Sunday, 26 June 2011

ஸ்டான்லி க டப்பா: குடும்பத்திற்கு அப்பால் உள்ள அம்மா



ஸ்டான்லி க டப்பா வணிக சினிமாவின் வடிவொழுங்கை ஓரளவு மீற முயலும் படம் என்பதும், குழந்தைகளுக்கு க்ற்பனை மீசை ஒட்டி பேச வைக்காத படம் என்பதும், குழந்தைகளின் பெயரில் அமீர்க்கான் போன்றவர்கள் “ரஜினி அங்கிள் வேசம் போடாத படம் என்பதும் காட்சிகள் ஓடத் துவங்கின கொஞ்ச நேரத்திலே உங்களுக்கு புரிந்து விடும். குழந்தைகளின் காதலும் இல்லை. ஒரு உயர்மத்திய தர கத்தோலிக்க பள்ளிக்கூடம். அங்கு உணவு இடைவேளைகள் மற்றும் வகுப்புகளுக்கு இடையிலான சிறு இடைவேளைகளின் போது குழந்தைகள் தங்கள் இயல்புலகத்துக்கு திரும்புவதை, வீம்பும் வேடிக்கையுமாக அரட்டையடிப்பதை, கூச்சலெழுப்புவதை ஆவணப்பட பாணியில் காண்பிக்கிறார்கள். மெல்ல மெல்ல தான் ஒரு கதையொழுங்குக்குள் படம் வருகிறது.
அடுத்து ஆங்கில ஆசிரியர் ரோசி (திவ்யா தத்தா) வருகிறார். அவர் நவீன தோற்றம், அழகு, இளமை கொண்டவர். ரோஸி தன் காதலனின் பைக்கில் தான் பள்ளிக் கூடத்தில் வந்து இறங்குகிறாள். இது முக்கியம். படத்தில் தோற்றம் சார்ந்த கிளிஷெ உள்ளது. நவீன ரோஸி ஜனநாயக பண்புகள் கொண்டவர். அவர் மாணவர்களை “how are you my sweet babiesஎன்று அழைத்தபடி தான் நாளும் வகுப்புக்குள் நுழைகிறார். அவர் குழந்தைகளை கண்டிப்பதில்லை, ஒழுங்குபடுத்த முயல்வதில்லை. பாடம் எடுப்பவர்கள் எல்லாம் மோசமான டீச்சர்கள் என்று இயக்குநர் நம்புவதாலோ ஏனோ ரோஸி பாடமே எடுப்பதில்லை. மற்ற வாத்தியார்களை வில்லனாக காண்பிக்க வெறுமனே அவர்கள் பாடம் எடுக்கும் காட்சிகளை மட்டும் சில நொடிகள் காண்பித்து விடுகிறார்.

பாடம் எடுப்பதென்றால் என்ன? கல்வியியல் கோட்பாடுகள் இவ்விசயத்தில் முரண்பாடான நிலைப்பாடுகள் கொண்டவை. சுருக்கமாக இரண்டாக பிரிக்கலாம். பசங்களை வலியுறுத்தி படிக்க வைக்க வேண்டும். அவர்களாகவே படிக்கும் படி விட்டு விட வேண்டும். முதல் வகையினர் கல்வியின் முக்கிய நோக்கம் குழந்தைகளுக்கு ஒழுக்கம் கற்பிப்பது என்று நம்புகிறார்கள். இரண்டாம் வகையினர் கல்வி என்பது ஆளுமை வளர்ச்சிக்கான பயிற்சி என்று நினைக்கிறார்கள். ஆளுமை ஏற்கனவே ஒருவருக்குள் இருக்கிறது என்பதால் அதை வளர அனுமதித்தால் மட்டும் போதும். நவீன கல்வியியல் மாணவர்களின் ஆர்வத்தை கிளர்த்தி அவர்களை இசை, விளையாட்டு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி கற்பிக்க பரிந்துரைக்கிறது. ஆனால் பாடம் எப்படி எடுக்க வேண்டும் என்பதை சமூக, பொருளாதார சூழல் தான் தீர்மானிக்கிறது. இந்திய பெற்றோர்களுக்கு தேவை முடிந்தால் பத்து வயதிலேயே அலுவலகத்துக்கு அனுப்புவதற்கான கல்வி. இந்தியாவில் அனைத்து கல்வி முறைகளும் கலந்து கட்டி நடைமுறைப் படுத்தப்படுகின்றன. நாற்காலி, கரும்பலகை வசதி இல்லாத அரசு ஆரம்ப பள்ளிகளின் டீச்சர்களுக்கு கூட மாண்டிசாரி கல்வி பயிற்சி வழங்கப்படுகிறது. ஆக ஸ்டான்லியின் பள்ளிக்கூடமும் எந்த ஒரு வகைமையையும் சார்ந்ததல்ல. அங்கு பலவகையான வாத்தியார்கள் வருகிறார்கள். சம்பிரதாய தென்னிந்திய காட்டன் சேலை பிராமண அறிவியல் டீச்சர், நடந்தபடியே லூயிஸ் காரலின் கணித சூத்திரத்தை விளக்கும் கணக்கு வாத்தியார், நாடகீயமாக கற்பிக்கும் வரலாற்று வாத்தியார், இப்படியே பலவகையினர்.

இவர்கள் அறிமுகமாவதற்கு சற்று முன்னர் ஸ்டான்லி எனும் சிறுவன் அழுக்கான முகத்துடன் வகுப்புக்கு வருகிறான். அவன் தான் காட்சிகளின் குவிமையம். அவன் இடைவேளையின் போது தனது அன்று காலைப் பொழுதின் சாகசம் ஒன்றை நண்பர்களுக்கு விவரிக்கிறான். அவர்கள் அதை ரசிக்கிறார்கள். அது ஸ்டான்லியின் நண்பர் குழு. படம் அவர்களை சுற்றி நடக்கிறது. அடுத்து வகுப்புக்கு வரும் ரோஸி டீச்சர் ஸ்டான்லியிடம் அவன் முகம் ஏன் அழுக்காக உள்ளது என்று விசாரிக்கிறார். ஸ்டான்லி தான் வகுப்புக்கு வரும் வழியில் ஒரு பெரிய பையன் தன்னை அழைத்து அடிக்க, அவனை தான் திரும்ப அடிக்க, மேலும் பல சாகசங்கள் செய்ய அழுக்காகி விட்டதாய் சொல்கிறான். ரோஸி கேட்கிறார் “நீ அவனை கொன்று விடவில்லை அல்லவா?. வகுப்பு மொத்தமாய் சிரிக்கிறது. ஸ்டான்லி நாணி கோணிக் கொண்டே “இல்லை டீச்சர் என்கிறான். பிறகு வீட்டுப்பாடமாக எழுதி வரும் கட்டுரையில் ஸ்டான்லி அவன் அம்மா ரயில் மற்றும் பேருந்துகளில் இருந்து தாவி பறந்து இறங்குவதாக மிகை கற்பனையில் எழுதுகிறான். இதை ரோஸி மிகவும் ரசித்து கட்டுரையின் விளிம்பில் அவனை பாராட்டி குறிப்பெழுதுகிறாள். ஸ்டான்லி உண்மையில் ஒரு உணவகத்தில் குழந்தைத்தொழிலாளி. அங்கு அவன் சுத்தம் செய்யும் போது பட்ட அழுக்குடன் வகுப்புக்கு வந்து விடுகிறான். அவன் ஒரு அநாதை. அவன் தன்னிடம் இல்லாத ஒவ்வொன்றுக்கும் மிகைப்படுத்தி சமனப்படுத்த பார்க்கிறான். இது தான் அவனது அடிப்படை குணம். இதை வகுப்பு நண்பர்களும், ரோஸியும் ஏற்றுக் கொள்கிறார்கள், ரசிக்கிறார்கள்.
படத்தின் அடுத்த கட்டம் உணவை பற்றியது. இது மிக முக்கியமான இடமும் கூட. இடைவேளைகளின் போது டப்பாக்கள் திறக்கப்பட்டு பல விதமான உணவுப்பண்டங்கள் வெளிப்படுகின்றன. பிஸ்கட், ரொட்டி, பாஜி, ஆலுபராத்தா, இப்படி பல சைவ உணவுகளாக புசிக்கப்படுகின்றன. தொடர்ந்து பல காட்சிகளில் உணவுகளும், அவை பகிர்ந்தும் தனித்தும் சுவைக்கப்படுவதும் காட்டப்படுகிறது. இக்காட்சிகள் அலாதியானவை. மேலும் படம் இந்த உணவுகளை பற்றியது என்றும் குறிப்புணர்த்துகின்றன. ஏனென்றால் உணவு மாணவர்களை மட்டுமல்ல ஆசிரியர்களின் கற்பனையையும் ஆக்கிரமித்த ஒன்றாக உள்ளது. இடைவேளைகளின் போது ஆசிரியர் அறையில் அவர்கள் வீட்டில் செய்த பிஸ்கட்டில் இருந்து ரொட்டி வரை விநியோகித்து பகிர்ந்து ருசிக்கிறார்கள். உணவு தவிர்த்த வேளைகளில் ஆசிரியர்களின் அறை காண்பிக்கப்படுவதே இல்லை. உணவு பசியடக்குவதற்கான, ருசிப்பதற்கான பொருள் மட்டும் அல்ல. அது ஒருவரின் பின்னணியை, கலாச்சாரத்தை காட்ட செய்திகளை பகிர பயன்படுகிறது. தென்னிந்திய பிராமண டீச்சரிடம் என்ன கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று கேட்க “தோசா என்கிறார் சலிப்புடன். ரோஸி தன் திருமண செய்தியை சொல்ல சாக்லேட் கேக் நீட்டுகிறார். புதிதாக வேலைக்கு சேர வந்திருக்கும் வரலாற்று ஆசிரியர் சுட்ஷியிடம் தன்னுடன் உணவு உண்ணுமாறு கேட்கிறார். தலைமை ஆசிரியர். சூட்ஷி தன்னிடம் சாப்பாட்டு டப்பா இருப்பதாக சொல்லி மறுக்கிறார். சூட்ஷி தினமும் ஒவ்வொரு மாநில உணவாக கொண்டு வந்து சுவைக்கிறார். உணவு டப்பா ஒரு அடையாளமும் கூட. உணவை இழந்தவன் தன் வாழ்வின் ஒரு தனித்துவத்தை இழந்தவனாகிறான். அப்படி ரெண்டு பேர் இருக்கிறார்கள்.
ஒருவன் ஸ்டான்லி. மற்றொருவர் அவனது இந்தி வாத்தியார் பாபுபாய் வர்மா (இயக்குநர் அமொல் குப்தெ). 

பாபுபாயும் ஸ்டான்லியை போன்று ஒழுங்கற்ற தோற்றம் கொண்டவர். நெற்றியில் புரளும் கலைந்த சுருட்டு மயிர், கட்டற்ற தாடி, வெறித்த கண்கள், சட்டையை மீறி புரளும் தொப்பை. எதையோ இழந்த பரபரப்பில் இருப்பவர். அவருக்கு சதா பசிக்கிறது. அவர் அறிமுகமாகும் முதல் காட்சியில் வகுப்பை பாதியில் நிறுத்தி ஆசிரியர் அறைக்கு ஓடி செல்கிறார். ஆவேசமாய் மற்றொருவர் டிபன் டப்பாவை திறந்து ஜிலேபி திருடி தின்கிறார். அதையும் ஒவ்வொன்றாய் எடுத்து வைத்து பார்த்து பார்த்து ருசித்த பின்னரே தின்கிறார். அவர் தின்று முடிக்கும் முன் வகுப்பு முடிந்து விடுகிறது. இடைவேளையின் போது ஒவ்வொரு சக-ஆசிரியராக பாபுபாய்க்கு தங்களது வீட்டு உணவை கொடுக்கிறார்கள். சில அலுத்துக் கொண்டு கொடுக்கிறார்கள். தனக்கு பிடிக்காத உணவு (bread-jam) என்றால்  பாபுபாய் அவராகவே அலுப்பாகி மறுத்து விடுகிறார். தராதவர்களின் டப்பாவை எட்டிப் பார்த்து “என்னம்மா இன்னிக்கு ஸ்பெஷல்? என்கிறார். சிலர் அவசரமாக உணவை முழுங்கி அவரை பார்த்து “தீர்ந்து போசுப்பா என்கிறார்கள். புதிதாய் வரும் வரலாற்று ஆசிரியர் கொண்டு வந்து தரும் மாநில வகையான உணவுகள் அவரை சொக்கி போக செய்கின்றன. பாபுபாய் ஸ்கூலில் இருக்கும் முழுநேரமும் உணவை பற்றி சிந்தித்தபடியே இருக்கிறார். வகுப்பு நடக்கும் போது மூலையில் குவிக்கப்பட்டிருக்கும் உணவு டப்பாக்களை பார்வையிடுகிறார். அதில் ஒரு பிரம்மாண்ட அடுக்கு கேரியர் இருக்கிறது. அது அவரை கவர்கிறது. விசாரிக்கிறார். அது குடும்பத்தால் நன்றாக பராமரிக்கப்படுகிற ஒரு குண்டுப்பையனுடையது. அவன் தாராள மனம் கொண்டவன். தன் பிரம்மாண்ட டப்பாவை சகமாணவர்களுடன் பகிர்ந்து உண்கிறான். அவன் ஆர்வமாக மிகுதியாக சாப்பிடுவதாகவே படத்தில் காண்பிப்பதில்லை. வெறுமனே கொறிக்கிறான். ஒல்லிப்பீச்சான் மாணவர்களே ஆவேசமாக முழிபிதுங்க உணவை விழுங்குகிறார்கள். சுவையான நிறைய உணவு உள்ள குண்டுப்பையன் அசட்டையாக இருக்கிறான். ஏனென்றால் உணவு சதை வளர்ப்பதற்கானது மட்டுமல்ல. இன்று உணவு பெரிதும் மனதால் புசிக்கப்படும் ஒரு பொருள். வளரும், வளர்ந்த நாடுகளில் நகரவாசிகள் உணவில் பல்வேறு நிற வடிவ காட்சிகளை தங்கள் மனதால் நாளும் ஒரு டில்டோ போல் சப்பிக் கொண்டே இருக்கிறார்கள். உணவுக்கான மனப்பசி அடங்குவதே இல்லை. உணவு இடைவேளையின் போது சாப்பாட்டு டப்பா இல்லாத ஸ்டான்லி வழக்கம் போல் தான் வெளியே சென்று பாவ்பஜ்ஜி வாங்கி சாப்பிடப் போவதாக பொய் சொல்லி உண்மையில் டாய்லெட் குழாயில் தண்ணீர் குடித்து வயிற்றை ரொப்புவதற்காக கிளம்பும் போது நண்பனின் சாப்பாட்டு டப்பாவை பார்க்கிறான். “அது என்ன?
“ஆலு பராத்தா
“நான் கொஞ்சம் சுவைக்கலாமா?
“ஓ தாராளமா.
அப்போது பாபுபாய் அந்த குண்டுப்பையனை தேடி வகுப்புக்கு வந்து விடுகிறார். ஸ்டான்லி உணவை பிறரிடம் இருந்து வாங்கி சாப்பிடுவதை பார்க்கிறான். அவருக்கு கடுமையான கோபம் ஏற்படுகிறது. அடுத்தவர் உணவை உண்பது குற்றம் என்றி ஸ்டான்லியை கண்டித்து விரட்டுகிறார். பிறகு அவர் குண்டுப்பையனிடம் அதே கேள்வியை கேட்கிறார். “அது என்ன?
“ஆலு பராத்தா
“நான் கொஞ்சம் சுவைக்கலாமா?
“ஓ தாராளமா.
இங்கிருந்து ஸ்டான்லிக்கும் பாபுபாய்க்குமான மறைமுக மோதல் ஆரம்பிக்கிறது. சுவாரஸ்யமாக, இருவரும் ஒரே ஆளுமையின் இரு பக்கங்கள் தாம். பாபுபாய் ஒரு வளராத குழந்தை. ஆனால் இருவருக்கும் இடையே ஒரு ஒரு நுட்பமான வித்தியாசம் உள்ளது. ஸ்டான்லி தன் மனக்குறையை மிகையான பொய்களின் மூலம் இட்டு நிரப்புகிறான். பாபுபாய் தன் பதினாறு கரங்களையும் நீட்டி வலுக்கட்டாயமாக வாங்கி தன் இன்மையை நிரப்புகிறார். அவருக்கு தன்னை யார் மறுத்தாலும் அந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடிவதில்லை. ஸ்டான்லி தன் இல்லாமையுடன் ஒரு சமரசம் செய்துள்ளான். பாபுபாயால் அது முடியவில்லை. அவர் ஏன் ஸ்டான்லியை உக்கிரமாக வெறுக்கிறார்?
சார்லி சாப்ளின் குழந்தைகளை வெறுத்தார் என்று நமக்குத் தெரியும். அவர் மனதுக்குள் வளரவே இல்லை. டாக்‌ஷ்ஹண்டு போன்ற குள்ளமான நாய் வகைகளும் குழந்தைகளை பார்த்தால் அதிகம் குலைக்கின்றன. சில ஊனமுற்றோர் சக ஊனர்கள் மீது வெறுப்பு கொள்வதையும் பார்த்திருக்கிறேன். பாபுபாயால் தனது இன்னொரு உருவமான ஸ்டான்லியை தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அவர் பெரியவர்களுக்கான விழுமியங்களை முன்னெடுப்பதன் மூலம் தன்னை அவனில் இருந்து வேறுபடுத்தி காட்ட விரும்புகிறார். ஸ்டான்லிக்கு இடக் கை பழக்கம் இருப்பது அறிந்து அவனை வலது கைக்கு மாறுமாறு வலியுறுத்துகிறார். “Right கையால் எழுதினால் தான் right” என்கிறார் அழுத்தமாக. உணவு விசயத்தில் மட்டும் அவரது அசலான குணம் வெளியே வந்து விடுகிறது. பாபுபாயிடம் இருந்து ஸ்டான்லியை காப்பாற்ற குண்டுப் பையன் குழுவினர் தங்கள் பிரம்மாண்ட அடுக்கு டப்பாவுடன் இடைவேளைகளின் போது ஒவ்வொரு நாளும் புதுப்புது இடங்களுக்கு சென்று அமர்ந்து ஸ்டான்லியுடன் பகிர்ந்து உண்கின்றனர். பாபுபாய் அவர்களை தேடி மாடிப்படிக்கு கீழே, விளையாட்டு மைதானம், அரங்கம் என்று பல்வேறு இடங்களிலாய் அலைகிறார். ஒவ்வொரு முறையும் அவர் வந்து சேரும் போது காலி பாத்திரங்களே எஞ்சுகின்றன. கடைசியில் ஒருநாள் அவர்கள் மொட்டைமாடியில் இருந்து உண்பதை கண்டுபிடித்து விடுகிறார். தன்னை அவர்கள் ஏன் ஏமாற்றினார்கள் என்று பொருமுகிறார். கோபமாய் மிரட்டுகிறார். பிறகு குழந்தைகளின் உணவை இரக்கமின்றி காலி செய்கிறார். இங்கு அவர் ஒரு குழந்தையை விட குழந்தைத்தனமாகி விடுகிறார். ஸ்டான்லியிடன் உணவு டப்பா இல்லாமல் அவன் வகுப்புக்குள் வரக்கூடாது என்று கட்டளையிடுகிறார். பாபுபாய் மாணவர்களை துரத்தி தொந்தரவு செய்யும் காட்சிகள் slapstick தன்மை கொண்டவை. நம்ப முடியாதபடி விநோதமானவையும். அதற்கு காரணம் உணவு இங்கு ஒரு குறியீடு என்பதே. இது குறியீட்டு படைப்புகளின் இயல்பே.

உணவு இல்லாமல் போவதும், உணவை சம்பாதிப்பதும் ஒருவன் தன்னை சமூகத்தில் பண்பாட்டுரீதியாக தாழ்த்தி உயர்த்தும் நிகழ்வுகள். இதற்கு ஒரு உதாரணம் காட்பாதரில்பார்க்கலாம். கார்லோ ரிஸி ஒரு சோட்டா குற்றவாளி. பாதி ஸிஸிலியன். அவன் காட்பாதரான விட்டோ கோர்லியாவின் மகள் கோனியை காதலித்து மணக்கிறான். அவனுக்கு கோர்லியோனா குடும்பத்துக்குள் சமமரியாதை இல்லை. மரியோ பூசோ அவனை “a punk at sore with the world” என்கிறார். அவனுக்கும் கோனிக்கும் சச்சரவுகள் வரும். அதை அத்துமீறி போவதில்லை. ஆனால் ஒருநாள் கோனி அவனை தூண்டுவதற்கன்றே ஒரு காரியம் செய்கிறாள். எளிய பின்னணியில் இருந்து வந்த ரிஸ்ஸியை எவ்வளவு கெட்ட வார்த்தைகளால் வைதாலும் தாங்கிக் கொள்வான்; அவமானங்களை சகித்துக் கொள்வான். ஆனால் தன் உணவு வீணாவதை மட்டும் அவனால் தாங்க முடியாது. அது அவனை கொந்தளிக்க செய்யும். இதனால் ஒரு சண்டையின் போது கோனி வேண்டுமென்றே சமையலறையில் செய்து வைத்த உணவை வாரி இறைக்கிறாள். அவன் சமநிலை இழந்து மனைவியை பெல்டால் விளாசுகிறான். இதன் தொடர்விளைவாக அவன் கோனியின் சகோதரன் சன்னியின் மரணத்துக்கு காரணமாகிறான்; இரண்டாம் காட்பாதராகும் மைக்கேலால் இறுதியில் கொல்லப்படுகிறான். கோர்லியானா குடும்பத்துக்குள் நடக்கும் முதல் இரு துரோகங்கள் ஒரு தனிமனிதனின் போதாமை கேலி செய்யப்படுவதில் இருந்தே ஆரம்பிக்கின்றன. மைக்கேல் செய்த முதல் பெரும் பாவமாக இதுவே காண்பிக்கப்படுகிறது. அவன் தன் சகோதரியின் கணவனை கொன்ற பாவத்திற்கு மன்னிப்பில்லாமல் வாழ்நாளெல்லாம் மனசாட்சியுடன் போராடுகிறான். மறைமுகமாக அக்குடும்பத்தின் அறவீழ்ச்சி உணவில் இருந்து தான் தொடங்குகிறது.
ஸ்டான்லி க டப்பாவில்வரும் முக்கிய அவதானிப்பு பொதுவாக வணிக படைப்புகளில் காட்டப்படுவது போல் மனிதர்கள் முடிவில் தம் குறைகளை நிவர்த்தி செய்து மேன்மை அடைவதில்லை என்பதே. பொதுவாக coming-of-age படங்களில் ஹீரோவின் கண்களில் ஒரு போதி மரம் தென்படும். ஆனால் நிஜத்தில் மனிதர்கள் தம் போதாமையுடன் வாழ கற்றுக் கொள்கிறார்கள். அதை மறைத்தோ, அதனை மறுத்து பொருதி முரண்பட்டோ, அல்லது ஏற்று அமைதியடைந்தோ அவர்கள் தொடர்ந்து வாழ்கிறார்கள். சதா கொந்தளித்துக் கொண்டிருக்கும் மனிதன் கலை, தியாகம், வன்முறை போன்ற ஏதாவதொரு வழியில் மனசமநிலை அடைகிறான். ஹருகி முராகாமியின் நாவல்களில் அவர் வலியையும், இழப்பையும் எப்போதும் நம்முடன் தான் இருக்கின்றன. அவற்றை ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் ஒருவரை தீர்மானிக்கிறது என்கிறார். ஸ்டான்லி அபாரமான கற்பனை கொண்டவன். அவன் இறுதிவரை தான் அநாதை என்பதை வெளியில் யாருக்கும் தெரிவிப்பதில்லை. நண்பனின் நுண்பேசி வாங்கி அம்மாவிடம் பேசுவதாக நடிக்கிறான். உணவகத்தில் அவனுடன் பணிபுரியும் சமையற்காரர் அவனுக்கு உதவ அவன் மீதமாகும் வகைவகையான ஓட்டல் உணவுகளை ஒரு அடுக்கு கேரியரில் நிறைத்து பாபுபாயிடம் முன் கொண்டு வைக்கிறான். அவன் அவரிடம் சொல்கிறான். “இது தான் ஸ்டான்லியின் டப்பா. இரு குழந்தைகளுக்கு இடையிலான போட்டியில் ஸ்டான்லி ஜெயிக்கிறான். பிறகு அவன் அனைத்து ஆசிரியர்களுக்கும், தன் வகுப்பு நண்பர்களுக்கும் உணவு வகைகளை தினமும் கேரியரில் கொண்டு சென்று விளம்புகிறான். அனைவரும் அவனது உணவை வியக்கிறார்கள். பன்னீர் மசாலாவை காட்டி சொல்கிறான் “இதிலுள்ளது அசலான பன்னீர். இங்கே எல்லாம் கிடைக்காது. இதை வாங்க என் அம்மா பஞ்சாப் வரை சென்றார்கள். இப்படி அவன் உணவை காட்டி தம்பட்டம் அடிப்பதுடன் படம் முடிகிறது. ஸ்டான்லியின் அந்த டிபன் கேரியர் பாதி அவன் கற்பனையால் உருவானது தான். அது அவன் அம்மா, அவனது குடும்பம், அவன் தனது போதாமை மீது அடைந்த வெற்றி.
படத்தின் இறுதியில் ஒரு மேடை நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் ஸ்டான்லியை தங்கள் காரில் வீட்டில் சென்று விடுவதாய் ஜோடியாய் வந்த ரோஸி டீச்சர் சொல்கிறார். ஸ்டான்லி மறுக்கிறான்: “என் அம்மா வருவார்கள். நான் அவருக்காக காத்திருக்கிறேன். ஸ்டான்லியின் அம்மா யார்? பின்னர் அவனது தலைமையாசிரியரான கத்தோலிக்க ஃபாதர் ஒருவர் அவனை வீட்டில் விடுவதாக அழைக்கும் போது மறுக்காமல் அவர் காரில் ஏறி செல்கிறான். அடுத்து, அவனுடன் வேலை செய்யும் ஒருவர் தான் அவனுக்கு தினமும் டப்பா கட்டிக் கொடுக்கிறார். வகுப்பில் அவன் தன் அம்மா குறித்து பீற்றிக் கொள்ளும் போதெல்லாம் அவர் தான் குறிக்கப்படுகிறார். அவர் இரவில் அவனை சாப்பிட அழைத்து கொடுத்து, படுக்கை அமைத்து தூங்க வைக்கும் மிக பரிவான காட்சி ஒன்றுள்ளது. ஸ்டான்லி இங்கு தான் தம் அம்மாவை கண்டடைகிறான்.
வெவ்வேறு முகமற்ற மனிதர்கள் உண்டு போக உணவகத்தில் மீதமாகும் உணவை தான் அவன் தினமும் கேரியரில் பள்ளிக்கு கொண்டு வந்து அம்மா தந்தது என்று சொல்லி பீற்றுகிறான். கழிவு உணவால் ஆன அந்த சாப்பாட்டு டப்பா அனைத்தின் கலவையுமான இந்த உலகம் தான். அதனால் தான் அவ்வுணவு அலாதியான சுவை கொண்டதாக இருக்கிறது. அதை தன் கற்பனை சேர்த்து அவன் எல்லாருக்கும் விளம்புகிறான்.
Share This

2 comments :

  1. மே மாதமே இப் படத்துக்கு கேபிள் சங்கர் விமர்சனம் எழுதி இருந்தார். அவர், 'தாரே ஜமீன் பர்' படத்தோடு இதை ஒப்பிட்டு, இப் படத்தைப் பாராட்டியும் எழுதி இருந்தார்.

    நீங்கள் இவ்வளவு பிந்தி எழுதுவதில், உங்கள் ஆத்ம திருப்திக்கு எழுதுகிறீர்கள் என்று எடுத்துக்கொண்டேன்.

    கேபிள் சங்கர் பதிவுக்கு நான் இட்டிருந்த பின்னூட்டம்:

    ‘ஸ்டான்லி’ என்னும் பெயருக்கு ‘வற்புலத்தில் இருந்து’ என்று பொருள். நாயகனின் வாழ்நிலைச் சூழலையும் அவனது மன உறுதியையும் அப் பெயர் குறிக்கிறது.

    ஹிந்தி வாத்தியாருக்கு இடப்பட்ட வர்மா என்னும் பெயரொட்டு, இந்தியாவின் பழையதொரு க்ஷத்ரிய குலத்திற்கான வர்ணப்பெயர் ஆகும். ‘கடூஸ்’ என்னும் அவரது பட்டப்பெயருக்கு ‘அற்பன்’ என்று அர்த்தம்.

    ‘அய்யர்’ என்னும் பெயரொட்டோடு வரும் அறிவியல் ஆசிரியை, புத்தகப் படிதான் செய்முறை இருக்க வேண்டும்; புதிய கண்டு பிடிப்புகள் கூடாது என்று ஸ்டான்லி உருவாக்கிய ‘கலங்கரை விளக்கத்தை’ வெளியே தூக்கிப் போடச் சொல்லுவார். மாறாக, அதற்கு முந்திய காட்சியில் ஆங்கில ஆசிரியை அச் செய்முறை ஆக்கத்திற்காக ஸ்டான்லியைப் பாராட்டி இருப்பார். அறிவியல் படித்தாலும் புரோகித ஜாதி அப்படித்தான், ஆனால் ஆங்கிலேயர்கள் அப்படியில்லை என்னும் குறிப்புணர்த்தல் அது. அதே ஆங்கில ஆசிரியையும் அவருக்கு மணாளனும், ஸ்டான்லி மீந்ததைக் கொண்டுவந்து தன் தாய் ஆக்கியதாகக் கற்பித்துக் கூறுகையில் அதைச் சுவைத்துப் பாராட்டுவார்கள். அதாவது, ஆங்கிலேய/ மேற்கத்தியர்கள் நம் பழங்கதைப் புனைவுகளை ரசித்துப் பாராட்டித் திரிகிறார்கள் என்று பொருள்.

    ‘கடூஸ்’ என்று விளிக்கப்படுகிற ஹிந்தி வாத்தியார் இந்திய நாட்டின் குறியீடு. களவாடி அல்லது கையேந்தி வாங்கித் தின்னும் பிழைப்பிற்குரியவராக அவர் காண்பிக்கப் படுகிறார்.

    இப்படியெல்லாம் உள்-அர்த்தங்களோடு படம் இருந்தாலும், ‘தாரே ஜமீன் பர்’ படத்துக்கு ‘ஸ்டான்லி கா டப்பா’வை இணைவைக்க முடியாது என்பதே என் கருத்து. அதில் உள்ள வெளிவிரிவும் நகர்வும் வர்ணங்களும் இதில் இல்லவே இல்லை.

    சாப்பாட்டுப் பிரச்சனை இறுக்கமான ஒன்று என்பதால், அடைத்துநெரிந்த காட்சிகளால் இப் படத்தை இயக்குநர் ஆக்கி இருக்கலாம் என்று என்னைத் தேற்றிக்கொண்டேன்.

    ReplyDelete
  2. நல்ல ஒரு படத்தை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி. படத்தை பார்க்கத் தூண்டும் பரிந்துரை.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates