Sunday, 27 October 2013

என்னையே சந்திப்பது





இன்று எனக்கு பாலகுமாரன் மீது எந்த விருப்பமும் இல்லை. ஆனால் ஒரு காலத்தில் அவரை பைத்தியமாக படித்திருக்கிறேன். சமீபத்தில் ஒரு வேலை விசயமாக அவர் வீட்டுக்கு போக சந்தர்ப்பம் கிடைத்தது. போன் செய்தால் அவருக்கு உடல்நலமில்லை என்றும் தூங்குகிறார் என்றும் சொன்னார்கள்.
 நண்பரை வற்புறுத்தி அவருடன் சென்றேன். அவர் வீட்டை நெருங்கியதும் மனம் குதூகலித்தது. அவர் மனைவி வந்து போனில் சொன்னதையே திரும்ப சொன்னார். நான் அவர் வராவிட்டால் பரவாயில்லை சும்மா பார்க்கத் தான் வந்தோம் என்றேன். அப்படி சும்மா பார்ப்பதென்றால் என்ன என்பது போல் இமைகள் தூக்கினார்.

நண்பர்நான் தான் சொன்னேனே, அவரை பார்க்க முடியாது. வந்தால் நேரம் வீணாகும் என்றுஎன்றார். பிறகு நாங்கள் சந்தித்தது அவரது முதல் மனைவி என்றார். அவரைப் பார்க்க கடுகடுப்பாய் இருந்தார். நாங்கள் அழைத்த போது அவருடைய செல்போனில் பேசியது இரண்டாவது மனைவி. “இரண்டாவது மனைவிக்கு எவ்வளவு வயது இருக்கும், இளமையானவரா?” என்றேன். ”நாற்பது இருக்கும், அது இளமை என்றால் இளமை தான்” என்றார். பாலகுமாரனுக்கு ஜுரமென்றால் கூட இருந்து அணுக்கமாக பார்த்துக் கொள்வது இரண்டாம் மனைவி, நாங்கள் பாலகுமாரனின் செல்போனில் அழைத்தது பேசியதும் அவரிடம் தான். இது முதல் மனைவிக்கு தெரியாது. நாங்கள் அழைத்த விசயம் சொன்ன போது குழப்பமாக சங்கடம் காட்டினார். பிறகு நண்பர் அவரது மகன் மற்றும் மகளைப் பற்றி சொன்னார். என் மனம் வேறொரு விசயம் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தது.
 ஒருவேளை பாலகுமாரனை சந்தித்தால் அவரிடம் அறிவதற்கோ கற்பதற்கோ எனக்கு ஒன்றுமில்லை என அறிவேன். ஆனால் அவர் வீடு வரை போவதோ நேரில் ஒருவேளை சந்திப்பதோ அவரை சந்திக்க அல்ல. நினைவின் படிக்கட்டுகளில் ஏறி மீண்டும் சில நொடிகள் என் பால்யத்தின் ரொமாண்டிக்கான மகிழ்ச்சியை மீட்டெடுக்கவே. நான் பாலகுமாரனை அல்ல என்னையே சந்திக்க விரும்புகிறேன் என நினைத்தபடி கிளம்பினேன்...
Read More

Friday, 25 October 2013

புரூஸ் லீ: சண்டையிடாத சண்டை வீரன் - இந்தியா டுடே விமர்சனம்


Read More

இடஒதுக்கீடு தேவையா?


சில மாதங்கள் முன் நடந்த TET எனும் ஆசிரியர் தகுதித் தேர்வின் போது தமிழக அரசு இடஒதுக்கீடு விதிகளின் கீழ் ஆசிரியர்களை நியமனம் செய்யவில்லை. 20,000 ஆசிரியர்கள் இவ்வாறு பொதுப் பிரிவில் நியமிக்கப்பட்டார்கள். இது தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய அநியாயம் என்பதில் சந்தேகமில்லை.


 NCETஐ பொறுத்தமட்டில் இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆனால் அரசுக்கு அந்த தார்மீக கடமை இருந்தது. அது இந்த் சமூகத்தில் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து முன்னேற வேண்டியிருக்கிற ஒரு பிரிவு மக்களை கைகொடுத்து தூக்கி விட வேண்டிய கடமை. இந்த வாதம் இப்படியிருக்க இன்னொரு புறம் எதற்கு கைதூக்கி விட வேண்டும், அனைவரையும் சமமாகத் தான் நடத்த வேண்டும் என்றொரு வாதமும் இன்று மேற்தட்டினரால், குறிப்பாக நகர்மய இளையதலைமுறையினரால் வைக்கப்படுகிறது. சமீபமாக ஒரு டி.வி விவாத நிகழ்ச்சியில் ஒரு இடஒதுக்கீடு பற்றின விவாதம் வந்த போது ஒட்டுமொத்த பங்கேற்பவர்களுமே அதற்கு எதிராக ஆவேசமாக பேசினர். ஒரே ஒரு தாழ்த்தப்பட்ட மாணவர் அப்போது தோன்றி “இடஒதுக்கீடு தேவையில்லை என்றே நினைக்கிறேன். அது என்னை மேலும் அந்நியப்படுத்துவதாக அவமானகரமானதாக உள்ளது” என்றார். அவருக்கு இடஒதுக்கீடு மறுப்பாளர்களிடம் இருந்து பலத்த கரவொலி. இதைப் பார்க்கையில் இன்றைய இளையதலைமுறை எத்தகைய வரலாற்று உணர்வுடன், சமூக அறிவுடன், லட்சியவாதத்துடன் இருக்கிறது என்கிற அதிர்ச்சி நமக்கு ஏற்படுகிறது. இன்று சமூக முன்னேற்றம் என்பது தனிமனிதனின் சுயமுன்னேற்றம் தான் என அபத்தமாக நம்பும் ஒரு தலைமுறையுடன் நாம் இருக்கிறோம்.
வரலாற்று நியாயத்தை விடுங்கள், இடஒதுக்கீடு என்பது தமது வாய்ப்பை தட்டிப்பறிக்கும் ஒரு உரிமைத் திருட்டுக்காக அவர்கள் கருதுகிறார்கள். கிரீமி லேயர் வாதம் அடிக்கடி முன்வைக்கப்படுவது. அதாவது இடஒதுக்கீட்டின் போர்வையில் தாழ்த்தப்பட்ட சாதிகளில் உள்ள பல பணக்காரர்கள் தாம் வேலை மற்றும் படிப்பில் முன்னுரிமைகள் மற்றும் பண உதவிகளைப் பெறுவதாக சொல்லுகிறார்கள். சில குறிப்பிட்ட தாழ்த்தப்பட்ட சாதிகளில் உதிரியாக இப்படியான சுரண்டல்கள் நடந்தாலும் கூட ஒட்டுமொத்தமாக இதனைக் கொண்டு இடஒதுக்கீடு ஒரு சமூக ஏமாற்று என கோருவது உண்மையாகாது. இந்த கிரீமி லேயர் விவகாரத்தை நாம் வேறு கோணத்தில் பார்க்க வேண்டும்.
இந்திய சமூகத்தில் மக்கள் முன்னேற்றத்துக்கான பல்வேறு திட்டங்கள், மானியங்கள், பாதுகாப்புக்கான சட்டங்கள் அனைத்தும் ஏதாவதொரு முறையில் ஊழலுக்குள்ளாகின்றன. பொதுவிநியோகத் திட்டம் உட்பட. எப்போதும் ஒரு கையளவு நன்மை தான் குறிப்பிட்ட மக்களுக்கு போய் சேர்கிறது. இது ஒரு பொதுவான துர்விதி. அதற்காக எந்த மக்கள் நலத்திட்டமும் இனி வேண்டாம் என பொத்தாம்பொதுவாக முடிவுக்கு வரமுடியுமா? இடஒதுக்கீட்டு விசயத்திலும் அவ்வாறு தான். எனக்குத் தெரிந்த ஒரு தாழ்த்தப்பட்ட மாணவன் முழுக்க நந்தனத்தில் உள்ள விடுதியின் காரணத்தினாலும் சலுகையை பயன்படுத்தியும் தான் கல்லூரிப் படிப்பு வரை முடித்திருக்கிறான். இலக்கிய ஆர்வமும் எழுத்துத் திறமையும் கொண்ட அவனை விடுப்பின் போது சொந்த ஊருக்கு போக வேண்டாம் என நான் வலியுறுத்துவேன். அங்கு சென்றால் அவன் கரும்பு வெட்ட போக நேரிடும். வெட்டும் போது பட்ட காயம் அவன் கையில் வடுவாக பதிருந்திருப்பதை பார்க்கும் போது எனக்கு மனம் பதறும். எழுத வேண்டிய அவனது கைவிரல் ஒன்று கரும்பு வெட்டுகையில் துண்டிக்கப்பட்டால் என பலசமயம் யோசித்து நடுங்கியிருக்கிறேன். இப்படியான எத்தனையோ இளைஞர்கள் அரசின் இட ஒதுக்கீட்டு சலுகையால் தான் படிக்கவும் தம் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் முடிகிறது.
இன்று ஒவ்வொரு சமுதாயமும் தனக்கான சலுகைகளை போராடிப் பெறட்டும், நாம் முடிந்தவரை இதை ஒரு போட்டியாக நினைத்து தடுக்க வேண்டும் என்கிற ஒரு பிளவுபட்ட மனப்பான்மை மக்களிடம் இன்று அழுத்தமாக உருவாகி விட்டது. அதனால் தான் தாழ்த்தப்பட்ட சாதிகளே கூட தமக்கு கீழுள்ள சாதியினரின் ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்குத் தொடுப்பதை பார்க்கிறோம். இந்த அணுகுமுறை பிழையானது. எல்லா பிரிவனரிடையேயும் மிகத்திறமையான கடுமையான உழைப்பாளிகள் இருக்கிறார்கள். அவர்களை மேலெழ ஊக்குவிக்கும் போது ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்கு அது பெரிதும் பயன்படும். வேலை மற்றும் தொழில் வாய்ப்புக்கள் இன்று அபரிதமாக உள்ள நிலையில் வேலை செய்யும் திறனும் மனப்பான்மையும் உள்ளவர்கள் தாம் குறைவு. உண்மையில் இங்கு யாரும் யார் இடத்தை ஆக்கிரமித்து இருப்பதில்லை. தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கைத்தரமும் கல்விநிலையும் உயரும் போது ஒட்டுமொத்த இந்தியாவின் வாழ்க்கைத்தரமும் தான் மறைமுகமாக உயரப்போகிறது. தாழ்த்தப்பட்டவர்களிடம் இருந்து தோன்றும் ஒரு சிறந்த மருத்துவர், ஆசிரியர், எழுத்தாளரால் உங்கள் எல்லாருக்கும் தான் பயன் ஏற்படும்.
இடஒதுக்கீடு எதிர்ப்பு இரண்டு விசயங்களைச் காட்டுகிறது. ஒன்று ஒரு வாய்ப்பை பொருண்மையான நேரடியான ஒன்றாக பார்க்கும் நிலப்பிரபுத்துவ மனப்பான்மை தான் இன்று இந்த எதிர்ப்பாளர்களிடம் செயல்படுகிறது. நவமுதலாளித்துவ கட்டற்ற வாய்ப்புகளின் சமூகத்தில் இந்த அச்சத்துக்கு எந்த மதிப்பும் இல்லை. அடுத்து, கிரீமி லேயர், சம-உரிமை வாதங்கள் இட-ஒதுக்கீட்டை முடக்குவதற்கான தந்திரமான தர்க்கங்கள் மட்டும் தான். மேலும் அரசும் அதிகாரமட்டமும் இட-ஒதுக்கீட்டை வாக்கு வங்கியை உத்தேசித்து தக்க வைத்தாலும் கிடைக்கிற சந்தர்பங்களில் எல்லாம் அதனை புறக்கணிக்கவும் பலவீனப்படுத்தவும் முயல்கிறது. TET ஒரு நல்ல உதாரணம். உண்மையில் இன்றும் எத்தனையோ காலியிடங்கள் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்படாமல் இருக்கின்றன. சில பதவி உயர்வுகள் தாழ்த்தப்பட்டவர்கள் அங்கு வரக்கூடாது என்ற உத்தேசத்தில் தொடர்ந்து தரப்படாமல் இருக்கின்றன. எம்.எட், முனைவர் பட்டம் வரை முடிந்த பார்வையற்றோர் ரயில்களின் கைப்பேசி உறைகளும் கிளிப்புகளும் கூவி விற்று பிழைக்கும் நிலையில் இருக்கிறார்கள். இடஒதுக்கீட்டை கராறாக செயல்படுத்த வேண்டிய தேவையுள்ள சூழலில் அதை எதிர்ப்பது போன்ற குரூரம் மற்றொன்று இருக்க முடியாது.
Read More

Monday, 21 October 2013

வலி




நான் ஒரு பத்திரிகையாளன். அவ்வளவாய் புத்திகூர்மை இல்லாத ஒரு மனிதன். அதனாலேயே என் அலுவலகத்தில் என்னை சில விசயங்களை எந்த கேள்வியும் கேட்காமல் ஒப்படைத்தார்கள். அவை பல சமயம் முக்கியமான பணிகளாகவும் இருக்கும். அடிக்கடி பத்திரிகை அறிக்கைகளின் மேல் நீங்கள் பார்க்கக் கூடிய கதிர்வேலன், மோகன்பாபு, சிவகுமார் போன்ற பல பெயர்களில் ஒன்று. நான் எழுதிய எதையும் படித்து இவன் யார் என்று வினவ மாட்டீர்கள், என்ன விசயம் என்று மட்டுமே தற்காலிக ஆர்வத்துடன் இமை தூக்குவீர்கள். அப்படி இருப்பதும் ஒரு சிறப்பு தான்.

 ஒருமுறை எங்கள் பத்திரிகையில் சாதி விவகாரம் பற்றின அறிக்கை ஒன்று பெரும் சர்சையை ஏற்படுத்த எங்களது திருச்சி கிளை ஒன்றை அடித்து நொறுக்கினார்கள். சென்னையில் கூட எதிராக ஊர்வலம் நடத்தி பத்திரிகையாளர் சந்திப்பு கொடுத்து மிரட்டினார்கள். அதை எழுதிய மூன்று பேர் குழுவில் நானும் ஒருவன். என்னை யாருமே கவனிக்கவில்லை என்பது மட்டுமல்ல நடந்த கலவர செயல்களுக்கு வெகுஅருகாமையில் நின்று கொண்டிருந்தேன். சிறுதுரும்பு கூட என் மேல் படவில்லை. இது போன்ற மற்றொரு காரமான அஸைன்மெண்டை எனக்கு அடுத்து அளித்தார்கள். முன்பு நடிகைகளின் அந்தரங்கங்களை எழுதி பிரச்சனை ஆயிற்றே, அதைப் போல ஒன்று. எந்த கிளர்ச்சியும் பயமும் அற்று நான் இந்த பணியிலும் ஈடுபட்டேன்.
ஒரு மூத்த பத்திரிகையாளர், அவருடன் நானும் பிரதீப்பும். இது தான் அணி. பிரதீப் சினிமா இயக்குநர்கள், நடிக நடிகைகளுடன் புழங்குவதற்காக பத்திரிகை பணியை தேர்ந்தெடுத்தவன். அவனுக்கு பத்திரிகை உலக சமாச்சாரங்கள், அரசியல் சமூக நடப்புகள் எதிலும் ஈடுபாடில்ல்லை. இடைவேளையின் போது அவனுடன் தேநீர் குடிக்கும் போதெல்லாம் நாக்கும் உதடும் சுடும். அப்படியான கதைகளை சொல்வான். அவன் எடுக்கப்போகும் படங்களின் கதை என்பான். அவை ஏற்கனவே எடுக்கப்பட்டது போன்றும் இனி ஒருக்காலும் எடுக்க முடியாது என்று தோன்றும். ஏதாவது ஒரு நடிகர் நேற்று தான் வந்திருப்பார்; அவருக்கு கூட கதை வைத்திருப்பான். மூத்த பத்திரிகையாளருக்கு கழுத்து வரை வேலைகள் இருந்தன. அவர் சில ஆலோசனைகள் சொல்வார்; நாங்கள் தரும் ஆலோசனைகளை நிராகரிப்பார். அல்லது நாங்கள் தரும் ஆலோசனைகளை நிராகரிப்பார்; சில ஆலோசனைகள் சொல்வார். எங்களது அறிக்கைகளுக்கு அவர் தான் இறுதி வடிவம் அளிப்பார். சில பெண்கள் சமையல் செய்வது போல் அவர் கை வைத்ததும் அறிக்கைகளுக்கு முற்றிலும் புதிய நிறம் கிடைத்து விடும். தோசைக்கல்லுக்கும் தோசைக்குமான உறவு தான் பத்திரிகையாளனின் எழுத்துக்கும் பத்திரிகைக்குமான உறவு என்று எனக்கு தோன்றும். என்னால் முடிந்ததெல்லாம் தோசையை கருக வைப்பது தான். எனக்கு எனது தன்னிலையான தனித்த அடையாளத்தை கொண்டு வர வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம் அதனைத் தான் செய்வேன்.
ஒரு வட்டத்தை துல்லியமாக வரைய முதலில் புள்ளி வைப்பார்கள்; புள்ளியில் தொட்டு காம்பஸ் கொண்டு வட்டமிழுப்பார்கள். அதற்கு மேல் புள்ளி முக்கியமில்லை. நான் எப்போதும் வட்டத்தின் வெளியே நிற்பவன் என்று இரக்கம் தோன்றும் போதெல்லாம் நான் பள்ளியில் படித்த இந்த விபரத்தை தான் யோசிப்பேன். ஆனால் இம்முறை வட்டம் இட்டபின் புள்ளி வைக்கும்படி ஒரு காரியம் நடப்பதற்கு துணையாக இருந்தேன்.
எனக்குத் தந்த பணி சென்னையின் பொது இடங்களில் தனியாக செயல்படும் hawkers என்கிற விபச்சாரிகளை பேட்டி காண்பது. பெரிய ஆய்வெல்லாம் ஒன்றும் கிடையாது. கொஞ்சம் கிளுகிளுப்பு பிளஸ் ஒழுக்க ஆவேசம். என்னுடைய பத்திரிகை நண்பர்களின் தொடர்பில் இருந்து கிடைத்த அறிமுகங்கள் ஏற்கனவே பீல்டில் இருந்து ஓய்வுற்று கூட்டிக் கொடுக்கும் வேலை செய்தார்கள். அவர்கள் நல்ல வீட்டில் கொஞ்சம் நல்ல நிலையில் இருந்தார்கள். இன்னும் சிலர் குடும்பத்துக்குள், அதுவும் மாமா, கொழுந்தன், உறவினர் சூழ மரபான குடும்ப அமைப்புக்குள், வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்களை பேட்டி காண்பது இருதரப்புக்கும் ஆபத்தாக இருந்தது. மற்ற நகரங்களை ஒப்பிடுகையில் சென்னையில் விபச்சாரிகளை காணபது அரிது என்றார்கள் சில நண்பர்கள். புள்ளிவிபரம் அவர்கள் சில ஆயிரங்களில் உள்ளதாக சொன்னது. அது எண்ணூர் போரூர் ஐஸ்ஹவுஸ் போன்ற சில பகுதிகளில் மட்டும் எடுக்கப்பட்ட புள்ளிவிபரம். நிச்சயம் மொத்த எண்ணிக்கை மூன்று நான்கு மடங்கு கூட இருக்கும். நல்ல வேலைடா என்று களைத்து போனது அப்போது தான்.
பிரதீப்பின் எழுத்து ஏரியா திருநங்கைகள் எனப்படுகிற அலிகள். அவர்கள் தம் பிழைப்புக்காக மிக வெளிப்படையாக இருக்கும் அவசியம் இருந்தது. அவன் திருநங்கையருக்கு அறுவைசிகிச்சை செய்யும் மேடவாக்கத்தை சேர்ந்த ஒரு டாக்டரின் பேட்டி, அவர்கள் பயன்படுத்தும் ஹார்மோன் மருந்துகள், தினசரி சராசரி வருமானம், வழக்கமான வாடிக்கையாளர்களின் பின்னணி, அவர்கள் தொழிலுக்கு வந்த கதை உள்ளிட்ட பல கதைகளை தகவல்களை ஒரே வாரத்தில் திரட்டி வந்தான். அவனது குரூரமான மனம் கூட அப்படித் தான் தெரிய வந்தது.
ஒரு திருநங்கையிடம் பேட்டி என்று துணைக்கு என்னையும் அழைத்துப் போனான். அவளா அவனா என்று சொல்லத்தெரியாததால் அவர் என்றே கூறுகிறேன். அவர் கறுப்பாக எங்கள் இருவரையும் விட அரை அடியாவது உயரமாக திடகாத்திரமாக இருந்தார். ரோஸ் நிற நலைனான் புடவை கட்டியிருந்தார். ஒரு இருட்டான குடிசைக்குள் எங்களை அழைத்து சென்றார். உள்ளே சில மூட்டைகள் மற்றும் துணிகள் இறைந்து கிடந்தன. மண் தரை. குண்டு பல்ப். மின்விசிறி காற்றில்லாமல் சுற்றியது. அவர் ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு மிச்சம் தர மறுத்தார். அறுநூறு ரூபாய் தானே பேரம் என்று பிரதீப் சண்டை பிடித்தான். அவர் சட்டென்று எழுந்து நின்று இன்னும் உயரமாக இன்னும் கரகரப்பான குரலில் “மிச்சம் வாடகைக்கு” என்ற போது எனக்கு உடல் குளிர்ந்து வேர்த்தது. எழுந்து மூலையில் நின்றேன். பிரதீப் “வாடகையா?” என்று கத்திய போது “ச்சூ பக்கத்து வீடுகளில ஆளிருக்காங்க. சத்தம் போடாதீங்க. கம்பிளயண்ட் பண்ணுவாங்க” என்று டீச்சர் போல் சுண்டு விரல் தூக்கி உதடுகளின் மேல் வைத்து சொன்னார். அப்போது தான் விவகாரம் வேறு எங்கேயே போகிறது என்று எனது மந்தமூளைக்கு புரிந்தது. அவர் வெளியே போய் வாடகையை கொடுத்து விட்டு உள்ளே வந்து தாழ்ப்பாள் இல்லாத கதவை வெறுமனே சாத்தி வைத்து விளக்கை அணைத்து முந்தானையை செயற்கையான சிரிப்புடன் உருவி விட்டு படுக்கும் வரை நாங்கள் எதுவுமே பேசவில்லை. பிரதீப் கண்களில் கூர்மையை காட்டி அமர்ந்திருந்தான். அப்பெண் சட்டென்று எழுந்து அவனை கட்டிப் பிடித்தாள். அவன் அவளை உதறினான். ரவிக்கையை அவிழ்க்க சொன்னான். அவள் கேட்காதது போல் அவனை முத்தமிட பார்த்தாள். அங்கு நடப்பது பார்க்க டி.வியில் விபத்துச்செய்தியை புரியாத மொழியில் பார்ப்பது போல் இருந்தது. அவன் மேலும் வற்புறுத்த அவள் ”விளக்கை போட முடியாதுங்க. பக்கத்து வீட்டுக்காரங்க கம்பிளயண்ட் பண்ணுவாங்க” என்றான். “என்ன பணம் வாங்கீட்டு ஏமாத்துறியா” என்று திரும்பத் திரும்ப கேட்டான். அவர் ஸ் ஸ் என்று அதிருப்தியை வெளிப்படுத்தினார். பிறகு “ஐந்து நிமிடம் தான்” என்று விளக்கை போட்டார். அவசரமாக ரவிக்கையை ஒருபக்கம் நீக்கி தனது சிறுவனின் முதிராத மார்பைப் போன்ற முலையை காட்டினார். பிரதீப் “வாடா” என்று இழுத்து எனக்கும் காட்டினான். அவர் அசுவாரஸ்யமாக முலையை அவனது வாய்க்கு திணித்தார். அவன் விலகிக் கொண்டு அவளது உடல் பகுதிகளை உயிரியல் மாணவன் போல் ஆர்வமாக பார்த்தான். “சரி எங்க பண்ணுறது?”
“முன்னயும் பண்ணலாம் பின்னயும் பண்ணலாம்”
“முன்னே எங்க? உனக்குத் தான் ஓட்டை இல்லையே”
அவள் ஆவேசமாக “இருக்கே இருக்கே இங்க பாருங்க” என்று கால்களை அகட்டிக் காட்டினாள். பிரதீப் தன் செல்போன் டார்ச் ஒளி பாய்ச்சி எனக்கும் காட்டினான். ”பாஸ் கம் ஹியர்; லுக் அட் திஸ். பொண்ணுங்களுக்கு லேபியா மேஜரா லேபியா மைனரா என்று இரு உதடுகள் இருக்கும். இதுங்களுக்கு வெறும் ஓட்டை தான் பார்த்தியா. படலமா சதையோட இருக்கிற வெளிஉதடு மிஸ்ஸிங் கவனிங்க”. அந்த உறுப்பு அல்ல அவனது பேச்சு எனக்கு குமட்டிக் கொண்டு வந்தது. அவர் “சீக்கிரம் பண்ணுங்க. டைம் ஆவுதுப்பா. ரொம்ப நேரம் விளக்கை போடக் கூடாது” என்றார். பிரதீப் சலிப்பாக “இரு” என்று விட்டு அவள் மீது விழுந்து பொருந்தினான். நான் திரும்பிக் கொண்டேன். அவன் பேசுவதை தொடர்ந்தான். “புதுசா தான் ஆபரேசன் பண்ணியிருக்குது போல பாஸ். செம டைட்டா இருக்குது. யு காண்ட் இமாஜின் சீரியஸ்லி. இட்ஸ் லைக் ஃபக்கிங் என வெர்ஜின். ஹி ஹி சம்டைம்ஸ் இதுங்களை பண்ணும் போது ரத்தம் கூட வரும். ஏன்னா இது ஓட்டை இல்லை ஒரு புண் பாருங்க. இதுங்க தொடர்ந்து இந்த ஓட்டையை மூட விடாம பார்த்துக்கணும். பொண்ணுங்க காது குத்தின துவாரம் கம்மல் போடாட்டி மூடி விடறாப்புல. இப்போ மேட்டர் பண்றதுனால கூட ஓட்டை அடையாம இருக்கும். ஆக்சுவலி நாம் இப்பிடி பம்ப் அடிக்கிறதுக்கு இது தான் எனக்கு பணம் தரணும். இது ஒரு சேவை. ஹி ஹி”. நான் “வெளியே வெயிட் பண்ணுறேன்” என்ற போது எதேச்சையாக திரும்பினேன். குண்டுபல்பின் நேர் கீழே அவர் முகத்தை வேதனையில் சுளிப்பதை பல்லை கடிப்பது தெரிந்தது. ஒருபக்கம் இயங்கியபடி அவன் கவலையாக சொன்னான் “ரெண்டு பேருக்கும் சேர்த்து பணம் கொடுத்திருக்கேன் பாஸ்”. வெளியே வந்து பார்த்தால் ஆள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. அதனால் குடிசை வாசலில் இருட்டில் ஓரமாக மறைந்து நின்றேன். நான் வெளியேறின கொஞ்ச நேரத்தில் பிரதீப்புக்கு வந்து விட்டது. அவன் எழுந்தான். அவள் அது தெரியாமல் “ஓட்டை இதோ இங்கே இருக்கு. நீங்க தொடர்ந்து நல்லா பண்ணுங்க” என்று வாடிக்கையாளர் திருப்தி அடையவில்லையோ என்ற கவலையில் சொல்வது கேட்டது. அவன் நிறைந்த ஆணுறையை கழற்றிக் கொடுத்திருக்க வேண்டும். அதை பத்திரமாக வாங்கி வெளியே போய் போட்டு வந்தாள். வெளியே வந்ததும் அவன் “ரொம்ப டைட் பாஸ். அது தான் ரொம்ப நேரம் தாங்கல” என்று வறட்டுத்தொனியில் சொன்னான். “ஏதோ பேட்டிக்குன்னு தான் வந்தேன். இப்பிடின்னா வந்திருக்க மாட்டேன் பிரதீப்”
“ஏதோ வி.ஐ.பிகிட்ட ஐநூறு ரூபா பணம் வாங்கிட்டு எடுக்கிற பேட்டின்னு நெனைச்சீங்களா. இது இன்வெஸ்டிகேட்டிவ் ஜெர்னலிஸம் பாஸ்.”
”அவங்க ரொம்ப வலியில இருந்த மாதிரி இருந்துது பார்க்க.”
“ஆமா. அது ஆறாத புண்ணு இல்லியா. சம் டைம்ஸ் ரத்தம் கூட வரும். அது சமீபமா தான் ஆபரேசன் பண்ணியிருக்கும் போல”
“பிறகு நீ ஏன் விடாப்பிடியா பண்ணினே? நீ ரொம்ப முரட்டுத்தனமா நடந்துக்கிட்ட”
“நானா? பாருங்க பாஸ். இருக்கலாம். அப்போ நான் அதை அப்போ ரசிச்சேன், ஆனா இப்போ நீங்க சொல்லும்போது கஷ்டமா கூட இருக்கு”, பிறகு குரலில் சுவாரஸ்யம் தொற்றிக் கொள்ள சொன்னான்
 “எவ்வளவு சுவாரஸ்யமான கேஸ் ஹிஸ்டிரி எல்லாம் சேகரிச்சு வச்சிருக்கேன்னு பாருங்க”, அவன் தன் மடிக்கணினியை திறந்து பத்து அத்தியாயங்களை காட்டினான். இரண்டு பேட்டிகளை படித்து காட்டினான். ஒரு திருநங்கை நீக்கப்பட்ட தனது ஆண்குறியை மிஸ் பண்ணுவதாக விசனிப்பதை அழுத்தி எழுதியிருந்தான். இன்னொருவர் ஹார்மோன் ஊசிகள் ரொம்ப போடுவதால் சுருங்கிப் போன தனது ஆண்குறியைக் குறித்து கவலைபட்டிருந்தார். “ஆனா நான் சந்திச்ச இன்னும் சில பேரு பொண்ணா மாறுனதில ஒரு முழுமையுணர்வோட இருக்காங்க. இந்த அறுவை சிகிச்சை, மருந்து, மேக் அப் செலவு இதுக்கெல்லாம் ஆகுற செலவு ஒரு பெரிய டிராப். பொம்பளையா மாற நெனைச்சு அந்த செலவை தாக்குப்பிடிக்கிறதுக்காக கணிசமான பேர் இந்த தொழிலில இருக்கிறதை நான் கண்டுபிடிச்சேன். இருத்தலியல் நெருக்கடிங்கறது நமக்கெல்லாம் ஆன்மீகமானது; ஆனால் இதுங்களுக்கு அது உடல்ரீதியானது; பௌதிகமானது…”. அவன் இப்படி ரொம்ப அக்கறையாக பேசிக் கொண்டு போனான்; சற்று நேரம் முன்பு ஒரு திருநங்கையை துன்புறுத்தியது இவன் தான் என்று யோசிக்க கஷ்டமாக இருந்தது. அவன் இப்படி எழுதிய முப்பத்து மூன்று பக்கங்களில் எட்டுபக்கங்கள் வழக்கமான “வறுமை காரணமாய் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டதால் விபச்சாரம் நோக்கி தள்ளப்பட்ட நாங்களும் மனுசங்க தானுங்க; எங்களையும் ஏத்துக்குங்க” வகை கண்ணீர் மன்றாடல் கட்டுரை. ”இதை மட்டும் தான் நம்ம எடிட்டர் சார் செலக்ட் பண்ணுவாரு பாருங்க” என்றான். அப்படியே தான் நடந்தது.
