சுகுமாரனின் “வேழாம்பல் குறிப்புகள்” எனும் இணைய பத்திகளின் தொகுப்பு நீங்கள் எங்கிருந்து படிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அதற்கு ஏற்றாற் போல் திறந்து கொள்வது. இது பொதுவாக கவிதைத் தொகுப்புகளின் பண்பு என்று சொல்லத் தேவை இல்லை. சுகுமாரன் அடிப்படையில் ஒரு கவிஞர் என்பதும் குறிப்பிடத் தேவையில்லை. பத்திகளின் மையம் கேரளா. ஆனால் மனித குணங்களும் பிரச்சனைகளும் எழுத்தில் ஒன்று தான் என்பதால் மாநில மையமற்றவைகளாக இப்பதிவுகள் மாறுகின்றன. புத்தகத்தில் அவர் நிறைய அரசியல், சமூகம், சமகால நடப்புகள், ஓரளவு கலை இலக்கியம் என்று பகிர்ந்து கொண்டாலும் இப்பதிவுகள் இலக்கை நோக்கி நடந்து சென்று முடிபவை அல்ல. எதைப் பேசினாலும் அதன் கலாச்சாரத்தை உற்று நோக்குவதன் மூலம் தனது பத்தி எழுத்துக்கு அவரால் கலைத்தன்மையை, அபார கூர்மையை ஏற்படுத்த முடிகிறது. எழுத்தின் பண்பு காணாதவற்றை கண்டு வியப்பது தான். சுகுமாரன் தனது சமகால அரசியலின், சமூக அமைப்புகளின், நிறுவனங்களின் அபத்த செயல்பாடுகளை கடிந்து கொள்ளுவதில்லை, வியக்கிறார்; குற்றங்களை, அநீதிகளை, அற்பத்தனங்களை கண்டு கொந்தளிப்பதோ, தீர்ப்பு மொழிவதோ இல்லை, கண்ணீரின் உப்புடன் புன்னகைக்கிறார்.
ஸ்டைல் என்பதை சினிமாக்காரர்கள் கபளிகரம் செய்து கொண்டாலும் அதன் அசலான பண்பை வெளிப்படுத்தியவர்கள் சு.ராவும் அவரைத் தொடர்ந்து சுகுமாரனும் தான். சுகுமாரனின் வாசகன் ஒவ்வொரு சொல்லின் அமைப்பிலும் அந்த நடை வசீகரத்தை எதிர்பார்த்து கண்டு புளகாங்கிதம் அடைய முடியும். இவ்வகை ஸ்டைல் என்பது மண்ணில் கால் பதியாமல் இருப்பது, ஆனாலும் பறக்காமல் இருப்பது, ஆனாலும் நடக்காமல் இருப்பது. இணைய பரப்பில் சமீபமாய் எழுதப்பட்டு வரும் சமூக அரசியல் பத்திகளில் இருந்து சுகுமாரனின் எழுத்தை தனித்து தாடி மீசை வரைந்து வைப்பது இதுதான். ஒரு உதாரணம், ”கிளிநொச்சியும் முள்ளிவாய்க்காலும் நிழலாடுகிறது”. கேரள மண்ணின் கட்டபொம்மனான பழசிராஜாவின் வீரவரலாறை குறிப்பிடும் சுகுமாரன் வெள்ளையர் படை வஞ்சகம் மூலம் அவனை தோற்கடித்து கொன்ற கதையை பேசுகிறார். தொடர்ந்து ஈழப்போர் நரம்பொன்றை தீண்டுகிறார். ஈழப் போர் பற்றின ரத்தம் கொப்புளிக்கும் பல்லாயிரம் பக்கங்கள் இணையத்தில் அச்சில் படித்திருக்கிறோம்; ஆனால் இப்பதிவில் முடிவாக எழுதப்படும் “பழசியை பற்றி இவ்வளவு விரிவாக யோசிக்க எனக்கு வேறு காரணமும் இருக்கிறது. அதில் கிளிநொச்சியும் முள்ளிவாய்க்காலும் நிழலாடுகிறது” வரிகளைப் போல் வேறதுவும் நம் ஆன்மாவை துரத்தப் போவதில்லை. ஏனெனில் இந்நூற்றாண்டில் பெருந்துயரங்களுக்கு வெகுஅருகாமையிலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; சுட்டி சொல்ல ஒரு சிறு கீற்று போதும். உயிர்மை உள்ளிட்ட பத்திரிகைகளில் சுகுமாரன் எழுதி வந்த பத்திகளில் இருந்து நுட்பமான வகையில் இந்த வேழாம்பல் பத்திகள் வேறுபடுகின்றன. வித்தியாசமான சுவாரஸ்யமான விசயங்களை அதிகம் சொல்ல முனைகிறார். நமக்கு அதிக பரிச்சயமிருக்காது என்ற அக்கறையில் கேரள அரசியலை அதன் பின்னணி சகிதம் விளக்கிய பின்னரே குறிப்பிட்டு நகையாடி விமர்சிக்கிறார். குறைவான கருத்துக்களை தெளிவாக சுருக்கமாக கூர்மையாக பேசுவதே இணைய பத்தி கலாச்சாரம் என்பதை ஏற்றுக் கொண்டே எழுதுகிறார். இணையத்தில் அதிகம் எழுதும் வாசிக்கப்படும் எஸ்.ரா, சாரு, ஜெ.மோ ஆகியோருடன் சுகுமாரனின் இப்பத்திகளை ஒப்பிட்டு பார்த்தால் இது மேலும் விளங்கும். சாரு இலக்கிய இணைய பத்தி எழுத்தை (அப்படி ஒரு வகையறா உண்டு) மாற்றினார். ஜெ.மோ ஒருநாள் தடாலடியாக மாறினார். எஸ்.ரா மாறவே இல்லை. சுகுமாரனுக்கு இதெல்லாம் அவசியமில்லை. ஏற்கனவே நன்றாக இசைத்து பார்த்து சுருதி பிடித்து விட்டே இணையத்துள் வந்துள்ளார். அடர்த்தியான கருத்துக்களை கவித்துவமாக எழுதும், வாழ்வின் கவித்துவமான அனுபவங்களை நாடகீயமாக சொன்ன சுகுமாரன் இங்கில்லை. இங்குள்ளது சற்றே லேசான கையடக்க வெர்ஷன். 2.0. சுகுமாரனுக்கு வெகு இயல்பாக வரும் அங்கதமும் ஆழமான அவதானிப்புகளும் இணைய பத்தி வடிவை வெகுவாக மேம்படுத்துவதை இங்கு சொல்லியாக வேண்டும். மிக கொஞ்சமான ஒன்றை மிக மிக கொஞ்சமாக சுவாரஸ்யமாக சொல்லி அதை உயர் இலக்கியமாக்கும் வித்தையை கற்றுத் தருகிறார். இந்த மூன்றாவது நிலையை அதிகம் இணையத்தில் காண முடிவதில்லை. அதாவது இணையத்தில் எழுதுவது சிலுவையில் மரிப்பது போல். இணையத்தின் முள் மட்டும் இரட்டிப்பு வேகத்தில் ஓடுவதால் வாசிப்பவர்கள் அதற்கு முன் பெரும் பாய்ச்சல் பாய்வதால் இணையக் கட்டுரைகள் செத்து தான் ஆகவேண்டும். இவற்றை புத்தகமாக்கி ஐஸ்பெட்டியில் வைப்பது கூட காப்பாற்றாது. நாம் எல்லாம் இடம் வலமாக மரிக்கிறோம். சொர்க்கமோ நரகமோ கிட்டுகிறது. சுகுமாரன் தனது வேழாம்பல் குறிப்புகளில் சிலவற்றையாவது, தனது முன்னுரையில் விரும்பியிருப்பது போல், சாஸ்வதமாக்குகிறார். அவர் சிலுவையின் மையமாக மரிக்கும் மார்க்கத்தை கையாண்டிருக்கிறார். மீண்டு வருகிறார்.
“தஸ்கரன் மணியன் பிள்ளையுடே ஆத்மகதா” என்ற திருடர் ஒருவரின் சுயசரிதை கேரளாவில் ரொம்ப பிரபலமானது. மணியன் பிள்ளை சொல்ல சொல்ல இந்துகோபன் என்ற இலக்கிய எழுத்தாளர் அதை பத்திரிகை தொடராக்கினார். இத்தொடர் பிரபலமாக போலீசார் தாமதமாக பலவருடங்கள் பழமையான குற்றங்களுக்கு அவர் மேல் வழக்கு வேறு தொடுத்தது. இந்த நூல் பற்றி முன்னர் இந்தியன் எக்ஸ்பிரசில் கட்டுரை வந்தது. அதில் எத்தனையோ சுவாரஸ்யமான அதிர்ச்சியான செய்திகளை வெளிப்படுத்தினார்கள். உதாரணமாக கேரளாவில் கொள்ளையடித்து விட்டு மணியம் பிள்ளை வேறுபெயரில் தமிழகம் வந்து சென்னையில் நிலைகொண்டிருக்கிறார். பின்னர் அதிமுகவில் உறுப்பினராக கட்சித் தொண்டு செய்திருக்கிறார். காலத்துக்கு நகைச்சுவை உணர்வு சற்று குறைவென்பதால் அவர் எம்.எல்லே எல்லாம் ஆகவில்லை. சுகுமாரன் இந்நூலை பற்றி ஒரு பத்தி எழுதுகிறார். அதில் இந்த தமிழக அவதார விவகாரம் பற்றி சொல்லவில்லை தான். அதை விட சூடானவை. ஒரு கற்பழிப்பு, ஒரு விபச்சார முயற்சி. ஒரு இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையில் குற்றமோ கிளுகிளுப்போ ஆகவேண்டியவற்றை மனித மனத்தை அறிய முயலும் இலக்கிய கட்டுரை ஆக்குகிறார். மணியன் பிள்ளை ஒரு இரவில் ஒரு வீட்டு மாடியில் கொள்ளையடிக்க நுழைகிறான். அங்கு ஒரு அறையில் வெளிச்சம் தெரிகிறது. ஒரு பெண் அரைநிர்வாணமாய் தூங்குகிறாள். அவளை கத்தி காட்டி மிரட்டி வன்புணர்ந்து விட்டு கொள்ளையடித்து செல்கிறான். பின்னர் அவன் ஒரு லாட்ஜ் அறை ஒன்றில் தங்கி இருக்கையில் ஒரு கிராக்கி வருகிறாள். அவளது கணவன் மரண படுக்கையில் இருக்கிறான். மருந்துக்கு பணம் வேண்டும் என்று கேட்கிறாள். அவளுடன் இருக்கையில் “நான் எத்தனாவது ஆள்” என்று கேட்கிறான். “பதினோராவது”. அவனுக்கு தன் மீதே வெறுப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். அவளை தொடாமல் பணம் மட்டும் தந்து திருப்பி அனுப்புகிறான். பிறகு ரகசியமாய் பின் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் விசாரித்து அவள் கூறியது பொய்யல்ல என்று அறிகிறான். தாமதமாக மருந்து வாங்கி வரும் அவளை செவிலி திட்டுவதை எட்ட நின்று பார்க்கிறான் “அந்த ஆள் எவ்வளவு நேரமாய் வலியில் துடிக்கிறார். எங்கே போனே?”. மணியம் பிள்ளைக்கு அப்பெண்ணின் பால் கருணை ஏற்படுகிறது. அவளுக்கு உதவுவதற்காக ஆயிரத்து ஐநூறு ரூபாய் கொள்ளை அடிக்கிறான். அதைக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு செல்கிறான். அன்று மருந்து வாங்க விபச்சாரத்துக்கு புறப்பட்ட அவள் இரவு பதினொரு மணிக்கு தாமதமாக திரும்பியிருக்கிறாள். தாமதம் காரணமாக அவளது கணவன் இறந்து விடுகிறான். திருடன் வியக்கிறான் “இந்த பொன்னுக்கும் பணத்துக்கும் என்ன அர்த்தம்?”. இருபதாம் நூற்றாண்டு நாவல்களில் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்ட கேள்வி இது; பேசப்பட்ட தருணம் இது. கற்பழிக்கப்பட்ட பெண்ணும், காப்பாற்றப்பட வேண்டிய பெண்ணும் அனுபவித்த துயரத்துக்கு திருடனா பொறுப்பு? குற்றம் செய்யப்படுவதில்லை; செய்விக்கப்படுகிறது; அதே போன்று அறத்தால் தூண்டப்பட்டு ஒருவன் இயங்கும் போதும் அவனது கரங்கள் மர்மக் கயிறு ஒன்றால் கட்டப்பட்டே உள்ளன. அறத்துக்கும் மனிதாபிமானத்துக்கும் பொருள் காண முடியாமல் பலசமயம் போவதே தீமையை நேரிடுவதை விட பெருந்துயரம். இதைப் படித்து “எனக்கு அழத் தோன்றியது” என்கிறார் சுகுமாரன். திருடனின் மனிதாபிமானத்தை கண்டு முற்போக்கு எழுத்தாளரை போல் அவர் தேம்பி அழவில்லை என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும். மனிதாபிமானத்துக்கு கரிப்பின் சுவை வந்து விடும் அர்த்தமற்ற சந்தர்ப்பமொன்றையே சுகுமாரனின் இலக்கிய மனம் கவனிக்கிறது. குற்றம் செய்யவும் பாவமன்னிப்பு கோரவும் மனிதனுக்கு அதிகாரம் உள்ளதா, அவனது கரங்களை காலம் ஏன் பிணைக்கிறது என்பதே அவர் இங்கு குறிப்புணர்த்தும் கேள்விகள். இப்புத்தகத்தில் உள்ள சிறந்த கட்டுரைகளின் அடிநாதமும் இதுவே.
”பிடுங்கப்படாத ஆழத்தில் குற்றவுணர்வின் முள்” கட்டுரை தீமை அநாயசமாக கடந்து நம்மால் தடுக்க முடியாத தூரத்துக்கு தாவி சென்று விடுவதை சொல்லுகிறது. மணியம் பிள்ளையின் இடத்துக்கு சுகுமாரன் சென்று விடுகிறார். திருவனந்தபுரம் பத்மநாப ஸ்வாமி கோவிலை ஒட்டிய குளத்தின் கரையில் ஒரு பைத்தியக்காரர் நெடுநேரமாய் உலவிக் கொண்டிருக்கிறார். கவலை கொண்ட கோவில் ஊழியர் ஒருவர் அவரை விரட்டப் பார்க்கிறார். மனநலம் பிறழ்ந்தவர் நடுக்குளத்துக்கு செல்கிறார். மனநலம் மிக்கவர் அவரை தொடர்ந்து சென்று இழுக்க பார்க்கிறார். முடிவில் சற்றும் எதிர்பாராத படியாக பைத்தியக்காரர் ஊழியரை குளத்தில் மூழ்கடித்து கொன்று விடுகிறார். இத்தனையும் நடக்கும் போது ஒரு கூட்டம் வேடிக்கை பார்க்கிறது. சுகுமாரனையும் சேர்த்து ஊடகவாதிகள் வளைந்து வளைந்து படமெடுக்கிறார்கள். சுடுசெய்தியை உடனடியாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பவர்களுக்கு ஏனோ அந்த கொலையை தடுக்க தோன்றவில்லை. நிகழ்வாழ்வின் அவசரமும் நியதிகளும் தார்மீக பொறுப்பை அர்த்தமற்றதாக்கிறது. சுகுமாரனுக்கு தாம் ஏன் ஒரு உயிரை காப்பாற்ற முனையவில்லை என்ற அறம் சார்ந்த குற்றவுணர்வு இருந்து கொண்டே இருக்கிறது. விளைவாக ”கடவுளின் எண்” என்றொரு கவிதை எழுதுகிறார். அதையும் இத்தொகுப்பில் தந்திருக்கிறார். ஆனால் பொறுப்பின்மை மட்டுமல்ல தார்மீக பொறுப்பும் வாழ்வுக்கு அபத்தம் கூட்டுகிறது. பைத்தியக்கார கொலையாளிக்கு பின்னர் குணமாகி விடுகிறது. சகஜ வாழ்வுக்கு திரும்பும் அவர் ஒரு சின்ன வியாபாரம் செய்து பிழைக்கிறார். முக்கியமாக அவர் வருடா வருடம் இறந்தவருக்கு திவசம் செய்கிறார். அந்த மரணத்துக்கு நிஜத்தில் யார் பொறுப்பு? பொறுப்பு என்பதன் பொருள் தான் என்ன? அவரை மூழ்கடித்த கரம் காலத்தினுடையது அல்லவா!
தமிழக அரசியல் பற்றி தமிழில் படித்து தலை புண்ணானவர்களுக்கு மலையாள அரசியல் பற்றின இந்த தமிழ் கட்டுரைகளில் ஆறுதல் உண்டு. சுகுமாரன் கம்யூனிஸ கொள்கை ஆதரவாளராக இருந்தாலும் அவர் கேரள இடதுசாரி அரசின் அனுதாபி அல்ல. அவருக்கு வி.எஸ் அச்சுதானந்தன் மீது பிரியம் இருந்தாலும் அவரது தவறுகள் மீது சின்ன கோபங்கள் ஏற்பட்டாலும் போற்றவோ தூற்றவோ இல்லை. வி.எஸ்ஸின் அரசியல் எதிரியான பிணராயி விஜயனுக்கும் அவருக்கும் சுகுமாரனின் தராசில் அதனதன் போக்கிலே ஏற்ற இறக்கங்கள். நாஸ்திகராக உள்ள போதும் அவர் கடவுளைப் பார்த்து பரிதாபமே படுகிறார். கேரள அரசியலில் உள்ள ஊழலும் மெத்தனமும் படுகொலைகளும் பண்பாட்டில் சனாதனவாதமும் சுகுமாரனால் எட்டி நின்று தெளிவாக கவனிக்கப்படுகின்றன. கட்சி கொள்கைகளையும், மதம் கடவுளையும் அதிகாரத்துக்காக கைவிடுவதே நம் காலத்தின் தவிர்க்க இயலாத நியதி என்பது அவரது பார்வை. மிகுந்த சமநிலையுடன் தமிழில் எழுதப்பட்ட அரசியல் கட்டுரைகள் சுகுமாரனுடையனவாகத் தான் இருக்கும்.
No comments :
Post a Comment