நான் வேலை பார்த்த செய்தித்தாள் அலுவலகத்தில் பணம் கிடைக்க வாய்ப்பே இல்லை. அலுவலக எழுத்தாளர்கள் விடுப்பில் செல்லும்போது மூன்று பிசோக்களுக்கு தினசரி உரையும், நான்கு பிசோக்களுக்கு தலையங்கமும் எழுதும் வாய்ப்பு எனக்குக்கிடைக்கும்; ஆனால் அது ஏதோ உயிர் வாழ்வதற்கு மட்டுமே போதுமானதாய் இருந்தது. காசு கடன் வாங்க முயன்ற போது, திருப்பி செலுத்த வேண்டிய கடன் ஏற்கனவே ஐம்பது பிசோக்களுக்கு மேல் என்று மேலாளர் நினைவூட்டினார். அன்று பிற்பகல் என் நண்பர்கள் எவரும் துணிந்திராத கொடுமை ஒன்றை நான் செய்தேன். புத்தகக் கடைக்கு அடுத்துள்ள கபே கொலோம்பியாவின் வாசலில் நின்று, முதிய கேடலன் ஆசிரியரும், புத்தக விற்பனையாளருமான டோன் ரெமோன் வின்யாஸிடம் பத்து பிசோக்கள் கடனாகக் கேட்டேன். அவரிடம் ஆறு பிசோக்கள் மட்டுமே இருந்தன.
எத்தனை கவனமாய் நெடுங்காலம் வாழ்ந்தாலும், திரும்ப சொல்ல போதாமல் போகும் அளவிற்கான ஒரு திருப்புமுனையாய் அந்த எளிய இருநாள் பயணம் அமையும் என்று அம்மாவோ நானும் கற்பனையில் கூட எண்ணவில்லை. இப்போது எழுபத்தைந்து வருடங்கள் தாண்டி நின்று யோசிக்கையில், என் எழுத்துப் பணியில், அதாவது என் முழுவாழ்வில், நான் செய்த முடிவுகளிலேயே அதிமுக்கியமானது இது என்று புரிகிறது.
விடலைப் பருவம் அடைவதற்கு முன், நினைவுகள் இறந்த காலத்தை விட எதிர்காலத்தை நோக்கியே இச்சையுடன் பாய்கின்றன. இதனால் அந்த நகரத்தைப் பற்றிய என் ஞாபகங்கள் வீட்டு ஏக்கம் காரணமாய் லட்சியத்தன்மை அடையவில்லை. நான் அது எப்படி இருந்ததோ அவ்வாறே நினைவு கூர்ந்தேன்: வரலாற்றுக்கு முந்திய முட்டைகளாய் பெரிதாகவும், வெள்ளையாகவும் உள்ள வழவழப்பான கற்கள் கொண்ட படுகை மேல் விரைந்து ஒடும் தெளிந்த நீருடைய ஆற்றின் கரையில் அமைந்த, எல்லாரையும் எல்லாரும் அறிந்த வாழ்வதற்கு ஏற்ற ஊர். அந்தியில், குறிப்பாய் டிசம்பரின் போது, மழைக்காலம் முடிந்து காற்று வைரமாய் தெரிகையில், சீயரா நெவேடா டீ சேன்டா மார்டா மற்றும் அதன் வெள்ளை கூரிய உச்சிகள் சரியாய் நதியின் மறுகரையிலுள்ள வாழைத்தோப்பு வரை இறங்கிச் செல்வதாய் தோன்றும். வாழ்வின் கசப்பை மறக்க கொக்கோ உருண்டைகளை மென்று, முதுகில் இஞ்சி மூட்டைகளை சுமந்தவாறு அரவாக் இந்தியர்கள் எறும்புகள் போல் வரிசைகளில் சியராவின் செங்குத்தான முகடுகளிலிருந்து இறங்குவதை அங்கிருந்து நாம் பார்க்கலாம். குழந்தைகளாய் இருக்கையில் நிரந்தர பனியிலிருந்து பந்துகள் செய்யவும், உலர்ந்து எரியும் தெருக்களில் அவற்றால் போர் புரியவும் நாங்கள் கனவு கண்டோம். கற்பனைக்கெட்டா விதம் வெப்பம் அதிகமாய் இருந்ததால், குறிப்பாய் மதியம் குட்டித்தூக்கம் போடும் வேளையில், பெரியவர்கள் அது ஏதோ தினசரி அதிசயம் என்பது போல் அங்கலாய்ப்பார்கள். பகலில் காயும் வெயிலில் கருகிகளை தூக்கக் கூட முடியாத அளவிற்கு அவை சுடும் என்பதால் ஒருங்கிணைந்த பழ நிறுமத்தின் ரயில் தண்டவாளங்களும், முகாம்களும் இரவிலேயே அமைக்கப்பட்டன என்று நான் பிறந்த நாளிலிருந்து திரும்ப திரும்ப கூறக் கேட்டிருக்கிறேன்.
அரகடகாவிலிருந்து பாரன்குல்லாவிற்கு போவதற்கு ஒரே ஒரு வழி மட்டுமே உண்டு; காலனி ஆட்சி காலத்தில் அடிமைத் தொழிலாளர்களால் தோண்டப்பட்ட ஒரு குறிகிய கால்வாய் வழியே சிதிலமடைந்த ஒரு பெரும் எந்திரப் படகு மூலம் சென்று, சியனெகா எனும் ஆளரவமற்று விரிந்து பரந்த சதுப்பு நிலத்தைக் கடந்து சியனேகா எனும் அதே பெயர் கொண்ட நகரத்தை சென்றடைய வேண்டும். பயணத்தின் கடைசி படலத்தை மிகப்பெரும் வாழைத் தோட்டங்களின் ஊஉடே கடந்து, வெக்கையடிக்கும் தூசு மண்டிய சிற்றூர்களிலும், ஏகாந்தமான ரயில் நிலையங்களிலும் அர்த்தமில்லாமல் நிறுத்திப் போகும் தினசரி புகை வண்டியில் அங்கிருந்து ஏற வேண்டும்.
இதுவே 1950-ஆம் ஆண்டு பெப்ரவரி 10 அன்று---கோலாகல கொண்டாட்டத்திற்கு முந்தைய நாளில்---சனிக்கிழமை மாலை ஏழு மணிக்கு, பருவம் தவறி வந்த புயல் மழையில், கையில் ஒருவேளை அவள் எதிர்பார்த்த விலைக்கு வீடு போகாவிட்டால் வீடு திரும்புவதற்கு மட்டுமே போதுமான முப்பத்திரெண்டு பெசோக்களுடன் நானும் அம்மாவும் மேற்கொண்ட சிறு பயணம்.
மிக்க நல்ல முயற்சி அனுப்பியதற்கும் நன்றி
ReplyDeleteஎழுதும் மனோநிலை இல்லை. வாசிக்கவாவது செய்கிறோம். மொழிபெயர்ப்புகள் வேறு தளங்களுக்கு நம்மை இட்டுச்செல்லலாம். நன்றி.
ReplyDelete