எனக்குத் தரப்பட்ட கெடு நெருங்கிக் கொண்டிருந்தது. பிரதீப் ஒரு உபாயம் சொன்னான். இணையத்தில் உள்ள பாலியல் forumகளில் விபச்சாரிகளிடம் சென்று வந்தவர்கள் தம் அனுபவங்களை எழுதியிருந்தனர். கணிசமானவை கற்பனையானவை என்று தெரிந்தது. அவற்றை கொஞ்சம் அங்கே இங்கே மாற்றி கொஞ்சம் கண்ணீர் கொஞ்சம் அவலம் வறுமை குடும்ப சோகம் சேர்த்து எழுதினோம். அதில் ஒரு ஊமை விபச்சாரியின் கதை எங்கள் எடிட்டரின் கண்ணில் நீரை வரவழைத்து விட்டது. அவள் கடற்கரையில் வேலை செய்தாள். வாடிக்கையாளர் தன் உறுப்புக்குள் விரல் விட்ட போது வலி தாளாமல் அவள் தன் விரலை வாயில் கடித்து காண்பித்தாளாம். பெரும்பாலான அனுபவங்களில் வலி ஏற்படுத்தியதை பயனர்கள் எழுதும் போது அடிநாதமாக அதில் பெருமை இருந்தது. பெண்கள் கத்தினால் கிளர்ச்சி, அடக்கி வலியை தனக்குள் முழுங்கினால் திருப்தி, இந்த விசயத்தில் விரலை கடித்தது கவித்துவம் என்று ஒரு பயனர் அந்த forumஇல் கமெண்ட் எழுதியிருந்தார். அந்த பெண் உண்மையில் பார்க்க எப்படி இருந்திருப்பார் என்று நாங்கள் இருவருமாக கற்பனை செய்து கலந்து விவாதித்து எழுதினோம். அப்பெண்ணுக்கு இடதுகால் உடைந்து உள்ளே பிளேட் வைத்திருப்பதாய், அவளுக்கு மூளைக்குறைபாடு உள்ளதாய் சேர்க்க பிரதீப் சொன்னான். இரண்டாவது அத்தியாயமாய் அது வெளியான போது நண்பர்கள் நன்றாக வந்திருப்பதாக நெகிழ்ச்சியாக சொன்னார்கள். அதில் ஒருவன் மெரீனாவில் நிஜமாகவே அப்படி ஒரு பெண்ணை பார்த்திருப்பதாக சொன்னான். அப்போது தான் எனக்கு முதன்முதலாக குற்றவுணர்வு தோன்றியது. பிரதீப்பின் உதவியை மறுத்து நானாகவே இனி இயங்குவது என்று முடிவு செய்தேன்.
மெல்ல மெல்ல இது போன்ற பெண்களை கண்டுபிடிப்பது எளிதாயிற்று. அவர்கள் நகை அணிந்திருக்கவில்லை; மலிவான ஆடை அணிந்திருந்தார்கள். செல்போனில் பேச மாட்டார்கள். நான் எதிர்பார்த்தது போல் மல்லிகைப் பூ கொலுசு அணிந்திருக்கவில்லை; அழகாக முகத்தில் சதா ஒரு சோகத்தை தேக்கியபடியும் இல்லை. நன்றாக துப்பட்டாவால் மூடி ஒழுங்காக நடந்தார்கள். தனியாக அல்லது இரண்டு மூன்று பெண்களாக சேர்ந்து சுற்றினார்கள். அவர்களாக என்னைப் பார்த்து வரவில்லை; நானாக முறைத்து பார்த்தால் திரும்ப கோபமாக முறைத்தார்கள். ஆனால் பார்த்ததும் அந்த கண்களில் இருந்து ஒரு ரகசிய சமிக்ஞையை பெறும் திறனை நிறைய அலைந்து திரிந்த பின் பெற்றிருந்தேன். அப்படித் தான் பாலங்களுக்குக் கீழ், பேருந்து நிலையங்களில், ஷாப்பிங் மால்களில் அவர்களை சந்தித்தேன். பணம் கொடுத்து கொஞ்ச நேரம் பேசி விட்டு வந்து விடுவேன். சில பேர் என்னை வற்புறுத்துவார்கள். அப்போதெல்லாம் என் மனநிலை கசாப்புக்கடையில் நிற்பவருடையதாக இருக்கும். கடுமையான களைப்பு மேலிட மறுத்து விடுவேன். கடற்கரையில் சில பெண்கள் பேச மறுத்தார்கள். பணம் கொடுத்தால் “எடுத்து விடு” என்று தொடர்ந்து அவசரப்படுத்தினார்கள். பேச ஆரம்பித்தால் ”இன்னும் நாலு கஸ்டமரை பார்க்கணும்” என்று எழுந்து போனார்கள். சிலர் உண்மை பேசினார்கள்; சிலர் பொய் பேசினார்கள். செவ்வாய்க்கிழமைகளில் கோயிலுக்கு போய் விட்டு தாமதமாக தொழிலுக்கு வருபவர்களை பார்த்தான். அதில் ஒரு பெண்ணை பார்த்தால் எஸ்ட்ஸ் வந்தது போல் நோஞ்சானாக கண்கள் பிதுங்க தெரிந்தாள். சில இளம்பெண்கள் தனியார் நிறுவன வேலை என்று வீட்டில் பொய் சொல்லி விட்டு தினமும் கடற்கரைக்கு இதற்காக வந்தார்கள். அவர்கள் மாலை எட்டு மணிக்குள் வீடு திரும்பி விட வேண்டும். விடிகாலையில் அங்கு வந்து விடுவதாய் ஜெயா என்று ஒரு பெண் சொன்னாள். விறுவிறுவென்று அருகம்புல் ஜூஸ் குடித்து நடைபழக வருபவர்கள் இதைக் கூடவா அந்த வேளையில் பண்ணுவார்கள் என்று கேட்டான். “எல்லாரும் வாக்கிங் வரவா வராங்க” என்று ஜெயா சிரித்தாள். தினமும் ஆயிரம் ரூபா சம்பாதிச்சு வீட்டுக்கு கொடுக்கணும் என்று ஒரு பெண் சதா கவலைப்பட்டாள். பலரும் கூட பாதுகாப்புக்கு ஒரு ஆண் வைத்திருந்தார்கள். சில ஆண்கள் கடற்கரையில் இவர்கள் தொழில்செய்யும் போது போலீஸ் வருகிறதா என்று காவல் காத்தார்கள். ஒருமுறை இப்படித்தான் ஒருவன் ஓடி வந்து என் தோளில் வந்து “போலீஸ் வருது எழுந்திரு எழுந்திரு” என்றான். நான் தான் தவறு ஒன்றும் செய்யவில்லையே என்றேன். ஆனால் அந்த பெண் எழுந்து கிளம்பி விட்டாள். நான் அவனுடன் பின்னர் பரிச்சயம் செய்து கொண்டேன். அவன் பெயர் குமரேசன்.
