Tuesday, 15 May 2012

இந்தியாவில் தத்தெடுப்பு: சாதியமும் சந்தைமனநிலையும்




முறைகேடுகளின் கதை

உலகிலேயே அதிகபட்சம் குழந்தைகளை வெளிநாடுகளில் இருந்து தத்தெடுக்கும் நாடு அமெரிக்கா. அவர்கள் குழந்தைகளுக்காக அதிகம் நாடுவது சீனாவை. அதற்கடுத்து அதிகபட்சமான குழந்தைகள் சுரங்கமாக விளங்கும் மூன்றாம் உலக நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 1980களில் ஒரு குழந்தை வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் வழியில் இறந்து போக இந்தியா ஒரு குழந்தைகள் ஏற்றுமதி சந்தையாக மாறி வருவது பற்றின ஒரு பெரும் சர்ச்சை எழுந்தது. வழக்கம் போல் இந்திய நீதி அமைப்பு மட்டும் தார்மீக உணர்வுடன் இந்த போக்கை கண்டித்தது. ஒரு லட்சத்துக்கு ஒரு குழந்தை என பேரம் நடப்பதாக ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி குற்றம் சாட்டினார். விளைவாக 1984இல் அரசாங்கம் தனது மேற்பார்வையின் கீழ் ஒரு ஒருங்கிணைப்பு அமைப்பை நிறுவியது. இது தான் Central Adoption Resource Agency (CARC). இந்திய குழந்தைகளின் தத்தெடுப்பில் உள்ள முறைகேடுகளை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததில் CARCக்கு முக்கிய பங்குள்ளது. அதே வேளை இது அரசாங்க கோப்புகளின் நகர்வில் உள்ள சிடுக்குகள் மற்றும் மந்தவேகம் காரணமாக உள்ளூரில் தத்தெடுக்க முயல்வோரை அதைரியப்படுத்தி சோர்வூட்டுவதாகவும் உள்ளது. இந்தியாவில் தத்தெடுப்பதன் பின்னுள்ள பிரச்சனைகள் கலாச்சாரம், ஜாதி, படிநிலை, பொருளாதாரம் மற்றும் ஊழல் சம்மந்தப்பட்டவை.

இந்தியாவில் உள்ள தத்தெடுக்கும் தகுதியில் உள்ள குழந்தைகளை பிறப்பில் அனாதையானவர்கள், மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகள் என பிரிக்கலாம். பிறப்பில் பெற்றோரை இழந்த குழந்தைகள் ஒரு சிறு பகுதியினர் மட்டுமே. அநேகமாக கைவிடப்பட்டவர்களே அதிகம் தத்தெடுப்புக்கு உள்ளாகிறார்கள். அதாவது தாய்மார்கள் ஏழ்மை மற்றும் சமூக அவமானம் காரணமாக குழந்தைகளை அநாதை இல்லங்கள் உள்ளிட்ட தத்தெடுப்பு முகமைகள் நடத்தும் நிறுவனங்களில் விட்டுச் செல்கிறார்கள். பிறந்த இளம் மதலைகள் மட்டுமல்ல ஒரு வயது கடந்த குழந்தைகளை கூட வறிய குடும்பச் சூழல் காரணமாய் விட்டு விடக் கூடும். இவர்களுக்கு தம் சூழல் மேம்பட்டதும் குழந்தையை மீட்கும் உத்தேசம் இருக்கக் கூடும். ஆனால் முகவர்கள் காலி பத்திரங்களில் கையெழுத்து வாங்கி ஒரேயடியாக குழந்தையின் உரிமையை விட்டுக் கொடுக்கும் படி செய்கின்றனர். மேலும் தாய்மார்கள் சென்று சில மாதங்கள் கடந்ததும் குழந்தையின் குடும்பத்துடன் தொடர்பு கொண்டு குழந்தை பற்றின் விபரங்களை தெரிவித்து தாய்-சேய் உறவை புதுப்பிக்க இந்நிறுவனங்கள் முயல்வதில்லை. விட்டுப் போகும் அம்மாக்களின் சொந்தபந்தங்களின் பராமரிப்பில் குழந்தையை விடவும் முயல்வதில்லை. பல முகவர்கள் ஏழ்மை மிகுந்த பகுதிகளில் மையங்கள் நடத்தி குழந்தைகளை விட்டுக் கொடுக்கும் குடும்பங்களுக்கு ஊக்குவிப்பு தொகை அளிக்கிறார்கள். 99இல் ஆந்திராவின் லம்பாடி பழங்குடியினரிடம் இப்படி ஒரு பேரம் ஏற்பாடானது. ஆண் என்றால் பெற்றோர்களுக்கு, பெண் குழந்தை என்றால் ரூபாய் 2000க்கு முகவர்களிடம் கொடுத்து விட வேண்டும். இவ்வாறு தான் இந்தியாவின் ஒரு பாதி அநாதைக்குழந்தைகள் உருவாக்கப்படுகின்றன.

