Monday, 25 May 2009

கதை சொல்ல வாழ்கிறேன்: அத்தியாயம் 3



தடக்காற்று கடுமையாய் வீசியதால், ஆற்றுத்துறைமுகத்தில் அம்மாவை படகில் ஏற சம்மதிக்க செய்ய நான் சிரமப்பட வேண்டியிருந்தது. அம்மாவிடம் நியாயமில்லாமலும் அல்ல. நியு ஓர்லியன்சிலிருந்து வரும் நீராவிப் படகுகளின் குறுகிய மாதிரி வடிவமான இந்த படகுகளின் கேசொலின் எந்திரம் ஜுர நடுக்கத்தை படகின் மேலுள்ள எல்லாவற்றின் மேலும் கடத்தி விடக் கூடியவை.
 அங்கிருந்த வரவேற்பறையில் ஊஞ்சற் படுக்கைகள் மாட்டுவதற்கான கொக்கிகள் வெவ்வேறு உயரங்களில் இருந்தன; மேலும், நீள்-மர இருக்கைகளில் இடம் பிடிக்க மக்கள் தங்கள் எல்லா பயண மூட்டைகள், சரக்குப் பொட்டலங்கள், கோழிக்கூடைகள் மட்டுமில்லாமல் உயிருள்ள பன்றிகளையும் வேறு எடுத்தவாறு முட்டி மோதிப் போயினர்.

அங்கு மூச்சுத் திணறடிக்கும் சில சிற்றறைகள் உண்டு; ஒவ்வொன்றும் பயணத்தின் போதும், அவசர கால சேவைகள் வழங்கும், நைந்து நூலாய்ப் போன, இளம் வேசிகளால் அவை ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும். அவை இரு ராணுவப் படுக்கைகள் கொண்டவை. எந்த சிற்றறையிலும் இடமில்லாததால், நானும் அம்மாவும் இரு இரும்பு இருக்கைகளை அதிரடியாய் ஆக்கிரமித்தோம்; மேலும் அங்கேயே இரவைக் கழிப்பதற்கு தயாரானோம். முகத்துவாரத்திற்கு மிக அருகே சமுத்திர குணம் கொள்ளும் மெக்டலீனா ஆற்றை கடந்ததும், நாங்கள் பயந்தது போலவே கடுங்காற்று முன்னேற்பாடுகள் அற்ற அந்த கப்பலை திடீரென்று தாக்கியது. துறைமுகத்திலிருந்து நான் கறுப்புப் புகைலிலையாலும், சிப்பம் கட்ட பயன்படுத்தப்படும் மலிவான காகிதத்தாலும் செய்யப்பட்ட மிகவும் விலைகுறைவான சிகரெட்டுகளை நிறைய வாங்கி வைத்திருந்தேன்; ஆகஸ்டில் ஒளி நூலை மறுவாசிப்பு செய்தவாறு, அந்நாட்களில் நான் புகைக்கும் பாணியில், ஒரு சிகரெட்டின் நுனியில் மற்றொன்றை பற்ற வைத்து, புகைக்க ஆரம்பித்தேன். அக்காலத்தில், வில்லியம் பாக்னர் தான் என் காவல் பூதங்களில் மிகவும் விசுவாசமானவர்.

என் அம்மா தன் ஜெபமாலையை அது ஏதோ ஒரு எந்திரக் கலப்பையை இழுப்பதற்கோ அல்லது ஒரு விமானத்தை வானில் பிடித்து வைக்க முடிகிற கம்பி வடத்தை சுற்றியிழுக்கும் எந்திரம் என்பது போல் இறுக்கப் பற்றியிருந்தாள். அவள் தனக்காக எதையும் வேண்டிக் கொண்டதில்லை; அனாதையாகப் போகும் தன் பதினொரு குழந்தைகளுக்கு நீண்ட வாழ்வையும், செல்வ செழிப்பையுமே கேட்டாள். அவளது பிரார்த்தனை போய் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்திருக்க வேண்டும்; ஏனெனில் நாங்கள் கால்வாயை அடைந்த போது, மழை மெனமையாகவே பெய்தது. மேலும், கொசுக்களை விரட்டும் அளவிற்கு காற்றும் பலமாய் வீசவில்லை. பிறகு அம்மா தன் ஜெப மாலையை கீழே வைத்து விட்டு, சுற்றிலுள்ள குழப்பமான வாழ்க்கையை மௌனமாக வெகு நேரம் அவதானித்தாள்.

அவள் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தாலும், வாழைப்பழ தோட்டத்தின் தற்காலிக பிரம்மாண்டத்தில் வளர்ந்தாள்; அதிலிருந்து அவள் சாண்டா மார்டாவிலுள்ள கொல்ஜியோ டி லா பிரசண்டசியோன் டி லா சாண்டிஸ்மா விர்ஜினில் செல்வந்த பெண்ணொருத்திக்கான சிறந்த கல்வியைப் பெற்றாள். கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது, தோழிகளுடன் சேர்ந்து சித்திரத் தையல் இட்டாள், கொடை அங்காடியில் கிளாவிகார்டு இசைத்தாள், அத்தை ஒருவள் துணை போக உள்ளூர் கோழை மேட்டுக்குடியினர் நடத்திய பரிசுத்தமிக்க நடனங்களில் கலந்து கொண்டாள். ஆனால் அந்நகர தந்தி இயக்குனரை அவள் பெற்றோர் விருப்பத்திற்கெதிராய் திருமணம் செய்யும் வரை அவளுக்கு காதலன் இருந்த விஷயம் யாருக்கும் தெரியாது. அப்போதிலிருந்து அவளது அப்பட்டமான நற்குணங்கள் நகைச்சுவை உணர்வும், நீள் வாழ்க்கைப் பயணத்தில் சந்திக்கும் எதிர்பாரா தாக்குதல்களால் முறியடிக்கப்படாத ஆரோக்கியவுமே. ஆனால் அவளது ஆச்சரியமான குணம் பிரமாதமான அம்மனவலிமையை மறைக்கும் அற்புதத் திறமையே. அவள் ஒரு குறைபாடற்ற லியோ. இதன் காரணமாகவே எதிர்பாராத ஊர்களிலிருந்து வந்த தூரத்து உறவினர்கள் வரை அதிகார எல்லை நீண்ட பொன்னாட்சி ஒன்றை நிறுவி, சமையலறையில் இருந்தவாறே, சட்டியில் பீன்ஸ் கொதிக்கையில், குரல் தாழ்த்தி, கண்கூட சிமிட்டாமல் கோள்களின் குடும்பத்தை போல் அவ்வாட்சியை கட்டுப்படுத்த முடிந்தது.

Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates