Saturday, 26 March 2011

தீராமல் பசித்த நாள்




இன்று முழுக்க
பசித்தபடியே இருக்கிறது
பசி நெருப்பில்
தசைகளும் எலும்புகளும் கொழுப்பும்
மெல்ல மெல்ல
வேகிறது

இன்று முழுக்க
எல்லாரிடமும் இனிமையாக பேசிக் கொண்டிருக்க
கரித்து கொட்டியவாறிருக்க
வருகிறது
வலிக்கும் இடங்களையும்
கிளர்ச்சியான பிரதேசங்களையும்
வருடியவாறு உள்ளேன்
அடுத்தவர் கவிதைகளில்
அவசியமற்றவை
என்று பென்சிலால் வெட்டித் தள்ளிய
வரிகளை மீண்டும் கண்டடைந்து
பொருத்துகிறேன்
இன்று முழுக்க
சொன்னவற்றை விட
விட்டுவிட்ட வார்த்தைகளில்
உத்தேசித்த பொருள் இருந்ததை
விசனிக்கிறேன்

நடந்ததை நினைக்க நினைக்க
மனம்
இன்னொரு பக்கம்
ஒரு ரப்பர் கொண்டு
என் நாளை அழித்து கொண்டு வருவதை
நினைக்க பதற்றமாகிறது
தொடர்ந்து நினைக்கிறேன்.

வீடு காற்றால் நிரம்பி
இருக்கிறது
சமையலறையில்
இன்று அதிகமாய் சமைத்த உணவு பண்டங்கள்
கலவையான சமையல் வாசம்
ஒரு நொதிக்கும் ஆவியை போல்
எழுந்து கொண்டிருக்கிறது
உணவுகள் என்னை
புறமொதுக்குகின்றன
பசிப்பதற்கும்
பசிக்காமல் இருப்பதற்கும் இடையிலான
ஆசுவாசம்
வெறும் கற்பனை என்று நினைத்து கொள்கிறேன்
ஒவ்வொரு உணவுப் பொருளும்
துக்கமாய் இருப்பதாய் தோன்றுவது
கூட
வெறும் கற்பனை தான்
இன்றைய கடும் கோடையில்
தொடர்ந்து தண்ணீர் குடிப்பது மட்டும்தானே
நியாயம் என்கிறான் நண்பன்
ஆனால் மூடி திறந்திட
உணவுகளும்
நானும்
வேர்த்திருக்கிறோம்
மிருதுவாகி
கெட்டிதட்டி போய்
அந்த ஜன்னலுக்கு அப்பால் தெரியும் மலையை
போல் அல்லாமல்
சலனித்தபடி
எதற்கோ காத்திருக்கிறோம்

இன்று முழுக்க பசிக்க கூடாது
என்று
ஒரு செடி தொட்டிக்கு பரிவாய் சொட்டு சொட்டாய்
இருட்டில் நீரூற்றுவது போல்
இரவில் உண்டு கொண்டு
படுக்கிறேன்
யாரோ தூங்காமல்
அடிக்கடி கவனித்தபடி இருக்கிறார்கள்
ரகசியமாய்

இன்று முழுக்க
பசியில் இருப்பது
இன்று முழுக்க
அழிவது ஆகாதா
என்று எண்ணி
வெளியே உற்று பார்க்கிறேன்
மரங்களும் புல் பூண்டும்
பறவைகளும் மிருகங்களும் பூச்சிகளும்
தெரியாத வெளியில்
மழையாக கொட்டுகிறது
என்னை அறியாமல்
கவனிக்கிறேன்
பசித்துக் கொண்டிருக்கும் இரவில்
தன்னந்தனியாக
வெற்றாக
முழுதாக
இருக்கும் உலகை
Read More

Tuesday, 22 March 2011

தலைகீழ் பிரயாணம்



அவர்
என்றும் போல்
விடிகாலையில்
மொட்டைமாடியை சுற்றி சுற்றி
தளர் ஓட்டம் செல்லும் போது

மல்லாந்து விழுந்து ஓடியது
ஒரு கரப்பான்பூச்சி
வாசல் கூரையில்
தலைகீழாக பிரயாணித்தது
பல்லி
மிகுந்த விழிப்புடன்
மல்லாக்க தூங்கியது பூனை
படிக்கட்டில் நீண்ட கிறுக்கல்களாய்
கலைந்தன எறும்பு சாரைகள்
ஒவ்வொரு காற்றிலும் சுழித்து அலையடித்தது
உயிரற்ற ஈசல்களின் சிவப்பு குவியல்

பிறகொரு நாள்
அதே மாடியில்
அவர் ஒரு பெண்ணை
சன்னமாய் முத்தமிட்ட போது
தான் வேலைக்கு போகும் பாதையை
பார்வையிட்ட போது
காயும் ஆடைகளை
அந்நியமாய் பார்த்து மனைவியை நினைத்த போது
விளிம்பில் நின்று எட்டி நோக்கியபடி
தனது
தற்கொலை புரிந்த மகளை நினைத்த போது
சின்ன வயதில் சொல்லப்பட்ட
குட்டிக்கதைகளில் ஒன்றையாவது
நினைவு கொள்ள முயன்ற போது
நேசிக்க முடியாத போது வெறுப்பும்
வெறுக்க முடியாத போது அன்பும்
போலியாக உள்ளது ஏன்
என்று கேட்டுக் கொண்ட போது
தன்னை போல் மொட்டை மாடியில் நிற்கும்
வேறுபட்ட மனிதர்களை
விநோதமாய் பார்த்த போது
சந்தித்த ஒவ்வொரு மனிதனின்
பைத்தியக்காரத்தனத்தையும்
வகைப்படுத்தி நினைத்த போது
தன்னை சுற்றி உறவுகளும் நட்புகளும்
மறைய மறைய
பெருகிக் கொண்டே இருப்பதை
விளங்க முயன்ற போது
ஒரு கவிதை தோன்ற
அதை நினைவில் வைக்க முயன்று
அது மாறிக் கொண்டே இருந்த போது
தூக்கம் வராமல்
கோபமாய் உலாத்திய போது

உலகம் அதையே செய்தது
கொஞ்சம் தலைகீழாய்
Read More

விருதை காப்பாற்றுவது எப்படி?


ஒரு பிரபல விருதை ஒருங்கிணைக்கும் பிரபல நபரிடம் பேசிக் கொண்டிருந்தேன். விருதுகளின் தேர்வில் சார்புநிலை தவிர்ப்பது எப்படி என கவலைப்பட்டார். அவரிடம் ஒரு தீர்வும் இருந்தது.

“ஜனநாயக முறைப்படி சென்றால் இந்த விருது மிக சரியான நபருக்கு போய் சேராது. குளறுபடி நடந்து விடும். என்ன செய்ய அனைவரும் ஜனநாயகத்தை நம்பும் தப்பான சூழலில் வாழ்கிறோமே” என்றார். யாரையும் நம்பக் கூடாது என்கிற சற்றும் நம்பிக்கைக்கு புறம்பான ஜனநாயகவாதிகள். “ஜனநாயகம் நல்லது தான். ஆனால் ஜனநாயகத்தை நம்பும் மக்கள் நல்லவர்களாக இல்லை” என்று மேலும் பெருமூச்சு விட்டார். விருதை ஜனநாயக அராஜவாதிகளிடம் இருந்து காப்பாற்ற அதை மேலும் ஜனநாயகப்படுத்த போவதாக சொன்னார். சரி, இது வாசல் வரை வந்தவரை நடுவீதிக்கு தள்ளுவது ஆகாதா? விருதின் மதிப்பு இன்னும் தாழாதா? இல்லை அவர் ஒரு தீர்வு வைத்திருக்கிறார்.
என்ன ஒரு சர்வாதிகாரமான மனிதர்!
Read More

Monday, 21 March 2011

இல்லாத கையும் பாராட்டுகளும்








எங்கள் கல்லூரியின் கலைநிகழ்ச்சிகளின் போது மேடை ஆட்டத்துக்கு இணையாக பார்வையாளர் பகுதியில் இருந்து ஒரு மாணவன் ஆவேசமாக நடனமாடிக் கொண்டிருந்தான். ஒரு முழங்கை இல்லாத மாணவன். நிறைய மாணவர்கள் கூட ஆடிக் கொண்டிருந்தார்கள். அவர்களை மாணவிகள் மிகுந்த ஆர்வமாக கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த கையற்ற மாணவனை ஒரு ஜோடி கண்கள் தனியாக கவனித்தன. ஹலோ எப்.எம்மில் இருந்து விளம்பரம் செய்ய வந்திருந்த தொகுப்பாளர் மேடையில் தோன்றி அந்த ஊன இளைஞனை பாராட்டி பேசினார். அவனோடு புகைப்படம் எடுக்க விரும்புவதாக சொல்லி அந்த ஆசையும் இவ்வாறு சொல்லி நிவர்த்தி செய்தார் “எப்பவுமே அடுத்தவங்க தான் ஆர்.ஜே வோட போட்டோ எடுக்கணும்னு விரும்புவாங்க, ஆனால் ஒரு ஆர்.ஜேவே உங்களோட போட்டோ எடுக்க விரும்பறாங்க. அந்த அதிபிரபலமான ஆர்.ஜெ யாரென்று கேட்காதீர்கள். எனக்கு தெரியவில்லை. விசாரித்து பார்த்தால் அங்கிருந்து யாருக்குமே தெரியவில்லை.
அந்த ஊன இளைஞன் மிக உற்சாகமாக மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தான். நண்பர்கள் அவனை சூழ்ந்து கொண்டார்கள். நடன நிகழ்ச்சி மேடையில் தொடர்ந்தது. அந்த மாணவன் பக்கமாய் மேலும் பல முழுஇளைஞர்கள் நகர்ந்தார்கள். அதுவரை வெவ்வேறு இடங்களிலாய் குழுக்களாய் ஆடிக் கொண்டிருந்த அவர்கள் ஊன இளைஞனின் பக்கமாய் குவிந்து ஆடத் தொடங்கினர். எல்லாரும் கூட போட்டொ எடுக்க விரும்பும் ஆர்.ஜெவின் பார்வையை ஆகர்சிக்க அதுவே உசிதமான இடம் என்று அவர்கள் தீர்மானித்திருந்தனர். அவர்கள் அவனை விட நன்றாக ஆவேசமாக அதிக தூசை கிளப்பி அதிக கூச்சலை ஏற்படுத்தி தான் ஆடினர். ஆனால் பார்க்க வேண்டியவரின் பார்வை விழவில்லை. ஆனால் பாராட்டை பெற்ற இளைஞன் அதற்கு மேல் ஆடாமல் நின்றிருந்தான். முகத்தில் மெல்லிய கூச்சம். மேடையில் பாராட்டு பெறும் அனைவரும் கூசி ஒதுங்குவதில்லை என்பதை கவனிக்க.
அடுத்து கனாக்காணும் காலங்கள் தொடரில் நடித்த அன்றைய விழாவின் சிறப்பு விருந்தினரான பிரபு என்பவர் மேடையில் தோன்றி நடன போட்டி வெற்றியாளர்களை அறிவிக்க தொடங்கினார். அவர் திடீரென்று தனக்கு அந்த ஊன இளைஞரை மிகவும் பிடிக்கும் என்று கூறி மேடையில் அழைத்து அணைத்து பரிசளித்தார். கரகோஷம் வலுத்தது. ஊன இளைஞர் அதையும் ஏற்றுக் கொண்டு இறங்கினார். அவர் மேலும் மேலும் பிரகாசமாக உற்சாகமாக மாறிக் கொண்டிருந்தார். ஒருவர் மகிழ்ச்சி அடைவதை பார்த்து முதன்முதலாக எனக்கு உறுத்தலாக இருந்தது. அவரை கவலையாக பார்த்தேன்.
போட்டியில் பங்களிக்காத ஒருவரை பாராட்டுவதும் பரிசளிப்பதும் கேட்காமலே உங்கள் சட்டைப்பையில் பிச்சை இடுவதற்கு சமம். மேடை வெளிச்சம் தங்கள் மேலும் அதிகமாக விழ அவரை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த condescending நிலைப்பாடு ஒரு உயர்வு மனப்பான்மையில் இருந்து உருவாவது. இந்த நோய்மை கொண்ட மனிதர்கள் பெண்ணியம், தலித்தியம், கருணை என்றெல்லாம் போலியாக ஆவேசப்பட்டுக் கொண்டு இருப்பார்கள். ஆவேசப்படும் அதே தருணத்தில் அவமானப்படுத்தவும் தயாராக இருப்பார்கள். ஒரு அலியை பார்த்து நகைக்கும் பெண் தன் பெண்மையை எண்ணி உள்ளூர பூரிப்பதை போன்றது இது. எதிர்காலத்தில் இந்த இளைஞர் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுக் கொண்டே இருப்பார். அவர் மீது போலியான கருணையையோ வெறுப்பையோ மக்கள் தங்கள் அரிப்பை அடக்கும் பொருட்டு காட்டிக் கொண்டே இருப்பார்கள். அடுத்தவர்களின் மிதியடியாக இல்லாமல் இருக்க ஒரு ஊனன் என்ன செய்யலாம்?

தன்னை மதிக்கும் நபர்களை மட்டும் தேர்ந்தெடுத்து நண்பராகலாம். அது சாத்தியமில்லை. அசட்டுத்தனமாய் நடப்பவர்கள் மத்தியில் தான் நாம் பெரும்பாலான பொழுதுகளில் வாழ்ந்தாக வேண்டும். அவர்களை தவிர்க்க முடியாது. ஆக சுயமரியாதை விபத்துக்குள்ளாகாமல் பார்க்க தன்னை அவன் ஒரு படி உயர்த்திக் கொள்ள வேண்டும். சந்திக்கிறவர்களிடம் தான் அவர்களை விட மேல் என்பதை மிக நுட்பமாக உணர்த்தி விட வேண்டும். மிகவும் பணிவாக ஒருவர் தன்னை மேலானவராக காட்டிக் கொள்ள முடியும். அது ஒரு கலை. லௌகீகமாகவோ அலௌகீகமாகவோ ஒருவர் தம்மை மேலுயர்த்திக் கொள்ள முடியும். இரண்டும் சரியே. இப்படி முழுமையானவர்களை விட தான் ஒரு அடி மேலே என்று ஊனன் நிறுவினால் மட்டுமே அவர்கள் இவனை தமக்கு சமம் என்று கருத பிரயத்திப்பார்கள். அவர்களை விட உயரமாக ஒரு ஊனன் என்றுமே இருக்கப் போவதில்லை என்றாலும் சமமாகவேனும் இருப்பதற்கு இதுவே ஒரே வழி.
மனித மனம் கீழ்மையானது என்று பழிக்க நான் இதை எழுதவில்லை. ஊனம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனிதர்கள் அடிப்படையில் மிகவும் பலவீனமானவர்கள். இதை ஒரு மனச்சிக்கலாக மாற்றி துன்புறுகிறார்கள். துன்பம் கழிக்க சகமனிதனை குத்துச்சண்டை மூட்டை போல் பயன்படுத்துகிறார்கள். மனைவி கணவன் அம்மா அப்பா சகோதரர்கள் நண்பர்கள் அனைவரும் பிறரது அழுக்கை அலம்பவே வாழ்நாளில் பெரும்பகுதி வீணடிப்பதை பார்க்கிறோம். எத்தனை கெஞ்சல்கள், சமாதானங்கள், நியாயப்படுத்தல்கள், சச்சரவுகள்! கவபட்டா இதைப் பற்றி “மரு என்றொரு கதை எழுதியிருப்பார். ஒரு மருவுக்காக கணவன் மனைவியை படாத பாடு படுத்துகிறான். அவளை பெரும் குற்றவாளி ஆக்குகிறான். ஆனால் அந்த மருவை கிள்ளி எறியவே முடியாது. காரணம் அது அவனுக்குள் நமக்குள் ஒவ்வொருக்குள்ளும் இருக்கிறது. அது வெறுமனே காலோ கையோ மட்டும் கிடையாது என்பதை நிச்சயமாக சொல்லலாம்!
தமிழின் முன்னோடிகளில் அதிகமாக கொண்டாடப்படுவர்கள் இளமையிலேயே இறந்து போனவர்கள் அல்லது எழுதுவதை நிறுத்தினவர்கள் அல்லது மிகக் குறைவாக எழுதினவர்கள். நமக்கு அழிபவர்களை அல்லது அழிந்தவர்களை சிலாகிக்கும் ஒரு மனக்கோணல் உள்ளது என்று அடிக்கடி சொல்வார் மனுஷ்யபுத்திரன். இதுவும் அதுதான். கொஞ்சம் அறிவுஜீவித்தனமான மரு வேட்டை
Read More

Saturday, 19 March 2011

பனி இன்னும் பொழிகிறது



டேவிட் எலியட் (வட அமெரிக்கா)
DAVID ELLIOTT (வட அமெரிக்கா)

வெண் திரைச்சீலையில்
சிலந்தி ஏறும்
பனி இன்னும் பொழிகிறது



A spider climbs
the white curtain
snow still falling

 பூஜ்ஜியத்துக்கு கீழ்
ஆனால் இவ்வாரம் வெயில் அடிக்கிறது
என் சமைலறை மேஜையில் சரியாய்

Below zero
but this week the sun shines
right on the kitchen table

மார்கரிட்டா மோண்டரஸ் எங்க்ளே (வட அமெரிக்கா)
MARGARITA MONDRUS ENGLE (வட அமெரிக்கா)

 பழைய பழத்தோட்டம்
அஸ்தமன சூரியனுக்குள் ஏறும்
 ஒரு சிலந்தி

old orchard
a spider climbs onto
the setting sun

Read More

Wednesday, 16 March 2011

உலகக் கோப்பை இந்தியாவில் நடப்பதால் யாருக்கு அனுக்கூலம்?




2011 உலகக் கோப்பை கால் இறுதியை நெருங்கப் போகும் நிலையில் உள்ளூர் கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் ஊகங்களும் எதிர்பார்ப்புகளும் பொய்யாகி உள்ளன. சுவாரஸ்யமாக வெள்ளைகார நிபுணர்கள் ஊகித்தவை நிஜமாகி உள்ளன. அவர்கள் ஆசிய அணிகளை விட தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய ஆகிய அணிகளுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்றார். சார்பு மனப்பான்மையால் அப்படி சொல்லவில்லை. சில எளிய அபிப்பிராயங்கள் இந்த நிலைப்பாட்டுக்கு பின் உண்டு. முதலில் உள்ளூரில் ஆடும் போது கோடானுகோடி பார்வையாளர்களும் மீடியாவின் கழுகு சிறகடிப்புகளும் ஏற்படுத்தும் அழுத்தம் ஆசிய அணிகளை கொஞ்சம் முடமாக்கி விடும் என்பது. அடுத்து ஐரோப்பிய அணிகள் பலவும் அடிக்கடி ஆசியா வந்து கிரிக்கெட் ஆடி வருவதால் இங்குள்ள சூழலும் ஆடுதளமும் முற்றிலும் அந்நியமல்ல. மேலும் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற அணிகளின் வேகப்பந்தாளர்களாலும் முக்கியமான நேரங்களில் கொத்தாக விக்கெட்டுகளை அடைய முடியும். உலகக் கோப்பை காலிறுதியை நெருங்கி வரும் இவ்வேளையில் இத்தனை அவதானிப்புகளும் தேறி உள்ளன. ஒரு சிறிய அணியான வங்க தேசமே உள்ளூரில் ஆடிய போது மக்களின் எதிர்பார்ப்பால் திணறியது. கொஞ்சமே என்றாலும் பாகிஸ்தானுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் எதிரே இலங்கையும் நிலைகொள்ளாமல் தவித்தது. ஸ்டுவர்ட் புராட், பிரெட் லீ, டெய்ட் மற்றும் ஸ்டெயின் ஆகியோர் சுழலர்களுக்கு இணையாக விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணிகளை கவிழ்த்துள்ளன. இங்கிலாந்து தடுமாறி வருகிறதென்றாலும் தெ.ஆ அணி மெத்தன ஆடுதளங்களுக்கு ஏற்றபடி தகவமைத்து ஆடுகிறது. தங்களது மரபான ஆட்டமுறையை மாற்றி சுழலர்களை மையமாக்கி அவர்கள் பல ஆட்டங்களை இந்த தொடரில் வென்றுள்ளனர். உலகக்கோப்பையில் மூன்று முதல்நிலை சுழலர்களுடன் ஆடின ஒரே அணியும் தெ.ஆ தான். மற்ற எந்த அணியையும் விட  அவர்களின் சுழலர்கள் தாம் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர்.
ஆசிய அணிகளுக்கு உள்ளூர் சூழல் நன்றாக அத்துப்படி என்பது ஒரு பெரும் பலம் என்றனர் ஆசிய விமர்சகர்கள். இது இலங்கையை தவிர பிற அணிகளுக்கு பொருந்தவில்லை. குறிப்பாய் இந்தியாவில் ஆடுகளங்களை வாசிப்பது நாளிதழ்களில் ஊழல் கணக்குகளை படிப்பது போல. இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தோனியே தவறாய் ஆடுதள சுபாவத்தை ஊகித்துள்ளார். இரண்டு ஆட்டங்களிலும் இரண்டாவதாக எதிரணி மட்டையாடிய போது ஆடுதளம் பனி காரணமாக சுலபமாகியது. தெ.ஆவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆடுதளம் மிக மெத்தனமானது என்பதை புரியாமல் 350 உத்தேச இலக்கை நோக்கி எகிறிய இந்தியா வழுக்கி 296இல் வந்து நின்றது. இரண்டாவதாக ஆடிய அணி சூழ்நிலையை நன்றாக கணித்து ஆடியது. அடுத்து, சுழல் இத்தொடரில் ஒரு பெரும் பங்கை வகிக்கும் என்று கோரப்பட்டது, தொடர்ந்து கோரப்படுகிறது. இந்திய அணி இந்த அடிப்படையிலே தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் இந்திய ஆடுதளங்கள் சமீபமாக மாறி விட்டன என்பதை நம்ப நம் மீடியா தயாராக இல்லை. இந்த இறந்த கால மீள்விருப்பம் கிட்டத்தட்ட வேடிக்கையானது. இந்தியாவில் ஆடுதளங்கள் மெத்தனமாக இருக்குமே அன்றி பெருமளவில் சுழலுக்கு சாதகமாக ஆகப் போவதில்லை. கோடை முற்றி ஆடுதளங்கள் வறண்டு இளகினாலும் மிகச் சில ஆட்டங்களிலே பந்து பம்பரமாகும். அப்படியான ஆட்டங்கள் எந்த அணிகளுக்கிடையே எந்த மாதிரி முக்கிய கட்டத்தில் நடக்கிறது என்பதே சுவாரஸ்யம். நவ்ஜோத் சித்து சொன்னது போல் இந்தியாவில் சுழல் சாதக ஆடுதளங்களை அமைப்பது ஒன்றும் அசாத்தியம் இல்லை. ஆனால் அப்படி ஆடுதளத்தை கலப்படமாக்க இது ஒன்றும் உள்ளூர் ஐந்து போட்டி ஆட்டத்தொடர் அல்ல. ஓட்டங்கள் புரண்டொழுகும் திருவிழாவே உலகக்கோப்பை தொடர் ஒருங்கிணைப்பாளர்களின் கனவு. அதற்கேற்றபடியாக செயல்படவே ஆடுதள தயாரிப்பாளர்களும் முயல்வார்கள். இதுவரை தட்டை, மெத்தனமானவை, சற்றே சுழல்பவை, மாற்று ஸ்விங்கை தூண்டுபவை என ஒரு கலவையாகத் தான் ஆடுதளங்கள் அமைந்துள்ளன. ஒரே நிலையில் எந்த அணியும் தொடரில் ஆதிக்கம் செலுத்தாதற்கு இதுவும் காரணம்.
கடைசியாக, உள்ளூர் எதிர்பார்ப்புகளின் நெருக்கடி இந்தியாவை தாக்காது என்று நம்மூர் விமர்சகர்கள் சொன்னது நிஜமாகவில்லை. இந்தியா தொடர்ந்து உள்ளூரின் எதிர்பார்ப்பு அழுத்தத்தில் ஆடி ஆடி வைரமாகவே விளைந்திருப்பதாய் சொல்லப்படுவது உண்மையென்றாலும் கூட உலகக் கோப்பை நெருக்கடி தனித்துவமானது. இந்தியாவின் முதல் ஆட்டத்தில் ஸ்ரீசாந்த் பந்து வீசிய விதம் இந்த நாயக பிம்ப ஆட்டத்திற்கு முன்மாதிரியாக அமைந்தது. ஆட்டம் துவங்கும் முன்னாலே ஸ்ரீ ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்துவது என்று முடிவு செய்து விட்டார். விளைவாக அது அவரது கடைசி ஆட்டமாகியது. ஆனால் ஸ்ரீசாந்த் இல்லாவிட்டாலும் அவரது பாணியில் தான் அணியில் பலரும் ஆட முயல்கிறார்கள். அதாவது ஒரே ஆட்டத்தில் 11 பேரும் ஆட்டநாயகர்களாக முயல்வது. துணை பாத்திரங்கள் யாருக்கும் வேண்டாம். இந்திய அணி இந்த கோப்பையில் இறுதி கட்டம் வரை வர வேண்டியது அணியை விடவும், உலக கிரிக்கெட்டை விடவும் ஊடகங்களுக்கும் விளம்பரதாரர்களுக்கும் அதிமுக்கியமாக உள்ளன. இந்திய அணியின் துரதிர்ஷ்டம் இந்த திசைதிருப்பிகள் தாம். 11 பேருக்காக பதினாயிரம் பேர் யோசிக்கிறார்கள். அவர்கள் தோற்றாலும் வென்றாலும் சறுக்கினாலும் நிமிர்ந்தாலும் ஒரு காவியத்தனம் வந்து விடுகிறது. எஸ்.வி சேகர் நாடகம் பார்த்து விட்டு ஒருமுறை சுஜாதா வியந்தார். எசகுபிசகாய் என்ன வசனம் வந்தாலும் பார்வையாளர்கள் சாவி கொடுத்த பொம்மை மாதிரி சரியான நேரத்தில் மிகச் சரியாக சிரித்து விடுகிறார்கள் என்று. எஸ்.வி சேகர் பார்வையாளர்களை அசடுகளாக்குகிறாரா அல்லது பார்வையாளர்கள் அவரை ஏமாற்றுகிறார்களா என்பதே சுஜாதாவின் உள்ளார்ந்த குழப்பம். இந்திய கிரிக்கெட்டர்கள்-ஊடகங்கள்-பார்வையாளர்கள் என்ற உறவுநிலையில் அசட்டுத்தனம் எங்கிருந்து ஆரம்பமாகிறது? இந்தியா எனும் அவ்வப்போது நன்றாக ஆடும், அரிதாக மிக நன்றாக ஆடும் ஒரு சுமாரான அணி ஏன் ஆகச்சிறந்த அணி என்று அடம் பிடிக்கிறோம். யாரை யார் ஏமாற்றுகிறோம் என்று அறிவது தெரிந்து கொண்டே ஒரு அபத்த நாடகத்தை பார்த்து களிக்க பயன்படும்.
உலகக் கோப்பையை அதை நடத்திய நாடுகள் என்றுமே வென்றதில்லை என்ற வெள்ளை விமர்சகர்கள் சொன்னதில் நிச்சயம் ஒரு நியாயம் உள்ளது. ஆனால் இம்முறை உலகக் கோப்பையின் மவுசு மிகவும் குறைந்துள்ளது என்பதே உண்மை. உலகக்கோப்பை தொடரில் இருந்து சுவரில் அடிக்கப்பட்ட பந்தாக இந்தியா திரும்பினாலும் துக்கம் அனுஷ்டிக்க கூட யாருக்கும் அவகாசம் இருக்காது. உலகக்கோப்பையை விட பொழுதுப்போக்கு தன்மை கொண்ட வண்ணமயமான ஐ.பி.எல் உடனே வந்து விடும். ஐ.பி.எல் வெற்றிகரமாக முடிந்த உடன் அடுத்து எத்தனையோ ஆட்டத்தொடர்களும் பயணங்களும் நிகழப் போகின்றன. இருந்தும் 2011 உலகக் கோப்பைக்கு தகுதியை மீறின பரபரப்பு அளிக்கப்பட்டது கிரிக்கெட்டை உறிஞ்சி வாழ்பவர்களின் வணிக நன்மைக்காக மட்டுமே. இது தெரிந்தும் எஸ்.வி நாடகத்தின் பார்வையாளனை போல் இந்திய அணி தன்னை கோடி கரங்கள் கட்டுப்படுத்த அனுமதிப்பது பரிதாபகரமானது. அவர்களுக்கு வேறு வழியில்லை எனலாம்.