ஒரு பெற்றோரிடம் தில்லியில் உள்ள முகவம் ஒன்று மிக பலவீனமான குழந்தை ஒன்றை காட்டியது. எதிர்பார்ப்புக்கு மாறாக பெற்றோர்கள் அக்குழந்தையை தேர்ந்தனர். இது முகவர்களை மிகவும் எரிச்சலடைய வைத்ததாக பெற்றோர்கள் கூறுகிறார்கள். ஏற்கனவே இருமுறை நிராகரிக்கப்பட்ட குழந்தை அது. மூன்றாம் முறை நிராகரிக்கப்பட்டிருந்தால் சுலபமாக வெளிநாடு அனுப்பியிருப்பார்கள். மேலும் முகவர்கள் பொதுவாக கீழ்மத்திய வர்க்கத்தினருக்கும் ஏழைகளுக்கும் தத்து தர மறுக்கிறார்கள். படித்த பணக்கார பெற்றோர்களால் தான் ஒழுங்காக குழந்தைகளை வளர்க்க முடியும் என்றொரு அசட்டு நம்பிக்கை அவர்களிடம் உள்ளது. குழந்தை வளர்ப்புக்கு அவசியம் பணமும் கல்வியையும் விட அன்பும் அரவணைப்பும் மிக்க ஒரு குடும்பமே. பல குழந்தைகள் நீண்ட காலமாக அநாதை இல்லங்களிலேயே தங்கி விடுவதற்கு முகவர்கள் உருவாக்கும் இப்படியான இடர்களே முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது. மேலும். அடுத்து அரசு தொட்டில் குழந்தைகள், ஆஸ்பத்திரியிலும் தெருவிலும் துறக்கப்பட்ட குழந்தைகள், அலைந்து திரியும் குழந்தைகள் என மற்றொரு பகுதி குழந்தைகள் அரசின் கட்டுப்பாட்டில் வந்ததும் முகமைகளுக்கு அனுப்பப்பட்டு தத்துக்குள்ளாகின்றன. ஆனால் தெருவில் இருந்து ஒரு புது வீட்டை நோக்கிய ஒரு குழந்தையின் பயணம் அவ்வளவு பத்திரமாக விரைவாக எளிதாக நிகழ்வதில்லை.
முதலில் சில மாதங்களே வயதான நிலையில் தத்து நிறுவனங்களுக்கு வரும் குழந்தைகள் போதுமான சத்துணவும் மருத்துவ கவனமும் இன்றி பலவீனமாகி விடுகின்றன. இவ்விசயத்தில் அநாதை நிறுவனங்கள் புளூகிராஸை ஒத்துள்ளன. தத்தெடுப்பவர்கள் அரோக்கியமற்ற குழந்தைகளை நிராகரித்து விடுகிறார்கள். தத்தெடுத்து சென்ற பின் சிலர் குழந்தைகளின் நலக்குறைபாடுகளை அறிந்து திரும்ப கொண்டு வந்து விடுகின்றனர். எப்படியும் அநேகம் தத்தெடுக்கும் குழந்தைகள் முதல் சில மாதங்கள் ஏனும் மிக கவனமாக கவனிக்கப்பட்டாலே தேறுகின்றனர். குழந்தைகள் ஏன் இவ்வாறு பலவீனமாக உள்ளன? தாயின் கவனிப்பை பெறாத மதலைகளுக்கு வெறும் புட்டிப்பாலும் மருந்தும் மட்டும் போதாது. அவற்றை தொட்டு அரவணைத்து அன்பு காட்டும் போது தான் அவற்றுக்கு பதற்றம் தணிந்து பசி பிறக்கிறது. வெறுமனே ஊட்டப்படும் போது குழந்தைகளுக்கு பசியும் இருப்பதில்லை; பற்றாக்குறை காரணமாக அரோக்கிய கேடும் ஏற்படுகிறது. இவ்வாறு தனி அக்கறை காட்டுவதற்கு போதுமான எண்ணிக்கையில் பணியாளர்கள் பெரும்பாலான அநாதை இல்லங்களில் இருப்பதில்லை. மேலும் இந்நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எளிதாக நோய்த்தொற்றுவதும் ஒரு முக்கிய சிக்கல். ஆனால் தத்தெடுக்கும் பெற்றோர்கள் பல சமயங்களில் அரோக்கியமற்ற குழந்தைகளின் மீது மிகுந்த பாசம் கொண்டு பெரும் பிரயத்தனமும் பொருட்செலவும் செய்து அக்குழந்தைகளை காப்பாற்றுகின்றனர். இதற்கான உதாரணங்கள் நமது நட்பு வட்டங்களிலேயே நாம் காண முடியும். வினிதா பார்கவா தனது Adoption in India நூலில் தான் நேரடியாக சந்தித்த சில பெற்றோர்களை குறிப்பிடுகிறார். ஒரு தாய் சொல்கிறார்: “என் குழந்தை பிழைப்பதற்கு டாக்டர் ஒரு வாரம் தான் கெடு விதித்தார். நான் அதன் அருகிலேயே கண்கொட்டாமல் பழியாய் கிடந்தேன் எப்படியோ உயிரைக் கொடுத்து காப்பாற்றி விட்டோம். மற்றொரு தத்தெடுத்த பெற்றோருக்கு தம் குழந்தைக்கு ரத்தப்புற்று நோயுள்ள விபரம் கொஞ்ச நாளில் தெரிய வருகிறது. குழந்தையை அநாதை நிறுவனத்துக்கு திருப்பும் படி அறிவுரைக்கிறார் மருத்துவர் (மருத்துவர்கள் பரிந்துரையின் படி இந்தியாவில் ஒரு குழந்தை கூட தத்தெடுக்கப்படுவதில்லை என்கிறார் வினிதா பார்கவா. பல ஜோடிகள் லட்சக்கணக்கான பணமும் 10-15 வருடங்களும் செலவழித்து கருத்தரிப்பு முயற்சி செய்து துவண்டு போகும் போதும் மருத்துவர்கள் இவர்களை தத்தெடுப்பை பற்றி சிந்திக்க விடுவதே இல்லை). ஆனால் இக்குழந்தையின் வளர்ப்பு அம்மா விடாப்பிடியாக போராடி வருகிறார். அக்குழந்தைக்கு இரண்டு வாரத்துக்கு ஒரு முறை ரத்தமாற்று சிகிச்சை செய்ய வேண்டும். ரத்தப்புற்று நோய்க்கு தீர்வான எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்வதில் ஒரு பிரச்சனை உள்ளது. ரத்த உறவினரின் மஜ்ஜையை தான் பயன்படுத்த முடியும். ஆனால் அக்குழந்தையின் பெற்றோர் பற்றின எந்த தகவலும் கிடையாது.. இது நமது தத்து நிலைப்பாட்டினோடு ஆழமாக பிணைந்த ஒரு சிக்கல் - உயிரியல் பெற்றோர்கள் பற்றி தகவல்களை தத்து நிறுவனங்கள் ஆவணப்படுத்துவதில்லை. இருந்தாலும் படுரகசியமாக வைக்கப்படுகிறது. ஒரு தத்துக்குழந்தைக்கு வரக்கூடிய மரபியல் நோய்களாகிய மாரடைப்பு, நீரிழிவு, மனநோய் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு இந்த ஆவணப்படுத்தாமை மிகப் பெரும் ஆபத்துகளை விளைவிக்கக் கூடியதாக உள்ளது. உதாரணமாக உயிரியல் பெற்றோர்களில் இருவருக்கும் ரத்தசர்க்கரை இருந்ததென்றால் ஒரு குழந்தை இளமையில் இருந்தே முன்னெச்சரிக்கையுடன் வாழ்ந்து தன்னை பாதுகாக்க முடியும். அந்த வாய்ப்பு இங்கு மறுக்கப்படுகிறது. இது போன்ற மேலும் பல பிரச்சனைகளுக்கு இந்திய தத்தெடுக்கும் பெற்றோர்களின் மரபான நம்பிக்கைகளும் நமது சாதியமும் இறுக்கமான சமூக படிநிலையும் ஒரு முக்கிய காரணம்.

சாதியமும் படிநிலையும்

இந்திய தத்தெடுப்பு பெற்றோர்களை மரபானவர்கள், நவீனமானவர்கள் என பிரிக்கலாம். பொதுவாக சம்பிரதாய திருமணங்கள் செய்து கொண்டவர்கள் குழந்தைப்பேறு இல்லாத போதும் மிக தயங்கி காலம் தாழ்த்தி தான் தத்தெடுக்க முன்வருகிறார்கள்.. பல ஜோடிகளுக்கும் கணவன் வீட்டார், குறிப்பாக மாமியார்கள், இதற்கு தடையாக இருக்கிறார்கள் வினிதா பார்கவாவின் ஆய்வின் போது சந்தித்த ஐம்பது தத்தெடுத்த ஜோடிகளில் ஒரு பெண் தனது தத்துக்குழந்தையை தன் வீட்டில் கூடவே வசிக்கும் மாமனார் ஒரு வருடம் வர தீண்டவே மறுத்து விட்டார் என குறிப்பிடுகிறார். பல மரபான ஜோடிகள் மாமியார் மரணத்துக்கு அல்லது ஊரை விட்ட போன பின் தான் தத்தெடுப்பதில் முனைப்பு காட்டுகிறார்கள். அதற்குள் குழந்தையில்லாமல் பத்து வருடங்களை வீணடித்து விடுகிறார்கள். இந்த மரபான பெற்றோர்களில் கணிசமானவர்கள் ஒரு குழந்தைக்கு மேல் தத்தெடுப்பதில்லை. ஏற்கனவே குழந்தை இருந்தும் தத்தெடுப்பவர்கள் இவ்வகையினரில் அநேகமாக இல்லவே எனலாம். மாறாக காதல் திருமணம் செய்பவர்கள் தத்தெடுப்பதற்கு எளிதில் முன்வருகிறார்கள். இவர்கள் தமது உறவினர்களின் சம்மதத்துக்காக காத்திருப்பதும் இல்லை. இவர்கள் தாம் இரண்டு குழந்தைகளை தத்தெடுக்கவும் குறிப்பாக பெண் குழந்தைகளை தத்தெடுக்கவும் ஆர்வம் காட்டுகிறார்கள். பலர் சின்ன வயதிலேயே இவ்வாறு தத்தெடுக்கும் முடிவை சமூக பொறுப்புணர்வு மற்றும் கருணை காரணமாக எடுத்தவர்கள். சம்பிரதாய திருமண ஜோடிகள் “வாரிசுக்காக ஆண் குழந்தைகளை தான் விரும்புகிறார்கள்.

இந்த முதல்கட்ட தடையை கடந்ததும் அடுத்து நம் இந்திய பெற்றோர்கள் குழந்தை முடிந்தளவுக்கு தோற்றத்தில் தம்மை ஒத்து இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். பொதுவான விதிப்படி தத்தெடுக்கும் பெற்றோர்களுக்கு குழந்தைகளைப் பொறுத்த மட்டில் விருப்பத்தேர்வே கூடாது. முகவர் காட்டும் குழந்தையை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் நடைமுறையில் பல பெற்றோர்கள் குழந்தைகள் பார்க்க தம்மை ஒத்திருக்க வேண்டும் என வற்புறுத்தி ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை பார்க்க முயல்கிறார்கள். இதன் பின்னால் இந்தியர்களின் சாதிய மனநிலை தெளிவாக வேலை செய்கிறது. கறுப்பான சப்பை மூக்குள்ள அசிங்கமான குழந்தைகளை விட சிவப்பான லட்சணமான குழந்தைகளை நாடும் பெற்றோரின் அக்கறைகள் முழுக்க அழகியல்பூர்வமானவை அல்ல. மேலும் இந்தியர்கள் ஒருவரின் இயல்பான பண்பும் ஆளுமையும் திறமையும் மரபியல்ரீதியாக கடந்து வருகின்றவை என ஆழமாக நம்புகிறவர்கள். தத்தெடுப்பவர்கள் தமது குழந்தைகள் குற்றப்பிண்ணனி கொண்டவர்களின், தாழ்த்தப்பட்டவர்களின், விளிம்புநிலை மக்களின் குழந்தைகளாக இருக்கக் கூடாது என உள்ளார்ந்து விரும்புகிறார்கள். வளர்ப்பு ஒருவரின் ஆளுமையை தீர்மானிக்காது, திருடனின் குழந்தை திருடனாகவே ஆகும் என்பதும் ஒரு வழமையான இந்திய முன்னெண்ணம் தான்.. வினிதா தில்லியில் பார்த்த தத்தெடுத்த தமிழ் பிராமண குடும்பங்கள் குழந்தையை ஒரு தூரத்து சொந்தக்காரர்களிடம் இருந்து பெற்றதாகவே பிறரிடம் சொல்லி வைத்திருக்கிறார்கள். உத்தர்பிரதேசத்தை சேர்ந்த ஒரு பனியா குடும்பமும் இதே போல் தமது தத்து புத்திரனை பனியாவாக்கி விட்டது. அநேகமானவர்கள் குழந்தை பிறந்த நேரத்தை வைத்து சோதிடம் பார்த்த பின் தான் முடிவெடுக்கிறார்கள். இந்த சாதியம் மற்றும் பிற்போக்கு மனநிலை காரணமாக தான் எராளமான குழந்தைகள் ஒரேயடியாய் தத்துநிறுவனங்களிலேயே பத்துவருடங்கள் வரை தங்கிப் போகிறார்கள். இந்த காரணங்களினாலேயே பொதுவாக குழந்தைகளின் உண்மைப் பெற்றோரின் பெயர் பின்னணி விபரங்களை முகமைகள் மறைத்து விடுகின்றன. அத்தோடு தத்தெடுத்த பெற்றோர் தமது குழந்தைகள் திரும்ப உயிரியல் பெற்றோரை நாடிச் சென்று விடுமோ என்று அஞ்சுவதும் ஒரு காரணம். பிறந்து சில மாதங்களான குழந்தைகளை தத்தெடுக்க பெற்றோர்கள் விரும்புவதன் ஒரு காரணம் அவர்களும் தம் உயிரியல் குடும்ப நினைவுகள் இருக்காது என்பது. சற்று வளர்ந்த குழந்தை என்றால் முழுக்க தனது கடந்தகால நினைவுள் அற்றதாக இருப்பதே உசிதம் என கருதுகிறார்கள். பொதுவாக இந்தியாவில் தத்தெடுப்பது குழந்தைகள் ஒரு புது குடும்பத்தை கண்டடைவதற்காக அல்ல, மாறாக பெற்றோர்கள் ஒரு குழந்தையை அடைவதற்காக தான் என கருதப்படுகிறது. தத்தெடுப்பதில் ஒரு சந்தைமனநிலை நிலவுவதும் இதனால் தான்.

குழந்தை ஏற்றுமதியும் சட்டமும்

அடுத்து முகவர்களின் பணத்தாசை. முன்னர் அநேகம் குழந்தைகள் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. முகவர்களுக்கு நன்கொடை என்ற பெயரில் கோடிக்கணக்கில் பணமும் இலவச வெளிநாட்டு பயணங்களும் சாத்தியமாகின. பின்னர் அரசாங்கம் கட்டாயமாக 50 சதவீதம் தத்துகளை உள்நாட்டிலேயே வழங்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வந்த பின் இந்தியாவுக்குள் தத்தெடுக்கப்படுவது பல மடங்கு அதிகமாகியது. 1988இல் 398 குழந்தைகள் இந்தியாவுக்குள் தத்தெடுக்கப்பட்டதென்றால் இந்த எண்ணிக்கை 2003இல் 1949 ஆக வளர்ந்தது. முன்னர் தத்துக்குழந்தைகளில் நான்கில் ஒரு பகுதியினர் தான் உள்நாட்டில் தத்தளிக்கப்பட்டனர். ஆனால் தற்போது வெளிநாடுகளில் தத்து அளிக்கப்படுவதை விட உள்நாட்டில் இரட்டிப்பாக குழந்தைகள் பெற்றோர்களை கண்டடைகின்றனர். ஆனால் ஆய்வாளர்கள் இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க முடியும் என நம்புகிறார்கள். 70% வரை உள்நாட்டிலேயே தத்தளிக்க முடியும். ஆனால் வற்புறுத்துவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. ஏனெனில் இந்தியாவில் கைவிடப்பட்ட குழந்தைகளின் பராமரிப்பு இந்த தனியார் முகவர் நிறுவனங்களில் கையில் தான் பெருமளவு உள்ளது. இந்நிறுவனங்களின் பொருளாதார ஆதாரம் வெளிநாட்டு தத்தளிப்பை நம்பியுள்ளது. ஆக ஓரளவுக்கு மேல் விதிமுறைகளை இறுக்கவும் அரசாங்கம் விரும்பவில்லை.

மேலும் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்தில் தத்தெடுப்பதிலும் பல சட்ட சிக்கல்கள் உள்ளன. தமிழர் ஒருவர் வங்காளத்தில் சென்று தத்தெடுக்க வேண்டும் என்றால் அங்குள்ள நீதிமன்றத்தில் விண்ணப்பித்து காகித வேலை முடியும் வரை அங்கேயே தங்கி இருக்க வேண்டும். விளைவாக மகாரஷ்டிராவில் தத்தெடுக்க ஆளில்லாமல் எண்ணற்ற குழந்தைகளும், ஆந்திரா மற்றும் தில்லியில் குழந்தைக்காக விண்ணப்பித்து நீண்ட வருடங்கள் காத்திருக்கும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான துண்டுபட்ட மாகாணங்களை மிரட்டியும் படையெடுத்தும் ஒட்டி உருவாக்கப்பட்ட இந்தியா உண்மையில் ஒரு ஒருமித்த தேசம் தானா என நாம் ஐயப்படும் பல்வேறு சந்தர்பங்களில் இதுவும் உண்டு.

2001 முதல் 2004 வரையிலான கணக்கெடுப்பு படி 7630 குழந்தைகள் உள்ளூரிலும் 4409 குழந்தைகள் வெளிநாடுகளிலும் தத்தளிக்கப்பட்டுள்ளார்கள். நமது கலாச்சார சட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்பட்டால் இந்த விகிதம் 10,000:2039 என்று மாறக் கூடும்.

குழந்தைக்காக தத்தெடுக்க விண்ணப்பித்தவர்கள் காத்திருப்பு பட்டியலில் வருடக்கணக்கில் இருக்கிறார்கள். குறிப்பாக ஆரோக்கியமான ஆண் குழந்தைகளை நாடுபவர்கள். தாமதத்திற்கு முதல் காரணம் பெற்றோர் விபரங்கள் இல்லாத ஒரு குழந்தையை கூட பராமரிப்பு மையத்தில் சில மாதங்கள் காத்திருந்த பின்னரே தத்தெடுக்க முடியும் என்ற விதி. அரசு இயந்திரம் தனது வழக்கமான மந்தகதியில் செயல்பட்டு குழந்தையின் உயிரியல் பெற்றோர் வரமாட்டார்கள் என ஒரு முடிவுக்கு வரவே கொஞ்ச காலம் பிடிக்கும். மூன்று முறை ஒரு குழந்தையை இந்திய தத்துப்பெற்றோர் நிராகரித்தால் வெளிநாட்டுக்கு அனுப்பலாம் என்ற விதி இருப்பதால் முகவர்கள் முடிந்தவரை குழந்தை நாடுபவரின் மனம் மாற்ற முயல்வார்கள். தில்லியில் உள்ள முகவர் நிறுவனம் ஒன்றும் நாடி வரும் பெற்றோர்களிடம் வழமையாக் இரு எதிர்மறைக் கதைகள் சொல்லும் என்கிறார் வினிதா பார்கவா. ஒன்று ஒரு பெற்றோரின் தத்துக்குழந்தை பதினாறு வயதானதும் தனது வளர்ப்பு குடும்பம் பிடிக்காமல் உயிரியல் பெற்றோரைத் தேடித்தருவதான உறுதியளித்த காதலனுடன் வெளியேறிய கதை. ஒரு ஜோடி தாம் தத்தெடுத்த குழந்தை குடும்பத்துடன் சரி வர பழக மறுத்து பிரச்சனை ஏற்படுத்தியதால் சில மாதங்களில் தத்து நிறுவனத்துக்கே திருப்பி அளித்து விட்ட நிகழ்வு. இந்த கதைகளை கேட்ட பல ஜோடிகள் தமக்கும் இது போன்ற எதிர்விளைவுகள் நேருமோ என மனம் மாறி திரும்பி விட்டனர்.

இவ்வளவு அதையரிப்படுத்தல்களுக்கு பிறகும் சில பெற்றோர்கள் குழந்தைகளை, அரோக்கியமற்று அழகற்று இருந்தாலும், பார்த்த மட்டும் பிடித்துப் போய் தத்தெடுத்து விடுவதுண்டு. குழந்தை வளர்ப்பு என்பது மனித இயல்பின் ஒரு வலுவான அம்சம். குழந்தைப்பாசம் வம்ச விருத்தியுடன் நேரடியாக தொடர்பானது அல்ல. ஒரு குழந்தை நம் மரபணு பிரதி மட்டும் அல்ல. குழந்தைகள் நமது சிறுமையை கடந்து மனவிரிவடைய, வாழ்வின் மீது பிடிப்பு வர, தனிமையை மறக்க, அர்த்தம் பெற உதவுகின்றன.. குழந்தைகள் நாம் இதுவரை புரிந்து கொண்டதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக புத்தொளி கொண்டதாக இவ்வுலகை நமக்கு காட்டித் தருகின்றன. இதற்கான ஓராயிரம் சான்றுகளை தத்தெடுக்கும் பெற்றோர்களின் வாழ்வு நமக்கு அளிக்கின்றன.

தத்து வரலாறும் மூன்றாம் உலக சந்தையும்

தத்தெடுத்தலின் வரலாறு மிகப்பழமையானது. எகிப்து, கிரேக்கம், ரோம், பெபிலோனியா என பல நாடுகளில் தத்தெடுக்கும் வழமை இருந்ததற்கு ஏராளமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அக்காலத்தில் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் தாம் உண்மைக்குழந்தைகள் அல்ல என்ற உண்மையை வெளியே சொல்ல தடை இருந்தது. 4000 வருடங்களுக்கு முன் இவ்விதியை மீறினவர்களின் நாவுகள் வெட்டப்பட்டன. உயிரியல் பெற்றோரை தேடிச் சென்ற குழந்தைகள் குருடாக்கப்பட்டனர். சீனாவில் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இரு வேறு காரணங்களுக்காக தத்தெடுக்கப்பட்டன. ஆண் வாரிசுக்காக; வாரிசுள்ள பட்சத்தில் பெண் எதிர்கால மருமகளாக ஆவதற்காக. இந்த தத்துப்பெண்கள் விசுவாசமான, குடும்பப் பிணைப்புள்ள மருமகள் ஆவது மட்டுமல்ல மணமகள் தட்சணையும் லாபமாகுமே என சீனர்கள் கணக்குப்போட்டனர். இந்தியாவில் தத்தெடுப்பு நிறுவனப்படுத்தப்படுவதற்கு முன் குடும்பத்துக்குள், சொந்தத்துக்குள் தத்தெடுக்கும் வழமை நீண்ட காலமாக இருந்தது. கண்ணதாசனின் “வனவாசத்தில்“ அவர் வளர்ந்து சினிமாவில் முதல் பாடல் எழுதிய நிலையிலும் ஊதாரித்தனமாக வாழ்கிறார் என்று கருதியும் பொதுவான வறுமை காரணமாகவும் அவரது பெற்றோர்கள் ஒரு குழந்தையற்ற பணக்கார குடும்பத்தில் அவரை தத்துக் கொடுத்தது பற்றின செய்தி வருகிறது. தத்துக் கொடுத்த பின் அவர் தனது தாய் தந்தையருடன் எந்த உறவும் பேணக் கூடாது என்ற கண்டிப்பான நடைமுறை அப்பொது இருந்திருக்கிறது. இந்த பிரிவை பற்றின ஒரு உருக்கமான விவரணையை கண்ணதாசன் எழுதியுள்ளார். நாட்டுக்கோட்டை செட்டிமார் சமூகத்தில் அக்காலத்தில் இவ்வாறு வளர்ந்த மகன்களை தத்துக் கொடுக்கும் வழமை இருந்திருக்கிறது எனவும் கூறுகிறார். அப்போது தத்தளிப்பது ஒரு சமூக செயல்பாடாக அல்லாமல் பரிச்சயமானோர் இடையேயான காதும் காதும் வைத்தபடியான ஒரு ஏற்பாடாக இருந்திருக்கிறது. குடும்பமும் நீடித்த சொந்தங்களும் தத்தெடுப்பின் முறைமைகளை தீர்மானித்தனர். பின்னர் நவீன காலத்தில் இந்த தத்து நிலைப்பாட்டில் ஒரு பெரும் மாற்றம் நிகழ்கிறது. அது அரசாங்க கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

அமெரிக்காவில் 1920கள் வரை தத்தெடுப்பது அங்கீகரிக்கப்பட்ட செயலாக இருக்கவில்லை. முதல் உலகப் போரும் அதைத் தொடர்ந்து வந்த பரவலான இன்பிளுவன்சா சளிக்காய்ச்சலும் லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கின. குழந்தைப்பிறப்பு குறைந்தது. அப்போது தான் முதன்முறையாக தரகர்கள் மூலம் குழந்தைகளை ‘தத்தெடுக்க மக்கள் முயன்றனர். இது ஒரு கள்ளச்சந்தையாக உருவெடுக்க அரசாங்கம் தலையிட்டு தத்தெடுப்பை சட்டரீயாக ஆக்கி ஒழுங்குப்படுத்தியது. இரண்டாம் உலகப் போரின் போது பேரளவிலான உயிரிழப்பையும் கடும் பொருளாதார சரிவையும் சந்தித்த ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான், சீனாவில் இருந்து அனாதைக் குழந்தைகள் வெளிநாடுகளுக்கு குழந்தையற்ற குடும்பங்களை நோக்கி ஏற்றுமதி செய்யப்பட்டன. வியட்நாம் மற்றும் கொரிய போர்கள் இந்நாடுகளையும் உலகுக்கு தத்துச் சந்தைகளாக மாற்றின. வறிய நாடுகளில் இருந்து குழந்தைகளை நாடுவது வளர்ந்து நாடுகளின் பிரஜைகளுக்கு ஒரு புண்ணிய செயலாகவும் இருந்து வருகிறது. உதாரணமாக 1991இல் ரொமானியாவில் இருந்து 5000 குழந்தைகள் வெளிநாடுகளில் தத்தெடுக்கப்ப்பட்டன. இவர்களில் அநேகமான குழந்தைகள் ஏழைக்குடும்பங்களில் இருந்து வாங்கப்பட்டன.

இன்றும் இந்திய முகவர்கள் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பவதே அவர்களின் நலனுக்கு உகந்தது என தார்மீகமாக நம்புகிறார்கள். வளர்ந்த நாடுகளின் வசதிகளும் முன்னேறிய சூழலும் போக அங்கு அவர்கள் பெற்றோர்களின் சொத்துக்கு வாரிசாவதிலும் இந்தியாவில் போல் சட்டச்சிக்கல்கள் இருப்பதில்லை என அவர்கள் சொல்லுகிறார்கள். இங்குள்ள HAMA சட்டப்படி திருமணத்தில் போலவே தத்தெடுப்பிலும் மத விதிமுறைகள் குறுக்கிடுகின்றன. இதன் படி இந்துக்களின் தத்துப்பிள்ளைக்கு மட்டுமே சொத்துரிமை உண்டு. கிறித்துவர்கள் மற்றும் இஸ்லாமியர் தமது தத்துக்குழந்தைக்கு காப்பாளராக மட்டுமே இருக்க முடியும். சொத்துரிமை கிடையாது. ஒரு இஸ்லாமியர் ஒரு இந்துக் குழந்தையை, அல்லது ஒரு இந்து ஒரு கிறுத்துவக் குழந்தையை தத்தெடுக்க முடியுமா? முடியாது. சமீபத்தில் ஷெயிக் தாவுத் என்பவர் நான்கு வயதான கிரிதரன் என்ற குழந்தையை தத்தெடுத்த போது அதை மதுரை உயர்நீதிமன்றம் செல்லுபடியாகாது என அறிவித்தது. இந்த சிக்கல்களுக்கு காரணம் நமக்கு அனைத்து மதத்தினருக்குமான ஒரு பொது தத்தளிப்பு சட்டம் இல்லை என்பது. அப்படி ஒரு சட்டம் வந்தால் பரவலான மதமாற்றம் நிகழும் என அஞ்சுகிறார்கள். விளைவாக கணிசமான குழந்தைகள் வெளிநாடுகளில் ஒரு ‘தொண்டு மனப்பான்மையுடன் முகவர்களால் அளிக்கப்படுகிறார்கள்.

வெளிநாடுகளில் இருந்து குழந்தைகள் தத்தெடுக்கப்படுவது கடந்த நாற்பது வருடங்களில் உலகம் முழுக்க பெருமளவு அதிகரித்துள்ளது. ஒரு புறம் ஆணுறை பயன்பாடு, கருக்கலைப்பு, திருமணமற்ற வாழ்வுக்கான அங்கீகாரம் மற்றும் பொருளாதார தன்னிறைவு போன்ற நவீன வாழ்வின் சுதந்திரங்களும், இன்னொரு புறம் பொருளாதார நெருக்கடிகளும் உடல் மன அழுத்தங்களும் மக்களிடையே குழந்தைப்பேறை குறைத்து மலட்டுத்தன்மையை அதிகரித்தது வளர்ந்த நாடுகளில் உள்ளூரில் தத்தெடுப்பதற்கான குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்தது. விளைவாக மூன்றாம் உலக நாடுகள் குழந்தைச் சந்தையாக்கின.

இன்னொரு விளைவாக மக்களுக்கு தமது சொந்தத்துக்குள் தத்தெடுப்பது விருப்பமற்றதாக மாறியது. தனிமனிதவாதமும், சொந்தத்தில் தத்தெடுத்தால் குழந்தைமீது முழு உரிமை இருக்காது என்ற நியாயமான அச்சமும் இதற்கு காரணங்கள். தத்தெடுப்பு நிறுவனமயமாக்கப்பட்டது மற்றொரு காரணம். இது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்பதற்கு மாநில அளவிலான தத்தெடுப்பு புள்ளிவிபரங்கள் சான்றளிக்கின்றன. தத்தெடுப்பு முகவர் நிறுவனங்கள் சிறப்பாக செயல்படும் மேற்கு மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் தத்தெடுக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை இந்த வலைதொடர்பு வலுவாக இல்லாத பீகார், இமாச்சல பிரதேசம், மற்றும் மத்திய பிரதேசத்தை விட பல மடங்கு அதிகம். வடகிழக்கு மாநிலங்களில் தத்தெடுப்பு நிகழ்ந்ததாக எந்த கணக்கும் இல்லை.

சொல்லவா வேண்டாமா?

பிறந்த உடனே தத்தெடுப்பது சட்டவிரோதம் என்பதால் மூன்றில் இருந்து ஆறு மாதங்களுக்குள் எடுக்க முனைகிறார்கள். அப்போது குழந்தைகளுக்கு முந்தின வாழ்க்கை நினைவுகள் இருக்காது என்பது புரிதல். ஆனால் பிராடின்ஸ்கி போன்ற சமீபத்திய ஆய்வாளர்கள் மாறுபடுகிறார்கள். தாமதமாக எடுக்கப்பட்ட குழந்தைகள் தீவிரமான இழப்புணர்வை உடனடியாக உணர்ந்து வெளிப்படையாக உயிரியல் பெற்றோருக்காக ஏங்குகிறார்கள். மிக இளமையில் எடுக்கப்பட்டவர்கள் நுட்பமான வகையில் துவக்கப்பள்ளி செல்லும் வயதில் ஏங்கத் துவங்குகிறார்கள். குழந்தைகளுக்கு இது ஒரு தவிர்க்க முடியாத துக்கம்; பெற்றோருக்கு அவிழ்க்க முடியாத சிடுக்கு. உயிரியல் பெற்றோர் நமக்கு உடலளவில் ஒப்பீட்டுக்கான ஒரு மாதிரி. முன்னோர்களிடம் இருந்து ஒரு தொடர்புச்சங்கிலி. நிறத்தில் இருந்து உடலமைப்பு மற்றும் சில சுபாவங்கள் வரை ஒரு பௌதீக ஆதாரமாக இருக்கிறார்கள். உடல் பருமனாக இருப்பதற்கு, இருபதுகளில் வழுக்கை விழுவதற்கு, உயரம் வராததற்கு, சின்ன சின்ன உபாதைகளுக்கு மற்றொருவரை காரணம் காட்ட முடியாது. பல பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு வரும் படிப்பு மற்றும் ஒழுக்கம் சம்மந்தப்பட்ட இயல்பான பிரச்சனைகளுக்கு மரபணு தான் காரணமோ என நம்பத் துவங்குகிறார்கள். உதாரணமாக குழந்தை திருடுகிறதென்றால் அது ஒரு வாழ்வை பயிலும் முறை என அறியாமல் உயிரியல் பெற்றோர்களின் திருட்டுபுத்தி இக்குழந்தைக்கு வந்து விட்டதோ என்று சஞ்சலமுறுகிறார்கள். வாத்தியார் குழந்தை மட்டுமல்ல தத்துப்பிள்ளையும் மக்காக இருக்கலாம் என அவர்கள் சிந்திப்பதில்லை. தத்தெடுப்பு முகவர்களும் அறிவுரையாளர்களும் குழந்தைகளிடம் உண்மையை விரைவில் வெளிப்படுத்தவே வலியுறுத்துவார்கள். ஆனால் சமூகம் இதுசார்ந்த நுண்ணுணர்வு அற்றது என்பதால் பெற்றோர்களுக்கு ஒரு தயக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. முதலில் சில பள்ளிக்கூடங்கள் தத்து சான்றிதழை பிறப்பு சான்றிதழுக்கு பதிலாக வாங்க மறுக்கிறார்கள். அப்படியே வாங்கினாலும் தத்து பற்றின புரிந்துணர்வுடன் செயல்பட மாட்டார்கள் என அஞ்சி பல பெற்றோர்கள் ஒரு போலி பிறப்பு சான்றிதழை அளித்து குழந்தைகளை ‘இயல்பானவர்களக்கி‘ சேர்த்து விடுகிறார்கள்.

குழந்தைகளிடம் ஆரம்பத்தில் இருந்தே உண்மையை சொன்னாலும் பிரச்சனை சொல்லாவிட்டாலும் பிரச்சனை. வினிதா பார்கவா அப்படி சொல்லிவிட்ட ஒரு அம்மாவின் கதையை சொல்கிறார். ஷ்ரேயா என்ற பத்துவயது குழந்தையின் வகுப்பில் ஒரு குழந்தையின் அம்மா இறந்து விட “கவலைப்படாதே என் அம்மாவும் இறந்து விட்டார்கள் என்று ஆறுதல் படுத்துகிறது. ஷ்ரேயா அநியாயமாக பொய் சொல்லுகிறாள் என்ற சேதி வகுப்பு முழுவதும் பரவி பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் செல்கிறது. புகார்கள் குவிய ஆசிரியர் அழைத்து “அம்மா இறந்துட்டாங்கன்னு எல்லாம் சொல்லக் கூடாது“ என்று கண்டிக்கிறார். முதல் ஐந்து வயது வரை குழந்தைகளுக்கு உயிரியல் குடும்பத்துக்கும் தத்துக்குடும்பத்துக்கும் வேறுபாடு தெரியாது. ஆக அவர்கள் தத்தெடுப்பு விபரங்களையும் ஒரு கதையாக எடுத்துக் கொள்கிறார். மனு என்ற ஒரு குழந்தை ஒவ்வொரு இரவும் அம்மாவிடம் தான் தத்தெடுக்கப்பட்ட கதையை சொல்லக் கேட்டு தான் தூங்கும். அம்மாவும் குழந்தை புரிந்து கொண்டு விட்டது என நிம்மதியடைகிறாள். ஆனால் எட்டு வயதிற்கு அக்குழந்தை திடீரென வந்து “என் நிஜ அம்மா நீ இல்லையா?“ என கண்ணீருடன் கேட்கிறது. அம்மா வாயடைத்து போகிறாள். குழந்தைகள், குறிப்பாய் பெண் குழந்தைகள், அவ்வயதில் இருந்து தான் உடலளவில் தான் வேறுபட்டவள் என்று பௌதிகமாக தன்னை வரையறுக்க துவங்குகின்றன. எட்டு வயதுக்கு மேல் தத்தை பற்றி சொன்னால் சில குழந்தைகள் தாம் அதுவரை ஏமாற்றப்பட்டு விட்டதாக உணர்கிறார்கள். பெற்றோர்களுக்கும் அவர்களுக்குமான ஒரு சமநிலை குலைந்து போய் விடுகிறது. தத்து நிலையை தனது அம்மாவை மிரட்டுவதற்கான உபாயமாக பயன்படுத்தும் குழந்தைகள் உண்டு. தியாவுக்கு அம்மாவிடம் கோபம் வந்தால் “ஆண்டி என்று கூப்பிட்டு வெறுப்பேற்றுவாள். தீபாவிடம் அவளது அம்மா “நீ அதிர்ஷ்டசாலி, உனக்கு ரெண்டு அம்மா என்று சாமர்த்தியமாக புரிய வைக்கிறார். ஆனால் அதில் ஒரு அம்மா தன்னை ஏன் துறந்தார் என்ற வருத்தம் அவளுக்கு தீருவதே இல்லை. சில பெற்றோர்கள் தத்தெடுப்பை பற்றி பேசுவதை முழுக்க தவிர்க்கிறார்கள். சொந்தபந்தங்கள் தன் குழந்தையிடம் உண்மையை சொல்லி காயப்படுத்தக் கூடும் என்று அவர்களிடம் இருந்து அடைகாக்கிற பெற்றோர்கள் உண்டு. இக்குழந்தைகள் மாமா அத்தை தாத்தா பாட்டிகளின் பிரியத்தை அறியாமல் தனியாக வளர்கிறார்கள். ரசியா என்கிற குழந்தையை மிக வெளிப்படையாக தான் அவள் அம்மா வளர்த்தாள். சத்தமாக தன்னை தத்துக்குழந்தை என அறிவித்து, தத்து பற்றின விளக்கப்படங்களில் நடித்து வந்த அக்குழந்தை ஒரு மாதிரி தத்துக்குழந்தையாகவே சமூகத்தின் முன் இருந்தது. ஆனால் 11 வயதில் ஒருநாள் திடீரென அம்மாவிடம் வந்து தன் தத்து நிலை பற்றி வருத்தப்பட்டது. “நான் ஒரு குழந்தையை தத்தெடுத்தால் உன்னைப் போல அதனிடம் உண்மையை சொல்லி காயப்படுத்த மாட்டேன். எனக்கும் மற்றவர்களைப் போல இயல்பான குடும்பம் வேண்டும்“ என்று அழுதாள். சொல்லலாமா கூடாதா என்ற சிக்கல் நீடித்தாலும் என்ன ஆனாலும் சமாளிக்கலாம் என்ற நம்பிக்கை கொண்ட பெற்றோர்களின் குழந்தைகள் தாம் வலுவான ஆளுமையுடன் இருக்கிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates