்தியாவும் அவளுடன் சேர்ந்து அழத் துவங்கினாள். அப்போது தான் கோகிலா அழுகையை குறைத்தாள். அம்மாவை அரவணைத்து “அழாதே அம்மா” என்று தேற்றினாள். மெல்ல மெல்ல காரணம் வந்தது.
அவர்களின் உறவினர் பையன் ஒருவன் கோகிலாவின் வகுப்பில் புதிதாக சேர்ந்திருந்தான். அவன் மூலமாக கோகிலா தத்துக்குழந்தை என்ற சேதி வகுப்பில் பரவ மாணவர்கள் அவளை கேலி பண்ணத் துவங்கி இருக்கிறார்கள். நெருங்கின தோழிகள் அவளை விளையாட்டில் சேர்த்துக் கொள்ள மறுக்க கோகிலாவால் தாங்க முடியவில்லை.
சந்தியா அவளுக்கு பிடித்தமான பிட்சா ஹட்டுக்கு அழைத்து சென்றாள். போகும் வழியெல்லாம் “ஏன் நீ என் நிஜ அம்மா இல்ல?” என்று கேட்டுக் கொண்டே இருந்தாள். “நீ தான் என் நிஜ அம்மான்னு சொல்லும்மா”என்று கெஞ்சினாள். சந்தியாவால் இதை எப்படி சமாளிக்க என்றே தெரியவில்லை.
சந்தியா பள்ளிக்கு சென்று பேசி பிரச்சனையை ஒருவாறு சரி செய்தாள். கோகிலாவும் உற்சாகமாக பள்ளிக்கு செல்ல துவங்கினாள். இரவுணவு ஆனதும் அம்மாவை வந்து கட்டிப் பிடித்து படுத்துக் கொண்டு கதை சொல்லக் கேட்பாள். என்னென்னமோ கதை சொன்னாலும் “ம்ஹும் என்னை தத்தெடுத்த கதை சொல்லு” என்பாள். சந்தியா முதலில் இருந்து துவங்குவாள்.
(நன்றி: தாமரை, ஜூன் 2012)
(நன்றி: தாமரை, ஜூன் 2012)
No comments :
Post a Comment