ரெண்டாயிரத்துக்கு பிறகு கிரிக்கெட்டில் சிறந்த அணிகளே இருந்துள்ளன. இந்த சிறந்த அணிகளின் பொருட்டு சிறந்த அணித் தலைவர்கள் தோன்றினார்கள். மாறாக அல்ல. உதாரணமாக, ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், தென்னாப்பிரிக்காவின் ஸ்மித், பாகிஸ்தானின் இன்சமாம், இங்கிலாந்தின் ஸ்டுராஸ். இவர்களின் வரிசையில் மகேந்திர சிங் தோனியும் வருகிறார்.
மேற்சொன்ன யாவரும் அவ்வவ்வணிகளின் முக்கிய வீரர்களே அன்றி ரட்சகர்களோ மீட்பர்களோ அல்ல. லாபம் கொழிக்கும் ஒரு நிறுவனத்தின் நளினமான திறமையான மேலாளரை போல் அணியின் போக்கில் சென்று தமது பங்கை ஆற்றினர். அணி உயர்ந்த போது தாமும் உயர்ந்தனர், வீழ்ந்த போது கூடவே வீழ்ந்தனர். இம்ரான்கான், கங்குலி, நசீர் ஹுசேன், ஆலன் பார்டர், ரணதுங்கா போல் தமது தனிச்சிறப்பான ஆளுமையின் அச்சில் ஒரு அணியை புத்துருவாக்கி அதன் காட்பாதராக செயல்பட்டு தமதான ஒரு தடத்தில் செலுத்தவோ செய்தவர்கள் அல்ல இவர்கள். புதிய தலைமுறை அணித்தலைவர்களின் பணியும் பொறுப்பும் முற்றிலும் வேறொன்றாக கடந்த பத்து வருடங்களில் மாறி வந்துள்ளது.
இன்றைய அணித்தலைவர் ஒரு பக்கம் கிரிக்கெட் வாரியத்தின் கைப்பாவையாக அல்லது மீடியாவை திறமையாக கையாளத் தெரிந்தவராக அல்லது சந்தை மதிப்பு மிக்க நட்சத்திரமாக அல்லது அணியின் சிறந்த வீரர்களை சுதந்திரமாய் ஆடவும் பாதுகாக்கவும் செய்பவர்களாக, ஒரு ஆட்டத்தை ஜெயிப்பதை விட தோற்பதை தவிர்க்க முயல்பவராக, தோற்கும் பட்சத்தில் குறைந்தபட்ச பாதிப்புடன் தோற்க செய்பவராக, மோசமாக தோற்கும் வேளையிலும் அணியின் அந்தஸ்தை காப்பாற்ற முடிபவராக இருக்க வேண்டும். இன்றைய அணித்தலைவருக்கு ஒரு அணியை வெற்றிக்கு அழைத்து செல்பவர் என்ற பிம்பம் இல்லை. ஏகப்பட்ட கிரிக்கெட் ஆடப்படும் வேளையில் உலகக்கோப்பை வெற்றிக்கே குறைந்த மீடியா மதிப்பும் ஸ்திரமற்ற கவர்ச்சியும் உள்ள காலத்தில் அதிக சேதங்கள் இன்றி போர்க்களத்தில் இருந்து அணியை காப்பாற்றி அழைத்து போவதே தலைவரின் பொறுப்பாகிறது. ஒரு குறிப்பிட்ட ஆட்டத்தில் இறுதி வெற்றியை விட ஒவ்வொரு பந்தின் போதும் அணி வீரர்கள் ஆடும் தம்மை நடத்திக் கொள்ளும் விதம் கடுமையான கண்காணிப்புக்கு உள்ளாகிறது. ஒரு சில பந்துகளில் மொத்த உலகையும் திரும்பிப் பார்க்கும் படி ஆடும் அணிக்கு ஒரு ஆட்டத்தை எளிய விதிகளின் படி வெல்லும் அணியை விட இன்று அதிக மதிப்பு உள்ளது. ஒரு சில நிமிடங்களுக்கு மட்டும் சாதனைகள் சிலாகிக்கப்படுவதால் ஒரு அணித்தலைவரின் தரம் மற்றும் பங்களிப்பு இன்று மிகுந்த குழப்பத்துக்குரிய ஒன்றாக மாறி உள்ளது. ஆடுதளத்திலும் மைதானத்திலும் மிக நன்றாக தன் பாத்திரத்தை கோடிக்கணகளின் முன்பு நடிக்கும் தலைவரே இன்று நட்சத்திரமாக காணப்படுகிறார். அந்த விதத்தில் விக்கெட் கீப்பருக்கும் வேகவீச்சாளருக்கும் அடுத்தபடியாய் நன்றியில்லாத பணியை செய்பவர்களாக அணித்தலைவர் காணப்படுகிறார். ரிக்கி பாண்டிங், இன்சமாம், ஸ்மித், ஸ்டுராஸ் ஆகிய தலைவர்கள் விமர்சகர்களாலும் வர்ணனையாளர்களாலும் எந்த உயர்ந்த தலைமைப்பண்புகளும் அற்றவர்களாகவே முத்திரை குத்தப்பட்டவர்கள்; சிறந்த மட்டையாளர்கள் என்பதே அவர்களின் இருப்பின் ஒரே நியாயமாக கருதப்பட்டது. திட்டமிடல் வழிநடத்துதல் தாக்குதல் பண்பு ஆகிய பரிமாணங்களில் சோபிக்காதவர்கள் என்று தொடர்ந்து கண்டனத்துக்குள்ளானவர்கள். தங்கள் அணியின் நட்சத்திர பிரகாசத்தை கடன் வாங்கி சோபித்தவர்கள் என்று மட்டம் தட்டப்பட்டவர்கள். குறைந்த திறமை உள்ள ஆனால் அட்டகாசமான தலைமை பண்புகளும் மேலாதிக்க ஆளுமையும் கொண்ட ஸ்டீவ் வாஹ், ரணதுங்கா போன்ற முன்னோடிகளின் பொற்காலத்தில் பாண்டிங், ஸ்மித், சங்கக்காரா வகையறாக்களுக்கு இடமில்லை என்று கோடு கிழிக்கப்பட்டது. ஆனால் இன்றைய தலைவரின் அடையாளம் மாறி விட்டது என்பதை மீடியா அறிவுஜீவிகள் கவனிப்பதில்லை. நவீன அணித்தலைவர்கள் வேறுபட்ட ஒரு பொறுப்பை கையாளுவதையோ கடுமையான தொடர் நெருக்கடிக்கடிக்குள் இருப்பதையோ அவர்கள் கவனத்தில் கொள்வதில்லை. இன்றைய அணிகளுக்குள் இம்ரான்கான் அல்லது கங்குலி போன்ற சர்வாதிகார ஆளுமைக்கு இடமில்லை என்பதே உண்மை.
அணித்தலைமையை பொறுத்தமட்டில் இன்று இரு போக்குகளை தெளிவாக காண்கிறோம்.
ஒன்று அணியின் ஒருங்கிணைந்த வளர்ச்சி, ஒழுக்கம் மற்றும் தனிநபர்களின் அணி விசுவாசம், நூறுசதவீத பங்களிப்பு ஆகியவற்றை முன்னிறுத்தும் குறைந்த பட்ச எதிர்பார்ப்புகள் கொண்ட எந்த ஏமாற்றத்துக்கும் தயாராக உள்ள ஆனால் வலுவான ஆளுமை கோண்ட அணித்தலைவர்கள். இவர்களின் பங்களிப்பு முற்றிலும் புதிதாய் ஒரு அணியை புத்துருவாக்குவதல்ல, அணியின் ஆட்டத்தரத்தை நான்கு வருடங்கள் பாதுகாப்பது, தொடர வைப்பது. இன்சமாமில் இருந்து சமீபமாய் தலைமையில் ஓய்வு பெற்ற கிரேம் ஸ்மித் வரை இந்த வகை. இவர்களை குமாஸ்தா கேப்டன்கள் எனலாம். இந்த வகையில் வருபவர் தான் தோனி. அவர் அதிக திட்டமிடல் திறமையும், மீடியா நாவன்மையும் வசீகரமும், அரசியல் சூட்சுமமும் கொண்டவர். ஒரு மேலான குமாஸ்தா கேப்டன். இதை ஒரு களங்கமாக நாம் காண வேண்டியதில்லை. நவீன அணித்தலைவர்கள் வேறெப்படியும் இருக்க இயலாது.
இரண்டாவது வகை முழுக்க வாரியத்தின் அடிமையாக உள்ள தலைவர்கள். பாகிஸ்தானின் ஷோயப் மாலிக் மற்றும் மிஸ்பா உல்ஹக், மே.தீவுகளின் டேரன் சாமி, வங்கதேசத்தின் ஹசன் ஆகியோர் முதலாளி விசுவாசம் மிகுந்த அணித்தலைவர்கள். பாகிஸ்தான் மற்றும் மே.தீவுகள் தீவுகள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளன. அவ்வணிகளின் ஆட்டத்தரமும் வீழுந்துள்ளது. விளைவாக இவ்வணிகளை வாரிய அதிகாரிகளும் பயிற்சியாளருமாக கைப்பற்றி குறைந்தபட்ச தனிநபர் ஆதிக்கம் கொண்டதாக நட்சத்திர மதிப்பற்றதாக மாற்றி ஒரு பலவீன பாதுகாப்பற்ற வீரரை தலைவராக்கி பினாமியாக செயல்பட மட்டும் அனுமதிக்கிறார்கள். பாகிஸ்தான் அடுத்த ஒருவருடத்தில் எந்த சர்ச்சைகளும் உட்பூசல்களும் இன்றி ஆடினாலே அதை ஒரு பெரும் சாதனையாக அவ்வாரியமும் பயிற்சியாளரும் கருதக் கூடும். மே.தீ அணி சமீபமாய் இந்தியாவுக்கு எதிரான இறுதி டெஸ்டை டிரா செய்தது. தொடரை இழந்தாலும் கடைசி டிராவை அவர்களும் பெரும் சிகர வெற்றியாக நினைத்து மைதானத்தை சுற்றி ஊர்வலமாக வந்து கொண்டாடினர். இப்படியான நடுத்தர மனநிலையை கொண்டாடும் நாடுகளின் வாரிய மேலாண்மைக்கு தேவை முதலாளியின் படம் ஒட்டின சூட்கேஸை சுமந்து காட்சியளிக்கும் ஓ.பன்னீர்செல்வங்கள் தான்.
இன்று சர்வதேச கிரிக்கெட்டில் தோனி சிறந்த அணித்தலைவராக கருதப்படுவதற்கு காரணம் அவரது அணி சிறந்த ஒன்று என்பது மட்டுமல்ல. இந்திய அணி இந்தியாவைப் போன்று மிக குழப்பமான ஒரு அணி. இந்தியர்களைப் போன்றே இந்திய அணி வீரர்களும் வலுவான உடல்நலம், பரஸ்பர அக்கறை, ஒற்றுமை அல்லது தொலைநோக்கு பார்வை அற்றவர்கள். நமது அணியின் பிரச்சனைகள் நமது பருவ சூழல், வரலாறு, கலாச்சாரம் ஆகியவற்றால் உருவானவை. கடந்த பத்து வருடங்களில் அணியில் நாம் காணும் குறைகள் தோனியால் களையப்படவில்லை. பலவீனங்கள் வலுப்படுத்தப்பட வில்லை. திட்டமிடலிலும் வாரிய அரசியலிலும் நாம் மேலும் மேலும் சீரழிந்து தான் வந்திருக்கிறோம். தோனியின் காலகட்டத்தில் ஐ.பி.எல் வருகையால் வீரர்கள் வாரிய நிர்வாகிகள், தேர்வாளர்கள், அணித்தலைவர் ஆகியோரின் கட்டுப்பாட்டை கடந்து சென்று விட்டனர். இன்று காயமுற்றுள்ள காம்பிர், சேவாக், சஹீர் கான் போன்றோரை ஐ.பி.எல் ஆடாமல் ஓய்வு கொள்ளும் படி யாரும் வலியுறுத்த முடியாது. ஆஸி மற்றும் இங்கிலாந்து வீரர்களை போல் நம் வீரர்கள் டெஸ்டு தொடர் ஒன்றுக்காக T20யில் இருந்து வரும் கோடிக்கணக்கான செல்வத்தை துறக்க தயாராக போவதில்லை. இந்த நிலைமையில் தோனி நமது பலவீனங்களில் அக்கறை காட்டாமல் வலிமைகளை சிறப்பாக முன்னெடுத்து சென்றார். தோனியின் கீழ் இந்தியா பெற்றுள்ள ஆகச்சிறந்த வெற்றிகளை ஒருங்கிணைந்த தொடர்ச்சியான சிறந்த மட்டையாட்டத்தின் விளைவு. கங்குலி, திராவிட் மற்றும் கும்பிளேவின் கீழ் கண்டறியப்பட்ட இளைய வீரர்கள் தோனியின் கீழ் சுதந்திரமாக அதிரடியாக ஆட முடிந்தது. மேலும் அவர் அடிப்படைகளுக்கு அணி ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் அளிப்பவர். தொடர்ந்து அடிப்படைகளில் கவனம் செலுத்தினால் போதும் வெற்றிகள் தானே வரும் என்று ஒவ்வொரு ஆட்ட முடிவிலும் சொல்பவர். தனது அணியின் ஆட்டநிலை மீது எளிதில் அதிருப்தி தெரிவிக்காதவர்.
மேலும் அவர் அணித்தலைவரான போது டெஸ்ட் அணியில் அவரை விட சாதனையாளர்களும் அனுபவஸ்தர்களும் அதிகம் இருந்தார்கள். அவர் ஒருநாள் அணித்தலைவர் ஆனதும் திராவிட் அணியில் இருந்து நீக்கப்பட்டார். கொஞ்ச நாளில் கடுமையான நெருக்கடி காரணமாய் கங்குலி டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வு பெறும்படி வற்புறுத்தப்பட்டார். லக்ஷ்மண், திராவிட் ஆகியோர் தோனி கீழ் நிலைப்பார்களா, சீனியர்கள் அவரை மதித்து ஆதரவளிப்பார்களா என்று ஐயம் நிலவியது. ஆனால் தோனி தன் ஒருநாள் வெற்றிகளை தொடர்ந்து டெஸ்ட் ஆட்டங்களிலும் பல போட்டிகளில் வென்றது மட்டுமல்லாமல் அவருக்கு கீழே சச்சின், லக்ஷ்மண் போன்றோர் தமது ஆகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவும் செய்தனர். டெஸ்டு ஆட்டங்களில் ஆயிரத்து சொச்சம் ஓட்டங்களே எடுத்துள்ள தோனி கிரிக்கெட்டில் நூறு சதங்களை நெருங்கிய ஒருவர் உள்ள அணியை கையாண்டு மூத்த சாதனையாளர்களின் ஆதரவையும் பெறுவது அபாரமானது. தோனியின் தலைமையின் கீழ் இந்திய அணியின் பந்து வீச்சு பெரும் சரிவை கண்டது. தோனி தன்னளவில் பந்து வீச்சாளர்களை ஒரு ஆயுதமாக அல்ல, பாதுகாப்பு கவசமாகவே கண்டவர். மேலும் கங்குலியை போல் அவர் சுழல் பந்துவீச்சாளர்கள் மீது குறைந்த நம்பிக்கை வைப்பவர் என்பதும் நமது இளைய சுழலர்களை வெகுவாக தளர்த்தியது. தோனியின் கீழ் சுழல் பந்துவீச்சு எப்போதும் எதிர்மறையானதாகவே உள்ளது. அடுத்து அவரது தலைமையின் கீழ் பல சீனியர்களுக்கு தொடர்ந்து தம் உடல்நலக் குறை காரணமாய் முக்கிய ஆட்டங்களில் ஆட முடியவில்லை. இந்த கட்டங்களில் தோனி அணியின் வெற்றி வாய்ப்பு ஷீணிக்காமல் காப்பாற்றினார். சமீபத்தில் இயன் சேப்பல் இவ்விசயத்தில் தோனியை மெச்சினார். ஒரு நைந்து போகும் பந்து வீச்சை கொண்டு இந்திய அணியை தரவரிசையின் முதல் இடத்தில் தக்க வைக்க முடிந்தது முழுக்க தோனியின் தலைமை சாதனை தான் என்று சற்று நகைமுரண் தொனிக்க கூறினார். அணியின் பலவீனங்களை திறமையாக மறைத்து அதனை மெருகேற்றி ஆடவைத்தது தோனியின் அபார சாதனைகளில் ஒன்று. மேலும் மட்டையாட்டத்தை அவர் ஒழுக்கம் சார்ந்த அறிவியல் பூர்வமான ஒன்றாக மாற்றினார். டெஸ்டோஸ்டிரான் சுரப்பின் செயல்பாட்டுக்கு ஏற்றபடி ஆடி பழகின இந்திய மட்டையாளர்களை ஒற்றை ரெட்டை ஓட்டங்களில் கவனம் செலுத்த வைத்து நடைமுறை ஞானத்துடன் ஆட வைத்தார். தோனியின் கீழ் இந்திய அணி ஒரு ஓவரில் பவுண்டரி அடிக்காமலே ஆடி 300க்கு மேல் இலக்கை அடைய முடியும் என்று கற்றது. ஏற்கனவே திறமையான அதிரடி வீரர்கள் கொண்டிருந்ததால் இந்த நடைமுறைவாத நோக்கு அணியின் வலுவான மட்டையாட்டத்தை எதிரணிக்கு ஆபத்தானதாக மாற்றியது. வலிமைகளில் ஈடுபாடு செலுத்தி மேலும் வலுவானதாக அணியை மாற்றும் இந்த நேர்மறை போக்கினால் தான் தோனி உலகக் கோப்பையை வென்றளித்தார்.
அதே நேரத்தில் ஒரு பந்துவீச்சு தலைவராக அவரது நிலைப்பாடு என்றுமே எதிர்மறை தான். தொடர்ந்து
தொட்டதெல்லாம் பொன்னானதால் தோனி மீது விரல்கள் இதுவரை சூண்டப்படாமல் இருந்தது. உள்ளூரில் முக்கியமான ஆட்டங்களை ஆட முடிந்ததால் அவர் தன் அணியை லகுவாக இதுவரை பாதுகாத்து வந்தார். ஆனால் தென்னாப்பிரிக்க, மே.இ தீ மற்றும் இலங்கை பயணத்தொடர்கள் அணியின் பல விரிசல்களை நுண்பெருக்கி முன் கொண்டு வந்துள்ளன. இங்கிலாந்தில் முதல் இரண்டு டெஸ்டு ஆட்டங்களை இழந்துள்ள நிலையில் தோனியின் தேர்ச்சக்கரம் முதன்முறை மண்ணில் புதைந்துள்ளது. விமர்சகர்களின் கடுமையான தாக்குதல்கள் மற்றும் கேலியை சந்திக்க வேண்டிய இந்த கட்டத்தை தோனி என்றுமே தவிர்த்திருக்க முடியாது என்பதே உண்மை. நெடுங்காலம் அவர் மறைத்து வலுவான கோட்டை என காட்டி வந்தது வந்தது ஒரு சிதிலமாகி வரும் அரண்மனை என்பது தெளிவாகி விட்டது. வெட்டவெளியில் ஆதரவற்று நிற்கும் தோற்ற அணியின் தலைவராக தோனி துவண்டு போனாரா? பதற்றத்தில் தன்னை பாதுகாக்க தோல்வி பழியை அடுத்தவர் மீது போட்டாரா? தன்னை தாக்கும் மீடியா மீது சீறினாரா? இல்லை. தோனி தன் வழமையான அமைதியை காத்தார். அப்போது ஒரு எதிர்பாராத சம்பவம் நடந்தது.
இரண்டாவது டெஸ்டில் இந்திய பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து சதமடித்த இங்கிலாந்தின் இயன்பெல் உணவு இடைவேளை அறிவிக்கும் முன்னரே சோம்பலாக ஆடுதளத்தை விட்டு நீங்கினார். பந்து அப்போது நிலுவையில் இருந்தது. தோனி அவரை ரன் அவுட் செய்தார். பின்னர் இந்திய அணியின் அறைக்கு சென்ற இங்கிலாந்து அணித்தலைவரும் பயிற்சியாளரும் இயன் பெல்லை திரும்ப அழைக்க வேண்டினர். தோனி தாராளமாக அதை ஏற்றுக் கொண்டார். அதுவரை இந்திய அணியை நோக்கி துரோகி என்று கத்திக் கொண்டிருந்த இங்கிலாந்து ஆதரவாளர்கள் இயன்பெல் திரும்பி வர தோனிக்காக எழுந்து நின்று கைத்தட்டினர். இயன்பெல் தன் கூட்டாளியுடன் சேர்ந்து மேலும் ஒரு நீண்ட பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். இந்தியா அந்த டெஸ்டை இழந்தது. ரவி சாஸ்திரி உள்ளிட்ட ஊடக விமர்சகர்கள் தோனியின் தாராள நடவடிக்கையை ஆதரிக்கவில்லை. பலரும் அவர் முதுகெலும்பற்ற அணித்தலைவர் என்று கண்டித்தனர். இந்தியாவை இங்கிலாந்தின் பயிற்சியாளர் ஆண்டி பிளவர் சுளுவில் ஏமாற்றி விட்டதாக அறிவித்தனர். ஆனால் மீண்டும் தோனியின் அரசியல் சூட்சுமத்தை பலரும் கவனிக்கவில்லை. எப்படியும் தன் அணி தோற்கப்போகிறது என்று அவருக்கு தெரிந்திருந்தது. இழப்புகளால் துவண்ட தன் அணியின் நற்பெயர் மீட்க அவருக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அதை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொண்டார்.
கிரிக்கெட் தர்க்கத்தில் இயன்பெல்லை திரும்ப அழைத்தது அசட்டுத்தனமாக இருக்கலாம். ஆங்கிலேய மனம் அவரை கோழை என்று நம்ப தலைப்படலாம். ஆனால் தோனியின் நடைமுறைவாதத்தை பொறுத்த மட்டில் இது மற்றொரு வெற்றிகரமான காய்நகர்த்தல். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும், சர்வதேச கிரிக்கெட் வாரியமும் ஒரு சேர அவரை பாராட்டியது. இங்கிலாந்தில் இந்தியாவை தொடர்ந்து கரித்துக் கொண்டிருந்த மீடியா சற்று சாந்தமானது. இங்கிலாந்தின் உள்ளூர் பார்வையாளர்களுக்கு அவர் பிரியமானவரானார். ஒரு நவீன கிரிக்கெட் அணிக்கு பல முகங்கள் உண்டு. அரசியல் அதில் ஒன்று. புள்ளியியல் விபரங்களால் உருவாவதல்ல கிரிக்கெட். கிரிக்கெட் ஒரு பிம்பம். உலக அளவில் இந்திய அணி நன்மதிப்பின் பிம்பமாக இருப்பது கசப்பான விசயம் அல்ல. குறிப்பாக சரிந்து வரும் ஒரு அணி மே.இ தீவுகளைப் போல் அடிமை மனப்பான்மைக்குள்ளோ, ஆஸ்திரேலியாவை போல் வெறுப்பு அரசியலிலோ மாட்டிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தோல்வியின் விளிம்பில் கூட ஒரு சாதக வாய்ப்பை கெட்டியாக பற்றிக் கொள்பவன் தான் நல்ல தலைவன்.
மற்றுமொரு அதி அற்புதமான நீண்ட பார்வை க்ரிகட்டீன்மீதான...
ReplyDeleteஇதன் பின்புலத்தில் நீங்கள் எவ்வளவு இந்த ஆட்டதினை ரசிக்கிறீர்கள் என்பதனை புரிந்துக்கொள்ளமுடிகிறது...
தொடருங்கள் உங்கள் ஆட்டத்தினை... மிகவும் ரசித்து படித்தேன்(மற்றொருமுறை)... ஒரு ஞாயிறின் இறுதி நிமிடங்களில் ;)
ஐ.பி.எலால் ஏற்பட்ட கோரமான பக்க விளைவுகளை இந்த டெஸ்ட் தொடரில் உணர முடிந்தது. ஃபிட்னெஸ் பற்றிக் கவலைப் படாத வீரர்கள், வாய்ப்புகளை தவற விட்ட வீரர்கள், என குழப்பமடைந்துள்ள இந்த அணியை தாங்கிச் செல்ல புத்திசாலித்தனம் மட்டும் போதாது! இன்னும் தோணியை சுதந்திரமாக முடிவுகள் எடுக்க விட வேண்டும் . அப்பொழுது தான் அவரது தலைமை பண்பு என்னவென்று தெரிய வரும்!
ReplyDelete