மேற்கத்திய நிபுணர்களின் மற்றொரு ஊகம் போலவே ஆஸி, தெ.ஆ போன்ற அணிகள் ஊடக சூட்டுக்கு தப்பித்து சமதளத்தில் தமக்கு தோதான வேகத்தில் ஆடி வருகின்றன. இந்த அணிகளில் தெ.ஆவின் தகவமைவும் சமநிலையும் சற்று பிரமிப்பூட்டியுள்ளன.  கடந்த முறை இந்தியாவில் ஒருநாள் தொடர் ஆடிய போது தென்னாப்பிரிக்கா மரபான முறையில் பந்து வீசி மிகுந்த குழப்பத்துடன் ஆடியது. சுழலர்களை அதிகம் பயன்படுத்தவும் தயங்கியது. இந்தியாவை போல் மிக தாமதமாக உலகக் கோப்பை ஆரம்பிப்பதற்கு சற்று முன்னர் நடந்த இந்தியாவுடனான ஒருநாள் தொடரில் தான் அவர்கள் புதிய வீரர்களை அறிமுகப்படுத்தி சோதித்து பார்த்தார்கள். அதில் தேறிய டூபிளெயிஸ், பீட்டர்ஸன், தாஹிர் போன்றோர் நேரடியாக உலகக் கோப்பையில் சோபித்துள்ளது ஒரு நேர்மறை சமாச்சாரம். டூமினி ஆப் சுழலர்களுக்கு எதிராக தொடர்ந்து எல்.பி.டபிள்யு ஆகி வெளியேறி வந்தார். உலகக் கோப்பைக்கு சற்று முன்னர் அவர் அந்த தொழில்நுட்ப குறையை சரிசெய்தார். அவர்களின் கீழ்மத்திய வரிசை மட்டையாட்டத்தை டூமினி இப்போது வலுவாக்குகிறார். அவர்களின் தலைவரான கிரேம் ஸ்மித் ஆட்ட சாதுர்யம் குறைவானவராக இருக்கலாம். ஆனால் அவரது தலைமையில் தான் தென்னாப்பிரிக்கா சற்று சுதந்திரத்துடன் மட்டையாடவும் ஆவேசமாக பந்து வீசவும் தொடங்கியது. தொடக்க நிலையில் எதிரணியின் விக்கெட்டுகளை கொத்தாக சாய்ப்பதும், சுழலர்களை கொண்டு மத்திய வரிசையை தாக்குவதும் தெ.ஆ மரபில் அந்நியமானவை. ஸ்மித் இம்மரபை புத்துருவாக்கி உள்ளார். இந்த உலகக் கோப்பையுடன் ஓய்வு பெறும் ஸ்மித் அதற்கு முன் தன் அணியை மற்றொரு தளத்துக்கு உயர்த்தி உள்ளார்.
இதுவரையிலான உலகக் கோப்பை ஆட்டங்களில் இரண்டு பொய்கள் அம்பலமாகி உள்ளன. இந்திய நிபுணர்கள் நம்ப வைத்தது போல் இந்த உலகக் கோப்பையில் வெற்றிக்கு சாதகமான எந்த ஒரு குறிப்பிட்ட அணியும் இல்லை. ஊடக சாதக அணிகள் மட்டும் இருக்கலாம். இந்த தொடரில் சூழல் என்னதான் ஆசியத்தனமாக இருந்தாலும் கிரிக்கெட் அடிப்படையில் ஒன்று தான். மேற்கத்தியர்களுக்கு ஆசிய கிரிக்கெட் மீது இருந்த புதிர்தன்மை வெகுவாக குறைந்து விட்டது. எதிர்பாரா தன்மை காரணமாக ஆடுதளம் மட்டும் தான் மர்ம பாத்திரமாக இருக்கப் போகிறது. இதனுடன் உள்ளுர் அணிகளின் நெருக்கடி, சமநிலை குலைவு, தடுமாற்றம், ஊடக மிகை சேர்ந்து கொள்ள இந்தியத்தன்மை கூடிய கிரிக்கெட் உருவாகிறது. பார்வையாளனை கிளர்ச்சியில் ஆழ்த்தும் திகில் போட்டிகள் நிகழ்கின்றன. பெரும்பாலான ஆட்டங்கள் இந்தியாவில் நடப்பதன் ஒரே அனுகூலம் பார்வையாளனுக்கு மட்டும் தான். இந்த தனித்துவமான மசாலா இம்மண்ணுக்கு மட்டுமே உரியது.
Read More

Monday, 14 March 2011

நீல நிற நாரை




லெஸ்லி எய்னெர் (வட அமெரிக்கா)
LESLEY EINER (வட அமெரிக்கா)

 புயலைத்
திடமாக்கும்
உறைந்த ஊசியிலை மரங்கள்

holding
the shape of the wind
the frozen pines



டேவிட் எலியட் (வட அமெரிக்கா)
DAVID ELLIOTT (வட அமெரிக்கா)

 ஒரு நீல நாரை
வடக்கு நோக்கி பறக்கும்
ஒரு நீண்ட நேர் சாலைக்கு மேல்

A blue heron
flying south
over the long straight road

 இத்தனை சீக்கிரம் இருட்டி விட்டது ...
கீழே ஓடையின் சிற்றலைகளில்
முழு நிலா

Dark so soon ...
down the creek in ripples
a full moon
Read More

Sunday, 13 March 2011

குளிர்கால மழை



மைக் டில்லன்
      MIKE DILLON  (வட அமெரிக்கா)
குளிர்கால மழை:
ஒரு காகம் உற்று நோக்க குனியும்
மின்கம்பியில் இருந்து

Winter rain:.
a crow peers down
from the power line


VIRGINIA EGERMEIER  (வட அமெரிக்கா)
வெர்ஜினியா எகெர்மெயர்

 வசந்தகால பனி உருகல்:
பழைய ஊசியிலை மரம் சாயும் இவ்வருடம்
மேலும் சற்று

Spring thaw:
the old pine leans a little
farther this year

BERNARD LIONEL EINBOND  (வட அமெரிக்கா)
பெர்டர்டு லியோனல் எயின்போண்டு

தவளைக் குளம் ...
உள்ளே ஒரு இலை விழும்
சத்தமின்றி

frog pond ...
a leaf falls in
without a sound

Read More

Wednesday, 9 March 2011

வேடிக்கையான அற்புதங்களும் உலகக் கோப்பையும்




ஆடுதளங்களை பொறுத்தமட்டில் இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் ஒரு ஒற்றுமை அங்கு சவுரவ் கங்குலி போன்றவர்கள் கூட அபாயகரமாய் பந்து வீச முடியும்; இங்கு ஐயர்லாந்தின் கெவின் ஓபிரெயின் போன்ற யாரும் பொருட்படுத்தாத ஒரு மட்டையாளர் கூட ஐம்பது சொச்சம் பந்துகளில் சதம் அடித்து ஆட்டம் வென்று தர முடியும். தமிழ் சினிமா பார்வையாளனை போல் நாம் மிகுந்த விருப்பத்துடன் இந்த அசாத்தியங்களை நம்ப தலைப்படுகிறோம். சுற்றுலா பயணிகளுக்கு சொல்லப்படுவது போல் இந்தியா கிரிக்கெட்டில் கூட விநோதமான அதிசயங்களின் நாடு தான்.
கடந்த பத்து வருடங்களில் உலகின் மூலைகளில் இருந்து இந்தியாவுக்கு எத்தனையோ இளம் மட்டையாளர்கள் பயணம் வந்து தங்களது ஒளிந்திருந்த அபார ஆற்றலை கண்டறிந்திருக்கிறார்கள். இந்திய தட்டை ஆடுதளங்களில் முடிவற்ற சதங்களின் ருசியை கண்டவர்களில் ஹெய்டன் மட்டுமே தொடர் நட்சத்திரமாக திகழ்ந்தார். மிச்ச பேர் இந்திய மண்ணில் மட்டுமே ஜொலித்து விட்டு விமானம் ஏறியதும் பகலுக்கு மின்மினிகள் திரும்பியது போல் ஆனார்கள். இதனாலேயே இந்திய மண்ணில் சாதித்த மட்டையாளர்களை உலகம் மூன்று தலை மனிதன் போல் நம்ப இயலாமல் படிநிலையில் எங்கு பொருத்துவது என்று புரியாமல் தவிக்கிறது. ஆஸ்திரேலியாவில் அல்லது தென்னாப்பிரிக்காவில் சிறப்பாக மட்டையாடுவதற்கு கிடைக்கும் கவனம் வேறு வகை. அங்கு சதம் அடிக்கும் ஒரு மட்டையாளன் தன்னை தரமான வீரனாக உறுதியாக நிறுவிக் கொள்கிறான். அத்தனை சவால்களை அங்கு அவன் கடந்து மேலோங்கின பின்னரே சதம் அடிக்க முடியும். ஆனால் இந்தியாவில் சற்று இறுக்கமான தொழில்நுட்பமும் நிறைய பொறுமையும் கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருந்தால் டெஸ்டு போட்டி ஒன்றின் முதல் இரு நாட்களில் சதமடிப்பது எளிது. கடைசி நாளில் ஆடுதளம் தாறுமாறாக சுழலும் போது முதல் நாள் சதமடித்தவர் கோமாளியாக தோன்றுவார். ஒரே போட்டியில் ஒருவர் இருவேறாக தெரிவர்.
இந்தியாவின் சில லட்சிய ஆடுதளங்களில் பத்து நாட்கள் கூட ஆடி பத்து சதங்கள் அடிக்க முடியும். ஆடுதளங்கள் இவ்வளவு தட்டையாக மாறினதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் செய்த சோதனை முயற்சிகள் காரணமாக சொல்லப்படுகின்றன. கடந்த பத்து வருடங்களில் இந்தியா முழுக்க உள்ள முக்கியமான மைதானங்களின் ஆடுதளங்கள் புதிதாக மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. நோக்கம் நமது ஆடுதளத்தை வேகவீச்சுக்கு தோதாக மாற்றி உள்ளூர் வேகவீச்சாளர்களை ஊக்குவிப்பதாக இருந்தாலும் விளைவு நேர்மாறானது. கடந்த ஐந்து வருடங்களில் இந்தியாவின் கவனத்திற்குரிய இளம் வேக வீச்சாளர்கள் தொடர்ந்து காயங்களுக்கு வீழ்ந்ததும் நமக்கு மாற்று வீரர்கள் தேடினாலும் கிடைக்காத படிக்கு வேக பந்து வீச்சின் தரம் உள்ளூர் அளவில் வீழ்ந்தது. சஹீரும் நெராவும் காயமடையக் கூடாது என்ற வேண்டுகோளுடன் இந்திய கிரிக்கெட் கடந்த மூன்று வருடங்களாக நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஆடுதள மாற்றம் உள்ளூர் சுழல் பந்து வீச்சையும் சிறகொடித்து விட்டது. ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் நீடித்து மட்டையாடி லீட் பெறுவதன் மூலம் மட்டுமே ஒரு அணி வெல்லும் படியான விதிமுறை உள்ளது. அதனால் இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் பந்து வீச்சும் களத்தடுப்பும் மிகச் சின்ன ஆயுதங்கள் மட்டுமே. ராஜஸ்தான் போன்ற வலுவற்ற அணிகள் பக்கத்து மாநில மட்டையாளர்களை ஒப்பந்த அடிப்படையில் தம் அணிக்கு ஆட அழைத்தனர். பெரும்பாலும் வலுவான அணிகளின் ஓய்வு பெறும் நிலையிலுள்ள மட்டையாளர்கள் இதனை பயன்படுத்திக் கொண்டனர். தமிழ்நாட்டில் உபரியான ஸ்ரீராம், மகாராஷ்டிராவில் இருந்து கனிட்கர், தில்லியில் இருந்து சோப்ரா ஆகியோர் இவ்வாறு பந்தி மாறினார்கள். இந்த அளவுக்கு வேறப்போதுமே மட்டையாளர்களுக்கு மவுசு இருந்திருக்காது. யாருமே பந்து வீச்சாளர்களை இறக்குமதி செய்ய மெனக்கெட இல்லை. இந்த விசித்திர மனநிலையில் உச்சகட்டமாக கனிட்கர் ராஜஸ்தான அணியின் தலைவராகி இவ்வருட ரஞ்சி தொடரையே வென்றார். ஆனால் இந்த ஆரோக்கியமற்ற மாற்றம் உலகளவில் சிறிது சிறிதாக பரவி வந்தது. குறிப்பாக வார்னெ, மெக்ராத், முரளி போன்ற அதிதிறமையாளர்கள் அஸ்தமித்த பின்னர் உலகம் ஒரே அடியாக தட்டையாகி போனது. கிரிக்கெட்டை பந்து வீச்சாளர்களின் நிழல்களை அநாயசமாக கொய்தபடி மட்டையாளர்கள் செழித்தார்கள். சமீபமாக கிரிக்கெட் ஒரு மாபெரும் பொழுதுபோக்கு வணிகமாக வளர்ந்ததும் அதன் சமநிலையின்மை ஒரு பொருட்டாக யாருக்கும் தோன்றவில்லை. தோனியின் கீழ் ஏகப்பட்ட வெற்றிகளை அடைந்த அணி மிக பலவீனமான பந்து வீச்சை கொண்டதாகவே இருந்திருக்கிறது. இந்திய அணி சமநிலையின்மையை ஒரு வலிமையாகவே மாற்றி எடுத்தது.  இந்திய அணியின் சமகால வெற்றி வரலாறு ஐரோப்பிய அணிகளையே தம் மரபை மீற வைத்தது. ஐந்து பந்து வீச்சாளர்களுடன் களமிளங்க விரும்பும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற அணிகளே இன்று XI இல் ஏழு மட்டையாளர்களை தேர்கிறது. இந்திய ஆடுதள மற்றும் மட்டையாட்ட வைரஸ் இன்று உலகம் முழுக்க பரவி இருக்கிறது. இதில் ஐ.பி.எல்லின் பங்கு நாம் அறிந்ததே. வணிகமயமாக்கம் ஏற்படுத்தும் அழுத்தமும் நெருக்கடியும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தொடங்கி ஆடுதள அமைப்பாளர்கள் வரை கீச்சு குரலில் டப்பிங் செய்ய வைத்துள்ளது. நாட்கணக்கில் பொழுதை போக்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு ஆட்டத்தை நவீன வணிகமும் மீடியாவும் கிளர்ச்சியான சில நிமிட காட்சிகளாக சுருக்கி விட்டன. சமகால கிரிக்கெட்டின் சீக்கை மறைத்து அலங்கரித்து மேளதாளத்தோடு விமரிசையாக ஊர்வலமாக கொண்டு செல்லவே இவை விரும்புகின்றன. துரதிஷ்டவசமாக சுடுகாட்டுக்கான பூக்கள் தூவப்பட்ட பாதை இந்தியாவில் இருந்தே ஆரம்பிக்கிறது.
2011 உலகக் கோப்பை இந்தியாவில் நடப்பதால் தானோ ஏனோ சர்ரியலான ஆரம்ப காட்சிகள் அரங்கேற தொடங்கி விட்டன. மார்ச் ரெண்டாம் தேதி நடந்த இங்கிலாந்து ஐயர்லாந்து ஆட்டம் மேற்சொன்ன நோய்மையின் பல்வேறு அறிகுறிகளில் ஒன்று. இந்த ஆட்டம் மீடியாவில் ஒரு அற்புதமாக மிகைப்படுத்தப்பட்டது. ஒரு செவ்வியல் ஆட்டமாக வகைபடுத்தப்பட்டது. 327 ஓட்டங்களை ஐயர்லாந்து மட்டையாடி அடைந்தது ஒரு அற்புதம் அல்ல. இங்கிலாந்தும் ஐயர்லாந்தும் ஒரே போன்று தான் சிறப்பாக மட்டையாடியது. மிகச் சின்ன வித்தியாசம் ஐந்து பந்துகள குறைவாக ஐயர்லாந்து எடுத்துக் கொண்டது. பந்து வீச்சு, களத்தடுப்பு என அனைத்து துறைகளிலும் ஒரு அணி மேலோங்கும் போதே எதிரணியை அது முழுமையாக தோற்கடிக்கிறது. இதையே தென்னாப்பிரிக்காவோ ஆஸ்திரேலியாவோ செய்தாலும் கூட அது வெற்றி ஆகாது. இந்திய சமூக வாழ்க்கையில் ரேஷன் கடை வரிசை, வேலை வாய்ப்பு, அரசியல் வெற்றி என எத்தனையோ போட்டிகளில் எதிர்பாராமல் ஒருவர் நொடிப் பொழுதில் முன்னே வருவது போல, நடந்து வரும் இந்தியத் தனமான உலகக் கோப்பையில் அணிகள் ஆட்டமரபை வளைத்து ஆட அவசியமில்லை. வளையங்களுக்குள் தம்மை வளைத்து ஆட கற்று வருகின்றன.
ஆனாலும் நமது நாட்டின் பிரத்யேக பண்பான குழப்பம் அணிகளை பீடித்து உள்ளன. ஆஸ்திரேலியா மிக துணிச்சலாக வேக வீச்சாளர்களை நம்பி உள்ளது. தென்னாப்பிரிக்கா தங்களது வரலாற்றில் என்றும் அல்லாது மே.இ தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் மூன்று சுழலர்களுடன் வெற்றிகரமாக ஆடியது. இந்தியாவும் இலங்கையும் மூன்று சுழலர்களை களமிறக்க தயங்குகின்றன. எந்த அணியுமே முதல் பதினைந்து ஓவர்களில் தாக்கவா பதுங்கவா என்பதில் தீர்மானமற்றே உள்ளது. வலிமையான பந்து வீச்சை கொண்ட தென்னாப்பிரிக்காவும், இலங்கையும் பாகிஸ்தானும் கூட. இடைநிலை ஓவர்களின் போது மட்டுமே சில ஆட்டங்களில் விக்கெட்டுகள் கொத்தாய் எடுக்கின்றன. அது கூட நிகழாத போது அணித் தலைவர்கள் வறட்டுத் தனமாய் புன்னகைத்து விதியை எள்ளி நோகின்றனர். தொண்ணூறுகளின் போது இந்திய ஆடுதளங்களில் ஆடுவதற்கு ஒரு வெற்றி சூத்திரம் இருந்தது. முதலில் மட்டையாடி 280க்கு மே; எடுக்க வேண்டியது. பின்னர் மூன்று சுழலர்களை கொண்டு தாக்கி வென்று விடலாம். ஆனால் சமீபமாக இங்கு வந்த ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, நியுசிலாந்து போன்ற அணிகள் சந்தித்த உண்மை வேறு. ஒவ்வொரு ஆட்டத்திலும் அணிகள் ஒன்றை விட மற்றொன்று மேலும் சிறப்பாக மட்டையாடிக் கொண்டே போகலாம். இதில் மாற்றமில்லை. கடைசியாக யார் மிக நன்றாக மட்டையாடினார்களோ அவர்களுக்கே கோப்பை. மார்ச் ஆறு அன்று தெ.ஆ மற்றும் இங்கிலாந்து இடையே சென்னையில் நடந்த ஆட்டத்தில் போல அரிதாக மோசமான மெத்தன ஆடுதளங்களிலும் ஆட நேரலாம். அப்போது ஒரு மோசமான சாப்பாட்டை உண்ட உணர்வே இரு அணிகளுக்கும் ஏற்படுகிறது. தாம் ஏன் ஜெயித்தோம் அல்லது தோற்றோம் என்பதை இரு அணிகளும் அப்போது பரிசீலித்தால் ஒரே விடையே கிடைக்கிறது. வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே ஒரு பூனை போல் அமர்ந்திருக்கும் துரதிர்ஷ்டம் அணிகளுக்கு நேர்கிறது.

இதுவரையிலான ஆட்டங்களில் முயலும் ஆமையும் ஓடிக் கொண்டே இருந்தால் எப்படியும் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று புரிந்து கொண்டன. மற்றபடி மரபான ஓட்டபந்தய படிப்பினைகள் மண்மூடி போயின. அடுத்து வரும் ஆட்டங்களிலும் அற்புதங்கள் ஒன்றை ஒன்று முழுங்கக் கூடும். உலகக் கோப்பை இந்திய மண்ணை விட்டு விடை பெறும் போது கிரிக்கெட் மீண்டும் சாதாரணமானதாக மாறி விடும்!
Read More

Tuesday, 8 March 2011

“வேழாம்பல் குறிப்புகள்”: காலம் பிணைத்த கரங்கள்

 
சுகுமாரனின் “வேழாம்பல் குறிப்புகள் எனும் இணைய பத்திகளின் தொகுப்பு நீங்கள் எங்கிருந்து படிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அதற்கு ஏற்றாற் போல் திறந்து கொள்வது. இது பொதுவாக கவிதைத் தொகுப்புகளின் பண்பு என்று சொல்லத் தேவை இல்லை. சுகுமாரன் அடிப்படையில் ஒரு கவிஞர் என்பதும் குறிப்பிடத் தேவையில்லை. பத்திகளின் மையம் கேரளா. ஆனால் மனித குணங்களும் பிரச்சனைகளும் எழுத்தில் ஒன்று தான் என்பதால் மாநில மையமற்றவைகளாக இப்பதிவுகள் மாறுகின்றன. புத்தகத்தில் அவர் நிறைய அரசியல், சமூகம், சமகால நடப்புகள், ஓரளவு கலை இலக்கியம் என்று பகிர்ந்து கொண்டாலும் இப்பதிவுகள் இலக்கை நோக்கி நடந்து சென்று முடிபவை அல்ல. எதைப் பேசினாலும் அதன் கலாச்சாரத்தை உற்று நோக்குவதன் மூலம் தனது பத்தி எழுத்துக்கு அவரால் கலைத்தன்மையை, அபார கூர்மையை ஏற்படுத்த முடிகிறது. எழுத்தின் பண்பு காணாதவற்றை கண்டு வியப்பது தான். சுகுமாரன் தனது சமகால அரசியலின், சமூக அமைப்புகளின், நிறுவனங்களின் அபத்த செயல்பாடுகளை கடிந்து கொள்ளுவதில்லை, வியக்கிறார்; குற்றங்களை, அநீதிகளை, அற்பத்தனங்களை கண்டு கொந்தளிப்பதோ, தீர்ப்பு மொழிவதோ இல்லை, கண்ணீரின் உப்புடன் புன்னகைக்கிறார்.

ஸ்டைல் என்பதை சினிமாக்காரர்கள் கபளிகரம் செய்து கொண்டாலும் அதன் அசலான பண்பை வெளிப்படுத்தியவர்கள் சு.ராவும் அவரைத் தொடர்ந்து சுகுமாரனும் தான். சுகுமாரனின் வாசகன் ஒவ்வொரு சொல்லின் அமைப்பிலும் அந்த நடை வசீகரத்தை எதிர்பார்த்து கண்டு புளகாங்கிதம் அடைய முடியும். இவ்வகை ஸ்டைல் என்பது மண்ணில் கால் பதியாமல் இருப்பது, ஆனாலும் பறக்காமல் இருப்பது, ஆனாலும் நடக்காமல் இருப்பது. இணைய பரப்பில் சமீபமாய் எழுதப்பட்டு வரும் சமூக அரசியல் பத்திகளில் இருந்து சுகுமாரனின் எழுத்தை தனித்து தாடி மீசை வரைந்து வைப்பது இதுதான். ஒரு உதாரணம், கிளிநொச்சியும் முள்ளிவாய்க்காலும் நிழலாடுகிறது. கேரள மண்ணின் கட்டபொம்மனான பழசிராஜாவின் வீரவரலாறை குறிப்பிடும் சுகுமாரன் வெள்ளையர் படை வஞ்சகம் மூலம் அவனை தோற்கடித்து கொன்ற கதையை பேசுகிறார். தொடர்ந்து ஈழப்போர் நரம்பொன்றை தீண்டுகிறார். ஈழப் போர் பற்றின ரத்தம் கொப்புளிக்கும் பல்லாயிரம் பக்கங்கள் இணையத்தில் அச்சில் படித்திருக்கிறோம்; ஆனால் இப்பதிவில் முடிவாக எழுதப்படும் “பழசியை பற்றி இவ்வளவு விரிவாக யோசிக்க எனக்கு வேறு காரணமும் இருக்கிறது. அதில் கிளிநொச்சியும் முள்ளிவாய்க்காலும் நிழலாடுகிறது வரிகளைப் போல் வேறதுவும் நம் ஆன்மாவை துரத்தப் போவதில்லை. ஏனெனில் இந்நூற்றாண்டில் பெருந்துயரங்களுக்கு வெகுஅருகாமையிலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; சுட்டி சொல்ல ஒரு சிறு கீற்று போதும். உயிர்மை உள்ளிட்ட பத்திரிகைகளில் சுகுமாரன் எழுதி வந்த பத்திகளில் இருந்து நுட்பமான வகையில் இந்த வேழாம்பல் பத்திகள் வேறுபடுகின்றன. வித்தியாசமான சுவாரஸ்யமான விசயங்களை அதிகம் சொல்ல முனைகிறார். நமக்கு அதிக பரிச்சயமிருக்காது என்ற அக்கறையில் கேரள அரசியலை அதன் பின்னணி சகிதம் விளக்கிய பின்னரே குறிப்பிட்டு நகையாடி விமர்சிக்கிறார். குறைவான கருத்துக்களை தெளிவாக சுருக்கமாக கூர்மையாக பேசுவதே இணைய பத்தி கலாச்சாரம் என்பதை ஏற்றுக் கொண்டே எழுதுகிறார். இணையத்தில் அதிகம் எழுதும் வாசிக்கப்படும் எஸ்.ரா, சாரு, ஜெ.மோ ஆகியோருடன் சுகுமாரனின் இப்பத்திகளை ஒப்பிட்டு பார்த்தால் இது மேலும் விளங்கும். சாரு இலக்கிய இணைய பத்தி எழுத்தை (அப்படி ஒரு வகையறா உண்டு) மாற்றினார். ஜெ.மோ ஒருநாள் தடாலடியாக மாறினார். எஸ்.ரா மாறவே இல்லை. சுகுமாரனுக்கு இதெல்லாம் அவசியமில்லை. ஏற்கனவே நன்றாக இசைத்து பார்த்து சுருதி பிடித்து விட்டே இணையத்துள் வந்துள்ளார். அடர்த்தியான கருத்துக்களை கவித்துவமாக எழுதும், வாழ்வின் கவித்துவமான அனுபவங்களை நாடகீயமாக சொன்ன சுகுமாரன் இங்கில்லை. இங்குள்ளது சற்றே லேசான கையடக்க வெர்ஷன். 2.0. சுகுமாரனுக்கு வெகு இயல்பாக வரும் அங்கதமும் ஆழமான அவதானிப்புகளும் இணைய பத்தி வடிவை வெகுவாக மேம்படுத்துவதை இங்கு சொல்லியாக வேண்டும். மிக கொஞ்சமான ஒன்றை மிக மிக கொஞ்சமாக சுவாரஸ்யமாக சொல்லி அதை உயர் இலக்கியமாக்கும் வித்தையை கற்றுத் தருகிறார். இந்த மூன்றாவது நிலையை அதிகம் இணையத்தில் காண முடிவதில்லை. அதாவது இணையத்தில் எழுதுவது சிலுவையில் மரிப்பது போல். இணையத்தின் முள் மட்டும் இரட்டிப்பு வேகத்தில் ஓடுவதால் வாசிப்பவர்கள் அதற்கு முன் பெரும் பாய்ச்சல் பாய்வதால் இணையக் கட்டுரைகள் செத்து தான் ஆகவேண்டும். இவற்றை புத்தகமாக்கி ஐஸ்பெட்டியில் வைப்பது கூட காப்பாற்றாது. நாம் எல்லாம் இடம் வலமாக மரிக்கிறோம். சொர்க்கமோ நரகமோ கிட்டுகிறது. சுகுமாரன் தனது வேழாம்பல் குறிப்புகளில் சிலவற்றையாவது, தனது முன்னுரையில் விரும்பியிருப்பது போல், சாஸ்வதமாக்குகிறார். அவர் சிலுவையின் மையமாக மரிக்கும் மார்க்கத்தை கையாண்டிருக்கிறார். மீண்டு வருகிறார்.
தஸ்கரன் மணியன் பிள்ளையுடே ஆத்மகதாஎன்ற திருடர் ஒருவரின் சுயசரிதை கேரளாவில் ரொம்ப பிரபலமானது. மணியன் பிள்ளை சொல்ல சொல்ல இந்துகோபன் என்ற இலக்கிய எழுத்தாளர் அதை பத்திரிகை தொடராக்கினார். இத்தொடர் பிரபலமாக போலீசார் தாமதமாக பலவருடங்கள் பழமையான குற்றங்களுக்கு அவர் மேல் வழக்கு வேறு தொடுத்தது. இந்த நூல் பற்றி முன்னர் இந்தியன் எக்ஸ்பிரசில் கட்டுரை வந்தது. அதில் எத்தனையோ சுவாரஸ்யமான அதிர்ச்சியான செய்திகளை வெளிப்படுத்தினார்கள். உதாரணமாக கேரளாவில் கொள்ளையடித்து விட்டு மணியம் பிள்ளை வேறுபெயரில் தமிழகம் வந்து சென்னையில் நிலைகொண்டிருக்கிறார். பின்னர் அதிமுகவில் உறுப்பினராக கட்சித் தொண்டு செய்திருக்கிறார். காலத்துக்கு நகைச்சுவை உணர்வு சற்று குறைவென்பதால் அவர் எம்.எல்லே எல்லாம் ஆகவில்லை. சுகுமாரன் இந்நூலை பற்றி ஒரு பத்தி எழுதுகிறார். அதில் இந்த தமிழக அவதார விவகாரம் பற்றி சொல்லவில்லை தான். அதை விட சூடானவை. ஒரு கற்பழிப்பு, ஒரு விபச்சார முயற்சி. ஒரு இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையில் குற்றமோ கிளுகிளுப்போ ஆகவேண்டியவற்றை மனித மனத்தை அறிய முயலும் இலக்கிய கட்டுரை ஆக்குகிறார். மணியன் பிள்ளை ஒரு இரவில் ஒரு வீட்டு மாடியில் கொள்ளையடிக்க நுழைகிறான். அங்கு ஒரு அறையில் வெளிச்சம் தெரிகிறது. ஒரு பெண் அரைநிர்வாணமாய் தூங்குகிறாள். அவளை கத்தி காட்டி மிரட்டி வன்புணர்ந்து விட்டு கொள்ளையடித்து செல்கிறான். பின்னர் அவன் ஒரு லாட்ஜ் அறை ஒன்றில் தங்கி இருக்கையில் ஒரு கிராக்கி வருகிறாள். அவளது கணவன் மரண படுக்கையில் இருக்கிறான். மருந்துக்கு பணம் வேண்டும் என்று கேட்கிறாள். அவளுடன் இருக்கையில் நான் எத்தனாவது ஆள் என்று கேட்கிறான். பதினோராவது. அவனுக்கு தன் மீதே வெறுப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். அவளை தொடாமல் பணம் மட்டும் தந்து திருப்பி அனுப்புகிறான். பிறகு ரகசியமாய் பின் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் விசாரித்து அவள் கூறியது பொய்யல்ல என்று அறிகிறான். தாமதமாக மருந்து வாங்கி வரும் அவளை செவிலி திட்டுவதை எட்ட நின்று பார்க்கிறான் “அந்த ஆள் எவ்வளவு நேரமாய் வலியில் துடிக்கிறார். எங்கே போனே?. மணியம் பிள்ளைக்கு அப்பெண்ணின் பால் கருணை ஏற்படுகிறது. அவளுக்கு உதவுவதற்காக ஆயிரத்து ஐநூறு ரூபாய் கொள்ளை அடிக்கிறான். அதைக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு செல்கிறான். அன்று மருந்து வாங்க விபச்சாரத்துக்கு புறப்பட்ட அவள் இரவு பதினொரு மணிக்கு தாமதமாக திரும்பியிருக்கிறாள். தாமதம் காரணமாக அவளது கணவன் இறந்து விடுகிறான். திருடன் வியக்கிறான் “இந்த பொன்னுக்கும் பணத்துக்கும் என்ன அர்த்தம்?. இருபதாம் நூற்றாண்டு நாவல்களில் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்ட கேள்வி இது; பேசப்பட்ட தருணம் இது. கற்பழிக்கப்பட்ட பெண்ணும், காப்பாற்றப்பட வேண்டிய பெண்ணும் அனுபவித்த துயரத்துக்கு திருடனா பொறுப்பு? குற்றம் செய்யப்படுவதில்லை; செய்விக்கப்படுகிறது; அதே போன்று அறத்தால் தூண்டப்பட்டு ஒருவன் இயங்கும் போதும் அவனது கரங்கள் மர்மக் கயிறு ஒன்றால் கட்டப்பட்டே உள்ளன. அறத்துக்கும் மனிதாபிமானத்துக்கும் பொருள் காண முடியாமல் பலசமயம் போவதே தீமையை நேரிடுவதை விட பெருந்துயரம். இதைப் படித்து “எனக்கு அழத் தோன்றியது என்கிறார் சுகுமாரன். திருடனின் மனிதாபிமானத்தை கண்டு முற்போக்கு எழுத்தாளரை போல் அவர் தேம்பி அழவில்லை என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும். மனிதாபிமானத்துக்கு கரிப்பின் சுவை வந்து விடும் அர்த்தமற்ற சந்தர்ப்பமொன்றையே சுகுமாரனின் இலக்கிய மனம் கவனிக்கிறது. குற்றம் செய்யவும் பாவமன்னிப்பு கோரவும் மனிதனுக்கு அதிகாரம் உள்ளதா, அவனது கரங்களை காலம் ஏன் பிணைக்கிறது என்பதே அவர் இங்கு குறிப்புணர்த்தும் கேள்விகள். இப்புத்தகத்தில் உள்ள சிறந்த கட்டுரைகளின் அடிநாதமும் இதுவே.
பிடுங்கப்படாத ஆழத்தில் குற்றவுணர்வின் முள் கட்டுரை தீமை அநாயசமாக கடந்து நம்மால் தடுக்க முடியாத தூரத்துக்கு தாவி சென்று விடுவதை சொல்லுகிறது. மணியம் பிள்ளையின் இடத்துக்கு சுகுமாரன் சென்று விடுகிறார். திருவனந்தபுரம் பத்மநாப ஸ்வாமி கோவிலை ஒட்டிய குளத்தின் கரையில் ஒரு பைத்தியக்காரர் நெடுநேரமாய் உலவிக் கொண்டிருக்கிறார். கவலை கொண்ட கோவில் ஊழியர் ஒருவர் அவரை விரட்டப் பார்க்கிறார். மனநலம் பிறழ்ந்தவர் நடுக்குளத்துக்கு செல்கிறார். மனநலம் மிக்கவர் அவரை தொடர்ந்து சென்று இழுக்க பார்க்கிறார். முடிவில் சற்றும் எதிர்பாராத படியாக பைத்தியக்காரர் ஊழியரை குளத்தில் மூழ்கடித்து கொன்று விடுகிறார். இத்தனையும் நடக்கும் போது ஒரு கூட்டம் வேடிக்கை பார்க்கிறது. சுகுமாரனையும் சேர்த்து ஊடகவாதிகள் வளைந்து வளைந்து படமெடுக்கிறார்கள். சுடுசெய்தியை உடனடியாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பவர்களுக்கு ஏனோ அந்த கொலையை தடுக்க தோன்றவில்லை. நிகழ்வாழ்வின் அவசரமும் நியதிகளும் தார்மீக பொறுப்பை அர்த்தமற்றதாக்கிறது. சுகுமாரனுக்கு தாம் ஏன் ஒரு உயிரை காப்பாற்ற முனையவில்லை என்ற அறம் சார்ந்த குற்றவுணர்வு இருந்து கொண்டே இருக்கிறது. விளைவாக கடவுளின் எண் என்றொரு கவிதை எழுதுகிறார். அதையும் இத்தொகுப்பில் தந்திருக்கிறார். ஆனால் பொறுப்பின்மை மட்டுமல்ல தார்மீக பொறுப்பும் வாழ்வுக்கு அபத்தம் கூட்டுகிறது. பைத்தியக்கார கொலையாளிக்கு பின்னர் குணமாகி விடுகிறது. சகஜ வாழ்வுக்கு திரும்பும் அவர் ஒரு சின்ன வியாபாரம் செய்து பிழைக்கிறார். முக்கியமாக அவர் வருடா வருடம் இறந்தவருக்கு திவசம் செய்கிறார். அந்த மரணத்துக்கு நிஜத்தில் யார் பொறுப்பு? பொறுப்பு என்பதன் பொருள் தான் என்ன? அவரை மூழ்கடித்த கரம் காலத்தினுடையது அல்லவா!