குமரேசன் ஒரு தனியார் நிறுவனத்தில் இரவுநேர காவலாளியாக வேலை செய்தான். பகலில் கடற்கரைக்கு வந்து விடுவான். அவன் கூடுதல் பணம் கொடுத்து வகுப்புக்கு போகாமலே ஒரு கல்லூரியில் பி.எட் படித்துக் கொண்டிருந்தான். தன்னுடைய கனவு சினிமாவில் நுழைந்து விடுவது என்று உற்சாகமாக சொன்னான். பேசின கொஞ்ச நேரத்தில் அபார உரிமை எடுத்து நெருங்கி விடும் வகை அவன். ஒரு தீப்பெட்டி கேட்டு இல்லை என்றாலே “என்ன சார்…” என்று கண்கலங்கி விடுவான். ஜெயாவை தொழிலுக்கு விடுவதில் அவனுக்கு எந்த குற்றவுணர்வும் இல்லை. “அவளுக்கு நான் தேவை எனக்கு அவள் தேவை சார். நாளைக்கு நான் அவளை நல்லா பாத்துப்பேன் சார்” என்று கல்மிஷமில்லாமல் சொன்னான். அவனுக்கு இந்த சமூக அமைப்பின் மீதோ மக்களின் பாசாங்கு மீதோ எந்த கோபமும் இல்லை. போலீஸ் மீது மட்டுமே அவனுக்கு கடுமையான வெறுப்பும் அச்சமும் இருந்தது. “எத்தனை பேரு கண்கூடா ஊழல் பண்ணுறாங்க. போலீஸ் பிடிக்குதா? இதோ இந்த பீச்சில எத்தன பேரு பொண்ணுங்கள தள்ளிக்கிணு வந்து கிஸ்ஸடிக்கிறானுங்க, ரூம்ல பண்ணுற அத்தனையும் பண்ணுறாங்க. ஆனா தோ இந்த பொண்ணுங்க அதையே நாலு காசு சம்பாரிக்கிறதுக்கு பண்ணுனா தப்பா?”.
ஜெயா மூலமாக வேறு சில பெண்களை சந்தித்தேன். அப்பெண்கள் தனியாக பேசும் போது பிறரை உருவ ரீதியாகத் தான் குறிப்பிட்டனர். “அந்த ராணி இருக்கா இல்லியா…” என்றால் “யாரு அந்த கறுப்பா பல்லு நீட்டிக்கிணு இருக்குமே அதுவா” என்பார்கள். கீதாவைக் கேட்டல் “ஆமா அந்த பொம்பளை. சூத்து இம்மாம் பெரிசா இருக்குமே” என்று கைகளை அகட்டிக் காட்டி சொல்வார்கள்.
நான் ஜெயா, குமரேசனின் கதையை ஒரு தனி அத்தியாயமாக எழுதத் துவங்கினேன். குமரேசனிடம் ரொம்ப பிறகே நான் ஒரு பத்திரிகையாளன் என்ற உண்மையை சொன்னேன். ஆனால் தொடரை எழுதும் விபரத்தை சொல்லவில்லை.
ஜெயா ஒரு கதை சொன்னாள். அவள் குமரேசனை பத்தாம் வகுப்பு படிக்கும் போது காதலித்து ஓடி வந்து விட்டாள். அவன் தான் அவளை பிற ஆண்களிடம் வற்புறுத்தி கூட்டி விட்டது. ஒரு நாள் முருகேசன் தன் கையை கடித்து விட்டதாக ஒரு புண்ணைக் காட்டினாள். அதனால் தன்னால் பத்து நாள் தொழிலுக்கு வரமுடியாமல் போய் விட்டதாக சொன்னாள். எனக்கு அது கேட்க வருத்தமாக இருந்தது. முருகேசனிடம்  விசாரித்த போது அவன் காறித் துப்பி விட்டு “தேவடியா முண்ட” என்று மட்டும் திட்டி விட்டு மௌனமானான். சேர்ந்து தேநீர் குடித்துக் கொண்டிருக்கும் போது “நான் இதுவரை அவமேல கைய வச்சதே இல்ல தெரியுமா. கடவுள் மேல சத்தியமா சொல்றேன்” என்றான். அவள் வாடிக்கையாளரை கவர்வதற்காக வழக்கமாக சொல்லும் கதை அது என்றான். எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. நான் தான் வாடிக்கையாளர் இல்லியே என்றேன். “காசு கொடுத்தா அப்படித்தான் பேசுவா. பழகிடுச்சு இல்ல” என்றான் உணர்ச்சியற்ற முகத்துடன். ஆனால் ஜெயா ஒருபக்கம் குமரேசனுக்கு பயந்து தான் தொழில் செய்வதாய் அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
போலீசுக்கு அடுத்தபடியாய் குமரேசனுக்கு பிடிக்காதது கடற்கரையில் வெளிப்படையாக உலவும் விபச்சாரிகள். சில பேர் காலையில் இருந்து ராத்திரி வரை அங்கேயே தங்கி சாப்பிட்டு உறங்குவதாகவும் அதனால் போலீசுக்கு புகார் சென்று தங்களைப் போன்றவர்களுக்கு தொல்லைகள் ஏற்படுவதாகவும் சொன்னான். “வந்தாச்சா ரென்டே அவர்ல பத்து கஸ்டமர பார்த்து சட்டுசட்டுன்னு எடுத்து அடிச்சு விட்டாச்சான்னு போய்ட்டே இருக்கணும். இப்ப்டி நாள் பூரா சுத்திக்கிணு இருந்தா எல்லாருக்கும் தான் பாதகம்”. ஐம்பது வயதுக்கு மேலான வயதான பெண்கள் சில வெளிப்படையாக வாடிக்கையாளர்களை அழைத்தார்கள். அவர்களுக்கு கிராக்கி ரொம்ப கம்மி. போலீசும் பொருட்படுத்தவில்லை. ஆனால் அவர்களால் பிறருக்கு பேர்கெடுவதாக குமரேசன் கவலைப்பட்டான். அதிலும் குறிப்பாக ஒரு கிழவி மாலை ஏழு மணிக்கு சரியாக வந்து கடற்கரை முழுக்க ரவுண்ட்ஸ் வருவார். எந்த ஆணைப் பார்த்தாலும் “அஞ்சு நிமிசம் ஜாலியா ஒட்காரலாம் வரியா” என்று தவறாமல் கேட்பார். இவரைப் பார்க்க நேர்ந்தால் முருகேசன் துரத்தி விடுவான்.
ஜெயாவை அங்கு சூப் கடை நடத்திய ஒருவன் காதலித்தான். அவன் கடையில் அவள் எங்களுக்கு சூப் வாங்கித் தருவாள். தன் தோழிகளுடன் அவள் சந்திப்பதும் பொதுவாக அங்கு தான். சூப்கடைக்காரன் ஜெயாவுக்கு அடிக்கடி அறிவுரை சொல்வான் “ஏன் இப்பிடி இந்த வயசுல வீணா போற நீ. உருப்படியா ஒழுங்கா வீட்டோட இருக்கலாமுல்ல” என்பான். அவள் அசிரத்தையாக ஆடையணிந்து வந்தால் “பொண்ணுன்னா பூவும் பொட்டுமா பார்க்க பாந்தமா இருக்கணும். வரதும் வரியே ஒழுங்கா அழகா வரலாம் இல்லியா?” என்று ரொம்ப வருத்தப்படுவான். முருகேசனை துறந்து அவனிடம் அவள் செல்வாளா என்று கேட்டதற்கு “இந்த தேவாங்கு கூட போறதுக்கு அவன் கூடயே இருந்து தொலைக்கலாம்” என்றாள். “அவன் சைட் அடிக்கிறதுக்காக நான் பூ வச்சுக்கிட்டு நகை போட்டு வரணுமா” என்று கேட்பாள்.
என் அத்தியாயம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. பிரதீப் ஒரு சின்ன புத்தகம் எழுதும் அளவுக்கு திருநங்கையர் பற்றி கள-ஆய்வில் தகவல் சேகரித்திருந்தான். அப்போது தொழிலில் ஈடுபடாத மேற்தட்டு திருநங்கையர் சிலரிடம் பேட்டி கண்டு எழுதிக் கொண்டிருந்தான். அன்று அதற்காக அவன் கடற்கரையில் நடக்கும் திருநங்கையரின் பேரணி ஒன்றை பதிவு செய்ய வந்திருந்தான். பேரணி முடிந்து மாலையில் நாங்கள் சுண்டல் மென்றபடி அமர்ந்திருந்த போது ஜெயாவை பார்த்தேன். பிரதீப்பை அறிமுகப்படுத்தி விட்டேன். அவள் அவனிடம் “உள்ளே வரீங்களா?” என்று தன் பாணியில் கழுத்தை மெல்ல சாய்த்து அசட்டையான தொனியில் கேட்டாள். அவன் அதற்கு “அது என் ஏரியா இல்லீங்க. இவனிது” என்றான் என்னைக் காட்டி. ஜெயாவுக்கு விளங்கவில்லை.
பிறகு சில நாட்கள் அவன் என்னுடன் கடற்கரைக்கு வந்தான். அவன் வேலையை முடித்திருந்தான். இருந்தும் ஏன் என்னுடன் வருகிறான் என்று விளங்கவில்லை. ஒருநாள் நான் தாமதமாகப் சென்றேன். ஆனால் பிரதீப் ஏற்கனவே வந்திருந்தான். மாலை ஐந்து இருக்கும். உழைப்பாளர் சிலை பக்கமாய் கூட்டம் இருந்தது. அவன் தான் என்னை அங்கு அழைத்துப் போனான்.
ஒரு போலீஸ் வேனை சுற்றி சில பெண் போலீசார் நகத்தை சுரண்டி சிரித்து பேசியும் எஸ்.எம்.எஸ் அனுப்பியும் நின்றனர். நாங்கள் உள்ளே போய் பார்த்தோம். அங்கே இரண்டு போலீசாருடன் ஜெயா வாதித்துக் கொண்டு நின்றாள். தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் தன் கணவனை பார்க்க அங்கே வந்ததாகவும் திரும்ப திரும்ப சொன்னாள். ஆனால் அவளைப் பற்றி உறுதியான தகவல் இருந்ததால் போலீஸ் ஆதாரத்துக்காக எல்லாம் காத்திருக்கவில்லை. அவளை வேனில் ஏற்ற முயன்றனர். அவள் மறுத்து முரண்டு பிடித்தாள். அப்போது ஒரு போலீஸ்காரர் அவளை கன்னத்தில் அறைந்து கெட்டவார்த்தைகளால் அழைத்து “மரியாதையா ஏறுடி” என்றார். அறையில் அவள் சமனம் இழந்து கீழே விழுந்து விட்டாள். “நாடகம் போடுறியா” என்று அவர்கள் அவளை லத்தியால் காலிலும் முதுகிலுமாய் படபடவென்று அடித்தார்கள். அவள் கொஞ்ச நேரம் அமைதியாய் படுத்திருந்தாள். பின்பு மௌனமாய் அழுதபடியே எழுந்து வேனுக்கு சென்றாள்.
கடையில் சிகரெட் பிடித்து நின்ற போலீஸ்காரர் ஒருவரிடம் என்னை அறிமுகப்படுத்தி கேஸ் என்னவென்று விசாரித்தேன். “அவங்க ஹஸ்பெண்ட பாக்க வந்ததா சொல்றாங்களே சார்” என்றேன். “ரெகுலர் பிராத்தல் கேஸுங்க. இவளை எங்களுக்கு தெரியாதா” என்று சிரித்தார். “இதுங்க ரொம்ப அதிகமாயிட்டாளுங்க. பப்ளிங் நியீசன்ஸ் பண்ணுறாளுங்க. கம்பிளெயிண்ட்ஸ் அதிகமாயிடுச்சு”. சூப்கடைக்காரன் சோகமாக “எவனோ தேவடியாபையன் போலீசுக்கு போன் பண்ணி இருக்கான் சார்” என்றான். எனக்கு அவன் மீதே சந்தேகமாக இருந்தது. இதனிடையே நான் கூட்டத்தில் பிரதீப்பை தொலைத்து விட்டேன். அவன் கொஞ்ச நேரத்தில் வந்து தான் பண்ணின காரியத்தை சொன்ன போது எனக்கு அவன் மீது முதன்முதலாக மரியாதை வந்தது.
பிரதீப் செல்போனில் எடுத்த அந்த காணொளி எம்.எம்.எஸ் மற்றும் யுடியூப் முகநூல் வழியாக பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. யுடியூபில் லட்சக்கணக்கானோர் ஒரே நாளில் பார்த்திருந்தனர். ஒரு பெண் பொதுவெளியில் ஆண் போலீசாரால் லத்தியால் புரட்டி அடிக்கப்படும் காட்சி தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது. இணையத்தில் கருத்து யுத்தங்கள் மும்முரமாக நிகழ்ந்தன. ஒரு பெண்ணை போய் எப்படி அடிக்கலாம் என்று பலரும் ஆவேசப்பட்டார்கள். கடற்கரை போன்ற பொதுவிடங்களில் விபச்சார நடவடிக்கைகள் அதிரித்து விட்டன என வேறு பலர் கொதித்தனர். சிலர் கெட்டவார்த்தைகளால் திட்டி அப்பெண்ணுக்கு இன்னும் நாலு போடனும் சார் என்றார்கள். பெண்ணியவாதிகள் வந்து பெண்கள் எப்போதும் உடலின் பெயரிலேயே ஒடுக்கப்படுகிறார்கள் என்று கண்டித்தனர். குற்றவாளி ஆனாலும் மனித உரிமைகள் மீறப்படுவது கண்டிக்கத்தக்கது என்று ஒரு சாரார் கடுமையாக விமர்சித்தனர். இன்னும் சில பேர் வந்து கடற்கரையில் சில்மிஷம் செய்யும் காதலர்களை கண்டித்தனர். அப்போது நூற்றுக்கணக்கானோர் புதிதாய் விவாதத்தில் நுழைந்து காதலர்களுக்கு கடற்கரையில் இடம் மறுப்பது மாபெரும் அநியாயம், தனிமனித ஒடுக்குமுறை, பிற்போக்குவாதம் என்று எதிர்த்தனர். இந்த பிரச்சனை ஓய்ந்ததும் முகநூலில் விபச்சாரம் சரியா தவறா என்று ஒரு விவாதம் துவங்கியது. சில பின்நவீனத்துவவாதிகளும் முற்போக்காளர்களும் விபச்சாரம் எந்த தொழிலையும் போன்று ஒரு தொழில் மட்டுமே, அவர்களுக்கும் உரிமைகள் உண்டு என்றனர். ஒரு பொது அறவியலுக்குள் அவர்களை கொண்டு வரலாகாது என்றனர். ஒழுக்கவாதிகளும் பெண்ணியவாதிகளும் இருவேறு காரணங்களுக்காக விபச்சாரத்தை எதிர்த்தனர். விபச்சாரம் சமூகத்துக்கு கேடானது என்று ஒரு பக்கமும், அதனால் பெண்கள் ஒடுக்கப்படுகின்றனர் என்று மறுபக்கமும் பேசினர். டி.வி விவாதங்களில் தோன்றின சிறப்புவிருந்தினர்கள் மைக்கில் ”அந்த பெண் செய்ததும் தப்புதான் அந்த போலீஸ் செய்ததும் தப்பு தான். எல்லாரும் திருந்தி தவறு நடக்காமல் இருக்க இன்னின்ன செய்ய வேண்டும்” என்ற பாணியில் கொழகொழவென்று பேசினர். எப்.எம் வானொலியில் “லவ்வர்ஸ் பீச்சுக்கு போய் கடலை போடலாமா, எங்கே என்னெல்லாம் செய்யலாம் என்னெல்லாம் கூடாது” என்று இருபதே நொடிகளில் நின்றபடி நடந்தபடி வேலை பார்த்தபடி வேலையே இல்லாதபடி சர்ர்சித்தனர். கொஞ்ச நாளில் இங்கே என்னே நடக்கிறது என்றே விளங்கவில்லை. ஜெயாவின் நிலைமை என்னவாயிருக்கும் என்றும் தினமும் கவலைப்பட்டேன். ஜெயா கைதான மறுநாள் தான் எனது அத்தியாயம் பிரசுரமானது. அதைப் பார்க்க எனக்கு வெறுப்பாக இருந்தது.
பத்து நாள் கழிந்திருக்கும். காணொளி வந்த இடமே தெரியாமல் போய் விட்டிருந்தது. ஒரு பழைய ஊழல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இது பற்றி டி.வி சிறப்புவிருந்தினர்கள் இறுக்கமான சட்டைக்காலர்களுக்குள் இருந்து “கட்டாயமாக மக்களுக்கு நீதி வழங்க வேண்டிய காலம் நெருங்கி விட்டது” என்று பேசிக் கொண்டிருந்தனர். நாங்கள் வரவிருக்கும் தேர்தல் ஊகங்களை எழுதும் பணியில் அமர்த்தப்பட்டிருந்தோம். அப்படி ஒருநாள் முழுக்க அலைந்து விட்டு பிரதீப்புக்கு தெரிந்த சில உதவி இயக்குநர்களை வடபழனியில் பார்த்து பேசி விட்டு அவர்களின் அறையில் காலையில் காய்ச்சி குளிர்ந்து போயிருந்த கஞ்சியில் ஊறுகாய் கரைத்து குடித்து விட்டு சிகரெட் புகைக்குள் அமர்ந்து எதிர்காலத்தை தீர்மானமாய் பேசி விட்டு வெளியேறி ஒரு குறுக்குசந்து வழியாய் நடந்து வந்து கொண்டிருந்தோம். எங்களை யாரோ பின் தொடர்வதாய் பட்டது.
பிரதீப் திரும்பிப் பார்த்து விட்டு என்னை இழுத்துக் கொண்டு ஒரு டாஸ்மாக்குக்குள் நுழைந்தான்.. அங்குள்ள பின்வாசல் வழியாய் வேறொரு தெருவில் இறங்கி அவசரமாய் ஒரு விநாயகர் கோவில் பக்கமாய் வந்து நின்று ஆசுவாசித்தோம். பிறகு ஆளுக்கொரு சிகரெட் பற்ற வைத்து வெளிச்சமான பகுதியாய் பார்த்து நடந்த போது ஒரு சைக்கிள் வேகமாய் வந்து எங்களை வழிமறித்தது. குமரேசன். “நீயா” என்று புன்னகைத்தேன். அவன் பொறிகலங்குவது போல் ஒரு அறைவிட்டான். “ஓத்த பாடு” என்று அவன் சொன்னது முப்பது நொடிகளில் விட்டு விட்டு எக்கோவுடன் கேட்டது. என் மென்னியை பிடித்து அவன் நெறித்தான். கையை முறுக்கி என் மூக்கை குத்த வந்தான். அப்போது பிரதீப் வந்து நடுவில் விழுந்து தடுக்க பார்க்க அவன் மூக்கு உடைந்தது. அவனது வெள்ளை சட்டை ரத்தம் வழிந்து விகாரமாக தெரிந்தது. ஆச்சரியமாக அவன் ஓட முயற்சிக்காமல் குமரேசனை எதிர்கொண்டான். நான் கொஞ்ச தூரம் ஓடி விட்டு திரும்பிப் பார்த்தேன். குமரேசன் அவனை அடிவயிற்றில் மிதித்து முதுகில் குத்தினான். அப்போது அங்கு வந்த சிலர் அவனை பிடித்துக் கொண்டனர். நானும் தைரியத்தை வரவழைத்து என் நண்பனிடம் சென்று அவனை தாங்கிக் கொண்டேன். பையில் இருந்து புட்டியை எடுத்து ஊற்றி அவன் முகத்தை துடைத்து விட்டேன். ரத்தம் நிற்கவே இல்லை. குமரேசன் திமிறியபடி கத்தினான் “டேய் என் பொண்டாட்டி மட்டும் ஜெயிலில இருந்து வரல உன்னை சாவடிச்சுவடேண்டா பாடு.”. அவன் கொஞ்ச நேரத்தில் அழத் தொடங்கினான். கல்லூரியில் அவன் இன்னும் கட்ட வேண்டிய மிச்ச கட்டணத்தை ஏற்பாடு செய்ய முடியாவிட்டால் அவனால் இறுதிப்பரீட்சை எழுத முடியாமல் போகும் என்றும் அதனால் அவன் எதிர்காலமே வீணாகும் என்றும் புலம்பினான். அவனைப் பிடித்துக் கொண்டவர்கள் அவன் பரிச்சயக்காரர்கள் போல. அவர்கள் என்னை சமாதானப்படுத்தி “சார் இங்கே இருந்து போய் விடுங்க” என்று அவசரப்படுத்தினார்கள். நான் பயத்தில் பிரதீப்பை இழுத்துக் கொண்டு வந்து விட்டேன்.
பிரதீப்பின் முகம் வீங்கி இருந்தது. வலது கண் புடைத்திருந்தது. கழுத்தில் நகக்கீறல்கள் தெரிந்தன. அவனிடம் ஒரு அசாதாரண அமைதி இருந்தது. எதற்கும் தான் பொறுப்பல்ல என்கிற ரீதியில் நடந்து வந்து கொண்டிருந்தான். நான் அவனிடம் “நீ ஏன் நடுவில வந்து விழுந்து அடிவாங்கின?” என்று கேட்டேன். கொஞ்ச நேர அமைதிக்கு பிறகு அவன்
“நான் தானே காரணம்” என்றான்.
“ஆங்?”
“நான் தான் போலீசுக்கு போன் பண்ணி அவளை அடையாளம் சொன்னேன்”
“நீயா ஏன்?”
“அரெஸ்ட் ஆகிறத வீடியோ எடுத்து அப்லோட் பண்ணினா என்ன ஆகும்னு பார்க்கலாமுன்னு தான். அது இவ்வளவு சென்சேஷனலா ஆகும்னு நான் எதிர்பார்க்கல. அந்த பொண்ணு பயங்கரமா டிராமா பண்ணி அடிவாங்கி நான் எதிர்பார்த்த்தை விட இம்பேக்ட் பயங்கரமாயிருச்சு”
“பிரதீப் என்ன அநியாயம்டா நீ செஞ்சது”
“இதுல என்ன அநியாயம்பா. இதை மக்களுக்கு கொண்டு போக வேண்டியது என் கடமை. அந்த பொண்ணு இவன் கிட்ட மாட்டி இருக்கிறா. அவளை மாதிரி எத்தனையோ பொண்ணுங்க. இந்த விசயத்தை ஒரு பொதுவிவாதமா மாத்தனும்னு விரும்பினேன். மூணு நாள் லட்சக்கணக்கான பேர் இதைப் பார்த்தாங்க இல்ல. அதோட உன் தொடர்ல இவ கதையை நீ எழுதினதும் இன்னும் அதிமானபேர் படிச்சாங்க இல்ல”
“அதுக்கு ஒரு பொண்ணை அடிவாங்க வைப்பியா. ஜெயிலுக்கு அனுப்பிவியா?”
“விபச்சாரிகள், அவங்களோட அவல நிலைமை, அவங்க மேல போலீஸ் காட்டுற வன்முறை இதைல்லாம் மீடியா கவனத்தில கொண்டு வந்தேனில்ல. இது அவங்களுக்கு நல்லது தானே பாஸ். முன்னேற்றம்கிறது வலியும் கண்ணீரும் சேர்ந்தது தானே” என்று சுணங்காமல் பேசிக் கொண்டே சென்றான். “ஆனா துரதிஷ்டவசமா நீங்க கேட்குற நியாயத்துக்கு மூணு நாள் தான் ஆயுள். அதுக்கு நான் என்ன செய்ய? மூணே நாள் தான். ஜஸ்ட் திரீ டேஸ்”. அதை திரும்ப திரும்ப சொன்ன போது அவனது மேல்உதடு இடதுபக்கமாய் கோணியது. ஒருநொடி சுரீரென வலி ஏற வலதுகண் படபடவென அடித்துக் கொண்டது.
நன்றி: மலைகள்.காம்
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates