2011 CLT20 பொருளாதர ரீதியாக ஒரு சிறு பின்னடைவு தான். உள்ளூர் அணிகள் தத்தமது நகரங்களில் ஆடினால் மட்டுமே அரங்குகள் முக்கால்வாசி நிரம்பின. நட்சத்திர மதிப்பிலும் சற்று சோர்வு தான். சச்சின், சேவாக், யுவ்ராஜ், சஹீர், ரோஹித் ஷர்மா ஆகியோர் இல்லாத இந்திய அணிகள் பொதுவாக பலவீனமாகவே தோன்றின. மட்டையாட்டத்தை வலுப்படுத்த கூட கெயில், பொல்லார்டு, தில்ஷான், ஹஸ்ஸி ஆகிய ஆகியோரை நம்பி இருந்தன. இருந்தும் ஆட்டங்கள் மிக தரமானவையாக இருந்தன. காரணம், வழக்கம் போல் அயல்நாட்டு மாநில அணிகள் நன்றாக ஒருங்கிணைவுடன் ஆடியது. இந்த தொடரில் இருந்து சர்வதேச கவுன்சில் மற்றும் இந்திய வாரியத்துக்கு சில பாடங்கள் உள்ளன.
சாமர்ஸட், புளு சவுத் வேல்ஸ் போன்ற அணிகள் நன்றாக ஆடியதன் ஒரு காரணம் அவர்களின் நாட்டில் உள்நாட்டு ஆட்டங்களின் பருவம் சற்று முன் நடந்து முடிந்தது என்பது. விளைவாக அவர்கள் நல்ல ஆட்டபயிற்சியுடன் இந்தியாவில் களமிறங்கினர். இந்தியர்களின் நிலைமை நேர்மாறானது. இங்கு உள்ளூர் கிரிக்கெட் பருவம் இனிமேல் ஆரம்பமாக உள்ளது. ஆக விஜய், பத்ரிநாத், ராயுடு போன்றோர் சரளமாக ஆட தவறினர். மேலும் மும்பையின் சூர்யகுமார் யாதவை தவிர வேறு எந்த புது இந்திய திறமையையும் இம்முறை நம்மால் காண முடியவில்லை. இந்த இந்திய சரிவுக்கு ஒரு காரணம் உள்ளது.
ஐ.பி.எல் போன்ற தொடர்களின் ஆட்டநிரல் சர்வதேச ஆட்டநிரலை மனதிற்கொண்டே அமைக்கப்படுகிறது. அப்படியும் அதனால் சர்வதேச அணிகள் பாதிப்புள்ளாகின்றன. தெ.ஆ அணி தனது கேப்டனான டிவில்லியர்ஸை 2011 CLT20 காரணமாக இம்முறை இழந்தது. அவர் தனது நாடு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிக முக்கியமான தொடரை ஆடும் சற்று முன்பு CLT20இல் காயமுற்று விலகினார். அவருக்கு பதிலாக தெ.ஆ அணிக்கு ஆம்லா தற்காலிக அணித்தலைவராகி உள்ளார். இப்படி அயல்நாட்டு உள்ளூர் ஆட்டத்தொடர் ஒன்றுக்காக ஒரு நாடு தன் அணித்தலைவரை இழப்பது இது தான் முதல்முறை. அரைஇறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தின் கெயிஸ்வெட்டர் காயமுற்றார். அவர் வரப்போகும் இங்கிலாந்து-இந்தியா ஒருநாள் தொடரில் பங்களிக்க முடியாமல் போனால் அது பெரும் இழப்பாக இருக்கும். பொலார்டு தனது சொந்த மே.இ தீவுகளை துறந்து சமீபமாய் வெறும் IPL மட்டையாளராக வாடகை அடியாள் போல் பணியாற்றி சம்பாதிக்கிறார். ஒருவேளை ஆஸ்திரேலிய பிக்பேஷ் T20 தொடரில் தோனி காயமுற்று முக்கிய தொடரில் இந்தியாவை தலைமை தாங்க முடியாமல் போனால் இந்திய பார்வையாளர்களின் எதிர்வினை என்னவாக இருக்கும்? இந்திய வாரியம் நடத்தும் T20 தொடர்கள் உலகின் சொத்தை உறிஞ்சி வளர்ந்து ஒரு சர்வதேச பிரச்சனையாகி வருகின்றன. இதற்கு ஒரு தீர்வு உள்ளது.
ஐ.சி.சி தனது சர்வதேச ஆட்டநிரலில் இந்தியாவின் “சர்வதேச” உள்ளூர் தொடர்களுக்கு இடமளிக்க வேண்டும். ஒரு மூன்று மாதத்தை கொடுத்து விடலாம். IPL முடித்ததும் CLT20 நடத்தி கடைசி ஒரு மாதத்தை காயங்களில் இருந்து வீரர்கள் ஆறுவதற்கு நல்கிடலாம். பணம் கொழிக்கும் உள்ளூர் நட்சத்திர T20 தொடர்கள் எதிர்கால நிதர்சனமாக இருக்கக் கூடும். சமீபத்தில் நடந்து முடிந்த இந்திய-மே.இ தீவுகள், இந்தியா-இங்கிலாந்து, இலங்கை-ஆஸ்திரேலியா, சிம்பாப்வே-பாகிஸ்தான் தொடர்களைஇ விட CLT20 2011 மிக சுவாரஸ்யமாகவும் எதிர்பாராத திருப்பங்கள் கொண்டதாகவும் இருந்தது. பல சர்வதேச தொடர்கள் இன்று அர்த்தமற்றவையாக மாறி வருகின்றன. மீண்டும் மீண்டும் அதே சூத்திரப்படி ஆடும் அதே கிரிக்கெட் பாத்திரங்களை கண்டு களைப்படைகிறோம். இது போன்ற சர்வதேச நாடுகளின் உள்ளூர் அணிகள் பங்கு பெறும் ஆட்டங்கள் பார்வையாளனை இந்த ஆயாசத்தில் இருந்து விடுவிக்கின்றன. நரைன், கூப்பர், ஹில்டுரத், ஸ்டார்க் என பல உள்ளூர் வீரர்கள் இம்முறை நம்மை ஆச்சரியப்படுத்தினர். குறிப்பாக டிரினிடாட் டொபாக்கோ அணியின் நரைனிடம் நம் அஷ்வினை விட அதிக மாற்றுபந்துகள் உள்ளன. மிக தந்திரமாக தன்னம்பிக்கையுட வீசுகிறார். CLT20 இன்றி உலகம் அவரை அறிந்திருக்காது. அரைஇறுதியில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சோமர்செட்டை சேர்ந்த ஹில்டுரத் படுமெத்தனமான சேப்பாக் ஆடுதளத்தில் அடித்த அற்புதமான கவர்டிரைவ் நமக்கு வி.வி.எஸ் லக்ஷ்மணை நினைவுபடுத்துகிறது. ஐ.சி.சி இந்திய T20 தொடர்களுக்கு உரிய அங்கீகாரமும் காலமும் அளிக்கும் வகையில் இந்திய வாரியமும் லாபத்தில் ஒரு பகுதியை ஐ.சி.சி வழி பிற கிரிக்கெட் ஆடும் நாடுகளின் வளர்ச்சிக்கு வழங்கி விட வேண்டும். சர்வதேச ஆட்டங்கள் மட்டும் எதிர்கால கிரிக்கெட் அல்ல; அதை ஐ.சி.சி மட்டுமே இனி நடத்திக் கொண்டிருக்க இயலாது. தமிழில் இலக்கிய பத்திரிகை நடத்துவது போல் விரைவில் சர்வதேச கிரிக்கெட் ஒருங்கிணைப்பது பொது உரிமை ஆகி விடும்.
அடுத்து கால அட்டவணை தயாரிக்கும் போது இந்திய T20 தொடர்கள் நமது உள்ளூர் ஆட்டங்களுக்கு பிறகு நடப்பதை உறுதிசெய்ய வேண்டும். இரண்டு விதங்களில் இது பயன்படும். உள்ளூர் வீரர்களுக்கு சமீபமாக இருக்கும் ஒரு பழக்கம் IPLக்கு மட்டும் உடற்தகுதியுடன் இருப்பது, ரஞ்சி தொடரை புறக்கணிப்பது. இர்பான் பதான் ஒரு நல்ல உதாரணம். மேலும் ரஞ்சி தொடர் முடிந்த நிலையில் இந்திய வீரர்களும் நல்ல ஆட்டபயிற்சியுடன் இருப்பதால் IPLஇன் தரமும் உயரும். IPLஇல் ஜொலிக்கும் ஒருவரின் ஆட்டத்தை ரஞ்சி தொடர் ஆட்டத்துடனும் ஒப்பிட்டு பார்க்கும் வசதி இருக்கும்.
2011 CLT20இல் இருந்து IPLக்கு ஒரு சிறுபாடம் உள்ளது. இம்முறை ஆட்டங்கள் விறுவிறுப்பாக தரமாக இருந்ததற்கு ஒரு முக்கிய காரணம் குறைந்த எண்ணிக்கையிலான ஆட்டங்கள். IPLஇல் இருந்து அநேகமாக பாதி எண்ணிக்கையிலே CLT20இல் ஆடப்பட்டது. இதனால் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமாக கருதப்பட்டது. இரட்டிப்பான எண்ணிக்கையில் ஆடும் பல ஆட்டங்கள் அர்த்தமற்று போவது போல் இம்முறை CLT20இல் நிகழவில்லை. போனமுறை போல் அல்லாது இம்முறை டி.வி ரேட்டிங்க்ஸ் மற்றும் அரங்க பார்வையாளர்களை இழக்காமல் இருக்க அடுத்த IPLஇல் முப்பதுக்குள் ஆட்டங்களை வைத்துக் கொள்ள வேண்டும். CLT20 சுவாரஸ்யமாக உள்ளதற்கு மற்றொரு காரணமும் உண்டு.
CLT20இல் அசலான உள்ளூர் அணிகள் உள்ளன. அவை பல ஆண்டுகளாக சேர்ந்து ஆடி சீரான ஒருங்கிணைவை பெற்றவை. இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியோ, முப்பது ஓட்டங்கள் எடுத்தோ தம் இடத்தை காப்பாற்றினால் போதும் என்று நினைக்கும் இறக்குமதி நட்சத்திரங்களை நம்பி அவை இல்லை. மாறாக ஒருவரை ஒருவர் ஆதரித்து ஆடிதான் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையில் கூட்டாக இயங்கும் அணிகள் அவை. உதாரணமாக நியுசவுத் வேல்ஸ், டிரினிடேட் டொபாக்கோ, சாமர்செட், லாங்கர்சேர், வாரியர்ஸ் ஆகிய அணிகளை சொல்லலாம். IPL அணிகளில் சென்னையை தவிர பிற அணிகள் ஆண்டுக்கு புது அணித்தலைவரையும் வீரர்களையும் மாற்றுகின்றன. கொல்கத்தா போன்ற அணியில் வீரர்கள் இடையே ஒரு ரயில் ஸ்நேகிதம் அளவு தான் பரிச்சயமும் ஒட்டுதலும் இருக்கும். மேலும் IPL அணிகள் ஸ்திரமான மாநில அடையாளமற்றவை. தில்லிக்காரர் வங்காளத்தையும், ஜார்கண்ட் காரர் தமிழகத்தையும், நியுசிலாந்துக்காரர் கன்னடத்தையும் தலைமை தாங்குவது போதாதென்று ஒப்பந்த காலம் முடிந்ததும் வீரர்கள் பிரிந்து சென்று வேறு அணிகளில் ஆடுகிறார்கள். இது பார்வையாளர்களை குழப்புவதுடன் இருந்து மிச்சசொச்ச அடையாளப்படுத்தலையும் குழப்பி விடுகிறது. இப்படி இரவுநேர பி.பி.ஓ ஊழியர்களை போல் IPL வீரர்களும் போலி அடையாளங்களுடன் பணத்துக்காக இயங்க நேர்கிறது. எதையும் எப்படியும் விற்கலாம் என்பதற்காக நாம் எதையும் எப்படியும் விற்கக் கூடாது.
கடந்த இரு CLT20களில் பிறநாட்டு உள்ளூர் அணிகளின் வெற்றிகள் நமக்கு உணர்த்துவது என்ன? சோமர்சட், டிரினிடாட் அளவுக்கு நம்மூர் மும்பை, கர்நாடகா, தில்லி அணிகளாலும் ஆட முடியும். சென்னை சூப்பர் கிங்ஸை டிரினிடேட் எனும் நட்சத்திரங்களற்ற எளிய அணியால் தோற்கடிக்க முடியும் என்றால் அதையே கர்நாடகம் அல்லது தில்லியாலும் செய்ய முடியும். IPLஇல் ஆடுவது போக மீத வீரர்களை கொண்டு சிறந்த மூன்று இந்திய உள்ளூர் அணிகளை தேர்வு செய்து அடுத்த ஐ.பி.எல்லில் ஆட செய்யலாம். முதல் வாரம் தேர்வு நிலை ஆட்டங்கள் வைத்து தோல்வியுறும் IPL Franchiseகளில் இரண்டு மூன்றை வெளியேற்றி அவ்விடத்தை இந்திய மாநில அணிகளுக்கு வழங்கலாம்.
No comments :
Post a Comment