தமிழக அரசியல் பற்றி தமிழில் படித்து தலை புண்ணானவர்களுக்கு மலையாள அரசியல் பற்றின இந்த தமிழ் கட்டுரைகளில் ஆறுதல் உண்டு. சுகுமாரன் கம்யூனிஸ கொள்கை ஆதரவாளராக இருந்தாலும் அவர் கேரள இடதுசாரி அரசின் அனுதாபி அல்ல. அவருக்கு வி.எஸ் அச்சுதானந்தன் மீது பிரியம் இருந்தாலும் அவரது தவறுகள் மீது சின்ன கோபங்கள் ஏற்பட்டாலும் போற்றவோ தூற்றவோ இல்லை. வி.எஸ்ஸின் அரசியல் எதிரியான பிணராயி விஜயனுக்கும் அவருக்கும் சுகுமாரனின் தராசில் அதனதன் போக்கிலே ஏற்ற இறக்கங்கள். நாஸ்திகராக உள்ள போதும் அவர் கடவுளைப் பார்த்து பரிதாபமே படுகிறார். கேரள அரசியலில் உள்ள ஊழலும் மெத்தனமும் படுகொலைகளும் பண்பாட்டில் சனாதனவாதமும் சுகுமாரனால் எட்டி நின்று தெளிவாக கவனிக்கப்படுகின்றன. கட்சி கொள்கைகளையும், மதம் கடவுளையும் அதிகாரத்துக்காக கைவிடுவதே நம் காலத்தின் தவிர்க்க இயலாத நியதி என்பது அவரது பார்வை. மிகுந்த சமநிலையுடன் தமிழில் எழுதப்பட்ட அரசியல் கட்டுரைகள் சுகுமாரனுடையனவாகத் தான் இருக்கும்.

நமக்கு ஒரு ஆறுதல் செய்தி: கேரளாவில் அரசு நிலத்தை கையகப்படுத்தியவர்களுக்கு எதிராக வி.எஸ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்கிறார். விநோதம் என்னவென்றால் அரசு நிலத்தை பெரிதளவு ஆக்கிரமித்து கம்யூனிஸ்டு கட்சியினரே அலுவலகம் கட்டியிருக்கிறார்கள். இதனால் வி.எஸ்ஸுக்கு கட்சிக்கு உள்ளிருந்தே பெரும் எதிர்ப்பு வருகிறது. தொடர்ந்து மாத்ருபூமியும் இடதுசாரி நாளிதழான தேசாபிமானியும் மோதிக் கொண்டதில் பைகளில் இருந்து மேலும் பல பூனைகள் குதிக்கின்றன. கலைஞரின் “இளைஞனை தயாரித்த லாட்டரி முதலாளி மார்டின் சட்டத்திடம் இருந்து புகலிடம் பெற அங்கேயும் அரசியல் பங்குகளை வாங்கி போட்டிருக்கிறார். அவர் தேசாபிமானிக்கு பல கோடிகளை வழங்கி உள்ளதை மாத்ருபூமி வெளிப்படுத்துகிறது. இந்த சச்சரவில் மலையாளத்தின் சிறந்த எழுத்தாளர்கள் பத்து பேர், சுகுமாரன் மிகவும் மதிக்கும் பட்டியலில் உள்ளவர்கள், அரசுக்கு ஆதரவாக பேசி கையெழுத்திட்டு ஒரு அறிக்கை வெளியிடுகிறார்கள். ஏன்? இவர்கள் அனைவரும் அரசின் ஆதரவு பெற்றிருக்கும் இலக்கிய கலாச்சார அமைப்புகளில் ஆதாயம் வரக்கூடிய அந்தஸ்தில் இருப்பவர்கள். மற்றொரு இடத்தில் கவிஞர் பாலசந்திரன் சுள்ளிக்காடின் காவி நிறத்தை பார்த்து சுகுமாரன் திகைக்கிறார். சுள்ளிக்காடு இருண்ட பக்கங்களின் எழுத்தாளர். விளிம்பு நிலை வாழ்க்கை வாழ்ந்தவர். பௌத்தத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஆனால் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் கண்ணிமைக்கும் முன் அவர் இடதுசாரி பட்டியலில் இருந்து வலது பக்கம் தாவி விடுகிறார். ராஜா ரவிவர்மா விருது ஓவியர் எம்.எப் ஹுசேனுக்கு வழங்குவதாக தீர்மானமாகிறது. இதற்கு கேரள சனாதனவாதிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அவர்கள் பக்கம் இருந்து ஒரு பரிச்சயமான முகம் எழுந்து வருகிறது. கவிஞர் சுள்ளிக்காடு. “இந்துமத கடவுள்களை நிர்வாணமாய் ஓவியம் தீட்டிய ஹுசேனுக்கு விருது வழங்கக் கூடாது என்று சாடுகிறார். இது நம்ம சுள்ளிக்காடா என்று சுகுமாரன் நம்ப முடியாமல் கண் சிமிட்டுகிறார். அப்பாடா! தமிழிலும் மலையாளத்திலும் எழுத்தாளர்களின் ரத்தத்துக்கு ஒரே நிறம்.
Read More

Saturday, 5 March 2011

ராஜியின் அப்பா




ராஜி மூன்று முறை தும்மினாள். ஒவ்வொரு முறையும் அவள் கண்கள் சற்று வெளிப்பிதுங்கி பளபளத்தன. முதல் முறை தும்மும் போது “அப்பா நினைக்கிறார் என்றாள். இரண்டாம் முறை “அம்மா நினைக்கிறாள் என்றாள். மூன்றாம் முறை புன்னகை அரும்ப “அப்பா என்றாள். நான் அடுத்து நான்கு முறை தும்மினேன். நான்கு முறையும் “அம்மா நினைக்கிறாள் என்றேன். ராஜி தன் கையிலிருந்த புத்தகத்தால் என் உச்சந்தலையில் பட்டென்று அடித்தாள்.

முன்வழுக்கை பளபளக்க தொந்தி அதிர ராஜியின் அப்பா வேகமாய் ஓடி வந்து கொண்டிருக்கிறார். திடீரென்று வாழைப்பழத் தோல் வழுக்கி சப்பென்று மல்லாந்து விழுகிறார். விழுந்தவர் சாலையோடு அழுந்த பதிந்து போய் மற்றொரு வாழைப்பழத் தோல் போல் அசையாமல் கிடக்கிறார். தொடர்ந்து அவ்வழி ஓடி வந்தவர்கள் அனைவரும் சறுக்கி சப்பென்று விழுந்து வாழைப்பழ தோல்களாகிறார்கள். மஞ்சளும் கரும்புள்ளிகளுமாய் சிதைந்த கிழிந்த கால்கள் அகன்று கிடக்கும் பல்வகை தோல்கள். காலையில் எழுந்ததும் நான் இந்த கனவை எண்ணி வாய் விட்டும் பின்னர் வாய் பொத்தியும் சிரிக்கிறேன்.

அன்றே ராஜியிடம் இந்த கனவை பற்றி சொல்லும் போது சிரிப்பை கட்டுப்படுத்தவே முடியவில்லை. அவளுக்கு சிரிப்பும் கோபமும் சரிக்கு சமமாய் வந்தது. அவள் இமைகள் படபடக்க. மெல்ல சிணுங்கி சிணுங்கி சிரித்தாள்; பின்னர் நினைவு சட்டென வந்தது வந்தது போல் என் தலையில் குட்டி சொன்னாள் “மக்கு மக்கு எங்கப்பாவை தான் நீ பார்த்ததில்லையே. பிறகெப்பிடி?. இதுவரை நாம் பார்த்திராதவர்கள் மட்டுமே நம் கனவில் வரமுடியும் என்றேன். கடந்த நாள் கனவின் மிச்சம் அடுத்த நாள் இரவில் தொடர்ந்தது. சாலையோடு அழுந்திப் பதிந்து ராஜியின் அப்பாவின் வாழைப்பழ தோல் முகங்கள் எங்கும் இறைந்து கிடக்கின்றன. முன்னால் ராஜி வாழைப்பழம் தின்று தோலை விசிறி எறிந்தவாறே துள்ளலோடு நடந்து போகிறாள்.

அம்மா வீட்டுக்கு திரும்பிய பிறகு தொடந்து சில தினங்களாய் ராஜியை சந்திக்கவே இல்லை; அம்மாவை கட்டி அணைத்து கதகதப்போடு சேலைமணத்தோடு தூங்குவது பழையபடி வழக்கமாச்சு. மறுநாள் பள்ளிக் கூடத்தில் என்னை விட்டுப் போக வந்திருந்த அம்மாவிடம் ராஜியை கூட்டி வந்து காட்டினேன். “அம்மா இதுதான் ராஜி ... என் பிரண்ட். அம்மா குனிந்து தன் நீண்ட நேர்த்தியான் விரல்களால் ராஜியின் கன்னத்தில் கிள்ளியவாறே “சுட்டிப் பொண்ணு என்றாள். பிறகு மீண்டும் குனிந்து மெல்ல உதடு பதிய அவள் கன்னத்தில் முத்தமிட்டாள். அப்போது அம்மாவின் கையில் இருந்த நான் ராஜியின் காது ஜிமிக்கியை தட்டி ஆட்டி விட்டேன். அன்று முழுக்க ராஜி என்னிடம் பேசவே இல்லை.

பள்ளி இறுதி விழாவின் போது தான் ராஜியின் அப்பாவை முதன்முதலாய் பார்க்க கிடைத்தது. கனவில் தெரிந்ததை விட தோற்றம் நிறைய மாறுபட்டிருந்தாலும் எந்நேரமும் வாழைப்பழத் தோல் வழுக்கி விழக் கூடியவர் மாதிரி தான் இருந்தார். இரண்டு முறை நான் திரும்பி பார்க்கும் போதும் அவர் என் அம்மாவுடன் சிரிப்பு ததும்பி வழி பேசிக் கொண்டிருந்தார். அம்மாவின் முந்தானை காற்றில் மெல்ல அசைந்து கொண்டிருந்தது. பளிச்சென்று தெரிந்த இடுப்பை என் நினைவு ஓடிப் போய் கட்டிக் கொண்டது.

விழா அரங்கில் என் பக்கத்து இருக்கையில் இரட்டை ஜடை அசைய ஏதோ பாட்டை முணுமுணுத்தவாறே அமர்ந்திருந்த ராஜி சட்டென்று காதில் ரகசியம் போல் சொன்னாள், “நேத்து ஒரு கனவு கண்டேன். பிறகு தோள் உலுக்கி ஜடைகள் இரண்டு பக்கமும் ஆட குலுங்கி குலுங்கி சிரித்தாள். குழல்விளக்கின் செங்குத்து வெளிச்சத்தில் அவள் முகம் வியர்வை துளிகளுடன் பளிச்சென்று தெரிந்தது. பிறகு மீண்டும் என் காதருகே வந்து சிரிப்பை துண்டிக்காமலேயே கூறினாள் “கனவிலே உங்க அம்மாவை கோவில் யானை தூக்கி கொண்டு ஓடிச்சு, ஓடிப் போய் தெப்பக்குளத்தில போட்டுச்சு. அய்யோ பாவம். எனக்கு திக்கென்றது. பிறகு அவள் உச்சந்தலையில் குட்டியவாறே “அசடே அசடே பாக்காதவங்க தானே கனவில வர முடியும். என் அம்மாவை தான் நீ பாத்திருக்கியே. பிறகெப்பிடி அவங்கள யானை தூக்கீட்டு போய் குளத்தில போடும்? என்றேன்.

அன்றிரவு கனவில் நானும் ராஜியும் எங்களூர் நீலகண்ட பெருமாள் தெருவில் பேசிக் கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தோம். ராஜி தன் கையில் இருந்த வாழைப்பழ சீப்பில் இருந்து ஒவ்வொரு பழமாய் பிய்த்து தின்றபடி தோலை பின்னோக்கி விசிறி எறிந்தபடி ஷூவில் இருந்து விநோதமாய் விசில் சத்தம் எழ நடந்து கொண்டிருந்தாள். முன்னந்தலை வழுக்கையில் இளவெயில் மின்ன ஒருவித தாளத்துடன் குலுங்கும் தொப்பையுடன் ஓடி வந்து கொண்டிருந்த ராஜியின் அப்பா பழத்தோலில் கால் வழுக்க நொடியில் கைகால் பரப்பி சாலையில் முகம் அழுந்தி தட்டையாக மாறி கிடந்தார். அவர் அலறும் சத்தம் தெருவெங்கும் எதிரொலித்தது. சாலையில் தூசு மண்டி கிடந்தது. ராஜி தன் ஷூவால் ஓங்கி மிதித்து புழுதியை விசில் சதத்துடன் கிளப்புகிறாள். திடீரென்று அலறல் சத்தம் நின்று தரை பலமாய் அதிரும் ஓசை எங்கும் கேட்கிறது. ஒரு பருத்த யானை என் அம்மாவை தும்பிக் கையில் வளைத்து தூக்கியபடி எங்களை கடந்து ஓடுகிறது. அம்மாவின் சிவப்பு நிற பட்டுப்புடவை சூரிய வெளிச்சத்தில் மினுமினுக்கிறது. தெருமுனை தாண்டியதும் யானை அம்மாவை தெப்பக் குளத்தில் பச்சை தண்ணீர் சிதறித் தெறிக்க பொத்தென்று இடுகிறது. நாங்கள் எதையும் பொருட்படுத்தாமல் சிரித்தவாறே ஓட்டமும் துள்ளலுமாய் வாழைப்பழங்கள் தின்று கொண்டு ந்டந்து செல்லுகிறோம்.

நான் இந்த கனவை பற்றி இதுவரையிலும் யாரிடமும் சொன்னதில்லை. ஏன் ராஜியிடம் கூட. அப்பொழுதிலிருந்து வருடங்களும் எங்களுடன் கவலையில்லாமல் ரொம்ப தூரம் நடந்து வந்து விட்டன. நாங்களும் நிறையவே மாறி விட்டோம். காதலித்து திருட்டுத்தனமாய் ஓடி வந்து திருமணம் செய்து ... எங்களை சுற்றி வீடு குழந்தைகள், குடும்பம், நண்பர்கள் என்று படலம் படலமாய் சூழ்ந்து கொண்ட சித்திரங்களுடன்.

குழந்தைக்கு தலைவாரி பின்னலிட்டவாறே டி.வி பார்த்துக் கொண்டிருக்கும் ராஜி விழிகள் முன்னால் பிதுங்க கண்ணீர் திரை பளபளக்க அச்சென்று தும்முகிறாள் “யாரோ உன்னை நினைக்கிறாங்க போலிருக்கே என்கிறென். ராஜி புன்னகைத்தவாறே குழந்தைக்கு மையிடுகிறாள்.
Read More

Friday, 4 March 2011

அமைதி, பணிவு, அணிக்கலாச்சாரம்: யாருக்கானது உலக்கோப்பை?



2011 கிரிக்கெட் உலக்கோப்பை யாருக்கானது? முன்னாள் வீரர்களும், பிரலங்களும், நிபுணர்களும், மீடியாவும் கூடவே சற்று குழம்பிப் போய் உள்ளார்கள். அனைத்துக் கைகளும் கோப்பையை சுற்றி பற்றி உள்ளன என்பதே அவர்களின் கண்டுபிடிப்பு. குறிப்பாய் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளின் விரல்கள் இறுக்கவே பற்றி உள்ளன. விநோதமாக, வழமையாகவும், ஐரோப்பிய நிபுணர்களும் வர்ணனையாளர்களும் வெள்ளை அணிகளை முன்னிறுத்துகிறார்கள். உதாரணமாக ஸ்டீவ் வாஹ் தென்னாப்பிரிக்கா வெல்லும் என்கிறார். அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவை முன்னிறுத்துகிறார். தென்னாப்பிரிக்க வர்ணனையாளர்களோ இங்கிலாந்து தான் வெல்லும் என்று ஊகிக்கிறார்கள். இந்தியா அனைவர் பட்டியலிலும் விடாப்பிடியாய் உள்ளது. இந்தியாவை ஆதரிக்கும் அளவுக்கு அதை முழுக்க நிராகரிக்கவும் அனைவருக்கும் தயக்கம் உள்ளது. ஜராசந்தனை போல் இந்தியா இரு துண்டுகளாக கிடக்கிறது. திறமையும் அழகும் கொண்ட குலுக்கு நடிகைகளை போல இலங்கையும் பாகிஸ்தானும் யாருடைய வெட்டவெளிச்ச பட்டியலிலும் முன்னணியில் இல்லை.
பொதுவான தெ.ஆ-இங்கிலாந்து ஆருடத்தின் மறைமுகப் பொருள் என்ன? இவ்வருட உலகக் கோப்பை ஒரு நீண்ட கொட்டாவியாக இருக்கும் என்பது. தென்னாப்பிரிக்கா ஆட்டங்கள் ஒரு அரிசி மில்லின் அரவை எந்திரத்தை ஈ மொய்க்க தூசு கிளம்ப கவனிப்பதை போன்றது. தெ.ஆரிக்காவுக்கு அடுத்தபடியான அரவை எந்திரம் இங்கிலாந்து. இவ்விரு அணிகளுக்கும் கொஞ்சமாவது வண்ணமூட்டுவது ஆம்லாவும், கெவின் பீட்டர்சனும் தான். சுவாரஸ்யமாக இருவரும் வேறு நாட்டில் இருந்து வந்தவர்கள். தோல்வியை தவிர்க்க வேண்டும் என்பதே இவ்விரு அணிகளின் லட்சியம். அதனால் ஜெயித்து விட்டாலும் அப்பாடா நல்ல வேளை தோற்கவில்லை என்று பெருமூச்சு விடுவார்கள். இது போன்ற அரவை எந்திரங்களால் ஆக்கிரமிக்கப் படுவது போன்ற ஒரு பெருந்துயரம் உலகக் கோப்பை பார்வையாளனுக்கு வேறொன்று இருக்க போவதில்லை. ஆகையால் கிரிக்கெட்டின் ஆதிதேவதை காப்பாற்றட்டும்!

முறுக்கு போல் நொறுங்குவதற்காகவே ஒவ்வொரு முறையும் ஆடிக் கொண்டிருந்தாலும் ஆஸ்திரேலியாவிடம் இன்னமும் வசீகரம் ஒட்டிக் கொண்டுள்ளது. தரமான, அதிரடி ஆட்டத்தை இன்னமும் அவர்களிடம் இருந்து எதிர்பார்க்கலாம். மத்திய ஓவர்களின் போது மட்டும் ஆஸ்திரேலியா நெடுஞ்சாலையில் வெளிப்பட்ட முயல் போகி ஆகி விடுகிறது. பொந்து தோண்டி தங்களுக்கே குழி பறிக்கிறார்கள். முதல் நான்கு வரிசை ஆட்டக் காரர்கள் நாற்பது ஓவர்கள் வரையில் தங்குவதும், வேக வீச்சாளர்கள் ஒவ்வொரு முறையும் ஆரம்ப விக்கெட்டுகளை தாராளமாய் வீழ்த்த வேண்டும் போன்ற இதற்கான வெளிப்படையான நிவாரண முறைகள் என்பது வரைபடத்துடன் இந்திய மாநகரங்களில் சுற்றுலா பயணிகள் நால்திசையும் பார்த்து திரிவது போல என்பதால் ஆஸி அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டும் என்று ஒரு பார்வையாளன் மீண்டும் பிரார்த்திக்க மட்டுமே முடியும்.

உள்நாட்டு குடுமிப்பிடிகள் மற்றும் அரசியல் மாற்றங்கள் காரணமாக பாகிஸ்தானும், போர் மற்றும் மக்கள் தொகை காரணமாக இலங்கையும் நெருக்கடி அணிகளாக என்றுமே பாதுகாப்பின்மையுடன் பொருதியபடியே இருந்து வந்துள்ளன. ஆனால் இந்த இரு அணிகளும் நெருக்கடிக்கு ஆக்ரோசமான நேர்மறையான எதிர்வினையையே செய்து வந்துள்ளன. அதனாலேயே கிரிக்கெட்டின் மிக வசீகரமான புல்லரிப்பு அணிகளின் முன்வரிசையில் உள்ளன. இரண்டு அணிகளும் ஆசிய சூழலுக்கு தோதான மட்டையாட்டம் மற்றும் பந்து வீச்சை கொண்டுள்ளன. இங்குள்ள சீதோஷ்ண நிலைகுறித்து போதுமான அறிவை கொண்டுள்ளன. இதுவரை உலக கிரிக்கெட் ஆஸ்தான்கள் மற்றும் ஐ.சி.சியால் தொடர்ந்து புறமொதுக்கப்பட்டுள்ள காரணத்தால் இலங்கையும் குண்டு வெடிப்புகளால் கிரிக்கெட் தடை செய்யப்பட்டு மாதத்துக்கொரு அணித்தலைவரை பார்த்து தலை புண்ணாகி நெருக்கடிக்கு உள்ளாகி உள்ள காரணத்தால் பாகிஸ்தானும் தாங்கள் இருக்கும் பிரம்மாண்ட இருளின் பிராந்தியத்தில் இருந்து வெளிவந்து தம்மை நிரூபிக்க இது ஒரு அற்புதமான நாடகீய தருணம் என்பதால் இவர்களின் மறுவரவை பார்வையாளன் ஆர்வமாக எதிர்நோக்கக் கூடும். எந்த ஒரு சிறந்த ஆட்டத்தொடரும் அணிகளின் சற்றும் எதிர்பாராத கீழிருந்து மேலான சாகச பயணங்களை காட்சிப்படுத்த வேண்டும். மேலிருந்து கீழ்நோக்கும் கிரிக்கெட்டின் தேவதையும் கீழிருந்து மேல் நோக்கும் பார்வையாளனும் சமதளங்களை வெறுக்கிறார்கள்.

அடுத்து வாய்ப்பு சதவீதம் என்னவாக உள்ளது?
இந்த உலகக் கோப்பை தொடரின் போது ஆடுதளங்களும் பனிப் பொழிவும் தான் சமாளிக்க முடியாத ஆனால் முடிவுகளை திசை திருப்பும் காரணிகளாக இருக்க போகின்றன. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாட்டு ஆடுதளங்களில் ஆட்டம் சீராகவே 100 ஓவர்களும் இருக்கும். டாஸ் வெல்வதை கடந்து இரு சாராருக்கும் வாய்ப்புகள் சமமாகவே இருக்கும். இதனால் அங்கெல்லாம் ஆட்டம் வெல்ல திறமையும் மனவலிமையும் போதும். ஆனால் இந்தியாவில் நிறைய தந்திரம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஆட்டமுறையை மாற்றிக் கொள்ளும் தகவமைவு திறன் வேண்டும். இங்கு ஆடுதளத்தின் சுபாவத்தை கணிப்பது சிக்கலாகவே இருக்கும். பகலிரவு ஆட்டங்களில் பனி எந்தளவுக்கு பெய்யப் போகிறது என்பது குறித்த நுட்பங்களும் முக்கியம். ஆடுதளம் இரண்டாவது இன்னிங்ஸில் தடாலடியாக மாறலாம். அல்லது தொடர்ந்து தட்டையாகவோ மிக மெதுவாகவா இயங்கலாம். எதற்கும் தயாராக உள்ள ஒரு ரப்பர் மனநிலை கொண்ட அணிகள் தாம் இந்த உலகக் கோப்பை தொடரில் தாக்குபிடிக்க முடியும். விவியன் ரிச்சர்ட்ஸ் மிகச் சிறந்த களத்தடுப்பு அணியே வெல்லும் என்கிறார். இர்பான் பதான் மிகச் சிறந்த பந்து வீச்சு அணியை ஆதரிக்கிறார். அதிகமாக ஓட்டங்களை குவிக்க கூடிய அணிக்கே கோப்பை வாய்ப்பு என்பது ஏறத்தாழ அனைத்து அணித்தலைமைகளின் நம்பிக்கையாக இருக்கிறது.

சவுரவ் கங்குலி, அனில் கும்பிளே உள்ளிட பல முன்னாள் வீரரகளும் இம்முறை உலகக் கோப்பை படையெடுப்பு யாரும் பிரதமராகக் கூடிய ஜனநாயக பாணியில் இருக்கும் என்கிறார்கள். நிபுணர்களின் பொதுவான ஒரு வாயுபிடிப்பு கணிப்பு இதுவாகவே உள்ளது. வானில் கோள்களின் இருப்பு நிலை மூட்டமாகவே உள்ளது. உறுதியாக கணிக்க யாரும் தயாராக இல்லை. இது ஏன்? சமீபமாக ஆசியாவில் முக்கிய அணிகள் மொத்தமாக பங்கேற்ற பெரும் ஆட்டத்தொடர்கள் எவையும் நிகழவில்லை என்பதே முக்கிய காரணம். தனித்தொடர்கள் நடந்தன. ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு வந்து ஒரு ஒருநாள் தொடரை வென்று மற்றொன்றை இழந்தது. இலங்கையும் தென்னாப்பிரிக்காவும், நியூசிலாந்தும், இங்கிலாந்தும் இந்தியாவில் இழக்க மட்டுமே செய்தது. இலங்கையில் மேற்கிந்திய தீவுகள் தொடரை இழந்தது. பாகிஸ்தானில் கிரிக்கெட் சமீபமாக மறக்கப்பட்டு விட்டது. வங்கதேசத்தில் நடந்த பரீட்சார்த்த ஆட்டங்களை யாரும் பொருட்படுத்த தயாராக இல்லை. அடி வாங்கியும் கொஞ்சம் கொடுத்தும் வங்க தேசம் வீங்கிப் போய் மட்டும் உள்ளது. இத்தொடரில் அந்த மனோதிடம் பயன்படும். ஆசிய பிராந்தியத்தில் ஐரோப்பிய அணிகளின் மீள் சறுக்கல்கள் பொதுவான கிரிக்கெட் தர்க்கத்தை குழப்புகிறது. காரணம் அடிவாங்கியவர்கள் பயில்வான்கள்; மிக வலிமையான அணிகள். அவர்கள் இழந்தது தனித்தொடர்கள் என்பதால் ஒரு பொதுத் தொடருக்கு அவ்விளைவுகள் செல்லுபடியாகாது. அடுத்து வெற்றிபெற்ற ஆசிய நாடுகள் முதிர்ச்சி அடையாதவை. கணிப்புகளை எளிதில் ஏமாற்றி விடும் எதிர்பாரா தன்மை கொண்டவை.
தால்ஸ்தாயின் போரும் வாழ்வில்போர் திட்ட விவாதத்தின் போது ரஷ்யாவின் கிழட்டு தலைமை தளபதி ஒருவர் நன்றாக குறட்டை விட்டு தூங்கி விடுவார். அவர் போரை அதன் போக்கில் வளர விட்டு வேடிக்கை பார்ப்பார். பல அணிகள் பங்கேற்கும் நீண்ட தொடர்களில் அணிகள் தங்களுக்கான ஒரு வெற்றிக் கலாச்சாரத்தை மெல்ல மெல்ல உருவாக்கி கொள்கின்றன. பின்னால் எத்தனையோ விளக்கங்கள் உருவாக்கப்பட்டாலும் உண்மையில் இந்த கலாச்சாரம் அணிக்குள் எப்படி ஏற்படுகிறது என்பது அணி வீரர்களுக்கே தெரிவதில்லை. ஒரு பேராற்றல் அவர்களை செலுத்துகிறது அல்லது அவர்கள் அப்பேராற்றலோடு ஒன்று கலக்கிறார்கள். பலமும் பலவீனங்களும், ஆடுதளங்களும், பனிப் பொழிவும், சுண்டி விழும் நாணயத்தின் விதியும் மீடியா விவாதங்களோடு சேர்த்து அமைதியான முதலிரவு அறைக்கு வெளியே இருக்கின்றன.

ஆக கிழட்டு ரஷ்ய படைத்தளபதி புரிந்து கொண்டது போல் விவேகமான பணிவு தான் வெற்றிக்கு பின்னுள்ள ஒரே தந்திரம். அத்தனை இரைச்சல்கள் களேபரங்களுக்கு மத்தியில் யார் அமைதியை உற்றுக் கேட்கிறார்களோ அவர்களுக்கான இக்கோப்பை.
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates