இங்கிலாந்தில் இந்தியா சந்தித்த கடுமையான தொடர் தோல்விகளுக்கு மோசமான தயாரிப்பும் உடல்தகுதி அக்கறையின்மையும் காரணங்களாக அனைத்து தரப்பிலும் முன்வைக்கப்படுகின்றன. ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வுக்குழு இந்தியாவில் முதன்முதலாக ஊதியம் வழங்கப்படுகிற முதல் தேர்வுக் குழு. அதனாலே அவர்களின் ஒவ்வொரு செயல்பாடும் ஆரம்பத்தில் இருந்தே கூர்மையாக கண்காணிக்கப்பட்டது. ஸ்ரீகாந்த் ஒரு தென்னிந்தியர் என்பதும் அவர் தமிழக ஆட்டக்காரர்களான பத்ரிநாத், விஜய், பாலாஜி, அஷ்வின், முகுந்த் ஆகியோருக்கு நீடித்த வாய்ப்புகள் அளித்ததும் வட-இந்தியர்களால் சந்தேகக் கண்ணோடும் காதில் புகையோடும் பார்க்கப்பட்டது. அவரது தேர்வுக் காலத்தில் தான் தேர்வுக்கு தொடர்ச்சியற்ற அளவுகோல்களும், பிரச்சனைகளுக்கு அவசர தீர்வுகளும் காணப்பட்டன. சமநிலையற்ற அணிகளை தேர்ந்தெடுத்ததும், தொலைநோக்கற்ற திட்டங்களும் இவர் மீது சுமத்தப்படும் முக்கிய புகார்கள். போதாததற்கு உள்ளூர் தமிழக அணியில் சீக்காவின் மகன் அநிருத்தாவுக்கு அளிக்கப்பட்ட இடம் சர்ச்சைக்குள்ளானது.
அநிருத்தாவுக்கு தமிழக உள்ளூர் டெஸ்ட் அணியில் ஆடுவதற்கான தொழில்நுட்பமோ பொறுமையோ கூட இல்லை. தமிழ்நாடு அணியில் அநிருத்தாவுக்கு தகுதிக்கு மீறி வழங்கப்படும் வாய்ப்பு பிற திறமையாளர்களை பின்னுக்கு தள்ளுவதாக புகார் உள்ளது. முதலில் அநிருத்தா 2007இல் நடந்த 20-20 உலகக்கோப்பை உத்தேச 30 பேர் அணியில் இடம் பெற்றார். அவர் ஒரு அவேசமான 20-20 ஆட்டக்காரர் என்ற வகையில் இது நியாயமே. ஆனால் சமீபமாக ஆஸ்திரேலியாவில் நடந்த எமர்ஜிங் பிளேயர்ஸ் தொடர் பல்வேறு நாடுகளை சேர்ந்த இளையவீரர்கள் பங்கேற்கும் ஒரு ஆட்டத்தொடர். அந்த தொடருக்கான இந்திய அணியிலும் அநிருத்தா இருந்தார். இது மீடியாவில் கண்டனத்துக்குள்ளானது. அவரது தேர்வுக்கு எதிராக இரண்டு வாதங்கள் வைக்கப்பட்டன. ஒன்று அநிருத்தாவின் உள்ளூர் ஆட்டசராசரி 29.45. ஒரே ஒரு சதம் தான் அடித்துள்ளார். இன்று உள்ளூர் ஆட்டங்களில் கவனிக்கத்தக்க மட்டையாளர்கள் அனைவரும் 40க்கு மேல் சராசரி கொண்டவர்கள். அவர்களை புறக்கணித்து குறைவான ஓட்டங்களை எடுத்துள்ள அநிருத்தாவை தேர்ந்தது ஒரு அடிப்படையான தவறு. அதற்கு பதிலாக தேர்வாளர்கள் அவர் ஒரு அதிரடியான ஒருநாள் மட்டையாளர் என்றனர். ஆனால் எமர்ஜிங் ஆட்டத்தொடர் முன்பு போல் ஒருநாள் ஆட்டத்தொடர் அல்ல என்பதை தேர்வாளர்கள் அறிந்திருக்கவில்லை. 2011இல் இருந்து அதில் பல மூன்று நாள் ஆட்டங்களும் உள்ளடக்கப்பட்டன. இந்த முக்கிய தகவல் கூட தெரியாமல் சம்பளம் வாங்கும் தேர்வாளர்கள் உள்ளார்கள் என்பது மேலும் விமர்சிக்கப்பட்டது. சுவாரஸ்யமாக இந்த மூன்றுநாள் ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே ஆடின அநிருத்தா 8,9 எண்களில் ஆட்டமிழந்தார். அதற்கு பிறகு அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது அணித்தலைமைக்கு அவர் மீது நம்பிக்கை இல்லை என்பதையும் இது ஒரு வலிந்து திணிக்கப்பட்ட தேர்வு என்பதையும் காட்டுகிறது. ஸ்ரீகாந்த் உள்ளூர் அணிகளின் தேர்வாளர் அல்ல என்றாலும் தேர்வுக்குழு தலைவராக அவரது செல்வாக்கு போதுமான காய்களை நகர்த்த போதுமானது. உலகக்கோப்பை வென்ற அணியின் பின் அவரது பங்களிப்பு மறக்க முடியாதது என்றாலும் மேற்சொன்ன தன்னலமும் ஊழலும் ஒரு நீங்காத கறையாக அவரது ஆளுமை மீது நிலைக்கிறது.
ஐ.பி.எல் எந்தளவுக்கு இந்திய அணியின் ஆட்டச்சிறப்புக்கு பயன்பட்டதோ அந்தளவுக்கு பல பிரச்சனைகளை, சவால்களை முன்வைத்தது. ரெய்னா, யூசுப் பதான், ஜடேஜா, கோலி, ரோஹித் ஷர்மா, ஓஜ்ஹா, அஷ்வின், ரஹானே, பார்த்திவ், அமித் மிஷ்ரா என ஏராளமானோர் ஐ.பி.எல் புகழ் வெளிச்சத்தினால் அடையாளம் காணப்பட்டே இந்திய அணியில் இடம்பெற்றனர். மிஷ்ரா, ரெய்னா, ரஹானே போன்ற பல வீரர்கள் நெடுங்காலமாக உள்ளூர் போட்டிகளில் காய்ந்து வற்றலாகி சில சுருக்கமான ஐ.பி.எல் மின்னல்கள் மூலம் தேர்வாளர்களிடம் திடீர் அங்கீகாரம் அடைந்தவர்கள். விராத், ரோஹித் போன்றோர் தேசிய அணியில் கால் வழுக்கிய போதெல்லாம் ஐ.பி.எல் இவர்களின் மறுவரவுக்கு மிகவும் உதவியது. உலகக்கோப்பை வென்ற அணிக்கு நாம் ஐ.பி.எல்லிடம் கடமைப்பட்டிருக்கிறோம். மூத்தவீரர்கள் தவிர ஸ்ரீகாந்தின் இளைஞர்கள் ஐ.பி.எல் கலாச்சாரத்தின் வாரிசுகளே. சுவாரஸ்யமாக ஸ்ரீகாந்தின் மீதான எதிர்மறை விமர்சனத்துக்கும் ஐ.பி.எல்லுக்கும் தொடர்பு உள்ளது. முதல் ஐ.பி.எல்லில் சோபித்த கோனி எனும் வேகவீச்சாளர் உள்ளூர் ஆட்டங்களில் ஒரு சாதாரண வீரர். அவர் ஐ.பி.எல் அங்கீகாரத்தின் அடிப்படையில் தேசிய அணியில் தேர்வு செய்ப்பட்டு ஒரே ஒரு ஆட்டம் மட்டுமே ஆடி பின்னர் நிரந்தரமாக விலக்கப்பட்டார். இது கடுமையான கண்டனத்துக்குள்ளானது. ஐ.பி.எல் தேர்வுக்கான அளவுகோலாகக் கூடாது என்று வலுவாக விமர்சிக்கப்பட்டது. இந்தியாவின் கிரிக்கெட் வரலாற்றில் துலீப் கோப்பை, சேலஞ்சர்ஸ் ஆட்டத்தொடர், ரஞ்சி ஆட்டத்தொடர் ஆகிய உள்ளூர் தொடர்கள் தான் தேர்வுக்கான உரைகல்லாக இருந்துள்ளன. ஐ.பி.எல் தன் அசுர ஆகிருதியால் இவற்றை எல்லாம் இரண்டாம் பட்சம் ஆக்கியது. ஐ.பி.எல் வழியாக அவர் கண்டடைந்த பந்துவீச்சாளர்கள் மட்டுமே ஏமாற்றம் அளித்தனர் என்பதை பலரும் கவனிக்க தவறினர். விளைவாக ஐ.பி.எல்லில் சோபித்தாலும் வலுவான உள்ளூர் ஆட்டவரலாறு இல்லாதவர்களை தேர்ந்தெடுக்கப் போவதில்லை என்று சீக்கா பின்னர் தீர்மானித்தார். ஐ.பி.எல்லை போன்ற மற்றொரு வரலாற்று முக்கியத்துவமுள்ள சிக்கலை அவர் கையாள வேண்டி வந்தது. அது அணியின் மூத்த சாதனையாளர்களின் வயது.
தோனி மற்றும் ஸ்ரீகாந்தின் கீழ் தான் ஓய்வின் விளிம்பில் இருந்த லக்ஷ்மண் மற்றும் சச்சின் தமது சிறந்த ஆட்டத்தரத்தை மீட்டெடுத்தனர். மோசமான ஆட்டநிலையில் இருந்த திராவிட்டுக்கு நீடித்த ஆதரவு வழங்கப்பட்டதால் அவரால் சமீபத்தில் நடந்த இங்கிலாந்தில் தொடரில் முக்கியமான சதங்களை அடிக்க முடிந்தது. மூத்த வீரர்களின் பங்களிப்பு இந்தியா முதல் இடத்தை அடைந்து தற்காலிகமாய் வீற்றிருந்ததற்கு முக்கிய காரணம். இந்த எழுச்சிக்கு நாம் ஒரு மும்முனை சமரசத்தை செய்ய வேண்டி இருந்தது.
முதலில் களத்தடுப்பு. உலகின் மிக மெத்தனமான களத்தடுப்பு காரணமாய் உலக அணிகளில் பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாய் நாம் வெட்ககரமான நிலையில் தொடர்ந்து இருந்து வந்தோம்.
அடுத்தது காயம் படும் வாய்ப்புகள். முதிர்ந்த வீரர்கள் எளிதில் காயப்படுவார்கள். காயம் ஆறவும் காலம் பிடிக்கும். 2010 பிப்ரவரியில் தென்னாப்பிரிக்கா இங்கு வந்த போது திராவிட் காயமுற்றிருந்தார். அணியில் அவரிடத்தில் விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். நமது அணியில் ஆல்ரவுண்டர் இல்லை என்பதால் உபரியாக இரண்டு மட்டையாளர்கள் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் தோனியின் முதுகு வலி காரணமாக ஸ்ரீகாந்த் மட்டையாளருக்கு பதில் சாஹா எனும் கீப்பரை தேர்ந்தார். முதல் டெஸ்ட் ஆட்டத்திற்கு முன் லக்ஷ்மணும் அவருக்கு பதில் வீரரான ரோஹித்தும் காயம்பட இந்தியா வேறு வழியின்றி சுமாரான மட்டையாளரான சாஹாவை ஆட வைக்க வேண்டி வந்தது. அணியின் சமநிலையை இது குலைக்க அந்த ஆட்டத்தை இந்தியா இழந்தது. சமநிலையின்மைக்காக ஸ்ரீகாந்த் கடுமையான கண்டனத்தை சந்திக்க வேண்டி வந்தது முதலில் அப்போது தான். அடுத்து சமீபமாக இங்கிலாந்தில் ஒருநாள் தொடருக்கான அணியில் ஐந்தாவது வீச்சாளராக ஆல்ரவுண்டர் இல்லாதது முக்கிய குறையாக இருந்தது. தோனி இந்த கவலையை வெளிப்படையாகவே தெரிவித்தார். முதல் ஆட்டத்தில் ரோஹித் ஷர்மா காயமுற அவருக்கு பதிலாக ஒரு மட்டையாளரை அனுப்பாமல் ஸ்ரீகாந்த் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவை அனுப்பினார். காயமுற்ற இஷாந்துக்கு பதிலாக அரோன் எனும் ஒரு வேகவீச்சாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவருக்கு பந்துவீச்சில் கட்டுப்பாடு இல்லை என்று தோனி நம்பியதால் ஒரு வாய்ப்பு கூட வழங்கப்படவில்லை. இந்திய அணி பலவீனமான பந்துவீச்சின் விளைவாக ஒருநாள் தொடரை இங்கிலாந்தில் இழந்த நிலையில் ஆரோனின் தேர்வு மீண்டும் புயலை கிளப்பியது. கங்குலி, ரவி சாஸ்திரி, அக்ரம் ஆகியோர் அரோன் மீது தோனிக்கு நம்பிக்கை இல்லை என்றால் தேர்வாளர்கள் அதை ஏன் கருத்தில் கொள்ளவில்லை என்ற கேள்வியை எழுப்பினர். இந்த தொடரில் காயம் காரணமாக ஒன்பது வீரர்கள் பயணத்தின் போது விலகினர். வயதான வீரர்களை அவர்களின் சல்லிசான உடல்தகுதியை கருத்திற்கொள்ளாமல் ஆதரிக்கும் திட்டத்தின் ஒரு எதிர்மறை விளைவு தான் இது. டெஸ்ட் தொடரை இழந்த நிலையில் இளைஞர்கள் மீது நம்பிக்கை இழந்த ஸ்ரீகாந்த் மற்றொரு தற்காலிக உபாயமாக திராவிட்டை இரண்டு வருடங்களுக்கு பிறகு ஒருநாள் அணிக்கு தேர்ந்தெடுத்தார். இது அணியின் பாதுகாப்பற்ற நிலையை மட்டுமல்ல தேர்வாளர்களின் தொலைநோக்கற்ற செயல்பாட்டையும் காட்டுவதாக அமைந்தது. தேர்ந்தெடுக்கப்பட்டதும் திராவிட் தன் ஒருநாள் ஓய்வை அறிவித்தார். திராவிட்டுக்கு கௌரவமாக ஓய்வளிப்பதற்காக ஒரு இளைஞருக்கு நியாயப்படி செல்ல வேண்டிய இடம் அவருக்கு அணியில் வழங்கப்பட்டதாய் மஞ்சிரேக்கர் போன்றவர்கள் குற்றம் சாட்டினர். இரண்டாவது ஆட்டத்தில் பதில் வீரராக வர வேண்டிய ஜடேஜா விசா குளறுபடி காரணமாக பிந்தி இங்கிலாந்து வந்தார். அதனால் மனோஜ் திவாரி பங்களூரில் இருந்து அவசரமாக இங்கிலாந்துக்கு வரவழைக்கப்பட்டு விமானத்தில் இருந்து இறங்கி நேரடியாக ஆடுவதற்கு களத்திற்கு அனுப்பப்பட்டார். விசா சிக்கல் காரணமாய் அதே தொடரில் ஆர்.பி.சிங்கும் தாமதமாக வந்தார் என்பதையும் நினைவில் கொள்ளும் போது எத்தனைய ஒரு மெத்தன நிலையில் நமது தேர்வாளர்களும் அணி மேலாண்மையும் இருந்துள்ளனர் என்பது விளங்கும். பதில் வீரர்கள் ஏன் முன்னரே அடையாளம் காணப்பட்டு விசாவுடன் தயார் நிலையில் இல்லை போன்ற கேள்விகள் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டன.
மூன்றாவதாக முதிய வீரர்களை தொடர்ந்து ஆட வைப்பது எதிர்கால அணியை வளர்க்க உதவாது. ஆனால் முதிய வீரர்கள் சிறந்த வீரர்களாகவும் இருக்கையில் அணிக்குள் புது ரத்தம் பாய்ச்சுவது எளிதல்ல. மூத்த வீரர்கள் தொடர்ந்து வெற்றிக்கு பங்களித்து பெரும் சாதனைகளை நிகழ்த்தி வந்த நிலையில் தேர்வாளர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய நாடுகளின் இதே தேர்வு நிலைப்பாட்டால் தான் இப்போது அவதியுறுகின்றனர். காரணம் நம்மைப் போல் அந்நாட்டு அணிகளும் எளிய வீரர்களுக்கு பதில் மேதைகளை தம் அணியில் கொண்டிருந்தன. மெக்ராத், வார்ன், ஹெய்டன், முரளிதரன், மலிங்கா போன்றோர் தாமாக ஓய்வு அறிவித்த போது உடனடி பதில் வீரர்களை அந்நாட்டு தேர்வாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இங்கிலாந்தும், தென்னாப்பிரிக்காவும் எளிய சுயகட்டுப்பாடு மிக்க வீரர்களை மட்டும் கொண்டிருந்ததால் பொம்மைக்காரின் பேட்டரி மாற்றுவது போல் புது வீரர்களை உள்ளே கொண்டு வர முடிந்தது. மேலும் இரு அணிகளும் ஆம்லா, பீட்டர்சன் போன்று வேறு இனம் மட்டும் நாட்டை சேர்ந்த வீரர்களை தேர்ந்தெடுத்து தங்கள் தரத்தை வெகுவாக உயர்த்தின. இவ்வாறு முப்பதை கடந்த பலவீனமான வீரர்களை நம்பி இருப்பது எவ்வளவு அபாயகரமானது என்பதை நாம் உலகக் கோப்பையின் சற்று முன்பு உணர்ந்தோம். சஹீர், சேவாக், யுவ்ராஜ், காம்பிர் ஆகியோர் காயத்தில் இருந்து சற்று முன் திரும்பி இருந்தனர். காயம் காரணமாக விலகிய பிரவீனின் இடத்தில் சற்று முன் காயத்தில் இருந்து திரும்பிய ஸ்ரீசாந்த் கொண்டு வரப்பட்டார். எந்த முக்கியமான உலகக்கோப்பை ஆட்டத்திற்கு முன்பும் ஐந்து பேர் ஆட முடியாத நிலையில் காயமுற்றிருக்கக் கூடிய சாத்தியத்துடன் தான் நாம் ஆடினோம். இதனாலே உலகக் கோப்பை முடிந்ததும் தோனி ஒரு பெருமூச்சுடன் நம் அணியை எந்திர சக்கரங்கள் கிடுகிடுக்கும் ஒரு துருபிடித்த பழைய காருடன் ஒப்பிட்டார். ஆனால் அதற்கு அடுத்த இங்கிலாந்து தொடரில் அதிர்ஷ்டம் நமக்கு எதிராக முழுக்க திரும்பியது. 9 வீரர்களை இழந்து தள்ளாடினோம்.
கிடைத்த வாய்ப்புகளின் போது மூத்த வீரர்களுக்கு அச்சுறுத்தல் இல்லாத படியாக நம்மால் கோலி, ரோஹித், பத்ரி போன்ற இளைய வீரர்களுக்கு அதிக டெஸ்ட் வாய்ப்புகள் வழங்கி இருந்திருக்கலாம். பந்து வீச்சாளர்களை பொறுத்த மட்டில் ஸ்ரீகாந்த் துரதிர்ஷ்டசாலி என்றே கூற வேண்டும். அவரது தேர்வுக் காலத்தில் உள்ளூர் கிரிக்கெட்டிலும் பந்து வீச்சின் தரம் வீழ்ச்சி உற்றது. உள்ளூர் ஆட்டம் ஒரு நீண்ட பாலைவனத்தை நினைவுபடுத்தும் படியாக வறட்சியாக இருந்தது. எல்லா உள்ளூர் அணிகளில் இருந்தும் மூத்த வீரர்கள் விடைபெற்றனர். ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் சிறந்த சில இளைய வீரர்களை அணியில் பெற்ற தில்லி அணியை தவிர பிற அணிகள் பலவீனமுற்றிருந்தன. கர்நாடகா, மும்பை போன்ற மரபான முன்னணி அணிகள் சோர்ந்து விட்டிருந்தன. எளிய வீரர்களை கொண்ட ராஜஸ்தான் அணி போன ரஞ்சி கோப்பையை வென்றதற்கு மரபான அணிகளின் இந்த பொதுவான சோர்வு முக்கிய காரணம். வேக வீச்சாளர்கள் காயமுற அவருக்கு பதிலுக்கு அதே தரத்திலான வீச்சாளர்கள் வேறு இருக்கவில்லை. தவல் குல்கர்னி, சுதிப் தியாகி, ஆரோன் போன்ற வீரர்களை அவர் அனுப்பினால் அதே வேகத்தில் தோனி திரும்ப அனுப்பினர். நீடித்த வாய்ப்பு வழங்கப்பட்ட திண்டா, உமேஷ் யாதவ் போன்றோர் ஏமாற்றமளித்தனர். மீள மீள ஒரு ஐந்து வேகவீச்சாளர்களையே குலுக்கிப் போட்டு அவர் சமாளிக்க வேண்டி வந்தது. இங்கிலாந்தில் அவர்களும் காயமுற்ற போது அவரது பை காலியாக இருந்தது.
இப்படி ஸ்ரீகாந்த தன் முதல் தேர்வுப் பருவத்தில் எடுத்த முடிவுகள் ஒரு மட்டையாளராக அவர் அடித்த ஷாட்டுகளை போன்றே சாகசத்துக்கும் முட்டாள்தனத்துக்கும் இடையில் இருந்து உள்ளன. அபாயங்களை தொடர்ந்து சீண்டினால் ஒரு நாள் சுடும். சஹீர், சேவாக் போன்றோர் காயங்களில் இருந்து முழுக்க குணமாகாத நிலையில் போதுமான ஆட்டபயிற்சி இல்லாத பட்சத்தில் அவர்களை இங்கிலாந்துக்கு அனுப்பியது அப்படி கயிறென்று கருதி பாம்பை மிதித்த கதை தான். உலகக் கோப்பையின் போது காயம் குறித்து இதே போன்றதொரு அக்கறை ஊடகங்களில் எழுந்த போது ஸ்ரீகாந்த் தனது மூத்தவீரர்கள் எந்த காயத்தில் இருந்து மீண்டு உடனடி ஆடக் கூடியவர்கள் என்று தடுப்பாடினார். இங்கிலாந்தில் அத்தகைய நம்பிக்கை எத்தனை மெலிதான இழையால் கட்டப்பட்டது என்று வெளிச்சமானது.
வெங்க்சார்க்கர் தலைமையிலான முந்தைய தேர்வுக்குழு கண்டறிந்த வீரர்களை தவிர ஸ்ரீகாந்தால் உபரியாய் சிறந்த புது அறிமுகங்களை செய்ய இயலவில்லை. அவரது அறிமுகங்கள் பிசுபிசுத்து போயினர். மேலும் ஐ.பி.எல் காரணமாய் எந்த ஒரு தேர்வும் அதன் அதிர்ச்சி அம்சத்தை இழந்தது. கண்டுபிடிப்புக்கான புதுமை இல்லாமல் ஆகியது. இந்தியாவின் சிறந்த இளைய திறமைகள் யார் என்ற பட்டியல் இன்று ஒவ்வொரு எளிய இந்திய கிரிக்கெட் ஆர்வலனிமும் உள்ளது. ஐ.பி.எல்லுக்கு பிறகு தேர்வாளர் அதன் நேர்மையான பொருளில் தேர்வாளர் அல்ல. அவர் ஒரு மேலாளராக மாறினார். ஏற்கனவே கொண்டு வரப்பட்டவர்களை தக்க வைத்து கையாண்டதும், உலகக் கோப்பையை நோக்கி சரிவர அணியை அமைத்ததுமே ஸ்ரீகாந்தின் சாதனைகள். ஒரு கடுமையான புயலில் போது கம்பீரமான பறக்கும் கொடி எப்படி புயலின் திசையை தீர்மானிப்பது இல்லையோ அப்படியே ஸ்ரீகாந்தும் இந்திய கிரிக்கெட்டின் பாதையை நிறுவவில்லை. வரலாற்றின் மாற்றங்களுக்கு தன்னை சாமர்த்தியமாக ஒப்புக் கொடுத்தார்.
அவரது கிரிக்கெட் தர்க்கமற்ற தேர்வுகளுக்கும் நம் வரலாற்றில் முன்மாதிரி உண்டு 97இல் இந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கு பயணித்த போது சஹீர் கானைப் போல் அப்போது ஜவகல் ஸ்ரீநாத் தோள் காயத்துடன் சென்றிருந்தார். காயம் மோசமாக அவர் திடீரென்று அணியை தவிக்க விட்டு இந்தியா திரும்பினார். அவருக்கு பதிலாக எந்த வேக வீச்சாளர் வரப் போகிறார் என்று பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராமகாந்த் தேசாயின் தலைமையிலான அப்போதைய தேர்வுக்குழு நோயல் டேவிட் எனும் அதிகம அறியப்படாத ஹைதபாத் சுழல் பந்து வீச்சாளரை அனுப்பியது. வேகவீச்சாளரின் இடத்தில் வந்த இந்த சுழலரை இந்திய அணி மேலாண்மை டிரிங்க்ஸ் சுமக்க மட்டுமே பயன்படுத்தியது. அப்போதைய பயிற்சியாளர் மதன் லால் டேவிட்டின் தேர்வு மீதான தன் அதிருப்தியை வெளிப்படையாகவே பத்திரிகைகளுக்கு தெரிவித்தார். ஆக இப்படியான குழப்படிகள் நம் நாட்டில் ஒன்றும் புதிதல்ல.
உலகக்கோப்பை வெற்றி, டெஸ்ட் தரவரிசை முதலிடம் என ஒரு சிங்கத்தின் கர்ஜனையுடன் ஆரம்பித்த ஸ்ரீகாந்தின் தேர்வுப் பயணம் பொறிக்குள் நுழைந்த எலியின் கீச்சிடலுடன் முடிந்தது. மீடியாவில் எதிர்பார்த்தது போல் அல்லாமல் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஸ்ரீனிவாசன் ஸ்ரீகாந்தை வீட்டுக்கு அனுப்பாமல் அவரது பதவிக்காலத்தை ஒரு வருடம் மேலும் நீட்டித்துள்ளார். இந்த நீட்டிக்கப்பட்ட காலத்தில் அவர் சற்று நிதானமாக செயல்படுவார் என்று கடவுளை பிரார்த்திப்போம்!
நல்ல ஒரு பார்வை. இந்திய அணிக்கு சிறந்த பந்து வீச்சாளர்கள் தான் உடனடி தேவை. இங்கிலாந்து தொடருக்கு புதிய பந்து வீச்சாளர்கள் சிலரை தேர்ந்து எடுத்து உள்ளனர் போல தெரிகின்றது...பாப்போம் என்ன நடக்கின்றது என்று.
ReplyDelete