எங்கள் கல்லூரியின் கலைநிகழ்ச்சிகளின் போது மேடை ஆட்டத்துக்கு இணையாக பார்வையாளர் பகுதியில் இருந்து ஒரு மாணவன் ஆவேசமாக நடனமாடிக் கொண்டிருந்தான். ஒரு முழங்கை இல்லாத மாணவன். நிறைய மாணவர்கள் கூட ஆடிக் கொண்டிருந்தார்கள். அவர்களை மாணவிகள் மிகுந்த ஆர்வமாக கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த கையற்ற மாணவனை ஒரு ஜோடி கண்கள் தனியாக கவனித்தன. ஹலோ எப்.எம்மில் இருந்து விளம்பரம் செய்ய வந்திருந்த தொகுப்பாளர் மேடையில் தோன்றி அந்த ஊன இளைஞனை பாராட்டி பேசினார். அவனோடு புகைப்படம் எடுக்க விரும்புவதாக சொல்லி அந்த ஆசையும் இவ்வாறு சொல்லி நிவர்த்தி செய்தார் “எப்பவுமே அடுத்தவங்க தான் ஆர்.ஜே வோட போட்டோ எடுக்கணும்னு விரும்புவாங்க, ஆனால் ஒரு ஆர்.ஜேவே உங்களோட போட்டோ எடுக்க விரும்பறாங்க”. அந்த அதிபிரபலமான ஆர்.ஜெ யாரென்று கேட்காதீர்கள். எனக்கு தெரியவில்லை. விசாரித்து பார்த்தால் அங்கிருந்து யாருக்குமே தெரியவில்லை.
அந்த ஊன இளைஞன் மிக உற்சாகமாக மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தான். நண்பர்கள் அவனை சூழ்ந்து கொண்டார்கள். நடன நிகழ்ச்சி மேடையில் தொடர்ந்தது. அந்த மாணவன் பக்கமாய் மேலும் பல முழுஇளைஞர்கள் நகர்ந்தார்கள். அதுவரை வெவ்வேறு இடங்களிலாய் குழுக்களாய் ஆடிக் கொண்டிருந்த அவர்கள் ஊன இளைஞனின் பக்கமாய் குவிந்து ஆடத் தொடங்கினர். எல்லாரும் கூட போட்டொ எடுக்க விரும்பும் ஆர்.ஜெவின் பார்வையை ஆகர்சிக்க அதுவே உசிதமான இடம் என்று அவர்கள் தீர்மானித்திருந்தனர். அவர்கள் அவனை விட நன்றாக ஆவேசமாக அதிக தூசை கிளப்பி அதிக கூச்சலை ஏற்படுத்தி தான் ஆடினர். ஆனால் பார்க்க வேண்டியவரின் பார்வை விழவில்லை. ஆனால் பாராட்டை பெற்ற இளைஞன் அதற்கு மேல் ஆடாமல் நின்றிருந்தான். முகத்தில் மெல்லிய கூச்சம். மேடையில் பாராட்டு பெறும் அனைவரும் கூசி ஒதுங்குவதில்லை என்பதை கவனிக்க.
அடுத்து கனாக்காணும் காலங்கள் தொடரில் நடித்த அன்றைய விழாவின் சிறப்பு விருந்தினரான பிரபு என்பவர் மேடையில் தோன்றி நடன போட்டி வெற்றியாளர்களை அறிவிக்க தொடங்கினார். அவர் திடீரென்று தனக்கு அந்த ஊன இளைஞரை மிகவும் பிடிக்கும் என்று கூறி மேடையில் அழைத்து அணைத்து பரிசளித்தார். கரகோஷம் வலுத்தது. ஊன இளைஞர் அதையும் ஏற்றுக் கொண்டு இறங்கினார். அவர் மேலும் மேலும் பிரகாசமாக உற்சாகமாக மாறிக் கொண்டிருந்தார். ஒருவர் மகிழ்ச்சி அடைவதை பார்த்து முதன்முதலாக எனக்கு உறுத்தலாக இருந்தது. அவரை கவலையாக பார்த்தேன்.
போட்டியில் பங்களிக்காத ஒருவரை பாராட்டுவதும் பரிசளிப்பதும் கேட்காமலே உங்கள் சட்டைப்பையில் பிச்சை இடுவதற்கு சமம். மேடை வெளிச்சம் தங்கள் மேலும் அதிகமாக விழ அவரை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த condescending நிலைப்பாடு ஒரு உயர்வு மனப்பான்மையில் இருந்து உருவாவது. இந்த நோய்மை கொண்ட மனிதர்கள் பெண்ணியம், தலித்தியம், கருணை என்றெல்லாம் போலியாக ஆவேசப்பட்டுக் கொண்டு இருப்பார்கள். ஆவேசப்படும் அதே தருணத்தில் அவமானப்படுத்தவும் தயாராக இருப்பார்கள். ஒரு அலியை பார்த்து நகைக்கும் பெண் தன் பெண்மையை எண்ணி உள்ளூர பூரிப்பதை போன்றது இது. எதிர்காலத்தில் இந்த இளைஞர் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுக் கொண்டே இருப்பார். அவர் மீது போலியான கருணையையோ வெறுப்பையோ மக்கள் தங்கள் அரிப்பை அடக்கும் பொருட்டு காட்டிக் கொண்டே இருப்பார்கள். அடுத்தவர்களின் மிதியடியாக இல்லாமல் இருக்க ஒரு ஊனன் என்ன செய்யலாம்?
தன்னை மதிக்கும் நபர்களை மட்டும் தேர்ந்தெடுத்து நண்பராகலாம். அது சாத்தியமில்லை. அசட்டுத்தனமாய் நடப்பவர்கள் மத்தியில் தான் நாம் பெரும்பாலான பொழுதுகளில் வாழ்ந்தாக வேண்டும். அவர்களை தவிர்க்க முடியாது. ஆக சுயமரியாதை விபத்துக்குள்ளாகாமல் பார்க்க தன்னை அவன் ஒரு படி உயர்த்திக் கொள்ள வேண்டும். சந்திக்கிறவர்களிடம் தான் அவர்களை விட மேல் என்பதை மிக நுட்பமாக உணர்த்தி விட வேண்டும். மிகவும் பணிவாக ஒருவர் தன்னை மேலானவராக காட்டிக் கொள்ள முடியும். அது ஒரு கலை. லௌகீகமாகவோ அலௌகீகமாகவோ ஒருவர் தம்மை மேலுயர்த்திக் கொள்ள முடியும். இரண்டும் சரியே. இப்படி முழுமையானவர்களை விட தான் ஒரு அடி மேலே என்று ஊனன் நிறுவினால் மட்டுமே அவர்கள் இவனை தமக்கு சமம் என்று கருத பிரயத்திப்பார்கள். அவர்களை விட ’உயரமாக’ ஒரு ஊனன் என்றுமே இருக்கப் போவதில்லை என்றாலும் சமமாகவேனும் இருப்பதற்கு இதுவே ஒரே வழி.
மனித மனம் கீழ்மையானது என்று பழிக்க நான் இதை எழுதவில்லை. ஊனம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனிதர்கள் அடிப்படையில் மிகவும் பலவீனமானவர்கள். இதை ஒரு மனச்சிக்கலாக மாற்றி துன்புறுகிறார்கள். துன்பம் கழிக்க சகமனிதனை குத்துச்சண்டை மூட்டை போல் பயன்படுத்துகிறார்கள். மனைவி கணவன் அம்மா அப்பா சகோதரர்கள் நண்பர்கள் அனைவரும் பிறரது அழுக்கை அலம்பவே வாழ்நாளில் பெரும்பகுதி வீணடிப்பதை பார்க்கிறோம். எத்தனை கெஞ்சல்கள், சமாதானங்கள், நியாயப்படுத்தல்கள், சச்சரவுகள்! கவபட்டா இதைப் பற்றி “மரு” என்றொரு கதை எழுதியிருப்பார். ஒரு மருவுக்காக கணவன் மனைவியை படாத பாடு படுத்துகிறான். அவளை பெரும் குற்றவாளி ஆக்குகிறான். ஆனால் அந்த மருவை கிள்ளி எறியவே முடியாது. காரணம் அது அவனுக்குள் நமக்குள் ஒவ்வொருக்குள்ளும் இருக்கிறது. அது வெறுமனே காலோ கையோ மட்டும் கிடையாது என்பதை நிச்சயமாக சொல்லலாம்!
தமிழின் முன்னோடிகளில் அதிகமாக கொண்டாடப்படுவர்கள் இளமையிலேயே இறந்து போனவர்கள் அல்லது எழுதுவதை நிறுத்தினவர்கள் அல்லது மிகக் குறைவாக எழுதினவர்கள். நமக்கு அழிபவர்களை அல்லது அழிந்தவர்களை சிலாகிக்கும் ஒரு மனக்கோணல் உள்ளது என்று அடிக்கடி சொல்வார் மனுஷ்யபுத்திரன். இதுவும் அதுதான். கொஞ்சம் அறிவுஜீவித்தனமான மரு வேட்டை
ஆம், ருத்ரைய்யாவின் அவள் அப்படித்தான் படம் பற்றி பலர் சிலோகித்து பேசும் அதே வேளையில் அவருடைய அடுத்ததும் இறுதி படமுமான கிராமத்து அத்தியாயம் குறித்து யாரும் பேச மாட்டார்கள்.
ReplyDelete