ஒரு கசப்பான முத்தம்
அவமானிப்புக்குரிய அறைதலை போல
நம் மீது
நம்மை சுற்றி
ஒரு மீட்டலின் அதிர்வலையை போல்
தொடர்கிறது
ஒரு ஈயைப் போல்
அல்லது
அது
ஒரு அவமானிப்புக்குரிய அறைதலை விட
அதிக துன்பமானது
அதன் பக்கம்
நியாயங்களோ வெஞ்சினமோ இல்லை
அது ஒரு தண்டனை அல்ல
என்பதால்
கசப்பான முத்தம்
நம்மை
எளிதில் பலவீனப்படுத்துகிறது
நாம் கனத்த மூச்சுகளை விடுகிறோம்
உணவு கச்சிதமான சுவைகளற்று போகிறது
மிகையான மற்றொரு மொழியை பேசுகிறோம்
உண்மைகளை கத்தரித்து கையடக்கம் ஆக்குகிறோம்
வெறுப்பை உற்பத்தி செய்து மகிழ்ச்சி ஆகிறோம்
சிறுசிறு தேவைகளை பிரதானப்படுத்தி வாழ்கிறோம்
தனிமையை எளிதாக மறக்கிறோம்
ஒளியை பருகி இருட்டை மூச்சு விடுகிறோம்
முற்றுப் புள்ளிகள் அற்று எழுதப் பழகுகிறோம்
கசப்பான முத்தம் தருபவர்கள்
நம்மை அடிக்கவோ அரவணைக்கவோ
வலுவற்றவர்கள்
அவர்களிடம் பெருகும் அபரித அன்பே
கசப்பான முத்தமாக தரப்படுகிறது
அதை
வைத்துக் கொள்ளவோ மறுதலிக்கவோ
இருவராலும் முடிவதில்லை
கசப்பான முத்தத்திற்கு
ஒரு தருணம் உள்ளது
அதற்காக
இருவரும் காத்திருக்கிறோம்
கொடுத்து பெற்ற பின்
அது
நெடுடுநாள் காத்த தண்டனையை போல்
அந்நொடியில் எளிதாகி விடுகிறது
கசப்பான முத்தம்
ஒரு காயம் போல்
நம்முள்ளோ
சிலுவை போல்
நம் மீதோ
இருப்பதில்லை
அது வேறெதையோ போல்
வெளியில் இருந்து
நம் மீது
ரசவாதம் புரிகிறது
கசப்பான முத்தம்
எந்த உறவையும்
துவக்கவோ முடிக்கவோ ஏற்ற
சிறந்த பரிசு
தருபவர் குற்றவுணர்வோ
பெறுபவர் நீதியுணர்வோ
அடைவதில்லை
கசப்பான முத்தம் கிடைத்ததும்
பேசுவதோ கத்துவதோ அழுவதோ கூடாது
மிகச் சன்னமாய்
அல்லது சற்று மிகையாய்
புன்னகைக்க வேண்டும்
கைகளை நீட்டி
பட்டும்படாமல் அரவணைக்க வேண்டும்
அது கசப்பான முத்தத்தை -
எளிதாக்குகிறது
காத்திரமாக்குகிறது
ஸ்திரமாக்குகிறது
ஒரு நினைவை கூடுதலாக
சேர்க்கிறது.
அதுவரை கசப்பான முத்தம்
நடக்கப் போகும் ஒன்றைப் போல்
எங்குமே இல்லை
nice
ReplyDelete