இன்று எனக்கு பாலகுமாரன் மீது எந்த விருப்பமும் இல்லை. ஆனால் ஒரு காலத்தில் அவரை பைத்தியமாக படித்திருக்கிறேன். சமீபத்தில் ஒரு வேலை விசயமாக அவர் வீட்டுக்கு போக சந்தர்ப்பம் கிடைத்தது. போன் செய்தால் அவருக்கு உடல்நலமில்லை என்றும் தூங்குகிறார் என்றும் சொன்னார்கள்.
நண்பரை வற்புறுத்தி அவருடன் சென்றேன். அவர் வீட்டை நெருங்கியதும் மனம் குதூகலித்தது. அவர் மனைவி வந்து போனில் சொன்னதையே திரும்ப சொன்னார். நான் அவர் வராவிட்டால் பரவாயில்லை சும்மா பார்க்கத் தான் வந்தோம் என்றேன். அப்படி சும்மா பார்ப்பதென்றால் என்ன என்பது போல் இமைகள் தூக்கினார்.
நண்பர் “நான் தான் சொன்னேனே, அவரை பார்க்க முடியாது. வந்தால் நேரம் வீணாகும் என்று” என்றார். பிறகு நாங்கள் சந்தித்தது அவரது முதல் மனைவி என்றார். அவரைப் பார்க்க கடுகடுப்பாய் இருந்தார். நாங்கள் அழைத்த போது அவருடைய செல்போனில் பேசியது இரண்டாவது மனைவி. “இரண்டாவது மனைவிக்கு எவ்வளவு வயது இருக்கும், இளமையானவரா?” என்றேன். ”நாற்பது இருக்கும், அது இளமை என்றால் இளமை தான்” என்றார். பாலகுமாரனுக்கு ஜுரமென்றால் கூட இருந்து அணுக்கமாக பார்த்துக் கொள்வது இரண்டாம் மனைவி, நாங்கள் பாலகுமாரனின் செல்போனில் அழைத்தது பேசியதும் அவரிடம் தான். இது முதல் மனைவிக்கு தெரியாது. நாங்கள் அழைத்த விசயம் சொன்ன போது குழப்பமாக சங்கடம் காட்டினார். பிறகு நண்பர் அவரது மகன் மற்றும் மகளைப் பற்றி சொன்னார். என் மனம் வேறொரு விசயம் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தது.
ஒருவேளை பாலகுமாரனை சந்தித்தால் அவரிடம் அறிவதற்கோ கற்பதற்கோ எனக்கு ஒன்றுமில்லை என அறிவேன். ஆனால் அவர் வீடு வரை போவதோ நேரில் ஒருவேளை சந்திப்பதோ அவரை சந்திக்க அல்ல. நினைவின் படிக்கட்டுகளில் ஏறி மீண்டும் சில நொடிகள் என் பால்யத்தின் ரொமாண்டிக்கான மகிழ்ச்சியை மீட்டெடுக்கவே. நான் பாலகுமாரனை அல்ல என்னையே சந்திக்க விரும்புகிறேன் என நினைத்தபடி கிளம்பினேன்...
ரசித்தேன்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
கலவையான எண்ணங்கள் எழுவது சகஜமே... இதை எழுதியிருக்க தேவையில்லை என்பது எனது என் எண்ணம்! ஒருவேளை அவரை சந்தித்து பேசியிருந்தால் நீங்கள் இன்னும் கூட மகிழ்ந்திருக்கலாம்!
ReplyDeleteநல்ல முடிவுதான் .
ReplyDelete